மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : கமலும் கவினும் கூடவே காதலியும்

'லியா நான் எதுக்காக வெளியே வந்தேன்னு உங்களுக்கு ஓரளவுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்...'

'அண்ணே... நாம ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட திட்டம் போக... நானே தனியா ஒரு திட்டம் போட்டேன்...'

'மச்சான் ஷெரினு என்னையா வெறுத்துட்டியா...?'

'என்னைய எல்லாரும் ஒல்லியாயிட்டேன்னு சொல்றீங்க... தர்ஷ்தான் ரொம்ப ஒல்லியா இருக்கான்..'

'முகன் கவலைப்படாதே... வெளியில வந்ததும் பார்க்கலாம்...'

'லியா எதையும் நினைக்காம விளையாடுங்க... இன்னும் ஒரு வாரம்தான்...'

'நீ வெற்றியோட வரணும்ன்னுதான் உங்கப்பாவோட ஆசை... அதை நினைச்சி விளையாடு லியா...'

'நான் ரொம்ப நல்லாயிருக்கேன்டா... நீ உடம்பைப் பார்த்துக்கடா...'

'திட்டமெல்லாம் தப்பான வார்த்தையில்லையாம்... அது நல்ல வார்த்தைதானாம்...'

'அவங்க வீட்டுலயும் பார்ப்பாங்கதானே... அதான் மரியாதையா...'

'சோகத்துல இருந்த மாதிரி இருந்துச்சு...'

'ஆமா சோகத்துல இருக்கும் போது கண்டிப்பாச் சாப்பிடணும்...'

'நானும் லியாவும் சேர்ந்து செஞ்ச உருளைக்கிழங்கு பொறியலை சாப்பிடவே இல்லை சார்...'

'இந்தச் செக்கை எடுத்துக்கிட்டு பேங்குக்குப் போயிடாதேடான்னு சொல்றீங்க...'

'நான் எதுக்காக இந்த முடிவுக்கு வந்தேன்னு ஓரளவுக்குச் சொல்லிட்டேன்...'

'ஆமா நண்பர்கள் இறுதிப் போட்டிக்கு வரணும்ன்னு முடிவெடுத்துட்டு அவங்களையே நாமினேட் செய்ய முடியாது சார்... அதான் செய்யலை...'

'வெளியில எல்லாமே சரியா இருக்கு...'

'முடி வெட்டுனேப்பா... அதான்....'

'பிக்பாஸ் எபிசோடெல்லாம் திருப்பிப் பார்க்க மாட்டேன்... எப்பவும் போல உங்களோட நட்பாயிருப்பேன்...'

'சின்னச் சின்னதா பார்த்தேன்... சாண்டிண்ணே நீ சூப்பரு... வெளியே வா...'

'சீரியலும் ஒரு ரியாலிட்டி சீரியலும் ஒரே மாதிரியானது இல்லைன்னு புரிஞ்சிக்கிட்டேன்...'

'எனக்கான இடம் ஒரளவு உறுதியாயிருக்கும் போது மற்றவங்களுக்கு அவங்களுக்கான இடத்தைக் கொடுக்கணுன்னு முடிவு பண்ணினேன்...'

'லியா... டேக் கேர்... நல்லா விளையாடுடா... இன்னும் ஒரு வாரம்தாம்ப்பா இருக்கு...'

'லியா... உங்களுக்காக வெளியில காத்திருப்பேன்டா...'

'LIYA I'M WAITING'

Related image

'பொட்டு மேல பொட்டு வைச்சு...' மாதிரி சட்டை மேல சட்டை போட்டு ஆண்டவர் தரிசனமே... உறவு முறைகளைப் பற்றி சின்னதாய் ஒரு பேச்சு... அக்கா அமெரிக்கா போனபோது கல்கத்தாவில் இருந்து போனில் கூப்பிட்டப்போ அழுது கதறிய கதை சொல்லி, லாஸ்லியாவுக்கு மற்றவர்கள் எப்படி ஆறுதலாய் இருந்தார்கள் என்பதைச் சொல்லி, வெள்ளிக்கிழமையைப் பாருங்கன்னு சொல்லிட்டு, உள்ளாற பொயிட்டாரு...

பாவம் அவருந்தான் என்ன பண்ணுவாரு... எதுவுமில்லாத டீக்கடையில எத்தனைநாள்தான் தண்ணியை மட்டும் வச்சி ஆத்திக்கிட்டு இருப்பாரு... ஒரு பரபரப்பான போட்டியில்லை... போராட்டங்கள் இல்லை... சிக்கன் தின்னியளா... பிரியாணி தின்னியளா... ரொம்ப நேரம் அழுவீங்கன்னு பார்த்தா உருளைக்கிழங்கைத் தின்னுக்கிட்டு இருக்கீங்க... தூங்கி எந்திரிச்சியளா... பாட்டுப் பாடுனியளா... பல் தேய்ச்சீங்களா... படுத்து உறங்கினீங்களான்னா கேக்க முடியும்.

வெள்ளிக்கிழமையை பாருங்கன்னு வெசனத்தோட சொல்லிட்டு வெள்ளையடிக்கப் போயிட்டார்.

97ம் நாள் காலை திருப்பள்ளியெழுச்சியாய்...
'ச்சல்மார்... 
பத்தும்மணி வாக்குல பச்சயப்பாஸ் ரோட்டுல 
ஷாட்டு ஸ்கேட்டுப்போ ஜென்னீஃபர் 
அடிதடி நடக்கல வெட்டுக்குத்து விழுகுல 
அழகுல பார்க்குறா ஜென்னீஃபர் 
செல்லமே தங்கமே மெல்லமா பாரடி 
செத்துக்கித்துப் போவேன்டி 
நீ சரிசரின்னும் ஒரு முறை சொன்னா 
சத்தியம்மா பொழைப்பேன்டி 
அப்பப்போ ஹிப்புல்ல சம்மரும் வின்டர்தான் 
வென் டிட் லைக் மை கம் பேபி 
ச்சல்மார் ...'

அப்படிங்கிற தேவி படப்பாடல், எல்லாரும் ஆடினாங்க.. என்னய்யா எல்லாரும் எல்லாரும்ன்னு.. இருக்க அஞ்சு பேரும் ஆடுனாங்கன்னு சொல்லித்தொலைய வேண்டியதுதானே.

மத்தியானம் வரைக்கும் என்ன பண்ணுனானுங்கன்னு தெரியாது... முதல் நாள் கோல் போட்டு கோழி செயிச்சவங்களுக்கு பார்சல் வந்திருந்தது... ஷெரின் தூங்கிக் கொண்டிருக்க, அவரை எழுப்பி தர்ஷன் இப்படித் தொட்டு இப்படிச் சாப்பிடணும்ன்னு ஊட்டிவிட்டான். எல்லாரும் சாப்பாட்டில் கவனமாய் இருக்க, லாஸ்லியா மட்டும் ஏய் பிக்பாஸ் உன்னோட போட்டோ அனுப்புய்யான்னு கேமராக்கிட்ட போயி கேட்டாங்க.

கொஞ்ச நேரத்துல பிக்பாஸ் போட்டோ அனுப்ப, எல்லாருக்கும் ஆர்வம்... வேகவேகமாப் பிரிச்சானுங்க... விஷாலை இருட்டுக்குள்ள நிப்பாட்டி எடுத்த மாதிரி ஒரு போட்டோ... பிக்பாஸ் முகத்தைக் காட்டமாட்டாராம்... எல்லாரும் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க... ஆஹா... நூடுல்ஸ்ன்னு அதிலும் சாப்பாட்டைத் தேடினான் தர்ஷன். என்ன பிக்கி இப்படிப் பண்ணிட்டே... எம்புட்டு ஆவலா இருந்தேன்னு லாஸ்லியா சோகமாயிட்டாங்க.

ஷெரினுக்கு ஸ்பா ஆட்கள் வந்து விவசாயத்துக்கு வயலைத் தயார் பண்ற மாதிரி பண்ணிட்டுப் போனாங்க... நாய்க்குட்டி மாதிரி முடியை மாத்தியிருக்கானுங்கன்னு தர்ஷன் கிண்டல் பண்ணினான். ஸ்பாவுக்கு முன்னால பார்க்க அழகாயிருந்தார் ஷெரின்... ஸ்பாவுக்கு அப்பறம்... 'ப்ப்ப்பா'ன்னு இருந்துச்சு.

ஏர்டெல் எக்ஸ்டிரீமுக்காக ஒரு டாஸ்க்...

தர்ஷனும் லாஸ்லியாவும் ஒரு கோஷ்டி... சாண்டியும் ஷெரினும் ஒரு கோஷ்டி... முகன் நடுவர்... தர்ஷன் நடித்துக்காட்ட லாஸ்லியா கண்டுபிடிக்கணும். சூது கவ்வும்க்கு எதுக்குடா அப்படி ஒரு நடிப்பு... லாஸ்லியாவால கண்டு பிடிக்க முடியலை... சாண்டி நடித்துக் காட்டியதில் தமிழில் இதுக்கு என்ன என்பதில் ஏற்பட்ட சிக்கலால் தடுமாறித் தடுமாறி ஷெரின் கண்டுபிடித்தார்... பாவம் ரஜினி முருகன்... படாதபாடு பட்டார். சாண்டி அணி வெற்றி... இருவருக்கும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

லவிஸ்டா இன்ஸ்டண்ட் காபிக்கான டாஸ்க்... 

காபி மக்குல மறக்க முடியாதவங்களுக்கு எழுதுங்கன்னு சொன்னாங்க... ஒவ்வொருத்தரும் தங்களோட வாழ்வில் பின்னிருந்து முன்நிறுத்தியவர்களைப் பற்றி எழுதி வாசித்தார்கள். 

இறுதி நாட்களைச் செமை ஜாலியாக் கழிக்கிறானுங்க.. சிநேகனெல்லாம் பாவம் வெயில்ல போட்டுக் கொன்னெடுத்தானுங்க... இவனுகளுக்கு நேரா நேரத்துக்குத் திங்க அனுப்பிட்டு... தூங்கினாலும் எழுப்பாம... சும்மாவே சுத்திவர வச்சிருக்கானுங்க... எல்லாப்பயலும் ஒரு சுத்து பெருத்துட்டானுங்க... தீனி அப்படி.

லாஸ்லியா... கடந்த இரண்டு நாட்களாக... அதாவது கவின் போனதுக்குப் பின் ஆரம்ப நாட்களில் இருந்த லாஸ்லியாவாக மாறியிருக்கிறார்... அந்த முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி... துள்ளலாட்டம் எல்லாமே க.போவுக்கு அப்புறம்தான்... கவின் தன்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டார்ன்னு சொன்னாலும் அவனைப் பொறுத்தவரை கைவிட்டுப் போயிடக் கூடாதென அழுத்திப் பிடித்து வைத்திருந்தான்... சோசியக்காரனின் கூண்டுக்குள் இருக்கும் கிளியின் நிலையில்தான் இருந்தார். எதிலும் அவனை மீறி கலந்து கொள்ள முடியாமல் தவித்தார். இப்போது பனை மரப்பொந்தில் இருக்கும் சுதந்திரக் கிளிபோல் பறந்து, பாடித் திரிகிறார்... நாதாரிப்பயலே கவினு... நீ நல்லவனெல்லாம் இல்லைடா.. நயவஞ்சகன்.

ஆண்டவர் வந்தார்... அகம் டிவி வழி அகத்துக்குள் போனார். கவினைத் தேடினார்... என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என்றார்... அப்புறம் வெளிய வாங்க உங்களுக்கெல்லாம் எடப்பாடி மாதிரி எதிர்பாராத வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னார். போன சீசன் பெண்கள் எல்லாம் பட புரோமோசனுக்காக வந்தது விஜய் டிவி வருமானத்துக்காகத்தான் என்பதை மறைத்து அது தப்பில்லை... அவங்க மாதிரி நீங்க வருவீங்கன்னு சொன்னார். இதுவரைக்கு இதையெல்லாம் சொன்னதில்லை... வெளியே வந்து பாருங்க... அப்பப் புரியும்ன்னார்.. சாண்டியை நகைச்சுவை நடிகனாவாய்ன்னு சொல்லாமல் சொன்னார்... லாஸ்லியாவுக்கு ரவிக்குமார் வாய்ப்புக் கொடுப்பார்ன்னு சொல்லாமல் சொன்னார்.... கடைசி வரைக்கும் ரவிக்குமாருக்கு யார் வாய்ப்புக் கொடுப்பான்னு சொல்லவேயில்லை.

அப்பறம் அகம் டிவியை ஆப் பண்ணிட்டு மேக்கப் போடப் பொயிட்டார்.

ஏன் போனேன்...?

எதுக்குப் போனேன்...?

அப்படின்னு கவின்தானே சொல்லணும்ன்னு சொல்லி, கவினை மேடைக்கு அழைத்தார். வட்டிக்குக் கொடுப்பவன் கையை மடிச்சி விடுற மாதிரி... தமிழக முதல்வர்கள் மடிச்சி விடுற மாதிரி... மளிகைக் கடை அண்ணாச்சி மடிச்சி விடுற மாதிரி... சட்டையை ஏத்தி மடிச்சிவிட்டு மேடையேறினான் கவின்.

இதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க... மைக் கொடுக்கப்பட்டது... பேசுங்க கவின்னு சொன்னதும் கன்னியாகுமரியில ஆரம்பிச்சி... காளையார்கோவில் வந்து... மதுரை போயி... மன்னார்குடியைப் பிடித்து.... தஞ்சாவூருக்குத் தாவி.... திருச்சியில திரும்பி... வேலூருக்கு வேகமெடுத்து... கோயம்புத்தூருல கொண்டாடி... பழனியில படுத்திருந்து... திருப்பூருக்குள்ள போயி.... கும்பகோணத்துல குளிச்சி... வேதாரண்யத்துல வெளிய வந்து... காஞ்சிபுரத்துல கஞ்சி குடிச்சி... பாண்டிச்சேரியில பல்லாக்குழி ஆடி... சென்னையில செல்பி எடுத்து அப்படியே மறுபடியும் கன்னியாகுமரி நோக்கிப் பயணப்பட்டான்.

கமலுக்கு கண்ணைக் கட்டிருச்சு... கமல் சார்.... உள்ள போயி கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க... முடிஞ்சா தூங்குங்க... அவரு முடிச்சதும் எழுப்புறோம்ன்னு கமலை பிக்பாஸ் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.

அடுத்து வீட்டுக்குள்ள போவோம் சார் வீட்டம்மணியைப் பார்க்க அப்படின்னு கவின் காலைத் தூக்கிக்கிட்டு நிக்க, அகம் டிவி வழியே போவோம்ன்னு கமல் சொல்லிட்டார். கவினைப் பார்த்ததும் எலும்பைப் பார்த்த எங்கவீட்டு ரோஸி மாதிரி லாஸ்லியா முகமெல்லாம் சந்தோஷ அலை... 
'அப்பனாத்தா பார்த்தாலென்ன... 
அக்கா தங்கை பார்த்தாலென்ன... 
அத்தான் உன்னைப் பார்க்கயிலே... 
போன உயிரும் வந்ததய்யா...' 
என்கிற மனநிலையில் சந்தோஷமா உக்கார்ந்திருந்துச்சு... முகமெல்லாம் பிச்சிப்பூ மாதிரி சிரிப்புச் சிதறிக்கிடந்தது.

கமல் பக்கத்துல நிக்கிறாரா...? அந்தாளு பாட்டுக்க நிக்கட்டும்... இந்த மேடை எனக்கானது... நான் பேசிக்கிட்டே இருப்பேன்னு கவின் மறுபடியும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை போய் அப்புறம் காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வந்து... மறுபடியும் கன்னியாகுமரியில இருந்து காஷ்மீர் போய்... மறுக்கா மறுக்கா போய் வந்துக்கிட்டு இருந்தான்... கமல் மறுக்க முடியாமல் மறுதலிச்சிக்கிட்டு நின்னார். இந்தப் பயணத்தில் பேசியவையே ஆரம்ப வரிகள்...

கவினுக்கிட்ட இருக்க திறமையின்னுதான் அதைச் சொல்லணும்... எதிராளி பேசவேண்டியதையும் தானே பேசி, அதுக்குப் பதிலும் சொல்வதை திறமை என்று சொல்லாமல் வேறென்ன சொல்லமுடியும். பேசிக்கிட்டே இருந்தான்... கமல் கிட்டவே இருந்தார் பேசவேயில்லை... 

'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்... '

அப்படின்னு கவினும் லாஸ்லியாவும் டூயட்டே பாடிக் கொண்டிருந்தார்கள். கமலஹாசன் மீண்டும் துயில் கொள்ளப் போகலாமான்னு யோசிச்சிக்கிட்டு நின்னாரு.

பேட்டரி தீர்ந்த ரேடியோ மாதிரி கவின் மெல்ல... கமல் இங்கயே நிற்கிறாரான்னு யோசிச்சபடி சப்தத்தைக் குறைக்க, அப்பாடா... ஆட்டத்தின் இறுதிப் பந்தாச்சும் நமக்கு வந்துச்சேன்னு தோணியுடன் விளையாடும் ஜடேஜா மாதிரி மனசுக்குள்ள நினைச்சி சிரிச்சிக்கிட்டார் கமல்.

இதை விட்டா இப்ப முடிக்கமாட்டான்... கெடைச்ச கேப்புல கெடா வெட்டிடலாம்ன்னு யோவ் பிக்பாஸ் அகம் டிவியை அமத்துய்யான்னு சொன்னா... அந்தாளு லாஸ்லியாவை முழுத் திரையிலும் கொண்டு வந்து வைத்துவிட்டு, 
'காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்...' 

என அவர் ஒரு பக்கம் காதல் வளர்த்துக் கொண்டிருந்தார். யோவ் கட் பண்ணுய்யான்னா நீ என்னடான்னா அந்தப்பக்கமா ஒரு கதையெழுதிக்கிட்டு இருக்கேன்னு கட் பண்ணச் சொன்னார் கமல்.

வீட்டுல கோழி வளர்த்தா எத்தனை கோழியிருந்தாலும் அதிலொரு கோழி எல்லாத்தையும் விரட்டிட்டு இரையைத் தின்னும்.. சேவல்கள் கூட அருகே வரப்பயப்படும். மாடு வளர்த்தீங்கன்னா அதுல ஒரு மாடு நாட்டாமையா இருக்கும்... யார்க்கிட்ட வைக்கோல் கிடந்தாலும் எட்டித் தின்னும்... ஆடு வளர்த்தீங்கன்னா அதுல ஒரு ஆடு எல்லா ஆட்டையும் மிரட்டி வச்சிருக்கும்... அப்படித்தான் கவின்.... எத்தனை பேர் இருந்தாலும் எல்லாரையும் ஓராமத் தள்ளிவிட்டுட்டு ஒய்யாரமா மேடையில் வீற்றிருப்பான்.

'நீ உள்ள இருக்கும் போதுதான் யாருக்கும் புரியாமப் பேசினே... வெளியில போயும் அப்படியே பேசுறியே... ஈஈஈஈஈஈ' அப்படின்னு லாஸ்லியா சொன்னுச்சு. புரியாமப் பேசியும் சிகப்புக் கதவுக்கிட்ட மணிக்கணக்குல கெடந்திருக்கியன்னா வேற லெவல்தான் போங்க.

அதென்ன ஒருக்கா நீங்கன்றிங்கோ... அப்பால நீன்றிங்கோ... மறுக்கா வாடான்றீங்கோ என கமல் கலாய்த்ததும் அவங்க வீட்டில பாப்பாங்கதானே சார்ன்னு கவின் சொன்னதும் ஓ...ஆஆஆ... அதுன்னு கமல் சொன்னது செம. அதேபோல் என்ன பயந்து பயந்து பேசுறீங்க... நான் என்ன அப்பாவான்னு சொன்னதும் செம.

கமலைப் பொறுத்தவரை கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு எப்பவும் அதிக ஆதரவு காட்டுபவர்தான். கவினை பெரும் தியாகி என்ற நிலையில் நேற்று உயர்த்தினார்... அந்த வீட்டுக்குள் அவன் பண்ணிய தப்பெல்லாம் மறைத்து தியாகியாக்கிவிட்டார். அதேபோல் லாஸ்லியாவை அழுது தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்குப் பாராட்டினார். கவின் - லாஸ்லியா காதலுக்கு உரமாய், உயிராய் இருந்தார்.

ஒரு வழியாக கவினிடமிருந்து மைக்கைப் பறித்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

அப்புறம் முகன் தவிர நால்வரில் யாரைக் காப்பாற்றலாம்ன்னு சொன்னதும் தர்ஷனைச் சொன்னாங்க, சாண்டி தீவிரமா நின்னாரு... நீங்க காப்பாத்தப்படுகிறீர்கள் என்றதும் தர்ஷனை மறந்து லவ் யூ கண்ணம்மான்னு பொண்டாட்டிக்குப் பொயிட்டார். அப்படியே ஓட்டுப் போட்ட மக்களுக்கும் ஒரு கும்பிடைப் போட்டு வைத்தார். இறுதிப் போட்டிக்கு ரெண்டாவதாய் சாண்டி நுழைந்திருக்கிறார். 

என்னைக் காப்பாத்து... என்னைக் காப்பாத்துன்னு சொன்ன வெண்ணை... இறுதி போட்டிக்குப் பொயிட்டேன்னு சொன்னதும் என்னை இறக்கி விட்டுட்டியேடான்னு தர்ஷன் அமர்ந்திருந்தான். கவினுக்கு விழும் ஓட்டெல்லாம் இனி நமக்குத்தான்.... நாம நாட்டு மக்களுக்கு ஏதோ நல்லது செய்திருக்கிறோம் என இறுமாப்புடன் இருந்தார் லாஸ்லியா. நம்மளைத்தான் அனுப்புவானுங்க போலன்னு ஷெரின் சோகமாய் இருந்தார்.

நாளைக்குப் பார்ப்போம்ன்னு கமல் காரைக் கிளப்பிட்டார்....

திங்கிறதுக்கு வந்தாச்சு... தின்னானுங்க... கவின் சிலிம் ஆயிட்டானாம்... அழகாயிட்டானாம்.... போயி ரெண்டுநாள் முழுசா முடியலை.... இவனுக பேசுறதெல்லாம் கேக்க முடியலை... லாஸ்லியா முகத்தில் ஆயிரம் மின்னல்கள்...
'அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே...'
அப்படின்னு மனசுக்குள்ள பாடிமகிழ்ந்தார்.

இன்னைக்கு தர்ஷன் என்கிறார்கள்... அப்படியென்றால் கவினுடன் பிக்பாஸ் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி லாஸ்லியாவை முன்னிறுத்த எடுக்கும் முயற்சியாய் இருக்கும் என்றே தோன்றுகிறது.

இம்முறை மக்கள் ஓட்டெனச் சொல்லி நம்மளை முட்டாளாக்கி அவர்கள் சிறப்பாக நடை போடுகிறார்கள்... வரிசையாய் சென்றவர்களில் பலர் பிக்பாஸ் முடிவால் வெளியேற்றப்பட்டவர்களே ஒழியா மக்கள் ஓட்டுமில்லை... மண்ணாங்கட்டியுமில்லை...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

நிலாமதி சொன்னது…

சரியாய் சொன்னீர்கள். கவினின் அனுதாப அலை வீசியதால் லெஸ்லியாவுக்கு வாக்கு அதிகமாயிடுச்சு
அதனால் தர்ஷன் ...வெளி யில் வர வேண்டியதாயிற்று ...லாஸ் ஒரு பெண்ணு தனியா என்பதால் ஷேரினை வைத்து இருக்கிறார்கள். அடுத்த வா ரம் அவரும் வெளியேறி விடுவார் ...அநேகம் லாஸ் அல்லது முகேனுக்கு பரிசு கிடைக்கலாம் என்பது என் கருத்து

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் உண்மைதான்... இருப்பினும் லாஸியாவைக் காப்பாற்ற, ஷெரினை உள் நிறுத்த, தர்ஷன் பலியாடு ஆனது வேதனை.. லாஸ்லியாவுக்கே கொடுப்பார்கள்.. சாண்டியும் முகனும் இறுதியில் கழுத்தறுக்கப்படுவார்கள்.

எல்லாம் பணமும் டிஆர்பியும் படுத்தும் பாடு...

பிக்பாஸ் மட்டுமின்றி இதன் பின்னே கவின் - லாஸ்லியாவை வைத்து நடத்த வேண்டிய அறுவடை அதிகமிருக்கு.