மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஆடை ஒரு குப்பைக் கதை


Image result for ஆடை படத்தின் ஸ்டில்ஸ்
தொலைக்காட்சிகளில் பிராங்க்... அதாங்க குறும்பு செய்யும் நிகழ்ச்சிகள் நடத்துவதைப் பார்த்திருக்கிறோம்... வெளிநாடுகளில் ரொம்ப அதிகமாக... மோசமாக ஒருவரைப் பிராங்க் செய்யும் நிகழ்ச்சிகள் அதிகம்... இது இப்போ நம்ம ஊர் தொலைக்காட்சிகள், யூடியுப் சேனல்களில் அதிகம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. 

ஒருவரின் மனநிலை என்ன... என்ன நிலமையில் அவர் இருக்கிறார் என்பதெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் தங்கள் நிகழ்ச்சிக்காக அவர்களைப் படுத்தியெடுத்து வைத்து இறுதியில் கேமரா பாருங்கள்... சிரியுங்கள்... என்று சொல்லும் மனநிலை என்ன மனநிலையோ... அந்த பிராங்க் (தொப்பி... தொப்பி...) நிகழ்ச்சியை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் 'ஆடை'.

எதற்கெடுத்தாலும் பெட் கட்டும் கதாபாத்திரம் அமலாபாலுக்கு... அவரே இந்தத் தொப்பி தொப்பி நிகழ்ச்சியின் முக்கியமானவர்... நிறையப் பேரை பிராங்க் செய்கிறார். இவரின் இந்த வேலை அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.... செய்தி வாசிப்பாளராய் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசை... செய்தி வாசிப்பாளரான தோழியுடன் ஏற்படும் ஒரு சிறு காரசார விவாதத்தின் முடிவில் வெளி நாட்டில் செய்தி வாசிக்கும் போது ஒவ்வொரு ஆடையாக கழற்றி வீசிவிட்டு செய்து வாசிப்பார்கள் என்ற பேச்சு வரும்போது தன்னால் அதைச் செய்ய முடியும் என பெட் கட்டுகிறார். அன்றே தோழியை பாத்ரூமில் வைத்து அடைத்துவிட்டு அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு... அம்மாவிடமும் சபதம் செய்திருக்கிறார் என்பதால் செய்தி வாசிக்கிறார். 

இதேபோல் தன்னைக் காதலிப்பதாகச் சொல்லும் தன் குழுவில் இருக்கும் நண்பனைத் திட்டிவிட்டு குழுவில் இருக்கும் இன்னொருவனை விரும்ப ஆரம்பிக்கிறார்.

அலுவலகம் மாற்றப்படும் நாளின் இரவில் காலியான அலுவலகத்தில் எல்லாருமாய் சரக்கடிக்கும் நாளில் இந்தப் பிரச்சினைகள் பெரிதாக, மறுநாள் யாருமற்ற அலுவலகத்தில் ஆடையின்றிக் கிடக்கிறார் அமலாபால்.

அதன் பின்னான கதை அமலாபாலைச் சுற்றியே நகர்கிறது... உடம்பில் துணியில்லாது அவர் அந்த வீட்டுக்குள் ஓடி ஓடி அலைவதும்... அதற்குள் ஒரு கொலை... போலீஸ் வரவு... என எல்லாமும் அந்த அலுவலகத்துக்குள்தான்... நகர்கிறது.... இறுதியில் யார் இதைச் செய்தது... காதலைச் சொல்லி ஏமாந்தவனா...? செய்தி வாசிக்கும் தோழியா...? இல்லை ப்ராங்கால் பாதிக்கப்பட்ட பொது ஜனமா...? யார் என்ற முடிச்சையும் அமலாபால் திருந்தினாரா என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு படத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தில் ஆடையில்லாமல் (தோலின் நிற ஆடை அணிந்து) நடித்த அமலாபாலைப் பாராட்டலாம். நல்லதொரு கருத்தை எடுத்துச் சொன்ன படம் என்றாலும் முடிவு இழுவைதான்... அட்வைஸ் வேறு.... படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும்... கெட்ட வார்த்தைப் பிரயோகமும் அதிகமே... கேட்டால் இன்றைய தலைமுறை இப்படித்தான் என்று சொல்வார்கள்.

'ஆடை' ஒருமுறை அணியலாம்.

Image result for ஒரு குப்பைக் கதை

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் மனிஷா யாதவ் நடித்திருக்கும்  படம். 2018-ல் வந்த படம்தான் என்றாலும் இப்போதுதான் நல்ல பிரிண்ட்டில் பார்க்கக் கிடைத்தது.

கணவனை விடுத்து மற்றவனை நம்பி ஓடி, அதனால் துன்பத்தை அனுபவிக்கும் சராசரி பெண்ணின் கதைதான்... இதேபோல் ஆயிரம் கதைகள் தமிழில் வந்துவிட்டன என்றாலும் அதைத் சொல்லியிருக்கும் விதத்தில் படம் நம்மை ஈர்க்கிறது. 

குப்பை அள்ளும் தினேஷ்... கூவம் அருகில் அம்மாவுடன் வாழ்கிறார்... அந்த வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நாம் அறிவோம்... அவர் திருமணம் செய்து வரும் பெண் குப்பையே பிடிக்காதவர். மாப்பிள்ளை கிளார்க் வேலை பார்ப்பதாய்ச் சொல்லித்தான் கட்டி வருகிறார்கள். ஏன் அவ்வளவு தூரம் போய் பெண் பார்த்தார்கள்... ஜாதி, மதமெல்லாம் பார்க்காமல் எப்படி கவுண்டர் பொண்ணைக் கொடுத்தார் என்ற லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது.

உண்மை தெரியவர... பிரிவு... குழந்தை பிறந்தும் கணவன் வீடு வர மறுத்தல்... மனைவிக்காக தனி வீடு பார்த்தல்... அங்குதான் கள்ளக்காதலின் தொடக்கம்... குழந்தையுடன் ஓடிப்போதல்... நாயகன் குடிகாரனாய் ரோட்டில் கிடக்கிறான்... மகனின் நிலைகண்டு அம்மா மரித்துப் போகிறாள்... 

கூட்டிப் போனவன் மனைவியாக்கி வைத்திருக்கிறான்... வீட்டில் தெரிய வர... அவளை திருப்பி அனுப்பச் சொல்லி அவனுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறார்கள்... அவனின் நண்பன்தான் இவர்களுக்கு ஆரம்பத்தில் துணை நிற்கிறான்... அவளுக்கு அண்ணாவாகவும் ஆகிறான்... அவனே நீ கல்யாணம் பண்ணிக்க மாப்ள... நான் இவளை வச்சிக்கிறேன்... வேணும்ன்னா நீயும் அப்பப்ப வந்துட்டுப் போன்னு சொல்லி இவளை அடைய நினைக்கிறான்.

படிதாண்டி சென்றதால் அவள் படும் கஷ்டங்கள்... அவளை வெட்டிப் போட இருக்கும் இடம்  தேடிச் செல்லும் தினேஷ்... மனைவியைக் கொன்றானா...? அல்லது குழந்தையை மட்டும் வாங்கிக் கொண்டு அவளை நண்பனின் நண்பனிடமே விட்டுவிட்டு வந்தானா...? இல்லை அவனிடமிருந்து காப்பாற்றினானா..? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள். 

ஒரு குப்பைக் கதை - பலமுறை பார்த்த கதைதான் என்றாலும் பார்க்கலாம் போரடிக்கவில்லை.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டு வேறுபட்ட சினிமாக்கள்....

ப்ராங்க் - பல சமயம் ப்ராங்க் என்ற பெயரில் செய்பவை கோபம் வர வைப்பவை.

குப்பைக் கதை - என்ன சொல்ல. இப்படியும் சில நிகழ்வுகள் உண்மையிலும் நடக்கத்தான் செய்கிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நேர்மறை, எதிர்மறை என்ற நிலைகளில் உங்களின் மதிப்புரைகள் நடுநிலையாக இருப்பதை நான் அதிகம் ரசிப்பதுண்டு. அவ்வகையில் இம்மதிப்புரைகளும்கூட.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தெளிவான பட விமர்சனம், நண்பரே!