படம் பார்த்ததும் ஒரு தளத்திற்காக பத்து நாட்களுக்கு முன்னர் எழுதிய விமர்சனம். தளத்தில் ஏதோ மாறுதல் கொண்டு வர இருக்கும் காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் அதற்காக எழுதி அனுப்பிய பதிவுகளை எல்லாம் புதுப்பித்து வரும்போது பதிய முடியாது என்பதையும் சொல்லி, எப்போது மீண்டு வருகிறோமோ அப்போது உங்களுக்குத் தகவல் தருகிறோம்... புதிய பதிவுகளுடன் எங்களுடன் இணையுங்கள்ன்னு சொல்லிட்டாங்க. அதனால எப்பவும் போல் நம்ம பக்கத்துலயே பகிரலாமேன்னு பகிர்ந்தாச்சு.
இஃக்லூ...
படத்தின் பெயரைப் பார்த்ததும் ஏதோ தெலுங்குப்பட டப்பிங் போலன்னு நினைத்தேன். சில நண்பர்கள் இஃக்லூவைக் கொண்டாடுவதை அறிந்து என்ன கதை, எப்படியான படம் என்பதெல்லாம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்து இடையில் நிறுத்தாமல் என்பதைவிட நிறுத்த விடாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் (2-மணி 18-நிமிடம்) என்னைக் கட்டிப் போட்டு இறுதியில் கண் கலங்கவும் வைத்தது.
இஃக்லூ - அப்படின்னா என்ன?
படத்தின் மொத்தக் கதையையும் இந்த வார்த்தையைச் சுமக்கும் சில நிமிடக்காட்சி விளக்கிவிடுகிறது.
இஃக்லூ அதாவது பனிக்கட்டிக் குடில் கனடாவில் வாழும் இக்னூட் என்னும் பழங்குடி இனத்தவருடன் தொடர்புடையது. ஆர்க்டிக் பகுதியில் வாழும் எஸ்கிமோக்கள் பனி மலையில் மழைக்காலத்தில் வேட்டைக்குச் செல்லும் போது இம்மாதிரியான வீடுகளைக் கட்டி வாழ்கிறார்கள். இது அரைக்கோள வடிவம் கொண்டது என்றாலும் உண்மையில் சைவட்டம் (paraboloid) என்ற பாணியில்தான் இருக்கிறது.
வெளியில் இருந்து காற்று உள்ளே புகாமலும் வெப்பம் வெளியேறாமலும் இருக்க சுரங்கப்பாதையும் விலங்குகளின் தோலும் பயன்படுத்தப்படுகிறது. மூன்று வகையான வீடுகளை வடிவமைக்கிறார்கள்... அதாவது சிறிய பனிக்கட்டி வீடுகள் ஒரு இரவுத் தங்கலுக்கானது. கொஞ்சம் பெரியதாய் அதாவது ஒரு அறையுடன் கூடிய வீடு மற்றும் ஐந்து அறைகளைக் கொண்ட மிகப் பெரிய வீடு.
இந்த வீடுகளின் கட்டிடக்கலை ஆச்சர்யமானது... எந்தவித தாங்கும் அமைப்புமின்றி அடுக்கப்படும் பனிக்கட்டிகளே ஒன்றுக்கொன்று தாங்கிக் கொள்ளும்படி அமைக்கப்படுகின்றன. வெளியில் இருக்கும் குளிர் இதன் உள்ளுக்குள் இருப்பதில்லை... மிதமான வெப்பத்தைத் தாங்கியே இதன் உள்ளமைப்பு இருக்கிறது. உள்ளிருக்கும் வெப்பம் வெளியே வருவதில்லை... காரணம் பனிக்கட்டிகள் வெப்பத்தைக் கடத்துவதில்லை. இக்னூட் மக்களின் இனுக்டிடுட் மொழியில் இஃக்லூ என்றால் வீடு என்று அர்த்தமாம்.
சரி இதற்கும் கதைக்கும் என்ன பொருத்தம்...?
கோபம், தாபம், துக்கம், வேதனை, வலி என எல்லாம் சுமக்கும் ஒரு பெண், தன் கணவனால் அன்பாகப் பார்த்துக் கொள்ளப்படுவதை இருவரும் இந்த இஃக்னோவில் தங்கும் அந்த சில நிமிடத்தில் வெளியில் இருக்கும் குளிரை உள்ளே வரவிடாது வெம்மையாக வைத்திருக்கும் இஃக்லூவுடன் ஒப்பிடுகிறாள்.
படம் முழுக்க தீராத காதல்... திகட்டத் திகட்ட அன்பு... தித்திக்கும் கோபம்... என சுழற்றி அடிக்கும் திரைக்கதை. ஆரம்பமே அழகான இரண்டு கவிதைகள் கட்டிலில் அமர்ந்து பேசுவதாய்... வைஷ்ணவி, ஐஸ்வர்யா (வைசு, ஐசு). இவர்கள் நிஜ இரட்டையர்கள்... ரொம்பக் கேசுவலா... அதுவும் ஒரே டேக்கில் உச்சாப் போனதைப் பற்றிப் பேசுகிறார்கள். அக்காக்காரி படிப்பில் கெட்டி... தங்கச்சி சுமார் ரகம்... அப்பாவின் பாசம் அதிகமாய் தங்கைக்கு... அதுவே அக்காவுக்கு சில நேரங்களில் கோபத்தின் சாரல் அடிக்க காரணமாகிறது.
அம்மா இல்லாது அப்பாவிடம் வளரும் குழந்தைகள்... அப்பாவின் அன்பு அம்மாவின் அன்பினைப் போல் எல்லா நேரத்திலும் இருப்பதில்லை... அது பெரும்பாலும் கண்டிப்பு நிறைந்ததாகவே இருக்கும். எல்லாருக்கும் அம்மா இருக்காங்க... ஸ்கூலுக்கு வர்றாங்க... நமக்கு ஏன் அம்மா இல்லை... வரலை... அம்மாவின் போட்டோகூட வீட்டில் இல்லயே என்ற ஆதங்கம் மூத்தவள் மூலம் வெளிப்பட, சொல்ல முடியாமல் அவளைத் திட்டிப் படுக்க வைக்கிறான். தந்தையிடம் தங்கை கேட்டால் சொல்வான் என அவளிடம் பேச, அவளோ எனக்கு அப்பா,நீ, என்னோட சைக்கிள் போதும்... அம்மால்லாம் வேண்டாம்.. நான் கேட்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள்.
சைக்கிள் ஓட்டத் தெரிந்த தங்கையால் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் ஒரு விடுமுறை தினத்தில் அக்கா விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்குச் செல்கிறாள். ஹாஸ்பிட்டலில் இருக்கும் வைசுவிடம் அவள் என்ன கேட்க நினைத்தாலோ அதைச் சொல்லுங்கள் என டாக்டர் சொன்னதும் 'அம்மா'வைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறான் அவர்களுக்கு அம்மையப்பனாய் இருக்கும் சிவா. சின்னவளும் அக்கா அடிபட்ட வருத்ததுடன் அப்பாவின் கதையை எதிரே அமர்ந்து கேட்க ஆரம்பிக்கிறாள்.
விரிகிறது அந்தக் காதல் கதை...
ஆர்க்கிடெக்டாக இருந்தாலும் குடியே பிரதானம் என்பதான... ரவுடியைப் போன்ற நாயகனை அழகான ஒரு பெண் விரும்புவதென்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல என்றாலும் இவர்களின் காதல் ரொம்ப வித்தியாசமாய்ப் பயணிக்கிறது. அவனின் கோபம்... அவளின் காதல்... குடும்பம்... எதிர்ப்பு... கர்ப்பம்... எனப் பயணித்து கதை நிற்கும் இடம் 'கேன்சர்'.
அம்ஜத்கான் (சிவா) தாடியும் தண்ணியுமாக.. கோபமும் காதலுமாக... அலட்டலில்லாத நடிப்பு... மகளிடம் சத்தியம் செய்து சத்தியம் வாங்குமிடம்... அவர்களின் லூட்டியை கோபக்காரனைப் போல உள்வாங்கிப் பேசும் அழகு... காதல் மனைவியின் வலியைப் புரிந்து கொண்டாலும் வெளிக்காட்டாமல் இருக்கும் பாங்கு... மனைவிக்காய் தன் குணங்களைத் தொலைத்து நல்லவனாய் மாறி நிற்பது என நடிப்பில் பரிணமித்திருக்கிறார்.
அஞ்சு குரியன் (ரம்யா) சாதாரண காட்டன் சேலையில் கூட அழகியாய்... காதலன் ஆடச் சொன்னதும் மாடியில் இருந்து அப்பா பார்க்கிறார் என்பதை அறிந்திருந்தாலும் அவனுக்காய் நடுரோட்டில் சல்சா ஸ்டெப் போட்டு ஆடுவதாகட்டும்... கோபப்படும் அவனைத் தேடித்தேடிச் செல்வதாகட்டும்... கருவைச் சுமப்பதை அம்மாவிடம் மெல்லச் சொல்வதாகட்டும்... தனக்கு இன்ன வியாதி என அறிந்த பின் அந்த வியாதியின் வலியை வயிற்றில் குழந்தையுடன் சுமப்பது.... அந்த வேதனையுடன் போராடுவது... என மிகச் சிறப்பாக, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
தமிழ்ச் சினிமாவில் நாம் இதுவரை பார்த்திருக்கும் கேன்சர் நோயாளிகளுக்கும் ரம்யாவிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தன் நோயின் தீவிரம் கூடும் போதெல்லாம் அவர் படும் வேதனை... கோபம்... நிலையில்லாமை எல்லாமே கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படித்தானே தவிப்பார் என்பதை நம்முள்ளே உணர்த்திக் கொண்டே, அந்த வலியை நாமும் உணரச் செய்கிறார். கேன்சரின் வலி எத்தகைய கொடியது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதால் அவளின் வலி மனசுக்குள் பாராமாய்.
எதையும் செய்ய வேண்டும் என்ற துணிவு கடலில் குதிக்க வைக்கிறது... காரமாய்ச் சாப்பிடலாமா என்பவனிடம் உன் மனைவி உன்னுடன் சம்மதித்துத்தான் படுக்கிறாளா இல்லை நீ படுக்க வைக்கிறாயா..? எனக் கேட்க வைக்கிறது. உனக்கு என்னை விட குழந்தை முக்கியமாயிப் போச்சான்னு கோபப்பட வைக்கிறது. வலியின் உச்சகட்டத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத, எடுத்துக் கொள்ளக் கூடாத மார்பினைக் கேட்க வைக்கிறது... எல்லாமே கேன்சர் என்னும் கொடிய நோயின் காரணமாகத்தான் நிகழ்கிறது. சிரிக்கிறாள்... அழுகிறாள்... தவிக்கிறாள்... துடிக்கிறாள்... கோபப்படுகிறாள்... எல்லாவற்றிற்கும் மேலாக சற்று வலி குறையும் போது தன் செயலுக்காய் மன்னிப்பும் கேட்கிறாள்.
வாழ வேண்டிய வயதில் சாவென்பதே கொடுமை... அதிலும் தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் பார்க்காமல் இருப்பது அதைவிடக் கொடுமை. எங்கே பார்த்தால் சாக வேண்டாம் என்ற எண்ணம் வருமோ... சாவு பயம் வருமோ... என்றெல்லாம் எண்ணி சாகும்போது பயமில்லாமல் சாக வேண்டும் என நினைக்கும் ஒரு தாயின் மனம் எத்தனை ரணப்படும் என்பதை மெல்லப் புன்னகையுடன் ஆரம்பித்து உதடு துடிக்க, கண்ணீரை மறைக்கும் இடத்தில் மிக அழகாக, நடிப்பென்று அறியாத வண்ணம் செய்திருக்கிறார் அஞ்சு.
சாவினை நெருங்கும் சமயத்தில் தனக்காக குடியை விட்டொழித்த கணவனை, மீண்டும் குடிக்கச் சொல்கிறாள்... மறுத்துக் குடிக்கிறான்... அவனின் கோப குணம் கிளர்த்தெழுகிறது... அதைப் பார்த்து அந்த வேதனையிலும் அவள் இதைப் பார்த்துத்தான்டா உன்னை நான் காதலித்தேன்... இப்படி இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும் என்கிறாள்.
இறுதிக் காட்சியில்... சரி வேண்டாம் விடுங்க.... படத்தைப் பாருங்க... அப்பத்தான் ஒரு அன்னையின்... காதலியின்... பெண்ணின்... சாவு வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தே வாழ்வை நகர்த்தும் ஒரு நோயாளியின் வாழ்வின் இறுதியைக் கண்ணீரோடு காணலாம்.
ஐசுக்கு மட்டுமே படிப்பில் கெட்டிக்காரி இல்லை என்ற போதிலும் அதீத செல்லம் கொடுக்கக் காரணம் அவளே மனைவியின் சாயலாய் என்பது போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் கேட்கும் கேள்வியின் மூலமும் அவளின் சில செய்கைகளின் மூலமும் பார்ப்பவர்களுக்குக் கடத்தப்படுகிறது.
5000 பணத்தை லஞ்சமாய் ஒருவரிடம் கொடுக்கச் சொல்லும் இன்ஸ்பெக்டரின் பெயரை ரம்யா கேட்கும் போது அவர் சொல்வது 'பிச்சாண்டி'...
கதவை உங்கப்பனா சாத்துவான் என்பவனிடம் ஐசு சொல்வது 'அப்ப நீதானேப்பா சாத்தியிருக்கணும்'...
கொஞ்சமாய் சரக்கை ஊற்றும் கணவனிடம் 'என்னடா காக்காய் மாதிரி கல்லைப் போட்டுக் குடிக்கப் போறியா..?' எனச் சிரிப்பது...
படகோட்டி சிவாவிடம் பணம் வாங்க மறுத்து 'சார்... அந்தப்புள்ளைக்கு ஏதோ வியாதி இருக்கும் போல... சொத்தையெல்லாம் வித்தாவது காப்பாத்திரு சார்'
இப்படி நிறைய இடங்களில் வசனங்கள் ரசிக்க வைத்தன.
படம் நெடுக வாழ்ந்து செல்லும் காதலில் சில இடறல்களும் இருக்கத்தான் செய்கிறது. அத்தனை காதல் கொண்டிருக்கும் மனது 70-30 சான்ஸ் இருக்கு... கருவைக் கலைத்தால் ரம்யாவைக் காப்பாற்றலாம் என்று டாக்டர் சொல்லுமிடத்தில் கருவைக் கலைக்கக் கூடாது என நிற்பது தன்னோட வித்து முதல் முதலில் விளைந்து நிற்கிறது... அது பூமியில் தவழ வேண்டும்... என்னை அப்பா என்றழைக்க வேண்டும் என்ற ஆவலாக இருந்தாலும் மனைவியா குழந்தையா என்ற இடத்தில் மனைவிக்கான தராசே வெல்லும்... இதில் குழந்தைகள் மட்டுமே வெல்கிறார்கள்... நாங்கள் கேன்சரை வென்றுவிடுவோம் என்ற வெற்றுச் சம்பங்களுடன்.
மொட்டையாகி... வேதனைகளைச் சுமக்கும் மனைவிக்காக மொட்டை அடித்துக் கொள்ளும் சிவா அடுத்த காட்சியிலேயே ஆரம்பத்தில் இருந்த அதே முடியுடன் இருத்தல் இயக்குநர் கவனிக்கத் தவறிய இடம்.
மனைவியின் வேதனையும் வலியும் ரத்த வாந்தியும் பார்த்தும் கூட பிள்ளைக்காக பொறுத்துக்கோடி என்ற மனப்பாங்கைக் கொண்டிருத்தல் ஏற்புடையதாய் இல்லை.
கணவனும் மனைவியும் மேட்டர் படம் பார்க்கும் காட்சியில் ரம்யாவின் சேட்டைகள் ரசிக்க வைத்தன... அதைவிட வெளியிலிருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும் அக்காவின் முகபாவம்... ஆஹா... ஆமா இப்பவுமா இந்தப் படங்களின் சிடியை வாங்கிப் போட்டுப் பார்த்துக்கிட்டு இருக்காங்க... இணையத்தில்தான் கொட்டிக் கிடக்கே... இந்த இடமும் ஒரு சறுக்கல்தான்... அதுவும் மருத்துவமனையில் வைத்துக் கொடுப்பதும் அது குறித்தான பேச்சும் சற்றே கூடுதலாய்த்தான் தெரிந்தது.
முரண்டு பிடித்துப் பின் மாறும் அப்பா, மகள் விரும்பிய இடத்தில் வாழ வைக்க மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை அடித்து நொறுக்கும் அம்மா, தம்பியின் வாழ்க்கை அவன் விரும்புபவளால்தான் நல்லாயிருக்கும் என நினைத்து ரம்யாவின் அப்பாவிடம் பேசும் விவாகரத்தான அக்கா, பணம் வாங்க மறுத்து வீட்டுக்குப் போனதும் குளிச்சிடும்மா... உப்புத்தண்ணி பாரு... எனக் கரிசனம் காட்டும் படகோட்டி, ரம்யா எல்லாரையும் எடுத்தெறிந்து பேசிய போதும் அதெல்லாம் பரவாயில்லைடா என்று சொல்லும் நண்பன் என எல்லாருமே அவரவர் பங்குக்கு எல்லாரும் சிறப்பாய்.
முழுப்படத்தையும் தன் தோளில் அனாயசமாய்ச் சுமக்கிறார் அஞ்சு குரியன்... உருவத்தில் மட்டும் அழகியில்லை நடிப்பிலும் அழகிதான்.
இவ்வகை மெல்லிய காதல் கதைகளை... மருத்துவமனைக்குள் கிடக்கும் கதைகளை எவரும் எடுக்க விரும்புவதில்லை என்றாலும் இப்படியான படங்கள் அடிக்கடி வரவேண்டும்... வந்தால் நன்றாக இருக்கும்.
எடிட்டிங்கும் (பிரசன்னா) ஒளிப்பதிவும் (குகன் பழனி) படத்துக்கு பெரும் பலம் என்றால் அரோல் கரோலியின் இசை படத்துக்கு உயிர்.
இப்படி ஒரு படத்தை இயக்கியதற்காகவே பரத் மோகனைப் பாராட்டலாம்... கேன்சர், கண்ணீர், சோகமென நகர வேண்டிய படத்தை தொய்வில்லாத திரைக்கதையில் நோய்தான் இப்ப என்ன என அவர்களின் வேதனையையும் வலியையும் மிகச் சிறப்பான காட்சிப்படுத்தலாலும் திரைக்கதையாலும் வெற்றி பெற வைத்திருக்கிறார்.
OTT முறையில் இணைய வெளியீடாக ZEE-5 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.
ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து உணர வேண்டிய படம்.
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
உங்களின் விமர்சனம் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.
அமேசானில் வந்தால் பார்க்கலாம்.
படம் பார்க்கும் ஆவலைத் தந்திருக்கிறது உங்கள் பதிவு. நன்றி குமார்.
கருத்துரையிடுக