மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : திருக் கார்த்திகை


திருக்கார்த்திகை என்றாலே சின்ன வயதில் கார்த்திகை அன்று போட்ட ஆட்டம்தான் நினைவுக்கு வரும். இப்போ இங்கு வந்த பிறகு நல்லநாள் கெட்டநாள் எல்லாம் ஒன்றுதான்.  எல்லா நாளும் வேலைக்குப் போனோமா வந்தோமா என்றுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஊரில் இருக்கும் போது கார்த்திகை என்றாலே முதலில் சுளுந்து கட்டி வைப்பதற்குத்தான் ஆசைப்படுவோம். பனையின் காய்ந்த ஓலையை எடுத்து வந்து தரையில் ஊன்றுவதற்கு வாகாக மட்டையை செதுக்கி, ஓலையை சேர்த்துக் கட்டி தயார்ப்பண்ணி வைத்து விடுவோம். எல்லார் வீட்டிலும் ரெண்டு மூணு சுளுந்து கட்டி வைத்திருப்பார்கள்.

கார்த்திகைக்கு முதல் வாரம் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஊரில் இருந்து கிளியாஞ்சிட்டி (களிமண்ணில் செய்த சிறிய விளக்கு) கொண்டு வந்து கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாக நெல் அல்லது அரிசி வாங்கிக் கொண்டு போவார்கள். பிறகு காலம் மாற மாற காசுக்கு விற்க ஆரம்பித்தார்கள். தற்போது அப்படி விற்க வருவதில்லையாம். 

எங்கள் வீட்டில் எங்கம்மா சீதனமாகக் கொண்டு வந்த பித்தளையில் ஆன சின்னச் சின்ன அழகிய விளக்குள் இன்னும் இருக்கின்றன. அம்மா அவற்றை பளபளவென விலக்கி பொட்டு வைத்து திரியிட்டு எண்ணெய் ஊற்றி வைத்து விடுவார். சூரியன் மறைந்ததும் எல்லார் வீட்டிலும் விளக்கு ஏற்றுவார்கள். அப்போது எங்க வீட்டிலும் அக்காக்கள், நான், தம்பி என எல்லாரும் விளக்கேற்ற ஆரம்பிப்போம். வாசற்படிகளின் இருபுறமும் வைப்போம். வீட்டில் ஏற்றுவதுடன் மட்டுமில்லாமல் மாட்டுக் கசாலை, கோழிக்கூடு என எல்லா இடத்திலும் விளக்குகள் ஏற்றி வைப்போம். எல்லாருடைய வீட்டிலும் இப்படித்தான் விளக்கேற்றுவார்கள்.

எல்லாருடைய வீட்டிலும் இருந்து மாரியம்மன் கோவிலுக்கும் விளக்கு கொண்டு வந்து வைப்பார்கள். எல்லாருடைய வீட்டிலும் விளக்கேற்றியதும் சுளுந்தை எடுத்துக் கொண்டு வயலுக்குப் போவோம். நடவுக்குப் பின் கருநடை திரும்பிய பயிர் கருகருவென வளர்ந்து நிற்கும். இரவு நேரத்தில் வயல் வெளியில் ஆனந்தமாகக் காற்றடிக்கும். அந்தக் காற்றையும் அந்த ஏகாந்தத்தையும் அனுபவித்திருந்தால் மட்டுமே அதை நினைவில் நிறுத்தும்போது முழுச் சந்தோஷத்தையும் சுவைக்க முடியும்.

வயலின் சனி மூலையில் சுளுந்தை நட்டு வைத்து அதன் மேற்புறம் தீயை வைத்தால் அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கும். ஒரு வயலில் அல்ல... ஆங்காங்கே என எல்லா வயல்களிலும் ஒரே நேரத்தில் சுளுந்து எரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு கண்மாயில் இருக்கும் எங்கள் காவல் தெய்வம் முனியய்யா கோவிலுக்குப் போய் அங்கும் சுளுந்து ஏற்றி வைத்து விட்டு அங்கு கொஞ்ச நேரம் வெடியெல்லாம் போட்டு விட்டு திரும்புவோம். பின்னாளில் சுளிந்துக்குள்ளும் வெடிகளை வைத்து கட்டி வைத்தும் பற்ற வைத்திருக்கிறோம்.

கோவிலில் வந்து எல்லா வீட்டிலும் இருந்து வந்த விளக்குளின் திரிகளையும் எண்ணையையும் ஒன்றாக சேர்த்து கொட்டாச்சிகளில் வைத்து கண்மாய்க்கு எடுத்துக் கொண்டு போய் தெப்பம் விட்டு தண்ணிக்குள் ஆட்டம் போட்டு.... அட... அட... ஆனந்த அனுபவம் போங்க.

கிராமத்து வாழ்க்கையை விட்டு நகரத்துக்கு வந்த போது வீட்டில் விளக்கேற்றுவதோடு கார்த்திகை முடிந்தது, இப்போதெல்லாம் மெழுகில் விற்கும் விளக்குகளே பெரும்பாலானா வீடுகளில் கார்த்திகை தீபமாக ஆகிவிட்டது என்பதை எல்லோரும் அறிவோம்.

இன்று வேலை விட்டு வந்ததும் எங்க அம்மாவுக்கு போன் பண்ணினேன். என்னப்பா.... வெளக்கேத்திட்டு உக்காந்திருக்கேன்.. அப்பாவும் நானும்தான் இருக்கோம்... என்றார்.  நாங்களெல்லாம் ஆட்டம்போட்ட வீட்டில் இரண்டு பேர் மட்டுமே... எங்கள் வீட்டில் மட்டுமல்ல.. எங்க ஊரில் எல்லாருடைய வீட்டிலும் பெரியவர்கள் மட்டுமே... விளக்கு ஏற்றி வைத்தாலும் நாங்கள் அனுபவித்த சந்தோஷங்களைத் தொடர இப்போது ஆளில்லை என்பதே உண்மை.

மாட்டுக் கசாலையும்... கோழிக்கூடும் வாழ்ந்து சென்றவற்றை நினைவில் வைத்து வெறுமையாய் நிற்கின்றன. நாங்கள் தெப்பம் விட்ட காலத்தில் தண்ணீர் நிறைந்து கிடந்த கண்மாய்க்குள் நீர் சூழ நின்ற முனியய்யா... இப்போதும் நீரில்லா கண்மாய்க்குள் நின்று காத்துக் கொண்டிருக்கிறார். பயிர்கள் இசைபாட சுளுந்து தாங்கிய வயல்கள் எல்லாம் கருவை மரங்களின் பிடியில் சிக்கி சுளுந்தை மரணிக்கச் செய்து விட்டன.

மீண்டும் அந்தக் காலம் வருமா என்று யாராவது கேட்டால் வரும் என்று சொல்ல முடியாத நிலை. சரிங்க இங்கு துபாயில் மழை பெய்கிறதாம். அபுதாபியில் காலை முதல் மேகம் இருண்டு கொண்டுதான் இருந்தது... இன்னும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் மழையில்லை... காற்று மட்டும் இருக்கிறது. ஒருவேளை லேசான தூறல் வரலாம்.


அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
தீபம் மிகஅழகு ஏக்கங்களை எடுத்தியம்பிய விதம் நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி சொன்னது…

இன்றைய வாழ்க்கை நிலை ஏக்கங்களே மிஞ்சி நிற்கின்றன.

உங்கள் மலரும் நினைவுகள் என்னையும் ஊரில்
நாம் கார்த்திகைத் தீப நாளில் செய்தவற்றை நினைவுபடுத்திப் போனது.

நல்ல பகிர்வு.

கார்த்திகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

த ம.2

துரை செல்வராஜூ சொன்னது…

மண் வாசம் வீசும் பதிவு!..
மலரும் நினைவுகள் அருமை!..

வசீகரிக்கும் எழுத்து நடை!.. வாழ்க!..

இராய செல்லப்பா சொன்னது…

கார்த்திகை தீபத் திருநாளில் எனது நல்வாழ்த்துக்கள்!

தனிமரம் சொன்னது…

ஏக்கங்களே மிஞ்சி நிற்கின்றன எங்கும்.ம்ம்

Unknown சொன்னது…

உங்களுக்கும் வாழ்த்துக்கள்,குமார்!கிராமத்து நினைவுகள் எங்களையும் வாட்டுகின்றது.அண்மையில் சென்ற போது,ஏண்டா வந்தோம் என்று ஆகி விட்டது,ஹூம்!அதாவது,நகரை அண்டியிருந்ததால் வினையாகி விட்டது!(நரகமாகி விட்டது!)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மலரும் நினைவுகள் என்றுமே இனிமையானவை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ம்ல்லரும் நினைவுகளுடன்
இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான நினைவுகளை நினைக்க வைத்தது...

இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Menaga Sathia சொன்னது…

இதெல்லாம் ரொம்பவே மிஸ் செய்கிறோம்...படிக்கும் போதே எனக்கும் சொடுவர்த்தி சுத்த ஆரம்பித்துவிட்டது..மலரும் நினைவுகள்!!

Asiya Omar சொன்னது…

நினைவுகள் பகிர்வு அருமை.வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…


தீபத்திருவிழா எங்கள் கிராமத்தில் விசேடமாக கொண்டாடுவர்!

r.v.saravanan சொன்னது…

இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் குமார்

நம்பள்கி சொன்னது…

போ!+1

ராமலக்ஷ்மி சொன்னது…

நீங்காத நினைவுகள். தீபத்திருநாள் வாழ்த்துகள்!

ஜோதிஜி சொன்னது…

ஒவ்வொரு விழாவும் குழந்தைகளின் சந்தோஷத்தை அதிகப்படுத்துகின்றது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இப்போதெல்லாம் கார்த்திகை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப் படுவதில்லை.... இனிய நினைவுகள்....... தலைக்கு மேல் நெருப்புப் பொறி பறக்க சுற்றியது நினைவில் பசுமையாக!

த.ம. 11

cold pressed oil சொன்னது…

Deepangal!! gramiyum/ Cold pressed oil, the oil is extracted by the traditional way of churning. In this process, no heat is added, keeping all the nutrients of the oil intact 💪.