மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கிராமத்து நினைவுகள் : கல்யாணம்

கிராமத்துத் திருமணங்கள் எல்லாம் இப்போது திருமண மண்டபங்களைத் தேடி நகரத்துக்கு வந்துவிட்டது. முதல் நாள் மூன்று மணிக்கு எல்லாப் பொருட்களையும் ஏற்றி வந்து திருமணம் முடிந்த அன்று மதியம் மூன்று மணிக்கு மண்டபத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். அந்த இரண்டு நாட்களும் பரபரப்பாக வேலை நடக்கும். திருமணம் முடித்து வீட்டுக்குச் சென்றால் திருமணம் நடந்ததற்கான அறிகுறி இல்லாது வீடு அமைதியாக இருக்கும். காரணம் சொந்தங்கள் எல்லாம் மண்டபத்துக்கு வந்துவிட்டு சென்றுவிடும்.

கிராமங்களில் திருமண வேலை என்பது நிச்சயம் பண்ணியதில் இருந்து ஆரம்பித்துவிடும். ஒரு புறம் விறகு வெட்டு காயவைத்து அடைந்து வைப்பார்கள். மறுபுறம் நெல் அவிழ்த்து காயவைத்து அரைத்து வைப்பார்கள். இதுவே பெண் வீடாக இருந்தால் முறுக்கு, அதிரசம் என பலகாரங்களுக்கும் மாவு தயார்ப் பண்ணி வைப்பார்கள்.

ஊருக்குள் பத்திரிக்கை வைப்பதில்லை. எல்லாருடைய வீட்டுக்கும் நேரில் சென்றுதான் அழைப்பார்கள். உறவுகளுக்கும் பழகிய நட்புக்களுக்கும் மட்டுமே கொஞ்சமாக பத்திரிக்கை அடித்துக் கொடுப்பார்கள். பத்திரிக்கை கொடுக்க ஊரில் இருக்கும் இளவட்டங்களை ஏரியா வாரியாகப் பிரித்து அனுப்புவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒருவரின் முகவரிக்கு அனுப்பி மற்றவர்களுக்கு கொடுக்கச் சொல்வார்கள்.

ஊரில் அழைக்கும் முறை என்பது எப்படியென்றால் கல்யாணத்துக்கு முன்று நாட்கள் முன்னதாக வீட்டுப் பெரியவர்கள் இருவரும் வீடுவீடாக சென்று அழைப்பு விடுக்க வேண்டும் என்பது எங்கள் ஊரில் கடைபிடிக்கும் முறை. பெரும்பாலும் மாலை வேளைகளில்தான் சொல்லச் செல்வார்கள். அப்போதுதான் ஆண்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருப்பார்கள். செட்டிய வீட்டுக் கணக்குப்பிள்ளைகளாகத்தான் எங்க ஐயாக்கள் இருந்தார்கள். எனவே சாயந்தரம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

ஒவ்வொரு வீடாக கணவன் மனைவி இருவரும் சென்று விவரம் சொல்லி அழைப்பார்கள்.

'அம்மான் (மாமா) உங்க பேத்திக்கு கலியாணம் வச்சிருக்கோம்... நீங்கதான் முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கனும். அயித்த மொத நாளே வந்து வேலவெட்டி பாத்துக் கொடுக்கனும்...' 

'அண்ணம்பொண்டி (அண்ணன் பொண்டாட்டி) உங்க மகனுக்கு கலியாணம் வச்சிருக்கோம்... நீங்கதான் முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கனும்.'

'ஆத்தா தம்பிக்கு கலியாணம் வச்சிருக்கோம்... குடும்பத்தோட வந்து நின்னு செறப்பா செஞ்சிபுடனும்...'

'மச்சான்... இது உங்க வீட்டுத் தேவை.... காய் வாங்குறதுல இருந்து வாழமரம் தோரணம்  கட்டுற வரைக்கும் எல்லாத்துக்கும் வந்துடனும்...'

'சின்னத்தா பேத்திக்கு கலியாணம்... வாவரசிக (சுமங்கலி) நீங்கதான் நின்னு செஞ்சு கொடுக்கனும்...'

"அண்ண மவனே உங்க கொழுந்தியா கலியாணம்.. எங்கயும் போயிடக்கூடாது.. ஓட நடக்க ஒத்தாசைக்கு ஆளு வேணுமப்பு...'

என்று உறவு முறையைச் சொல்லி சந்தோஷமாக அழைப்பார்கள். அவர்கள் கொடுக்கும் காபியையும் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். வீட்டிற்கு முன்னும் பந்தி போடுவதற்கு என்று அருகிலும் கொட்டகை போட்டு வாழை மரம், தென்னங்குருத்தில் தோரணம் கட்டி கல்யாண வீடு களைகட்டும்.

கொட்டகை போடும் போது மழைகாலம் என்றால் தண்ணீர் உள்ளே வராமல் '/\' - இந்த வடிவத்தில் போடுவார்கள். இதற்கு குதிரைக் கொட்டகை என்பார்கள். சாதாரண நாட்கள் என்றால் மட்டக்காவனம் என்று சொல்லப்படும் '-' இந்த வடிவக் கொட்டகை போடுவார்கள்.  எங்க ஊரில் கண்ணப்பன் என்பவர்தான் கொட்டகை போடுவார். எங்க அப்பா அவரை அம்மான் என்றுதான் அழைப்பார். இந்த இடத்தில் போடலாம் மாப்ள.... இங்க சமையக் கொட்டகை போடலாம் மாப்ளன்னு சொல்லிக்கிட்டு அடிவச்சி அளப்பாரு பாருங்க.. அவரோட குட்டைக்காலை அப்படி இப்படி சாய்த்து வச்சு வேகவேகமாக அளப்பாரு... அவரு அளக்குற 100 அடியில 10,15 அடி கண்டிப்பாக் குறையும். எப்படி இருந்தாலும் நல்லதோ கொட்டதோ எல்லாருடைய வீட்டுக்கும் அவருதான் கொட்டகை.

முதல் நாள் மாலை தாய்மாமன் சீர் கொண்டுக்கிட்டு வருவார். அவரோடு அவரது ஊர்க்காரர்கள் வருவார்கள். அவர்களை வரவேற்று மரியாதை செய்து சம்பிரதாய நிகழ்வுகளை எல்லாம் முடித்து மதியமுதலே கிடாய் வெட்டி சமையல் செய்ததை ஊராரெல்லாம் நின்று 'தம்பி இங்க கறி வையுப்பா...' 'இந்தா பாரு இந்த எலைக்கு எலும்பு சூப்பு போடுப்பா... கொஞ்சம் எலும்பை அரிச்சுப் போடுப்பா...' என்று நன்றாக கவனித்து தடபுடலாக விருந்தை நடத்தி பின்னர் ஊரார் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள்.

மறுநாள் காலை பெண் வீடென்றால் காலைப் பலகாரம் அங்குதான். எனவே இரவே காலைப் பலகாரத்துக்கான சமையல் களைகட்ட ஆரம்பித்துவிடும். மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் சாப்பிட்டு சம்பிரதாயங்கள் முடித்து பாயில் அமர வைத்தோ அல்லது மரப்பெஞ்சில் அமரவைத்தோ அல்லது கோவிலில் வைத்தோ திருமணம் முடித்து பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்புவார்கள். மாப்பிள்ளை வீட்டில் மதியம் உணவு முடித்து பெண்ணையும் அவருக்கு துணையாக ஒருவரையும் விட்டு விட்டுச் செல்வார்கள். 

மறுநாள் பெண் வீட்டிற்கு சொந்தங்கள் சூழ கிளம்பிச் செல்வார்கள். இதற்கு மறுவீடு செல்லுதல் என்று சொல்வார்கள். அங்கு தடபுடலாக விருந்து நடக்கும். மாலை திரும்பும் போது புதுமணத்தம்பதிகளை அங்கேயே விட்டு வருவார்கள். அவர்கள் ஒரு நாள் அங்கிருந்துவிட்டும்  பெண் வீட்டு உறவுகளுடன் மறுவீடாக மாப்பிள்ளை வீட்டுக்கு வருவார்கள். இங்கு விருந்து தடபுடலாக நடக்கும். இதில் மறு வீட்டுப் பலகாரம் என்று வேறு கொண்டு வருவார்கள். 

இப்படியாக கிராமத்துத் திருமணங்கள் மிகவும் சந்தோஷமாக எல்லாரும் கூடி கொண்டாடும் ஒரு நிகழ்வாக இருந்தது. வேன் பிடித்து அதில் இங்கிருந்து அங்கும்... அங்கிருந்து இங்குமாக போய் வந்த அந்த நாட்கள் ரொம்ப சந்தோஷமானவை.

எங்கப்பா ஐந்து பேருக்கு ஊரில் எங்க வீட்டில்தான் திருமணம் நடத்தினார். முதன் முதலாக எனக்குத்தான் தேவகோட்டையில் மண்டபம் பிடித்து நடத்தினார். அதில் பட்ட அனுபவத்தில் தம்பிக்கு மண்டபம் வேண்டாம் வீட்டிலேயே வைப்போம் என்று ஒத்தைக் காலில் நின்றார். ஆனால் கொட்டகைச் செலவு மற்ற செலவுகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் மண்டபம் செல்ல வைத்து விட்டது.

திருமண மண்டபங்களை நோக்கி கிராமத்துத் திருமணங்கள் சென்ற பிறகு திருமணச் சந்தோஷம் மட்டுமின்றி மறுவீடு... மூன்றாவது வீடு விருந்தையெல்லாம் சுருக்கி ஒரே நாளில் எல்லாத்தையும் முடித்து விடுகிறார்கள். மண்டபத்தில் இருந்தபடியே முதல் முறை சென்று வந்துவிட்டு மீண்டும் மறுமுறை செல்லும் போது மண்டபத்தில் இருந்து மிச்ச மீதி பலகாரங்களை எடுத்துக் கொண்டு போய் பேருக்குச் சாப்பிட்டு மறு வீட்டை முடிக்கிறார்கள். திருமணம் முடிந்த இரண்டாம் நாளில் சீதனமாக வந்த வண்டியில் புதுமாப்பிள்ளையும் பொண்ணும் போவோமா ஊர்கோலம் என்று கிளம்பிவிடுகிறார்கள்.

இப்போதெல்லாம் கிராமத்துத் திருமணங்கள் சுத்தமாகவே மறைந்துவிட்டன. பெண்கள் பருவமடைந்தால் ஊரில் உள்ளவர்களுக்குச் சொல்லி விருந்து வைத்து சாதாரண நிகழ்வாக நடத்தினார்கள். இன்று அதையும் மண்டபங்களுக்கு கொண்டு வந்து பூப்புனித நீராட்டு விழா என வீதி முழுவதும் பேனர் வைத்துக் விழாவாக நடத்துவதில் கிராமத்து மக்களும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

'கண்ணனுக்கு கலியாணம் அதான் இன்னைக்கே போறோம்ன்னு' வாயெல்லாம் பல்லாக வந்த ரத்த சொந்தமெல்லாம் பத்து மணிக்குத்தான் தாலிகட்டுறது... அப்பப் போனா பதினோரு மணிக்கு சாப்பாடு போடுவாங்க... அப்படியே சாப்பிட்டு வந்துக்கிட்டே இருக்கலாம் என்று சொல்லும் காலமாகிவிட்டது.

அவசர யுகத்தில் எல்லாமே அவசர கதியில் நடக்கும் போது கிராமத்துத் திருமணங்களும் இந்த ஓட்டத்தில் இணைந்து தனது சுயத்தை இழந்துவிட்டது வருத்தமான விஷயமே...

-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

சூப்பரா சொல்லியிருக்கீங்க,படிக்கும் போதே நேரில் நடப்பது போலவே இருக்கு,எழுத்து நடை நன்றாக இருக்கு...மண்டபம் வந்ததிலிருந்து இந்த மாதிரி சம்பிரதாயங்களும் குறைந்துவிட்டது..இதற்கு விலைவாசியும்,பொருளாதாராமும் நாகரிகமும் தான் காரணம்...

கவியாழி சொன்னது…

உண்மைதான்.கிராமத்தில் வீட்டிலேயே பந்தலிட்டு விருந்து வைத்த காலம் இல்லை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பதிவை படிச்சுட்டு ஒரு கல்யாண வீட்டுக்கு போய் வந்தாப்ல இருக்குய்யா....!

கிராமமும் தன முகத்தை கொஞ்ச கொஞ்சமாக மூடுகிறது....!

துளசி கோபால் சொன்னது…

வீட்டுக்கு முன்னால் தெருவை அடைச்சுப் பந்தல் போட்டு,ஆத்துமணல் ரொப்பி வச்சவுடன், ஊர்லெ இருக்கும் குட்டிப்பசங்கெல்லாம் வந்து வாழைமரத்தைச் சுத்திச்சுத்தி ஒரே ஆட்டம்தான். பெட்ரோமாக்ஸ்லைட் வேற ஊஸ்....ன்னு சத்தம்போட நாங்க ஆடாத ஆட்டமா!!!!

இப்போ எல்லாம்சுருங்கிப்போனது மட்டுமில்லாமல், கல்யாணத்துக்குப் பிந்தி வரும் ரிஸப்ஷன் கூட முதல்நாளே தாலிகட்டுமுன்னே வந்துருது பார்த்தீங்களா?

அருமையான பதிவு குமார். இனிய பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒரு வாரத்திற்கு மேல் கொண்டாட்டம் தான்... அந்த சந்தோசமே தனி... ம்... இப்போது...?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவசர யுகத்தில் எல்லாமே அவசர கதியில் நடக்கும் போது கிராமத்துத் திருமணங்களும் இந்த ஓட்டத்தில் இணைந்து தனது சுயத்தை இழந்துவிட்டது ஊண்மைதான் ..

காலத்திற்கு ஏற்ற மாற்றம் ..!

Unknown சொன்னது…

ஹூம்............கலியாணம் என்றாலே கொண்டாட்டம் தான்,அப்போதெல்லாம்!இப்போது.........கல்யாணமா?,யாருக்கு? எப்போ?என்று ஊரவர்கள்,அயலவர்கள் கேட்கும்படி ஆகி விட்டது!பத்திரிகை கொடுத்து அழைத்த காலம் போய்(புதினப்) பத்திரிகையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!

பெயரில்லா சொன்னது…

கால ஓட்டத்தில் அனைத்தும் கரைந்து மறைந்து
சுருங்கிப் போவது வருத்தம் தான். ஆனால் என் செய்வது
வாழ்க்கைமுறை , உறவின் முக்கியத்துவம் என்று அனைத்துமே
மாறிப் போய் விட்டதே ?!

உஷா அன்பரசு சொன்னது…

இப்பல்லாம் யாருக்கும் தொந்தரவு இல்லாம ஞாயிற்று கிழமை அல்லது விடுமுறை நாள்ல திருமண தேதியை வைக்கலாமான்னுதான் பெரும்பாலும் பார்க்கிறாங்க. காலத்திற்கேற்ப நடைமுறைகளும் மாறுவது தவிர்க்க முடியாதது.

ஜீவன் சுப்பு சொன்னது…

நெறைய கிரமாத்து சொற்களை நினைவுபடுத்திய குமாருக்கு நன்றி ...!

அண்ணமுண்டிக்கு இப்பதான் சரியான விளக்கம் தெரிஞ்சுகிட்டேன் ...!

இப்பலாம் ஒரு நாள் இல்ல ... நாலு மணி நேரம்தான் கல்யாணமே ...! Like Twenty 20 match மாதிரி ....!

இளமதி சொன்னது…

அருமையான ஒரு கிராமத்து மணம் வீசும் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு எனக்கு.
திரைப் படங்களில்தான் இவற்றை நான் பார்த்திருக்கின்றேன்.

பிறந்தது முதல் டவுண் வாழ்கையிலேயே வாழ்த்துவிட்டதால் இவற்றைப் படங்களில் பார்க்கும்போது அட நமக்கிந்த வாய்ப்பு கிட்டாமல் போச்சேன்னு நினைப்பதுண்டு...

அழகிய கிராமத்துப் பேச்சு வழக்கினை - டயலாக்கினை - அப்படியே எழுதியமை மிகுந்த ரசனையைத் தருகிறது. ரொம்பவே ரசித்தேன். பலவிஷயங்களை உங்களின் இப் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன். அருமை!.

மண்ணின் மணம் மனதை நிறைத்தது. வாழ்த்துக்கள் சகோ!

த ம.3

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான பதிவு.

ஆம். காலம் மாறி விட்டது.

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

pathivugal anaiththum migavum arumai...!!