மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஜூலை, 2013

தொட்டிப் பாலம் - கேமரா சண்டை

நாங்கள் நாகர்கோவில் போயிருந்த போது தொட்டிப்பாலம் சென்றதையும் அங்கு ஒரு பெண்ணுடன் சண்டை போட நேர்ந்தது என்பதையும் போன பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா. எதற்காக சண்டை... ஏன் சண்டை போட்டோம் என்பதை இப்போது பார்க்கலாம்.


நாங்கள் சென்ற அம்பாஸிடர் புதிய வண்டியல்ல... கதவில் கண்ணாடி என்பது இருக்கு... ஆனா இல்லை ரகம்தான். எதுவும் இல்லாததால் கைப்பைகளை மட்டும் காரில்வைத்துச் சென்றோம்... கேமராவில் சார்ஜ் இல்லை என்பதால் அதையும்  கைப்பையிலேயே வைத்துச் சென்றோம்... நுழைவுச் சீட்டு எடுத்து உள்ளே சென்ற பிறகு, ஸ்ருதி, விஷாலை என் மனைவி பாத்ரூம் கூட்டிச் சென்றார். நாங்கள் நின்று கொண்டிருக்க, நண்பனின் மனைவி 'கார் சன்னல் சரியில்லை... கேமராவை எடுத்து வருகிறேன்' என்று சொல்லி எடுத்து வரச் சென்றார்.

அதைக் கவனித்த அங்கு கடை வைத்திருக்கும் பெண், 'சார்... கேமராவுக்கு டிக்கெட் வாங்கணும்... இல்லைன்னா உள்ள கொண்டு போக விடமாட்டேன்' என்றார்.

நான் சொன்னேன் ' பேட்டரியில சார்ஜ் இல்லைம்மா... போட்டோ எடுக்க முடியாது... சும்மா கொண்டு போறதுக்கு எதுக்கு டிக்கெட்' என்றேன்.

'அதெல்லாம் தெரியாது... டிக்கெட் வாங்கிக்கிட்டுத்தான் போகனும்' என்றார்.

'இந்தாம்மா... சார்ஜ் இல்லாத பேட்டரிய கழட்டி நீயே வச்சுக்க... வந்து வாங்கிக்கிறேன்'

'சார் டிக்கெட் வாங்குங்க... வியாக்கியானம் பேசாம...' என்றதும் நண்பன் கோபமாக 'வியாக்கியானம் பேசுறமா... தெரியுமா?'  என்றார்.

'டிக்கெட் வாங்குகன்னா... எதுக்கு சார் வீணாவுல பேச்சை வழக்குறீங்க?' என்றார் அந்தப் பெண்மணி.

நான் உடனே 'இந்தாம்மா கேமரா... நீ வச்சிக்க... வண்டியில பாதுகாப்பில்லை... வந்து வாங்கிக்கிறேன்' என்றேன்.

'நல்ல வண்டியியல வந்திருக்கணும்... ஒட்ட வண்டியியல வந்தா... டிக்கெட் வாங்கு... சும்மா பேசாமா...'  அந்தப் பெண் எகிறலோடு ஒருமைக்குத் தாவினாள்.

'என்ன வாங்கு... வா.. போவா... என்ன நெனச்சிக்கிட்டே... யார்க்கிட்டே பேசுறே..?' என நண்பன் கோபமானான். அப்போது அங்கு வந்த அந்தப் பெண்ணின் சங்கிலி போட்ட மகன், 'என்ன கத்துறே...?' என்று வார்த்தைகளை விட்டான்.

நண்பனின் மனைவி 'என்னம்மா பேசுறீங்க... அவன் வேற கத்துறீங்கங்கிறான்... இந்தக் காசு ஒண்ணும் பெரிசில்ல... கேமரா யூஸ் பண்ணப் போறதில்லை... அதுக்கு எதுக்கு வாங்கணும்... சும்மா தூக்கிக்கிட்டுப் போறதை... இங்க வச்சிட்டுப் போறோம்... இந்தாங்க நீங்களே வச்சிக்கங்க... வந்து வாங்கிக்கிறோம்...  அதுக்கு எதுக்கு இப்படி சண்டைக்கு வாறீங்க...' அப்படின்னு கேக்க,

'ஏய்... நீ போ... என்ன குதிக்கிறே?' என்றான் சங்கிலித் தம்பி.

சாதாரணமாகவே நண்பனுக்கு கோபம் வரும்,கல்லூரிப் புரபஸரான தனது மனைவியை அந்நியன் ஒருவன் 'வா...போ...' என்று பேச, அவனை நோக்கி 'என்னடா என்ன சொன்னே... செட்டையை ஒடிச்சிருவேன்... யாருக்கிட்ட என்ன பேசுறே...?' என்று வேகமாகினார்.

அப்போது இடையில் வந்த நுழைவுச்சீட்டு கொடுப்பவர், 'அந்தம்மா... கான்ட்ராக்ட் எடுத்து இருக்கு.. அதான் கோபப்படுது... விடுங்க சார்... சீட்டை வாங்கிக்கிட்டு பேசாம போங்க' என்றார். எல்லாம் கூட்டுக் களவாணி போல. 

'எதுக்கு சார் வாங்கணும்?' என்றேன் நான். அதற்கு அவர் பதில் சொல்லும் முன் 'சரி சார்... அந்தம்மா பேசுறாங்க சரி... நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்... இவன் யாரு சார் இடையில... வா... போன்னு பேசிக்கிட்டு... பொழந்துபுடுவோமுன்னு சொல்லி வையிங்க...' கோபமான நண்பன் விடவில்லை.

'ஏய் எதுக்கு தொண்டத்தண்ணிய வேஸ்ட் பண்றே... டிக்கெட் வாங்கிக்க... போ... போ...' பையன் துள்ளினான். 

அவனது பேச்சில் சூடான நண்பர் அவனை அடிக்க ஓடினார். நாங்கள் 'விடுங்க.. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் எனத் தடுத்தோம். அப்போது பார்த்து நுழைவுச் சீட்டு கொடுப்பவர் ' என்ன ஓவராப் போறிங்க... இங்க இருந்து திரும்பிப் போக முடியாது பாத்துக்கங்க...' என்று எல்லா சுற்றுலாத் தளங்களிலும் சொல்லும் டயலாக்கை ரகுவரன் மாதிரி சொல்ல எனக்கு சிரிப்பு வந்தது, அய்யாக்களா டயலாக்கை மாத்துங்கப்பா...

"என்ன... திரும்பிப் போக முடியாதா... வா போட்டுப் பாப்போம்... ' என அவரை பிடித்து நண்பர் இழுக்க, நாங்களும் சத்தம் போட்டுவிட்டு நண்பரை சமாதானப்படுத்தி, கேமராவை காரிலேயே வைத்துவிட்டு பாத்ரூம் போனதுக்கு தலைக்கு இரண்டு ரூபாய் அவளிடமே அழுதுவிட்டு பாலத்துக்கு சென்றுவிட்டு திரும்பினோம்.

வரும் போது நண்பர் மறக்காமல், 'நான் நாகர்கோவில்தான்  போட்டுப் பாக்குறதுன்னா... பாக்கலாம்... திரும்பவும் வாறேன்... பாப்போம்... நீயா நானான்னு...' என்று சொல்ல நுழைவுச் சீட்டு வாலை ஓட்டுக்குள் நுழைத்துக் கொள்ள, கேமரா சீட்டு தரையில் எதையோ தேட, சங்கிலித் தம்பி நெகத்துல அழுக்கு எடுத்துச்சி. இவர்களாகவே டிக்கெட்டுகளை தயார் பண்ணி வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் என்பது அங்கு மற்றவர்களிடம் பேசிய போது தெரிந்தது... உண்மையான்னு தெரியலை... எங்களை மாதிரி அவங்களும் சண்டை போட்டிருப்பாங்க போல.

இங்கு மட்டுமல்ல பெரும்பாலான சுற்றுலா தளங்களில் நடக்கும் கொள்ளைதான் இது. எதிர்த்துக் கேட்டால் இங்கிருந்து போயிடுவியான்னு ஒரு மிரட்டல் வேறு... இதெல்லாம் எத்தனையோ எடத்துல பாத்தாச்சு.... நாங்கெல்லாம் பனங்காட்டு நரி... சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

-'பரிவை' சே.குமார். 

9 எண்ணங்கள்:

ப.கந்தசாமி சொன்னது…

கொரலை எசத்துனாத்தான் வேலையாகும்போல. எல்லாம் கூட்டுக் களவாணிங்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// பனங்காட்டு நரி... சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்... //

அப்படி இருக்கோணும்...!

Unknown சொன்னது…

இவர்கள் போன்றவர்களால் தான் நாட்டுக்கே அவமானம்!

துளசி கோபால் சொன்னது…

அடப் பாவிகளா:(

சுற்றுலாப்பயணிகளுக்கு இப்படித் தொல்லை கொடுத்தா பின்னே யார் இந்தியாவைச் சீந்தப் போறாங்க:(

நாங்க சில வருசங்களுக்கு முன் போய் வந்தோம். அப்போ எதுக்கும் டிக்கெட் வாங்குன நினைவு இல்லையே?
எல்லாம் இப்போ சமீபக் கொள்ளையோ?

நேரம் இருந்தால் பாருங்க.
http://thulasidhalam.blogspot.co.nz/2009/06/2009-32.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுற்றுலா தளங்களில் நடக்கும் கொள்ளை வருத்தமளிக்கிறது ..

சக்தி கல்வி மையம் சொன்னது…

இவங்க எல்லாம் கூட்டு களவானிங்க சார்.

ராஜி சொன்னது…

ம்ம் இதுப்போல காண்ட்ராக்ட் எடுத்தவங்கலாம் ரொம்பதான் கொள்ளையடிக்குறாங்க.

ராமலக்ஷ்மி சொன்னது…

சுற்றுலா பயணிகளிடம், மற்றும் கோவில்களுக்கு வரும் வெளியூர்காரர்களிடம் இதுபோல நிறைய ஏமாற்றுகிறார்கள்.

தொட்டிப்பாலம் சென்றதில்லை.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நாங்க போயிருந்தப்பவும் கேமராவுக்கு டிக்கெட் கிடையாதே. இதென்ன புதுசா ஆரம்பிச்சுருக்காங்க!!