மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : சந்திப்புக்களும் அறிவுரைகளும்...

நேற்று துபையில் அமீரக எழுத்தாளர் குழுமத்தின் மாதாந்திரக் கூட்டத்துக்குச் சென்றதால் பிக்பாஸ் பகிர்வு எழுதவில்லை.

Image result for bigg boss 13th september images

இந்த வாரம் முழுவதுமே குடும்பங்களின் வருகை... அழுகை... வருத்தம்... அறிவுரைகள் எனத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வந்தவர்கள் எல்லாரும் சொல்லிச் சென்ற செய்திகள் என்னவோ ஒரே மாதிரி பதிவு செய்த 'தற்சமயம் வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ள முடியாது' என்பது போலத்தான் இருந்தது.

'யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே...'

'உனக்கு யாரும் இங்க விட்டுக் கொடுக்கலை...'

'எல்லாரும் கேம் விளையாடுறாங்க...'

'இங்க உறவுங்கிறதெல்லாம் சும்மா... அவங்கவங்க உன்னை பயன்படுத்திக்கிறாங்க...'

'நீ நீயா இரு...'

இப்படியான வார்த்தைகள்தான் வனிதா மகள் முதல் சேரன் அம்மா வரை சொல்லிச் சென்றார்கள். பிக்பாஸ் சொல்லிக் கொடுத்து விட்டதை அப்படியே ஒப்பிப்பது போல்தான் இருந்தது.

கவினும் லாஸ்லியாவும் பேசித்தான் முடிவுக்கு வரவேண்டும் நாம் பேசக்கூடாதென மற்றவர்கள் ஒதுங்கியிருக்க, இருவரும் தனியே அமர்ந்து பேசினார்கள். லாஸ்லியா பொறுப்போடு பேசினாலும் கவின் சிவாஜிகளை முழுங்கிவிட்டு நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். திட்டு வாங்கியதெல்லாம் லாஸ்லியா என்றாலும் இவன் படு சோகமாக இருந்தான். இவன் பேசிய தமிழுக்கு சப் டைட்டில் போட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

லாஸ்லியா தெளிவாகப் பேசினார்... இப்போதைக்கு இதை நிறுத்தி வைப்போம் என்றார். சேரனும் இங்கு வேண்டாம் வெளியில் போய் பார்த்துக்கங்க என்றுதானே சொன்னார். கவினைப் பொறுத்தவரை லாஸ்லியாவை விட மனதில்லை... ரொம்ப நல்லாவே நடித்தான்... அந்தப் பெண் இனி விளையாடலாம் என்பதில் தெளிவாக இருந்தார்.

சாண்டியிடம் மன்னிப்புக் கேட்டான் கவின்... அப்போது கஷ்டமாத்தான் இருந்துச்சு அதை விடு... இனி எப்பவும் போல் ஜாலியா இருக்கலாம் எனச் சாண்டி கடந்து போனது நட்பின் பரிமாணம்.

81 ஆம் நாள்... 

காலையில் ஜித்து ஜில்லாடி பாட்டு... சேரனும் வனிதாவும் வேடிக்கை பார்க்க மற்றவர்கள் ஆடினார்கள் கவினைத் தவிர...

தர்ஷனின் அம்மாவும் தங்கையும் வந்தார்கள். தர்ஷனின் அம்மாவுக்குக் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள். தர்ஷனின் தங்கை லாஸ்லியாவின் கடைசித் தங்கையை ஞாபகப்படுத்தினார். அண்ணனுக்கு அறிவுரை வழங்கினார்... அழகாக இருந்தார். தர்ஷனுக்கு நாந்தான் முடிவெட்டி விட்டேன் என்று ஷெரின் சொன்னபோது எல்லாருக்கும் நீதானெ வெட்டிவிடுறே என லாவகமாகக் கேட்டார் தர்ஷனின் அம்மா. தர்ஷனுக்குப் போடப்பட்ட பாடல் 'காலையின் தினமும் கண் விழித்தால்...'.

வனிதாவின் பிள்ளைகள் வந்த போது, அந்தக் குழந்தை எங்களுக்குச் சமைச்சித் தாங்கன்னு சொன்னபோதுதான் அப்பா, அம்மா இருவரும் இல்லாமல் மற்றவர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளின் ஏக்கம் எப்படிப்பட்டதாய் இருக்கும் எனத் தெரிந்தது. அம்மா வாயாடி என்றால் குழந்தைகள் அளந்தளந்தே பேசினார்கள். அப்படித்தான் பேசுவார்களா... அல்லது பயமா... என்பது தெரியவில்லை. அழகான குழந்தைகள்... பிள்ளைகள் வந்த போது வனிதாவும் தாய்மையுடன் இருந்தார். வனிதாவுக்குப் போட்ட பாடல் 'வாயாடி பெற்ற பிள்ளை...'.

சேரனின் அம்மா,தங்கை, மகள் வந்திருந்தார்கள்.... அதிக நேரமிருக்கவில்லை... மகளுடன் தோளில் கை போட்டபடி பேசிக் கொண்டிருந்தார் சேரன். லாஸ்லியாவை மக... மகன்னு கொஞ்சுறதெல்லாம் போதும்... உனக்கு நானும் அக்காவும்தான் பிள்ளைகள்... புரிஞ்சதா... அவகிட்ட பேசினே அப்புறம் உங்கிட்ட பேசமாட்டேன் என மிரட்டல் விட்டார். இது எங்கே தன் பாசம் இன்னொருத்திக்குப் போயிருமோங்கிற மன பயத்தின் வெளிப்பாடு. மேலும் லாஸ்லியாவிடம் நீ எப்படி எங்கப்பாவுக்குத் துரோகம் பண்ணினாலும் எங்கப்பா உன்னை மகளாத்தான் நினைக்கிறார் என்றார். சேரனின் அம்மாவோ எம்புள்ள நல்லதுக்குத்தான் சொல்வான்... அவனை யாரும் தப்பா நினைக்காதீங்க என்றார். சேரனுக்குப் போடப்பட்ட பாடல் 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...'.

82ம் நாள்...

காலையில் 'ஆல் தோட்டப் பூபதி நானடா..' பாடல் இன்றும் கவின் தவிர மற்றவர்கள் ஆட்டம். லாஸ்லியாவோட ராத்திரியெல்லாம் கடலை போட்டப்ப தூங்கினான்... இப்ப என்ன செய்யிறான் இரவில்... தூங்கிக் கொண்டிருந்தான் பாடல் ஒலிக்கும் போது... சோகத்தில் இருக்கான் போல.

கவினின் நண்பன் வந்தான்... முன்னமே பிக்பாஸ்க்கிட்ட சொல்லிட்டு வந்தானா இல்லை பிக்பாஸ் சொல்லி விட்டாரா தெரியாது.... நிறைய அறிவுரைகள்... எல்லாத்துக்கும் கவின் பதில் வைத்திருந்தான்... வனிதா, ஷெரின் என எல்லாரையும் இறுக்கி அணைத்தான்... சேரனிடம் கை மட்டுமே கொடுத்தான். நண்பனின் காதல் பிரிவுக்கு நீதானே காரணம் என்பதாய் கூட இருக்கலாம். பிக்பாஸ் எல்லாரும் ப்ரீஸ் என்றதும் இப்ப நான் ஒண்ணு கொடுக்கிறேன்... நீ வெற்றி பெற்றால் எனக்கு மேடையில் வைத்து திருப்பிக் கொடு என கவினுக்கு ஒரு அறை... இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஷெரின் ஓ மை காட் என்றார். சேரன் என்னை அறைந்தது போலிருந்தது என ஷெரினிடம் பின்னர் சொல்லிக் கொண்டிருந்தார். 

லாஸ்லியாவிடம் உங்க விளையாட்டை விளையாடுங்க என்றான்... போகும் போதும் ஷெரினைக் கட்டியணைத்தான்... சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது... நாங்க முக்கியமா... இங்க இருக்கவங்க முக்கியமா எனக் கேட்டான். கவினுக்குப் போட்ட பாடல் 'என் பிரண்டைப் போல யாரு மச்சான்...'

ஷெரினின் அம்மாவும் தோழியும் வந்தார்கள்... ஷெரினின் அம்மா யசோதா செம ஜாலியான பேர்வழி போல, ஷெரினின் தோழி முகனுடன் போன போது முகன் அபிராமி கோவிச்சுப்பாடா என்றார். சாண்டி எம்பொண்ணை நீ ரொம்ப கலாய்க்கிறே என்றார். சாண்டியுடன் நடனம் ஆடினார்... மகளுக்கு அடிக்கடி உதட்டு முத்தம் கொடுத்தார். ஷெரினின் தோழியிடம் நீ யாரைப் பார்க்க வந்தே என்றதும் அவர் கண்ணாலேயே கவினைக் காட்டியது அழகு. கவின் அப்பா விடுங்கடா சாமிகளா... வெளியில் வந்து பார்த்துக்கலாம் என்றான். அப்ப வனிதா நீ இன்னும் திருந்தலையா என்றார். ஷெரினின் தோழியோ கவினைப் பார்க்க வந்தேன்... இப்ப அவனிடம் தெம்பு இல்லை அதனால முகன் என்றார்... இவர்கள் இருந்த போது மிகவும் மகிழ்வாக நகர்ந்தது. ஷெரினுக்குப் போட்ட பாடல் 'கண் முன்னே எத்தனை கனவு...'

இனி நமக்குத்தான்... லாலா வந்துரும் என சாண்டி ஒரு பக்கம் புலம்பிக்கிட்டிருந்தார். சாண்டியை ப்ரிஸ்- ரிலீஸ் பண்ணி பிக்பாஸ் விளையாண்டுக்கிட்டு இருந்தார். ஒரு வழியாக லாலாவும் , சாண்டியின் மனைவியும் வந்தார்கள். லாலா அப்பாவிடம் ஒட்டிக் கொண்டார்... ப்ரியாக விளையாண்டார்... மக என்னைக் கண்டுக்கலைன்னு ஒரு பக்கம் சாண்டி கண்ணீர் வடித்தார். என்பது நாளிலேயே மகள் வளர்ந்திருப்பாளா... என்னை நினைவில் வைத்திருப்பாளா என்றெல்லாம் புலம்புவதைப் பார்க்கும் போது வருடம் ஒருமுறை ஊருக்குப் போகும் நாம்... இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போகும் கட்டிடப் பணியாளர்கள் எல்லாம் எப்படிப் புலம்ப வேண்டும். கேமிராவுக்கு முன் நடிப்பது சுலபம்... இந்தக் கடின வாழ்வை வாழ்ந்து பார்த்தால்தான் இதன் வலி விளக்கும். எல்லாருக்கும் சாண்டியின் வலியே பெரிதாகத் தெரியும்... பாலையின் வெயிலில் ஒட்டகம் மேய்ப்பவனின் வலியை மீடியா தூக்கிச் செல்லாது அல்லவா அதனால் அதன் வலி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

லாலாவுக்காக ஒரு பாட்டுப் பாடினார்கள்... ஆட்டம் போட்டார்கள்... மழை பெய்தது... குடைக்குள் கணவன் மனைவி குழந்தை ஒன்றிக் கொண்டார்கள். குழந்தைக்கு முத்தமிடுவது போல் கணவனுக்கு முத்தம் கொடுத்தார் திருமதி. சாண்டி, லாலா வீட்டுக்குப் போனபின்தான் அப்பாவின் நினைப்பில் தவிக்க ஆரம்பிப்பாள்... பாவம் குழந்தைகள்... பிரிவு கொடுக்கும் வலியை மனசுக்குள் சுமந்து திரிவார்கள். எங்க வீட்டில் இருவரையும்... இல்லையில்லை என் மனைவி உள்பட மூவரையும் இந்தப் பிரிவு மிகவும் பாதித்திருக்கிறது... பாதிக்கிறது... பாதித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளியன்று பத்து நிமிடம் பேசவில்லை என்றால் ஹாஸ்டலில் இருக்கும் மகள் அழ ஆரம்பித்து விடுகிறார். என்ன செய்வது..? நம் தலையில் எழுதிய வாழ்க்கைதானே அமையும்... விதியை மாற்ற நாம் என்ன கடவுளா..? நடப்பதெல்லாம் நன்மைக்கே என கடந்து செல்வோம்.

லாஸ்லியாவிடம் பேசிய வனிதா உன்னோட தங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடு எனச் சொல்ல, சேரப்பா கவின் என நான் அதிகம் பாசம் வச்சிட்டேன்... எம்மேல அவங்க அந்தளவுக்குப் பாசம் வைக்கலை... அதை நான் புரிஞ்சிக்கலை எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கவின் - லாஸ்லியா காதலை பிரித்தது லாஸ்லியாவின் அப்பா என்றாலும் ஏதோ சேரன்தான் காரணம் என்பது போல, பலர் இப்போது லாஸ்லியாவைச் சேரன் மகளெனக் கட்டிப்பிடிப்பதை 'அராத்து'த்தனமாக கேவலப்படுத்தி வருகிறார்கள். இதுவரை அந்தப்பெண் அவரின் தொடுதல் தனக்கு கம்பளிப்பூச்சி ஊர்வதாய்ச் சொல்லவில்லை... அங்கிருக்கும் பெண்கள் யாரும் (மீரா தவிர) தவறான நோக்கத்தில் அணுகினார் எனச் சொன்னதில்லை... அப்படியிருக்க ஏன் ஒருவன் மீது இப்படி அபாண்டமான பலியைச் சுமத்துகிறார்கள்...?

ஷெரின் அம்மாவிடம் சேரன் சாரிடம் பேசும் போது எனக்கு நிறைய அறிவுரை சொல்லியிருக்கிறார். அவரை நான் அப்பாவாய் பார்க்கிறேன். அப்பா என்றால் இப்படித்தானா... எனக்கு என் அப்பாவைப் பார்க்கணும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்... இதைவிட வேறென்ன வேண்டும். தன் மகளை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்றால் லாஸ்லியா குடும்பம் மிகப்பெரிய மரியாதையைக் கொடுத்திருக்காது... ஷெரினின் அம்மா காலைத் தொட்டுக் கும்பிட்டிருக்க மாட்டார்.

சேரனைப் பொறுத்தவரை அறுபது கேமரா இருக்கு உங்க காதலை வெளியில் போய் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது போல் பாசத்தை பாசமாய் மட்டுமே வைத்துக் கொண்டு கட்டியணைத்தலை விட்டுத் தொலையலாம்... கட்டிப்பிடித்துத்தான் பாசத்தைக் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை... பெற்ற பெண்ணையே வயசுக்கு வந்த பின் அதென்ன அப்பாக்கிட்ட இடிச்சிக்கிட்டு உக்கார்றே... தள்ளி உக்காரு... பொம்பளைப்புள்ளையா லட்சணமா இருன்னு வீடுகள்ல திட்டுவாங்க... அப்படியிருக்க கட்டிப்பிடிப்பது என்பது... அதுவும் பொதுவெளியில் கட்டிப் பிடித்தல் என்பது தவிர்க்க வேண்டியதே... சேரன் செய்தால் நலம்... இல்லையேல் சேற்றை அள்ளி வீசுபவர்கள் மலத்தையும் அள்ளியெறியத் தயாராவார்கள்.

வந்தவர்கள் எல்லாருமே சாண்டியைத்தான் கொண்டாடினார்கள்... மற்றவர்களைக் காயப்படுத்துவதை இப்போது சாண்டி குறைத்திருப்பது நன்று. மேலும் எல்லாரையும் சிரிக்க வைப்பதை எல்லாக் குடும்பமும் விரும்புகிறது என்பதே சாண்டி மீதான அனைவரின் பாசம் சொல்லும் விஷயம்... சாண்டி மெல்ல மெல்ல உயரே போகிறார்... கவின் எப்போது விழித்துக் கொள்வான்..?

ஒவ்வொரு குடும்பமும் சொன்னது போல் அனைவரும் அழகாக விளையாடுகிறார்கள்...  இன்னும் 18 நாளில் வெற்றிக்கான இடத்தை யார் அடைவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்...?

நானா...?

என்னோட தேர்வு இருவர்... அதை  நாளை சொல்றேன்...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆவலுடன் அறிய காத்திருக்கிறேன்...

vic சொன்னது…

LAS ,SAANDI

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றி அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கடைசி வாரத்தில் இருக்கும் நால்வரில் இருவரும் வரலாம்.
கருத்துக்கு நன்றி.