மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கறுப்பி குறுநாவலில் இருந்து முதல் பகுதி


ழுதி இருக்கும் கறுப்பி குறுநாவல் குறித்து இங்கு முன்னரே பகிர்ந்திருக்கிறேன்... அதன் முதல் பகுதி மட்டும் உங்கள் பார்வைக்காக... வாசித்து இப்படியான ஆரம்பம் வாசிப்பவரை ஈர்க்குமா என்று சொல்லுங்க... முழு நாவல் இங்கு பகிர முடியாது... நன்றி. 

Image result for black girl
வளின் அழுகை சிவாவிற்கு உறக்க வராமல் புரண்டு புரண்டு படுக்க வைத்தது... ஒரு பெண்ணின் கண்ணீர்தான் எத்தனை வீரியமானது..? அது ஒரு மிகப்பெரிய ஆயுதம்... அந்த ஆயுதம் எப்படிப்பட்டவனையும் சாய்த்து விடக்கூடியதே என்பதை அவன் அறிவான்... அம்மா, அக்கா, தங்கை, அண்ணி, தோழி என எத்தனை பேரின் கண்ணீரை அவன் பார்த்திருக்கிறான். அந்தக் கண்ணீர்கள் எல்லாமே வலியை மட்டுமே பிரதிபலிக்கவில்லை. பல நேரங்களில் நினைத்ததைச் சாதித்துக் கொண்ட கண்ணீராய்த்தான் இருந்திருக்கின்றன... இருக்கின்றன... ஆனால் இவளின் கண்ணீர் வலியை மட்டும்தான் கொட்டியது.

எத்தனை வலி இருந்தால் அப்படி அழுதிருப்பாள்..?

சொந்தங்கள் ஊரில் இருக்க... இந்த ஊரில் அவளுக்கு ஆறுதலாய் தோள் கொடுக்கவும்... அணைத்துக் கொள்ளவும் யாரேனும் இருப்பார்களா...?

அப்படியே இருந்தாலும் அவளின் வலியைத் தீர்க்கும் மருந்தாக இருப்பார்களா..?

அந்தச் சூழலில் அவளோடு  வேலை பார்ப்பவர்களுக்குள்ளும் வேதனைகள் மட்டும்தானே நிறைந்திருக்கும்...?

கூட இருந்து அவளுக்குத் தோள் கொடுக்கும் தோழிக்குள்ளும் இது போல் எத்தனை வலிகளோ..?

அப்படியானால் அந்தத் தோளும் கூட வலி சுமக்கும் தோளாய்த்தானே இருக்கும்...?

கேள்விகள் நிறைந்த மனசு ஆற்றாமையால் அடித்துக் கொள்ள, தூக்கம் வராமல் எழுந்து அமர்ந்தான். அவனின் கட்டில் 'கிரீச்... கிரீச்...' எனச் சப்தமிட்டது. அந்தச் சத்தத்தில் மேல் கட்டிலில் படுத்திருப்பவன் புரண்டு படுத்தான். கண்ணீர் இவன் உறக்கத்தைக் கெடுத்தது போல் கட்டில் சப்தம் அவநின் உறக்கத்தைக் கலைத்திருக்கலாம்.

எழுந்து கைலியை நன்றாகக் கட்டிக் கொண்டு மற்றவர்களின் தூக்கம் கெடாமல் கதவைத் திறந்து பாத்ரூம் போய்விட்டு வந்தவன் மனசுக்குள் அந்தக் கண்ணீரே சுழன்று சுழன்று சுனாமியாய் எழுந்து கொண்டிருந்தது.

பாவம் அவள்... வறுமையே அவளை இங்கு விரட்டியிருக்கும்...

வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது... எங்கெங்கிருந்தோ வேடந்தாங்களுக்குப் பறவைகள் வருமாம்... அப்படித்தான் இந்தப் பாலை மண் வேடந்தாங்களாய் இருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள்... எத்தனை விதமான பேசுமொழி... எத்தனை விதமான உணவுகள்... எத்தனை விதமான கலாச்சாரம்...

இப்படிப் பலவிதமான மனிதர்கள் இருந்தாலும் வலிகளையும் வேதனைகளையும் அதிகம் சுமப்பதாலோ என்னவோ இந்தப் பாலை கடும் வெப்பத்தால் தகிக்கிறது... இங்கிருக்கும் பெரும்பாலானோர்களின் மனதைப் போல...

அறைக்குள் நுழையாமல் யோசித்துக் கொண்டு கிச்சனில் நின்று கொண்டிருந்தான். அந்தத் தளத்தில் இவர்களும் இவர்களுக்கு எதிரே இருப்பவர்களும் எப்போதும் கதவைப் பூட்டுவதில்லை. சும்மா சாத்தியிருந்த கதவுக்கு வெளியே பேச்சுக்குரல் கேட்டது. எப்படியும் ஒரு மணிக்கு மேலிருக்கும். இந்த நேரத்தில் பெண் குரல்... சிறு விசும்பலுடன்...

யார் அவள்...? யாருடன் பேசுகிறாள்..?

ரெண்டு நாள் முன்பு மாடிப்படியில் ஒருவனிடம் தன் பிரேமம் குறித்த கதை சொல்லிக் கொண்டிருந்தாளே அவளாக இருக்குமோ...?

வீட்டுக்குள் சிறை வைத்திருக்கும் மலையாளியின் மனைவி இரவு நேரத்தில் சிறை உடைத்து வந்து ஊரில் இருக்கும் உறவுகளுடன் பேசுகிறாளோ..?

ஒரே ஒரு குரல்தான்...

சிறிய இடைவெளிவிட்டுத் தொடர்கிறது... எதிர்க்குரல் கேட்கவில்லை...

அப்படியானால்...

எவளோ ஒருத்தி ஊருக்குப் பேசுகிறாள்..

இந்த வேளையில் யார் அவள்...?

கதவைத் திறந்து பார்க்க நினைத்தான் சிவா.

அப்படிப் பார்ப்பதை அவள் தவறாக நினைத்து விட்டால்...?

யோசனைகள் எப்போது யோசனைகளாகவே இருப்பதில்லை... அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற உந்துதலும் சேர்ந்தே வருவதுண்டு. அப்படியான உந்துதலே ஜெயித்தது.

மெல்லக் கதவைத் திறந்து பார்த்தான்...

அவள் பேசிக் கொண்டிருந்தாள்...

முப்பத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும்... அவளை அடிக்கடி லிப்டில் பார்த்திருக்கிறான்... அவளும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பாள்... அவள் பார்வையின் பொருள்தான் அவனுக்குப் புரிவதில்லை...

சில நேரம் அவன் லிப்ட்டுக்குக் காத்திருக்கும் போது அவள் பிளாட் கதவு திறந்திருந்து இருந்து  அவள் உள்ளே நிற்கும் பட்சத்தில் அவனையே குறுகுறுவெனப் பார்ப்பாள். அவனும்தான் பார்ப்பான்... அவன் ஒன்றும் புத்தன் அல்லவே... திருவிழாக்களில் தாவணியை ரசித்து பின்னால் சுற்றியவன்தானே... கல்லூரியில் புவனா மீதான ஒரு தலைக்காதலில் தகித்தவன்தானே... அவனொன்றும் அக்மார்க் தங்கமெல்லாம் கிடையாது என்றாலும் தனகென எல்லை வகுத்து வைத்திருப்பவன். அவனின் கண் கூட சில நேரம் கழுத்துக்குக் கீழே மேயத்தான் செய்யும். இங்கு பம்பாய் படத்தில் உயிரே பாடலில் மலையில் ஓடி வரும் மனிஷா கொய்ராலாவை நடக்கும் போதே பார்க்க முடியும்... சாமிக்கு படையல் வைப்பதும் தெரியாமல் எடுப்பதும் தெரியாமல் பார்த்தா பார்த்துக்க பார்க்காட்டி போ என பூஜாரி நெய் வேத்தியம் செய்வதைப் போல் பார்த்தும் பார்க்காதது மாதிரிக் கண்களைத் தாழ்த்திக் கொள்வான்.

அவன் நிற்கும் நேரத்தில் சில சமயம் கதவுக்கு வெளியே வந்தும் போவாள்... எதற்காக வருகிறாள் என்பதெல்லாம் தெரியாது... ஒரு மின்வெட்டுப் பார்வை அவன் மீது பட்டுத் தெறிக்கும்... இதுவரை சிநேகமான புன்னகை எதுவுமில்லை என்றாலும் கண்கள் புன்னகைத்துக் கொள்வதை உணர்ந்திருக்கிறான். அவள்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

நடந்தபடி யாரிடமோ நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா... இந்த வாழ்க்கை யாருக்காக... எனக்காகவா... நமக்காகத்தானே... நான் சொகுசா இருக்கேன்னு யார் சொன்னா... ஒவ்வொரு நாளும் விதியை  நொந்துக்கிட்டு தூக்கமில்லாமக் கிடக்கேன் தெரியுமா..? எனத் தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தவள் பேச்சுச் சுவராஸ்யத்தில் கதவைத் திறந்த சப்தத்தைக் கவனிக்காமல் லிப்டைப் பார்க்க நின்றிருந்தாள்.

எதேச்சையாகத் திரும்பிய போது அவனைப் பார்த்தாள்.

அதே பார்வை...

அழுதிருப்பாள் போல...  எதிர்முனைக்காரன் இந்த நேரத்தில் அவளுடன் பேசுகிறான் என்றால்... அவளும் அழுது கொண்டு பேசுகிறாள் என்றால் எதிர்முனை ஏதோ ஒருவித சந்தேகத்துடன் தூங்காமல் இருக்க வேண்டும்...

இவள் கூட தன் விதியை நொந்து தூங்காமல் இருக்க வேண்டும். பகலெல்லாம் வேலை பார்த்துவிட்டு வந்து சமைத்துச் சாப்பிட்டு இந்த நேரத்தில் ஊருக்குப் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்கள் தூங்குவது எப்போது...?

தூக்கம் துறந்த துக்க வாழ்க்கையைச் சொகுசெனச் சொல்லும் உறவுகளை என்ன சொல்வது..?

எப்பவும் புன்னகை பூக்கும் பார்வையைப் பார்த்தவன் அழுதிருக்கும் கண்களைப் பார்த்ததும் வருத்தப்பட்டான்... அவளும் இவனைத் தவிர்க்க நினைத்து பேசுவதைக் குறைத்து 'ம்' போட்டபடி லிப்ட் பக்கம் திரும்பிக் கொண்டாள். அவளின் துக்கத்தைப் பகிர சரியான மடி இங்கு இல்லை என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.

அவள் பேசட்டும்... அழட்டும்... ஆறுதலாய் ஒரு வார்த்தையாவது எதிர்முனையில் இருந்து கேட்டுவிட மாட்டாளா என்ன... யாரும் அறியாவண்ணம் இந்த நடுநிசியில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றால் எதிர்முனையில் இருந்து ஆறுதலாய் ஒரு வார்த்தை கிடைக்கும் என்ற நம்பிக்கைதானே... அந்த நம்பிக்கை பொய்க்காதிருக்கட்டும்.

பகலெல்லாம் சிரிப்பவள் இரவில் யாருக்கும் தெரியாமல் அழுகிறாள்... இந்த நாட்டில் விதி யாரையும் சந்தோஷமாக இருக்க விடுவதில்லை என நினைத்தபடி கதவைச் சாத்திவிட்டு அறைக்குள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு கட்டிலில் ஏறிப்படுத்தான்... கட்டில் கிரிச்.. கிரீச்.. எனச் சத்தமிட்டது... மேலிருப்பவன் புரண்டு படுத்தான்... எதிர் கட்டில்க்காரன் எழுந்து வெளியே போனான்.  அவனும் கூட கதவைத் திறந்து அவளைப் பார்க்கக் கூடும்... இங்கே பெண்ணின் குரல் எல்லாரையும் ஈர்க்கத்தானே செய்கிறது.

பத்துக்குப் பத்து அறையில் இரண்டிரண்டாய் நாலு கட்டில்கள்...

பாலை மண்ணில் தனித்த  வாழ்க்கை என்பது ஒரு அறைக்குள்தான்... இல்லையில்லை... ஒற்றைக் கட்டிலில்தான் கழிகிறது.

சந்தோஷமோ... துக்கமோ... எதையும் இறக்கி வைக்கக் கூட இடமில்லா வாழ்க்கை...
அன்போ... அரவணைப்போ... எதுவுமற்ற வாழ்க்கை...  ஆனால் இதுதான் வாழ்க்கை... இது அவர்களுக்கு எழுதப்பட்ட வாழ்க்கை...

எனக்கு இப்படி... அவளுக்கு அப்படி... இப்படித்தானே ஒவ்வொரு நாளும் கரைகிறது என நினைத்துக் கொண்டான்...

அவள்... அந்தக் கருப்பி... மீண்டும் மனசுக்குள் எழுந்தான் கண்ணீர் சிந்தியபடி...

அவளின் அழுகை இரவெல்லாம் அவனுள் தொடர்ந்தது...

புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமில்லாத இரவாக அது நகர்ந்தது.

எப்படியும் மீண்டும் ஒரு முறை அவளைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்...

அவனுக்கான அலாரம் அடித்தது... தூக்கமில்லா அலுப்போடு எழுந்து கொண்டான்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த நம்பிக்கை பொய்க்காதிருக்கட்டும் என்றே எனக்கும் தோன்றுகிறது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குறுநாவலில் ஒரு பகுதி... முழுவதும் படிக்க ஆவல்.

பாலை வாழ்க்கை எத்தனை எத்தனை துயரங்களையும் வலிகளையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது.

வேடந்தாங்கள் - வேடந்தாங்கல்...