மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 11 ஜூலை, 2013கிராமம் பேசுகிறேன்...


ரோட்டோர ஆவாரம் பூ
கூட்டோட காஞ்சாச்சு...
கொல்லையில முல்லை
கொடியோட போச்சு...

நெறஞ்ச கம்மாய் இப்போ
வறண்டு கெடக்க
திறந்த மடையெல்லாம்
இடிஞ்சு போய்க் கெடக்கு...

கொக்கும் குருவியும்
குதிக்கும் மீன்களும்
போன இடந்தெரியாமலே
பொசுக்குன்னு போச்சு...

வெளஞ்ச வயலெல்லாம்
பதராகிக் கெடக்கயிலே
தண்ணியோடிய வாய்க்காலும்
தரையாகிப் போச்சு...

கலப்பையும் மாடும்
கண்டு நாளாச்சு...
உலக்கையும் உரலும்
மறந்தே போச்சு..

களத்துமேடெல்லாம்
கருவையின் வீடாக
வைக்கப்போர் இருந்த இடம்
வழி மறந்து போச்சு...

கத்தி அழைக்கும் பட்டி
ஆடும் பார்த்து நாளாச்சு...
குட்டிக் கன்றும்
குதித்து நாளாச்சு...

கோழியும் சேவலும்
கொக்கரித்து நாளாச்சு...
குரைக்கும் நாயும்
கூண்டோடு போச்சு..

அழுகும் குழந்தைக்கு
அன்னையின் தாலாட்டுக்
கேட்டு நாளாச்சு...
தூளியாடிய வேப்பமரம்
வெட்டுப்பட்டுப் போச்சு...

வீட்டுக்கொரு கசாலை
வீணாகிப் போச்சு
ஊருக்கே தண்ணி கொடுத்த
ஒத்த அடிபைப்பும்
உயிரைவிட்டு நாளாச்சு...

வெறகடுப்பைப் பார்த்து
வெகு நாளாயிப் போச்சு...
மண் சட்டியெல்லாம்
மறஞ்சேதான் போச்சு...

வெறகு வெட்டும்
வேலையையும்
வீரய்யா விட்டுப்புட்டான்...
களை பறிக்கும்
வேலையின்றி
காளியம்மா கவலப்பட்டா...

விடிகாலை நேரத்தில
வெள்ளனவே எந்திரிச்சி
சாணி தொளிச்சு கோலமிட
கன்னிப் பெண்ணுமில்ல
கருத்தப் பசுவுமில்ல...

ஊர்காக்கும் தெய்வமாம்
உக்கிர முனியையாவும்
நெருஞ்சி முள்ளுக்குள்ள
வருந்தி நிக்கிறாரு..

காவல் தெய்வமாம்
கருப்பருக்கே காவலில்லை...
கையிலிருந்த அருவாளையும்
களவாண்டு பொயிட்டாய்ங்க...

தண்ணியெடுக்க வரும்
தாவணிக் குமரிகளையும்
கபடி ஆடும் காளைகளையும்
பார்த்து நாளாச்சு...
நாகரீகம் ஜெயிச்சாச்சு...

பல வீடு பூட்டியிருக்க
சில வீடு திறந்திருக்க
இப்பவும் இங்க
கொஞ்சம் உயிர்ப்பிருக்கு...

இன்னும் சில காலம்
எங்களுயிர் இங்கிருக்கும்
கடைசி உயிர் போனபின்னே
காணாமல் போய்விடுவேன்...
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

 1. அற்புதமான கவிதை தம்பீ...ஆனா உள்ளே புதைந்திருக்கும் உண்மை வலிக்கத்தான் செய்கிறது..

  இருக்கும் உயிர்ப்பை இறக்கவிடாது பிழைக்கச்செய்ய புறப்பட்டு போன புள்ளைங்க வூரு வந்துசேந்திடனும்
  விவசாயத்த பாத்துபுடனும்..என்ன சரியா...:)

  பதிலளிநீக்கு
 2. ஒரு கிராமத்தையே கண் முன் கொண்டு வந்துவிட்டது உங்க கவிதை. நான் கிராமத்துல வளார்ந்து, கிராமத்துல வாக்கப்ப்ட்டு இப்போ டவுன்ல இருக்கேன். எனக்கு தெரியும் நான் இதெல்லாம் எவ்வளாவு உண்மைன்னு?! உங்க கவிதை என்னை என் சிறு பிராயத்துக்கே கூட்டி சென்றது.. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. வளர்ந்ததும் புகுந்ததும் கிராமங்கள் என்பதால் உங்கள் கவிதையின் அத்தனை உண்மைகளும் நெஞ்சினைச் சுடுகின்றன. மனசு வலிக்கின்றது.. ..நாகரீகம், வசதிகள் என்னும் வலிமைகள் உள்ளே நுழைய நுழைய எளிமையும் அழகும் கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன!!

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா11/7/13, பிற்பகல் 7:12

  நெஞ்சை கனக்கச் செய்த , ஏங்க வைத்த
  அழகுப் பாடல்.

  பதிலளிநீக்கு
 5. அழகான 'முன்னாள்' கிராமத்தைக் கண் முன்/நெஞ்சில் நிழலாட வைத்த அருமையான கவிதை!

  பதிலளிநீக்கு
 6. அன்பின் குமார் - கவிதை அருமை - ஆதங்கம் புரிகிறது - பல கிராமங்கள் இன்ன்நிலையினை அடைந்து விட்டன. இயறகை பொய்த்து விட்டது - மக்களோ மரங்களை வெட்டியும் ஆறு குளங்களை தூர்த்தும் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் வறுமை கிராமப்புரங்களை வாட்டி வதைக்கின்றன. எப்பொழுது மாறும் இன்னிலை. சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 7. கிராமங்கள் நகரமாகி வெகு காலம் ஆகி விட்டது. எளிமையான கிராமங்கள் இப்போது இல்லை.

  பதிலளிநீக்கு
 8. ஒரு கிராமத்தின் அவலத்தை அப்படியே கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...