மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 2 ஜூலை, 2023

மனசு பேசுகிறது : வித்தியாசமான முதல் விமர்சனத்தைப் பெற்ற 'வாத்தியார்'

சில நிகழ்வுகள் எப்போதும் இனிமையானவைதான். அப்படியானதொரு நிறைவான தினமாய், என் எழுத்துப் பயணத்தில் மறக்க முடியாத நாளாய் இன்றைய தினம் அமைந்தது.

செவ்வாய்க்கிழமை மாலை ராஜாராமுடனான சந்திப்பு முடிந்து உறவினர் வீட்டுக்குப் போய் விட்டு இரவு 1.30 மணிக்கு அறைக்குத் திரும்பியதும் சகோதரர் சதீஷிடமிருந்து மூன்று, நான்கு குறுஞ்செய்திகள் வந்தன. இந்த நேரத்தில் யார் அனுப்பியிருக்கா எனப் பார்த்தால், அதில் 'வியாழன் காலை சந்திக்க முடியுமா..? நீங்க சொன்னா நான் பால்கரசு, இராஜாராமிடம் பேசுகிறேன்' என்பதே பிரதானச் செய்தியாய் இருந்தது.
சந்திப்பை உறுதி செய்த போது 'வாத்தியார் புத்தகத்தை மூன்றே நாளில் வாசித்து முடித்து விட்டேன். அதைப் பற்றி நாம் பேசணும்' என்றார். அதன்படி வியாழன் காலை நாங்கள் மூவரும் மதினா சயீதுக்குப் போனபோது மாலின் பின்பக்க வாசலில் சதீஷ் எங்களுக்காகக் காத்திருந்தார். நல விசாரிப்புக்களுக்குப் பின் மாலுக்குள் போனதும் காலிகட் ரெஸ்ட்டாரண்டில் ஒரு டீயை வாங்கிக் கொண்டு அமர்ந்தோம்.
வாத்தியாரை வாசித்தபோது ஒவ்வொரு கதையையும் என் வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்துக் கொள்ள முடிந்தது. எனது கணிப்பொறியுடன் இந்தப் புத்தகமும் என்னோடு எல்லா இடத்துக்கும் பயணித்தது. மூன்றே நாளில் வாசித்து விட்டு அதிலிருந்து மீளாமல் இருந்தவனை என் மனைவி என்ன ஒரு மாதிரி இருக்கீங்க எனக் கேட்டதும் விபரத்தைச் சொல்லி, அவரையும் வாசிக்கச் சொல்லிவிட்டு, இதை எழுதிய குமாரை சந்தித்து இது குறித்துப் பேச வேண்டும் என்று சொன்னேன். அன்றிரவே உங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இந்த விடுமுறை தினத்திலேயே உங்களைச் சந்தித்து விட முடிவு செய்தேன் என்றபடி வாசிப்பு அனுபவத்தை ஆரம்பித்தார்.


'வாத்தியார்' புத்தகத்தை அவர் கையில் எடுத்த போது இது முக்கியமான கேள்வி மீண்டும் ஒரு முறை படிக்கணும் என்றோ, இந்த இடம் கொஞ்சம் குழப்புது நாளை நம் சாரிடம் கேட்க வேண்டும் என்றோ புத்தகத்தில் சில பக்கங்களில் பழைய பேப்பரைக் கிழித்து வைத்து அடையாளப் படுத்துவதைப் போல் ஆங்காங்கே ஊதாக்கலர் பேப்பரை அடையாளமாக வைத்திருந்தார்.
அதைப் பார்த்ததும் 'இதெல்லாம் என்னய்யா..? இதுக்கு விளக்கம் சொல்லுய்யா'ன்னு கேள்வி கேக்கப் போறாரோன்னு நினைத்தால் முதல் கதையில் கிடுகு பற்றிச் சொல்லியிருந்த பத்தியில் அடிக்கோடிட்டிருந்ததை வாசித்து, அதன் பின் அதனுடனான அவரின் தொடர்பைச் சொல்லி, கொட்டகை போடுவதைப் பற்றிப் பேசி, திருமணம், திருவிழாக்கள் என ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கதையிலும் சில இடங்களை எடுத்து வைத்துப் பேசினார், அவர் பேசும்போது நாங்களும் சில விசயங்களை விரிவாகவே பேசினோம். நீண்டதொரு உரையாடலாய் ஒவ்வொரு கதையும் அவரைப் பாதித்த விபரங்களைச் சொல்லியபடி நகர்ந்து கொண்டிருந்தது.
இறுதிக்கதையான 'அன்பிற்கும் உண்டோ'விற்கு வந்தபோது இது உங்களுக்கு தெரிந்த, அல்லது நிகழ்ந்த கதையா எனக் கேட்டார். அப்படியெல்லாம் இல்லை 12 கதைகள் கொடுத்தபின் புத்தகத்தில் இன்னும் ஏழு பக்கங்கள் சேர்க்கலாம், ஒரு கதை சேர்த்துப்போம் எனத் தசரதன் பாலாஜி அண்ணனிடம் சொன்னதைத் தொடர்ந்து அன்றிரவே எழுதிய கதைதான் இது. கிராமத்துக்குள் இருக்கும் வாத்தியாரை இங்கு கொண்டு வருவோமே எனக் கதையை துபைக்கு கொண்டு வந்தேன் என்று சொன்னதும் அது போன்றதொரு நிகழ்வு அவர் வாழ்வில் பாதித்த விதத்தைச் சொன்னார்.
கதையின் முடிவை வாசிப்பவர் பார்வையில் விட்டிருப்பதுதான் சிறப்பு என்பதை அழுத்தமாய்ச் சொன்னவர், நிறைய விசயங்களைப் பேசினார்.இடையிடையே தி.ஜா, எஸ்.ரா, எனப் பலரைப் பற்றியும், பலரின் கதைகளைப் பற்றியும் விரிவாகப் பேசினார்.
எப்பவும் அமைதியாய் பார்க்கும் சதீஷ் இவ்வளவு விரிவாய் பேசியதை, அவரின் வாசிப்பு அனுபவங்களை இன்றுதான் பார்த்தேன். பேசி முடிக்கும் போது எழுத்தாளனுக்கும் வாசிப்பவனுக்கும் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும், மற்றவர் சொல்லி நாம் படிப்பது என்பது சரியானதாக இருக்காது ஏனென்றால் அவரது பார்வையில் அந்தக் கதை வேறு மாதிரித் தெரிந்திருக்கலாம். அதைத்தான் அவர் சொல்லுவார் எனவே நாம் அதையெல்லாம் பார்க்காமல் கதை நம் போக்கில் வாசித்து உணர வேண்டும் என்று சொன்னதுடன் இன்னும் தொடர்ந்து நீங்கள் இதேபோல் கதைகளை எழுத வேண்டும் என்றார்.


அதன்பின் அவர் சில அன்பான அன்பளிப்பை எங்களுக்குக் கொடுத்தார். அதையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதெல்லாம் எதுக்குங்க என்றதற்கு எழுத்தாளனைக் கொண்டாட வேண்டும் என நினைப்பவன் நான், கதைகளைப் படித்ததும் உங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். இது ஒரு வாசகனாய் நான் கொடுக்கும் சிறிய அன்பளிப்புத்தான், இதைப் பெரிசா நினைச்சிக்காதீங்க... நீங்க எழுதிக்கிட்டே இருங்க, கொண்டாட நாங்க இருக்கிறோம் என்று சொன்னார்.
வீட்டில் படிக்கச் சொல்லியிருக்கிறேன்... வாசிக்கிறார்கள், வாசித்ததும் அவங்க கருத்தைச் சொல்லச் சொல்றேன் என்றார். அதன்பின் கதைகளை பாலாஜி அண்ணன் திருத்தினார் எனக் கூட்டத்தில் சொன்னீர்கள். நிறைய மாற்றங்கள் செய்தீர்களா..? அல்லது நீங்க எழுதியது அப்படியேதான் இருக்கிறதா..? எனக் கேட்டார். எந்தக் கதையிலும் பெரிய மாற்றமெல்லாம் செய்துவிடவில்லை, சில இடங்களை இப்படிப் போட்டால் நல்லாயிருக்கும் என்றும் சில வார்த்தைகளை எங்க பகுதியில் பேசுவோம் என்ற போதிலும் கூட அது இந்தப் புத்தகத்தில் வேண்டாமே என்றும் அண்ணன் சொன்னார்கள். அதை மட்டுமே செய்தோம் என்றதும், இதில் அப்படியான வார்த்தைகள் இல்லாதது நல்லதுதான். என் பையனையும் படிக்கச் சொல்லி, இப்படியான வாழ்க்கை இருந்திருக்கிறது, இன்னும் இருக்கிறது என்பதை அவனுக்கு நான் விளக்கிச் சொல்வேன் என்று சொன்னபோது மகிழ்வாக இருந்தது.
ராஜாராம், பாலா என எல்லாருமே தங்களின் வாழ்வின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அதன்பின் சரவணபவனில்
அருமையான
ஒரு சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு விடைபெற்றோம்.
கதைகள் செட்டிநாட்டு வட்டார வழக்கில் - சிவகங்கை, குறிப்பாக தேவகோட்டை - இருப்பதால் கிராமத்து வாழ்க்கையை அறியாதவர்களுக்கு என்ன இது இப்படியெல்லாம் எழுதியிருக்கு எனத் தோன்றலாம் என்றாலும் கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்தவன் வாசிக்கும் போது இதைக் கொண்டாடுவான், இப்படியான வாழ்க்கையை வாழ முடியாவிட்டாலும் தெரிந்து கொள்ளவாவது வேண்டும் என்று சொன்னார்.
இந்தக் கதைகளை இப்படியான வாழ்க்கையை வாழாதவர்கள் கொண்டாடவே மாட்டார்கள் எனப் பாலா சொன்னது உண்மைதான் என்றாலும் என்னைப் பொறுத்தவரை ஒரு கதை என்றில்லாமல் எல்லாக் கதைகளும் ஒரு மனிதரை தனது வாழ்வோடு இணைத்துப் பார்க்க வைத்து, அதற்காகவே நேரமெடுத்து எங்களை அழைத்து கிட்டத்தட்ட எங்களுடன் மூன்று மணி நேரங்கள் அது குறித்து உரையாடி, உன்னைக் கொண்டாட நானிருக்கிறேன் நீ எழுது என்றது இது போன்ற கதைகளைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைக்கப் போதுமானது.
நீங்க அண்ணனின் 'வேரும் விழுதுகளும்' நாவலை வாசிக்கணும் என்று சொன்னதும் இதுக்கு முன் போட்ட எல்லாப் புத்தகத்தையும் வாங்கி வாசிக்கணும் என அவர் சொன்னது நம் எழுத்து அவர் மனசுக்குள் ஏதோ ஒரு வகையில் அமர்ந்து கொண்டுவிட்டது என்பதை உணர முடிந்தது.
கதையில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அதைத் திருத்திக் கொள்வேன் ஆனால் மொத்தமாக உன் எழுத்தை மாற்று என்றால் நான் மாறமாட்டேன் என்பதை சொன்னபோது, உங்க எழுத்தை யாருக்காகவும் மாற்றாதீர்கள். இதே பாதையில் நீங்கள் தொடருங்கள் என்றார் சதீஷ்.
உண்மையில் இப்படி ஒரு நிகழ்வை என் எழுத்து கொடுக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. இப்படியான கொண்டாட்டகளை நான் எப்போதும் விரும்புவதுமில்லை, எழுத்தாளனாய் எதையும் சுமந்து திரிவதுமில்லை என்றாலும் நம்மைக் கொண்டாடும் நண்பர்களுக்கு வேறென்ன சொல்ல முடியும்... நன்றி சதீஷ். நட்புக்கும் வாசிப்புக்கும்.
இப்போது எழுதும் எண்ணம் இல்லை என்று சொன்னவனை உடனே எழுதித் தர்றே என விரட்டி வாங்கி, ஓரு மாதத்துக்குள் புத்தகமாக்கி, தங்களது முதலாமாண்டு விழாவில் வெளியிட்டதுடன் அதே மேடையில் அவர்கள் வருடா வருடம் கொடுக்க இருப்பதாய் அறிவித்த 'பாண்டியன் பொற்கிழி' விருதையும் முதல் ஆளாய் எனக்குக் கொடுத்து என் எழுத்தைக் கொண்டாடும் கேலக்ஸி பதிப்பக உரிமையாளர் பாலாஜி அண்ணனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் பள்ளிக்கூட வாத்தியாரைப் போல் என்னை விரட்டி வாங்கவில்லை என்றால் இந்த 'வாத்தியார்' வந்திருக்கமாட்டார். சதீஷின் மனசுக்குள் நுழைந்து நான் என்னவோ பெரிய எழுத்தாளனைப் போல் கொண்டாட வைத்திருக்கவும் மாட்டார்.


இது எனது ஐந்தாவது புத்தகம், நான்கு புத்தகங்களுக்கும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும் 'வாத்தியார்' புத்தகத்தை மூன்றே நாளில் வாசித்து எங்களை வரச்சொல்லி, - நானே வந்து கூட்டிக்கிறேன் என்றெல்லாம் சொன்னார், ஆத்தாடி அம்புட்டுப் பெரிய ஆளெல்லாம் இல்லங்க... எங்க வரச் சொல்றீங்களோ அந்த இடத்துக்கு வந்துடுறோம்ன்னு சொல்லிட்டோம் - அவர் குறித்து வைத்திருந்த வரிகளை வாசித்து அதனுடன் தனக்கான நிகழ்வுகளை இணைத்துப் பேசி, மன நிறைவாய் அன்பளிப்பு அளித்து, வயிறு நிறைய சாப்பாடும் அளித்து ஒரு மனிதர் மனதார மகிழ்ந்து எங்களையும் மகிழ்வித்தது எழுத்தாளனாய் எனக்கு இதுதான் முதல் முறை. என் எழுத்து அதற்கான இடம் நோக்கிப் பயணிப்பது மகிழ்ச்சி.
ரொம்ப ரொம்ப நன்றி சதீஷ். இந்நாளை எப்போதும் நான் மறக்கமாட்டேன். நம் நட்பு தொடர்ந்து பயணிக்கட்டும்.
சதீஷ் அழைத்ததும் அதிகாலையில் ராஜாவின் இருப்பிடம் சென்று அவரை அழைத்துக் கொண்டு என் இருப்பிடம் வந்து வந்து, இன்று மாலை வரை என்னுடன் இருந்து சென்ற பால்கரசு, ராஜாராம்க்கு நன்றி.
சிறப்பான நாளை எங்களுக்களித்தார் 'வாத்தியார்' சதீஷ்.
-பரிவை சே.குமார்.

5 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

மீள்பதிவா, முகநூலில் படித்தேனா...  முன்னரே படித்தது போல இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆழ்ந்து வாசித்துள்ளார்... அருமை... வாழ்த்துகள் குமார்...

Jegadeesan சொன்னது…

வாழ்த்துக்கள். இன்னும் படிக்கவில்லை படித்தபின் கருத்து சொல்கிறேன்.
உங்கள் ப்லோக் படித்துக்கொண்டு உள்ளேன் . ஆனால் உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு வரவில்லை
. எல்டோர்டோ சினிமா அருகில் வரும்பொழுது உங்கள் நினைவு வரும் உங்கள் தொடர்பு எண்இல்லாததால் தொடர்பு கொள்ள இயலவில்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி.
இது மீள் பதிவு அல்ல, முதலில் முகநூலில் பகிர்ந்தேன். அப்புறம்தான் இங்கு பகிர்ந்தேன்.

வணக்கம் தனபாலன் அண்ணா.
தங்கள் கருத்துக்கு நன்றி.

வணக்கம் ஜெகதீசன் அவர்களே...
உங்கள் கருத்துக்கு நன்றி.
என் வலைப்பூவை வாசிப்பதற்கு நன்றி.
நான் இப்போது கலுதியா மால் பக்கமாக இருக்கிறேன். முடிந்தால் இந்த வார விடுமுறையில் சந்திக்கலாம். எல்டரோடா பக்கம் வரவேண்டும் என்றாலும் வருகிறேன். நன்றி.