மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : கவினை வறுத்தெடுத்த வனிதா

Related image
சேரன், லாஸ்லியா பிரச்சினையில் கவின் ஏன் கவிழ்ந்து போன படகு மாதிரி இருந்தான் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவனைப் பொறுத்தவரை ஒரு மெகா சீனை அரங்கேற்றணும்... அவ்வளவே. அப்படிச் சோகமாயிருந்த வீட்டின் 69 வது நாளின் தொடர்ச்சியாய்...

பாத்திரம் கழுவிக்கிட்டு இருந்த ஷெரின்கிட்ட தட்டை எங்க வைக்கட்டும் என கவின் வம்பிழுத்துக் கொண்டிருக்க, சாண்டியும் இணைந்து கலகலப்பாக்கினார்கள். வெளியே லாஸ்லியா தனியாகப் படுத்து 'வெண்ணிலவே... வெண்ணிலவே...' என நிலாவோடு குலாவிக்கிட்டிருந்தார். 

'லாஸ் சாப்பிடலையா..?' என்றபடி சேரன் வந்தார். சாப்பிட வா... காத்திருக்கேன் என்றெல்லாம் சொல்லவில்லை... அவரிடமிருந்து வந்த கேள்வியில் இருந்தே அவர் சாப்பிட்டு விட்டுத்தான் வருகிறார் என்பது தெரிந்தது. நேற்றும் சிக்கன் வந்திருக்குமோ..?

சேரனுக்கு இது தேவையில்லாத ஆணி... வேண்டான்னு கழட்டிப் போட்ட இடத்துல மறுபடிக்கும் ஆணியை அடிப்பது தேவையில்லாததுதானே... ஒதுங்கிப் போறவங்களை விரட்டிப் போவது வயதுக்கு உரிய மரியாதையல்ல... இதை ஏன் அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம். 

கவினைப் பொறுத்தவரை சேரனுடன் லாஸ்லியா பேசுவதும், சேரன் வீட்டுக்குள் இருப்பதும் பாவக்காயில வேப்பெண்ணையை ஊற்றி அதுல கொஞ்சம் சுண்டக்காயையும் போட்டுச் சாப்பிடுவது போல.. ஆரம்பத்தில் இருந்து அவன் அதிகமாக நாமினேட் பண்ணினது சேரனைத்தான்... அப்படியிருக்க பக்கத்து வீட்டுக் காமாட்சிக்கிட்ட ஒரு ரகசியம் சொன்னா மூனாவது வீட்டு லெட்சுமிக்குத் தெரியுற மாதிரி லாஸ்லியாக்கிட்ட எது சொன்னாலும் அடுத்த நிமிடமே கவினுக்குப் போகும்ன்னு தெரிஞ்சும் இந்தாளு எதுக்கு இந்த ஆணியைப் புடுங்கணும்... அப்புறம் மனசு சரியில்ல.... வயிறு சரியில்லன்னு புலம்பணும்...

உங்ககிட்ட கதைக்கணும் என்ற லாஸ்லியா, நாயகனில் கமலிடம் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேக்குற மாதிரி உங்க பாசம் உண்மையானதா... கேமராவுக்கானதான்னு ஒரு கேள்வியை முன் வைக்க... சேரனின் விளக்கம் சிறப்பே என்றாலும் இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்..? இதைச் சொல்லி என்னாகப் போகிறது..? என்றே தோன்றியது. 

கவின் பேசக்கூடாது என்று சொன்னதால் சேரனுடன் பேசாமல் இருந்தவர்தான் லாஸ்லியா... கவின் சொன்னதால் நாமினேட் பண்ணியவர்தான் லாஸ்லியா... ஸோ கவினுக்கு கமிட் ஆயிட்ட லாஸ்லியா, சேரனின் பேச்சுக்கு எவ்வளவு தூரம் மரியாதை கொடுப்பார்..?

உங்ககிட்ட வச்சிருக்க அன்பு கேமராவுக்கானது அல்ல... நீங்க கவின்கிட்ட பேச ஆரம்பித்தபின் என்னைக் கண்டுக்கலை... பெரும்பாலும் அவனுடனேயே இருப்பதால் இந்த தத்து அப்பனையும் கண்டுக்கலை... போட்டியையும் சீரியஸா எடுத்துக்கலை.... உங்க சிகப்புக் கதவு காதல் வெளியில சிரிப்பா சிரிக்குது... உங்க மேல பாசம் இருந்ததாலதான் ரெண்டு பேர்க்கிட்டயும் பேசினேன்... அதுல உங்க நிலைப்பாடு என்னன்னு தெரிஞ்சாச்சு... அதுக்கு அப்புறம் நான் அதுல தலையிட்டேனா... இல்லையில்ல... அதுதான் எனக்கு மரியாதை... உங்களோட தத்து அப்பனா எனக்கு ஒரு எல்லை இருக்கு... உங்களைக் கண்டிக்கும் உரிமை எனக்கில்லை... ஆனாலும் அப்பான்னு சொல்லிட்டே பொண்ணு போற இடம் சரியில்லைன்னு சொல்றதில் தப்பில்லைன்னு தோணுச்சு. அதே மாதிரி ஒரு சக போட்டியாளனா... ஓரு மனிதனா நீ இதுக்குப் பின்னால எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படலாம்ன்னு தோணுது என நீண்ட லெக்சர் கொடுத்தார்.

லாஸ்லியா ஏற்றுக் கொண்டதாய் சிரித்து, மன்னிப்புக் கேட்டு அதன் பின் நீங்க உங்க விளையாட்டை விளையாடுங்க... நான் என் விளையாட்டை விளையாடுறேன்... நீங்க எப்பத் தப்புன்னு தெரியுதோ அப்பக் கேள்வியோட வர்றேன்னு சொன்னார். பாசமெல்லாம் இருக்குய்யா... எல்லாம் சரிதான்... ஆனா இப்ப நீங்க கொடுக்குற லெக்சர் போக வேண்டிய இடத்துக்குப் போகும்... அதனால கவின் இன்னும் தீவிரமாத்தான் எதிர்ப்பான்.. இது தேவையா சேரன் சார்..?
 லாஸ்லியாவிடம் முன்னைப் போலில்லாமல் அப்பா - மகளா அதாவது கமல், ஸ்ருதி போலில்லாமல் வனிதா, விஜயகுமார் மாதிரி இருப்போம்ன்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருந்திருக்கணும் சேரன் சார். மறுக்கா மறுக்கா பாசத்துல வழுக்கி விழுறதெல்லாம் மக்களிடம் உங்கள் நேர்மைக்குக் கிடைத்த இடத்தை மெல்ல இறக்கி வைத்துவிடும் என்பதை எப்போது உணர்வீர்கள்..?

அடுத்த காட்சியில் விளக்கணைத்த பின் கவினிடம் சேரப்பாவிடம் பேசினேன் என்று சொன்னவுடனேயே அவன் தன் பக்கத்துக் கதையை அள்ளிவிட ஆரம்பித்தான். உனக்காக அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் உனக்காக உன் அப்பா, அம்மா, தோழி, அண்ணன், தம்பி, உங்க வீட்டு ஆடு, மாடு, கோழி, நாய் எல்லாத்துக்கு முன்னாலயும் எதையும் விட்டுக் கொடுப்பேன்... மண்டியிடுவேன்... ஆனா இந்தாளுக்காக எதையும் விட்டுக்  கொடுக்கமாட்டேன்.. இவன் யார் எனக்கு...? என்பதாய்ப் பேசினான். மேலும் நான் சொன்னதை நீ கேட்டியா (சேரனுடன் பேசாதே) இப்ப நீ சொல்றதை (சேரனை வெறுக்காதே) எப்படி நான் கேக்கணும்ன்னு நினைக்கிறேன்னு சொல்லி நீ நீயா இரு... நான் நானாயிருக்கேன்... இடையில இந்த நைனா நல்லாயிருக்கட்டும் என்றான்.

மேலும் அவன் சொன்ன இன்னொரு வார்த்தைதான் மகா மட்டரகமானது... ஆம் நம்ம உறவைத் தப்பாத்தான் பார்ப்பாங்க... ஆனா அப்பா மகள்ன்னா தப்பாப் பாக்க மாட்டாங்கதானே... அதான் என்றான்... இதுதான் வக்கிரத்தின் உச்சம்... சேரனின் உறவைக் கொச்சைப்படுத்தும் பேச்சு... கவின் நல்லவன் என சொம்பு தூக்கி அவனை நாமினேசனில் ஓட்டுப் போட்டுக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நம்ம மக்களின் பாசத்தை எங்கே கொண்டு போய்த் தொலைப்பது..?

சாண்டியும் லாஸ்லியாவும் வெளியில் பேசிக்கிட்டு இருந்தாங்க... கவின் - லாஸ்லியா பிரச்சினைதான் பேச்சாய் இருந்தது. சேரனுடன் பேசுவது அவனுக்குப் பிடிக்கலை என்பதைப் பார்வையாளர்களாய் நாம் உணர்ந்து வைத்திருப்பதையே லாஸ்லியாவும் சொன்னார். இவர் பாசத்தைக் காட்டுறார்... அவனுக்கு இவரோட பேசினாலே கோபம் வருது... இப்ப நான் என்ன செய்வது எனப் புலம்பினார். சாண்டியிடமும் அதற்கு சரியான பதில் இல்லை.

சேரனைப் பொறுத்தவரை கவினுக்கு லாஸ்லியா வாழ்க்கைப் போக்கில் எந்த விதத்திலும் பிரச்சினையாக இருக்கவில்லை என்றாலும் கவினைப் பொறுத்தவரை தன் காதலுக்கு சேரன்தான் பிரச்சினையே என்பதாய் மனசுக்குள் மதுரை மீனாட்சி கோபுர உயரத்துக்கு முடிவு பண்ணி வச்சிருக்கான். அதிலிருந்து அவன் மீளவே முடியாது. லாஸ்லியாவுக்குள் மீண்டும் பாசப் போராட்டமா அல்லது நடிப்பான்னு வரும் நாட்கள் சொல்லிவிடும்.

70வதாவது நாள் விடியல் 'ஆ முதல் அக்குத் தானடா...' பாடலுடன்... சாண்டி, முகன், தர்ஷன் ஆடினார்கள். தன்னிடமிருந்து ஒதுங்கியே இருக்கும் கவினிடம் சாண்டி பேச, என்னை விட்டுடுண்ணே... நான் இப்படியே இருக்கேன் என ஒரு மல்டி டாஸ்க் சீனைப் போட்டான். சோகமாய் இருப்பது போல் காட்ட தாடி ஒரு ப்ளஸ் பாயிண்ட்தான் இல்லையா..?

நாமினேசன் வந்தாச்சு... லாஸ்லியா வாங்கன்னு சொன்னதும் எப்பவும் போல அறைக்குள்ள போயி கதை சொல்லி அழுதுட்டு வரலாம்ன்னு போக, இது ஓபன் நாமினேசன் பிளாஸ்மா முன்னால நின்னு யார் அந்த ரெண்டு பேருன்னு சொல்லுங்க அப்படின்னு பிக்பாஸ் தன் ஆயுதத்தை மெல்ல இறக்கினார். லாஸ்லியா அப்படியே உக்கார்ந்து யோசித்தார். முகத்துக்கு நேர நீ இதைப் பண்னலைன்னு சொல்றதுல நிறையச் சிக்கல் இருக்கு... ஆனாலும் இனி வரும் வாரங்கள் இப்படித்தான் நாமினேசன் இருக்க வேண்டும்... அதுவே சரியானதாகவும் இருக்கும். இப்படியான நாமினேசனில் தலைவி என்ற முறையில் வனிதாக்கா இல்லாதது வருத்தமே...

ஜவர் குழுவுல சின்ன உடைப்பு என்பதால் சேரன், ஷெரினுக்கு அதிக ஓட்டு விழவில்லை... கவினுக்கும் லாஸ்லியாவுக்குமே பெரும்பாலான அடி... முகனும் இதில் மூழ்கினார்... அஞ்சு பேர் நாமினேசனில் இருக்கிறார்கள். கவின், லாஸ்லியாவை பிக்பாஸே காப்பாற்றி விடுவார்... எதுவுமே இல்லாத சந்தையில இந்தத் தக்காளியாச்சும் விலை போகட்டுமேன்னு இன்னேரம் ஆளுகளை வைத்து ஓட்டுப் போட ஆரம்பிச்சிருப்பார்... உலக நாயகனும் மக்களே இந்த முடிவெடுத்தார்கள்... நீங்க காப்பாற்றப்பட்டீர்கள் என கவனமாய் பொய்யை கனிவாய்ச் சொல்வார். அதானால் இந்த வாரம் வெளியேறுபவர்களுக்கான போட்டியில் ஷெரின், சேரன், முகன் மட்டுமே நிற்பார்கள். என்னைப் பொறுத்தவரை சேரன் போவதே நலம்.

சேரன் நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கார், சிறந்த இயக்குநர், பல வெற்றிகளைப் பார்த்தவர் அதேபோல் ஷெரினும் என கவின் பேசியது தேவையில்லாதது. இங்க என்ன பண்ணுனாங்கன்னு நாமினேட் பண்ணுனுங்கிறது பிக்பாஸ் விதி.. வெளியில ட்ரம்போட கூட சினிமாப் பார்த்திருக்கட்டும்... மோடியோட ஆப்கானிஸ்தானுக்கு அஞ்சு தடவை போனாயிருக்கட்டும் அதெல்லாம் நாமினேசனுக்குத் தேவையில்லைன்னு வனிதாக்கா கம்பு சுற்றி பிக்பாஸையும் யோவ் என்னய்யா ஆட்டோகிராப் பார்க்கப் போனப்போ கூட்டத்துல என்னோட செருப்பு அந்து போச்சு அதுக்கு காரணம் சேரனுங்கிறான்.. நீயும் பேசாமா இருக்கேன்னு கேட்டு சண்டைக்கு முதல் விதை போட, எனக்குப் பிடிக்காது அதான் நாமினேட் பண்ணுறேன்னு சொல்லிட்டான்.

இங்க சாண்டிதான் டுவிஸ்ட்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு கமல் சொன்ன மாதிரி, கவின் லாஸ் எனச் சொல்லி, கவின் இப்ப ஒரு போட்டியாளனாய் இங்கில்லை.. லாஸ்லியாவை யாரும் கொத்திக்கிட்டுப் போயிருவாங்களோன்னு பாதுகாவலனாய்த்தான் இங்கிருக்கான்... இவங்க காதல் செய்ய இது இடமில்லை... வெளிய போயி பண்ணித் தொலைக்கட்டும் என்றார். இதுவரை தன்னுடன் ஜாலியாய் இருந்தவன் இப்ப ஒரு பொண்ணுக்காக எல்லாம் தொலைத்து சிவப்புக் கேட்டுக்கிட்டயே கிடந்து மக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிக்கிறானேன்னு மனசுக்குள்ள ஒரு வலி... அது அழுகையாய் வெடித்தது... அதில் நடிப்பெல்லாம் இல்லை... உண்மையான வருத்தமே இருந்தது.

சாண்டியும் தர்ஷனும் தன்னைச் சொல்லியதும் கவின் அழுதான்.... இவன்தான் சேரனின் அழுகை ட்ராமா என்றவன் இப்போது அழுவது உண்மையான வலியால் என்றாலும் பார்ப்பவர்களுக்கு இது ட்ராமா இல்லையா என்றே தோன்றும்... ஏனென்றால் விதைத்ததைத்தான் நாம் அறுக்க முடியும். இந்த இடத்தில் இது ஒரு போட்டி, இங்க அழுது அனுதாபம் தேடத் தேவையில்லை என்பதை எடுத்து வைத்தார் வனிதாக்கா... இதனால் பிரச்சினை சூடு பிடித்தது. 

இங்க ஒவ்வொருத்தரும் விளையாடத்தான் வந்திருக்கிறோம்... இதுல அவனுக்கு விட்டுக் கொடுப்பேன்.. இவனுக்கு விட்டுக் கொடுப்பேன்னு சொல்றவனெல்லாம் எதுக்கு இங்க வரணும்... நீங்க ஒரு குழுவா இருந்துக்கிட்டு நல்லா வெளையாடுறவங்களை நாமினேட் பண்ணுவீங்க... மக்களும் அவங்களை வெளியே அனுப்பிடுவாங்க... விளையாட மாட்டேன்னு சொல்றவங்க இங்க இருப்பீங்க... எதுக்கு இருக்கணும்... நானெல்லாம் விளையாட்டை விளையாட்டாத்தான் விளையாடுறேன்... டு பி ஹானஸ்ட்... உங்களுக்கு நேருக்கு நேராத்தான் பேசுறேன் என சிக்ஸராய் விளாசிக் கொண்டிருந்தார் வனிதாக்கா. குறிப்பாக 'முஸ்தபா... முஸ்தபா' பாடும் கவினை வச்சிச் செய்தது சிறப்பு... 

நான் நண்பர்களுக்காக விட்டுக் கொடுப்பேன்... அவங்க எவ்வளவு வலியைச் சுமந்துக்கிட்டு வந்திருக்காங்க தெரியுமா என்றெல்லாம் பேசியது தேவையில்லாதது. எத்தனை வலி என்றாலும் இந்தப் போட்டிக்குள் ஒரளவு பிரபலங்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுக்கப்படும்... ஏன் வறண்டு போன விளைநிலம் பார்த்து தூக்குப் போட்டுச் சாகுறானே விவசாயி, அவனுக்குள் இருக்கும் வலிக்காக அவனில் ஒருத்தனுக்கு பிக்பாஸ் வாய்ப்புக் கொடுப்பாரா..? தினக்கூலியாய் வெயிலில் பாரம் சுமக்கிறானே அதில் ஒருத்தனுக்கு பிக்பாஸ் வாய்ப்புக் கொடுப்பாரா..? விளையாட வந்த பின் என்ன வலி.. மண்ணாங்கட்டின்னு... திறமையுள்ளவன் வெல்லட்டும்... இவன் யார் விட்டுக் கொடுக்க..?

மேலும் ஒருவேளை லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன்னு நாலு பேர் மட்டுமே உள்ளிருக்கும் சூழல் வரும் போது கவின் யாரையும் நாமினேட் பண்ணாமல் போட்டியில் இருந்து விலகுவானா..? அவங்க ஜெயிக்க நீங்க போங்கன்னு யார்யார் கடினமான போட்டி கொடுப்பார்களோ அவர்களை எல்லாம் வெளியாக்கி, இந்த முஸ்தபாக்களை வைத்து தனக்கான வெற்றியைத் தேடிக்கொள்ள மிக அழகாக 'வலி நிறைந்தவர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விளையாட ஆரம்பித்திருக்கிறான்.

கவினுடனான வனிதாவின் சண்டையில் பல விஷயங்கள் சரியே எனப்பட்டது. மனம் கவர்ந்தவனுக்காக லாஸ்லியா வனிதாவுடன் மல்லுக்கட்டினார். தர்ஷனும் இடைபுக, மற்றவர்கள் என்றால் உடனே வரும் நீ உன் நண்பர்களை இதுபோல் கேட்டிருக்கிறாயா..? என்ற கேள்வி மிகவும் சரியே... தர்ஷன் மற்றவர்களிடம் குரலை உயர்த்துவதில் காட்டும் வேகத்தை கவின், சாண்டியிடம் மட்டும் அது தவறே என்றாலும் காட்டுவதில்லை.

தன்னை நாமினேட் பண்ணிய போதிலும் கவினிடம் உங்க காதல்தான் நல்லாயிருக்கே... பின்ன என்னத்துக்கு இப்படி ஒரு டிராமா... மத்தவங்க என்னமோ பேசட்டும்... அதுக்காக எதுக்கு ரெண்டு பேரும் முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கீங்க... பேசுங்க... விளையாடுங்க.. எப்பவும் போல இருங்க... வெளியில போயி மத்ததைப் பாத்துக்கங்க என ஆறுதலாய்ப் பேசினார் ஷெரின்.

வனிதா, கவின் சண்டையில் சாண்டியும் தர்ஷனும் எப்போதேனும் இடை புகுந்தார்கள். லாஸ்லியா மட்டுமே தனியாகக் களமாடினார். முகன், சேரன், ஷெரின் நேரடி ஆட்டமில்லை. சேரன் ஏனோ மது பிரச்சினையில் வெண்டக்காய் வெட்டியது போலவே தனியே அமர்ந்திருந்தார். கேமரா அவரையே படம் பிடித்தது... ஆனாலும் அவர் பேசமாட்டேன்னு அடம் பிடித்தார்.

இருந்தாலும் அனுதாபம் தேடுறது... விட்டுக் கொடுப்பேன்னு சொல்றதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தார். சண்டை போடுறது பிரச்சினையில்லை ஆனா சொந்தப் பிரச்சினைகளுக்குள்ள போகாதீங்கப்பா என்றார். மேலும் வனிதாவிடம் ஏதோ பேச முயற்சித்தார்... அக்கா எப்போ அடுத்தவரைப் பேச விட்டிருக்கு... இருங்கண்ணா நான் பேசிக்கிறேன்னு அது பாட்டுக்கு சிக்ஸ் அடிச்சிக்கிட்டு இருந்துச்சு... நீ என்னைய எப்ப விளையாட விடப்போறேன்னு தோனியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அஸ்வினைப் போல எதிர்முனையில் நின்று வேடிக்கையே பார்த்தார்.

சேரன் எதுவும் பேசாததற்குக் காரணம் வனிதா பேச இடம் கொடுக்காது என்பதாலும் எதிராளி வலியை வைத்து வெற்றிக்கு வழி தேடும் அனுதாபத்தை ஆயுதமாக்கும் கவினுடன் பிரச்சினை என்பதாலும் தன்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது அடுத்தவர் தூக்கிக் கொடுத்துப் பெறுவதல்ல... தானே போராடிப் பெறுவதுதான் என்பதாலும் அந்த இடத்தில் யோகா செய்து கொண்டிருந்தார். ஆனாலும் ரொம்பக் கடினமய்யா அப்படி அமர்ந்திருப்பது.

சார் உங்க மேல நிறைய மதிப்பு வச்சிருக்கான் சார் என சேரனிடம் கவின் பற்றி சாண்டி சொன்னதெல்லாம் சுத்தப் பொய்... சைக்கிள் எனப் பேர் வைத்து, இவனெல்லாம் பெரிய இயக்குநரா எனப் பேசி, அப்பன்னு எதுக்கு உள்ள வர்றான்னு சொல்லி, ட்ராமான்னு சொல்லி, அவரோட பேசினால் என்னோட பேசாதேன்னு சொல்லி, அப்பா மகள் உறவுன்னா மக்கள் பார்வையில் தப்பாத் தெரியாதுன்னு சொல்லி... இப்படி நிறையப் பேசிய கவின் எப்படி... எப்போது இவரை நல்லவர்ன்னு சொல்லியிருப்பான்., ஒருவேளை சேரன் ரொம்ப நல்லவருன்னு சொன்னதை மட்டும் பிக்பாஸ் வெட்டிட்டாரோ...?

இந்தப் பிரச்சினையெல்லாம் முடியட்டும்ன்னு திண்ணையில பாயைப் போட்டு படுத்திருந்த பிக்பாஸ் மெல்ல எழுந்து இன்னார் இன்னார் வெளியில் போற போட்டியில் இருக்கீங்கன்னு சொன்னார். கவின் சொன்ன காரணங்கள் தவறென்றோ... வனிதாக்கா கம்பு சுற்றியதிலும் தவறிருக்கு என்றோ எதுவும் சொல்லவில்லை.

குருநாதான்னு சாண்டி சொல்றதால ஐவர் அணிக்கு குருநாதான்னு போட்ட கருப்பு டீசர்ட் கொடுத்திருக்கார் பிக்பாஸ்... நடத்துங்க பிக்பாஸ்... நடத்துங்க.. உங்க காட்டுல மழைதான்... பார்க்கிறவங்களுக்குத்தான் வறட்சியா இருக்கு.

சாக்சியைக் கொண்டாந்து விட்டுட்டு நீ வெளிய போடான்னு வனிதாக்கா சொன்னதுதான் நேற்றைய சண்டையில் ஹைலைட்... செம சண்டை... அக்கா விடாமல் சிக்ஸர்தான்... கவின்தான் தண்ணிக்குள்ள விழுந்த கோழிக்குஞ்சி மாதிரி ஆயிட்டான். இன்னைக்கு சாக்சி வேற உள்ள... அவங்களைப் பார்த்ததும் கவின் லாஸ்லியா கூட அதீத காதல் செய்வது போல் நடிக்கிறான்... அப்ப செமத்தியான ஆட்டம் இன்னைக்கு காத்திருக்கு.

டிஸ்கி : சில நாட்களாக 'ர்' என இருந்த கவின் மீண்டும் இன்றைய பதிவில் 'ன்' ஆகியிருப்பது... அவரின் செயல்பாடுகள் பிடிக்காததாலேயே... ஆம் எனக்கு ஆரம்பம் முதல் கவினைப் பிடிக்கவில்லை... அதனால் சேரன் ஆதரவாளன் இல்லை.. :) ஒரு இயக்குநராய் அவரைப் பிடிக்கும், பிக்பாஸ் இல்லத்தில் அல்ல.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

சென்னை பித்தன் சொன்னது…

பெரிய முதலாளி நான் எப்போதாவது பார்ப்பேன்.இனி அதுவும் வேண்டாம்.நீங்கள் எழுதுவதைப் படித்தாலே போதும்
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றி அய்யா...
நீண்ட நாளாச்சு... உடல் நலம் எல்லாம் எப்படியிருக்கிறது அய்யா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த வாரம் தலைவர் வனிதாவா...? அப்பசரி, அப்பசரி... பத்திட்டு எரியும்...! - கமல்

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாண்ணா...
அக்காவேதான்...
ஹா... ஹா...
அடிச்சு ஆடுமுல்ல.