பிக்பாஸ் 'ஆடல் பாடல்' டாஸ்க் எடுபடாதுன்னு தெரியும் என்பதால் வேறு ஏதாவது வில்லங்கமான தினசரி டாஸ்க் கொடுப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே. அப்புறம் சந்தோஷமாச் சாப்பிட்டு ஆட்டம் போடவா பணம் கொடுத்து பக்காவா ஏற்பாடு செஞ்சி தங்க வச்சிருக்கோம்... நாளுக்கு நாள் டி.ஆர்.பி. கூடணுமா இல்லையா...?
முதல் நாள் 'ஆடல் பாடல்' இனிதாய் முடிய, அம்புட்டுப் பேரும் தூங்குனதுக்கு அப்புறமாக சாக்சி, பாத்ரூம்ல உக்காந்து கவின் - லாஸ் பத்தி பக்கம் பக்கமாப் பேசி, அழுது வீட்டுக்குப் போகணும்ன்னு சொன்னுச்சு... முன்பு சேரன் சொன்னது போல் இந்தப் பெண் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்... இவருக்குத் தேவை நிம்மதியான ஓய்வு மட்டுமே... இங்கு கவின் சரியாகத்தான் இருக்கிறார்... இவர்தான் தேவையில்லாமல் பினாத்துகிறார் என்று சொல்லத் தோன்றினாலும் விதை போட்டது கவின்... பெண் மனம் அவ்வளவு சீக்கிரத்தில் எதையும் கடந்து விடாது... அதுவும் காதல் என்னும் போது அதன் தீவிரத்தன்மை அதிகமாகத்தான் இருக்கும்... தன்னை ஒதுக்கி இன்னொருத்தியுடன் ஒரே வீட்டுக்குள் மகிழ்வாய் இருப்பதை எவர்தான் விரும்புவார்... இதில் சாக்சி மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்..?
இந்த முறை பிக்பாஸில் பெரும்பாலான நாட்களில் பள்ளி எழுச்சிப் பாடல் முதல் நாள் நிகழ்வுகளைப் பொறுத்தே அமைகிறது. அதன்படி 'என் வீட்டுல நானிருந்தேனே...' பாடல்... சாக்சி ராவெல்லாம் அழுதாலும் காலையில ஆட்டத்துல காட்டு காட்டுன்னு காட்டிருச்சு.... ராத்திரி போகணுமின்னு சொன்ன புள்ள காலையில இந்த ஆட்டத்தைப் பாத்துட்டாவது என்னைய உள்ளற நிக்க வைங்கப்பா தமிழ் மக்களேன்னு சொல்லாமச் சொல்லியது போலிருந்தது.
அப்புறம் 'ஆடல் பாடல்' தொடர ஆரம்பித்தது... இன்னைக்கு முதல்ல அபி, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடலுக்கு அபி'நயம்' பிடித்தார்... அச்சச்சோ பரதத்துக்கு வந்த சோதனை... ரஜினி மக... தனுஷ் பொண்டாட்டி ஆடுனதுக்கு இது பரவாயில்லை ரகம்தான்... என்ன செய்ய மேடை சிறிசு... அதான் கொஞ்சம் பரதம் பல்லிளித்து விட்டது.... ஆனாலும் எல்லாரும் 'ஆசம்'ன்னு பாராட்டுனாங்க.
முகன் கொஞ்சம் வெளியில சுத்திக்கிட்டு இருந்தார்... விடுவாரா பிக்பாஸ்... பாட்டப் போட்டாரு... போக்கிரி மாதிரி குதிச்சி ஓடி வந்து ஆட்டம் போட்டார்... நல்லா ஆடினார்... அதுவும் சாண்டியும் அவரும் விஜய்-பிரபுதேவா மாதிரி ஆடினது... அசத்தல்... முன்னாலயே பயிற்சி எடுத்திருப்பாங்க போலதான் எல்லாருடைய ஆட்டமும் இருக்கு. அப்புறம் தர்ஷனுக்கு இளமை இதோ இதோ... கமல் பார்த்திருந்தால் வெறுத்திருப்பார்... கமலின் ஆட்டம் நம்மையும் ஆட்டம் போட வைக்குமே... இங்கே... போதும்டா போட்ட ஆட்டம்ன்னு படக்குன்னு கட் பண்ணிட்டார் பிக்பாஸ்.
சேரன் ஜானி ரஜினிகாந்த மாதிரி கண்ணாடியை ஒரு விரலால் ஸ்டைலாத் தள்ளிவிட்டுக்கிட்டு உக்கார்ந்திருந்தார். மதுவுக்கு சரோஜாதேவி கெட்டப்புன்னுதானே சொன்னானுங்க... எதுக்கு இந்தம்மா தையல் பிரிஞ்ச தலையணை மாதிரி வாயை வச்சிக்கிட்டு இருக்கு... எப்பப் பார்த்தாலும் கண்ணை வேற சிமிட்டிக்கிட்டு... நமக்குத்தான் கொமட்டிக்கிட்டு வருது.
இன்னைக்கு ஆடல் பாடல் முடிந்தது... இனி நாளை என்பதைப் போல் நடை, உடை, பாவனையெல்லாம் மாத்திட்டு பக்காவா லிவிங் ஏரியாவுல வந்து குத்த வச்சாங்களா... பிக்பாஸ் ஆட்டையை ஆரம்பிச்சாரு... இன்னைக்கு டாஸ்க் மொட்டக் கடுதாசி, யார்க்கிட்ட என்ன கேக்கணும்ன்னு நினைக்கிறீங்களோ அதை நச்சின்னு எழுதிப் போடுங்க... கதற வைப்போம்ன்னு சொல்லி ஒருவருக்கு இரண்டுக்கு மேல் இல்லை எனவும் சொல்லிவிட்டார்.
எல்லாரும் கேள்வியை எழுதிப் போட்டுட்டு கேணத்தனமாக் கேப்பாங்களே... கேவலமாக் கேப்பாங்களேன்னு காத்திருந்தாங்க... அப்போ முகன் பற்றி ரேஷ்மா, அபிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தாங்க... இவ நியூட்ரல்லுன்னு சொல்லிட்டு நியூஸ் வாசிச்சிருவாளேன்னு எதையும் அள்ளிவிடாமல் அளவா, அவனுக்கு இத்தனை பிரச்சினை... எல்லாத்துல இருந்தும் வெளிய வந்திருக்கான்... நானிருக்கேன்னு சொல்லிட்டேன்... ஆனா அவன் அவளும் இருக்காளேன்னு மலேசியாவுல லவ்வுறவளைப் பற்றிப் பேசுறான்... அவனை நான் கட்டிக்கட்டிப் பிடிக்கிறதால அவ கழண்டுக்கிட்டு ஓடிடுவான்னு தெரியுது... அதனாலதான் அவன்கிட்ட கடைசி வரை நானிருப்பேன்னு சொல்லியிருக்கேன்னு சொல்லிட்டு எஸ்ஸாயிருச்சு.
மொட்டக் கடுதாசியில்லை மொட்டக் கேள்விக்குப் பதில் சொல்லும் நிகழ்ச்சி ஆரம்பமானது.
மதுவுக்கான கேள்வி 'எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்னு அடுத்தவங்க அடிச்சாச் சொல்ற நீங்க மட்டும் அடுத்தவங்களைச் சொல்லாம அடிங்கிறீங்க' அப்படின்னு வர, 'நான் எதையுமே பின்னால பேச மாட்டேன்... நீங்க பண்றது எனக்குப் பிடிக்கலைன்னா மூஞ்சிக்கு நேராச் சொல்லிடுவேன்... அதுவே நாங்கேட்டு இந்தப் பதில்தான் வரும்ன்னு தெரியுங்கிறதால சிலருக்கிட்ட பேசுறதில்லை... மௌன விரதமும் சாமி கும்பிடுதலும் நான் நானாக இருக்கத்தான்'னு சொல்லிட்டு கண்ணை படபடன்னு அடிச்சாங்க சரோஜாதேவி... ச்சை மது.
அப்புறம் கவினுக்கு... என்ன கேட்டிருக்கப் போறாங்க... ஐந்து பேருக்கு பாஞ்சாலியா இருந்தே... அப்புறம் ரெட்டை மாட்டு வண்டியில சொகுசாப் பயணம் போனே... இப்ப ஒரு மாட்டை எருமை மாடுன்னு சொல்லிட்டு விரட்டியும் விடாம... பக்கத்துலயும் கட்டாம... என்னமோ பண்ணிக்கிட்டிருக்கியே ஏன்னு சாக்சியைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். இந்தக் கேள்வியை சாண்டிதான் கேட்டிருந்தார்... அதுக்குக் காரணம் கவினின் மனதில் சாக்சியில்லை என்பதை எல்லாருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற நல்ல(!?) எண்ணமே.
கவின் நான் வெளாடப் போனேனா... அவ பந்து போட்டாளா... நான் அடிச்சேனா... அப்ப அவ ஏன்டா பந்தை அங்கிட்டு அடிச்சே இங்கிட்டு அடிச்சிருக்கலாமுல்லன்னு சொன்னாளா.... சரி இப்ப நீ அடி நான் போடுறேன்னு சொன்னேனா... அப்பப் போட்ட பால்ல அவ கிளீன் போல்டு ஆனாளா... உடனே மீரா கைதட்டி சிரிச்சாளா... ரெண்டு பேரும் பேசி வச்சித்தானே பால் போட்டு என்னை அவுட்டாக்குனீங்கன்னு கத்துனாளா... நானும் கத்துனேனா... அப்புறம் மிட் நைட்ல லாஸ்லியா எனக்குப் பால் போடுன்னு வந்தாளா... நான் போட்ட எல்லாப் பாலையும் அடிச்சி ஆடி சிரிச்சி மகிழ்ந்தாளா...' அப்படின்னு பார்த்துப் பார்த்துப் புளிச்சிப்போன 38 நாள் கதையை முழுக்க முழுக்கச் சொன்னான்.
பாத்ரூம்ல லிப்லாக் நடத்துனது... அதைச் சேரன் பார்த்துச் சத்தம் போட்டது... அதுனாலதான் சேரனை இன்னமும் டார்க்கெட் பண்றது என இருதினங்களாக இணையத்தில் வலம் வரும் செய்தி (உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம்) பற்றி மூச். கடைசியில கண்ணைக் கசக்கிட்டுப் போய் உட்கார்ந்துட்டான்.
சாக்சி உடையுமுன்னே அபிராமி உடைந்து அழுதார்... என்னைய லவ்வுறேன்னு கட்டிப்பிடி வைத்தியமெல்லாம் நடத்திக்கிட்டு கவினுக்கு கண்ணீர் விடுறாளேன்னு முகன் பார்த்த பார்வை பாவமாய்... பாத்ரூம் லிப்லாக்கில் அபிக்கும் பங்கிருக்கு என்பதாய்த்தான் செய்திகள் உலாவுது... பின்னே கண்ணீர் வரதா என்ன... அபி அழுததும் மறுபடியும் கவின் அபி கூடவும் ஆட்டையை ஆரம்பிச்சிருவானோன்னு பயமா இருந்துச்சு.
சேரனுக்கான கேள்வியை சேரனே எடுத்தார்... இயக்குநராய் சாதிச்சிட்டீங்க... இந்த வீட்டுக்கு வந்து அப்படி என்ன சாதிக்காததை சாதிக்கப் போறீங்கன்னு சரவணன் கேட்ட கேள்வி. கஷ்டப்பட்டுத்தான் சாதிச்சிருக்கிறேன்... அதுக்காக நான் பட்ட கஷ்டம் அதிகம்... இப்பவும் பணம் கொடுக்கிறாங்கன்னு வந்தேன் என்றாலும் வருடங்கள் இடைவெளி, மக்களிடம் தொடர்பு கொள்ள வசதி என்பதால்தான் இங்கு வந்தேன்... என்னை அனுப்பியவர் விஜய் சேதுபதிதான் அப்படின்னு சொன்னார்.
அடுத்து சரவணனுக்குச் சேரன் கேட்ட, எதிலுமே கலந்துக்க மாட்டேங்கிறீங்க... பெண்கள் சண்டையில் கண்டு கொள்ளவில்லை என்பதற்குச் சேரன் பிரச்சினையில் நாந்தான் முதல் குரல் கொடுத்தேன்... பெண்கள் பிரச்சினையின்னா என்ன பிரச்சினை... ராத்திரியான ஆளுக்கு ஒருத்தியைத் தள்ளிக்கிட்டுப் போறாங்க... அதுவும் இந்தக் கவின் ரெண்டு பேரைத் தள்ளிக்கிட்டுப் போறான்... அவனுக்கு நடக்குறது சக்களத்திச் சண்டை... இதுல நான் எங்க பேசுறது... பேசப்போன என்னையப் போடா கேணப்பயலேன்னு சொல்லுவாங்க...
எல்லாருக்கும் சட்டிசட்டியாச் சமைச்சித்தானே போடுறேன்... அப்பல்லாம் சத்தமில்லாமச் சட்டியைக் காலி பண்ணுறீங்க... இப்ப வட்டத்தை விட்டு வெளிய நிக்கிறேன்னு சொல்றீங்க... நாளைக்கு வட்டியைத் தூக்கிட்டு வாங்க லத்தியால அடிக்கிறேன்னு சொல்ல, சேரன் இந்தப் பதிலுக்குப் புன்னகை பூத்தார்... சித்தப்பூ நீ எப்பவும் 'ப்ப்பூ' இல்ல 'பூ'தான்... பதிலில் எதார்த்தம்... கவின் பதிலால் கருகிக்கிடந்த இடம் சரவணனால் கொஞ்சமே பனியில் பூத்த மலரானது.
அபியை நண்பின்னு சொல்றே... அவ உன்னைக் காதல்ன்னு சொல்றா... இதுல அவளை நீ ஏமாத்துறதால அவ மன உளைச்சல்ல இருக்கா... கைவினைப் பொருட்கள் செய்யும் உனக்குத் தன்வினை தெரிவதில்லையா இல்லை நடிக்கிறாயான்னு மது கேட்ட கேள்விக்கு, நான் வளர்ந்த வாழ்க்கை பொல்லாதது... இங்க அபி எனக்குக் கொடுக்கிறது வெளிய சொல்லாதது.. கவின் சாக்சிக்கிட்ட் என்ன பண்றானோ அதேதான் நான் அபிக்கிட்ட.... அது எங்க ரெண்டு பேருக்கும் தெரியும்... பிக்பாஸ் கேமராவுக்குத் தெரியும்... ஆனா உங்களுக்கு நானும் சொல்லமாட்டேன்... பிக்பாஸூம் காட்ட மாட்டார்... என்னோட பய எங்கப்பன் நல்லவன்னு சொல்லணும்... எம்பொண்டாட்டி அபியோட அடிக்கிற லூட்டியையும் ஜாலியா எடுத்துக்கிற புண்ணியவதியா இருக்கணும்' அப்படின்னு சொல்ல, அபி ஒப்பாரி வைக்க, மது நாம கேட்டதாலதான் அழுகிறாளோன்னு பம்ம, முகன் என்னடான்னு கேட்க, அப்புறம் 'தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை'தான்.
ஆரம்பத்துல சின்னத்தம்பி குஷ்பு மாதிரி சிலுசிலுன்னு இருந்தே... அப்புறம் படையப்பா ரம்யா மாதிரி பகட்டா நடந்தே... இப்ப மூன்றாம் பிறை ஸ்ரீதேவியாட்டம் அலையுறே... யார்கிட்டயும் பேச மாட்டேங்கிறே... ஒதுங்கிப் போறே... கவினுக்கிட்ட பதுங்கிப் போறேன்னு லாஸ்லியாவுக்கு கேள்வி, நான் நாந்தான்... நீங்க எல்லாரும் முதுகுக்குப் பின்னே கதைக்கிறீங்க... எனக்கு முன்னே கதைப்பதுதான் பிடிக்கும்... அதனால ஒதுங்கிப் போறேன்... உங்க கூட கதைக்க எனக்கு இசுடமில்லை... அதுனால உங்களுக்கு என்ன கசுடம்... ஆடுறது கூட எனக்காகத்தான் உங்களுக்காக இல்லை... சேர்மானமெல்லாம் எனக்கு எப்படி வரணுமோ அப்படித்தான் வரும்...ன்னு சொல்லிட்டுட்டு ஒட்டகம் மாதிரி ஒரு சிரிப்பு.
யார்க்கிட்டயும் பேச மாட்டேன்னு சொல்றதுக்கு எதுக்குப் பிக்பாஸ்க்கு வரணும்..? ஒருத்தருக்குப் பின்னே பேசும் போது ஏன் இப்படிப் பேசுறீங்கன்னு கேள்வியாவது கேட்கலாமே... அதை விடுத்து ஒதுங்கியிருப்பேன்னு சொல்றதெல்லாம் வேலைக்கு ஆகாது மகளேன்னு சேரன் பார்க்க... கேட்ட கேள்விக்கு இவ என்ன கேணத்தனமாப் பேசுறான்னு அம்புட்டுப் பேரும் ஞாயிற்றுக்கிழமை காலையில வேப்பெண்ணெய் குடிச்சிட்டு வெளிறிப் போயி உக்காந்திருக்க (அனுபவம் - மறக்க முடியுமா?) மாதிரி உக்காந்திருந்தாங்க.
அடுத்து சாக்சிக்கு கேள்வி... நீங்களும் கவினும்...
இந்தா கேள்வியெல்லாம் வேண்டாம்... எந்தக் கேள்வியா இருந்தாலும் இன்னைக்கு அவன்தான் விடையாய்ன்னு விடைத்து நின்று கொண்டு, எங்கிட்ட சண்டை போட்டு என்னைக் கிளீன் போல்டாக்கிட்டு... மீராவுக்கு மீம்ஸ் போட்டுகிட்டு இன்னொருத்திக்கு ராத்திரி மூணு மணிக்கு ஒருத்திக்குப் பால் போட்டுக்கிட்டு இருக்கான்... அவ அவுட்டாகக் கூடாதுன்னு போடுற பாலெல்லாம் அடிக்கிற மாதிரிப் போடுறான்... இதெல்லாம் நியாயமா...?
யாருமே எம்பக்கம் நிக்கலை... அது பரவாயில்லை... ஆனா என் இடத்துல நின்னுக்கிட்டு அவுட்டாகம ஆடுறவளுக்குத் தெரிய வேண்டாம்... இந்தப் பால்தான் சாக்சியை அவுட்டாக்குன பாலுன்னு... அபியை எல்பிடபிள்யூ ஆக்குன பாலுன்னு... அப்படி... இப்படி... எப்படின்னு பெரிய உரையாத்துச்சு... பாலுக்கு ஊத்துன உரை அதிகமாகி புளிச்சிப் போச்சு... சாக்சிக்காக எல்லாரும் அழுதாக... கவின் மட்டும் கரண்டுக் கம்பியில உக்காந்த காக்கா மாதிரி இருந்தான்.
இப்பத்தான் பிக்பாஸ் எதிர்பார்த்த சக்களத்தி சண்டைக்கான களமாக மாறியது அந்த இடம். சாக்சிக்காக இல்லை என்றாலும் எல்லாருக்காகவும் என் விளக்கத்தைச் சொல்ல வேண்டிய நேரமிதுன்னு லாஸ்லியா இறங்கி, 'கவினை எனக்குத் தெரியும்... எல்லாருக்கும் ஒரு மாதிரித்தான் முத்தம் கொடுப்பான்... அதில் வஞ்சகம் செய்பவனில்லை... அவன் நேற்று இன்று நாளை என எப்போதும் என் பிரியமானவன்... அவனைப் பிரிய மனமில்லாதவள் நான்... என்னோட எல்லை எதுன்னு எனக்குத் தெரியும்... நானா கிழிச்சக் கோட்டை நானே மாத்திக் கிழிச்சிப்பேன்... எவளும் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்... அவனை விட்டுத்தர நானொன்னும் தமயந்தியும் இல்லை... வள்ளிக்கு விட்டுக் கொடுத்த தெய்வானையும் இல்லை... நான் திரிகோணமலைக்காரியாக்கும்... கழுத்தைத் திருகி கோணமாக்கிருவேனாக்கும்' அப்படின்னு பேசினார்.
'ஏண்டி... எம்புருஷனை பங்கு போட்டதுமில்லாம... நான் பேசினதுக்கு எதிரிப் பேச்சாப் பேசுறே... உன்னோட விளக்கத்தை எந்த விளக்குமாறும் கேக்கலை... அக்காக்காரிடி நான்... எம்பேச்சுக்கு எதிர் பேச்செல்லாம் பேசுனே... எகிறி அடிக்க முடியாட்டியும்... கால்லயாச்சும் கல்லைப் போடுவேன்'னு சாக்சி ஆட்டம் போட, ஸாஸ்லியா எஸ்கேப். அதுக்கு முன்னே இதென்னடா கிருஷ்ணனுக்கு வந்த சோதனையின்னு சரவணனும் எழுந்து போய்விட, லாஸ் அப்படியெல்லாம் போகக்கூடாதுன்னு சேரன் குரல் கொடுக்க, லாஸ் கக்கூஸூக்குள் கதறப் போயிருச்சு.
'ஏன்டா எருமை மாட்டுல மழை பேஞ்ச மாதிரி உக்காந்திருக்கே... நேத்து வந்தவ வாய்க்கு வந்த மாதிரிப் பேசிட்டுப் போறா வக்கத்த பயலே அவளுக்காக என்னைய வண்டியில ஏத்துறதுமில்லாம... வண்டி வண்டியாத் திட்டவிட்டு வேடிக்கையும் பாக்குறியா...? நான் சீக்குக் கோழி மாதிரியும்... அவ போந்தாக்கோழி மாதிரியும் இருக்கதாலதானே அவ பின்னால சுத்துறே... நாளைக்கே வைல்ட் கார்ட் மூலமா ஒருத்தி வெடக்கோழிக் கணக்கா வந்தா அவளுக்கும் என் நிலமைதான்னு புரியாமத் திரியிறாளே... அன்னைக்கு என்னோட வலி அவளுக்கும் வருமுல்ல...' அப்படின்னு கவினுக்கிட்ட காளியாட்டம் போட்டார் சாக்சி.
பண்றதெல்லாம் பண்ணிட்டு பக்காவா வசனம் பேசுறேடி நீயி... யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு விளக்கத்தோட விபரமா எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டே, எல்லாப் பக்கிகளும் வடிவேலு பேக்கரிக் கதை மாதிரி எங்கிட்ட கேக்குறானுங்க... நான் எப்பவும் ஹூரோதான்... நீதான்டி வில்லி... லாஸ்தான் என் உள்ளம் கவர் கள்ளின்னு பேச, சாக்சி கண்ணைக் கசக்கினார்.
சாக்சி - கவின் - லாஸ்லியா விவகாரத்தில் கவினுக்கான கேள்விக்கும் சாக்சிக்கான கேள்விக்கும் இருவரும் தாக்குதல் பதிலைத் தரமாய்ச் சொல்லிக் கொண்டார்கள். இதில் விளக்கம் கொடுக்கிறேன்னு லாஸ்லியா எழுந்ததுதான் தவறு. காதல் பிரச்சினை கதறடித்த வாரங்களில் லாஸ்லியா கவினுடன் கதைக்கும் போது சாக்சிக்கிட்ட பேசிய போதுதான் நீ அவளிடம் என்னென்ன பேசினாய்... செய்தாய்ங்கிறதெல்லாம் தெரியும்.. நீ தப்பானவன்னு சொல்லி, அவகிட்ட கதைச்சி உன்னோட பிரச்சினையை சரி பண்ணிக்கன்னு சொன்னுச்சு... ரெண்டு நாள் முன்னாலயும் அவகிட்ட கதைச்சா அவ சரியாவான்னும் சொன்னுச்சு.
ஆனா நேற்று கவின் அரிச்சந்திரன்... கவின் இராமன்... கவின் அஞ்சநேயன்... கவின் பெரியார்... கவின் அண்ணாத்துரை... கவின் காமராஜர்ன்னு சொல்லி மொத்தத்தில் கவின் வாழும் வரலாறுன்னு சொல்லாமச் சொல்லிருச்சு... இப்படியெல்லாம் பேசக் காரணம் என்ன..?
கவினுடன் நான் பேசுவதை யாரும் கேட்க்ககூடாது..? என்ன பேசினேன்னு கேட்கக்கூடாது...? என்று சொல்வதன் பொருள் என்ன. இந்தப் பிரச்சினைகளின் மையப்புள்ளி லாஸ்லியாதான்... நட்பென்பதெல்லாம் வெறும் பேச்சு... இது தீராக் காதல்... தீவிரக் காதல்... சாக்சி வெளியாவது அவர் மனதுக்கும் கவின்-லாஸ்லியா காதலுக்கும் நல்லது.
கவினைப் பொறுத்தவரை அஞ்சு பேருக்கிட்டயும் தேன் குடிக்கலாம் என்பதே எண்ணமாய்.... குடித்த தேனின் சுவை குறையுமுன்னே அபிராமி விவரமாய் வெளியே வர, அவன் குணமறிந்து ஷெரின் ஷேப்பாக, அம்மாடா... அக்காடான்னு ரேஷ்மா நகர, சாக்சி தொபுக்கடீர்ன்னு விழ... கிடைச்சவரை லாபமென விளையாட ஆரம்பித்தான், அதன் பின்னே லாஸ்லியா லவ்வ ஆரம்பிச்சதும் சேனல் மாத்திட்டான்... இடையில் சேரன் என்னும் எண்ணெய் ஊற்றி மீராவுக்கும் மீட்டர் போட்டுப் பார்த்தான். கவின் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள நினைப்பவன்... இவன் உண்மையானவன்னு உட்கார்ந்திருக்கும் இந்தப் பெண்கள்..?
சரவணனின் பேருந்து இடி பேச்சுக்கும் கமலுக்கும் முடிச்சிப் போட்டு எழுதுபவர்கள் எல்லாம் எதற்காக இப்படிப் பொங்கல் வைக்கிறாங்கன்னு தெரியலை... கமல் சேரன்-மீரா பிரச்சினையைப் பேசி சிலர் பெண்களை இடிக்கவும் போவார்கள் அவர்களைச் சொல்லலை என்றபோது சரவணன் பேசியதும் அதைக் கடந்து அடுத்ததுக்குப் போனார். உடனே கமல் ஒழுக்கமற்றவன் என்று பேசுவது எதற்காக..? அந்தாளு அவர் செய்வதைக் கடை பிடிக்கச் சொல்லியா பேசிக்கிட்டு இருக்கிறார்... பிக்பாஸ் மேடையில் சிறப்பான பங்களிப்பு அவரோடது. ஒருவர் மீது சேற்றை அள்ளி வீசும் முன் கொஞ்சம் சிந்தியுங்கள். சரவணன் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவரே மன்னிப்புக் கேட்டுட்டார். நாம்தான் அதைச் சுமந்துக்கிட்டுத் திரியுறோம்.
பிக்பாஸைத் தொடர்வோம்.
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
// தனுஷ் பொண்டாட்டி ஆடுனதுக்கு //
அவங்க ஆடினது பரதமல்ல, பத்ரகாளி நாட்டியமல்லவா - என்று நினைத்து இருந்தேன்... ஹா... ஹா...
கருத்துரையிடுக