மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 நவம்பர், 2013

மனசின் பக்கம்: உள்ளம் கொள்ளை போச்சுதே...

சில நாட்களாக சௌதியில மழை, பஹ்ரைன்ல மழை, அட ஏன் துபாய்ல மழை... புஜேராவில் மழை என்று கேட்கும் போது என்னடா இது அபுதாபியில தூரல் கூட போடவில்லையே என்று வருத்தமாகத்தான் இருந்தது. நம்ம வருத்தம் வருண பகவானுக்கு கேட்டிருச்சு போல... வியாழன் காலை அழகான மழையுடன் விடியலை ஆரம்பித்து வைத்தார். லேசான தூரலாகத் தெரிய அலுவலகம் போய் விடலாம் என நடக்க ஆரம்பித்தால் சட்டென வேகமெடுத்து நனைக்க ஆரம்பித்துவிட்டது. இனி போக முடியாது என்ற நிலையில் ஒரு கட்டிடத்தின் ஓரமாக ஒதுங்கினேன். பாவம் பள்ளிக் குழந்தைகளும் அவர்களது தாய்மார்களும் ரொம்பவே சிரமப்பட்டார்கள். மழை சற்றே சாந்தமானதும் நடந்து அலுவலகம் சென்று எனது இருக்கையில் அமர்ந்து கண்ணாடி வழியே வெளியே நோக்கினால் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. சனிக்கிழமை இரவு வரை மழை வருவதும் போவதுமாக இருந்தது. இப்போது அருமையான சீதோஷ்ண நிலை தொடர்கிறது. எங்கள் அறையில் குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தாமல் உறங்கும் இரவுகள் இப்போதுதான் கிடைத்திருக்கின்றன. சன்னலைத் திறந்தால் ஊட்டியில் இருப்பது போல் சிலுசிலுவென இருக்கிறது. இனி சில மாதங்களுக்கு வெயிலில் தாக்கம் இல்லாமல் அழகானதொரு சீதோஷ்ண நிலையில் பயணிக்க தொடங்கிவிட்டது பாலைவனப் பூமி.

சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களைக் தெரிந்து கொள்ள முடிந்தது, அதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளினி பாவனாவுக்குப் பதிலாக வைரமுத்து அவர்களிடம் விஷயம் தெரிந்து கேள்வி கேட்பதற்காகவே கோபிநாத் அவர்களை மாபாகாவுடன் இணைத்திருந்தார்கள். போட்டியாளர்கள் பாடலைப் பாடி முடித்ததும் வைரமுத்து அவர்கள் அது குறித்து அழகான விளக்கம் கொடுத்தார். அவரது பேச்சில் தமிழ் விளையாடியது.... அப்பப்பா... அந்த கம்பீரமான குரலில் அழகான தமிழை அப்படியே அனைவரும் பருகத் தந்தார். ஒவ்வொரு பாடலும் உருவான விதம் பற்றி பேசினார். தமிழில் லகர, ளகர, ழகரம் பற்றி அழகாகச் சொன்னார். இளையராஜாவுடனான பிணக்கம் குறித்து கருத்துத் தெரிவித்தார். அவரைப் பற்றி பேசும் போது கண்கலங்கினார். ரஹ்மான், மணிரத்னம் குறித்துப் பேசினார். கடைசியில் தற்போது சூப்பர் சிங்கரில் இருக்கும் பத்துப் பேருக்கும் ஆளுக்கு பத்தாயிரம் கொடுப்பதாக அறிவித்துச் சென்றார்.


னது நட்பு வட்டத்தில் பார்க்கச் சொன்ன 'அன்னயும் ரசூலும்' (Annayum Rasoolum) மலையாளப் படத்தை நிறையப் பேரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. சனிக்கிழமை எதார்த்தமாக நண்பரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது அங்கு ஒரு மலையாள நண்பர் 'புள்ளிப்புலிகளும் ஆட்டின் குட்டிகளும்' பார்த்துக் கொண்டிருந்தார். 'அன்னயும் ரசூலும் இருக்கா?' என்று நண்பரிடம் மெதுவாகக் கேட்டேன். 'எல்லாப் படமும் இருக்கு... என்னா அன்னயும் ரசூலும் வேணுமின்னு கேக்குறீங்க?' என எதிர்க்கேள்வி கேட்டார். 'அருமையான படம் என்று நட்பு வட்டத்தில் சொன்னார்கள் அதான் கேட்டேன்' என்றதும் 'பென்டிரைவ் இருக்கா?' என்று கேட்டார். நான் சென்றது காய்கறி வாங்க... அப்படியே நண்பரைப் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் சென்றேன் அதனால் கொண்டு போகவில்லை. சரி நான் கொண்டு வருகிறேன் என்றவர் அன்று மதியமே இரண்டு படங்களையும் நண்பர் ஒருவரிடம் கொடுத்து விட்டிருந்தார். இன்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டதால் முகப்புத்தகத்தை ஒதுக்கி அன்னாவைப் பார்த்தேன். பார்த்து முடித்தும் அந்தக் காதல் இன்னும் எனக்குள்ளே.... என்ன அழகான கதை... அதை நகர்த்திய விதம்... அப்பப்பா... இன்னும் எத்தனை முறை பார்ப்பேன் என்று தெரியவில்லை. கதை நகரும் இடங்கள் அழகென்றால் நம்ம ஆண்ட்ரியா... வாவ்... கொள்ளை கொள்கிறார். அதுதான்யா அனிருத்துப் பய அவளுக்கு உதட்டுல.... சரி விடுங்க... நம்மாள முடிஞ்சது 'ம்ம்ம்'ன்னு ஒரு பெருமூச்சுத்தான்... மதம் கடந்த காதலை எந்தவொரு விரசமும் இல்லாமல்... நாயகன் நாயகிக்கு ஸ்விச்சர்லாந்திலோ அல்லது இதுவரை போகாத பாலைவனப் பகுதியிலோ பாடல் வைக்காமல்... குத்துப்பாட்டோ... டாஸ்மாக் பாட்டோ இல்லாமல் தெளிந்த நீரோடையாக கொண்டு சென்றிருக்கும் படத்தின் இயக்குநருக்குப் பாராட்டுக்கள். படத்தின் முடிவு எதிர்பார்ப்பது போல் அமைந்திருந்தாலும் படத்தின் தாக்கம் நமக்குள் பழசை எல்லாம் கிளறிவிட்டுத்தான் செல்கிறது. முடிந்தால் எல்லாரும் பாருங்கள்... கொஞ்சம் பழசைக் கிளறிப் பார்க்கலாம்.

நேற்று இரவும் அப்படித்தான் ஏதாவது பார்க்கலாமென இணையத்தில் நோண்டியபோது 'நீயா நானா' கண்ணில்பட்டது. பேய் பற்றிய நிகழ்ச்சி முன்னரே பார்த்தாச்சு. இதைப் பற்றி தனிப்பகிர்வே போடலாம். அதனால் அதற்கு முன்னால் பார்க்கலாம் என போனால் 'குழந்தைகளிடம் கற்றதும் பெற்றதும்' என்னைப்பார் என்றது, சரியென்று அதைப் பார்த்தால் ஆங்கில மோகத்தில் இந்தத் தலைமுறைக்கு தமிழைச் சொல்லிக் கொடுப்பதையே பாவம் என நினைக்க ஆரம்பித்துவிட்டோம் என்பது குழந்தைகள் பேசும் போது தெரிந்தது. தமிழ்ல கேள்வி கேளுங்கள் என்று சொன்னபோது ஒரு தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த பையன் அழகிய தமிழில் கேள்வி கேட்டான். தமிழ் குழந்தை அதுவும் ஆசிரியையின் குழந்தை எனக்கு தமிழ்த் தெரியாது. நான் இந்தி படிக்கிறேன் என்று சொன்னது. நான் யோக்கியன் என்று சொல்லவில்லை, எனது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறேன் இருந்தாலும் தமிழை விருப்பப் பாடமாக்கி தமிழ் சார்ந்த அனைத்துப் போட்டிகளிலும் குழந்தைகளைப் பங்கெடுக்கச் சொல்லியிருக்கிறேன். வீட்டிலும் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் விஷால் திருவாசகப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கலாகச் சொல்லியிருக்கிறான். சரி விஷயத்துக்கு வருவோம், ஒரு குழந்தை 'அம்மா என்னை அடிப்பார்கள்' என்று சொல்ல, அந்தக் குழந்தையின் அம்மா 'அவ சேட்டை பண்ணுவா சார்.. அதுக்காக அடிப்பேன்.. எதனால அடிச்சாங்கன்னு உணர மாட்டா சார்... ஒரு சாரி கூட கேக்கமாட்டா சார்' என்று சொன்னார். உடனே அந்தக் குழந்தை 'அம்மா சாரின்னு சொன்னா முதல்ல தெளிவா உணர்ந்து பார் அப்புறம் சாரி சொல்லும்பாங்க... அதுக்காக கொஞ்சம் நேரம் கழித்து சொன்னா ஒரு சாரி சொல்ல இம்புட்டு நேரமாம்பாங்க' என்று சொன்னது போது கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தது. அப்போது கோபிநாத், 'உங்களது செயல் உங்க குழந்தையை எவ்வளவு பாதிச்சிருக்கி பாருங்க'ன்னு சொன்னதும் 'இவ்வளவு தூரத்துக்கு பாதிக்கப்படுவான்னு தெரியலை சார்' என்றார் அந்தத்தாய். அந்தக் குழந்தையின் அழுகையைப் போக்கும் விதமாக 'உங்களுக்கு அம்மாவைப் பிடிக்குமா?' என்ற கோபிநாத்தின் கேள்விக்கு 'ம்' என்று பதில் வந்தது. 'எம்புட்டு பிடிக்கும்?' என மறுபடியும் கேட்டார். 'ரொம்பப் பிடிக்கும்' என்றது அழுகையின் ஊடே அந்த மழலை. அதுக்கு அப்புறம் அவர் 'ஏன் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்?' என்று கேட்டார். அந்தக் குழந்தை சொன்ன பதில் என்னை கண்ணீர்விட வைத்துவிட்டது. அந்தக் குழந்தைக்கு விரிவாக சொல்லத் தெரியவில்லை. அது சொன்ன ஒற்றை வரிப் பதில் இதுதான் 'ஏன்னா அவங்க அம்மா, தாய்' அவ்வளவுதான். அம்மா அழ, மகள் அழ, நானும் அழுதேன்ய்யா... முடிந்தால் எல்லாப் பெற்றோரும் இந்த நிகழ்ச்சியை பாருங்க.

து அப்பாவாக நம்ம கதை... பாப்பா கூட நாலு வருடம் இருந்திருக்கிறேன். தூக்கம், குளியல், சாப்பாடு எல்லாம் அவங்களுக்கு என்னோடுதான்... எல்.கே.ஜி படிக்கும் போது இரவுப் பணி முடித்து வந்து அப்போதுதான் படுத்திருப்பேன். எப்படி நான் வந்தது தெரியுமோ... எனக்குத் தெரியாது... என் மேல் ஏறிப் படுத்துவிடுவார். 'பாப்பா எந்திரி குளிக்கலாம் ஸ்கூல் போகணும்' என்று அவங்க அம்மா எழுப்பியதும் எழுந்து அருகில் உக்காந்து கொண்டு 'அப்பா வாங்க... அப்பா... பாப்பா குளிக்கணும்' என்று நோண்ட ஆரம்பித்துவிடுவார். 'ஏன்டி அவரை கிளப்புறே..? இப்பத்தான் வந்து படுத்தார்... நீ வா' என்றாலும் எப்படியும் என்னை எழுப்பி குளித்து, சாப்பிட்டு பள்ளியில் கொண்டு போய் விட்டுவிட்டு வர வைத்துவிடுவார். அவரது மழலைக் காலத்தில் எல்லாச் சந்தோஷத்தையும் நான் அனுபவித்தேன். ஆனால் விஷால் விஷயம் வேறு. அவன் பிறந்தது முதல் அவனுடன் நான் இருப்பதற்கு கடவுள் இடமளிக்கவில்லை. வருடம் ஒரு முறையே அவனுடைய மழலையை அருகில் இருந்து ரசிக்க முடிகிறது. ஸ்கைப்பில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். கணிப்பொறி பிரச்சினையால் வீடியோ கடந்த இரண்டு மாதமாக வேலை செய்யவில்லை. பேசும் போது அவன் அடிக்கும் அரட்டைகள் அப்பப்பா.... எல்லாவற்றையும் இரவில் படுத்துக் கொண்டு அசை போட்டு ரசிக்கத்தான் முடிகிறது. இரு தினங்களுக்கு முன்னர் 'உங்க மகன் எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கான். என்னால மேய்க்க முடியலை' என்று அவரது அம்மா சொல்ல, நான் 'அப்படியே வளரட்டும் சின்னக் குமார், பின்னாடி பெரிய ஆளா வருவான்' என்று சொல்ல, 'ஆமா பெரியாளாகி ரஜினியோட நடிப்பேன்' என அவனது தத்தக்கபித்தக்க மழலையில் சொன்னான். 'ரஜினி வேணான்டா இப்போ உள்ள நடிகராச் சொல்லு' என்றதும் பேசாமல் இருந்தவன், திடீரென 'அம்மா டிவியில கே.விஷால்ன்னு பேரு போடுவாய்ங்க அப்பப் பாத்துக்கங்க நாங்க எப்பூடின்னு' என அசால்ட்டாக அடித்துவிட்டான் பாருங்கள். இன்னும் அதை நினைத்து நினைத்து சிரிக்கிறேன். எப்படியும் குடும்பத்தை விரைவில் இங்கும் கொண்டு வர வேண்டும். 

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

நன்று......சிறு வயதுக் குழந்தைகளைப் பிரிந்திருப்பது,பொருளாதாரத்துக்குப் பலம் எனினும்,பிற் காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும்.சீக்கிரம் அழைத்து விடுங்கள்.///தாய்....அம்மா...ம்...!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சே.குமார்(அண்ணா)

அருமையான தொகுப்பு....நானும் பார்த்தேன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அதில் அழகாக அழகிய தமிழில் வைரமுத்து பேசிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது....அண்ணா தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

குடும்ப நினைவுகள் என்றும் இனிமையானவை. கடைசி வரியில் சொல்லி இருக்கின்றீர்களே, அதை முதலில் செயல்படுத்துங்கள்.
நன்றி நண்பரே.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

த.ம.2

துரை செல்வராஜூ சொன்னது…

தாங்கள் - தங்கள் குடும்பத்தாருடன் கூடி வாழ்ந்திட இறைவன் நல்லருள் பொழிவானாக!..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல சுவாரசியமான தொகுப்பு. வைரமுத்து இளையாஜா இணைய முடியாதா என்ற கோபியின் கேள்விக்கு வைரமுத்து அளித்த பதில் அருமை. அவர்கள் இணைந்து படைபுகளை தரவேண்டாம் அது இனிமேல் எடுபடாது. ஆனால் குறைந்தபட்சம் நட்பாகக் கூடவா இருக்கக் கூடாது?. எனது அபிமான இசை அமைப்பாளராக இருந்தாலும் ராஜாவின் மீது கோபம் வரத்தான் செய்கிறது.
குழந்தைகள் திறமையானவர்கள். விசாலுக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கடைசியில் சொன்ன விஷயம் - மனதைத் தொட்டது... விரைவில் நடக்கட்டும்....

த.ம. 3

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மழலை மொழி ரசிக்கவைத்தது ..!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சில நிகழ்ச்சிகள் உங்களின் பதிவின் மூலம் தான் அறிந்தேன்... நன்றி...

ஜீவன் சுப்பு சொன்னது…

Very beautiful post kumar ...!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//பேசும் போது அவன் அடிக்கும் அரட்டைகள் அப்பப்பா.... எல்லாவற்றையும் இரவில் படுத்துக் கொண்டு அசை போட்டு ரசிக்கத்தான் முடிகிறது//

கொஞ்சம் காஸ்ட்லி விலைதானோ :-(

செங்கோவி சொன்னது…

ரசிக்க வைத்தது மழை முதல் மழலை வரையான அனுபவங்கள்!

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரரே..
அழகான படத்தைப்பற்றி ப்கிர்ந்திருப்பதன் மூலம் தங்கள் மென்மையான குணம் அறிய முடிகிறது. அற்புதமான வைரமுத்து அவர்களின் நிகழ்ச்சி கண்டு நானும் மெய்மறந்தேன். கே.வி எனும் வருங்கால சூப்பர் ஸ்டாரை திரைஉலகம் காண இருப்பது நினைத்து மகிழ்ச்சி.அழகு கலைகள் அனைத்தும் பெற்று பார்போற்றும் நன்மகனாய் உருவாக வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி சகோதரர்..

r.v.saravanan சொன்னது…

'அன்னயும் ரசூலும்' படம் பார்க்க முயற்சிக்கிறேன் குமார்

'அப்படியே வளரட்டும் சின்னக் குமார், பின்னாடி பெரிய ஆளா வருவான்' என்று சொல்ல, 'ஆமா பெரியாளாகி ரஜினியோட நடிப்பேன்' என அவனது தத்தக்கபித்தக்க மழலையில் சொன்னான்.

வாழ்த்துக்கள் கண்டிப்பா பெரிய ஆளாக வரட்டும்

தங்களின் இந்த மனசின் பக்கம் எனக்கு பிடிதமான ஒன்று இது நிறைய எழுதுங்க குமார்

Unknown சொன்னது…

வைரமுத்து பேச்சை..இல்லை இல்லை ..கவிதையை உங்களைப் போன்றே நானும் ரசித்தேன் !
த.ம +1

கவியாழி சொன்னது…

உங்களின் ஆதங்கம் ஆனந்தமாகட்டும்