மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 25 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : 23ம் புலிகேசி தர்ஷன் 'பராக்'

Image result for bigg boss-3 day 93 images mahat - yashika

'இங்கேரு... நாமதான் இப்ப வெளாட ஆரம்பிச்சிடோம்ல்ல... பின்ன என்னத்துக்கு எப்பப் பார்த்தாலும் நம்மளையே சொல்றானுங்க...'

'நாம அந்த Zone-ல இல்லைன்னு சொன்னாலும் பாக்குறவங்களுக்கு இருக்க மாரிக்கித்தான் தெரியிது...'

'அதான் வெளாடலாம்ன்னு முடிவு பண்ணி, ஒரு மாதிரியா நாம பேசுறதைக் கொறச்சி, அந்த Zone-ல இருந்து இந்த  Zone-க்கு வந்திருக்கும் போது இவனுக இப்புடிச் சொன்னா... பின்ன என்ன செய்யிறதாம்... மறுபடியும் பழைய Zone-க்குள்ள போவேண்டியதுதான்...'

'டேய்... இன்னம் ஒரு வாரந்தேன் இருக்கு... இப்ப மறுபடியும் பழைய Zone-க்குள்ள போனா எங்கப்பன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள அருவாளோட வருவான்... இந்த சேரப்பன் வேற போயி எதாவது போட்டுக் கொடுத்திருப்பான்... சத்த பொறுமையா இருடா...'

'நீ எருமை மாதிரி பொறுமைன்னு சொல்றே... இவனுகளுக்காக நான் உங்கிட்ட பேசாம இருக்க முடியுமா..? டாய்லெட் போகாம, தண்ணி குடிக்காமக் கூட இருந்திருவேன்... ஆனா உங்கிட்ட பேசாம, உரசிக்கிட்டு இருக்காம என்னால இருக்க முடியாது தெரியும்ல்ல...'

'சரி... சரி... அதான் உலகத்துக்கே தெரியுமே... இருந்தாலும் இப்ப நாம கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம்... சேராதே... சேராதேன்னு சேரன் கத்திக்கிட்டு இருந்தான்... இப்ப பேசாதே... பேசாதேன்னு இவன் கத்திக்கிட்டு இருக்கான்... அம்புட்டுத்தான்... இந்த வாரம் இவனை அனுப்ப கெட்ச் போடு... பிக்பாஸ்க்கு லெட்டர் போடு...'

'ம்... சரி நீ சட்டையில பட்டனைப் போடு... ரசிக்க வேண்டியவன் நான் மட்டும்தான்..'

'மூதேவி அது அப்படித்தான்... பட்டனெல்லாம் இல்லை... சரி வா... வெளாடப் போகலாம்...'

'நீயும் என்னை விட்டுப் போறே பாத்தியா...'

'லூசு எங்க போறேன்... வீட்டுக்குள்ளதான் போறேன்... எல்லாரும் வெளாடும் போது நாம வெளாடலைன்னா வீட்டுக்கு அனுப்பிருவானுங்க... வா... ஆட்டையில ஐக்கியமாகலாம்...'

93ம் தேதி காலை...
'ஆல் டே ஜாலி டே...
கவலைக்கெல்லாம் ஹாலிடே...
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே...
இசையென்னும் எவெரெஸ்டில் ஏறும்
கூட்டனி சீக்கிரம் கிடைக்கும் சிம்பனி...

இது ஒரு அழகிய இளமை காலனியே...
புதுமை சோ மெனியே...
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ...
மியூசிக் என்பது த்ரில் ஷோ...
லைஃப் ஸ் எ லைஃப் எ கேம் ஷோ...
மியூசிக் என்பது த்ரில் ஷோ...' 

என்னும் மனதைத் திருடி விட்டாய் படப்பாட்டுடன் விடிய, ஆட்டம் போட்டானுங்க.. ஷெரின் தனியாத்தான் ஆடுனாங்க...

அப்புறம் என்ன பண்ணுனானுங்கன்னு தெரியாது... இண்டியாகேட் பாசுமதி அரிசி சமையலில் இரண்டாம் நாள் தலைமைச் சமையல்காரர் தர்ஷன்... சிக்கனெல்லாம் கொடுத்திருந்தானுங்க.... ஷெரினும் முகனும் உதவியாய் நின்றார்கள். சமையல் குறிப்பு எழுதிக் கொடுத்திடுறாங்க... அதைப் பார்த்துச் சமைக்கும் போதே...

சரி விடுங்க... 

தர்ஷன் தலைமைச் சமையல்காரன்னு சொன்னதும் இன்னைக்கு எல்லாரும் விரதம்ன்னு சொல்லிடுன்னு சொன்னான். அப்புறம் சிக்கனைத் தனியாச் செய்து, சாதம் தனியாக வடித்து, மலையாளிகள் அடுக்குப் பிரியாணி போடுற மாதிரி சாதம் அது மேல சிக்கன்.. மறுபடியும் சாதம்ன்னு போட்டு, கடைசியில கலவைச் சோறு மாதிரி கிளறி விட்டுட்டானுங்க... என்னமோ பேர் சொன்னானுங்க... ஆனாலும் சாண்டியின் சமையலுக்கு தர்ஷனின் சமையல் சாப்பிடும்படி இருந்திருக்கும்.

ஷெரினிடம் லூசா நீயி... வேலையைப் பாரு... இல்லேன்னா அங்கிட்டுப் போ அப்படின்னு தர்ஷன் சிங்களத்தில் கேலி செய்து கொண்டிருந்தான். என்ன எழவு மொழிடா இது... தொண்டையில் இரை சிக்கிக்கிட்ட கோழி கத்துற மாதிரி இருக்குன்னு ஷெரின் புலம்ப, ஏய் அவன் உன்னைய வேலையைப் பாரு... இல்லாடி ஓடுடி கிறுக்குச் சிறுக்கின்னு சொல்றான்னு லாஸ்லியா மொழி பெயர்த்து கூடுதலாக சேர்த்துக் கொடுக்க, கண், காது, மூக்கிலெல்லாம் புகை வர, நான் போறேன்னு போயேபோச்சு ஷெரின்.

லாஸ்லியா தலை முடியை வேறு மாதிரிச் சீவியிருந்தார்... எதுத்த வீட்டுக் காளி மாதிரி இருந்துக்கிட்டு ஏஞ்சலினா ஜோலின்னு நினைப்பு போல... ஆனாலும் தர்ஷன், ஷெரின் விளையாட்டில் மொழி பெயர்த்துக் கொடுத்து... அதாவது போட்டுக் கொடுத்துச் சிரித்தபோது முதல் வாரத்தில் பார்த்த லாஸ்லியாவைப் பார்க்க முடிந்தது... அப்படியே இருந்து தொலைத்திருக்கலாம்.. இப்பத் தொலைத்துவிட்டு இருப்பதாலேயே பார்க்கப் பிடிக்கவில்லை.

எல்லாரும் இந்த அருமையான சமையல் கணத்தை... அதாங்க  Moment... போட்டோ எடுத்துக் கொண்டாடுங்கன்னு... ஆ..ஊன்னா அனுப்புற ஓப்போ போனை அனுப்புனானுங்க.... அதை எடுத்து போட்டோ எடுக்கும் போது தர்ஷன் அருகே நிற்கப்போன லாஸ்லியா, கணவனே கண் கண்ட தெய்வமென கவினுடன் ஒட்டி உறவாடி நின்னார். எங்கே பக்கத்துல நிக்க மாட்டாளோன்னு சிவாஜியாகப் போன கவின், அருகே வந்ததும் ஜெமினியாய் சிரித்தான்.

அப்புறம் பலூனுக்குள பேரெழுதிப் போட்டு விளையாட்டு அரங்கத்தில் போட்டு வச்சி, பலூனுக்குள்ள உங்க பேர் இருக்கும் அதை கையால் உடைக்காமல், உடைத்து எடுக்கணும்ன்னு பிக்பாஸ் சொன்னார். கையால உடைக்கக் கூடாதுன்னா பின்னே எதால உடைப்பாங்க... அப்படித்தான் உடைச்சாங்க... பேரை எடுத்தாங்க... தர்ஷன் வெற்றி... 

அதுக்கு அப்புறம் சாண்டி எழுதுன ஆங்கிலப்பாடல் கம்போசிங்க... அதையே முகன் இன்னும் அழகா ராப்பாடல் போல் மாற்றிப் பாடினான். கவின் செருப்பால் இசைக்க, சாண்டி கரண்டியால் இசைத்தார். நல்லாவே இருந்தது பார்க்கவும் கேட்கவும். முகன் பாடகனாய் ஒரு வலம் வர வாய்ப்பிருக்கு.

அப்புறம் கீழடி ஆராய்ச்சியை மிஞ்சும் தீவிர ஆராய்ச்சியில் இருந்தானுங்க.... அது கொசு... ச்சை.. குசு ஆராய்ச்சி... யார் எப்படிப் போடுவாங்கன்னு தீவிரமான ஆராய்ந்தார்கள்... எல்லாருமே ஷெரின் எப்படிப் போடுவாரென சொல்ல ஆரம்பித்தார்கள்... குக்கர் விசில் வரும் போது இவளும் விசில் விட்டுருவான்னு கவின் சொல்ல, 'டாக் டூ திஸ்'ன்னு சொல்லிட்டு அங்கிட்டு விட்டுடும்... நமக்குத்தான் தெரியாது... ஆனா சாக்சி 'ஜ நோ'ன்னு சொல்லிட்டு கூட்டிப் போகும்ன்னு சொன்னான். சாண்டியோ நடந்து போய்க்கிட்டே எப்படிப் போடும்ன்னு சொன்னான்... எல்லாத்தையும் ரசிச்சி சிரிச்சிக்கிட்டு இருந்தார் ஷெரின்... நாட்டி பாய்ஸ்.

எதுவுமே அகப்படலைன்னா இதையெல்லாம் ரொம்ப நேரம் போட வேண்டிய நிலை பிக்பாஸூக்கு... இந்த குசு விஷயமெல்லாம் இப்ப சினிமாவுல சர்வ சாதாரணம்... ஆமா அங்கயும் நகைச்சுவைப் பஞ்சம்... குசுவே கூத்தடிக்குது. அதைத்தான் இவனுங்களும் செஞ்சானுங்க... ரொம்பச் சந்தோஷமா இருந்தானுங்க...

திடீர்ன்னு பாட்டைப் போட்டானுங்க... மகத்தும் யாஷிகாவும் உள்ளே வந்தாங்க... சரியா உடை போடுறதுக்குள்ள உள்ளே அனுப்பிட்டானுங்க போல யாஷிகாவை... போன சீசனில் பார்த்ததைவிட ஒல்லியாய் அழகாய்த் தெரிந்தார். சாண்டியை இருவரும் கட்டி அணைத்துக் கொஞ்சினர். மற்றவர்களிடம் பேசினார்கள். ஷெரினைக் கட்டிக் கொண்ட யாஷிகா, அம்மாவைப் போய் நானும் ஐஸ்வர்யாவும் பார்த்தோம்ன்னு சொன்னார்.

இவ யாருடா புதுசான்னு சகதிக்குள்ள மாட்டுன சைக்கிள் மாதிரி லாஸ்லியா நிற்க, 'இப்ப இந்த வீட்டுல நாம எப்படியோ அது மாதிரி போன சீசன்ல இவுங்க... பெரிய தலைக்கட்டு... அப்ப பிக்பாஸ்க்கு CONTENT கொடுத்தவங்களே இவங்கதான்... நமக்குச் சீனியர்...' என்று கவின் விளக்கம் கொடுக்க, 'இவன் உன்னை மாதிரியா...?'ன்னு லாஸ்லியா மெல்லக் கேட்க, 'ச்ச்சீய்... நான் வேற மாதிரி... இவுக ரெண்டுதான்... நான் மூணு... நீ கொஞ்சம் முரண்டு பிடிச்சிருந்தா ஷெரினைப் பிடிச்சி நாலாக்கியிருப்பேன்... என்னோட சாதனையை முறியடிக்க ஒருத்தன் பொறந்துதான் வரணும்...' என்றதும், 'அய்யே... வழியுது தொடச்சிக்க' என்றார் லாஸ்லியா.

சிம்பு உங்க எல்லாரையும் கேட்டதாகச் சொல்லச் சொன்னார். சாண்டியை ரொம்பக் கேட்டேன்னு சொன்னார்ன்னு அள்ளி விட்டுக்கிட்டு இருந்தான் மகத்... ஆமா சிம்பு எங்கயிருக்கார்ன்னு யாருமே கேக்கலை... அப்புறம் விளையாட்டை விளையட்டா விளையாடுங்கன்னு அறிவுரை... இருவரும் நடித்த இவன் தான் உத்தமன் படம் டிரைலர் காட்டப்பட்டது. கவினைப் பார்த்து இவன்தான் உத்தமன்னு சொன்னான் மகத். ஆமாமா ரொம்ப உத்தமன்னு எல்லாரும் சிரிச்சாங்க.

நாலு படம் கையெழுத்தாயிருக்கு... எனக்கு அங்க அப்படியிருக்கு... இப்படியிருக்கு... எல்லாத்துக்கும் காரணம் இந்த பிக்பாஸ் வீடுதான்னு அள்ளி விட்டாங்க... காசா பணமா சொல்லிக்கட்டுமே... எல்லாருக்குமே பிரகாசமான எதிர்காலம் இருக்குன்னு சொன்னாங்க... ஆமாமா... அதான் ஓவியா 90ML-ல நடிச்சிட்டு காணாமப் போச்சு... ஆரவ் இங்கதான் டிரைலர் போட்டான்... படத்தையே காணோம்... போன ஒருத்தனும் சொல்லிக்கிற மாதிரியில்லை.... ஏன் இதே யாஷிகா படமில்லாமல் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுச்சு.. பிக்பாஸ் பிரகாசமான வாழ்க்கையைக் கொடுக்கும்ன்னு நம்புவோமாக.

அப்புறம் லாஸ்லியாவுக்கு அப்பா போட்டோ... சாண்டிக்கு செஃப்புக்கான குல்லா, கவினுக்கு நாலு ஹார்ட்டின்கள், முகனுக்கு மைக், ஷெரின் பிடித்தவருக்கு கடிதம் எழுதணும் யாருக்கும் காட்டப்படமாட்டாது என்றார்கள். தர்ஷனுக்கு மட்டும் ஏதோ வரும் எனக் காத்திருக்க வைத்தார்கள்.

சாண்டிதான் அடுத்த மூணு நாளுக்குச் சமையல்ன்னதும் எல்லாருக்கும் சோபாவுலயே வயித்தால  போயிருச்சு... என்னோட சாப்பாடு பிடிச்சிப் போயித்தான் பிக்பாஸ் என்னைச் சமைக்கச் சொல்லியிருக்கார்ன்னு சாண்டி சொல்ல, நீ கொடுத்ததைத் தின்ன கடுப்புல அந்தாளு எங்களைப் பலி வாங்குறான்னு கவினும் சாண்டியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அப்புறம் தர்ஷனுக்கு பலூன் போட்டியில் வெற்றி பெற்றதால் மன்னர் வேஷம்... முகனும் லாஸ்லியாவும் மன்னர் சொல்வதைச் செய்ய வேண்டும். சாண்டி மன்னர் வருவதை அறிவிக்க வேண்டும். கவினும் ஷெரினும் மன்னர் தூர தேசம் போகும் போது தூக்க வேண்டும்... எனச் சட்டங்கள் இயற்றப்பட்ட பேப்பரை பிக்பாஸ் அனுப்ப கவின் வாசித்தான்.

கவினாலயே தூக்க முடியாது... ஷெரின் தூக்கணும் என்றதெல்லாம் அதிகம்... கவின் முகனைப் பல்லக்குத் தூக்கிகளாய் ஆக்கியிருக்கலாம்... ஆனாலும் பிக்பாஸ்க்கு கொழுப்பு கூத்தாடத்தான் செய்யுது.

ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினாரோ அதை அவரிடம் வாசித்துக் காட்டுங்கள்ன்னு பிக்பாஸ் பித்தலாட்டப் பாஸாக மாற, ஷெரின் நோன்னு சொல்லி சந்திரமுகியா மாறிடுச்சு... எழுதும்போதே முன்பெஞ்சில் இருப்பவனை எட்டிப்பார்க்கும் பின்பெஞ்சுக்காரனின் கண் மாதிரி எழுத்தை விரிவாப் படிச்சிச்சி கேமரா... தர்ஷனுக்குத்தான் எழுதுறேன்னும் சொல்லியாச்சு.. பின்னே பித்தலாட்டம் பண்ணினா... கிழிச்சி குப்பைக் கூடையில் போட்டா எடுத்துப் பார்த்துருவாங்கன்னு பேண்ட் பாக்கெட்டுல வச்சிக்கிட்டு சுத்துச்சு. ஆனாலும் ஷெரினைப் போல அவரின் எழுத்தும் அழகு.

யாருக்கு எழுதினே என தர்ஷன் கேட்டான்... அவனுக்குத் தெரியும் நமக்குத்தான்னு... இருந்தாலும் அந்த லெட்டரை வாசிக்க முடியலைன்னு வருத்தம் அவனுக்கு... கவினோ யாருக்கு எழுதியிருக்கப் போறா உனக்குத்தான் எழுதியிருப்பான்னு சொன்னான்.... அப்ப மனசுக்குள்ள நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன்... ஒரு லெட்டர் எழுதியிருப்பாளான்னு நினைச்சிருப்பான் போல....கண்ணுல தெரிந்தது அவனின் கவலை.

விளையாட்டை மட்டும் பாருங்க.... நல்லா விளையாடுங்க... எனத் திரும்பத் திரும்பச் சொல்லி மகத்தும் யாஷிகாவும் விடை பெற்றார்கள். யாஷிகா கவனமாக கவினைக் கட்டியணைக்காமல் வாழ்த்துச் சொல்லிச் சென்றார். லாஸ்லியா கூட தானேதான் யாஷிகாவை அணைத்துக் கொண்டார். 

செட்டை விட்டுப் போற வரைக்குமாச்சும் அந்தப் பாவாடையும் மேல போட்டிருந்த துண்டும்.. ச்சை... அது தாவணி மாதிரி இருந்துச்சு... ஏதோ ஒண்ணு... அதுவும் அவுறாம இந்தப்புள்ள போவணுமேன்னு தோணுச்சு... போயிருக்கும்ன்னு நம்புவோமாக.

 தர்ஷன் மன்னரானதும் 23ம் புலிகேசி படம் பார்த்தது மாதிரி இருந்தது.

'ஏய் லாஸ்லியா... போய் டீ போட்டுக்கிட்டு வா...'

'முகன்... என்னைப் புகழ்ந்து பாட்டுப்பாடு...'

'சாண்டி... நீ என்னை புகழ்ந்து சொல்லிக் கொண்டே வா...'

'ஷெரின்.. கவின் என்னைத் தூக்குங்கள்...'

'ஷெரின் நீ ரொம்பப் பேசுறே... கீழே உட்கார்...'

'நீ அதிகமாக் கூவுறது பிடிச்சிருக்கு...'

'நான் வயிறு வலிக்கச் சிரிச்சி போதும்ன்னு சொல்ற வரை பாட்டி கதை சொல்லு சாண்டி..'

'ஷெரினு நீ மேலே உட்கார்ந்து இவன் சொல்லும் கதையை பேஷ்... பேஷ்... ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லு...'

'என்ன என் காபியை அவள் குடித்தாளா... நானும் பார்த்தேன்... அதை அவளே குடிக்கட்டும்...'

என செமையான ஒரு எபிசோடாய் நகர்ந்தது... ரசிக்க வைத்தது...

அந்த வரிசையில் 'நீ அவனுடன் பேசக்கூடாது... அவன் உன்னுடன் பேசக்கூடாது' என மன்னர் நகைச்சுவையாய் சொன்னதும் காதல் ஜோடிக்கு நார்த்தங்காய்ச் சுவையாய் இருந்ததால், வெளிநடப்புச் செய்து வெளியே நின்று பேசியதுதான் இந்தப் பதிவின் ஆரம்ப வரிகள்.

அப்புறம் ஷெரின் குப்பையில் போட்டதாக நினைத்து லெட்டரைத் தேடினான் தர்ஷன்... இதையெல்லாம் பார்த்திருந்தால் சனமின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்..? கண்டிப்பாக தர்ஷனின் காதலுக்கு சனம்... கனம்... மனம்... ஜெயகேதான். 

லெட்டரைக் கிழிச்சதுக்கு.. பிக்பாஸ் சொன்னதை முதல் முறை மீறியதற்கு ஷெரின் வருத்தப்பட்டு, மன்னிப்புக் கேட்டு, பறக்கும் முத்தம் கொடுத்து உனக்குத் தனியா எழுதி அனுப்புறேன்யான்னு சொல்லிட்டு ராத்திரி 1.30 மணிக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருந்தாங்க.

1,2,3 வரிசையில் இரண்டாவது இடம் யாருன்னு பார்த்தா தர்ஷன்...

போட்டின்னு வந்துட்டா இறங்கி விளையாடுபவன்... யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான்... விளையாட்டை விளையாட்டாய்ப் பார்ப்பான்... இதுவே இவனின் பலம்.

தங்கை சொல்லிச் சென்ற பின், லாஸ்லியாவின் அப்பா அண்ணன், அப்பாவெல்லாம் வேசம் எனச் சொன்னபின் லாஸ்லியாவுக்காக இறங்கி வருதலைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான்.

ஆரம்பம் முதலே முகன் மற்றும் சாண்டி மீது தனி அன்பு. 

ஷெரினிடம் வீழ்ந்து விடாமல் காதலா, நட்பா எனக் காட்டாமல் அழகாய் நகர்த்திச் செல்வதால் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை மெல்ல உயர்த்தியவன்.

தியாகி எனச் சொல்லும் கவினைவிட சொல்லாமல் நிறையத் தியாகம் செய்பவன்.

சென்ற வாரப் போட்டிகளில் தன்னால் விளையாட முடியும் என்ற போது விளையாடாமல் வெளியேறியவன், சைக்கிள் போட்டியில் வேறு யாருக்கோ ஓட்டுறோம் என்றபோது என்னால் முடியலைன்னு சொல்லாமல் எட்டரை மணி நேரம் ஓட்டி வெற்றி பெற்று அதன் மூலம் முகனை இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளனாய் ஆக்கியவன்.

நாமினேசன் நேரத்தில் பெரும்பாலும் சரியான தேர்வை, சரியான காரணத்துடன் சொன்னவன்.

எந்த டாஸ்க்கிலும் அதீத ஈடுபாட்டால் கொஞ்சம் சொதப்பவும் செய்வதே இவனின் பலவீனம்.

எது எப்படியோ தர்ஷனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

நிலாமதி சொன்னது…

தர்சன் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆனால் அயல் நாட்டுக்கு காரன் என கொடுக்க மாடடார்கள்.
சாண்டிக்கு அல்லது ஷெரின் க்கு கொடுக்கலாம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவ்னை வெளியாக்கும் முடிவின் பின்னே பல மாற்றங்கள் இருக்கும். லாஸ்லியா அல்லது தர்ஷனுக்குத்தான் வாய்ப்பு அதிகம். மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க நினைத்தால் விஜய் டிவி இந்த வாரத்தில் இவர்களில் ஒருவரை வெளியேற்றும்.

பார்க்கலாம்..

கருத்துக்கு நன்றி.