மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 23 ஜூலை, 2013'நான் அண்ணா... விஜய் எம்ஜிஆர்...!' - சொன்னாரா எஸ்ஏசி?


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இனி வரும் அரசியலில் நான் அண்ணா... என் மகன் விஜய்தான் எம்ஜிஆர், என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் சொன்னதாக வெளியாகியுள்ள செய்திகள் இரு கழகங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது விஜய்க்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போதே அரசியலை மனதில் வைத்து மகனுக்கு இளைய தளபதி என்று பட்டம் சூட்டிவிட்டவர் எஸ் ஏ சந்திரசேகரன். இத்தனைக்கும் அன்றைக்கு அவர் ஒரு நடிகராகவே யார் மனதிலும் இடம்பெறாத நேரம். காதலுக்கு மரியாதை வரை சுமாரான வெற்றிகள்தான். 

அதன் பிறகு வந்த வெற்றிகளை அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகவே பார்த்தனர். அதன் பிறகு ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர். அதற்கு தலைவராக எஸ்ஏ சந்திரசேகர்தான் இருக்கிறார். 

திமுக ஆட்சிக் காலத்தில் விஜய்யின் அரசியல் பிரவேச முஸ்தீபுகள் இரு தரப்பிலும் உரசலைத் தோற்றுவிக்க, சடாலென அதிமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தனர். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அந்த வெற்றியில் தன் பங்கு ஒரு அணில் அளவுக்கு இருந்ததாக விஜய்யே அறிக்கை விடுத்தார். 

அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் ஒன்றரை ஆண்டுகளில் விஜய்க்கு பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் ஆண்டில் அவரால் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியாத நிலை. வருங்கால முதல்வரே, ஜனாதிபதியே என்கிற ரேஞ்சுக்கு பிறந்த நாளுக்கு போஸ்டரெல்லாம் அடித்து, பிரமாண்ட பந்தல் போட்டும், அதைக் கொண்டாட முடியாமல் கமுக்கமாகப் பிரிக்க வேண்டிய நிலை. இந்த நிலையில் இனி வெளிப்படையாக தங்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

 "தமிழகத்தின் முதல்வராகும் தகுதி விஜய்க்கு இருப்பதாகவே நினைக்கிறார் எஸ்ஏசி. அவரைப் பொறுத்தவரை, திராவிட கட்சிகளில் அண்ணாவும் எம்.ஜி.ஆரும்தான் தலைவர்கள். அதேபோல இப்போது அண்ணா ரேஞ்சுக்கு தன்னையும், எம்.ஜி. ஆருக்கு நிகராக தன் மகனையும் ஒப்பிட்டு பல இடங்களிலும் பேசி இருக்கிறார். இது ஆட்சி மேலிடத்துக்கும் தெரியும். எதிர் தரப்புக்கும் தெரியும். இந்தப் பேச்சுதான் அவர்கள் இருவருக்கும் பெரும் பிரச்சினையைத் தரப் போகிறது. ஒருவேளை அதை வைத்தே அரசியலைத் தொடங்கிவிடலாம் என எஸ் ஏ சி தரப்பு நினைத்திருக்கிறதோ என்னமோ?" என்கிறார்கள் உளவுத் துறை வட்டாரங்களில். 

ஆனால் எஸ்ஏசி தரப்பிலோ, யாரிடமும் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்ற ஒற்றை வரி மறுப்போடு அமைதி காக்கிறார்கள்.

செய்திக்கு நன்றி : தட்ஸ்தமிழ் இணையம்
படங்களுகு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...