மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 1 நவம்பர், 2013கிராமத்து நினைவுகள் : இனிக்கும் தீபாவளி


ள்ளிப் பருவத்தில் வெடியுடன் விடிந்த தீபாவளி இன்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன்தான் விடிகிறது. மாற்றங்கள் ஏற்புடையவைதான் என்றாலும் பண்டிகைகள் எல்லாம் பொலிவிழந்து வருபவது ஏற்புடையதுதானா?

இன்றைய காலகட்டத்தில் சொந்தங்கள் எல்லாம் ஒன்றாக கூடி சந்தோஷமாக கழிப்பது என்பது அரிதாகிவிட்டது. எங்கள் வீட்டில் நாங்கள் படிக்கும் காலத்தில் தீபாவளி என்பது ஒரு பெரிய பண்டிகையாகத் தெரியும். அதற்குக் காரணமும் இருந்தது. 

எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். அக்காக்கள் மூவரில் இருவருக்கு திருமணம் ஆகியிருந்தது. இருவரும் அன்று காலை அவர்கள் இல்லத்தில் கொண்டாட்டம் முடித்து மதிய விருந்துக்கு எங்கள் இல்லத்துக்கு குடும்ப சகிதமாக வந்துவிடுவார்கள். அவர்களோடு வெடிகளும் வந்துவிடும். குறிப்பாக எங்க பெரிய அத்தான் வெடிகளை அள்ளி வருவார். அதற்காகவே காத்திருந்த தீபாவளிகளும் உண்டு.

பெரியண்ணன் தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது எனக்கும் தம்பிக்கும் ஒரே கலரில் துணியெடுத்து சரியான அளவில் தைத்துக் கொண்டு வருவார். எங்கள் இருவருக்கும் எப்பவும் இரண்டு புத்தாடைகள்தான்.

விடியுமுன்னே மூன்றாவது அக்காவும் அம்மாவும் பலகாரம் சுட ஆரம்பிக்க நானும் எழுந்து அவர்களது உதவியாகவோ உபத்திரவமாகவோ இருப்பதுண்டு. போய்ப்படுடா என்றாலும் படுப்பதில்லை. அவர்களுடனே அமர்ந்து என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில் அவ்வளவு சந்தோஷம்.

அதிகாலை அப்பா ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றி வைத்துக் கொண்டு இன்னைக்கு வடக்க சூலம், இந்தப்பக்கமா பாத்து உக்காருங்கடா என அண்ணன்கள், நான், தம்பி என வரிசையாக எண்ணெய் தேய்த்து விடுவார். தலையில் எண்ணெய்யை ஊற்றி கரகரவென தேய்த்து எடுத்துவிடுவார். உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து சூடு பறக்க உரசி எடுத்துவிடுவார். பின்னாளில் அண்ணன்கள் நல்லெண்ணெய் ஒத்துக்க மாட்டேங்குது என்று தப்பிக்க நானும் தம்பியும் மாட்டிக் கொள்வோம். அப்புறம் கல்லூரி சென்றதும் தலைக்கு மட்டும் தொட்டு வைக்கச் சொல்லி நாங்களும் தப்பித்துக் கொண்டோம்.

தலையில் எண்ணெய்யுடன் சீயக்காயை ஒரு டம்ளரியோ கிண்ணத்திலோ கொட்டிக் கொண்டு நிறைந்து தளும்பும் கண்மாய்க்கு மச்சான், மாமன் என கூட்டமாகச் சென்று கண்ணுக்குள் சீயக்காய் விழுந்து எரிந்தாலும் ஆட்டம் போட்டுக் குளித்து வீடு வந்து சேர்வோம்.

அப்பா குளித்து சாமி கும்பிட்டு வர ரொம்ப நேரமாகும். சில நேரம் புதுத்துணி போடும் ஆவலில் அப்பா மீது கோபம் கோபமாக வரும். வேகவேகமாக அவருக்கே உரிய ஓட்டமும் நடையுமாக வந்து துணிகளுக்கெல்லாம் மஞ்சள் வைத்தாச்சா என்று பார்த்து சாமி கும்பிட்டு எல்லாருக்கும் எடுத்துக் கொடுப்பார். அனைவரும் அணிந்து கொண்டதும் அம்மா பலகாரங்களை இலையில் வைக்க சாப்பிட்டு முடிப்போம். அப்புறம் எங்கள் வீட்டில் இருந்து சித்தப்பா வீடு, அத்தை வீடுகள் என பலகாரம் போகும். அங்கிருந்தும் வரும்.

அதன் பிறகு மாரியம்மன் கோவில் வாசலில் கூடும் சக வயது உறவுகள் என எல்லாருமாக மாறி மாறி வெடிகள் வெடித்து மகிழ்வோம். குறிப்பாக அணு குண்டு கொட்டாச்சிக்குள் வைத்து வெடிப்போம். சாணிக்குள்ளும் வைத்து வெடித்தது உண்டு. ஒரே ஆட்டம்தான்... அதுக்கு அளவேயில்லை... சந்தோஷம் என்றால் அதுதான் சந்தோஷம்... இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று ஆரம்பிக்கும் வரை தொடர்ந்த சந்தோஷம்.

மதியம் தடபுடாலாக விருந்து முடித்து மாலையில் மீண்டும் வெடி... இரவில் சங்கு சக்கரம், புஸ்வானம், பாட்டிலில் வைத்து விடும் ராக்கெட் என உற்சாகத் துள்ளல்தான். 

திருமணத்துக்குப் பிறகு கிராமத்துத் தீபாவளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நகரத்து தீபாவளியாகி வீட்டோட நின்று விட்டது. இப்போது எல்லாரும் அவர்கள் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிவிட்டு மதியத்துக்குத்தான் எங்க வீட்டுக்குப் போகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் எங்க அம்மாவிடம் பேசும் போது எல்லாரும் மத்தியானந்தான் வருவாங்க... நானும் அப்பாவும் மட்டுந்தானே இட்லி, வடை மட்டும் கொஞ்சமா செஞ்சிக்க வேண்டியதுதான் என்றார். உண்மைதான் எல்லாருமாகக் கூடிக் களித்த அந்த இல்லத்தில் இப்போது உறவுகள் கூடுவது என்பது அரிதாகிவிட்டது. இன்றைய வாழ்க்கையும அதன் பின்னே செல்லும் நமது வாழ்வும்தான் இதற்கு முக்கிய காரணமாகிவிட்டது.

அபுதாபி வந்து இந்த ஐந்து வருடத்தில் தீபாவளிக்கு ஒரு முறை ஊரில் இருந்த ஞாபகம். இங்கு நாளை எனக்கு வார விடுமுறை என்பதால் கொஞ்சம் சந்தோஷம். இல்லை என்றால் தீபாவளி என்பது எப்போதும் போல் அதிகாலை எழுந்து வேலைக்குச் செல்லும் ஒரு நாளாகத்தான் கழியும்...

இரு தினங்களுக்கு முன்னர் தீபாவளிக்கு வாங்கப்பா என்று ஸ்ருதி போனில் ஒரே அழுகை... சமாதானம் செய்ய என்ன என்னவோ செய்தேன். அதற்கு அது சொன்ன ஒரு வார்த்தை இன்னும் மனசை விட்டு அகலவில்லை... அது 'நீங்க வர்றதுதாம்ப்பா எனக்குத் தீபாவாளி'. இதுக்கு மேல நான் என்ன பேச... ஒண்ணும் பேச முடியலை... இரவு போன் பண்ணும் போது மீண்டும் அழுக, பாப்பா எதுக்கும்மா இப்ப அழுகுது என்று என் மனைவியிடம் கேட்க, பின்னாலிருந்து 'அதோட அழுகைக்கு காரணம் குமார்தானாம்' என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றான் எங்க வீட்டு வாலு விஷால்.

ம்... அடுத்த வருட தீபாவளிக்கு அவர்களை இங்கு கொண்டு வந்து விடவேண்டும் என்பதே இப்போதைய எண்ணமெல்லாம். நான் வணங்கும் எங்க ஊர் முனியய்யா கிருபையால் கண்டிப்பாக நடக்கும் என்று எனது மனசு சொல்கிறது. நடக்கும்.

அப்புறம் நாளை எனது ஆருயிர் நண்பர் தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகி, கவிஞர் தமிழ்க்காதலன் அவர்களின் சிறப்புக் கட்டுரை நமது தளத்தில் பதியப்பட இருப்பதால் தொடர்கதை பதியப்படமாட்டாது.

சரிங்க, எல்லாரும் தீபாவளி சந்தோஷத்தில் இருப்பீங்க... உங்க குடும்பத்துடன் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்...


அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
-'பரிவை' சே.குமார்.

26 கருத்துகள்:

 1. ஏம்பா குமார் இப்படிலாம் செய்யுறே! குமார்ன்னு பேர் வச்சாலே அடங்க மாட்டாங்க போல! என் வீட்டுக்கார் பேரும் குமார்லதான் முடியும்

  பதிலளிநீக்கு
 2. ம்... அடுத்த வருட தீபாவளிக்கு அவர்களை இங்கு கொண்டு வந்து விடவேண்டும் என்பதே இப்போதைய எண்ணமெல்லாம். நான் வணங்கும் எங்க ஊர் முனியய்யா கிருபையால் கண்டிப்பாக நடக்கும் என்று எனது மனசு சொல்கிறது. நடக்கும்.//
  கடவுள் அருளால் அடுத்த வருட தீபாவளிக்கு உங்கள் எண்ணம் நிறைவேறும்.
  வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 3. நினைவுகள் சுகமானது! விரைவில் குடும்பத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. வெளிநாட்டு வாழ்க்கை என்பது இழப்பை பொருட்படுத்தாது வாழ வேண்டிய வாழ்க்கை.

  உங்கள் வீட்டில் முடிந்தால் குழந்தைகளுடன் ஸ்கைபே மூலம் ( சற்று செலவு பிடித்தாலும் இணைய இணைப்பு கேமரா ஏற்பாடு செய்து) வீடியோ சாட்டிங் மூலம் வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் பேசினால் உங்கள் உருவம் பார்த்து அவர்களுக்கு இன்னமும் கொஞ்சம் புரிதல்ஏற்படக்கூடும்.

  தீபாவளி வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
 5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

  பதிலளிநீக்கு
 6. இனிய நினைவுகள்...

  இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. அருமை!!!இதுவெல்லாம் கனவானது,நமக்கு,ஹூம்!

  பதிலளிநீக்கு
 8. 'மனசு' விரும்புவது நடக்க வாழ்த்துகள். தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. இனிய நினைவுகள்.

  எண்ணம் யாவும் நிறைவேறட்டும். அடுத்த தீபாவளியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட இறையருள் துணையிருக்கும்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்
  வாழ்த்துகள்!

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 11. அம்மா, சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை, அண்ணா அனைவருடனும் கொண்டாடிய சிறுவயது தீபாவளியின் இனிமை பின் எந்த வயதிலும் கிடைக்கவில்லை. தீபாவளி நினைவுகள் அருமை குமார்! மிக ரசித்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 12. இனிமையான நினைவுகள் தான் சகோதரரே. சொந்தங்களை விட்டு உறவுகளைக் கண்களில் நீங்காத பிம்பங்களாக்கி, நினைவுகளை நெஞ்சோடு சுமந்து கொண்டு பணியாற்றும் வெளிநாட்டு வாழ்க்கை கடினம் தான். தங்கள் பணி சிறக்க, எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ எனது இறை வேண்டலும் எப்போதும் தங்களுக்கு உண்டு.
  தங்களுக்கும் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 13. நெஞ்சை விட்டு நீங்கா நினைவுகள்
  என்றென்றும் இனிப்புடன்...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
  மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 14. தீபாவளிக்கு வாங்கப்பா என்று ஸ்ருதி போனில் ஒரே அழுகை... சமாதானம் செய்ய என்ன என்னவோ செய்தேன். அதற்கு அது சொன்ன ஒரு வார்த்தை இன்னும் மனசை விட்டு அகலவில்லை... அது 'நீங்க வர்றதுதாம்ப்பா எனக்குத் தீபாவாளி'. இதுக்கு மேல நான் என்ன பேச... ஒண்ணும் பேச முடியலை...

  nalla appa nalla magal. innidhu vaala aandavam arul puriyattum.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா3/11/13, முற்பகல் 5:28

  பண்டிகைகள் , விழாக்கள் எல்லாம் உற்றார், உறவினரோடு கூடிக் குழுமி உண்டு மகிழ்ந்து பிணக்குகள் மறந்து குதூகலிக்க ஒரு வாய்ப்புத் தான், அதன் பின்னிருக்கும் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய குதூகலங்களும், கூடிக் குலாவும் முறைகளும் இழந்து போயுள்ளன. நண்பர்கள், உறவுகளோடு கூடிக் குமிழ நேரமும், வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டன. அப்படி வாய்ப்புக்கள் இருந்தும் மனம் இல்லாமல் போய்விட்டது. தொலைக்காட்சியின் வரவால் பண்டிகை தினங்கள் வீடுகளுக்குள் டிவியின் முன்னே கழிகின்றன. வியாபார மயமாதலும், புதிய வாழ்க்கை முறைகளும் வீட்டுப் பலகாரங்களை ஒழித்து கடைப் பலகாரங்களைக் கொண்டு வந்து விட்டது. பண்டிகைத் தினங்களில் ஊர்ச்சுற்றல், விளையாடுதல், கறிச்சோறு தின்னல், பேசி சிரித்து மகிழ்தல் எல்லாவற்றையும் மறந்து விட்டு. காலை எழுந்ததும் கண்டதையும் உள்ளே தள்ளிவிட்டு டிவியின் முன் குந்திக் கிடக்கின்றோம், கூடிச் சிரித்தலையும், பகிர்தலையும் மறந்தே விட்டோம். ஆடாமல் அசையாமல் கிடந்து நோய் வாய்ப்படுகின்றோம். குடும்பம் சகிதமாய் மகிழ்ந்திருக்க வாய்ப்பின்றி தூர தூர தேசங்களில் தனிமையில் வெறுமையோடும் நன்னாளைக் கழிக்கின்றோம். :( Whatta Life?

  பதிலளிநீக்கு
 16. அன்புத் தம்பிக்கும், தோழமைகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  உண்மைதான் தம்பி. இன்றைய பண்டிகையை தொ(ல்)லைக்காட்சிகளே முடிவு செய்கின்றன வருத்தமான ஒன்று. கடமைக்கே கொண்டாடப்பட்டு வருகின்றன. பண்டிகைகள்.

  பதிலளிநீக்கு
 17. வாங்க ராஜி அக்கா...
  என்ன மாப்பிள்ளைக்கு சப்போர்ட்டா?
  அது சரி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க கோமதி அக்கா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க சுரேஷ்....
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க ஜோதி அண்ணா....
  ஸ்கைப்லதான் இப்போது வாழ்க்கை ஓடுகிறது அண்ணா...
  தினமும் பார்த்துப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
  இருந்தும் இருவரும் அப்பா பைத்தியம்.. அங்கதான் பிரச்சினை...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க சக்கரக்கட்டி...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க தனபாலன் சார்...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க ஸ்ரீராம் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க சகோ. யோகராஜா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க ராமலக்ஷ்மி அக்கா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க சூர்யா சிவா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க பாலகணேஷ் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க பாண்டியன்...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க மகேந்திரன் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க நீலவண்ணன் சார்...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க காயத்ரி அக்கா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...