மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி


வெள்ளச்சி...

எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை.

அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்லா எருமையும் என்ன கலர்ல இருக்கும்... கருப்பாத்தானே இருக்கும்... ஆனா எங்க வெள்ளச்சி பேருக்கேத்த மாதிரி வெள்ளக்காரன் கணக்கா இருக்கும்... அதன் மேல்ல இருக்கும் முடியெல்லாம் தும்பைப்பூ மாதிரி வெள்ளையா இருக்கும். அதானால் பொறந்ததும் வெள்ளச்சின்னு கூப்பிட்டு அதுவே அதுக்குப் பெயரும் ஆயிடுச்சு.

எங்க வீட்ல நாங்க கல்லூரி செல்லும் வரை எருமை மாடுகள்தான்... விடுமுறை நாளில் நானோ தம்பியோதான் மாட்டுக்காரய்ங்க... மாடு மேய்க்கப் போறதுனாலே அலாதிப் பிரியந்தான்.. மழைக் காலத்துல கொட்டாங்கிழங்கு பறிச்சு உப்புப் போட்டு வேகவச்சி லேசா மிளகாய்த்தூள் தூவி சாப்பிடுறதும்... கருது அறுத்ததும் சிதறிக் கிடக்கும் நெற்கதிர்களைப் பொறக்கி துண்டில் வைத்து கல்லால் குத்தி உமியை ஊதி ஊதி எடுத்து வெல்லக்கட்டி வைத்து சாப்பிடுறதும்... செட்டியார் தோட்டத்தில இளநீர் பறித்து... பறித்து என்ன பறித்து... களவாண்டு சாப்பிடுறதும் என ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக கழியும். சரி வாங்க வெள்ளச்சி கதைக்குப் போவோம்.

எனக்கு நினைவு தெரிஞ்சப்போ எங்க வீட்ல நின்னதுதான் நரை எருமை... வெள்ளச்சியோட அம்மா, அதோட உடம்பு செவலை கலந்த கருப்பு,... அதனால கருப்பாத் தெரியாது, முடியும் கொஞ்சம் வெள்ளையும் கருப்பும் கலந்து இப்போ எல்லாரும் சொல்லுறாங்களே 'சால்ட் அண்ட் பெப்பர்'... அப்படி ஒரு முடி... அதுக்கு நரையெருமைன்னு யாரு பேரு வச்சாங்கன்னு தெரியலை. அதோட தங்கச்சி எங்க அயித்தை வீட்ல நின்னுச்சு... அது கருப்புன்னா கருப்பு அப்புடி ஒரு கருப்பு... இருட்டுக் கருப்புன்னு சொல்வோமே அப்படி இருக்கும்... அதனால அதுக்குப் பேரு கருத்த எருமை. மேயும் போது கூட கருத்தையும் நரையும் ஒண்ணாத்தான் திரியும். நரையக் காணோமின்னா கருத்தை நிக்கிதான்னு பாருங்கன்னு சொல்ற அளவுக்கு அக்கா-தங்கச்சி பாசம் அதிகம். ரெண்டு பேரும் ஒண்ணாப் பொறந்தவங்கதான்... எப்படி எங்க வீட்லயும் அயித்தை வீட்லயும்ன்னு அக்கா-தங்கச்சி தனித்தனியா நிக்கலாம் அப்படின்னு நீங்க நினைக்கலாம். அப்பா அவங்க ஐயா வீட்டுக்கு (அப்பத்தா பொறந்தவீடு) பிள்ளை வந்துட்டாங்க... அப்பத்தா வீட்ல அப்பாவுக்கு சொத்தெதுவும் கொடுக்கலை. ஆனா பொழச்சுப் போன்னு சொல்லி நரையைக் கொடுத்தாங்க போல... சரி அது எதுக்கு.... வெள்ளச்சியை பார்ப்போம்.

எங்க நரை எருமை ஆணும் பெண்ணுமாக நிறைய கன்றுகளை ஈன்றது. இருந்தும்  எங்கள் வீட்டில் நின்றதோ வெள்ளச்சிக்கு முன் பிறந்த கிடேரி... இதுதான் இதன் பெயரே.... அப்புறம் வெள்ளச்சி.  அது பிறந்தப்போ... வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்ததும் நாலுகாலிலும் குளம்பை சுத்தம் செய்து, தாய் இளங்கொடி போட்டதும் இருவரையும் குளுப்பாட்டி மஞ்சளிட்டு காசலையில் வைத்து பால் பீய்ச்சி, கன்றைக் குடிக்க வைத்து பின்னர் இரவு கன்றுக்குட்டியை வீட்டிற்குள் கொண்டு வந்து காலில் கட்டி வைத்தோம்... அப்போது வைத்த பெயர்தான் வெள்ளச்சி. ஏனோ தெரியலை வெள்ளச்சி பிறந்தது முதல் எல்லாருக்கும் அதன் மேல் அப்படி ஒரு பாசம். சின்னக் கன்றாக இருக்கும்போது அருகில் போய் உட்கார்ந்தால் நாக்கால் நம்மை நக்கி... நக்கி சந்தோஷப்படும். வாயோடு வாய் வைத்து விளையாடுவோம். எங்க அம்மா திட்டுவார்கள்.

மாடு மேய்க்கும் போதும் மாடு ஓடினாலோ, வேறு பக்கம் போனாலோ, கத்திக்கிட்டு ஓடினாளோ டேய் உங்க எருமை ஓடுதுடா என்றுதான் சொல்வோம். ஆனா ஒரு சில மாட்டுக்குத்தான் பெயர் சொல்லி சொல்வோம். அப்படி பெயர் சொல்லி எல்லாரும் அழைப்பது எங்க வெள்ளச்சியைத்தான்.. டேய் உங்க வெள்ளச்சி போகுதுடான்னுதான் சொல்லுவாய்ங்க... 

மதிய நேரத்தில் மாடு குளிப்பாட்டும் போது நாம் தண்ணிக்குள் இறங்கியதும் மற்ற மாடுகள் விலகினாலும் வெள்ளச்சி அருகில் வந்து உரசிக்கொண்டு நிற்கும். மழைக்காலங்களில் கசாலைக்குள் சாணியிலும் மூத்திரத்திலும் பொரண்டு எழுந்து வெள்ளை முடியை செம்பட்டை முடியாக்கி வைத்திருக்கும் வைக்கலையும் ஆவாரம் இலையையும் வைத்து தேய்த்து அழுக்கை எடுப்போம்.

மாட்டை விட்டுவிட்டு விளையாடி மாடு எங்காவது போய்விட்டால் இருட்டும் வரை தேடி கிடைக்காமல் வந்து அம்மாவிடம் நின்றால் பூசைக்குப் பஞ்சமிருக்காது. இரவு வரை கைவிளக்கை வைத்துக் கொண்டு 'ம்பா...' 'ம்பா'ன்னு கத்திக் கூப்பிட்டு பார்த்துட்டு வந்துடுவோம். ஒரு சில சமயங்களில் அதிகாலையில் வீட்டு வாசலில் வந்து குரல் கொடுக்கும். இல்லையென்றால் மறுநாளும் மாடு தேடும் படலம்தான்.

ஒரு முறை காணமல் போய் பக்கத்தில் கண்டதேவியில் ஒரு வீட்டில் கட்டி வைத்து விட்டார்கள். தேடித் திரிகிறோம் எல்லோரும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்... அந்த வீட்டில் கட்டியிருப்பதை யாரும் சொல்லவில்லை... மாட்டை பார்க்க முடியாமல் சோகமாய் திரும்பும் போது எங்கள் குரல் கேட்டு வெள்ளச்சி கத்திவிட்டது, அப்புறம் வீட்டுக்காரரிடம் சண்டை இட்டு அவரது பயிரை நாசம் பண்ணிவிட்டது என்று சொன்னதால் மாட்டுக்கு 20 ரூபாய் என கொடுத்து கூட்டி வந்தோம். எப்படி மாக்காலி (குதித்து ஓடுவது) எடுத்து ஓடினாலும் ஏய் வெள்ளச்சி என்று அதட்டினால் எங்க வீட்டாளுகளின் குரல் என்றால் நின்று திரும்பிப் பார்க்கும்.

அதுவும் தாயாகி இரண்டு கன்றுக்குட்டிகளைப் போட்டது. இரண்டுமே கருப்புத்தான்... அம்மா கலரில் பிறக்கவில்லை.. ஒரு வேளை அப்புறம் பிறந்ததோ என்னவோ... ஒரு கட்டத்தில் எருமை மாடுகளை வைத்துப் பார்க்க முடியவில்லை. மேய்ச்சலுக்கு ஒருவர் கண்டிப்பாக போகவேண்டி இருக்கு. பசங்களும் காலேசுப் பக்கம் படிக்கப் பொயிட்டாய்ங்க... அம்மானால மேய்க்க முடியாதுன்னு சொல்லி அப்பா மாடுகளை விற்க ஏற்பாடு செய்ய, வெள்ளச்சி மட்டும் இருக்கட்டும் என்றோம்... அதை வச்சிருந்தாலும் பார்க்கத்தானே வேணுமின்னு சொலி அதையும் சேர்த்து அப்பா வித்துட்டாரு. வீட்டை விட்டுப் போகும் போது எல்லா மாடுகளும் கத்தினாலும் வெள்ளச்சியின் குரலில் ஒரு வேதனை இருந்தது இன்னும் வலிக்கத்தான் செய்கிறது.

எல்லாருக்கும் மாடுகளை விற்றதில் வருத்தம்தான்... இருந்தும் சூழல் அவற்றை விற்க வைத்துவிட்டது. பின்னர் ஒரு வாரத்தில் வீட்டின் பால் தேவைகளுக்காக அப்பா ஒரு மயிலைப் பசுவை செவலைக் கன்றுடன் வாங்கியாந்து கட்டுத்தொரையில் கட்டினார். பின்னர் சில காலம் பசுமாடுகள் எங்கள் வீட்டுக் கசாலையில் கன்றுகளைப் போட்டன... இப்போது கசாலையில் சில விறகுகளும் தேவையில்லாத சாமான்களும் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.. கசாலையோ நரையெருமை, கிடேரி, வெள்ளச்சி, கருத்தப்பசு, மயிலைப்பசு, குட்டைப்பசு, கோணக்கொம்பு என வாழ்ந்த மாடுகளின் நினைவுகளைச் சுமந்தபடி வெறிச்சோடிக்கிடக்கிறது.

********

சரிங்க.... நாளை முதல் ஒரு வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணி செய்ய சீனா ஐயா அவர்கள் பணித்திருக்கிறார்கள்... அங்க போவதால் இங்க கொஞ்சம் மீள் பதிவுகளையும் , கலையாத கனவுகள் தொடர்கதையையும் பதிவேன் என்று நம்புகிறேன். நீங்களும் அந்தப் பக்கம் வந்து பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

Tamizhmuhil Prakasam சொன்னது…

மலரும் நினைவுகள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரரே !!!

அப்பாதுரை சொன்னது…

எத்தனை விவரங்கள்!
வெள்ளை எருமையைப் பார்த்ததே இல்லை. வித்தியாசமான நினைவுகள் என்பேன்.



வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரரே தங்களின் வலைச்சரப் பணி சிறப்பாகத் தொடரட்டும் .கலையாத கனவுகளாய் எம்முள் அடங்கிக் கிடக்கும் பழைய நினைவுகள் ரசனை மிக்கவையே .
பாராட்டுக்கள் சிறப்பான இப் பகிர்வுக்கும்.

பெயரில்லா சொன்னது…

ஒரு திரைப்படமாகவே எடுக்கக் கூடிய அளவிலான பகிர்வு. வெள்ளை எருதுகள் ஆல்பினோ எனப்படும் தோலின் நிறமி மரபணு மாற்றத்தால் உண்டாகுபவை. மனிதர்களில் கூட சிலர் வெளுத்து பிறப்பது உண்டு. லட்சத்தில் ஒன்றே அவ்வாறு அமையும். கிராம மணத்தையும், குட்டிக்கால களியாட்டங்களையும், வெள்ளச்சி மற்றும் எருதுகளோடு உண்டான பாசப்பிணைப்பையும் கூறி எம் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கசாலையோ நரையெருமை, கிடேரி, வெள்ளச்சி, கருத்தப்பசு, மயிலைப்பசு, குட்டைப்பசு, கோணக்கொம்பு என வாழ்ந்த மாடுகளின் நினைவுகளைச் சுமந்தபடி வெறிச்சோடிக்கிடக்கிறது.

பால் மணம் மாறாத நினைவுகளோடு அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வலைச்சரப்பணி சிறக்க
வாழ்த்துகள்.!

sury siva சொன்னது…

நீங்கள் உங்கள் வீட்டு வெள்ளச்சியை நினைவு கூர்ந்து
தங்கள் பழங்கால நிகழ்வுகளை
அழகான சொற்களிலே வர்ணித்து இருப்பது அருமை.


ஒரு எருமையையும் அருமையாக உரிமையோடு வர்ணிக்க முடியும் என்றால் அது உண்மை. .

1945 முதல் 1960 வரை எங்கள் வீட்டிலும் ஒரு பசுமாடு இருந்தது. பக்கத்திலே ஒரு கன்றுக்குட்டியும் கூட விளையாட.
ஒன்றே தானா அல்லது ஒன்றன் பின் ஒன்றா என நினைவு இல்லை.

சுப்பு தாத்தா.

சசிகலா சொன்னது…

ஆமாங்க அற்புதமான நிகழ்வுகளை தொகுத்து எழுதியிருக்கிங்க. எங்க வீட்லயும் பசு மாடுகள் நிறைய இருந்தது. அதன் கன்றுகுட்டிகளுக்கு தண்ணீர் காட்டியபடி அதனோடு பேசிய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்தது உங்கள் எழுத்து நடை.. மிக்க மகிழ்ச்சி.

கோமதி அரசு சொன்னது…

வீட்டை விட்டுப் போகும் போது எல்லா மாடுகளும் கத்தினாலும் வெள்ளச்சியின் குரலில் ஒரு வேதனை இருந்தது இன்னும் வலிக்கத்தான் செய்கிறது.//படிக்கும் எனக்கே வேதனை இருந்தால் அதனுடனே வளர்ந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.மனசு சொல்லும் எல்லா செய்திகளும் அருமை.

ஜீவன் சுப்பு சொன்னது…

மண்ணும் மனசும் மணக்கும் பதிவு ...!

Menaga Sathia சொன்னது…

மண்மனக்கும் பதிவு...

வலைச்சரபணி சிறக்க வாழ்த்துக்கள்!!