மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

வாராரு... வாராரு... அழகர் வாராரு...

ன்று அழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு... நான்கு வருடத்துக்கு முன் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்குப் பயணமாவதை கோவிலுக்கே சென்று பார்த்து, தல்லாகுளத்தில் எதிர்சேவையில் மீண்டும் அழகரின அழகைப்பருகி, வைகையில் இறங்கும் முன் ஒரு முறை தரிசித்து, மாலை அண்ணாநகர் பக்கமாய் போய் மீண்டும் அவரைச் சந்தித்து... கோவிலில் மட்டுமே சற்றே தள்ளி நின்று பார்த்தோம்... மற்ற இடங்களில் எல்லாம் அவரின் பல்லக்கை, தங்கக் குதிரை வாகனத்தை தொட்டு வணங்கி, மிக அருகில் அவரைக் காணும் வாய்ப்பு அமைந்தது.


இத்தகு வாய்ப்பு அதற்கு முன்னும் பின்னும் கூட அமையவில்லை... இனி அமையுமா தெரியாது. எனக்கு எப்பவும் முருகன் மீது தீராக் காதல் என்று சொல்லலாம்... அழகன் முருகன் என்றால் என்னமோ தெரியவில்லை... அப்படி ஒரு நேசம்... ஒரு நாளைக்கு ஆயிரம் முறைக்கு மேல் அவனைக் கூப்பிட்டு விடுவேன். முருகன் மீதான காதலால் பழனிக்கு ஆறுமுறையும் திருப்பரங்குன்றத்துக்கு ஒரு முறையும் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். முருகன் மீதான காதலைப் போல்தான் எங்கள் குலதெய்வமான கள்ளழகர் மீதும் தீராக்காதல்... அதுவும் அந்த தங்கக் குதிரை வாகனத்தில் அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் எப்பவும் பரவசம்.

'வாராரு வாராரு அழகர் வாராரு...' பாடலைக் கேட்கும் போது அத்தனை பரவசம் மனசுக்குள்... இன்று காலை அழகர் வைகையில் இறங்கும் வைபவம்... கடந்த இரண்டாண்டுகளாக கொரோனாவின் பிடிக்குள் உலகமே சிக்கித் தவிக்கும் நிலையில் எந்த ஒரு திருவிழாவுக்கும் அரசு அனுமதி அளிக்க முடியாத சூழலில்... சென்ற வருடம் கோவிலில் சிறியதாய் ஒரு நிகழ்ச்சி நடத்தி முடித்துக் கொண்டார்கள்... இந்த முறை கோவில் வளாகத்துக்குள்ளயே வைகை போல் அமைத்து அதில் அழகரை இறங்க வைத்தார்கள்.

காலையில் நேரடி ஒளிபரப்பில் அழகர் ஆற்றில் இறங்கச் செல்லும் வரை பார்த்துவிட்டு அலுவலகத்து நேரமாகிவிட்டதென கிளம்பிப் போய்விட்டேன்... விடிந்தும் விடியாமலும் லட்சோப லட்சம் மக்களுக்கு மத்தியில் தண்ணியைப் பீச்சியடிக்க, கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க, வைகையில் இறங்கும் கள்ளழகர் இன்று ஒன்பது மணிக்கு மேல்தான் கோவிலுக்குள் இருந்து மெல்லக் கிளம்பி, பதினெட்டாம் படிக் கருப்பனிடம் உத்தரவு பெற்று (இந்த உத்தரவை மதுரைக்குக் கிளம்பும் போது பெறுவார்... கோவில் சாவிகளை கருப்பரிடம் ஒப்படைத்துவிட்டு வருவார் என்று சொல்வார்கள்) வைகை போல் வடிவமைக்கப்பட்டிருந்த திடீர் ஆற்றை நோக்கி (அதில் தாமரைகள் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள்) மெல்லச் சென்றார்.

அழகர் கோவில் யானை ஆண்டாள் எப்போதும் அழகர் வைகையில் இறங்குவதைக் காண வருவதில்லை என்று நினைக்கிறேன். கோவிலை விட்டு வெளியில் வராது என்றும் நினைக்கிறேன். இப்போதுதான் வைகையையே கோவிலுக்குள் கொண்டு வந்து விட்டார்களே... சின்னப்புள்ளையான, விளையாட்டுப் பிள்ளையான ஆண்டாள் அழகர் கிளம்பும் முன் கோவில் வாசலில் நின்று பிளிறிக் கொண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டும் மிகவும் மகிழ்வாக அழகர் ஆற்றில் இறங்குவதை நானும் காணப் போகிறேன் என்ற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது பார்க்க அழகாக இருந்தது.

ஆஞ்சநேயரின் கொடி முன்னே போக, பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் மகிழ்வாய் சிரித்தபடி கள்ளழகர் பயணித்த அந்தக் காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அழகன் என்று சொல்வது மிகையல்ல... அவன் அழகன்தான்... ரசிக்க வைக்கும் அழகு... அதுவும் குதிரையில் பவனி வரும் போது அவனின் அழகு ஆயிரம் மடங்கு அதிகம்தான்... கூடவே அந்தக் குண்டு ஐயரும்... அழகனுடன் பயணித்து அவனுடன் வைகையில் இறங்கி... இந்தக் கொடுப்பினை எல்லாம் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை... அத்தனை குலுக்களிலும் அழகனைப் பிடித்தபடி அவரும் அசையாமல் நின்றார் லேசான புன்னகையுடன்.


அழகர் கோவிலுக்கு பயணப்படுவதென்பது பள்ளியில் படிக்கும் போது வருடத்துக்கு ஒருமுறை வாய்ப்பது என்பதே அரிது. ஏனென்றால் வசதியற்ற குடும்பச் சூழல்... எங்கள் ஊரில் இருந்து அழகர் கோவில் சென்று வர வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்ல...  வருடம் ஒருமுறை அக்காள்களின் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டு வேன் எடுத்துப் பயணிப்போம்... அப்போதே இரண்டாயிரமாவது தேவைப்படும். அந்தச் சமயத்தில் இதெல்லாம் மிகப்பெரிய செலவுதான் எங்களுக்கு. அதனால் வீட்டில் இருந்தே அழகரைக் கும்பிட்டுக் கொள்வோம். வைகையில் எழுந்தருளுவதை எல்லாம் அடுத்த நாள் பேப்பரிலோ அல்லது செய்தியிலோ... 
பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் தொலைக்காட்சி செய்தி என்பது நான் பத்தாவது படிக்கும் போதுதான் வாய்த்தது. 

அழகர் கோவில் வந்து முதலில் கருப்பரைக் கும்பிட்டு, அதன் பின் மொட்டை அடிப்பவர்களுக்கு அடித்து, மலையில் ஏறி தீர்த்தம் ஆடி, ராக்கச்சியைக் கும்பிட்டு, பழமுதிர்சோலையில் முருகனைத் தரிசித்து, கீழிறங்கி சாப்பிட்டு கோவிலுக்குள் போய் அழகர், ஆண்டாள் என எல்லாரையும் கும்பிட்டு , மீண்டும் கருப்பரிடம் வந்து குடும்பச் சுமைகளை எல்லாம் அவனிடத்தில் இறக்கி வைத்துவிட்டு அண்ணனைக் கும்பிட்டால் தங்கையைக் கும்பிடாமல் திரும்பக்கூடாது என்ற வழிவழியான வழிபாட்டு முறைக்கு உட்பட்டு மீனாட்சியம்மன் கோவில் செல்லும் போது பனிரெண்டு மணிக்கு மேலாகிவிடும். மாலை வரை மண்டபக் கடைகளிலும் புதுமண்டபத்திலும் சுற்றிவிட்டு மாலை சாமி கும்பிட்டு ஊர் போய்ச் சேர இரவு ஆகிவிடும். 

அழகர் கோவில் அப்போது ஆன செலவுக்கும் இப்போது ஆகும் செலவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது... அந்தளவுக்கு எல்லாத்துக்கு பணமாக்கி வைத்திருக்கிறார்கள். பழனியில் பணம் பறிப்பது இதைவிடக் கூடுதல் என்றாலும் அழகர் கோவிலில் நூபுரகங்கையில் எல்லாம் நேரே போய் குளித்த காலம்  போய், சாதாரண வரிசையில் போக இவ்வளவு... சிறப்பு வரிசையில் போக இவ்வளவு என ஆக்கி வைத்ததிருக்கிறார்கள்... ராக்கச்சியைக் கும்பிட்டு நகர்ந்தால் உங்க வீட்டுக்கு கட்டுக் கட்டுறோம் 500 கொடுங்கள் என விபூதி தட்டோடு நம்மைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள்... எல்லாமே காசாகிப் போய்விட்டது... கடவுளைக் காணவும் காசுதான்.

மனைவியின் ஊர் மதுரை என்பதாலும், அவர்களின் குலதெய்வமும் அவரே என்பதாலும் திருமணத்துக்குப் பின் அழகரின் தரிசனம் அடிக்கடி கிடைத்தது. தேவகோட்டையில் இருந்து வந்தால் அழகரைக் கும்பிட்டு மீனாட்சியைக் கும்பிட்டுச் செல்லும் நடைமுறையைக் கடைபிடிப்பதும், மதுரையில் இருந்து அழகர் கோவிலுக்குப் போனால் அந்த நடைமுறையை மாற்றிப் போட்டு அன்று மாலையோ அல்லது மறுநாளோ மீனாட்சியைப் போய்ப் பார்த்து 'ஹாய்' சொல்லிவிட்டு வருவதுமாக மாறிவிட்டேன். மாமாவுக்கு இரண்டு கோவிலிலும் தெரிந்த ஆட்கள் இருப்பதால் எத்தனை கூட்டம் இருந்தாலும் நேரடியான தரிசனம் கிடைக்கும். அதுவும் அழகர் கோவில் போனால் நம்மோடு பயணித்து சாமி கும்பிட்டு வரும்வரை கூடவே வருவார்கள்... அந்தளவுக்கு பழக்கம் அவருக்கு. அதேபோல் பாண்டியய்யா கோவிலுக்குப் போனாலும் அண்ணன் குடும்பம் என அத்தனை மரியாதை இருக்கும்... மனுசர் பழகும் விதம் அப்படி.

அழகர் ஆற்றில் இறங்கும் அன்று எங்கள் வீட்டில் தட்டப்பயறும் மாங்காயும்தான் வைக்க வேண்டும் என்ற வழக்கத்தை அம்மா எப்போதும் கடைப்பிடிப்பார். மனைவி வீட்டுப் பக்கமோ அன்றுதான் தடபுடலான விருந்தாக இருக்கும்... அது மதுரைப் பாணி... அதேபோல் நாங்கள் மொட்டை போடுவது கோவிலில் என்றால் அவர்களோ அழகர் வைகையில் இறங்கும் இடத்தில்தான் மொட்டை போடுவார்கள்... எனவே ஸ்ருதிக்கும் விஷாலுக்கும் முதல் மொட்டை கோவிலில்... அடுத்த மொட்டை வைகையில்.

அப்போதெல்லாம் அதாவது பள்ளியில் படிக்கும் காலத்தில் உண்டியலில் ஒருவருடம் இட்டு வைக்கும் பணம், வீட்டில் இருக்கும் செம்மறி ஆட்டில் ஒன்று அழகர் கோவில் பதினெட்டாம்படியானுக்கு என்று வளர்த்து விற்ற பணம் என எல்லாத்தையும் வைத்துப் பயணப்பட்டு கோவில் வரை வருவதற்கான செலவு போக மீதத்தை உண்டியலில் போட்டுவிட்டுப் போகலாம் என்ற எங்கள் பாட்டனார்களின் வழியைத்தான் கடைபிடித்தோம்... பின்னே மதுரைக்குப் பயணப்பட ஏழு பிள்ளைகளைக் கொண்ட ஒரு சராசரி விவசாயக் குடும்பத்தில் வேறு எப்படிப் பணம் புரட்டமுடியும்... குலதெய்வத்தை வருடம் ஒருமுறையாவது கும்பிட வேண்டாமா..? இப்போது அவரவர் குடும்பம் தனித்தனியாய் பயணித்து தரிசித்து விடுகிறோம்... அதுவும் நமக்கு மதுரையே மாமியார் வீடு என்று ஆனதால் அழகனின் தரிசனத்துக்குக் குறைவில்லை.

கொரோனாவின் கோரத்தாண்டவம் விரைவில் ஒழிய அவன் அருள் புரியட்டும்... அடுத்த வருடமாவது அழகனின் பாதம் வைகையில் படுவதை நாம் காணும் பாக்கியம் கிடைக்கட்டும்.

'வாராரு... வாராரு அழகர் வாராரு...' என்ற பாடல் வரிகள் மதுரை வீதியெங்கும் ஒலிக்கட்டும்.

கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷம் வைகை எங்கும் பரவி விண்ணைத் தொடட்டும்.
-'பரிவை' சே,குமார்  

6 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

கோலாகலமான எங்களுடைய அந்த மதுரை சித்திரைத் திருவிழா நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடுத்த வருடமாவது நல்லபடியாக நடக்க வேண்டும்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

தல்லாகுளத்தில் எதிர்சேவை, மீனாட்சி திருக்கல்யாணம் இரண்டுக்கும் நட்பு குடும்பங்களுடன் சென்று கூட்டத்தோடுக் கூட்டமாகக் காத்திருந்து என்று பல இனிய நினைவுகள். திருக்கல்யாணத்திற்கு அதிகாலை 3 மணிக்கு எழுந்து கிளம்பிச் செல்வோம்.
அழகர் கோயிலைப் பார்த்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
அங்கும் பண வரிசைகள் வந்து விட்டனவா?!
இனிய உங்கள் நினைவுகளைப் பகிர்ந்தது அருமை.
எல்லாம் விரைவில் சரியாகட்டும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரசித்து ரசித்து விவரித்திருக்கிறீர்கள் குமார். மதுரை நினைவுகள்..எனக்கு வந்தது.

இப்போது மதுரை ரொம்பவே மாறியிருக்கிறது.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகர் கோயிலும் அவர் தங்கை கோயிலும் அத்தனை இஷ்டம் எனக்கு. எத்தனையோ வருடங்களுக்கு முன் சென்றது. அப்பொது நூபுர கங்கைக்கு எல்லாம் பைசா வசூல் இல்லாத காலம். இப்போது இப்படி வணிகமானது மனதிற்கு வேதனை.

அந்த இயற்கை சூழ் கோயில் மேலே சென்று நடந்திருக்கிறோம் 30 வருடங்களுக்கு முன். மலையை அப்படி ரசித்தேன்.

ரொம்ப ரசனையோடு வர்ணித்திருக்கீங்க குமார்!! உங்கள் நாவலில் கூட வருமே!

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்...
இங்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.