மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 6 நவம்பர், 2013

கோபிநாத்தின் பாஸ்வேர்டு

ந்தத்  தவறுக்கு நான் காரணம் இல்லை. யாரோ செஞ்ச  தவறுக்கு என்னை ஏன் பனிஷ் பண்றீங்க?’ என்று புலம்பும் யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் இரக்கம் வரவே செய்கிறது.  நாம் காரணம் இல்லாவிட்டாலும், வாழ்வின் சில தருணங்களில் சில தவறுகளுக்கு நாமே பொறுப்பு ஏற்க நேரும். ஒவ்வொரு நிமிடமும் நிம்மதி இல்லாமல் கரைந்து மருகும் அந்தத் துயரம் தரும் சுமையை குழந்தைகள் அடிக்கடி சுமக்கிறார்கள். அதனைத் தாங்கிக்கொள்வதற்கான சக்தியும், வயதும், பக்குவமும் அவர்களுக்கு இருக்கிறதா என்று ஆராயும் பொறுமைகூட நம்மில் பலருக்கு இல்லை!

ரண்டாவது படிக்கும் ஏழு வயது பிரமிளா, தன் வகுப்புப் பிள்ளைகளின் விளையாட்டுப் பொருளாகி, மனசுக்குள் சுருண்டுகிடக்கிறாள். தாயும் தந்தையும் அளித்த கறுப்பு நிறம்தான் அவள் எதிர்கொள்ளும் சிக்கல். உடன் படிக்கும்  பிள்ளைகள் விளையாட்டாக செல்லப்பெயர் வைத்துக் கூப்பிட, அதை தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய வகுப்பு ஆசிரியரும் கூடவே சேர்ந்து சிரிக்கிறார்.

வீட்டுப் பாடம் எழுதி வராத நாட்களில், வகுப்பறை விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்ட தருணங்களில், ஆசிரியரும்  பட்டப்பெயர் சொல்லி அவளைத் திட்ட, அந்தப் பெயரே அவளுக்கு நிலைத்துவிட்டது. தன் நிறத்தைக் கிண்டலடிக்கும் பிள்ளைகளிடம் சேர முடியாமல், தன் மனநிலையை உணராத ஆசிரியரிடம் வேதனையைப் பகிர்ந்துகொள்ள முடியாமல், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிரமிளாவுக்குள் ஒரே ஒரு கேள்வி மட்டும் அரித்துக்கொண்டே இருக்கிறது... 'கறுப்பு நிறத்தில் பிறந்தது, நான் செய்த தவறா?’

குழந்தைகளின் மனது பற்றி வரிந்துகொண்டு பேசும் நம் சமூகம், அது காயப்படுவதைப் பற்றி ஏன் கரிசனம்கொள்வது இல்லை? 'சின்னப்புள்ள... பெருசா எடுத்துக்காதுஎன்று பெரியவர்கள் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்துகொள்வது எப்படிச் சரியாகும்?

நேற்று வரை சிந்துவின் குடும்பப் பின்னணி யாருக்கும் தெரியாது. முதல் வகுப்பில், குழந்தைத்தனத்தின் எல்லா அழகோடும் அவள் தன் வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டு இருந்தாள். அவள், தாய்-தந்தை இல்லாத பிள்ளை என்று தெரியவந்த பிறகு, அவள் மீதான பார்வை சிலருக்கு அடியோடு மாறிப்போகிறது. அதுவரை அவளிடம் கேட்கப்படாத சில கேள்விகள் ஆர்வத்தோடு கேட்கப்படுகின்றன. பழக்கப்பட்ட அந்தச் சூழ்நிலைக்குள், திடீரென்று தான் வேறு ஓர் ஆள் போல நடத்தப்படுவது அவளை ரொம்பவே அழுத்திப்போடுகிறது. சில முகங்கள் கேள்விகளோடும், சில முகங்கள் பச்சாதாபத்தோடும், சில முகங்கள் இறுக்கத்தோடும் கடந்துபோவதை அவளால் உணர முடிகிறது. தான் யார் என்பது பற்றி அதுவரை யோசிக்காத சிந்துவுக்குள், தன்னைக் குறித்த கேள்விகளும், சக மனிதர்களின் சில திடீர் மாற்றங்களும், குழப்பத்தையும் இனம்புரியாத இறுக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

தான் அந்நியப்படுத்தப்பட்டுவிட்டதாக அடிமனதில் அழுகிற அந்தக் குழந்தையின் குரலை, பரபரப்புகளோடு ஓடிக்கொண்டிருக்கிற உலகம் ஒரு கணப்பொழுதில் கடந்து போய்விடுகிறது. ஆனால், தன்னை வித்தியாசமாகப் பார்க்கும் சில மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தப்பிக்க, யாரோடும் சேராமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு அவள் வரவேண்டி இருக்கிறது.

தாயையும் தந்தையையும் பறிகொடுத்துவிட்டு மிகச் சிறுவயதிலேயே தனி ஆளாகிப்போனது சிந்துவின் குற்றமா? கண்களை உருட்டி, கனவுகளில் சிரித்து, முன் வரிசையில் உட்கார்ந்து பாடம் கேட்ட அவளின் குதூகலத்தைத் திருடிக்கொண்ட நாம், எப்படி அவளின் பரிதவிக்கும் மனதுக்குப் பதில் சொல்ல முடியும்?

யரம் சற்று குறைவாக இருக்கும் என் நண்பன் ஒருவனுக்கு, உறவுகள் மத்தியில் அவன் உயரத்தை வைத்து ஒரு பட்டப்பெயர். ஆரம்பத்தில் அவன் அம்மாவும் அப்பாவும் அதை எதிர்த்தாலும், பிறகு இதெல்லாம் விளையாட்டு என்ற தொனியில் விட்டுவிட்டார்கள். பெரியவர்கள் கூப்பிட்ட பெயரிலேயே சின்னப்பிள்ளைகளும் அழைக்க ஆரம்பிக்க, எல்லோரிடம் இருந்து தன்னைத் தொலைவில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

கொஞ்சம் பெரிய பிள்ளையாகி நான்காம் வகுப்புப் படிக்கும்போது, முதன்முறையாக தன் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தினான் அவன். 'அவ்வளவு திமிரா உனக்கு... பெரியவங்கனு ஒரு மட்டு மரியாதை இல்லையா?’ என்று அந்த உறவுக்காரர் அவனை கல்யாண வீட்டில் வைத்து அடித்திருக்கிறார். அவர் பொருளாதார ரீதியாகப் பலமானவர் என்பதால், 'புள்ள வளர்த்திருக்காங்க பாரு புள்ள...’ என்று அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திட்டு விழுந்திருக்கிறது. அன்று முதல் அடுத்தவர்களை அடிப்பதும், எதிர்ப்பவர்களை உதைப்பதுமாக வன்மத்தோடு வளர ஆரம்பித்தான் அவன்.

கல்லூரிக் காலத்தில் அவனுக்கு 'முரடன்என்று பெயர். யாராவது குரலை உயர்த்தினால், சப்பென்று முகத்தில் அறைந்துவிடுவான். 'பேசவிடக் கூடாதுடா... அவன் எகிர்றதுக்குள்ள நாம ஏறி மிதிச்சிரணும். இல்லேன்னா நம்மளை மதிக்க மாட்டானுகஎன்பான். கல்லூரி கல்ச்சுரல், விளையாட்டுப் போட்டிகள் என எல்லா இடத்திலும் இவன் கை 'ஓங்கியேஇருக்கும்.

'ஏன்டா இப்படி 'முரட்டுப்பயனு கெட்டப் பேர் வாங்குற?’ என்று திட்டுவோம். ''குட்டையன்னு ஏச்சு வாங்குறதுக்கு 'முரடன்னு பேர் வாங்குறது ஒண்ணும் பிரச்னை இல்லடாஎன்று சொல்வான் அவன். 'உயரம் குறைவானவன்என்று சிறுவயதில் பலரும் ஏற்படுத்திய காயம், இந்த மனிதர்கள் எல்லோருமே தனக்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்துக்குள் அவனைத் தள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.

தன் உறவுகள் தனக்கு வைத்த பெயரை அழிக்க, அவன் தேடிக்கொண்டதுதான் இந்த 'முரடன்பெயர். தன் உயரத்தைவிட பிரதானமான விஷயமாக அவன் தன் முரட்டுத்தனத்தை முன்வைக்க முயல்வது, அவன் காயங்களுக்கு அவனே போட்டுக்கொள்கிற மருந்து.

25 வயதிலும், 40 வயதிலும்கூட அதீதக் கோபக்காரர்களாக, அர்த்தமில்லாமல் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்பவர்களாக, கூட்டத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக, அடுத்தவர்களிடம் வழி கேட்கக்கூட தயங்குபவர்களாக, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுபவர்களாக, சமூகத்தின் மீது வெறுப்புகொண்டவர்களாக, எதையும் நம்ப மறுப்பவர்களாக, எதன்மீதும் நாட்டம் இல்லாமல் இருப்பவர்களாக, 'நான் அதிர்ஷ்டக்கட்டைஎன்று தன்னையே தாழ்த்திக்கொள்பவர்களாக, சுபகாரியங்களைத் தவிர்ப்பவர்களாக... இருக்கும் பலர், பிரமிளாவைப் போல், சிந்துவைப் போல், என் நண்பனைப் போல் காரணமே இல்லாமல் நம்மால் தண்டிக்கப்பட்டவர்கள்தான்!

பெரியவர்களின் உலகத்தில் பிழைத்துக்கிடக்கும் உயிர்களாக, சார்புண்ணிகளாக வாழ வேண்டிய இடத்துக்கு குழந்தைகள் பல நேரங்களில் உந்தப்படுகிறார்கள். ஒரு குழந்தை, எந்த வகையிலும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்துக்காக காலம் முழுவதும் தண்டனை அனுபவிக்கவேண்டி இருப்பது எந்த வகையில் நியாயம்? தன்னைத் தண்டித்த இந்தச் சமூகத்துடன் இன்னமும் சமாதானம் செய்துகொள்ள முடியாத என் நண்பனின் 'முரடன்வேடத்தை யார் களைவது? நிறத்தின் அடிப்படையில் தன்னைத் தள்ளிவைத்த இந்த மனிதர்களை, நாளை வளர்ந்து ஆளான பிறகு பிரமிளா தள்ளிவைப்பாளா? 'தன் தாய்-தந்தை யார்?’ என்று அறியாத காரணத்துக்காக வித்தியாசமான பார்வைகளை எதிர்கொள்ளும் சிந்து, இந்த உலகத்தை நேசிக்கும் மனுஷியாக உருவெடுப்பாளா? இன்னமும் இவர்களைப் போன்று தினமும் காரணமே இல்லாமல் காயப்படும் பிள்ளைகள் எதிர்காலத்தில் என்ன ஆவார்கள்?

எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்படுவதை, தர்மமும் சட்டமும் ஏற்றுக்கொண்டதே இல்லை. பெரியவர்கள், தர்மப்படியோ, சட்டப்படியோ வாழட்டும். ஆனால், குழந்தைகள் தங்கள் வாழ்வியலைத் தொலைக்காமல் வளரட்டும்!

நன்றி : கோபிநாத்
நன்றி : ஆனந்த விகடன்
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

இந்த இடுகையும் இதற்கு முந்தைய இடுகையும் தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை. நண்பர்கள் யாராவது இணைத்து விடுங்கள்... நன்றி.

Unknown சொன்னது…

பரிவை சே குமார் பரிந்துரைத்த பாஸ் வேர்டு பதிவு அருமை !
தமிழ் மணத்தில் இணைக்கவும் முடியவில்லை ,இணையவும் முடியவில்லை ,,கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !

கவிதை வானம் சொன்னது…

பெரியவர்களின் உலகத்தில் பிழைத்துக்கிடக்கும் உயிர்களாக, சார்புண்ணிகளாக வாழ வேண்டிய இடத்துக்கு குழந்தைகள் பல நேரங்களில் உந்தப்படுகிறார்கள்....உண்மை

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பகவான்ஜி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க முத்துராசன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.