மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 15 அக்டோபர், 2013

நண்பேன்டா : அண்ணாத்துரை


ல்லூரியில் சேர்ந்த முதல் நாள்... அதுவரைக்கும் பள்ளியில் நண்பர்களாக இருந்தவர்கள் ஆளாளுக்கு ஒரு பிரிவுக்குச் சென்றுவிட தனித்து விடப்பட்டவன் போல் உணர்ந்தேன். எங்கெங்கோ இருந்து வந்திருந்தார்கள். எல்லா முகமும் புதியது. பனிரெண்டாம் வகுப்புவரை ஆண்கள் பள்ளி, கல்லூரியில் இருபாலரும் படிக்கும் இடம்... வித்தியாசமாக இருந்தது.

புதியவர்கள், துறைத்தலைவரின் முதல் வகுப்பு, அடுத்து வந்தவர் ஆங்கிலத்தில் முழு வகுப்பையும் எடுத்தது என வித்தியாசமான ஒரு பயணம் ஆரம்பமானது. எனக்கு அருகில் இருந்தவன் சினேகமாக சிரித்தான்... பின்பு பேசினான்... நான் சேவியர், ஆனந்தூருக்குப் பக்கம்... நீங்க...? என்றதும் நானும் சொன்னேன். பின்பு எங்களுக்குள் பேச்சில்லை.... மதியம் வகுப்புக்கள் இல்லை என்றதும் சைக்கிளில் வீட்டை நோக்கிப் பறந்துவிட்டேன். இது சேவியரைப் பற்றிய பகிர்வு இல்லை... சேவியர் பின்னால் வருவான்.

மறுநாள் கல்லூரிக்குச் சென்றதும் சேவியர் சினேகமாகச் சிரிக்க, நானும் சிரித்தேன்.கொஞ்சமாய்ப் பேசினோம். அப்போது சற்றே கருப்பாக... ஒல்லியாக ஒருவன் வந்து சேவியருக்கு அருகில் அமர்ந்தான். 

"அலோ... நான் அண்ணாத்துரை... கடம்பங்குளம்..." என்று சேவியருக்கும் எனக்கும் கை கொடுத்தான். அவனது கையைப் பிடிக்கும் போது அந்த ஒல்லி உடம்புக்குள் திடகாத்திரமான ஆள் இருக்கிறான் என்று தெரிந்தது. ஆம் விவசாயம் பார்த்து காய்த்துப் போன கை சொறசொறப்பாக இருந்தது. 

"கடம்பங்குளம்... காளையார் கோவிலா?" - இது சேவியர்

"ஆமா... பரமக்குடி ரூட்ல..."

"அப்பிடியா... அப்போ காளையார்கோவில்லதான் படிச்சீங்களா?..."

"ஆமா"  - இப்படியாக அவர்களுக்குள் பேச்சு நடந்தது. இருவரும் நெருக்கமான நட்பில் வர நான் தனித்து நின்றேன். அப்போது என்னுடன் முதல் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை  ஒன்றாகப் படித்த சிவபாலமூர்த்தி எங்கள் வகுப்பிற்குள் நுழைந்தான். எனக்கு சந்தோஷமாக இருக்க, "என்னடா... காரைக்குடி போறேன்னு சொன்னே... இங்க வந்துட்டே" என்றதும் "அங்க இடம் கிடைக்கலை... அதான் ஆளைப் பிடிச்சி இங்க வந்துட்டேன்..." என்றபடி பின்னால் போய் அமர்ந்தான். அதுக்கு அப்புறம் முன்னே வரவேயில்லை. அவன் அடிதடி குரூப்பில் இணைந்துவிட்டான்.

சில நாட்களில் எனக்கும் சேவியருக்கும் இடையில் அமர்ந்த அண்ணாத்துரை, என்னுடன் மிகவும் நெருக்கமானான். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக அறை எடுத்துத் தங்கினார்கள்... பெரும்பாலான பொழுதுகள் அவர்கள் அறையில் அவர்கள் சமைத்த சமையலை சாப்பிட்டு... அவரகளுடன் தங்கி... சந்தோஷமாகக் கழிய ஆரம்பித்தது.

அண்ணாத்துரை எங்க வீட்டுக்கு வந்து தங்கி எங்கள் குடும்பத்தில் ஒருவனாய் ஆனான். அண்ணன் திருமணம்... அக்கா திருமணம் எல்லாவற்றிலும் ஓடியாடி வேலை பார்த்தான். ஒரு வேலையாக காளையார்கோவில் போன எங்கப்பாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அனுப்ப, திடீரென ஒருநாள் அவனது அப்பா விளைந்த காய்கறிகள், அரிசி, கொள்ளு என எல்லாம் அள்ளிக் கட்டிக்கொண்டு வந்து இரண்டு நாட்கள் தங்கிச் செல்ல, கல்லூரி நட்பு குடும்ப நட்பானது.

விடுமுறையில் கடம்பங்குளத்தில் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லாரும் பாசத்துடன் பழகினார்கள். என் மகன் வந்திருக்கான் என அண்ணாத்துரையின் அம்மா நாட்டுக்கோழி அடித்து ரசம் வைத்து சாப்பிடு... சாப்பிடு... என்று பார்த்துப் பார்த்து கவனித்தார்கள். 

தொடர்ந்து சென்ற எங்கள் நட்பு, கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு நீடித்தாலும் அப்புறம் வாழ்க்கை ஓட்டத்தில் சற்று இடைவெளியானது. பின்னர் அவனது திருமணம், எனது திருமணம் என மீண்டும் இணைந்து பயணித்தோம். அதன் பிறகு அபுதாபி வந்ததும் அவனது நம்பரில் தொடர்பு கொள்ள முயன்றபோது அது உபயோகத்தில் இல்லை. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் காளையார் கோவில் ஒரு எட்டு பொயிட்டு வந்துடலாம் என்று நினைப்பதுண்டு... ஒரு மாத விடுமுறை எங்கும் பயணிக்கவிடாமல் பண்ணி விடுகிறது.

அண்ணாத்துரை, நீ எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாய் என்று மட்டும் எனக்குத் தெரியும். விரைவில் உன்னை சந்திப்பேன் என்றும் நம்புகிறேன், நம் நட்பின் வாசம் நம்மோடு மட்டும் போகாமல் குடும்ப உறவாய் ஆனது. அது மீண்டும் பூக்கும் என்ற நம்பிக்கையுடன்....


நண்பேன்டா தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

எங்கிருந்தாலும் அந்த நண்பன் உங்களை மீண்டும் வந்து இணைய என் வாழ்த்துக்கள்.
நட்பை மறவாமல் இருப்பது நல்ல குணம்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நட்புக்குள் பிரிவு என்பதுதான் அதிக அவர்களை அதிகம் நினைவுப்படுத்துகிறது...

நண்பர் அண்ணாதுரையை விரைவில் சந்திக்க காலம் கனிந்துகொடுக்க வேண்டுகிறேன்....

நட்பை சிலாய்த்து அழகிய பதிவு...
ரசித்தேன்

Unknown சொன்னது…

நண்பேன்டா பதிவு'பேன்டா'குடித்தமாதிரி குளிர்ச்சியை தருகிறது ..உங்கள் நட்பு மீண்டும் மலரட்டும் !
த.ம 4

Unknown சொன்னது…

அடடா...........கல்லூரிக் கால நட்பு,குடும்ப நட்பாகி,இப்போது பார்த்துப் பேச முடியாத சூழல்,காலக் கொடுமை தான்.

துரை செல்வராஜூ சொன்னது…

நீ எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாய் என்று - எண்ணும் எண்ணமே மேலாது!.. தங்கள் நட்பு சிறக்க வாழ்த்துக்கள்!..

கோமதி அரசு சொன்னது…

மீண்டும் பூக்கும் என்ற நம்பிக்கையுடன்....//

நம்பிக்கை வீண் போகாது.
அண்ணாத்துரையை மீண்டும் சந்திப்பீர்கள்.
வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உங்கள் நட்பு மீண்டும் மலரும்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நட்பின் வாசம் போகாமல் குடும்ப உறவாய் ஆனது. அது மீண்டும் பூக்கும் என்ற நம்பிக்கையுடன்....

தொடர வாழ்த்துகள்..!

ஜோதிஜி சொன்னது…

தொடர்ந்து படித்து வருகின்றேன். நிச்சயம் இது போன்ற நம் நடந்து முடிந்த நிகழ்வுகளை எழுதி வைப்பது மிக மிக அவசியம். எழுத முடியாத சமயத்தில் படிக்க ஆறுதலாக இருக்கும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி ஸ்ரவாணி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ.சௌந்தர் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பகவான்ஜி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ.யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கோமதி அரசு அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இராஜராஜேஸ்வரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜோதி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ezhil சொன்னது…

அடுத்த முறை உங்கள் ஊருக்கு வரும்போது நட்புக்காக ஒரு நாள் செலவிடுங்கள்...தவறில்லை..பின் வாழ் நாள் முழுவதிற்குமான ஒரு எனர்ஜி கிடைத்துவிடும்...