மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 6 ஜனவரி, 2014

விடியும் முன் வேற மாதிரி

கொஞ்ச நாட்களாகவே நிறைய நல்ல மலையாளப் படங்களைப் பார்த்ததால் தமிழ்ப்படங்களை விரும்பவில்லை. சென்ற வார விடுமுறையில் மூன்று தமிழ்ப்படங்களைப் பார்த்தேன். அதில் 2 படங்களைப் பற்றி இந்தப் பகிர்வில் பார்க்கலாம். படங்கள் வந்து ரொம்ப நாளாச்சு இப்போ விமர்சனமான்னு நீங்க கேட்கலாம். இது படம் குறித்த விமர்சனப் பகிர்வு அல்ல... பார்த்த படம் குறித்தான சாதாரணப் பார்வைதான். மற்றொரு படம் குறித்து நிறைய பேச வேண்டியிருப்பதால் தனிப்பகிர்வாக பதியலாம் என்ற எண்ணம். ஒரு பதிவும் தேறுமுல்ல...

முதல் படம் விடியும் முன்... காசுக்காக உடலை விற்கும் பெண்ணான பூஜா, மும்பை சென்று அங்கிருந்து சில காரணங்களால் மீண்டும் தமிழகம் வந்து தொழில் செய்கிறார். தொழில் ரீதியாக பழக்கமான ஒருவன் பெரிய மனுசனான வினோத் கிஷனுக்கு 12 வயது சிறுமியை ஏற்பாடு செய்து தரும்படி அவளைக் கட்டாயப்படுத்துகிறான். முதலில் மறுக்கும் அவள் பணத்துக்கு ஆசைப்பட்டு தனக்குத் தெரிந்த மற்றொரு புரோக்கரிடம் இருந்து சிறுமியை வாங்கி பெரியவரிடம் அழைத்துப் போகிறாள். போன இடத்தில் எதிர்பாராத வகையில் பெரும்புள்ளியைத் தாக்கிவிட்டு தப்ப வேண்டிய சூழல் வருகிறது. 


இதைத் தொடர்ந்து அவர்களைப் போகச் சொன்ன புரோக்கர் பெரியவரின் மகனின் மிரட்டலுக்குப் பயந்து அவளைத் தேட, அவளுக்கு சிறுமியைக் கொடுத்த மற்றொரு புரோக்கர் அவளுக்காக அவர்களைத் தேட, அப்பாவைத் தாக்கியவளைப் பழி வாங்க தனது உதவியாளர் மணியின் உதவியுடன் அவர்களைத் துரத்த... ஆளாளுக்கு துரத்தும் கதையில் வில்லன்களிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா என்பதே கதை. 

இதற்கிடையே கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் இருக்கும் பெரிய மனிதரை மகன் கிணற்றில் தள்ளிவிடுவது. அப்பாவின் நண்பரை கொலை செய்வது என கொலைகளுக்கும் பஞ்சமில்லாமல் கதை நகர்கிறது.

பூஜா இதில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். அவர் இழுத்தாற் போல் பேசுவது கொஞ்சம் சுரத்தில்லாமல் இருந்தாலும் காட்சியின் போக்கில் பார்க்கும் போது நன்றாகவே இருக்கிறது. சிறுமி மாளவிகாவுக்கு வயதுக்கு மீறிய பேச்சு... இது தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாக்கள் எல்லாம் காட்டும் பாத்திரமாகவே இருக்கிறது. வினோத் கிஷன், ஜான் விஜய் என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

படம் பார்க்கும் போது ஒரு பதைபதைப்போடு செல்வது இயக்குநரின் திறமைக்கு ஒரு சாட்சி. புதிய இயக்குநர் பாலாஜி குமார் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார்.


அடுத்த படம் இவன் வேற மாதிரி... கும்கிக்குப் பிறகு பிரபு பையன் விக்ரம் பிரபு நடித்த படம். கலைஞரின் ஆட்சியில் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறைக் கொடுமையை அப்படியே படம் பிடித்து இருக்கிறார்கள். கமலையும் விஜயையும் அழ வைத்த அம்மா கருணாநிதி ஆட்சியில் நடந்த நிகழ்வு என்பதால் படத்தை தடுக்கவில்லை போலும். 

சாதிப் பிரச்சினையை முன்னிறுத்தி நிகழ்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினையை அரசியலுக்காக நிகழ்வதாக காட்டுவதில் ஆரம்பிக்கிறது படம், அதன் பிறகு அமைச்சரின் தம்பியை நாயகன் கடத்தி அடைத்து வைக்க, அதன் பின்னான நிகழ்வுகள் நாயகியின் கடத்தலில் முடிகிறது. 

நாயகன் வில்லனை வீழ்த்தி நாயகியை மீட்டு வந்தாரா என்பதை பரபரப்புடன் கொஞ்சம் காதல் கலந்தும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சரவணன். அவரது முதல் படமான எங்கேயும் எப்போதும் போல் இல்லாவிட்டாலும் இவன் வேற மாதிரி வணிக ரீதியில் வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது.

புதுமுக நாயகி சுரபியும் சொல்லிக் கொள்ளும்படியாக நடித்திருக்கிறார். அவருக்கு தங்கையாக வரும் பெண்ணும் அருமையாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார்(அண்ணா)

ரசித்த படம் பற்றி தங்களின் பார்வையில் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துரை செல்வராஜூ சொன்னது…

//தொழில் ரீதியாக பழக்கமான மாமா ஒருவன் //

தாங்களும் இந்த மாதிரி வார்த்தையினை பயன்படுத்தலாமா?..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி...

Unknown சொன்னது…

இந்த இரண்டு படங்களையும் நானும் பார்த்தேன்!உங்கள் கருத்தில் பூரண உடன்பாடு எனக்கு!!///அந்த மூன்றாவது என்ன?ஹி!ஹி!!ஹீ!!!'ஈகோ' தானே?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படம் பற்றிய கருத்துகளுக்கு நன்றி. பொதுவாக சினிமா பார்க்க விருப்பமும் இல்லை, பார்க்க வாய்ப்பும் ரொம்பவே குறைவு.

மனோ சாமிநாதன் சொன்னது…

விமர்சனங்கள் சிறப்பாக உள்ளன. ' இவன் வேற மாதிரி' படம் பார்த்து ரஜினியே இயக்குனரை அழைத்து பாராட்டியதாக படித்தேன்.

மனோ சாமிநாதன் சொன்னது…

விமர்சனங்கள் சிறப்பாக உள்ளன. ' இவன் வேற மாதிரி' படம் பார்த்து ரஜினியே இயக்குனரை அழைத்து பாராட்டியதாக படித்தேன்.