மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : ரசிக்க வைத்த சாண்டியும் பிக்கியும்

Image result for biggboss day 92 images mugan

ந்தானம், சூரி படங்களின் காமெடிக் காட்சிகளைப் பார்த்து நொந்து போய் உக்கார்ந்திருக்கும் போது வடிவேலு படம் பார்த்த மாதிரியிருந்தது நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பு. 

திங்கள்கிழமை எதுவுமே இருக்காது... சும்மா எதாவது போட்டு ஜவ்வா இழுப்பாங்க... இல்லேன்னா கவின்-லாஸ்லியாவைக் காட்டி கடுப்பேத்துவானுங்க... ஆனா நேற்று ரசிச்சிப் பார்க்க முடிந்தது. 

குறிப்பாக கவின் - லாஸ்லியாவின் காதல் கொஞ்சல்கள் காட்டப்படாதது சிறப்பு. நீண்ட நாட்களுக்குப் பிறகு சாண்டியின் நகைச்சுவைக் கொண்டாட்டம்... இடையிடையே பிக்பாஸின் ஆட்டங்களும்.

92ம் நாள் காலை பள்ளியெழுச்சிப் பாடலாய் விக்ரம் வேதா படத்தில் இருந்து...

'ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்.. டும் டும்  
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும
தெரம தெறிக்கும் கதைய சொல்ல...'

போட்டாங்க... அத்திபூத்தாற் போல் கவினும் ஆடினான்... அதுதான் தமிழகமெங்கும் இடி மின்னலுடன் மழை போல... ஆடி முடிச்சிட்டு அவனவன் வேலையைப் பார்க்கப் பொயிட்டானுங்க.

தர்ஷனும் சாண்டியும் மல்யுத்தம் காட்டினார்கள்... அவர்களின் நடிப்பு எல்லாரையும் சிரிக்க வைத்தது. நாலு நண்பர்கள் சேர்ந்தாலே அந்த இடம் ரணகளமாகும்... அப்படித்தான் வேறு வேலை இல்லாத நிலையில் செம ஆட்டம் போட்டானுங்க... நல்லவேளை கவின் சார் அந்த விளையாட்டில் இல்லை... இருந்திருந்தால் அய்யோ எஞ்சாமி அடிபட்டுறாமன்னு அம்மணி அந்தப் பெட்டுக்கிட்டயே கிடையாக் கெடந்திருக்கும்.

நீங்க சமைக்க வேண்டாம்... உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்குன்னு பிக்பாஸ் சொல்லவும் தின்னிப் பண்டாரங்கள் ஆஹா... தலப்பாக்கட்டு பிரியாணி, செட்டிநாட்டு நாட்டுக்கோழி, விருதுநகர் புரோட்டா, மதுரை ஜிகர்தண்டா, திருநெல்வேலி அல்வா என செம விருந்து இருக்கும் போலன்னு மழை விட்டதும் டிரைன் ஓட்டி விளையாடுற பிள்ளைங்க மாதிரி குதிச்சி விளையாண்டானுங்க... 

அடுத்தது நாமினேசன்... 

இந்த முறை வித்தியாசமாக யாரைக் காப்பாற்றணும்ன்னு சொல்லுங்க, அப்படிக் காப்பாற்றணுமின்னா ஒரு பச்சை மிளகாயைக் கடிச்சி சாப்பிடுங்கன்னு சொன்னார் பிக்பாஸ்.

கையை ஆட்டிப் பேசிய லாஸ்லியாவைக் கையை ஆட்டாம பேசு, இது நாமினேசன்... கெக்கப்பிக்கேன்னு சிரிச்சிக்கிடு இருக்காதேன்னு எல்லாம் பிக்பாஸ் செமையா அடிச்சி ஆடினார். லாஸ்லியாவுக்கு நாம அசைக்க முடியாத இடத்தில் இருப்பதாய் நினைப்பு... நினைப்புத்தான் பொழப்பைக் கெடுக்கும்.

லாஸ்லியா யாரைக் காப்பாற்ற பச்சைமிளகாய் தின்பார்ன்னு பால் குடிக்கிற பிள்ளை கூட சொல்லிடும்... யாரைக் காப்பாற்றப் போறேன்னு பிக்பாஸ் கேட்டதெல்லாம் மரண காமெடி... எங்க வீட்டு ஐயா நல்லாயிருந்தாத்தானே எனக்கு நல்லதுன்னு கவினுக்காக மண்சோறு... ச்சை... மனச்சோர்வோட பச்சை மிளகாயைக் கடிச்சித் தின்னுச்சு... 

அதேமாதிரி எங்கூட்டு அம்மணி நல்லாயிருக்கணும்ன்னு கவினார் மென்றார். அண்ணன், மச்சானெல்லாம் மனசுக்குள்ள எட்டியே பாக்கலை... அதெப்படி எட்டிப் பார்க்கும் எல்லா இடத்துலயும் அம்மணிதானே இருக்கு.

யாருமே ஷெரினைச் சொல்லமாட்டாங்க அதனால் நான் சொல்றேன்னு தர்ஷன் மென்றார்... இன்னொரு மிளகாய் மெல்லு... இன்னொரு ஆளைச் சொல்லுன்னு பிக்பாஸ் சலுகை கொடுக்க, அடுத்தவங்களை மதிக்கிற சாண்டி அண்ணான்னு சொல்லி மிளகாய் மென்னுட்டு, கக்கூஸ்க்குள்ள சிவாஜி படத்தில் ரஜினி பச்சைமிளகாய் தின்னுட்டு படும் அவஸ்தையைப் பட்டுக்கிட்டு இருந்தான் தர்ஷன்.

சாண்டி கவினுக்காகவும் லாஸ்லியாவுக்காகவும் தின்னார்... இங்கதான் யோசிக்கணும்... போன வாரமெல்லாம் சாண்டியைப் போட்டுச் சாத்தி, அழ வச்சது இவங்கதான்... இந்த முறை கூட இவங்க ஒருவருக்கு ஒருவர்தான் காப்பாற்றிக் கொள்ள நினைத்தார்களே ஒழிய, மற்றவர்களை நினைத்துக் கூடப் பார்க்கலை. ஆனா சாண்டி நட்புக்கு அடையாளமா இருக்காராம்... இவரை மற்ற மூவருமே சொன்னார்கள்... ஆனால் இவர் மனதுக்குள் அந்த மூவரும் வரவேயில்லை. சாண்டிக்குள்ளும் சிறிய மனசுதான் இருக்கு... அதில் கவினும் லாஸ்லியா மட்டுமே இருக்காங்க.

ஷெரின் தனக்குப் பிடித்த தர்ஷனையும் சாண்டியையும் சொன்னார்... மிளகாய் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுன்னு சொல்லிட்டு சாப்பிட்டாங்க... முகன் மூன்று மிளகாய் சாப்பிட்டான்... நட்புக்காக தர்ஷன், கள்ளங்கபடமில்லதா பொண்ணு ஷெரின், நல்ல மனுசன் சாண்டி என மூவரையும் சொன்னது சிறப்பு.

கரக்கு மொரக்குன்னு மெல்லுறதை எல்லாமா காட்டணும் பிக்பாஸ்... மத்ததுக்கு எல்லாம் மைக்கை மியூட் பண்றீங்க... ஆனா மெல்றதை மட்டும் எல்லாருக்கும் கேக்குற மாதிரி செஞ்சிட்டீங்க... அவனுங்களும் மாடு அசைப்போடுற மாதிரி மென்னானுங்க.

சரி இப்ப வாங்க யாரு யாரு காப்பாற்றப்பட்டிருக்கீங்கன்னு பார்ப்போம் என்ற பிக்பாஸ் அடே ஆக்கங்கெட்ட கூவைகளா... இறுதி வாரத்துல இருக்கீங்க... இப்பப் போயி இவனைக் காப்பாத்து, அவனைக் காப்பாத்துன்னு சொன்னா நல்லாவா இருக்கும்.. முகனைத் தவிர எல்லாருமே நாமினேசன்ல இருக்கீங்க... முதல் ரெண்டு சீசன் பாக்காத முட்டாப் பக்கிகளா... என்னமோ சுவீட் சாப்பிடுற மாதிரி பச்சை மிளகாய் பாத்திரத்தைக் காலி பண்ணிட்டீங்களேடான்னு சொல்லிட்டு என்ன நான் சந்தோஷமா இருந்த மாதிரி நீங்களும் சந்தோஷமா இருந்தீங்களான்னு எரியும் வாயில் எண்ணெய் ஊத்தினார்.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு நகைச்சுவை பார்க்காத தலைமுறை சந்தானம், சூரி நகைச்சுவைக்கெல்லாம் உருண்டு புரண்டு சிரிக்கிற மாதிரி கெடந்து சிரிச்சானுங்க. வீட்டுக்குள்ள நகைச்சுவைக்குப் பஞ்சம்... வேறென்ன செய்ய.

இந்தியா கேட் பாசுமதி அரிசியோட போட்டி இந்த வாரம் முழுவதுக்கும்... அதில் இன்று புலாவ் செய்யுங்கன்னு சொல்லி பொருள் அனுப்பிட்டு, இன்னைக்கு தலைமைச் சமையக்காரன் சாண்டின்னு சொல்ல, யோவ் பிரியாணி கிடைக்கும்ன்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தா சமைக்கத் தெரியாத எங்களை வச்சி புலாவ் செய்யுங்கடான்னு காமெடியா பண்ணுறே... ஆசை காட்டி மோசம் பண்ணுறியேன்னு புலம்பினானுங்க. இதுக்காகவா நீ சொன்ன மொக்கைகெல்லாம் சிரிச்சோம்ன்னு பொங்கினானுங்க.

கையைக் கழுவு... அதை இப்படி வெட்டு... இதை அப்படி வெட்டு... எனக் கண்டிப்பான சமையல்காரனாய் சாண்டி நடந்துக்கிட்டு இருந்தார். கரம் மசாலாப் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு, கேரட்டுன்னு கைக்கு கிடைச்ச எல்லாத்தையும் போட்டு பாத்திரத்துல கொத்துப் புரோட்டாப் போட்டு இதுதான்டா செம புலாவுன்னு பிக்பாஸ்க்கும் பேதி போறதுக்காக கொஞ்சம் சாப்பிட்டுப் பார்க்கக் கொடுத்து முடிச்சானுங்க.

சமையல்ல சாண்டி கலக்கிக் கொண்டிருந்தார்... சாப்பிட்டிருந்தா மத்தவங்களுக்குக் கலக்கியிருக்கும்... முகன் உருண்டு புரண்டு சிரித்தான். இந்தப் புலாவைப் பார்த்த கோடானுகோடிப் பேருல லெட்சாதி லெட்சம் பேரு வாழ்நாள்ல புலாவே சாப்பிடுவதில்லைன்னு புள்ளையார் கோவில்ல தேங்காய் உடைச்சி சத்தியம் பண்ணியிருப்பானுங்க.

முகன் சாண்டியை சமைக்க விடாமல் கட்டி வச்சது... நீங்க பசியோட இருந்தா எம்மனசு தாங்காதுன்னு சாண்டி சொன்னது என எல்லாமே ரசிக்க வைத்தது.

இந்த வாரத் தலைவர் போட்டி, கவின், சாண்டி, முகன் தேர்தல் களத்தில்...

உடம்பெல்லாம் பார்சல் பண்ணுற பிளாஸ்டிக் பேப்பரைச் சுற்றி விட்டு, மஞ்சள் கோட்டில் படுக்க வைக்கணும் மணி அடிச்சதும் உருண்டு போய் எதிரே இருக்கும் சிகப்புக் கட்டத்துக்குள் எழுந்து நிற்கணும்... நீண்ட போராட்டம்... சாண்டி சிறப்பான முயற்சி... முகன் மற்றவர்கள் உதவியுடன் எழுந்து நின்று வெற்றி... திருப்பிப் போட்ட ஆமை மாதிரி எழ முடியாமல் கிடந்தான் கவின்.

பேப்பர் சுற்றும் போது கவினுக்கு லாஸ்லியா சுற்றாமல் ஷெரின் சுற்றியது உலகமகா ஆச்சர்யம்... கவின் எந்திரு... கவின் எந்திருன்னு ஏந்திரி அஞ்சலி கணக்கா லாஸ்லியா கத்தினாலும் கவின் அத்திவரதர்  தண்ணிக்குள்ள இருக்க மாதிரித்தான் கிடந்தான். அவனோட விளையாட்டே வேற சார்... அவன் வேற ZONE-ல இருக்கான்னா யார் கேக்குறா.

கமல் தண்ணீரைப் பற்றிப் பேசியதால் தண்ணிச் சிக்கனதுக்காக ஒரு துணி துவைக்கும் போட்டி, சாண்டி-லாஸ்லியா, ஷெரின்-முகன் என இரண்டு அணி, கவினும் தர்ஷனும் பரிசோதகர்கள். சாண்டி துணி துவைத்தது ரசிக்கும்படி இருந்தது. இரு அணியும் சிக்கனமாகவே துவைத்தார்கள். 

ஷெரின் அணி முக்கால் வாளித் தண்ணீரை மீதம் வைக்க, சாண்டி அணி ஒரு வாளித் தண்ணீரை மீதம் வைத்தார்கள். ரெண்டு அணியுமே நல்லாத் துவைக்கிறீங்க... அலசுறீங்க... ஆனா தண்ணீரை மிச்சப்படுத்தியதில் சாண்டி அணிக்கே வெற்றின்னு சொன்னானுங்க தர்ஷனும் கவினும்.

நல்லவேளை தண்ணி அளவு மாறியிருந்துச்சு.. கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமாக இருந்து அதில் லாஸ்லியா அணி குறைவாக இருந்திருந்தால் அவங்க அணிக்காக கவின் போராடியிருப்பான். மச்ச்ச்ச்ச்சான்னு மணிக்கணக்காப் பேசியிருப்பான். அப்படி எதுவும் நிகழாமல் நாம் பாதுகாக்கப்பட்டோம்... இறைவனுக்கு நன்றி.

அப்பறம் அந்த சோப்புப் பவுடருக்கு ஒரு அறிமுகம்... அகம் டிவியில நம்ம டிடி அக்கா வந்தாங்க... விளம்பரம் செஞ்சாங்க... போயிட்டாங்க...

இரவு சாண்டி ஆங்கிலப் பாடலை அத்து முறிச்சிப்பாட, தர்ஷன் பின்பாட்டுப் பாடினான்... விளக்குகள் அணைக்கப்பட்டன... வில்லங்கம் இல்லாத ஞாயிறு அடுத்த விடியலிலும் இருக்குமா..?

இப்ப இருக்கும் அறுவரையும் 1,2,3... என மனசுக்குள் வரிசைப்படுத்தினால் முதலில் வருவது முகன். 

பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவன் முகன்... ஆரம்பத்தில் கோபக்காரனாய் இருந்தவன்... இப்போது அதிலிருந்து நிறைய மாறியிருக்கிறான்... விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்தலும்... தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்திலும் தட்டிக் கொடுத்தலும் எனத் தன்னை அழகாய் மாற்றிக் கொண்டிருக்கிறான்.

கடைசிப் பெஞ்சு மாணவனாய் இருந்து இன்று முதல் மாணவனாய் தகுதி அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கிறான் என்றால் அதில் அவனது கடின உழைப்பு இருக்கிறது. காதல், மோதல் என எல்லாம் சந்தித்தாலும் அவற்றை லாவகமாகக் கடந்து வந்ததில் தெரிவது அவனது முதிர்ச்சி... இதில்தான் தவறினான் கவின்.

உறவுக்கும் உணர்வுக்கும் கொடுக்க வேண்டிய அளவுக்குத்தான் இடம் கொடுக்கிறான்.. வீண் பேச்சுகள்... வீண் விவாதங்கள் என எதுவும் இல்லை... மற்றவரின் மனசைப் புரிந்து கொள்ளுதல் என்பது மிகப்பெரிய விஷயம்... அது இவனுக்குக் கைவரப் பெற்றிருக்கிறது. இதில் தவறியது லாஸ்லியா.

யாராலும் தன்னை உடைக்க முடியாத, தொட முடியாத இடத்துக்கு நகர்த்திச் செல்ல அவன் தன்னுடைய உழைப்பையும் உணர்வையும் இந்த 92 நாளில் அதிகமாகக் கொடுத்திருக்கிறான். 

அவனின் அம்மாவும் தங்கையும் வந்து சென்றபின் விளையாட்டில் ஒரு வேகம்... விவேகம்... அவர்களின் வரவே அவனுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. 

உறவுகளின் வருகையை மதிக்கத் தெரிந்தவன் இவன்... அவர்களின் வேதனையை தூக்கி எறிந்து விட்டு உள்ளிருப்பவர் லாஸ்லியா. முகனால் பெற்றவளுக்குப் பெருமை.... லாஸ்லியாவால் பெற்றவர்களுக்குச் சிறுமை.

வெற்றி மாலை இவனுக்கு விழுந்தால் கடுமையான போராளிக்குக் கிடைத்ததென மகிழலாம். 

ஆனால் விஜய் டிவி பிக்பாஸ் குழுவும் கமலும் என்ன முடிவில் இருக்கிறார் என்பது யாருக்குத் தெரியும்..?

எது எப்படியோ அட்வான்ஸ் வாழ்த்துக்கள் முகன்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்: