மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 ஜனவரி, 2014

அஜீத்தின் வீரம் வென்றதா? - ஒரு பார்வை

ட்டன்சத்திரத்தில் பிரிக்க முடியாத அன்போடு வாழும் அண்ணன் தம்பிகள் பற்றிய கதை. ஊருக்குள் அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்கும் அண்ணன் விநாயகம்... அவருக்கு துணை நிற்கும் தம்பிகள். தனக்கு திருமணம் நடந்தால் வரும் பெண்ணால் அண்ணன் தம்பிகளுக்குள் பிரிவு வந்துவிடும் என்று நினைக்கும் அண்ணன் திருமணத்தை வெறுக்கிறார். அண்ணனுக்கு திருமணம் நடந்தால்தான் அண்ணனுக்குத் தெரியாமல் காதலிக்கும் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்பதால் அண்ணனை காதலில் சிக்க வைக்க தங்களது குடும்ப வழக்கறிஞர் பெயில் பெருமாளுடன் சேர்ந்து திட்டமிட்டு அண்ணனின் நண்பனான மாவட்ட ஆட்சியரின் உதவியால் கோவில் சிலைகளை பராமரிக்கும் கோப்பெருந்தேவியை தங்கள் ஊர் கோவில் சிலைகளை சுத்தம் செய்ய அழைத்து வருகிறார்கள்.

ஊருக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என எதுவும் இருக்கக்கூடாது என்பதை தனது வாரிசை இழந்து நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நல்லதம்பியின் மகளான கோப்பெருந்தேவிக்கு அடிதடி பின்னணியில் வாழும் விநாயகத்தைப் பற்றி அவரது தம்பிகள் தரும் தவறான தகவலால் காதல் வருகிறது. அப்பாவிடம் சம்மதம் பெறுவதற்காக அவரை தனது ஊருக்கு கூட்டிப்போகும் போது இரயிலில் நடக்கும் சண்டையின் போது விநாயகத்தின் சுயரூபம் தெரிய இருவருக்குள்ளும் பிரிவு... கோப்பெருந்தேவியை கரம் பிடிப்பதற்காக விநாயகம் தனது அடிதடியை விட்டாரா..? இல்லை கெட்டவனுக்கு நான் எப்பவும் கெட்டவன்தான் என அடிதடிக்காக காதலை மறந்தாரா என்பதை நகைச்சுவை மற்றும் விறுவிறுப்புக் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.



வேஷ்டி சட்டையில் கம்பீரமாக வருகிறார் அஜீத். கருப்பு வெள்ளை கலவையான முடியும் அதே ஸ்டைல் தாடியும் அஜீத்துக்கு அழகுதான். எத்தனை தோல்விகள் வந்தாலும் துவளாமல் மீண்டும் மீண்டும் எழுவதில் அஜீத்துக்கு நிகர் அஜீத்தான். ஆரம்பத்தின் அட்டகாச வெற்றிக்குப் பிறகு வீரத்தில் தன்னை சிறந்த நடிகனாக நிலைநிறுத்தி இருக்கிறார். அடிதடி... ஆக்ரோஷம்... நகைச்சுவை... பாசம்... காதல்... என பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார். வில்லன்களுடன் அடிக்குரலில் வசனம் பேசும் போது கைதட்டலிலும் விசிலிலும் தியேட்டரே அதிர்கிறது.

அஜீத்தின் தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனிச் மற்றும் சுஹைல் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள். நால்வருக்கும் காட்சிகளில் பாகுபாடு இல்லை. மூவருக்கு காதல் இருக்கிறது ஆனால் அதற்காக தனியாக டூயெட்டெல்லாம் இல்லை. அடிதடிக்கு மும்மரமாக திகழும் தம்பிகளாக வந்தாலும் தங்களது காதலுக்காக எப்படியாவது அண்ணனை காதலிக்க வைப்பதற்காக இவர்கள் படும்பாடு ரசிக்க வைக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமனா, கோப்பெருந்தேவியாக சிலை சுத்தம் செய்ய வந்து அஜீத்தை விரும்பி... அவர் ரவுடித்தனம் செய்பவர் என்பதை நேரில் பார்த்து வெறுத்து ஒதுங்கும் போதும் தனக்காக மாறி வந்திருக்கிறார் என்றதும் மீண்டும் காதலை தொடரும் போதும் நிறைவாகச் செய்திருக்கிறார். இயக்குநர் தமன்னாவிடம் கவர்ச்சியை அதிகம் எதிர்பார்க்கவில்லை என்பது பெரும்பாலான காட்சியில் சேலையில் உலாவ விட்டிருப்பதில் தெரிகிறது. படம் முழுவதும் வருகிறார். தனது டிரேட் மார்க்கான காதுவரைக்கும் சிரிப்பதை குறைத்திருக்கிறார். 

பெயில் பெருமாளாக வரும் சந்தானம் இந்தப் படத்தில் கலக்கி இருக்கிறார். பொதுவாக சந்தானத்தின் நகைச்சுவைகள் வெறுப்பேற்றுவதாகவே இருக்கும். ஆனால் இதில் சந்தானத்தின் நகைச்சுவை மிகச் சிறப்பாக இருக்கிறது. இதிலும் இவருக்கு காதலியாக வித்யூலேகா ராமன் வருகிறார். அஜீத் பேச்சைக் கேட்டு காதலை வெறுப்பது... பின்னர் அவரது தம்பிகளின் காதலைப் பார்த்து அவர்களுடன் சேர்ந்து அஜீத்தை காதலிக்க வைக்க திட்டமிடுவது... தம்பி ராமையாவை பாடாய்படுத்துவது என மனிதர் கலக்கியிருக்கிறார். அஜீத் தவிர மற்ற அனைவரையும் கலாய்த்து விடுகிறார்.

தமன்னாவின் அப்பாவாக வரும் நாசர், ஊருக்குள் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது என்று நினைப்பவர். அதன்படி ஊரை வைத்திருப்பவர்... பக்கத்து ஊரில் எதாவது என்றால் உதவக்கூடியவர். அவரது மகன் கத்தியை எடுக்கிறான்... அதற்காக மடிகிறான்... அவனின் இறப்புக்காக ஊரே கொந்தளிக்கும் போது மனிதர் அவர்களை தடுத்து அகிம்சா வழியில் வாழ வைக்கிறார். ஊருக்கு வரும் அஜீத்தையும் அவரது தம்பிகளையும் தங்க வைத்து நல்லவர்களா என சோதனை செய்கிறார். முடிவில் அஜீத் திருந்தவில்லை என்றதும் கொதித்தெழுகிறார். மொத்தத்தில் நாசரின் நடிப்பு எப்பவும் போல் சிறப்பாக இருக்கிறது.

படத்தின் முதல்பாதி வில்லனாக வரும் கஜினி பட வில்லனான பிரதீப் ராவத் 'என்ன தங்கம்' என்று பேசியபடி அஜீத்திடம் ஒரு முறை உதைவாங்கி ஊரை விட்டே ஓடுகிறார். இடைவேளைக்குப் பிறகு ஒரு முறை வந்து மீண்டும் மாட்டி வடநாட்டுக்கு ஓடுகிறார். இரண்டாம்பாதி வில்லன் ஆடலரசாக வரும் ரன் பட வில்லன் அதுல் குல்கர்னி சிறைக்குள் இருந்து கொண்டே வில்லத்தனம் செய்கிறார். இறுதிச் சண்டையில் அஜீத்துடன் மோதி உயிரை விடுகிறார். இரண்டு வில்லன்களும் தங்களது பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.


வடிவேலு செய்யக்கூடிய கதாபாத்திரத்தில் நாசரின் தம்பி சவரிமுத்தாக தேசிய விருது பெற்ற தம்பி ராமையா. நல்லதொரு நடிகர்... சாட்டையிலும் மைனாவிலும் நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர்... இதில் இரண்டாந்தர காமெடியனாய்... படம் பார்க்கும் போது சிரிக்க வைத்தாலும் வெளியில் வந்ததும் இந்த மனிதர் எப்படி இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என யோசிக்க வைக்கிறது. நல்ல நடிகரான இவர் இது போன்ற கதாபாத்திரங்களைத் தவிர்க்கலாம். மற்றபடி நடிப்பில் குறைவைக்கவில்லை.

அப்புக்குட்டி... சமையல்கார மயில்வாகனமாக அஜீத்துடன் வலம் வருகிறார். திருமணம் செய்யப்போவதாக அஜீத்திடம் சொல்லப்போய் அவர் வேண்டாம் என விளக்கம் கொடுக்க... மீண்டும் பத்திரிக்கையுடன் வந்து அண்ணே எல்லாருக்கும் கொடுத்துட்டேன்... என்றபடி தள்ளி நின்று கொடுத்து... திருமணத்தன்று எத்தனை நாளைக்குத்தான் எடுபிடியாக இருப்பே... மார்க்கெட்டுல ஒரு கடையை உனக்கு எழுதி வச்சிருக்கேன்... இன்னையில இருந்து நீ முதலாள் என அஜீத் சொன்னதும் அண்ணே தம்பி மயில்வாகனம்ன்னு நீ கூப்பிட்டதை உதட்டளவுலதான்னு  நினைச்சேன்... இங்க இருந்து கூப்பிட்டு இருக்கேன்னு சொல்லி நெஞ்சைத் தொட்டுக் காட்டும் போது நம் நெஞ்சையும் தொடுகிறார். பார்க்கும் எல்லாம் படத்திலும் அப்புகுட்டியின் பற்களை காரைபிடித்த சுவர் போல் காட்டுகிறார்களே... அப்படித்தான் இருக்கிறதா... இல்லை படத்துக்காகவா... 

மாவட்ட ஆட்சியாளராக வரும் ரமேஷ் கண்ணா... மனைவியுடன் சந்தோஷமாக இருக்க நினைக்கும் போது அஜீத்தின் தம்பிகள் மற்றும் சந்தானத்திடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் போது சிரிக்க வைக்கிறார். 

கல்லூரி முதல்வராக வரும் இளவரசு, பியூனாக வரும் கிரேன் மனோகர், மாமாவாக வந்து அடிவாங்கும் மயில்சாமி, ரமேஷ் கண்ணாவின் மனைவியாக வரும் தேவதர்ஷினி, அந்த குட்டிக் குழந்தை, நாசரின் தங்கையாக வரும் தெற்கத்திப் பொண்ணுக்காக பாரதிராஜா கொண்டு வந்த தேனிப்பெண்  என அனைத்து கதாபாத்திரங்களும் கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கியிருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. செல்வாவின் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பாய் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இரயில் நடக்கும் சண்டையை மிகச் சிறப்பாக பண்ணியிருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். வெளிநாட்டுப் பின்னணியில் வரும் இரண்டு பாடல் காட்சியிலும் பனி படர்ந்த மலைகள், மரங்கள் என கண்களுக்கு விருந்தளிக்கிறார்.

படம் முழுவது நிறைந்திருப்பவர் அஜீத்... அஜீத்... அஜீத்... மனிதர் அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார். இந்த ஆட்டம் வரும் படங்களிலும் தொடரும் பட்சத்தில் இவருடன் போட்டி போட மற்ற நடிகர்கள் யோசிக்க வேண்டும். வசன உச்சரிப்பிலும் உடல் மொழியிலும் மனிதர் நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். குத்து என்றால் மனிதருக்கு சந்தோஷம் போல... குத்தாட்டம் குதியாட்டம் போடுகிறார். வெள்ளை வேஷ்டி வெள்ளைச் சட்டையில் மனிதர் அசத்தியிருக்கிறார். 

இயக்குநர் சிறுத்தை சிவா பரப்பரப்பாக கதை நகர்த்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். பரதனின் வசனங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. தயாரிப்பாளர்களான விஜயா புரொடக் ஷன் எம்.ஜி.ஆர், ரஜினியைக் காட்டி அஜீத்தின் வீரம் என்று போடும் போதே அஜீத்தின் மாஸ் தெரிகிறது.

படத்தில் ஒவ்வொரு சண்டைக் காட்சிக்கும் முன்னர் அஜீத்தை காட்டும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் தல என்ற கத்தல் காதைப் பிளக்கிறது. குறிப்பாக மழையில் குடைக்குள் நடந்து வரும் தல சான்ஸே இல்ல... அஜீத்னா மாஸ் என்பதில் சந்தேகமே இல்லை.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் வீரம் வந்திருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.  அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை, பிரிவு என கதை சொல்லாதது சிறப்பு. அஜீத், திரைக்கதை, விறுவிறுப்பு, பாடல்கள், நகைச்சுவை என எல்லாம் சிறப்பாக இருக்கிறது.


எப்படித்தான் சர்க்கரைப் பொங்கலை பார்த்துப் பார்த்து வைத்தாலும் சின்னச் சின்ன குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது. அப்படி சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.  எனக்குத் தெரிந்த சில குறைகள்...

முதல்பாதியில் இருக்கும் நகைச்சுவைக் கலாட்டாவை மறுபாதியில் குறைத்து விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்கள். இருப்பினும் இரண்டாம் பாதி நீண்டு கொண்டே போவது போல் தெரிகிறது. 

ஜோடிப் பாடல்கள் இரண்டிலும் அஜீத்துக்கு ராமராஜன் கலர் பேண்ட் கொடுத்திருப்பது வித்தியாசம் என்றாலும் அஜீத் தமனாவுக்கான ரோபோத்தனமான நடன அசைவுகள் பாடலின் போக்கை மாற்றிவிடுகிறது. 

காதல் காட்சிகள் அரதப் பழசான எல்லாப் படங்களிலும் வரும் காட்சிதான்... புதுமை இல்லை. 

போலீசை அடித்து வில்லன் தப்புவது என்பது தமிழ்சினிமாவில் மாறாத ஒன்று. அது இதிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் இருக்கும் இரயில்வே கிராஸ்சிங்கில் ஒரு இரயில் போய் சில நிமிடத்தில் மற்றொரு இரயில் வருவது போல் காட்டியிருக்கிறார்கள். அடிக்கடி ரயில் வரும் ஒரு லெவல்வே கிராஸ்ஸிங் என்றால் அதை இரயில் போகும்வரை அடைத்து வைக்க மாட்டார்களா?

இப்படி சில குறைகள் இருந்தாலும் இந்தப்படம் அஜீத் ரசிகர்களுக்கு தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் என்றால் மற்றவர்களுக்கும் இனிப்பு குறையாத பொங்கல்தான்... குடும்பத்துடன் பார்க்கலாம்.

மொத்தத்தில் தல ராக்ஸ்.
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

vivek kayamozhi சொன்னது…

Thanks for your positive review. .

Unknown சொன்னது…

விமர்சனம் அருமை!வயிற்றில் பால் வார்த்தீர்கள்,நன்றி!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனம் நன்று...

ஸ்ரீராம். சொன்னது…

தம்பிகள் காதலுக்கெல்லாம் டூயட் வைத்தால் அதுவே நான்கு பாடல்கள் ஆகிவிடுமே...! வேட்டி சட்டையில் தல அட்டகாசமாகத்தான் இருக்கிறார்! சிறுசிறு கேரக்டர்களை எல்லாம் கூட விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்கள். தல டான்ஸ் பற்றி திடங்கொண்டு போராடு சீனுவின் அபிப்ராயம் படித்தீர்களோ!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி விவேக்...

நன்றி சகோ. யோகராஜா...

நன்றி தனபாலன் சார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
உங்கள் கருத்துக்கு நன்றி.
திடங்கொண்டு போராடு சீனு அவர்களின் விமர்சனம் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏன் ஒத்த கருத்தாக இருக்கிறதா?

ஸ்ரீராம். சொன்னது…

//என்ன ஒன்று டூயடிற்கு நடனம் வேறு ஆடியுள்ளார். (தல தயவுசெஞ்சு டூயட் எல்லாம் நமக்கு வேணாம், இந்த எதிரிங்க தொல்ல தாங்க முடியல :-) ) //

http://www.seenuguru.com/2014/01/veeram-movie-review.html

கவிதை வானம் சொன்னது…

அண்ணேன்...உங்கள் பதிவு படிக்க தித்திப்பாக இருக்கு ...இன்னும் நிறைய TAGS இணைத்தீர்கள் என்றால் தேடு பொறியில் முன்னிலை வரும் ...பொங்கல் வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

Good review.

Kasthuri Rengan சொன்னது…

நல்ல விமர்சனம்

அது சரி எந்த ஹீரோவிற்கு நரச்ச தலையோடு லவ் பண்ணுற தில் இருக்கு..

கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ட் இல்லையா?

vettippayapullaiga சொன்னது…

neenga ajith fan'a?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். பாராட்டுகள்....