மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 ஜூலை, 2013

மனிதர்கள்...


மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம். அடுத்தவன் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிற மனிதர்களைவிட அவன் கெட்டுப் போயிடணும் அவன் குடும்பம் அழிந்தே போயிடணுமின்னு நினைக்கிற மனிதர்களே இந்தப் புவியில் அதிகம் இருக்கிறார்கள்.

மறைந்த வாலிபக் கவிஞன் வாலி, 'கல்லறைக்கு செல்லும் வரை சில்லறை வேண்டுமே' என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். இங்கே பணம் மனித மனங்களை விசித்திரப்படுத்தி விகாரமாக்கி வைத்துவிட்டது. வாலி மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் சிலர் அவரை தூற்றியும் வருகிறார்கள். அதுதான் மனிதர்கள்... ஒரு மனிதன் வாழும் காலத்தில் எல்லாருக்கும் நல்லவனாக இருக்கமுடியாது. அதற்காக இறந்த பிறகு நல்லவனில்லை... அவன் இப்படி இருக்கவில்லை... அப்படியிருக்கவில்லை... இப்படி இருந்திருக்கலாம் என்று பேசுவதால் யாருக்கு லாபம்?  இருக்கும் போதே நீ செய்வது சரியில்லை.. நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நேரிடையாக மோதுவதற்கு தயாராக இல்லை என்பதையே இறந்த பின்னர் வசனம் பேசும் மனிதர்கள் உணர்த்துகிறார்கள். இறந்த பின்னர் இறந்தவரைப் பற்றி பேசும் இவர்களும் மனிதர்கள்தானே...

பத்திரிக்கையில் படித்த செய்தி ஒன்று... ஒரு தாய் தன்னிடம் இருபத்து ஐயாயிரம் பணம் கொடுத்து 13 வயது மகளைக் கட்டிக் கொடுக்கச் சொன்ன வாலிபனை வீட்டிற்கு வர வைத்து இணங்காத மகளை அவனுடன் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் பண்ண வைத்திருக்கிறார். கதவை திறந்த ஒரு சந்தர்பத்தில் அந்தச் சிறுமி அவர்களிடம் இருந்து தப்பியோடி வீதியில் இருந்தவர்களிடம் சொல்லி அவர்கள் போலீசுக்குப் போய் இன்று அந்தத் தாயும் இளைஞனும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சிறுமியோ மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள். பெற்ற தாயே பிள்ளையை பாழுங்கிணற்றில் தள்ள நினைத்திருக்கிறாள். இதுபோன்று ஏராளமான செய்திகளைப் பார்க்க முடிகிறது. இவளைப் போன்றவர்களும் மனிதர்கள்தானே....

மனித மனங்கள் விசித்திரமானவை மட்டுமல்ல விகாரமானவை அடுத்தவனைக் கெடுக்க நினைத்து தானே கெட்டுப்போன மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அடுத்தவன் வாழ்வதில் சந்தோஷப்பட்டு தானும் சந்தோஷமாக வாழ்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அதேபோல் ஒரு கை செய்வதை மறு கைக்கு தெரியாமல் வைத்திருக்கும் மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானே...

எங்கள் பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் கல்லூரியில் வேலை பார்த்து பணி நிறைவு பெற்ற பின்னரும் வாடகை வீட்டில்தான் காலம் தள்ளுகிறார். நாங்கள் படிக்கும் போது ஐயாவின் மகன், மகள், நான், முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, தமிழ்க்குமரன் (படிக்கும் போதே இறந்துவிட்டான்), அன்பு அண்ணன் என பத்துப் பதினைந்து பேர் எப்பொழுதும் அவர்கள் வீட்டில்தான் இருப்போம். அரட்டை, வாக்குவாதம், கோபங்கள் என எல்லாமே ஐயா வீட்டில்தான் அரங்கேறும், ஐயாவுக்கும் அம்மாவுக்கும் அப்போது பேச்சு வார்த்தை கிடையாது. ஒரே வீட்டிற்குள் பலகாலம் பேசாமலே இருந்தார்கள். நாங்களும் எவ்வளவோ முயற்சித்தும் பேசாதவர்கள் மகள் திருமணத்தின் போதுதான் பேசினார்கள் என்றாலும் இருவரும் பேசியதில் எல்லாருக்கும் சந்தோஷம். எங்க எல்லாருக்கும் என்ன என்ன பிடிக்கும் என்பது தெரிந்து அம்மா சமைத்து வைப்பார்கள். அவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள் ஆனால் எங்களுக்காக சமைத்துக் கொடுப்பார்கள். மற்ற நண்பர்களைக் காட்டிலும் எனக்கு எப்போதும் அதிக சலுகை உண்டு. எம்மகனுக்கு காபி பிடிக்காது என்று தனியாக பால் காய்ச்சிக் கொடுப்பார்கள். ஒரு நாள் போகவில்லை என்றாலும் மற்றவர்களிடம் குமார் ஏன் வரலைன்னு கேட்டுக் கொண்டே இருப்பார்கள்... இப்பவும் அவர்களிடம் அதே பாசம் தொடர்கிறது. நான் வீடு கட்டப் போறேன் என்றதும் அதிகம் சந்தோஷப்பட்டவர்கள் அவர்கள்தான். அவர்களும் மனிதர்கள்தானே...

நாம நல்லாயிருந்தாலும் அவன் கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிற சொந்தங்களே அதிகமாக இருக்கிறார்கள். எங்கே அவன் நம்மளைவிட நல்லா வந்துடுவானோ என்ற எண்ணத்தில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள். அவனா... என்ன இருக்கு வெறும்பய... என்று அடுத்தவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும் மனிதர்கள்தானே...

இந்த இணைய உலகில் வலைப்பூ வாயிலாக சார், ஐயா,  அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, நண்பன், தோழி என எத்தனையோ முகம் தெரியாத உறவுகளைப் பெற்று இன்று நமக்கு ஒன்று என்று வரும் போது வருத்தத்தையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும், அதன் வாயிலாக முகம் தெரியாத உறவுகளின் ஆறுதல்களையும் வாழ்த்துக்களையும் பெறுகின்ற இடமாகவும் இணைய நட்பு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே முகம் பார்க்காமல் எழுத்தால் இணைந்து இருக்கிறோம். யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பது யாருக்குத் தெரியும்... இருந்தும் நட்பு என்னும் வட்டத்துக்குள் இறுக்கமாக அமர்ந்து கொண்டுள்ளோம். இந்த முகம் தெரியாத உறவுகளும் மனிதர்கள்தானே...

நம்மில் எத்தனை பேருக்கு அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்கிறது... சொல்ல முடியுமா?  கையேந்தும் பிச்சைக்காரனிடம் சில்லறையில்லை என்று சொல்லும் மனிதர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்திருக்கிறேன்.... இன்னும் சில வேலைகளில் இருக்கிறேன். நமக்கு உதவும் குணம் இருக்கிறதா... இல்லையா என்பதைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதே இல்லை. ஆனால் எங்காவது ஒரு பிரச்சினை என்று வரும் போது எல்லாருமே நடிகர்கள் உதவவில்லை என்பதையே பெரிதாக பேசுகிறோம்... காரணம் அவர்கள் பொதுவான மனிதர்கள் ஆகிவிட்டார்கள் என்பதுதானே? அவர்களும் நம்மளைப் போல்தான் உழைக்கிறார்கள். என்ன நமக்குச் சம்பளம் ஆயிரங்களில் கிடைக்கிறது. அவர்களுக்கு கோடிகளில் கிடைக்கிறது, இது அவர்கள் தவறல்லவே... அவர்கள் சார்ந்த துறையில் அப்படி பணம் கிடைக்கிறது. அதற்காக நாம் லட்சலட்சமாக சம்பாதித்தும் உதவ மனமில்லையே என்று அவர்களை திட்டுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர்கள் உதவி செய்ய நினைத்தால் செய்துவிட்டு போகட்டும். அவர்கள் செய்தார்களா இல்லையா என்றும் எவ்வளவு கொடுத்தார்கள் என்றும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது நியாயமா? உதவிகள் செய்யும் போது அதை விளம்பரம் செய்யாதவன் மனிதன் என்றால் என்ன செய்தான் என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிற நாமும் மனிதர்கள்தானே...

இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்ன உதவி செய்வதாலும் அதை வீடியோவிலும் புகைப்படத்திலும் போட்டுக்காட்டி விளம்பரம் செய்பவர்கள். தயாநிதி மாறன் தனது சொந்தப் பணத்தை கொடுக்காமல் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உத்தரகண்ட் இழப்புக்கு கொடுத்ததை தயாநிதி மாறன் லட்சங்களை வழங்கினார் என்று செய்தி போட்டது போல... நம்ம முதல்வர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சலுகைகளைக் கொடுத்துவிட்டு எல்லாவற்றிலும் தனது போட்டோவைப் போட்டு தம்பட்டம் அடிப்பது போல... (ஸ்கூல் பேக்கிலும் அம்மா படம் பெரிசா போட்டிருக்காங்கன்னா பாத்துக்கங்க) கணிப்பொறி கொடுத்துவிட்டு எல்லாரும் கணிப்பொறியை ஆன் பண்னி வையுங்க அம்மா படம் தெரியணும் என்று ஒரு அம்மா விசுவாசி சொன்னது போல... செய்யும் உதவி எதுவானாலும் அதிலும் விளம்பரம் தேடிக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட விளம்பரப் பிரியர்களும் மனிதர்கள்தானே...

காசுக்காக கொலை செய்பவர்களும்... ஜாதி, மதம் காக்க கொலை செய்கிறவர்களும்... சொத்துக்காக கொலை செய்கிறவர்களும்... சொத்துக்காக உறவை இழப்பவர்களும்... கள்ளக்காதல் ஜோடிகளும்... காமுகர்களும்... அரசியல் ஆதாயத்துக்காக அடுத்தவனை கவிழ்ப்பவரும்... இப்படி எண்ணிலடங்கா பாதகர்கள் உலகெங்கும் நிறைந்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனிதர்கள்தானே....

மனிதர்கள் குறித்து இன்னும் நிறைய பேசிக்கொண்டே போகலாம்... நல்ல எண்ணங்கள் நிறைந்தவர்களாக... அடுத்தவனுக்கு உதவாவிட்டாலும் அவனும் நல்லா இருக்கட்டும் என்ற எண்ணங்களைச் சுமந்தவர்களாக... நாம் சார்ந்த சமூகம் மட்டுமல்ல சாமுதாயமும் நல்லா இருக்கணும் என்று வாழ்பவர்களாக... வாழக்கற்றுக் கொள்வோம். பிறர்க்கு உதவவில்லை என்றாலும் மனிதனாக வாழ்ந்து செல்வோம்..

மீண்டும் மற்றுமொரு தலைப்பில் பேசுவோம்.

படம் : இணையத்திலிருந்து
-'பரிவை' சே.குமார்

6 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

மிக எதார்த்தமான ஒரு தகவலை பதிவு செய்தமைக்கு நன்றி

மனித மனம் தான் எத்தனை வித்தியாசமானது

நாம் நல்லா இருக்க வேண்டும் என்று நினைபவர்களை விட அவன் அழிந்து போக வேண்டும் என நினைபவர்களே அதிகம் உண்மையான வரிகள்

Unknown சொன்னது…

மனிதன் மாறி விட்டான்...................மனிதன் மாறவில்லை?!

துளசி கோபால் சொன்னது…

நல்ல அலசல்.

பதிவர் குடும்பமுன்னு ஒன்னு எனக்கு கிடைச்சுருக்குன்னு மனம் கொள்ளாப்பெருமை எனக்கு இருக்கு!

அரசு செய்யும் எதிலும் அந்தந்த அரசின் பெயரும் இலட்சினையும் போட்டுக்கிட்டால் பிரச்சனையே இல்லை.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அவுங்க செலவு செய்வது எல்லாம் சொந்தக்காசில் இருந்தா?

எதுக்கெடுத்தாலும் தன் பெருமையை மிகைப்படுத்திக் காமிச்சுக்க வெட்கமா இருக்காதோ?

என்னவோ போங்க.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - மனிதர்களீன் பல்வேறு குணங்கள் அலசி ஆராயப்பட்டு பதிவாகி இருக்கிறது - அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ezhil சொன்னது…

அருமையான பதிவு...மனிதன் என்பவனின் பொறாமையின் வெளிப்பாடே நீங்கள் கூறும் குணாதசியங்கள்..அதிலும் தன் கூடப் பிறந்தவனில் ஆரம்பித்து, உறவுக்காரன் , பக்கத்து வீட்டுக்காரன் அல்லது நண்பன் இவர்களுடன் தான் போட்டியும் பொறாமையும்....ஏன் தூரம் இருக்கும் தொழிலதிபர்களுடனும், செல்வந்தர்களிடமும் போட்டியிடுவதில்லை...அவர்களுடைய இயலாமையின் வெளிப்பாடுதான் இவையெல்லாம்..