மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 ஜூலை, 2013

மரணம் ஜனித்த ஜனனம்

(தொடர்கதையை வாரத்தில் இரண்டு நாள் பதிய எண்ணியிருந்தேன். உடல்நலம் சரியில்லாததால் நேற்று பதிய இருந்த தொடர்கதை இன்னும் செப்பனிடப்படாமல் இருப்பதால் நீண்டநாட்களுக்குப் பிறகு சிறுகதை ஒன்றைப் பகிர்கிறேன்... நன்றி)

"அய்யோ... நான் பொறந்த சாமி..." கமலத்தின் அழுகுரல் கேட்டு அடுப்படியில் இருந்த மருமக பானு வருவதற்குள் ஊர்ச்சனம் கூடிவிட்டது. ஆளாளுக்கு என்னடி ஆச்சு... என்னாச்சு... என்று பதற...

"அத்த... என்னாச்சு அத்த... " என்று கத்திய நெறமாசக்காரியான பானுவ கட்டிக் கொண்டு "நம்ம குடும்பமே அந்தல சிந்தல ஆகப்போகுதேடி... நா என்ன செய்வேன்.... அய்யோ எஞ்சாமி..." என்று கத்தினாள்.

"என்னன்னு சொல்லுடி... வயித்துப் புள்ளக்காரிய கத்தவிடாம..." அதட்டலாக கேட்டாள் பர்வதம்.

"அக்கா.... எங்கண்ண மரத்துல இருந்து விழுந்துட்டாராம்... இப்பதான் எம்மவ போன் பண்ணினா..." அவள் முடிப்பதற்குள் பானு "என்னப் பெத்த ஐயா... அப்போவ்... அய்யோ... நா என்ன செய்யிவேன்..." என்றபடி வயிற்றில் அடித்துக்கொள்ள...

"அடியேய்... அடி நெறமாசக்காரி வயித்துல அடிச்சுக்கக்கூடாது. அவள ரெண்டு பேரு புடிச்சு அமத்துங்கடி... பானு உங்கப்பனுக்கு ஒண்ணும் ஆகாது... பஞ்சா அவள உள்ள கொண்டு போய் தண்ணி கிண்ணி கொடுத்து உக்கார வையுங்க..."

"இங்க பாரு கமலம்... உம்மவ என்ன சொன்னுச்சு... அடி பலமா பட்டிருக்கா என்ன... ராசு எப்படி விழுந்தானாம்... வெவரமா சொல்லு..." பக்கத்தில் வந்து பக்குவமாய் கேட்டார் ஊர்ப் பெரியவர் ராமையா.

"நா... என்னத்த சொல்லுவேன் அம்மான்...." என்றபடி மூக்கை சிந்தியவள் "அண்ண காளமாட்டுக்கு வாகங்கொலை வெட்டியாந்து வைக்கும்... இன்னைக்கும் வெட்ட போயிருக்கு... மடக்கரை செய்யில இருக்கிற பெரிய மரத்துல ஏறி வெட்டும் போது பிடி தவறி விழுந்துருச்சாம்.... தலயில நல்ல அடியாம்... பேச்சு மூச்சு இல்லையாம்.... நல்லவேள ரோட்டோரத்துலங்கிறதால அந்தப்பக்கமா வந்த சேகர் பாத்துட்டு ஆளுகளை கூப்பிட்டு ஆசுபத்திரிக்கு தூக்கிக்கிட்டு போயிருக்காக..."

"அடக்கொடுமையே... டாக்டரு என்ன சொன்னாராம்..?"

"தெரியலையே... என்ன சொன்னாருன்னு தெரியலையே..."

"உம் மவ நம்பரை கொடு.... கண்ணா இந்த நம்பருக்கு அடிச்சுக் கேளு..."

கண்ணன் போன் அடித்து ராமையாவிடம் கொடுக்க, "ஆத்தா... நான் ராமையா ஐயா பேசுறேன்... மாமா எப்படியிருக்கான்... என்ன சொல்றாங்க..." அவரது கேள்விக்கான விவரங்களை அவள் சொல்லச் சொல்ல அவரது முகம் மாறிக்கொண்டு வர ஆரம்பிக்க கமலம் பெருங்குரலெடுத்து அழுகலானாள்.

"இங்க பாரு கமலம்... நீதான் தைரியமா இருக்கணும்... நெறமாசப்புள்ள... நீ அழுதா அதுவும் கத்தி எதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா... பூமிநாதன்கிட்ட கொண்டு போனாங்களாம்... அவரு பாத்துட்டு பாக்க முடியாது மருதைக்கு கொண்டு போங்கன்னு சொல்லிட்டாராம். மருதைக்கு கொண்டு பொயிட்டாங்களாம்... உம்மவ வீட்டுக்கு வந்திருச்சாம்.... ரொம்ப மோசமாத்தான் இருக்கும் போல..."

"அய்யோ அண்ணே...." என்று கமலம் கத்த "என்னப் பெத்த அப்போவ்..." என்று பானுவும் கத்த ஆரம்பித்தாள்.

"கமலம் உம்மவனுக்கு விவரத்தை சொல்லிட்டு கெளம்பு... நாம மருதைக்கு போலாம்.... பானுவ கூட்டிக்கிட்டு போவேண்டாம்... பஸ்சுல அவ இந்த நெலமயில அவ்வளவு தூரமெல்லாம் பிரயாணம் செய்ய முடியாது... இங்க இருக்கவுக பாத்துக்கட்டும். வா நாம நாலஞ்சு பேரு போகலாம்..." என்ற ராமையாவிடம் "ஐயா நானு வாரேன்... எங்கப்பாவ பாக்கணும்...என்னால இங்க இருக்க முடியாது..." என்றபடி அழுதாள் பானு.
"இல்லத்தா... இந்த நெலமயில நீ பஸ்சுல வர முடியாது... உங்கப்பனுக்கு ஒண்ணும் ஆவாது... நாங்க பொயிட்டு நெலமயப்பாத்துட்டு போன் பண்றோம்... நீ காலயில வரலாம்... ஆத்தா ரெண்டு பொம்பளய இங்க இருந்து பத்தரமா பாத்துக்கங்க..." என்று ரெண்டு மூணு பேரை கிளம்பச் சொன்னார்.

****

மதுரை மீனாட்சி மிஷன் வாசலில் இறங்கிய கமலம் கதறிக் கொண்டு ஓடினாள். ராமையா ரிசப்ஷனில் விவரம் கேட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஐசியூ  நோக்கி விரைந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கமலத்தின் அழுகுரல் கேட்டு திரும்ப, கமலத்தைக் கண்ட கனகம் " அத்தாச்சி... " என்றபடி அவளிடம் ஓட, "அண்ணபொண்டி... எங்கண்ணனுக்கு என்னாச்சு..." என்று அவளை கட்டிக் கொண்டு கதற

"கமலம்... இது ஆசுபத்ரி... பொறுமையா இருங்க.... ஒண்ணு ஆவாது..." ஒருவர் அவர்களை அடக்க

"என்னாச்சு அண்ணபொண்டி..."

"அத நா... எப்புடி சொல்லுவே... நல்லாத்தான் போனாக இப்படி விழுந்து கெடக்காகலே..."

"அம்மா... கொஞ்ச சும்மா இருங்கம்மா... நர்சு கத்துனா வெளியில போகச் சொல்லுங்கன்னு சொல்லுது..."

"ராசா.... நம்ம தெய்வம் சாஞ்சிருச்சே..."

"அயித்த... அப்பா சும்மா இருப்பாக... அழுவாதீக... எல்லாரும் பேசாம இருங்க" தனது கண்கள் கலங்கி இருந்தாலும் மற்றவர்களை கட்டுப்படுத்தி தன்னையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான் மூத்தவன் முத்துராசு.

அங்குமிங்கும் ஓடிய நர்ஸ் ஒருத்தியிடம் "ஏம்மா... நெலம எப்படியிருக்கு..." என்று மெதுவாக கேட்டார் ராமையா.

"இருங்க... இப்ப டாக்டர் வருவாங்க... வந்து சொல்வாங்க" என்றபடி எதுவும் சொல்லாமல் சென்றாள்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியே வந்த டாக்டர், "பெரியவங்க ரெண்டு பேரு எங்கூட வாங்க..." என்றபடி அவரது அறைக்குச் சென்றார்.

அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியதும் "என்னால முடிஞ்சதை செஞ்சிருக்கேன். கண்டிசன் ரொம்ப மோசமாத்தான் இருக்கு... என்னால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது... முடிஞ்சளவு முயற்சி செய்து பார்க்கிறோம்" என்றதும் அவர் கையை விரிக்கிறார் என்பதை புரிந்து கொண்டவர்கள் எதுவும் சொல்லாமல் வெளியேறி மற்றவர்களிடம், "கவலைப்பட வேண்டாம்... நாளைக்குத்தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியுமின்னார்... பிரச்சினை இல்லையின்னு சொன்னார்" என்றனர்.

****

"அலோ... யாரு... " தனக்கு வந்த போனுக்கு பதிலளிக்கும் விதமாக மற்றவர்களிடம் இருந்து தள்ளி வந்து பேசினார் ராமையா.

"மாமா... நான் கண்ணன் பேசுறேன்..."

"என்னப்பா... இந்த நேரத்துல என்ன எதாவது பிரச்சினையா..."

"இல்ல மாமா... பானுக்கு வயித்தவலி வந்து துடிக்கிறா... எல்லாரும் ஆஸ்பத்திரியில இருக்கயில... எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல... அவ புருஷனுக்கு போன் பண்ணின அவன் மாமாவ பாக்க ஆஸ்பத்திரிக்கு வந்துக்கிட்டு இருக்கானாம்... அவன் அங்க வந்துட்டு இங்க வாற வரைக்கும் அவ தாங்க மாட்டா போல... வலியில ரொம்ப துடிக்கிறா மாமா"

"என்ன மாப்ளே... படிச்சபுள்ள நீங்க... யோசிக்கலாமா... உடனே சட்டுப்புட்டுன்னு காருக்குப் போன் பண்ணி ஆசுபத்ரிக்கு கொண்டு போங்க மாப்ளே.... இங்கயும்  நெலம சரியில்ல... அந்தப்புள்ளகிட்ட எதுவும் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம்... இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்..." என்றபடி கமலத்திடம் வந்தவர்

"கமலம்... பானுக்கு வலி வந்திருச்சாம்... ஆசுபத்ரிக்கு கூட்டிப் போகச் சொல்லிட்டேன்... ஒம்மவன் இங்க வந்துக்கிட்டு இருக்கானாம்..."

"என்னம்மான் சொல்றீங்க... இந்த நெலமயில... நாம என்ன பண்றது... கடவுள் இப்படி சோதிக்காறானேம்மான்..."

"என்ன பண்றது... நம்ம கஷ்டத்துக்காக பொறக்கப் போறதை தள்ளிப் போட முடியுமா சொல்லு நடக்கிறது நடக்கட்டும்..."

"இல்லம்மான்... பொறக்குறபுள்ள எங்கண்ணன முழுங்கிட்டு பொறந்துட்டா..."

"அப்படி ஏன் நெனக்கிறே... உங்கண்ணன் பொழக்கிறதும் பொறக்குற புள்ளயால இருந்தா... இல்ல அப்படியே எதாவது ஆனாலும் உங்கண்ணன் வந்து பொறந்திருக்கிறதா நெனச்சுக்குவோம்..."

"என்னம்மான் இப்படி தர்ம சங்கடமான நெலயில மாரியாத்தா விட்டுட்டா..."

"சரி மெதுவா உங்க அண்ண பொண்டாட்டிகிட்ட வெவரத்தைச் சொல்லு... சத்தம் எதுவும் போடாம... என்னதான் நடக்குதுன்னு பாப்போம்..." என்றபடி பேசாமல் போய் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கமலத்தின் மகன்.

"என்னாச்சு மாமாவுக்கு.... எப்படியிருக்காக..." பதட்டமாக கேட்டான்.

"பேராண்டி... உம் மாமன் நெலம ரொம்ப மோசமா இருக்கு... டாக்டருங்க பாத்துக்கிட்டு இருக்காங்க... பெரிய டாக்டர் சிரமங்கிற மாதிரி சொல்றார்.... சரி நாங்க இங்க பாத்துக்கிறோம் அங்க உம்பொண்டாட்டிக்கு வலி வந்து ஆசுபத்ரியில சேத்து இருக்காங்க.... அங்க அந்தப்புள்ள நீங்க யாருமில்லாம ரொம்ப கஷ்டப்படும்... உடனே நீ கெளம்பு... அவளுக்கு துணையா இரு... பிரச்சினையின்னா நான் போன் பண்றேன்...."

"என்னய்யா... இது இந்த நேரத்துல... பொறக்குற கொழந்த மாமாவை... " மெதுவா இழுத்தான்.

"என்னடா பேசுறே... எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறே... எங்க காலத்துல படிப்பறிவு இல்ல.... இப்படியெல்லாம் பேசினோம்... நீங்க படிச்சவங்க நீங்களுமா இப்படி..."

"இல்லய்யா... அப்படி எதாவது ஒண்ணுன்னா.... அந்தப் புள்ள நமக்கு எதுக்கு...."

"சீக்கழுத அப்படி ஏன் நெனைக்கிறே... அவரு விழுந்ததுக்கும் இது பொறக்குறதுக்கும் ஏன் முடிச்சுப் போடுறே... சாவுங்கிறது எல்லாருக்கும் வாரதுதான்... இந்தப்புள்ள பொறக்கலையின்னா ஒம்மாம விழுந்திருக்க மாட்டரா என்ன... தலவிதி எப்படியோ அப்படித்தான் நடக்கும்.  இதோட பிறப்புல அவனோட முடிவு இருக்கணுமின்னு... அது நல்லதோ கெட்டதோ.... எதாயிருந்தாலும் ஏத்துக்கத்தான் வேணும். கெட்டதா இருந்தா அவரே வந்து பொறந்திருக்கிறதா நெனச்சுக்குவோம். இல்ல நல்லதா இருந்தா தாத்தாவ காப்பாத்திக் கொண்டாந்துருச்சின்னு நெனச்சுக்குவோம்.... அதைவிட்டுட்டு தவறா ஏன் நினைக்கணும்... நம்ம ராசையா பொறந்தன்னைக்கு அவன் ஆத்தா பெரசவத்துலயே பொயிட்டா... அவனை எல்லாரும் ஆத்தாவ கொன்னுட்டு பொறந்தவன்னு பேசுனாங்க... என்னாச்சு.... அவன் பொறந்ததுக்கு அப்புறம்தான் அந்த வீட்டு நெலம சீராச்சு... இம்புட்டு சொத்தும் சேர்ந்துச்சு... தெரியுமா உனக்கு.. இன்னைக்கு போலீஸ்ல பெரிய போஸ்ட்டுல இருக்கான். எந்த ஒரு எழப்புக்கும் அதோட தொடர்ச்சியா வார எதுவும் காரணம் இல்ல... எல்லாம் நாமளா முடிவு எடுத்துக்கிறதுதான்... நீ எதப்பத்தியும் கவலைப்படாதே... உம்புள்ள நல்லபடியா பொறக்கணும்... நீ மொதல்ல கெளம்பு... அங்க அந்தப்புள்ள நெனெப்பெல்லாம் இங்கதான் இருக்கும். நீ பக்கத்துல இருந்தா அதுக்கு ஆறுதலா இருக்கும். போ..."

****

அதிகாலை 4.30 மணி...

"சாரிங்க எங்களால முடிஞ்ச செஞ்சோம்... தலையில இருந்து வார பிளட்டை நிப்பாட்ட முடியலை... எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியலை.... " என்று டாக்டர் சொல்ல அழுகுரல்கள் ஓசை மருத்துவமனையையே உலுக்கியது..

அதே நேரம்...

வலி அதிகமாகி பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்ட பானு வலி பொறுக்க  முடியாமல் கதறினாள்... வெளியே அவள் கணவனும் மற்ற உறவுகளும் கவலையுடன் காத்திருந்தனர். கண்ணனின் போன் அடிக்க எடுத்தவன் பானுவின் அப்பா இறந்த செய்தி கேட்டு மற்றவர்களிடம் பதட்டமாய் சொல்ல உள்ளே "அப்பா" என்ற பானுவின் குரலும் "குவா... குவா..." என்ற குழந்தையின் குரலும் கேட்டது.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல கதை மிக ரசித்தேன் நண்பரே...

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

இப்படிப்பட்ட மூடத்தனமான எண்ணங்கள் இன்னும் நம் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த விஷயத்தில் கிராமம், நகரம், பெருநகரம் என்ற பாகுபாடும் இல்லை. படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்ற பேதமும் இல்லை. குழந்தை பிறந்தா தாய் மாமனுக்கு ஆகாது என்றால் அந்த குழந்தையே வேணாம் என்கிற போக்கு இனி எத்தனை காலம் வந்தாலும் மாறாது போலிருக்கு.

Unknown சொன்னது…

ஹூம்.................இன்னமும் கிராமங்களில் சில நம்பிக்கைகள் தொடரவே செய்கின்றன!

ஜீவன் சுப்பு சொன்னது…

மண் வாசனையுடன் கூடிய எதார்த்தமான அழுத்தமான , சிறுகதை ...!

Menaga Sathia சொன்னது…

நல்ல கதை,எழுத்து நடையை மிக ரசித்தேன்...