உன்மத்தம் எனது 11-வது புத்தகம் (6-வது நாவல்). இந்த நாவல் ஒரு காலத்தில் நாடக நடிகராய் இருந்தவரின் கடந்த கால நினைவுகளையும் நிகழ்கால நிகழ்வுகளையும் பேசியிருக்கிறது.
எங்கள் பகுதியில் கூத்து - நாடகம் - அதிகம் நடத்தப்படும் என்றாலும் எப்போதும் விரும்பிப் பார்க்கப் போவதில்லை, வீட்டிலும் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. சில முறை விருப்பப்பட்டு கேட்டு அழுது கொண்டே படுத்திருக்கிறேன். இப்போது ஊருக்குப் போகும் போது அருகே நடந்தாலும் ஏனோ போகவேண்டும் எனத் தோன்றுவதில்லை.
நேற்று தேரோட்டம் நடந்த கண்டதேவி திருவிழாவின் போது, நாங்கள் படிக்கும் காலத்தில் பத்து நாட்களும் திரைப்படம் அல்லது நாடகம் இருக்கும். அப்போதெல்லாம் படம் ஓட்டுகிறார்கள் என்றால் எங்க ஊரே போகும் - இரு ஊருக்கும் இடையில் கூப்பிடும் தூரம்தான், என்ன இடையில் சுடுகாட்டை கடந்து செல்ல வேண்டும் அவ்வளவுதான் -, ஆனா நாடகம்ன்னா என்னத்தே எனப் பலர் போவதில்லை. நானும் கூட சில சமயங்களில் மட்டுமே என் வயதொத்த உறவுகளுடன் போயிருப்பேன்.
இந்த நாவல் நாடக நடிகரைப் பற்றி என்பதால் 2023-ல் எட்டு அத்தியாயம் எழுதி கிடப்பில் போட்டுவிட்டேன். இப்போது கேலக்ஸிக்காக, நீ எதாவது எழுதிக் கொடு என்ற பாலாஜி அண்ணனின் அன்புக்காக மீண்டும் எழுத ஆரம்பித்து முடித்தேன்.
மேடையில் நிகழும் தர்க்கங்களுக்காக இணையத்தில் வள்ளி திருமண நாடகத்தின் தர்க்கங்களைப் பார்த்து, அதன்வழி இணையத்தில் தேடி பல ஆன்மீக விசயங்களை இணைத்தேன்.
இதில் நாயகனாய் வரும் மனிதரின் மனைவி பற்றிய நிகழ்வுகள் அவர் நினைத்துப் பார்ப்பதாய் மட்டுமே வரும். 2023-ல் மனைவியின் பெயர் பொன்னி என வைத்து எழுதியிருக்கிறேன். இப்போ எடுத்து எழுத ஆரம்பிக்கும் போது ஒருமுறை வாசித்தபோது அந்தப் பெயர் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஆம் என் பேராசான் மு.பழனி இராகுலதாசனின் மனைவி, எங்கள் அம்மாவின் பெயரும் அதே. ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் இறந்தார். நாவலிலும் அவர் இறந்த பாத்திரமாகவே படைக்கப்பட்டிருக்கிறார். இது எதார்த்தம் என்றாலும் ஏன் அந்தப் பெயரை நான் இறந்தவருக்கு வைத்தேன் என என்னையே நான் திட்டிக் கொண்டேன்.
இந்தக் கதையில் பல நாடக நடிகர்களின் உண்மையான பெயரை இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் இந்தப் புத்தகத்தை அவர்களுக்கே சமர்ப்பித்திருக்கிறேன்.
என்னோட கதைகளில், அது நாவலோ சிறுகதையோ ஊர், ரோடு, கடைகள் என எல்லாமே நிஜத்தில் எங்கள் தேவகோட்டைப் பகுதியில் இருப்பவையாகத்தான் இருக்கும். இதிலும் அப்படித்தான். எங்கம்மா உன்மத்தம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று பேசும்போது இந்தப் பக்கம் இருக்க ஊர் பேரெல்லாம் போட்டிருக்கான் எனச் சொன்னார்கள். நம்ம புத்தகத்தை அம்மா வாசிப்பது என்பது நாம் பெற்று வந்த வரம்தானே.
எனது உன்மத்தம் நாவலை என் நட்பு வட்டம் பாராட்டி இருந்தாலும் வெளி வட்டாரத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அதன் குறை நிறைகளைச் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரை யாரும் பேசவில்லை, காத்திருக்கிறேன்.
உன்மத்தத்தில் இருந்து ஒரு - 10வது - அத்தியாயம் உங்கள் பார்வைக்கு...
வெளியில் இருந்து படும்
வீதி விளக்கின் ஒளி உடுப்புகளின் மீது படுவதால் அது டாலடிப்பது முகத்தில் பட அதையே
பார்த்துக் கொண்டிருந்தார்.
'ம்... எத்தனயோ மேடயில ஜொலித்த உடுப்புகள்' என நினைத்துக் கொண்டு அடுப்படிக்குப் போய் தண்ணீர் மோந்து குடித்து விட்டு வந்து செல்போனை எடுத்து நேரம் பார்த்தார். இரவு பனிரெண்டே முக்கால் ஆகியிருந்தது.
'என்னமோ தெரியல... இன்னக்கி முச்சூடும் கூத்து நெனவு மனசெல்லாம் நெரம்பிக் கெடக்கு. மறக்க நெனச்சாலும் சுத்திச் சுத்தி மனசுக்குள்ள எழுந்து அலபாயிது. இந்திராவெல்லாம் இப்ப எங்க இருக்கோ... இருக்கோ இல்லயோ யாருக்குத் தெரியும். சங்கத்துப் பக்கமெல்லாம் தல வச்சே படுக்கிறதில்ல. முத்தப்பண்ண சாவப்போ நடிச்சிக்கிட்டுத்தான் இருந்தோம். அதனால அவரோட இணக்கமான, சண்ட போட்ட எல்லாரும் போயி நின்னோம். நடிக்கிறத நிறுத்துனதுக்கு அப்புறம் மூக்கையாண்ண கேகத்துக்குப் போனப்போ சில பேரப் பாக்க முடிஞ்சிச்சி. மத்தவங்க யாரப் பத்தியும் எந்தத் தகவலும் இல்ல. தொடர்பே இல்லாமப் போச்சே' என நினைத்துக் கொண்டார்.
அந்த நேரத்தில் பொன்னியின் நினைவு அவருக்கு வந்தது. 'மவராசி... இருந்த வரக்கிம் என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கேட்டதில்ல' எனச் சொல்லிக் கொண்டார்.
கல்யாணம் ஆன புதுசுல ஒரு நாள் ராத்திரி தனிச்சிருக்கும் போது 'கூத்துல நடிக்கிறத விட்டிருங்களேன்' என்றவளிடம் 'ஏன்..?' எனக் கேட்டதுக்கு 'கண்ட பொம்பளயவும் கட்டிப் புடிச்சி ஆடுறீக... அதுபோக ரொம்ப மோசமா பேசி ஆடுறீக. பாக்குறவல்லாம் என்னயக் கேலி பண்றாங்க. நீங்க கூத்தியா வச்சிருக்கீகன்னு வேற சொல்றாளுங்க' என்றாள்.
'அடி லூசு.... என்னோட தொழிலு அது. நாங்கள்லாம் அண்ணன் தங்கச்சியாத்தான் பழகிப்போம். மேடயில மட்டும்தான் அப்புடி. ஒரு பொண்டாட்டிய வச்சி வாழவே இங்க சிங்கி அடிக்க வேண்டியிருக்கு. இதுல கூத்தியா வேற. சரித்தான். யாரு என்ன சொன்னாலும் நீ அதயெல்லாம் கண்டுக்காத. நாந் தப்புப் பண்ண மாட்டேன் செரியா' என்று சொன்னதுதான் அதன் பின் நாடகத்தில் நடிக்கும் வரை அவள் எந்த ஒரு கேள்வியும் கேட்டதில்லை.
குடிப் பழக்கம் வந்த பின் சண்டை போட்டிருக்கிறாள். 'இதயெல்லாம் விட்டுத் தொலங்க' எனக் கத்தியிருக்கிறாள். ஆத்தா வீட்டுக்குக் கோபித்துக் கொண்டு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறாள். அப்பறம் அவர் போய் பேசி, சமாதானம் பண்ணிக் கூட்டி வந்திருக்கிறார்.
இந்திரா சொன்ன முகூர்த்தமோ என்னமோ கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையாகி, பெரும் குடிகாரனாக மாறிப் போனார்.
இந்திராவுடனான சண்டைக்குப் பின் சங்கத்தில் கூப்பிட்டுப் பேசிய பின் இருவரும் சந்தித்த முதல் மேடை அவருக்கு இன்னமும் நன்றாக ஞாபகம் இருந்தது. இருவரும் வேனில் போகும் போது எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நாடகம் ஆரம்பித்து பபூன் டான்ஸ் போய்க் கொண்டிருக்கும் போது, ராஜவேலு தனக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தார். சற்று தள்ளி இந்திராவுக்கு ஒப்பனை நடந்து கொண்டிருந்தது.
அவர் தான் பேச்சை ஆரம்பித்தார்.
“சங்கத்துல கூப்பிட்டுப் பேசினாங்க... அதுக்கு அப்பறம் நாம இங்கதான் சந்திக்கிறோம். ஆனா சங்கத்துல நமக்கு இன்னக்கி நாடகம் இருக்குன்னு அன்னக்கே சொன்னாங்க” என்றார் மெல்ல.
“பேசுனது தெரியும்”
“தென்னங்க ரெண்டு பேரயும் கூப்பிட்டு வச்சி என்ன நடந்துச்சுன்னு கேக்காம என்னய மட்டும் கூப்பிட்டு விசாரிக்கிறது... எனக்குச் சரியான கோபம்”
“அத நீங்க அங்க கேட்டதும் எனக்குத் தெரியும்”
“தெரியுமா...? அது எப்புடித் தெரியும் உங்களுக்கு..?”
“அதெல்லாம் தெரியும்” என்றபோது அவருக்குள் ராகவய்யர் வந்து போனார்.
“ஓ... சரி... சரி... உங்களுக்குச் சொல்ல பல பேர் இருப்பாக”
அவள் சத்தமாய்ச் சிரித்தாள்.
“அப்பவும் சொன்னேன்... இப்பவும் சொல்றேன்... அன்னக்கி நாந்தப்பாப் பேசியிருந்தா மன்னிச்சிக்கங்க. ஆனா நாந்தப்பாகப் பேசியிருந்தால்தான் என் மன்னிப்பு. சண்ட போட்டு என்னாங்க ஆகப் போவுது. சொத்துப் பிரச்சனயா இல்ல சொந்தப் பிரச்சனடா... சொல்லுங்க. நம்ம வயித்துப் பொழப்புக்காக இங்க தர்க்கம் பண்றோம். அவ்வளவுதானே.”
இப்போதும் இந்திரா சிரித்து விட்டு, “நாந்தப்பாப்
பேசியிருந்தாலும் மன்னிப்புக் கேக்க மாட்டேன். ஏன்னா என்னயத் தப்பாப் பேச வச்சது
என்னோட மோதுற எதிராளிதான். அதனால நா எப்பவும் மன்னிப்புக் கேக்க மாட்டேன்” என்றாள்.
“ஓ... சரித்தான்... இங்கயும் நாங்கதான் இளிச்சவாயனுங்க...” சிரித்தார்.
“இன்னக்கும் அதிரடி இருக்கான்னு மக்கள் எதிர் பார்க்கிறாங்க” இடை புகுந்தார் ராஜபார்ட் நாகராஜன்.
“அட ஏங்க நீங்க வேற... இனிமே நா எங்கயும் சண்ட போடுறதா இல்ல. ஏதோ நடிச்சமா காச வாங்குனமா போனமான்னு இருக்கணும். அம்புட்டுப் படிச்சி எல்லாத்தயும் அள்ளி வீசி என்னாகப் போகுது. சத்தமில்லாம குடிகாரன், பெண் பித்தன்னு எதாவது சேத்த அள்ளி நம்ம மேல வீசிடுறாங்க. அது நம்மளச் சுத்திக்கிது. இப்ப அப்படித்தான் வக பேரு மாட்டிக் கெடக்கானுங்க. அதுல முக்கியமான ஆளு நம்மாளு... அதான் முத்தப்பா அண்ணன். நாடக மேட ஏறி இறங்குறதுக்குள்ள அவரு பேருல பிராது சங்கத்துக்குப் போயிருது. நேரா சங்கத்துக்குத்தான் போறாரு. அவரு வாரிசு நம்மதான் போல” சிரித்தார்.
“செய்யிறதத்தானே சொல்றோம்”
“ஏங்க மனச் சாட்சியத் தொட்டுச் சொல்லுங்க... அவரெல்லாம் அப்படியா வர்றாரு...”
“அப்படித்தான் வர்றாரு... எங்கூடல்லாம் தர்க்கம் பண்ணும் போது நாத்தம் குடலப் புடுங்கும்”
“எனக்கு என்னன்னா... அப்படிக் குடிச்சிட்டு எப்படி அவ்வளவு அருமயாப் பேசுறாங்க” என்றார் நாகராஜன்.
“உள்ள போனதும் அதுவாக் கொட்டும் போல... சிலருக்கு ஆங்கிலம் கொட்டுவது போல” சிரித்தார் இந்திரா.
“சரித்தான்... சொல்றவுக சொன்னா எல்லாரும் ஏத்துப்பாங்க... மேல இருக்கவனுக்கு மட்டுந்தான் எது உண்மயின்னு தெரியும்”
“இன்னக்கி நீங்க சிகரெட் புடிச்சிட்டு வராதீய...”
“உங்க கூடன்னு சொன்னதும் பாக்கெட்டே எடுத்தாரலங்க” சிரித்தார்.
மேடையில் தர்க்கம் ஆரம்பித்த போது “எங்களுக்குள்ள ஒரு பழய கணக்கு... பழய கணக்கென்ன பழய கணக்கு... இதுக்கு முன்னால நாங்க சந்தித்த கடேசி மேட சிவனேந்தல்ல. அங்க ஒரு கேள்வி கேட்டார். அதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னால என்னென்னமோ பேசி சண்ட ஆகிப் போச்சு” என ஆரம்பித்தார் இந்திரா.
‘அடிப்பாவி... சொல்லத் தெரியாமத்தானே அப்படிப் பேசிச் சண்ட போட்டே' என மனதுக்குள் எழுந்த கேள்வியை இழுத்துப் பிடித்து உள்ளயே தள்ளிவிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டார்.
“நல்ல தீனி போல... நாரதருக்கு ஏப்பம் வருது. ஆடு வந்து விழுந்துறாம” எனச் சிரித்து விட்டு “சரி கதக்கி வர்றேன். நீங்க என்ன கேள்வி கேட்டீங்க...” என அவரைப் பார்த்துக் கேட்ட இந்திரா நானே அந்தக் கேள்வியைச் சொல்றேன் எனச் சொல்லி, அதற்கான விடையையும் சொல்லி முடித்தார்.
“சபாஷ்... அருமையான விளக்கத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்” என்று சொல்லி அதை முடித்துக் கொண்டார்.
“இவுகதான் இராமாயணம் மகாபாரதம் எல்லாம் படிச்சி முடிச்ச மாரி கர்ணனப் பற்றிக் கேள்வி கேக்குறாக. கர்ணனக் கரச்சிக் குடிச்சவ நானுன்னு இவுகளுக்குத் தெரியாமப் போச்சு” என்றார்.
ராஜவேலு எதுவும் பேசவில்லை. சிரித்துக் கொண்டே கதைப் பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
சின்னச் சின்ன கேள்விகள்... அதற்கான பதில்கள் எனத் தர்க்கம் வேகமில்லாமல் மெல்லவே நகர்ந்தது.
இந்திராவுக்கு ஆச்சர்யம்.
“இந்த மனுசனுக்கு கோபம் அப்படி வரும். ஏதாவது புதுசா எதயாவது எடுத்து வந்து கேள்வி கேப்பாரே... இன்னக்கி ஒண்ணும் காணுமே” என்று நினைத்துக் கொண்டார்.
நாடகம் முடிந்து கிளம்பும் போது “என்ன அம்புட்டுப் பயமா எனக்கு..? கேள்வியெல்லாம் அதிகப் பிரசங்கியா வரவே இல்லயே” என்று சிரித்தார் இந்திரா.
“எதுக்குங்க... கேள்வி கேட்டா சண்ட போடுவீங்க. காலயில பிராது கொடுப்பீங்க. அங்க என்னய மட்டும் கூப்பிட்டுத் திட்டுவாங்க. மன்னிப்புக் கேளும்பாங்க. உங்கள எதுவும் சொல்ல மாட்டாங்க. அடுத்த மேடயில நம்ம ரெண்டு பேரயும் சேத்துப் போடுவாங்க. அது கூட மிகப் பெரிய திட்டம்தான். ஏன்னா நா உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கணும். நீங்க நா அந்த மேடயில கேட்ட கேள்விக்கு இங்க வந்து பதிலச் சொல்றதோட அந்த மேடயில நா சண்ட போட்டதாலதான் நீங்க பதில் சொல்ல முடியாமப் போச்சுன்னு சொல்லி அங்கயும் என்னயக் கேவலப் படுத்துவீங்க. மழயில நனயிற எரும மாரி நா முதுக நெளிச்சிக்கிட்டு இளிக்கணும். பாக்க வந்தவனெல்லாம் இந்திராவச் செயிக்க முடியுமா..? நாரதருக்கு நாக்குத் தள்ளிப் போயிருச்சுல்ல என அங்கயும் என்னயத்தான் கேவலமாப் பேசுவானுங்க. அதெல்லாம் தேவயே இல்ல பாருங்க. அதான்... இப்படி மாறிட்டேன்” எனச் சொன்னதும் இந்திராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
சர்ச்சைக்குரிய நாரதராய் ராஜவேலு மாறி நின்ற போது குடி அவருக்குள் குடியிருக்க ஆரம்பித்தது.
நாடகம் முடித்து வரும்போது பாட்டிலை வாங்கி ஊத்திக் கொண்டு வந்து வீட்டில் படுத்து விடுவார்.
பொன்னி சொல்லிப் பார்த்துச் சோர்ந்து போனாள்.
மேடைக்கு மேடை பிரச்சினை ஆனது.
சங்கத்தில் பல மாற்றம் நிகழ்ந்தது.
செட்டியாரின் பதவி முடிய அரிச்சந்திரனாக நடித்துக் கொண்டிருந்த காமராஜ் வாத்தியார் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். செகரெட்டரியாக ராகவய்யரே தொடர்ந்தார்.
பலர் இவர் மீது பிராது கொடுக்க ஆரம்பித்தார்கள்.
காமராஜ்க்கு இவரைத் தெரியும் என்பதால் கூப்பிட்டு அறிவுரை சொன்னார். ராகவய்யரோ 'இவரெல்லாம் திருந்தமாட்டார் காமராஜ்... இவருக்கு இனி நாடகங்கள் கொடுக்காதீங்கோ' எனச் சொல்ல ஆரம்பித்தார்.
எப்படிப்பட்ட மனுசனையும் குடி தன்னோட பிடிக்குள் இழுத்து வைத்து விடும் என்பது அவரின் வாழ்வில் நிகழ்ந்தது. எப்படி இருந்த ராஜவேலு இப்படி ஆயிட்டானே என அவரின் நலம் விரும்பிகள் பலர் வருந்தினாலும், இவன் குடிச்சிட்டு வர்றான் எனச் சொல்லி, அவரை ஒழிக்க நினைத்த சிலர் ஒன்று கூடி சங்கத்தில் இவருக்கு எதிராகப் பெரும் பிரச்சினையைக் கிளப்பினார்கள்.
காமராஜ் கூப்பிட்டுப் பேசி, அடுத்த மேடையில ஏறணுமின்னா தண்ணி அடிக்கக் கூடாது எனச் சொல்லி அனுப்பி விட்டார்.
அந்த வருத்தத்துக்கும் தண்ணி அடித்தார்.
வீட்டுக்கு வந்து கோபத்தில் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைத்தார்.
எல்லாரும் சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டார்கள்.
அவரின் வாழ்வில் திருப்பம் என்பது முத்தப்பாவின் இறப்புக்குப் பின் என்று சொல்லலாம். முத்தப்பாவின் திடீர் இறப்புக்குக் காரணமே நேரம் காலம் இல்லாமல் குடித்ததே என்பதை எல்லாரும் இவரிடம் எடுத்துச் சொன்னார்கள். முத்தப்பாவின் இறப்புக்கு வந்தவர்களில் பலர் இவர் காது படவே அடுத்தது ராஜவேலுதானோ எனச் சொன்னார்கள்.
அன்றைக்கு இரவு ஊருக்குத் திரும்பியவர், கருப்பர் கோவில் வாசலில் ரொம்ப நேரம் நின்றார்.
கும்பிட்டார்...
கும்பிட்டார்...
கும்பிட்டுக் கொண்டே இருந்தார்.
கண்ணீர் வழிந்தோடியது.
இரவெல்லாம் அங்கயே தூங்கி காலையில் தேங்காய் உடைக்கும் கல்லில் கையில் வைத்திருந்த குவாட்டர் பாட்டிலைப் போட்டு உடைத்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அன்னைக்குத் தண்ணியை விட்டார். பொன்னி உள்பட யாருமே நம்பவில்லை. பிள்ளைகள் எல்லாம் அவரிடம் பேசி, பக்கத்தில் உட்கார்ந்து மாதங்கள் பல ஆகியிருந்தது. கூப்பிட்டால் வரமாட்டோம் எனத் தள்ளிப் போனார்கள்.
வீட்டிலேயே கிடந்தார்.
அழுதார்.
செய்த தப்புக்கு எல்லாம் மன்னிப்புக் கேட்டார்.
கணேசமூர்த்தி வீட்டுக்குப் போய் பேசி விட்டு வந்தார்.
கணேசமூர்த்திதான் அவரை சங்கத்துக்கு கூட்டிப் போனார். 'இனிமேல் தண்ணி அடிக்க மாட்டேன்.' என எழுதிக் கொடுத்தார்.
ராகவய்யர் இவர் நாரதராய் நடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மீண்டும் பபூனாக நடிக்கச் சொல்லுங்க என நின்றார்.
காமராஜ்க்கு அதில் விருப்பம் இல்லை. ‘ராஜபார்ட் வேசம் போடுங்க. சங்கத்துல ராஜபார்ட்டுன்னு சொல்லி வச்சிடுறேன். உங்கள நம்பித்தான் மதுரை, புதுக்கோட்டை சங்கத்துல எல்லாம் சொல்லுறேன். மறுபடியும் தண்ணி அடிச்சி எம் பேரக் கெடுத்துறாதிய. செட்டியார் உங்களப்பத்தி நெறயச் சொல்லியிருக்காரு... அதுக்காக இதைச் செய்யிறேன்’ என்றார்.
ராஜபார்ட்டா அவருக்கு முதல் மேடை சாத்தனேந்தலே என்றதும் ரொம்ப மகிழ்வாக இருந்தது. ஆத்தாவின் ஆசை, பார்ப்பதற்குத்தான் அப்பன் ஆத்தா இருவரும் இல்லை என நினைத்து வருந்தினார்.
மீண்டும் நாடக மேடை...
இப்போது முருகனாக...
அதிலும் ஜொலித்தார்.
ராஜவேலை முருகனாகப் போடுங்க எனப் பல அமைப்பாளர்கள் கேட்க, ஓய்வில்லாமல் நடிக்க ஆரம்பித்தார்.
பெரும்பாலான நாடகங்களில் இந்திராவுடன்தான் களமிறங்கினார்.
இதில் இருவரும் போட்டி போட்டுப் பேசுவது என்பது ரொம்பக் குறைவு என்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திராவும் இவரைப் புரிந்து கொண்டது போல் ஒரு இணக்கமான சூழலுக்கு மாறியிருந்தார்.
இன்னும் தூக்கம் வரவில்லை.
‘என்ன எழவுடா இது... இன்னக்கி எப்பவோ தூக்கிக் கடாசுன கூத்து நாவுகமாவே இருக்கு... தூங்குனாப்புலதான். மொத்தமாத் தூங்கப் போறோம் போல’ என நினைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.
அந்த நேரத்தில் எங்கோ ஆந்தை அலறியது.
கெட்ட சகுனம் என நினைத்துக் கொண்டார்.
‘என்ன கெட்ட சகுனம் அது ராத்திரியில முழிச்சிருக்கும் கத்துது... நாம தூங்காமக் கெடந்துட்டு விடிஞ்சி வெள்ளகோழி கூவி, சூரியஞ் சுள்ளுன்னு சூத்தா மட்டயில அடிக்கிற வரக்கிம் தூங்குனா நல்லாத்தே இருக்கும். பாக்குறவுக சிரிக்க மாட்டாக. வெள்ளிக்கெழம வேற வெள்ளத்தொரயோட கூத்துப் பாக்க வர்றேன்னு சொல்லிப்புட்டேன். இப்ப பல பேரு நல்லா நடிக்கிறாங்க. அங்க போனா மனசு மேட ஏறணுமின்னு நிக்குமே... போவமா வேணாமா’ என யோசித்தார்.
கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த சொம்பை எடுத்து மேலிருந்த மூடியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு தண்ணீரைக் குடித்தார்.
‘கூத்துப் பாக்கப் போ வேண்டாம் எதாவது காரணம் சொல்லி போகாம இருக்கப் பாப்போம்’ என நினைத்தவர், ‘அட அதுக்கு என்ன அவரசம் அது வெள்ளிக்கெழமதான... இன்னம் ரெண்டு மூணு நா இருக்குல்ல. அப்ப பாத்துக்கலாம். என்ன போனா கொஞ்சம் தண்ணிய ஊத்தி தொண்டய நனச்சிக்கலாம். கருப்பரு கோவிலு சத்தியத்தப் பொன்னி போற வரக்கிம் காப்பாத்தியாச்சி. அவ போன பின்னால இனி யாருக்கு வாழப்போறமுன்னு தோணி அப்பப்ப மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சாலும் அளவுக்கு அதிகக் குடிக்கிறதில்லயில்ல... சரி இப்ப என்னதுக்கு அதுக்கு யோசிச்சிக்கிட்டு... அன்னக்கி நெலமக்கி என்னவோ அதப் பண்ணுவோம்’ எனத் தனக்குள் பேசிக் கொண்டு வானம் பாத்துப் படுத்திருந்தார்.
'அட கிறுக்குப் பயலே... ஆச இருந்தா எடுத்து மாட்டி ஆடு... வீட்டுல வேற யாரிருக்கா...?' எனச் சுப்புணி மதியம் ரேசன் கடையில் இருந்து வரும் போது சொன்னது ஞாபகத்தில் வர எழுந்தார்.
கைலியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டு வீட்டுக்குள் போய் லைட்டைப் போட்டு அந்த உடுப்புக்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்குப் பிடித்தமான நாரதர் உடை என்னை எடுத்து உடுத்திக் கொள் எனச் சொல்வது போல் இருந்தது.
அதைக் கையில் எடுத்தார்.
தன்னை நாரதராய் மாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த ஆள் வீடு வள்ளி திருமண நாடக மேடையாக ஜொலிக்க ஆரம்பித்தது.
ஓங்காரக் குரலெடுத்துப் பாடுவதாய்க் கற்பனை செய்து கொண்டு கையில் சப்த தாளக் கட்டை இருப்பதைப் போல் விரல்களை ஆட்டியபடி ‘'உலக சயனா சரணம்....’ என ஆரம்பித்தார்.
உச்சஸ்தாயி வரைக்கும் உடையாமல் பயணிக்கும் அவரின் கணீர்க் குரல் வீடெங்கும் ஒலித்தது.
அந்த இரவில் ராஜவேலு என்ற மனிதர் காணாமல் போய் நாரதராய் அங்கே மாறி நின்றார்.
--------------------------------
உன்மத்தம் (நாவல்)
பரிவை சே.குமார்.
கேலக்ஸி பதிப்பகம்.
பக்கம் : 160
விலை : 190
----------------------------
-பரிவை சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக