மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 2 நவம்பர், 2013சிறப்புக் கட்டுரை : தித்திக்கும் திருநாள் - கவிஞர் தமிழ்க்காதலன்

ருவுற்ற வான்முகில் கனம்தோறும் பிரசவித்த மழைமழலைகள் பூமியின் தாகம் தணிக்க, கவின்மிகு கானகம் நீர்சுமந்து நீர்சுமந்து, இலையெங்கும் திவலைகள் வழிய, தலைகுனிந்து அழகுகாட்டி சிலிர்க்கவைக்கும் பருவத்தின் உயிர்ப்பில் ஆதவனும் சோம்பல் உடுத்தி உறங்கும் எழிலார்ந்த இளம்பொழுதுகள் தொடரும் அடர்மழை கொட்டமடிக்கும் அதிகாலையும் அந்திமாலையும் மாறிமாறி வந்து இன்பத்தை இறைத்துப்போகும் கார்காலத்தின் ஒருநாள் இரவு…….. ஒளியின் மூலங்கள் ஒளிந்து கொண்டு கருமை போர்த்திய ஆழிரவில் அடரிருளை இழுத்து அணைத்தபடி புரண்டு புரண்டு பொழுது சுகிக்கும் பூமியில், புல்லினங்கள் பசுமைப் பரப்பிக்கிடக்க, புள்ளினங்கள் கொஞ்சும் கொஞ்சல் செவிக்கிழித்து மனம் புதைந்து கிளர்வூட்டும் இன்பத்தை நுகரும் வேளையில், வெள்ளம் தங்கும் பள்ளம் எங்கும் நிரம்பிய நீர்க்காடு வழிந்தோடும் ஐந்திணை நிலப்பரப்பில் பெரும்பொழுதுகள் குளிரும் குளிரில் சிற்றுயிர்கள் ஆழ்ந்துறங்க, நிலமகள் விழிகள் திறக்க மனுக்குலம் தீபம் ஏந்தும் இனிய நாள்.

ஒளியே இல்லாத நாளொன்றில் ஒளியை ஏந்தி, உலகுக்கு ஒளியை வரவேற்கும் உன்னத நாள். மக்கள் பெருமகிழ்வுடன் ஒளிப்பொருந்திய கரங்களுடன், விழி அகல விழித்திருக்கும் அழகிய இரவும், ஆரவார பகலும் இணைந்த திருநாள். விடிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து முடித்து, புத்தாடை அணிந்து, குடும்பங்கள் தத்தம் உறவும் நட்பும் சூழ, இறைவணக்கம் செய்து, இனிப்பும், காரமும் இன்னும் பலவகை பல்சுவை உணவும் படைத்து, பிறரோடும் பகிர்ந்து, உண்டு களித்து, உவப்புடன் உள்ளும் வெளியும் ஓடியாடி, குழந்தைகள் செய்யும் குதூகளம் இல்லம்தோறும் எதிரொளிக்க, குறும்பும், கும்மாளமும் கொப்பளிக்கும் சிறுவர்கள் செய்யும் விளையாட்டு, நாள்முழுக்க விருந்தும், விருந்தினரும் கலந்துபோகும் பொழுதில், மத்தாப்பு, வானவெடி, சரவெடி, பாம்பு வெடி, வெங்காய வெடி, நாட்டு வெடி, கைத்துப்பாக்கி, சீனிவெடி அல்லது ஊசிவெடி, சங்கு சக்கரம், ஓலைவெடி, பொட்டு வெடி, சுருள் வெடி, சாட்டை இராக்கெட் வெடி, வண்ண ஒளி தரும் வெடிகள் என விதவிதமான வெடிகளை தெருக்களில் வைத்து வெடிக்க செய்வதில் சிறியவர்களும், பெரியவர்களும் காட்டும் ஆர்வமும், பயமும், அதனை இரசித்து வேடிக்கை பார்த்தபடி, குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் அழகும் கண்கொள்ளா காட்சி. 

வெடிக்கு நெருப்பு வைத்துவிட்டு வெடிக்க காத்திருக்கும் தருணத்தில் தெருவில் நடந்து போவோரும், மிதிவண்டியில் கடந்து போவோரும் திடீரென வெடி சப்தம் கெட்டு, அதிர்ச்சியடைந்து அவர்கள் காட்டும் முகபாவம், திட்டும் திட்டுகள், சிறு பிள்ளைகள் குறும்பாக நாய்களின் வாளில் வெடி கட்டி, பற்ற வைக்க அவைகள் வேகமாய் தெருவில் ஓடி, குட்டிக்கலகம் செய்து, ஊரே மகிழ்ச்சியும், பரபரப்பும் பொங்கி வழிய, புதுமணத் தம்பதிகள் மாமனார் வீட்டிற்கு வருகை புரிந்து விருந்துண்டு களித்து, உறவினர்களின் சிலேடைப் பேச்சு, சாடைப்பேச்சு, கிண்டல் பேச்சு, நையாண்டி, நக்கல், பரம்பரை பெருமை என பலவும் பேசி குதூகளிக்க, அலங்கரித்து கொண்டு அவர்கள் வீதிகளில் நடந்து போகும் அழகும், இளம் பெண்கள், பிள்ளைகள் அழகிய ஆடை அணிந்து, அதை மற்றவர்களுக்கு காட்டி மகிழவே நடைபயிலலும், இனிப்பையும், காரத்தையும் வைத்து தட்டுக்களில் ஏந்தியபடி உறவு வீடுகள் நோக்கி நடப்பதும், வருவோர் போவோரிடமும் நலம் விசாரிப்பதும், அப்படி நலம் விசாரிப்பதிலும், சிலர் தலைமுறை கடந்தும் நலம் விசாரிப்பதும், விபரம் சொல்வதும், நண்பர்கள் ஊர் சுற்ற கிளம்பி, ஆறு, ஏரி, குளம், எல்லாம் சுற்றுவிட்டு, கோயில்கள் மற்றும் பொது இடங்களில் சந்தித்து மகிழ்வதும், திரைப்படம் பார்க்க செல்வதும் என அந்த ஒரு நாள் மனித மனதின் அத்தனை அழுக்குகளையும், அழுத்தத்தையும் வெளித்தள்ளி, புத்துணர்வூட்டும் திருநாள் ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபத் திருநாள்.

இரவில் அனைத்து வீடுகளிலும் திண்ணைகளில், வாசல்களில், தெருக்களில் எங்கும் ஒளி வெள்ளம் சிந்த விளக்கேற்றி வைத்துவிட்டு, அந்த வெளிச்சத்தில் அழகு மிளிர புத்தாடையுடன், மத்தாப்பு காட்டி சிரிப்பதும், சாட்டை சுற்றி மகிழ்வதும், சங்கு சக்கரம் சுழலவிட்டு சிந்தனையை சுண்டி இழுப்பதும், வானம் விட்டு ஒளிவெள்ளம் பாய்ச்சுவதும், கண்கொள்ளா காட்சிகள். நாள்முழுக்க ஊரெங்கும் கேட்கும் வெடியின் ஒலி முழக்கம் நம்மை அசைத்து, ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அலையவைப்பதும் அலாதியான இன்பம் தரும். இவையெல்லாம் நேற்றைய தீபத் திருநாளின் அழகிய முகம்.

இன்றைய தீபத் திருநாள் கொண்டாட்டம், மனிதனுக்கு இத்தகைய மகிழ்ச்சியை தருகிறதா என்றால் இல்லை. ஒரு தொலைக்காட்சியின் முன்பு இன்று எல்லா திருவிழாக்களும் அடங்கி விடுகிறது. மக்களுக்குள் மகிழ்ச்சி பரிமாற்றம், மனப்பகிர்வு, உணர்வுப்பகிர்வு, குடும்ப பகிர்வு, எதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய், குடும்பமே சிறை என்பது போன்ற சூழ்நிலையில் வாழ்க்கை முறை, வணிக சூழ்ச்சியால் முடங்கிப் போனது. மக்களின் இன்பம் மூழ்கிப் போனது. மனிதனை மனிதன் சந்திக்காது ஒதுங்குதல், புறக்கணித்தல் இவை மனிதக் குற்றங்கள் பெருக அதிக காரணம். மனம் விட்டுப் பழகும் உறவுகள், நட்புகள் குறைய குறைய மனிதன் குற்றவாளியாக மாறுவதை தவிர்க்க இயலாது.

திருவிழா வருவதற்கு ஒருவார காலமாக அதற்கு தயாராகும் குதூகலம் பற்றி சொல்லவே வேண்டாம். மிகுந்த பரபரப்பும், அதிக கேள்விகளும், ஆர்வமும் உண்டாக்கும் காலம் இதுவாகும். குடும்ப பொறுப்புகளை சுமப்பவருக்கு இது தொல்லையாக இருக்கும். சுமையாக இருக்கும். சமாளிக்க தடுமாறும் பொருளாதார பிண்ணனி. அதை சரிகட்ட குறுதொழில், சிறுதொழில், விவசாயம் செய்வோர் திருவிழாவின் தேவைக்காய் கூடுதலாய் உழைப்பதும், குழந்தைகளும் அந்த உழைப்பில் பங்கு எடுத்துக் கொள்வதும், அப்படி கலந்து கொள்ள அவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்துவதும், உனக்கு சட்டை வேணுமா வேண்டாமா..? வெடி வேணுமா வேண்டாமா..? அப்படின்னா இதை செய். அதை செய் என குழந்தைகளை செல்லமாய் விரட்டி வேலை வாங்குவதும், பெரியவர்கள் சொன்ன வேலையை செய்துவிட்டு, வாக்குறுதியை பெரியவர்கள் காப்பாற்றாத போது, குழந்தைகள் அவர்களிடம் முரண்டு பிடித்து, அடம் பிடித்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சமாதானம் ஆகாமல் பெரியவர்களை திணற வைப்பதும்…… நினைக்க நினைக்க நெஞ்சம் மறக்க முடியா இனிய நினைவலைகளாக பதிந்திருக்கும் அழகிய உணர்வு.

காரணங்கள் எதுவானாலும் மக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, மூச்சு வாங்க வைத்து, மகிழ்ச்சியை தந்து, மாற்றம் தரும் திருவிழாக்கள் தொடர்ந்து மக்கள் கொண்டாடும் வகையில் நாடும், சூழலும், பொருளாதாரமும் இடம் கொடுக்க வேண்டும் என்பது எம் விருப்பம். மக்கள் மக்களோடு கலந்து மகிழ இந்த விழாக்கள் மட்டுமே உதவுகின்றன. மகன் வீடு, மகள் வீடு, மருமகள் வீடு, பேரன் வீடு, பேத்தி வீடு, அப்பா வீடு, தாத்தா வீடு என ஒவ்வொரு உறவையும் தேடி ஓடும் அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் தருவது இந்த விழாக்களே. எனவே இன்பமாய், இதமாய், அனைவரும் பாதுகாப்புடன் பங்கெடுத்துக் கொண்டு இது போன்ற விழாக்களை கொண்டாடி மகிழ்வோம்.

சிந்தனையில் சிறகு பூட்டி, கற்பனையில் அழகு கூட்டி, உண்மையில் அழுத்தம் காட்டி, மண்வாசனையில் தன்வாசனை கலந்து பொங்கும் தமிழில் பிறர் மனதில் தங்கும் கதைகளை தருவதில் வல்லவனான என் இதயத்தோழன் பரிவை.சே.குமார் முதன்முறை ஒரு வித்தியாசமான ஆசையை வெளியிட்டதன் விளைவாய் நானும் அன்புக்கு இணங்கி இந்த கட்டுரையை எழுதி உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

அன்பும் பண்பும் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்து.

என்றும் அன்புடன்
”மனசு” நிறைந்த தமிழ்க்காதலன். 

-எனது அன்பினை ஏற்று தனது அலுவல்களுக்கு இடையே கட்டுரை எழுதி அனுப்பிய நண்பனுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.  

7 கருத்துகள்:

 1. நல்லது...

  தங்களுக்கும் தங்களுக்காக கட்டுரை எழுதிய தமிழ் காதலனுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

  பதிலளிநீக்கு
 2. மங்களம் பொங்கும் திருநாளாக
  மனதினில் இந்நாள் நிலைத்திடவே
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
  அனைவருக்கும் என் இனிய
  தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

  பதிலளிநீக்கு
 3. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 5. அன்புத்தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளிநல்வாழ்த்துகள். என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.

  கவிஞர்.தமிழ்க்காதலனின் கட்டுரையே கவிதையாய்..மிக அருமை.

  பதிலளிநீக்கு
 6. பகிர்வுக்கு,நன்றி குமார்!///உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல மறந்து விட்டது.நாம் கொண்டாடாது விடினும்,கொண்டாடுவோருக்கு வாழ்த்துச் சொல்வது தமிழர் பண்பாடு,இல்லையா?///உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்&நண்பர்கள்&உறவினர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. தீபாவளி வாழ்த்துக்களைச் சொன்ன...

  சகோ. சௌந்தர்
  அம்பாளடியாள் அம்மா
  தனபாலன் சார்
  வெங்கட் அண்ணா
  காயத்ரி அக்கா
  சகோதரர். யோகராஜா

  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...