மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 9 ஜூலை, 2013

நாகர்கோவிலில் இரு மழைநாள்...

(விவேகானந்தர் பாறையில் எங்கள் செல்லங்களுடன் நண்பனின் செல்லம்)

இந்த முறை ஊருக்குச் சென்று வீடு குடிபோகும் வேலையில் திரிந்ததால் எங்கும் போகமுடியவில்லை. விஷால் போனது முதல் 'எதிர் நீச்சல்' படத்துக்கு கூட்டிப் போகச் சொல்லிக் கொண்டிருந்தான். போகலாம்... போகலாம்... என்றே நாட்கள் நகர்ந்தன. தியேட்டரில் இருந்து படத்தையும் எடுத்துவிட்டு குட்டிபுலி போட்டுவிட்டார்கள். ஒரு நாள் வண்டியில் தியேட்டரைக் கடக்கும் போது 'அந்தப் படத்தையே தூக்கிட்டாய்ங்க... நீ கூட்டியே போகல...' என போஸ்டரைப் பார்த்து விஷால் சொன்னபோது கஷ்டமாகத்தான் இருந்தது. வீடு குடி போற வேலை இருக்குல்ல அதை முடிச்சிட்டு கோயிலுக்குப் போகலாம்... சினிமா போகலாம்... என்று சமாதானப்படுத்தினாலும் அதன்பிறகான வேலைகள் எங்கும் செல்ல விடாமல் சோர்வைக் கொடுக்க, அண்ணனின் மகள் பெரிய பெண்ணாகிவிட கோவிலுக்கும் ஒரு மாதம் போகமுடியாத நிலை. இந்நிலையில்தான் நண்பர் டொமினிக் நாகர்கோவிலுக்கு அழைத்தார். குழந்தைகள் மற்றும் மனைவிக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று அவசர பயணமாக இரண்டு நாட்கள் நாகர்கோவிலுக்கு சென்று வந்தோம்.கிளம்புவதற்கு முன்னரே இங்கு தொடர்ந்து மழை பெய்கிறது. குழந்தைகளுக்கு ஸ்வெட்டரெல்லாம் எடுத்து வாங்க என்று சொல்லியிருந்ததால் முன்னெச்சரிக்கையாக எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டோம்.

கிட்டத்தட்ட தேவகோட்டையில் இருந்து 9 மணி நேரப் பயணம் என்பதால் இரவு நேரப்பயணமாக கிளம்பினோம். தேவகோட்டையில் இருந்து மதுரை வந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மெரினாவில் காபி (இரவு நேரம் சூடாக காபி குடிக்கலாம் என்றுதான் பெரியகடைக்குள் நுழைந்தோம்... சர்வர்கள் தூங்கி வழிவது போல் காபியும் தூங்கிவிட்டது... தென்டமாய் பணம் கொடுத்தோம்) குடித்துவிட்டு நாகர்கோவில் செல்லும் பை-பாஸ் ரைடரில் ஏறி அமர்ந்தோம். 

பேருந்து கிளம்பியதும் கூட்டம் அதிகமில்லாததால் மனைவி ஒரு சீட்டில் படுத்துவிட்டார். ஒரு சீட்டில் நான் அமர்ந்திருக்க என் மடியில் இருவரும் படுத்து விட்டார்கள். பேருந்து வேகமாகச் சென்றாலும் திருநெல்வேலி வரை குளிரவில்லை. வள்ளியூர் என்று நினைக்கிறேன்... மழை ஆரம்பமாகியது... பேருந்துக்குள் குளிர் குடிகொண்டது... ஸ்வெட்டர் போட்டிருந்தாலும் இருவரும் போர்வைக்குள் அடைக்கலமானார்கள்.

அதிகாலையில் வடசேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் போது மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. நண்பருக்கு போன் செய்ததும் 'அங்கயே இருங்கள்... இப்போ வாறேன்' என்றார். பாத்ரூம் செல்ல வேண்டும் என்ற ஸ்ருதியைக் கூட்டிக் கொண்டு சென்ற என் மனைவி வந்ததும் நீங்களும் தம்பிய கூட்டிக்கிட்டுப் பொயிட்டு வாங்க என்றார். விஷால் தூக்கத்தில் இருந்ததால் அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். நான் போய் இரண்டு ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால்... உவ்வே... அடேங்கப்பா.... முடியல... ஒண்ணுமே போகாமல் வெளிய வந்துட்டேன்... அவ்வளவு சுத்தமா வச்சிருந்தாங்கன்னா பாத்துக்கங்களேன்.பிறகு நண்பரின் வீட்டுக்கு சுவீட்டெல்லாம் வாங்கிக் கொண்டு மழைக்கு இதமாக காபி சாப்பிட்டுவிட்டு காத்திருக்க நண்பர் மனைவியுடன் வந்தார்.

'மழை இல்லையென்றால் ரெண்டு வண்டியில் வந்திருப்போம்' என்றனர். 'பரவாயில்லை ஆட்டோவில் போகலாம்' என்றதும் அவர்கள் மறுத்தார்கள். தங்கையோ 'நீங்க வண்டியில வந்துருங்கண்ணே... நானும் அண்ணியும் பஸ்ல வந்துருறோம்' என்று சொல்லி பேருந்துக்குள் ஏறிவிட்டார். பாப்பாவும் நானும் நண்பருடன் பைக்கில் பயணிக்க, அவர்கள் பேருந்தில் வந்தார்கள். வீட்டுக்கு சென்றதும் தூறல் பெரிய மழையாகியது. சுற்றிலும் தென்னை மரங்கள்... அழகான சிறிய வீடு... மழைக்கு அவ்வளவு ஏகாந்தமாய் இருந்தது. குளித்து சூடான் தோசையை சாப்பிட்டு சிறிது நேரம் தூக்கம் போட்டோம்.

(மழை மேகத்தின் கீழ் திருவள்ளுவர்)

மழை லேசாக விட்டதும் நண்பருடன் அருகில் இருக்கும் கடலுக்குச் சென்று சுத்திவிட்டு வந்தோம். இதற்கிடையில் தங்கை, அவரது அம்மாவிடம் சொல்லி மீன் வாங்கி வந்து பொறித்து குழம்பு வைத்திருந்தார். பின்னர் எல்லாருமாக சாப்பிட்டுவிட்டு லேசாக மழை விட்டிருந்ததால் கன்னியாகுமரி போய் வரலாம் என்று முடிவு செய்தோம்.

நண்பர் குடும்பம் ஸ்கூட்டியில் பயணிக்க, அவர்களைத் தொடர்ந்து நாங்கள் ஸ்பிளண்டரில் பயணித்தோம். லேசான தூறல் அவ்வப்போது வந்து செல்ல நாகர்கோவிலில் இருந்து மணக்குடி வழியாக எங்களது வண்டிகள் சீறிக்கொண்டிருந்தன. மணக்குடியில் சுனாமியில் சிதைந்து கிடந்த பாலத்தைக் காட்டி மூன்று துண்டாக உடைந்த பாலம் ரெண்டு துண்டு இங்க இருக்கு... ஒரு துண்டு எங்க போச்சுன்னே தெரியலை என நண்பர் சொன்னார். மேலும் சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி இது என்றும் சொன்னார்.

கன்யாகுமரி வரை நண்பர் அவரது மகனை வைத்துக் கொள்ள தங்கைதான் வண்டி ஓட்டி வந்தார். கன்யாகுமரியை அடைந்ததும் , வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு விவேகானந்தர் பாறைக்கு டிக்கெட் எடுத்து போட்டில் பயணித்தோம். திருவள்ளுவர் சிலைக்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு அனுமதியில்லை. விவேகானந்தர் பாறை மிகவும் சுத்தமாக இருந்தது. அங்கு சுற்றிப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து பார்த்தால் கடற்கரையோரம் கூடங்குளம் அணுமின்நிலையம் தெரிகிறது. குழந்தைகள் அதிக நேரம் அங்கு இருக்க ஆசைப்பட்டார்கள். நீண்ட நேரம் எடுத்துக் கொண்டோம். பின்னர் அங்கிருந்து கரைக்குத் திரும்பினோம்.

மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு பீச்சுக்குப் போனோம். அங்கு முதலாவது இண்டர்நேஷனல் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு அப்படியே கடல் தண்ணிக்கு அருகில் செல்ல, ஸ்ருதி, விஷாலுக்கு கொண்டாட்டம். ஸ்ருதி தண்ணியில் இறங்கி ஆட்டம் போட அவரது அம்மாவும் இணைந்து கொண்டார். முதலில் பயந்த விஷால், பின்னர் தண்ணிக்குள் இறங்கினார்... 

நானும் நண்பரும் ஒரு கல்லில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.  பெண்கள், குழந்தைகள் என்று எல்லாரும் நிற்கும் போது இரண்டு எருமை மாடுகள் தண்ணிக்குள் ஜட்டியுடன் ஆட்டம் போட்டது. எல்லாரும் திட்டிக் கொண்டுதான் போனார்கள். நாகரீகம் மறந்த பதர்கள். பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பி கடைகளில் ஐக்கியமானோம். சில பொருட்கள் வாங்கினார்கள்.விஷாலும் சண்டை போட்டு ஆட்டோ வாங்கினார். ஸ்ருதி கீ-செயினில் ஸ்ருதி குமார் என்று எழுதச் சொன்னார். அவன் கேவலமாக கிறுக்கிக் கொடுக்க வேண்டாமென சண்டை இட்டு திருப்பிக் கொடுக்க, ஸ்ருதிக்கு முகம் வாடிவிட்டது. அதை அடுத்தநாள் கீ-செயின் வாங்கி சரி பண்ணியது வேறு கதை. 

அங்கிருந்து கிளம்பி அருகிலிருந்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு ஆறு மணிக்கு மேல் வண்டியை கிளப்பினோம். கிளம்பி கொஞ்ச நேரத்தில் எல்லாம் முன்னால் இருந்த விஷால் தூங்கிவிட்டான். அதற்காக மெதுவாக ஓட்டினால் ஒரு பக்கமாக சாய்கிறான். வண்டியை நிறுத்தி எனது பாணியில் அவனைத் திருப்பி வைத்து என்னைக் கட்டிப்பிடித்துக்கச் சொல்லிட்டு வண்டியை எடுத்தேன். அதற்குள் என்னைக் காணோமென நண்பன் வண்டியை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்ததும் தங்கை விஷால் இருப்பதை பார்த்துப் பதறி 'அண்ணா எங்கிட்டக்கொடுங்க தம்பிய... உங்களால வண்டி ஓட்ட முடியாது' என்றார். அவரிடம் 'நான் ஓட்டிவிடுவேன் நீங்கள் போங்க...' என்று சொல்லி கிளம்பினோம். மீண்டும் லேசாக தூற ஆரம்பித்தது.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். விஷால் ஒரு கால் செருப்பை தூக்கக் கலக்கத்தில் எங்கோ விட்டுவிட்டான். இங்கிருந்து வாங்கிச் சென்றது. கொஞ்ச தூரம் தேடிப் பார்த்தோம்... கிடைக்கவில்லை. சரி போனது போச்சு என்று நினைத்து விட்டுவிட்டோம். யாரையோ பார்க்கப் போறோம்... இப்ப வந்துருவோம்... வரும்போது செருப்புக் கிடக்கான்னு பார்த்துட்டு வாறோம் என்று சொல்லி நண்பனும் தங்கையும் கிளம்பினார்கள். வரும் போது விஷாலின் செருப்போடு வந்தார்கள். 

இரவு சாப்பிட்டு விட்டு அழகான கிளைமேட்டில் ஆனந்தமாய் தூங்கினோம்.

இரண்டாம் நாள் இன்பம் பயணம் அடுத்த பதிவாக...
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

துளசி கோபால் சொன்னது…

இந்தியாவுக்கு வரணுமுன்னு நினைக்கும்போதே..... கழிவறை பிரச்சனைதான் உள்ளூர் பயணங்களில் பெரிய பயம்:(

சுத்தம் என்பதை மக்கள்ஸ் ஏன் வெறுக்கிறார்களோ?

இன்னொரு சமாச்சாரம்.

2 வீலரில் போகும்போது குடும்பம் முழுசும் நெருக்கியடிச்சு உக்கார்ந்து போவதைப் பார்க்கும்போது எனக்கு 'பகீர்'ன்னு இருக்கும்.

இங்கே நம்மூரில் இதெல்லாம் அனுமதிக்கப்படாது.

கூடல் பாலா சொன்னது…

சிகரெட்டினால் கழிவறை கதவில் துவாரம் போடுவது ....பிராந்தி பாட்டில்களை கழிவறைக்குள் அடுக்கி வைப்பது .... அரசை குறைகூறும் இம்மக்களை என்ன செய்வது...

Unknown சொன்னது…

அழகான பயண அனுபவ பகிர்வு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அழகான பயணம்..!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நாகர்கோவிலுக்குப் போயிட்டு அப்படியே அங்கே என்னென்ன சுத்திப்பார்த்தீங்கன்னு எழுதுங்க. நானும் கொஞ்சம் கொசுவத்தி சுத்திக்கிறேன். :-)

Menaga Sathia சொன்னது…

அழகான பயண பகிர்வு..இந்தியா என்றாலே கழிவறை ப்ரச்சினைதான் பயமுறுத்துகிறது.

குட்டீஸ் அழகா இருக்காங்க!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசிகோபால் அவர்களே...
கழிவறைகளை சிலர் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பராமரிப்பதில்லை... அவசரத்துக்கு பேருந்து நிலையங்களில் போக வேண்டி வந்தால் இது போன்ற அசிங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.

டூவீலரில் குடும்பம் சகிதம் பயணிப்பது அலாதியான சந்தோஷத்தைக் கொடுக்கும்...
இது நம்மூரில் மட்டுமே கிடைக்கும் சந்தோஷம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கூடல் பாலா அண்ணா...
முதல் முறை என் தளத்திற்கு உங்கள் வருகை அதற்கு நன்றி.

சிகரெட்டினால் செய்வதிருக்கட்டும்... உங்களுக்கு பெண் வேண்டுமா இந்த நம்பருக்கு அழையுங்கள் என்றும்... ஆபாசமாக கிறுக்கி வைத்தும்... இன்னும் நிறைய.... இது குத்தகைக்கு எடுத்தவரின் பராமரிப்பு இன்மையைக் காட்டுகிறது. அரசு என்ன செய்யும்?

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யோகராஜா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இராஜராஜேஸ்வரி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க அமைதிச்சாரல் புவனா அக்கா...
அடுத்த பதிவில் நாகர்கோவிலுக்கு அருகில் சுற்றியதை பகிரலாம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…



வாங்க மேனகாக்கா..
கழிவறைப் பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினை...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

இனிய பயணம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராம்லஷ்மி அக்கா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Robert சொன்னது…

வீடு குடி போற வேலை இருக்குல்ல அதை முடிச்சிட்டு கோயிலுக்குப் போகலாம்... சினிமா போகலாம்.//எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு ம்ம்ம்......

Robert சொன்னது…

'அந்தப் படத்தையே தூக்கிட்டாய்ங்க... நீ கூட்டியே போகல...' என போஸ்டரைப் பார்த்து விஷால் சொன்னபோது கஷ்டமாகத்தான் இருந்தது.// அந்த நேரத்தில் எதையோ சொல்லி சமாளித்தாலும் பிறகு நினைக்கும் போதெல்லாம் உறுத்தி கொண்டு இருக்கும்....

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான பயண கட்டுரை..