மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 ஜூலை, 2013



பேராசிரியர் பெருமாள் முருகனின் கட்டுரை - பகுதி -1

புதுச்சேரி, பிரெஞ்சு நிறுவனமும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து மார்ச், 2013, 6,7,8 ஆகிய நாட்களில் நடத்திய ‘இலக்கணம் கற்பித்தல்’ கருத்தரங்கில் ‘இலக்கணம் கற்பித்தல்: ஆசிரிய அனுபவம்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் வழங்கிய கட்டுரை.

கட்டுரை புதுச்சேரியில் இருந்து வெளியாகும் ‘நற்றிணை’ கலை இலக்கியக் காலாண்டிதழ் ஏப்ரல் - ஜூன் 2013 இல் வெளியாகியிருக்கிறது.

--------------------------

நான் அரசு கல்லூரி ஆசிரியனாகிப் பதினேழாம் ஆண்டு இது. பணிக்குச் சென்ற முதலாம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து இளங்கலைத் தமிழிலக்கிய வகுப்புகளுக்கு இலக்கணமும் பட்ட வகுப்புகளுக்குப் பொதுத்தமிழ்த் தாளில் இலக்கணப் பகுதியும் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறேன். பொதுத்தமிழ் இலக்கணப் பகுதி பற்றி இப்போது பேசப் போவதில்லை. அது பள்ளித் தமிழ்ப் பாட இலக்கணப் பகுதியின் தொடர்ச்சிதான். தனியாகப் பேச வேண்டிய விஷயம் என்பதால் இப்போதைக்கு அதைத் தவிர்த்துவிட்டு இளங்கலைத் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இலக்கணம் நடத்தும் அனுபவத்தில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

இளங்கலையில் நன்னூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் ஆகியவை பாடத்திட்டத்தில் உள்ளன. அதாவது ஐந்திலக்கணத்தையும் மாணவர்கள் கற்கும் நோக்கில் இப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனேகமாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இதுதான் நிலை. இவ்விலக்கணங்கள் இளங்கலைக்கும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகியவை முதுகலைக்கும் உரியவை எனப் பகுத்துள்ளனர். இப்பகுப்பிற்கான காரணங்கள் பற்றியும் எக்காலத்தில் இருந்து இப்பகுப்புமுறை தொடங்கியது என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை.

யாப்பருங்கலக் காரிகை, நன்னூல் ஆகியவற்றைப் பெரும்பாலும் தொடர்ந்தும் புறப்பொருள், அகப்பொருள், தண்டி ஆகியவற்றை அவ்வப்போது இடைவிட்டும் பயிற்றுவித்து வந்திருக்கிறேன். யாப்பு கற்பிப்பதில் எனக்குப் பெரும் ஈடுபாடு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளனாக இருந்த போதே முதுகலை மாணவர்களுக்கு யாப்பு கற்பிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன்படி கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக யாப்பு கற்பிக்கிறேன். என் ஆசிரியர்கள் எவரும் குறிப்பிடும்படி எனக்கு யாப்பிலக்கணம் கற்பிக்கவில்லை. எனக்குக் கவிதை மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக நானாகவே பல நூல்களைக் கொண்டு யாப்பிலக்கணம் கற்றேன். புலவர் குழந்தை எழுதிய ‘யாப்பதிகாரம்’ என்னும் நூல் சுயமாக யாப்பு கற்கப் பெரிதும் உதவிய நூல்.

இத்தனை ஆண்டு கற்பித்த அனுபவத்தில் இப்போது கையில் நூல் எதுவுமோ குறிப்புச் சீட்டோ இல்லாமலே காரிகையை எளிமையாக நடத்தும் அளவுக்கு வந்திருக்கிறேன். எனினும் ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது விஷயங்களை யாப்பில் நான் கற்றுக் கொண்டே வருகிறேன். காரிகையைத் திரும்பத் திரும்பக் கற்பதன் வாயிலாகவும் மாணவர்களிடமிருந்தும் எனக்குக் கிடைப்பவை பல. நன்னூலைக் கற்பிப்பதிலும் எனக்கு மிகுந்த விருப்பமுண்டு. அனுபவத் தேர்ச்சியும் உண்டு. 

இன்றைய இளங்கலைக் கல்வி பருவமுறைத் தேர்வு அடிப்படையிலானது. மூன்றாண்டுகள், ஆறு பருவங்கள். ஐந்திலக்கண மரபு நமது. பொருளிலக்கணம் அகம், புறம் என இரண்டு. ஆகவே ஆறு பருவங்களுக்கும் ஆறு இலக்கண நூல்கள். அதுவும் முறையே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் வரிசையின் அடிப்படையில் கற்பிக்கப்படுகின்றன. எனக்கு இந்த வரிசைமுறைப் பாடத்திட்டத்தில் உடன்பாடு இல்லை. முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. செப்டம்பர் முழுமாதமும் அக்டோபரில் அரை மாதமும்தான் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறும். அக்டோபர் இறுதியில் பருவத்தேர்வு தொடங்கும். முதல் பருவத்தில் எழுத்திலக்கணத்தை முழுமையாக இம்மாணவர்களுக்குக் கற்பிப்பது எவ்விதம்? பிற பாடங்கள் எதுவும் கிடைக்காமல் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பயிலலாம் என்று வந்து சேரும் மாணவர்களே பெரும்பான்மையோர். இலக்கணம் கடினம் என்னும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துடையவர்களே அவர்கள். ஒன்றரை மாதத்தில் ஓரிலக்கணப் பகுதியைக் கற்று அவர்களால் தேர்வு எழுத முடியுமா? விடைத்தாள் மதிப்பிடும் ஆசிரியர்கள் எவ்வளவுதான் தாராளமாக மதிப்பெண் போட்டாலும் கிட்டத்தட்டப் பாதிப்பேர் தேர்ச்சி பெற முடிவதில்லை. நன்னூல் பாயிரமும் எழுத்தியல், பதவியல், புணரியல்கள் உள்ளிட்ட ஐந்து இயல்களும் கொண்ட பாடம் இது. கற்பிப்பதும் கற்பதும் கடினமானவையே.

முதல் பருவத்தில் இளங்கலையில் இலக்கணப் பாடம் ஏதும் இருக்கக் கூடாது என்பதே என் எண்ணம். தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் வகையிலான எளிமையான பாடத்திட்டம் போதுமானது. எழுத்திலக்கணம் இரண்டாம் பருவத்தில் அமைவது நலம். அதேபோல எழுத்திலக்கணத்தை அடுத்து யாப்பிலக்கணம் இருந்தால் மிகவும் பயன்படும். யாப்புக்குப் புணர்ச்சி இலக்கணம் தேவை. அதை எழுத்ததிகாரத்தில் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் அதையடுத்து யாப்பிலக்கணம் கற்றால் செய்யுள்களை வகை பிரித்து அறியவும் பிரித்து வாசிக்கும் பயிற்சி பெறவும் உதவியாக இருக்கும். அவற்றை அடுத்துச் சொல், பொருள் ஆகியவை இருக்கலாம். அணியிலக்கணம் இளங்கலையில் கற்பிக்கப்படவில்லை என்றால் ஒன்றும் குறைந்துவிடாது. இன்றைய பாடத்திட்ட முறையில் இலக்கணக் கல்விக்கும் இலக்கியக் கல்விக்கும் இடையே தொடர்பேதும் இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் இலக்கணப் பாடம் ஒன்றும் இலக்கியப் பாடம் ஒன்றும் இருக்கின்றன. இருப்பினும் இரண்டையும் இணைக்கும் அம்சம் எங்கும் இல்லை.

கம்ப ராமாயணத்தைக் கற்கும் மாணவர் அது என்ன பாவகையில் அமைந்திருக்கிறது என்பதை அறிவதில்லை. அறியத் தேவையும் இல்லை. புணர்ச்சி இலக்கணத்திற்கோ சொல்லிலக்கணத்திற்கோ அவர்கள் பயிலும் இலக்கியப் பாடப் பகுதியிலிருந்து எந்த உதாரணத்தையும் எடுக்க வேண்டியதில்லை. தேர்வு வினாக்கள் மிகவும் தட்டையாகவே கேட்கப்படுகின்றன. உள்ளதை உள்ளபடி எழுதினால் போதுமானது. ஒப்பீடு, தொடர்பு ஆகியவை தேவையில்லை. மாணவர்களின் படைப்புணர்வுக்கும் வேலை இல்லை. இலக்கணம் தொடர்பான பயிற்சிகள் ஏதுமில்லை. இன்று ஆங்கில இலக்கிய மாணவர்களுக்குச் சில கணினிகளோடு கூடிய மொழி ஆய்வகம் அரசு கல்லூரிகளில் இயங்குகிறது. மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி வகுப்பும் தேர்வும் நடக்கின்றன. ஆனால் தமிழிலக்கிய மாணவர்களுக்கு அத்தகைய பயிற்சிக்கு வாய்ப்பே இல்லை. அப்படிச் செய்முறைப் பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்த உணர்வு தமிழாசிரியர்களிடையே இல்லை.

இலக்கணத்தையும் இலக்கியத்தையும் தொடர்புபடுத்தியும் இலக்கணத்தையும் நடைமுறையையும் தொடர்புபடுத்தியும் பலவிதமான செய்முறைப் பயிற்சிகளைத் தரலாம். இத்தகைய நடைமுறைகள் ஏதும் இல்லாமையால் இலக்கணப் பாடம் பற்றிய வெறுப்புணர்வே மாணவர்களிடம் இருக்கிறது. இன்றும் நூற்பாக்களை மனனம் செய்யச் சொல்வதும் நூலில் உள்ள உதாரணங்களேயே எழுதச் சொல்வதுமான பழைய கற்பித்தல் முறையே நிலவுகிறது. இலக்கணம் கற்பித்தலில் எனக்கெனச் சில முறைகளைப் பின்பற்றி வருகிறேன். கால அவகாசம் போதுமானதாக இல்லை என்பதாலும் கல்லூரிச் சூழலில் தனித்து இயங்க வேண்டியிருப்பதாலும் இம்முறைகளைத் தீவிரமாக அமல்படுத்த முடிவதில்லை. என்னளவில் முயற்சி செய்கிறேன். அதுவே ஓரளவு பலன் தருவதாக இருக்கிறது. யாப்பிலக்கணம் கற்பிப்பதில் நான் கையாளும் முறைகளையும் மாணவரது எதிர்வினைகளையும் பற்றி நிறையச் சொல்ல முடியும். மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளைத் தருவது என் வழக்கம். அதுதான் இலக்கணத்தை நடைமுறையோடு பொருத்திப் பார்க்க அவர்களுக்கு உதவுகிறது.

யாப்பிலக்கணத்தில் ஒவ்வொரு பகுதி நடத்தும் போதும் ஒவ்வொரு பயிற்சி தருவேன். உறுப்பியல் கற்பிக்கையில் மாணவர்கள் அவசியம் திருக்குறள் நூல் ஒன்றைக் கையில் வைத்திருக்க வேண்டுவது அவசியம் எனச் சொல்லிவிடுவேன். குறள்களைக் கொண்டு அசை பிரிக்கும் பயிற்சி தருவேன். அதைத் தெளிவாகக் கற்றுக்கொண்டால் அடுத்து வருபவை எளிதாகும். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் பத்துக் குறள்களையாவது அசை பிரித்துக் காட்ட வேண்டும். அசை பிரிப்பதில் மாணவர்க்குக் குழப்பம் வருவது ஈரிடத்தில்தான். தனிக்குறிலை நேரசை எனப் பிரிக்க வேண்டும். குறிலிணை வரின் நிரையசை. ஆனால் குறிலிணையைத் தனிக்குறில்களாகக் கொண்டு நேர்நேர் எனப் பிரித்துவிடுவர். இந்தக் குழப்பத்தைப் போக்கத் தனிக்குறில், குறிலிணை ஆகியவற்றுக்கான சான்றுகளை மிகுதியாகக் காட்டுவது நல்லது. குறில் என்று சொல்லாமல் தனிக்குறில் என்று குறிப்பிடுவதன் அர்த்தத்தையும் குறிலிணை அல்லது இருகுறில் என்பதன் பொருளையும் தெளிவுபடுத்திச் சான்றுகள் தர வேண்டும். அதேபோல குறில்நெடில் வரின் அது நிரையசை என்பதிலும் மாணவர்க்குக் குழப்பம் வரும். நெடில்குறில் வருவதை நிரையசையாக்கி விடுவார்கள். நெடில்குறில் வரின் அது ஏற்கனவே சொன்னவற்றின் அடிப்படையில் நேர்நேர் ஆகும் என்பதை விளக்கினால் தெளிவு கிடைக்கும். எனினும் எவ்வளவு விளக்கினாலும் மாணவர்கள் அலகிடும் பயிற்சியைச் சில நாட்களாவது மேற்கொண்டால் ஒழிய அசையைக் கற்றுக்கொள்ள இயலாது. 

மாணவர்களுக்கு அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பயிற்சிகள் இருப்பது நல்லது. அளபெடை இலக்கணம் எழுத்ததிகாரத்தில் நடத்துவதைவிட யாப்பிலக்கணத்தில் சொல்லித் தருவதுதான் பொருத்தம். அளபெடையை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்பதே தனிப்பயிற்சிக்கு உரியது. படீஇயர் என்பதைப் படீ இயர் என்றும் கெடுப்பதூஉம் என்பதைக் கெடுப்பதூ உம் எனவும் உச்சரிப்பது பெரும்பான்மை. ஆகவே முதலில் அளபெடை வாசிப்பைச் சொல்லித் தந்து பின்னர் அதற்கும் யாப்புக்கும் உள்ள தொடர்பை விளக்க வேண்டும். அத்தோடு சில பயிற்சிகளும் இருப்பின் அளபெடை புரிபடும். அளபெடை நடத்திவிட்டு ஒருமுறை திருக்குறளில் அளபெடை அமைந்த குறள்களைக் கண்டுபிடிக்கச் சொன்னேன். பல குறள்களை மாணவர்கள் எடுத்துக் காட்டினர். ஒவ்வொருவரும் சிலசில குறள்களைக் கண்டுபிடித்துக் காட்டினர். அப்போதுதான் திருக்குறளில் ஏராளமான அளபெடைகள் வந்துள்ளன என்பது எனக்குத் தெரிந்தது. திருக்குறளில் தேடி அளபெடை வந்திருக்கும் இடங்கள் முழுவதையும் தொகுத்து வருபவர்க்குப் பரிசு என்று அறிவித்தேன். அடுத்த நாள் ஒரு மாணவர் நூற்றுக்கும் மேற்பட்ட அளபெடை அமைந்த குறள்களைத் தொகுத்து வந்து கொடுத்துப் பரிசு பெற்றார். திருக்குறள் அளபெடைகள் குறித்துத் தனி ஆய்வே செய்யலாம் என்று எனக்குத் தோன்றியது.

மாணவர்களுக்குப் புரிகிற மாதிரியான உதாரணங்களைத் தருவதும் என் வழக்கம். நாம் புள்ளி வைத்தால் மாணவர்கள் கோலமே போட்டு விடுவார்கள். அடி வகைகளை விளக்குவதற்குச் செய்யுள்களை உதாரணம் காட்டுவதற்கு முன்பாக சாதாரண வாக்கியத்தைக் காட்டலாம் என்று முடிவு செய்தேன். ‘இலக்கியம் படிக்கிறேன்’ – குறளடி; ‘இன்று கல்லூரி வந்தேன்’ – சிந்தடி. இப்படி உதாரணங்களைக் காட்டி விளக்கிவிட்டுப் பின் செய்யுள் அடிகளைக் காட்டினேன். ஒரு மாணவர் தேர்வில் இப்படி எழுதியிருந்தார்:

அவளே அழகு – குறளடி
அவளே மிகமிக அழகு – சிந்தடி
அவளே மிகமிக அழகாக இருக்கிறாள் – அளவடி
அவளே மிகமிக அழகாக இருக்கிறாள் என்கிறேன் – நெடிலடி
அவளே மிகமிக அழகாக இருக்கிறாள் என்றுநான் நினைக்கிறேன் – கழிநெடிலடி.

இப்படி எழுதிய விடைத்தாள் திருத்தும்போது என்னிடமே வந்தது. சீர் எண்ணிக்கை அடிப்படையில் அடிகளை வகை பிரிப்பது காரிகை. அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என மகிழ்ந்தேன். நிறைய மதிப்பெண்களையும் போட்டேன். என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு அருகில் இருந்தவரிடம் காட்டினேன். அவர் படித்துப் பார்த்தார். ‘என்ன கொழுப்புப் பாருங்க. பெயில் பண்ணுங்க சார்’ என்றார் அவர். விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கும் மாணவரின் விடைத்தாள் என்னைத் தவிர வேறொரு ஆசிரியரிடம் போயிருந்தால் அவ்வளவுதான்.

மாணவர்களுக்குச் செய்யுள்கள் மனதில் பதிவது கடினம். திரைப்பாடல்கள் எளிதாகப் பதிந்துவிடும். இது இன்றைய காலத்தின் இயல்பு. ஆகவே திரைப்பாடல்களை உதாரணம் காட்டுவதோடு மட்டும் நிற்பதில்லை. அப்பாடல்களைச் செல்பேசியில் பதிவு செய்து கொண்டுபோய் வகுப்பில் போட்டு விடுவதும் உண்டு. அந்தாதித் தொடை கற்பிக்கும் போது அதற்கு உதாரணமாய் இரண்டு பாடல்களைச் சொல்வேன். அவற்றை இப்போது போட்டும் காட்டுகிறேன். ‘மூன்று முடிச்சு’ படத்தில் இடம்பெறும்

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்

என்னும் பாடல் ஒன்று. இப்பாடல் முழுவதும் அந்தாதியாக அமைந்தது. நாலுவேலி நிலம் படத்தில் திருச்சி லோகநாதனும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய நாட்டுப்புறப் பாடல் மெட்டில் அமைந்த

ஊரார் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு
நான் வருவேன் நடுச்சாமம்

நல்ல பாம்பு வேடம் கொண்டு
நடுச்சாமம் வந்தாயானால்
ஊர்க்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்திடுவேன்

என்னும் பாடல் மற்றொன்று. இப்பாடல்களை மாணவர்கள் மிகவும் ரசிப்பர். அந்தாதியை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

தேர்வில் ஒரு மாணவர் ‘வசந்தகால நதிகளிலே’ பாடலை உதாரணமாக எழுதியிருந்தார். அவருடைய விடைத்தாள் என்னருகில் திருத்திக் கொண்டிருந்த அம்மையார் ஒருவருக்கு வந்தது. அவர் ‘பாருங்க சார் சினிமாப் பாட்டையெல்லாம் எழுதி வெச்சிருக்கறான்’ என்று என்னிடம் புகார் சொன்னார். அவருக்கு அந்தப் பாட்டில் அந்தாதி அமைந்திருப்பதை விளக்கிச் சொல்லி அந்த மாணவருக்கு மதிப்பெண் போடச் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அதன்பின் மாணவர்களிடம் ‘புரிஞ்சிக்கறதுக்குத்தான் சினிமாப் பாட்டு. பரிட்சையில செய்யுள்தான் எழுதணும்’ என்று சொல்லி நடத்தும்படி ஆயிற்று.

செய்யுள்களை உதாரணம் தருவதிலும் புதுமுறையைப் பின்பற்றுவதுண்டு. உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை மட்டும் உதாரணம் காட்டுவதில்லை. புதுப்புதுப் பாடல்களை உதாரணம் காட்டுவேன். அப்படிக் காட்டும் பாடல்கள் சுவையுடையதாக அமைந்தால் மாணவர்கள் மனதில் எளிதில் பதியும். குறளடி, சிந்தடி ஆகியவற்றுக்குக் கம்பராமாயணப் பாடல்களை உதாரணம் காட்டுவேன்.

குறளடி:
உற்றக லாமுன்
செற்றக் குரங்கைப்
பற்றுமின் என்றான்
முற்றும் முனிந்தான்.

சிந்தடி:
பற்றுதிர் பற்றுதிர் என்பார்
எற்றுதிர் எற்றுதிர் என்பார்
முற்றினர் முற்றும் முனிந்தார்
கற்றுணர் மாருதி கண்டான்.

இப்பாடல்களை விளக்கிச் சொன்னால் அது கம்பராமாயண வகுப்பாகவும் மாறிவிடும். இலக்கணம் இலக்கியத்தோடு இயையும் விதம் இதுதான்.

நாம் வெவ்வேறு வகையான உதாரணம் காட்டும்போது மாணவர்களுக்கும் தேடல் வரும். அவர்கள் நாம் யோசிக்காத புதுப்புது உதாரணங்களைத் தருவார்கள். காரிகை கூறும் குற்றியலுகரம் அசையை அடிப்படையாகக் கொண்டது. குறிலொற்றுக் குற்றியலுகரம், நெடில் குற்றியலுகரம், நெடிலொற்றுக் குற்றியலுகரம், குறிலிணைக் குற்றியலுகரம், குறிலிணையொற்றுக் குற்றியலுகரம், குறில்நெடில் குற்றியலுகரம், குறில்நெடிலொற்றுக் குற்றியலுகரம் ஆகியவை. இவற்றிற்கு உதாரணங்களாக உரையில் கொடுத்திருப்பவை பழையவை. புதிய உதாரணங்களைச் சொல்லலாம் என்று ஒருமுறை முயன்றேன். குறில்நெடில் குற்றியலுகரம் என்பதற்கு அசோகு, விளாறு ஆகியவற்றைச் சொன்னேன். குறில்நெடிலொற்றுக் குற்றியலுகரத்திற்குச் சரியான உதாரணம் நினைவில் வரவில்லை. நன்னூலில் வரும் ‘பனாட்டு’ என்னும் சொல்லைச் சொன்னேன். ‘உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் பாருங்கள்’ என்று சொன்னேன். ஒரு மாணவர் ‘கசாப்பு’ என்னும் சொல்லைக் கண்டுபிடித்துச் சொன்னார். இன்றைய பயன்பாட்டு உதாரணம் அது. 

மூன்றாம் வேற்றுமைத் தொகைக்கு மொழியில் சான்றுகள் குறைவு என்பது என் எண்ணமாக இருந்தது. கல் எறிந்தான் என்னும் உதாரணத்தை உரை தருகிறது. வேறேதோ ஒரு நூலில் ‘சம்மட்டி அடித்தான்’ என்பதைக் கொடுத்திருந்தார்கள். இவற்றை வகுப்பில் சொல்லிவிட்டுப் புது உதாரணங்களைச் சிந்திக்கும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொண்டேன். ஒரு மாணவர் ‘பால் தயிராயிற்று’ என்றார். பாலால் தயிராயிற்று என்று விரிப்பது பொருந்துமா? சரி, இருக்கட்டும். இன்னொருவர் ‘குழந்தை கால் உதைத்தது’ என்றார். குழந்தை காலால் உதைக்கும் பருவம் ஒன்றுண்டு. மிகவும் பொருத்தமான சான்றுதான். வேறொருவர் ‘ஊசி குத்தினான்’ என்பதைச் சொன்னார். ஊசியால் குத்தினான் என்றாகும். ‘கண்ணடித்தான்னு இவன் சொல்றாங்கய்யா’ என்று ஒரு மாணவர் கூறினார். காதல், பாலியல் உள்ளிட்ட இடக்கர் தொடர்பாகப் பேசும்போது மாணவர்கள் மற்றவரையே கைகாட்டுவர். ‘யார் சொன்னாலும் சரிப்பா. இது அருமையான உதாரணம். உங்க ரண்டு பேருக்கும் கண்ணடிச்சுக்க அனுமதி கொடுத்தர்றம்பா’ என்றேன்.

மாணவியர் பெரும்பாலும் வாய் திறப்பதில்லை. பொதுப்புத்தியில் பெண்கள் வாயாடிகள் என்னும் கருத்து இருந்தாலும் வகுப்பறையில் பெண்கள் பேசுவதேயில்லை. அவர்களைப் பேச வைப்பது பெரும்பாடு. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் சொன்னார் ‘கண்ணடிச்சாச் செருப்படி தாங்கய்யா கிடைக்கும்’ என்றார். கண்ணடியைவிடச் செருப்படி இன்னும் நல்ல உதாரணம் என்றேன். இவற்றைவிடப் பொருத்தமான உதாரணத்தை எங்கே பிடிப்பது? ‘நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி’ என்று திரைப்பாடல் ஒன்றில் விளக்கமாக வரும். செருப்படி என்பது செருப்பால் அடித்த அடி என விரியும். மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை இது. மாணவர்களிடம் இருந்துதான் இப்படியான உதாரணங்களைப் பிடிக்க முடியும். இப்படியான வகுப்பறைத் தேடலில் ஏர் உழுதான், அரிவாள் வெட்டு, கத்திக்குத்து எனப் பல உதாரணங்கள் கிடைத்துவிட்டன. நூற்பா, உரை என்னும் கடிவாளக் கண்களை அகற்றிவிட்டு பார்த்தால் நடைமுறையிலிருந்து பலவற்றைப் பெற முடியும். மூன்றாம் வேற்றுமைத் தொகைக்கு நிறைய உதாரணங்கள் உண்டு என்று இப்போது என் கருத்தை மாற்றிக்கொண்டேன்.

சமீபத்தில் விளி வேற்றுமை நடத்திக் கொண்டிருந்தேன். அதில் ‘அன்னை’ என்பது விளிக்கும்போது அன்னாய் என மாறும் என்று வருகிறது. அதைச் சொல்லிவிட்டு தந்தை – தந்தாய், நங்கை – நங்காய், மங்கை – மங்காய் என்றெல்லாம் வரும். இப்போது இப்படி நாம் பயன்படுத்துவது இல்லை என்றேன். உடனே ஒரு மாணவர் சமீபத்தில் வந்த ‘எங்கேயும் காதல்’ படத்தில் வரும் ஒரு பாடலைக் குறிப்பிட்டுக் காட்டினார். ‘வள்ளியே சக்கர வள்ளியே, பள்ளியே பங்கனப் பள்ளியே’ என்று தொடங்கும் அப்பாடலில் ‘நங்காய் நிலவின் தங்காய்’ என்று வருகிறது. அதை அம்மாணவர் உதாரணமாகச் சொன்னதும் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.

இயல்பு வழக்கு, தகுதி வழக்கு ஆகியவற்றுக்கு ஒவ்வோர் ஆண்டும் எனக்குப் புதுப்புது உதாரணங்கள் கிடைக்கும். குழூஉக்குறிக்கு மாணவர்களிடையே வழங்கும் கடலை, பட்டாணி தொடங்கி இன்றைய மொக்கை, பன்னு வரைக்கும் விதவிதமான உதாரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழில்பெயர் ஆகிய வகைகள் பற்றி விளக்கும்போது சினைப்பெயருக்கும் குணப்பெயருக்கும் கிராமங்களில் நிலவும் வகைவகையான பட்டப் பெயர்களை மாணவர்கள் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். விளி வேற்றுமையின் போது வகுப்பில் எல்லா மாணவர்களின் பெயர்களும் விளிக்கப்பட்டிருக்கின்றன. அன்றைக்கெல்லாம் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அண்மை விளியிலும் சேய்மை விளியிலும் விதவிதமாக அழைத்து விளையாடி மகிழ்ச்சி அடைவதைக் கண்டிருக்கிறேன்.

நன்னூல் நடத்தும்போது அந்நூல் கூறும் இலக்கணத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்த புரிதலைத் தொடர்ந்து உருவாக்கியபடியே செல்வது அவசியம். நன்னூல் கூறுபவற்றுள் உலக வழக்குக்குப் பொருந்தும் இலக்கணம் எது, செய்யுள் வழக்குக்குப் பொருந்தும் இலக்கணம் எது என்பதைத் தெளிவாகப் பிரித்துச் சொல்ல வேண்டும். உலக வழக்குக்குப் பொருந்துபவற்றில் எவை பழைய வழக்கு, எவை இன்றும் நிலவுபவை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் செய்யுள் வழக்குக்கான இலக்கணத்தை நாம் பயில வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். அன், ஆன் ஆகியவை படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள். இவற்றில் அன் இன்றைய வழக்கில் இல்லை. ஆன் மட்டுமே இன்றைய பயன்பாட்டில் உள்ளது என விளக்க வேண்டும். நடந்தனன், வந்தனன் என இன்று எங்கும் பயன்படுத்துவதில்லை. நடந்தான், வந்தான் என்பவைதான். அள், ஆள் ஆகியவற்றிலும் அப்படியே.

அர், ஆர், ப, மார் ஆகியவை பலர்பால் வினைமுற்று விகுதிகள். இவற்றில் அர், ஆர் ஆகியவை இன்றும் பயன்படுகின்றன. பேசினார், பேசினர் என்கிறோம். பேசினார் என்பது இன்று பலர்பால் பயன்பாடு அல்ல. மரியாதைப் பன்மை. பேசினர் எனபதே இன்று பலர்பால். ப பழைய இலக்கியங்களில் மட்டும் வரும். மார் இன்று வினைமுற்று விகுதியாக இல்லாமல் பலர்பால் பெயர் விகுதியாக அண்ணன்மார், தங்கைமார், தாய்மார் என்பவற்றில் பயன்படுகின்றது. இவற்றை எடுத்துச் சொல்வது என் வழக்கம். கிறு, கின்று, ஆநின்று ஆகியவை நிகழ்கால இடைநிலைகள். இவற்றில் ‘ஆநின்று’வைப் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். நடவாநின்றான் என்று உதாரணம் காட்டினால் இன்று ‘நடக்காமல் நின்றான்’ என்று பொருள் எடுத்துக்கொள்வர். இதை நட + ஆநின்று + ஆன் எனப் பிரித்துக் காட்ட வேண்டும். அத்தோடு பழைய உரைகளில் இருந்து சான்றுகளைக் கொடுக்கலாம். பழைய உரைகளைப் பயிலும்போது ஆநின்று பற்றிய தெளிவு இருந்தாலே பொருளைச் சரியாக உணர இயலும்.

கிறு, கின்று ஆகிய இடைநிலைகள் இன்றைய தமிழில் பயன்படுகின்றன. இருதிணை ஐம்பால்களிலும் இவை பயன்படுகின்றனவா? வருகிறான், வருகின்றான். வருகிறாள், வருகின்றாள். வருகிறார், வருகின்றார். வருகிறது, வருகின்றது. இவை சரி. ஆனால் பலவின் பாலுக்கு மட்டும் கிறு வருவதில்லை. கின்று மட்டுமே வரும். வருகின்றன என்பது வழக்கு. வருகிறன என்பது இல்லை. இப்படி ஒரு வரையறையை நன்னூல் தரவில்லை. வாய்ப்பிருப்பின் ஆசிரியர் தருவது மாணவர்க்குக் கூடுதல் புரிதலைக் கொடுக்கும். எல்லா நூற்பாக்களையும் இவ்வளவு விளக்க வேண்டியதில்லை. எனினும் இப்படி அவசியப்படும் இடங்கள் பல உள்ளன.

சமகாலத்தோடு இலக்கணத்தைப் பொருத்தும் கற்பித்தலே மாணவர்களுக்கு ஆர்வத்தையும் அறிவையும் ஊட்டுவன. நன்னூலில் உவம உருபுகளைப் பட்டியலிடும்

நூற்பா ஒன்று உள்ளது.
போலப் புரைய வொப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே (நன்.367)

என்னும் நூற்பா அது. செய்யுள்களில் பயின்று வரும் உவம உருபுகளின் தொகுப்பு இது. இவற்றில் ‘போல’ ஒன்றைத் தவிர மற்றவை இன்று பயன்பாட்டில் இல்லை. ஆனால் புதிய உருபுகள் உருவாகியுள்ளன. அப்படி எனக்குத் தெரிந்தவை மாதிரி, ஆட்டம் ஆகியவை. ‘கல் மாதிரி இருக்கிறான்’ என்கிறோம். மாதிரியை மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். ‘புத்தகத்தப் பொன்னாட்டம் வெச்சிருக்கிறான்’ என்பதில் ஆட்டம் வருகிறது. ‘மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்’ என்று ‘ஆலயமணி’ திரைப்பாடல் இருக்கிறது. இதில் ‘ஆட்டம்’ என்பது உவம உருபாகப் பல இடங்களில் வருகிறது.

-பதிவின் நீளம் கருதி இரண்டாக பகிர்ந்துள்ளேன்.  தொடர்ச்சி அடுத்த பகிர்வாக...
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

 1. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தால் வழுவல.தெரியாத உதாரணங்கள் கூறி புரிய வைப்பதைவிட தெரிந்த உதாரணங்கள் கூறி புரிய வைப்பது மாணவர்க்கும் ஆசிரியக்கும் எளிது.சூழலுக்கேற்ற இலக்கணக் கல்வி.

  பதிலளிநீக்கு
 2. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தால் வழுவல.தெரியாத உதாரணங்களைக்கொண்டு புரியவைப்பதைவிட தெரிந்த உதாரணங்களைக்கொண்டு புரிய வைப்பது ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் எளிது.காலங்கள் பற்றி கூறும்போது, உண்டான்,உண்கிறான்,உண்பான் என்பதைவிட நேற்று இன்று நாளை என்ற திரைப்படத்தின் பெயரைக்கூற எளிதில் புரியும்.இது இக்கால சூழலுக்கேற்ற இலக்கணக்கல்வி.

  பதிலளிநீக்கு
 3. என் கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான கட்டுரை. பல ஐயப்பாடுகளுக்கு விடை கிடைத்தது.
  செந்தில்/VAO நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...