மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 ஜூலை, 2013

மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்


'என் தலைமுறையின் முதல் தேநீர் 
நீ கொடுத்து 
நான் அருந்துகிறேன் 
எதற்காக அழைத்து வந்திருக்கிறாய்? 
அது தெரியவில்லை. 
ஆனால், உன் வீட்டில் 
என் எல்லை எது என்பதை நான் அறிவேன். 
வண்டி மை அடையாளத்தோடு 
என் கையில் கொடுக்கப்பட்ட 
உன் தேநீர்க் கோப்பை                   
நான் வெளியேறிய பின் 
உடைக்கப்படலாம்... அல்லது ஒதுக்கப்படலாம் 
என்பதையும் நானறிவேன். 
போகும் முன் எனக்குள் நானே 
சொல்லிக்கொள்கிறேன்... 
உனக்கென்று 
அடுத்த முறை நான் வருவேனெனில் 
இடி, மின்னல், மழை கூட்டி வருவேன் 
நான் உனக்கு நிகரானவன் என்று 
நிரூபிக்க அல்ல... 
உழைக்கும் நான் 
உனக்கும் மேலானவன் என்பதை அடித்துரைக்க!’
ஒன்பது வருடங்களுக்கு முன் சட்டக் கல்லூரியில் படித்தபோது, கல்லூரித் தோழி பூங்குழலி வீட்டுக்குச் சென்று வந்த விஷ மேறிய ஒரு நள்ளிரவில், நான் எழுதிய அல்லது கிறுக்கிவைத்த கவிதை இது என்றும்சொல்ல லாம். அல்லது ஏதோ ஒரு சிற்றிதழில் எழுத் தாளர் அழகியபெரியவனின் வலியைக் கவிதையாகப் படித்துப் பொதிந்து, என் பல்லிடுக்கில்வைத்திருந்த நெடுநாள் கசப்பு என்றும் சொல்லலாம். எது வாக இருந்தாலும், ஒரு தலைமுறை இடைவெளிகொண்டஅழகிய பெரியவனின் தேநீர் கோப்பை யிலும் எனது தேநீர் கோப்பையிலும்  பாரபட்சமின்றி நிரப்பப்பட்ட விஷம்... சாதி!
பூங்குழலி என் கல்லூரித் தோழி. கல்வி உதவித் தொகையை உயர்த்தக் கோரி கல்லூரிக் கதவுகளை அடைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது, 'வீட்டுக்குப் போகணும்... கொஞ்சம் கதவை திறந்துவிடச் சொல்லுங்கண்ணா...’ என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்ற முதலாம் ஆண்டு சின்னப் பெண். அவளுக்கு நான் செய்த அந்த ஒரு வரலாற்று உதவிக்காக எப்போது, எங்கு என்னைப் பார்த்தாலும் ஒரு சிரிப்பைப் பரிசாகக் கொடுத்தபடி கடந்துபோன அந்தப் பெண்ணுக்கும், 'சரி... சரி... இன்னைக்கு காலேஜ் ஸ்டிரைக். எல்லாரும் வீட்டுக்குப் போங்க’ என்று ஜூனியர்களின் வகுப்புக்குள் சென்று சீனியர்களாக நெஞ்சை நிமிர்த்தி சொல்லும்போது, 'எதுக்கு, என்ன விஷயத்துக்கு நீங்க ஸ்டிரைக் பண்றீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா..?’ என்று கேள்வியைத் துணிச்சலாகக் கேட்டுவிட்டு, படக்கென்று பயத்தில் நாக்கைக் கடித்துக்கொண்டு முகத்தை மறைத்த அந்த அப்பாவிப் பெண்ணுக்கும் எனக்கும் இடையே தொடங்கிய நட்பு... ரொம்பவே இயல்பானது!
இன்னும் அப்படியே மனதில் அசையாமல், கலையாமல் இருக்கிறது அந்தப் பரிசுத்தமான காட்சி. எப்போதும் என் வகுப்பைக் கடக்கும்போது வகுப்புக்குள் இருக்கும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு மட்டும் போகும் பூங்குழலி. அன்று தன் கையில் இருக்கும் ஒரு கல்யாணப் பத்திரிகையை வாங்கிக்கொள்ளச் சொல்லி, கை ஜாடையில் அழைத்தாள். 'என்ன மேடம்...’ என்று அருகில் செல்ல,  'அக்காவுக்குக் கல்யாணம்... கண்டிப்பா வந்துடுங்க’ என்றாள்.
'வரலைன்னா..?’
'உங்க கல்யாணத்துக்கு நான் வர மாட்டேன், என் கல்யாணத்துக்கும் உங்களைக் கூப்பிட மாட்டேன்’ என்று சொல்லி மொத்த கல்லூரியும் குறுகுறுவென்று பார்க்கும் போதே, ஒரு சின்ன சீண்டலோடு அந்த நட்பை அந்த இடத்தில் அவ்வளவு அழகாக்கிவிட்டு பூங்குழலி போனது எனக்கு இன்னும் பெரிய ஆச்சர்யம்தான்.
அதுவரை ஆண் நண்பர்கள்தான், 'மாப்ள... அண்ணனுக்குக் கல்யாணம். முந்தின நாளே வந்துரு. குற்றாலத்துல குளிக்கலாம். கன்னியாகுமரியில போட்ல போகலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஒரு ரவுண்ட் அடிக்கலாம்’ என்று ஒவ்வோர் ஊருக்கும் அழைத்திருக்கிறார்கள். ஆனால், எந்தப் பெண் தோழிகளுக்கும் வீட்டுக்கெல்லாம் நண்பர்களை அழைத்துச் செல்லும் துணிச்சல் திருநெல்வேலி, தூத்துக்குடி வட்டாரத்தில் அவ்வளவாக இருந்தது இல்லை. ஆனால், தான் பழகிய ஒரு மாதத்தில்... தன் அக்காவின் திருமணத்துக்கு அவ்வளவு உரிமையோடும் ப்ரியத்தோடும் அழைத்த பூங்குழலியின் நட்பின் மீது எனக்கு அவ்வளவு ஆச்சர்யம், அவ்வளவு சந்தோஷம்!
ஆண்-பெண் காதலையும் நட்பையும் கதையாகச் சொன்னாலும் சரி, காட்சியாகக் காட்டினாலும் சரி, அப்படியே எந்த சந்தேகமும் இன்றிக் கொண்டாடுகிற கல்லூரி நண்பன் ஒருவன், 'என்னையும் பூங்குழலி வீட்டுக் கல்யாணத்துக்குக் கூட்டிட்டுப் போகணும்’ என்ற ஒரே நிபந்தனையோடு நான் கேட்ட அத்தனை கல்யாண சாமான்களையும் வாங்கிக்கொடுத்தான். போத்தீஸில் புது பேன்ட், சட்டை  வாங்கிக் கொடுத்தான். புதுச் செருப்பு வாங்கிக் கொடுத்தான். அப்புறம், அவனே அலைந்துத் திரிந்து, கண்ணாடியாலான ஓர் இதயத்துக்குள் பல வண்ண மீன்கள் துள்ளிக் குதிப்பதைப் போல, ஓர் அழகான பரிசுப் பொருளை 600 ரூபாய்க்கு வாங்கி வந்திருந்தான்.
கல்யாணம் தூத்துக்குடியில் என்பதால், காலையிலேயே திருநெல்வேலியிலிருந்து கிளம்பி விட்டோம். ஆனால், ஏதோ ஒரு சந்துக்குள் இருந்த அந்த மண்டபத்தைத் தேடிக் கண்டு பிடித்துப் போய்ச் சேர்வதற்குள்ளாகவே தாலிக் கட்டுச் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தன. மணமகனும் மணமகளும் மேடையில் நின்று பரிசுகளை சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டபடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். மண்டபத்துக்குள் எங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. சுற்றிச் சுற்றி எவ்வளவு தேடினாலும் பூங்குழலியை மட்டும் காணவில்லை. மண்டபம் மாறி வந்துவிட்டோமோ என்ற அச்சம்  முளைத்தது. முதலில் பூங்குழலியைக் கண்டுபிடிப்போம் என்று ஆளுக்கு ஓர் இருக்கையில் அமர்ந்து பூங்குழலியைக் கண்களால் தேடினோம்.
எங்கிருந்தோ வந்த பூங்குழலி மேடையில் அவளுடைய மணப்பெண் அக்காவுக்கு அருகில் நிற்க, அவளைப் பார்த்த உற்சாகத்தில் நானும் நண்பனும் ஆர்வக்கோளாறில் எங்கள் கைகளை அவளை நோக்கி அசைக்க.... அதைப் பார்த்தது அவள் மட்டும் அல்ல; மொத்த மண்டபமும்! ஆனாலும், எந்தக் கூச்சமும் இல்லாமல் அவ ளைப் பார்த்து நாங்கள் சிரித்தோம். எங்களைப் பார்த்தும் அவளும் சின்னதாக சிரித்ததாக அப்போது எங்களுக்கு ஞாபகம்.
அந்த நேரத்தில் எங்கு இருந்து வந்தார் என்று தெரியவில்லை. ஒரு பெரியவர் ஐந்து பேருடன் வந்து, ஒரு முரட்டு மரியாதையுடன் பேசத் தொடங்கினார்.
'தம்பி நீங்க யாரு?’
'நாங்க பூங்குழலியோட ஃப்ரெண்ட்ஸ்... திருநெல்வேலி லா காலேஜ்!’
'ஓ... நீதான் அந்த மாரிசெல்வமா?’
'ஆமாங்க... நீங்க?’
'நான் பூங்குழலியோட அப்பா!’
தொடர்ந்து ப்ரியத்தோடுதான் பேசினார். அதே ப்ரியத்தோடு எங்களை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். ஆள் இல்லாதஅறையில் எங்களை அமரவைத்துவிட்டு, 'கொஞ்சம் இருங்க... இப்போ வந்துடுறேன்’ என்று சொல்லி, கதவை வெளியே பூட்டிவிட்டு அவர் போனதுதான் எங்களுக்குப் பேரதிர்ச்சி. 'என்னடா இது... கல்யாண வீட்டுக்கு வந்தவங்களை ரூமுக்குள்ள பூட்டிவெச்சிட்டானுவ..?’ என்று நாங்கள் குழம்பிக்கிடக்க, அதே ஐவருடன் மீண்டும் வந்தார் பூங்குழலியின் அப்பா.
இப்போது கதவை உட்புறமாகப் பூட்டிவிட்டு எங்களிடம் ஒரு போலீஸ் மேலதிகாரியின் உடல்மொழியோடு பேசத் தொடங்கினார்.
'யார் கூப்பிட்டுப்பா நீங்க எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தீங்க?’
'பூங்குழலி சொல்லித்தான் சார்... ஏன் சார் என்னாச்சு?’
'அவ கூப்பிட்டா... வந்துர்றதா?’
'நாங்கள்லாம் ஃப்ரெண்ட்ஸ் சார். அதான் வந்தோம்... ஏங்க?’
'நீங்க எப்படிப்பட்ட ஃப்ரெண்ட்ஸ்னு நாங்க எல்லாம் விசாரிச்சிட்டோம்!’
'சார், என்ன சார் சொல்றீங்க?’
'தம்பி இங்கே பாருங்க... உங்கக் கலரைப் பார்த்தாலே தெரியுது, நீங்க என்ன சாதி, எப்படி குடும்பம்னு. பூங்குழலி யாரு, என்னன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்... அவ என்ன சாதி, எப்படிக் குடும்பம்னு. அப்புறம் எதுக்குத் தேவையில்லாம பிரச்னை பண்ணிக்கிட்டு?’
இப்போதுதான் எங்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே புரிந்தது. பூங்குழலியின் அப்பா, என்னவெல்லாமோ பேசினார்.  அது போதாது என்று அவருக்கு அருகில் நின்றவர்கள் எப்போதடா எங்கள் மீது பாயலாம் என்பதைப் போல பற்களை நறநறவெனக் கடித்தபடி  முறைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போதைக்கு அவர்களிடமிருந்து தப்பிக்கவும்,  முட்டாள்களுக்கு எதிரில் எப்போதும் முகத்தில் பயத்தைக் காட்டக் கூடாது என்பதாலும் ஓர் அசட்டு தைரியத்தில் நாங்கள் குரல் உயர்த்தியே பேசினோம்.
'சார் சாதி கீதின்னு நீங்க பேச வேண்டிய தேவையில்லை. நாங்க இங்கே வந்தது உங்களுக்குப் பிடிக்கலைன்னா, கிளம்புறோம். அதை விட்டுட்டு இந்த மாதிரி அடைச்சுவெச்சு மிரட் டுற வேலை எல்லாம் வெச்சுக்கிடாதீங்க!’
'டேய், இது எங்க இடம். என் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்ற அளவுக்கு இன்னைக்குத் துணிச்சல் வந்துட்டுல்ல... நாளைக்கு அதே துணிச்சல் எங்க வீட்டுப் பொண்ணு மேலயும் வந்துச்சுன்னா!’
இதுதான் சமயம் என்று அருகில் நின்ற ஆசாமி ஒருவன், 'தூக்கிட்டுப் போய் தலையை அறுத்துற வேண்டியதுதான்’ என்றான். இன்னொருவனோ, 'அவ்வளவு நாள் எதுக்கு வுட்டுக்கிட்டு..? இப்பவே இவனுவளை அரணைக்குக் கீழ அறுத்துவுட்ற வேண்டியதுதான’ என்றான். நாங்கள் எதுவும் பேசவில்லை. அவர்கள் யாருமே மனித மனநிலையில் இல்லை என்பதால் கொண்டுபோன பரிசுப் பொருளை கெட்டியாகப் பிடித்தபடி கை நடுங்க, மனம் நடுங்க உட்காந்திருந்தோம்.
மறுபடியும் பூங்குழலியின் அப்பா அதே மிருகத்தின் குரலில் பேசினார்.
'இவனுங்க கழுத்தை அறுத்து நாம எதுக்கு அசிங்கப்படணும்? இவன்லாம்  ஒரு ஆளு. அடிச்சு சொல்லிக்கொடுத்து வளத்த பயம் ஒரு பொட்டுகூட மனசுல இல்லாம இவனுங்கக்கிட்ட பேசிச் சிரிச்சி நம்மளைக் கேவலப்படுத்துற நம்ம புள்ளைங்க கழுத்த அறுத்துதான் கடல்ல வீசணும். நிஜமா சொல்லிபுட்டேண்டே... இனி, ஒரு தடவை பூங்குழலி உங்ககிட்ட பேசினா, அவ கழுத்து கடல்லதான் கெடக்கும்... ஆமா!’
அதோடு சரி... மற்ற அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். அறைக்குள்ளிருந்து வெளியே வந்த நாங்கள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. நிறையச் சிரிப்புச் சத்தம், கொலுசு சத்தம், மேளச் சத்தம் எல்லாம் காதில் கேட்டது என்றாலும், எங்கள் மண்டைக்குள் தெளிவாக அப்போதைக்குக் கேட்டது குருட்டுக் காக்கைகளிடம் பகலில் கொத்துப்பட்ட ஆந்தைகளின் அலறல் சத்தம் மட்டும்தான். கண்ணாடியாலான இதயத்தில் எத்தனையோ வண்ண மீன்கள் துள்ளிக் குதிக்கும் எங்கள் பரிசுப் பொருளை, என்ன செய்வது என்று தெரியாமல் மண்டபத்துக்கு வெளியே ஓடிய சாக்கடையில் வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தோம்.
மறுநாள் கல்லூரியில் என்னைத் தேடிக் கண்டுபிடித்து எல்லாருக்கும் கேட்கும்படியாக அழுத்தம் திருத்தமாக, 'அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்... வர்றீங்களா?’ என்று கேட்ட தோழி பூங்குழலியைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. ஆனால், அப்போது மனதில் தோன்றியதை மட்டும் அப்படியே  துளி இரக்கம் இல்லாமல் பேசிவிட்டேன்.
'யம்மா தாயி... நான் நல்லா இருக்கேனோ, இல்லையோ... நீ நல்லா இருக்கணும்னா... இங்கேயிருந்து போயிரு. என்கிட்ட பேசுன பாவத்துக்காக, உன் அப்பன் உன்னை வெட்டிக் கடல்ல போட்டாலும் போட்ருவான். போ... போய் நல்லாப் படிக்கிற வழியைப் பாரு.  கண்டிப்பா காலம் மாறும். உங்க கலரும் மாறும் போது உயிரோட இருந்தா, அன்னைக்கு நாம பழகிக்கலாம்’ என்றபோது கண் கலங்கிற்று பூங்குழலிக்கு. எனக்கும்தான்!
நன்றி : எழுத்து - மாரி செல்வராஜ், ஓவியம் -  ஸ்யாம்
நன்றி : ஆனந்த விகடன்.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

நல்லதொரு கதையை பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி

சேக்காளி சொன்னது…

நிறம் தான் கலர் என மாறியிருக்கிறது.

Unknown சொன்னது…

அருமை மகிழ்ச்சி

Unknown சொன்னது…

இது கதையல்ல நிஜம்.மாரி இவன் நம் நாட்டின் மனச்சாட்சி.

Unknown சொன்னது…

Nice