மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 நவம்பர், 2013தொடர்கதை : கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...


-----------------------------------------------------------------------

28. வருத்தப்பட்ட உள்ளங்கள்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன புவனாவும் மல்லிகாவும் வராதது ராம்கிக்கு பொங்கல் வருத்தமாக இருந்தது.

இனி...

பொங்கல் விடுமுறைக்குப் பின் கல்லூரி திறந்த அன்று மரத்தடியில் ராம்கியும் அவனது நண்பர்களும் பேசிக் கொண்டு நின்றனர். அப்போது வகுப்பிற்கு வந்த மல்லிகா ராம்கியைப் பார்த்ததும் நின்றாள்.

"என்ன மல்லிகா... சொல்லுங்க..." என்றான் எப்போதும் போல

"சாரி ராம்... பொங்கலுக்கு வர முடியலை..."

"பரவாயில்லை விடுங்க... அதுக்காக இப்ப எதுக்கு வருத்தப்பட்டுக்கிட்டு..." 

"இல்ல ஊர்ல இருந்து சித்தி, சித்தப்பா எல்லாம் வந்துட்டாங்க... என்னைய உங்க வீட்டுக்கு போகச் சொல்லியிருந்த அம்மா அவங்க வந்ததும் இன்னொரு நாள் போயிக்கன்னு சொல்லிட்டாங்க... சித்தியும் அவங்ககூட என்னைய இருக்கச் சொல்லி எங்கயும் போகவிடலை அதான் வரமுடியலை.."

"சரி விடுங்க..."

"எனக்கு ரொம்ப வருத்தமாயிருச்சு... என்னால அவளுகளும் வரலை... இதுல ரொம்ப பாவம் புவனாதான்..."

அவன் ஒன்று பேசாமல் அவளை ஏறிட்டான்.

"ஆமா ராம்... அவங்க வந்து நான் சொன்ன இடத்துல காத்துக்கிட்டு இருந்திருக்காங்க... அப்புறம் எனக்குப் போன் பண்ண விவரத்தை சொல்லி சாரி கேட்டதும் ரொம்ப வருத்தப்பட்டாங்க... உங்க வீட்ல போன் இருந்தாலும் அவங்க அங்க கூப்பிட்டு எப்படியாச்சும் வந்திருப்பாங்க...சும்மாவே என்னைய அவங்களுக்குப் பிடிக்காது. இப்போ இந்த மாதிரி ஆயிடுச்சு... எம்மேல அவங்களுக்கு கோபம் கூடத்தான் போகுது... அவங்ககிட்ட சாரி கேக்கனும்..."

"புவனா வந்திருந்தாங்களா...?"

"ம்... எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு... நீங்க நம்பர் கொடுத்திருந்தா அவங்களை கூப்பிட்டுச் சொல்லியிருப்பேன்... நம்பரும் இல்லை..."

"இல்லைங்க... அவங்க போன் நம்பரெல்லாம் எனக்கிட்ட இல்லை... விடுங்க சொல்லிக்கலாம்..."

"ப்ளீஸ் ராம்... அவங்களைப் பார்த்து பேசிடுங்க... அப்போ நான் ரொம்ப வருத்தப்பட்டதா சொல்லிடுங்க..."

"சரி... விடுங்க... இன்னொரு நாள் வந்தாப் போச்சு.... பசங்களெல்லாம் வந்தானுங்க... ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...." என்றான். அப்போது அவர்களைக் கடந்து வைரவனின் வண்டி போனது.

"ஆஹா... இந்தாளுக்கு சஸ்பென்சன் முடிஞ்சிருச்சா... சுத்தம்... இனி மறுபடியும் காலேசுக்குள்ள கலாட்டாதான்..." என்றான்.

"என்ன ராம்... வைரவன் வந்ததுக்கு ரொம்ப வருத்தப்படுறீங்க..?" 

"இல்ல மல்லிகா... காலேசு ரொம்ப நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு... இனி அப்படி இருக்காதே அந்தக் கவலைதான்..."

"அம்மாடி.... பொய்யை அள்ளி விடுறான் மல்லிகா... நம்பாதே... புவனாவோட பேச முடியாதேன்னு நினைச்சு சொல்றான்..." என நண்பர்கள் கோரஸாக சொல்ல மல்லிகா சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

அன்று முழுவதும் புவனாவைப் பார்க்க நினைத்தாலும் வைரவன் வந்திருப்பதால் மாலை கல்லூரி முடிந்ததும் எப்படியும் ஐயா வீடு வருவாள் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான். அவன் நினைத்தது போலவே அவளும் ஐயா வீடு வந்தாள்.

"அம்மா நல்லாயிருக்கீங்களா...?" என்றபடி வந்தவள் ராம்கியைப் பார்த்ததும் "ஹாய் ராம்.." என்றாள்.

"ஹாய்..." 

"பொங்கல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? சாரிம்மா... எங்கயும் வரமுடியலை..." என்றாள்.

"எல்லாம் நல்லா முடிஞ்சது... இருங்க காபி எடுத்துக்கிட்டு வாறேன்..."

"ஐயா...?"

"இன்னும் காலேசுல இருந்து வரலை... வந்துருவாக... பேசிக்கிட்டு இருங்க... அவுகதான் இந்தப் பிள்ளைங்க சும்மா சும்மா ஓடியாருங்க... பொங்கலன்னைக்குன்னு யாருமே வரலையேன்னு பொழம்பிக்கிட்டே இருந்தாக... நீங்க யாருமே இங்கிட்டு வரலயில்ல." என்றபடி உள்ளே சென்றார்.

"சாரி புவி..."

"எதுக்கு...?"

"இல்ல மல்லிகா கூட்டி வருவாங்கன்னு நினைச்சேன். அவங்க வரமுடியாததால நீ காத்துக்கிட்டு நின்னுட்டு திரும்பிப் போயிருக்கே... மல்லிகா சொன்னதும் ரொம்ப வருத்தமாயிடுச்சு..."

"ஓ... அதுதான் காலேசுல பாத்துப்புட்டீங்களாக்கும்... ஆமா யாரு சொன்னா ... மல்லிகா சொன்னாளா?"

"ம்... வைரவண்ணன் வந்ததாலதான் உன்னைய பாக்கலை... பாக்கணுமின்னு தவிச்ச தவி எனக்குத்தானே தெரியும். சரி... மல்லிகா ரொம்ப வருத்தப்பட்டாங்க... பாவம் திடீர்ன்னு ஆயிருக்கு... அவங்க என்ன பண்ணுவாங்க... புவனா சும்மாவே எம்மேல கோபப்பபடுவாங்க... இந்த விஷயம் அவங்களை ரொம்பவே கோபப்பட வச்சிருக்கும்ன்னு புலம்பினாங்க... நான் உங்க போன் நம்பரை வாங்கி வச்சிருந்திருக்கனும்... போன் நம்பர் இருந்த போன் பேசச் சொல்லும் அப்புறம் வீட்ல சந்தேகம் வரும்ன்னு நினைச்சு வாங்கிக்கலை...என்னோட மச்சான் நம்பரைக் கொடுத்திருந்தாலாவது நீ போன் பண்ணியிருப்பே... அதையும் மறந்து தொலஞ்சிட்டேன்"

"இப்ப யோசிச்சி... காத்திருந்தேன்... மல்லிகா மேலதான் கோபமா வந்துச்சி... அதான் ஆரம்பத்துலயே நான் அவகூட வரலைன்னு சொன்னேன்.. சரி அவ என்ன பண்ணுவா... இதெல்லாம் வேணுமின்னு நடக்கிறதில்லையே.... எனக்கு வர்றதுக்கு ரொம்ப ஆசை... முடியலை... சரி அடுத்ததடவை கண்டிப்பா வாரேன்.. வீட்ல முதல்ல டெலிபோன் கனெக்சன் வாங்கி வையுங்க."

"அண்ணன் சிங்கப்பூர் போகப் போகுது. அப்புறம் போன் அப்ளை பண்ணிரலாம். இன்னொரு சந்தோஷமான விஷயம்... அக்காவுக்கும் முத்து மச்சானுக்கும் இப்போ கல்யாணம் இல்லை. மாமாகிட்ட அண்ணன் பொறுமையா பேசி மச்சானை சிங்கப்பூர் பக்கம் கொண்டு போயிட்டு அப்புறம் வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லி சம்மதிக்க வச்சிருச்சு. இப்போ மச்சானுக்கு அண்ணனுக்கு ஏற்பாடு செஞ்ச ஏஜெண்டுக்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணப் போறாங்க... ஒரு வருசமோ ரெண்டு வருசமோ மனுசன் திருந்தி வந்தா கல்யாணம் பண்ணி வைக்கலாம். இல்லேன்னா வேற மாப்பிள்ளை..."

"அப்பா... அக்கா பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கு... ஆனா நமக்கு பிரச்சினை வருமோன்னு பயமா இருக்கு ராம்..." என அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"ஏய்... என்னாச்சு..?" என்று பதறியவன் அம்மா காபியுடன் வருவதைப் பார்த்ததும் "புவி அம்மா வாராங்க கையை விடு..." என்றான் மெதுவாக.

"ஆமா புவனா இதுதான் பொங்கல் டிரஸ்ஸா... மாட்டுப் பொங்கலுக்கு எடுத்ததா?" என்று பேச்சை மாற்றி மாட்டுப் பொங்கலை அழுத்திக் கேட்டான்.

"ம்... கொழுப்பா..."

"இந்தாங்க காபி... ரெண்டு பேரும் வந்தா சண்டைதான் போடுவீங்க சின்னப் பசங்க மாதிரி..."

"பாருங்கம்மா... இந்த டிரஸ்ஸை மாட்டுப் பொங்கலுக்கு எடுத்ததான்னு கேக்கிறார். அப்புறம் உங்க மகனைத் திட்டாம கொஞ்சுவாங்களோ...?"

"எம்புள்ள கேட்டதுல என்னடி தப்பு..? கிராமத்துல மாட்டுப் பொங்கதானே விசேசம்..."

"ம்... அதுக்காக... மாட்டுப் பொங்கலான்னு அழுத்திக் கேப்பாகளோ? அப்போ அங்கயும் மாட்டுப் பொங்கலுக்கு துண்டு கட்டி விரட்டியிருப்பங்கள்ல..."

"அதை நீ கேளு... அதை விட்டுட்டு எதுக்கு கோபப்படுறே..?" என்று சிரித்துக் கொண்டே உள்ளே போனார்.

"என்னாச்சு புவி... வைரவண்ணன் எதாவது..."

"ம்... அவந்தான் ஆரம்பிச்சான். ஆனா உங்க வீட்டுக்குப் போக எல்லாரும் ஒத்துக்கிட்டாலும் அம்மா மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தேகம் வந்திருக்குமோன்னு தெரியுது. ஆனா மழுப்பலா பேசுறாங்க..."

"சரி விடு... மற்றவங்களுக்கு சந்தேகம் வர்ற மாதிரி நடந்துக்க வேண்டாம். கொஞ்சம் தள்ளியே இருப்போம். கொஞ்ச நாள்தானே அப்புறம் எல்லாம் சரியாகும்"

"ம்... உங்களைப் பாக்கணுமாம்... எங்க வீட்டுக்கு கூட்டியாரச் சொல்லி இருக்காங்க... அதுவும் நான் கூட்டியாரக் கூடாதாம். வைரவன்தான் கூட்டியாரனுமாம்..."

"என்னையா... எதுக்காம்...?"

"பயப்படாதீங்க சம்பந்தம் பேச இல்ல... மகனை காப்பாத்தியதுக்காக..."

"ஓ... சரி வந்துட்டாப் போச்சு..."

"எப்ப வந்தாலும் நான் இருக்கும் போதுதான் வரணும்....  சரியா?"

"கண்டிப்பாக மகாராணி..."

"ம் அந்தப் பயம் இருக்கட்டும்..." என்றவள் "எனக்கு உங்ககூட பொங்கல் கொண்டாடனுமின்னு அம்புட்டு ஆசை இருந்திச்சு... எல்லாம் போச்சு..." என்று மீண்டும் அவனது கைகளைப் பிடித்தாள். வாசலில் ஐயாவின் சைக்கிள் வந்து நிற்கும் ஓசை கேட்க, இருவரும் தள்ளி அமர்ந்தனர்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

 1. ம்..........பொங்கல்,மாட்டுப் பொங்கல் எல்லாம் முடிஞ்சுது.தை பொறந்தா வழி பொறக்குமாம்,பொறக்குதா பாப்போம்!

  பதிலளிநீக்கு
 2. தை பிறந்தால் வழி பிறக்ககும்.
  அருமை தொடர்கின்றேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. கதை பெரிய தொடர் போல இப்பொழுது தான் ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன்..

  பதிலளிநீக்கு
 4. த.ம. 3

  தொடரின் மொத்த பகுதிகளையும் வெளியிட்ட பின் படிக்க நினைத்திருக்கிறேன்.... :)

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...