மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 10 ஜூலை, 2019பிக்பாஸ்:பலிகடா பாத்திமா

Image result for biggboss fathima
(பாத்திமா)
பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியாகப் போவது யார் என்பதில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென உலக நாயகன் நொடிக்கொருதரம் சொன்னாலும் அதெல்லாம் தமிழ்... தமிழ்ன்னு சொல்லித் தமிழர்களை ஏமாற்றுவது போல்தான் என்பதை உணர்ந்து கொள்ளுதல் நலம். விஜய் தொலைக்காட்சி தனது டிஆர்பிக்காக இவர் இருந்தால் நல்லது என்ற நிலையிலேயே ஆட்களை வெளியேற்றும் என்பதை உணராமல் இருப்பதும் தமிழகத்துக்கு எதிரான திட்டங்களுக்கெல்லாம் கையெழுத்துப் போட்டது இப்போது மக்களுக்காகப் போராடும் திமுக என்பதை உணராமல் இருப்பதும் ஒண்ணுதான்.... தமிழ் மண்ணுக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்குன்னு சொன்னதற்காக மதுமிதாவுக்கு ஓட்டுப் போடும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதே வெட்கக் கேடு.

பிக்பாஸில் புதுமையாக... அதாவது உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பதைப் போல வீட்டிற்குள் இருக்கும் நபர்களுடன் வெளியிலிருந்து ஒருவர் பேசலாம் என்று சொல்லியிருப்பதால் முதல் போன்... முதல் கேள்வி கவினுக்கானது. நாலு பேரில் யாரைக் காதலிக்கிறீங்க என்று கீர்த்திகா என்பவர் கேட்க, எங்க அத்தை பொண்ணுங்ககிட்ட விளையாடுற மாதிரித்தான் நாலு பேருக்கிட்டயும் விளையாடுறேன்னு சொன்னதும் சாக்சியின் முகம் போனதைப் பார்க்க வேண்டுமே...?

கீர்த்திகாவிடம் வீட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் ஓடுது இதைப் பற்றி கேக்குறீங்களேன்னு கவின் பேச்சைத் தொடர ஆரம்பிக்க, கமல் போதும் ஒரு கேள்விதான்... விட்டா விபரமாக் கேப்பீங்க போல என நிறுத்தி உங்களுக்கு கீர்த்திகான்னு அத்தை பொண்ணு இல்லையே இருந்தா அவங்களுக்கு வருத்தமளிக்கலாம் என்று சொல்லிக் கடந்தார்.

மற்றவர்கள் பாதிக் கண் கொடுத்து காப்பாற்றப்பட, பாத்திமாபாபு வெளியேற்றப்பட்டார்... கவனிக்க மக்கள் வாக்கெடுப்பில்தான் அவர் வெளியேற்றப்பட்டார் எனத் தீவிரமாக நம்புவோமாக. மீரா காப்பாற்றப்பட்டதும் சரவணனைக் கட்டிக் கொண்டு கத்தினார். கொஞ்சம் இரு... அவரு என்னமோ சொல்றாரு என சரவணன் சொன்னது... ஏய் சாத்தானே அப்பால தள்ளிப்போ என்பதாய் இருந்தது. மீராக்கள் திருந்தப் போவதில்லை என்பதை அதன் பின்னான நண்பர்களே முதுகில் குத்திட்டாங்க போன்ற பேச்சுக்கள் நிரூபித்தன. குத்துனவன் நண்பனா இருந்தா ஏத்துக்கணும்ன்னு சொன்ன எங்க சசிக்குமார் எங்கே... நண்பனே குத்திட்டான்னு மைக் வச்சி அலறாத குறையாக் கத்தின மீரா எங்கே...

பாத்திமா கிளம்பும் போது சாக்சிதான் காப்பாற்றபட்டதில் ஆனந்த அழுகை... அவரைத் தேற்ற ஷெரின், அபி, ரேஷ்மா என ஒரு பக்கம்... மோகன் நாளை நாமோ என்ற எண்ணத்தில் அழுதது போல் இருந்தது. சென்ற பிக்பாஸ் வெளியேற்றும் படலத்தில் எல்லாம் எவ்வளவு பிரச்சினை என்றாலும் எல்லாரும் கட்டித் தழுவி, அழுது அனுப்புவதைப் பார்த்த நமக்கு அவர் போன போகட்டும் என பலர் குறிப்பாக வனிதா கண்டு கொள்ளவேயில்லை. பாத்திமாதான் சொல்லிச் சென்றார். என்ன விதமான மனிதர்கள் இவர்கள் என்பது குறித்த வினாவே மிஞ்சியது.

கவின் கொஞ்சம் புரிந்து புலம்ப ஆரம்பித்திருக்கிறான். மது இன்னும் தமிழ்ப்பொண்ணு... மண்ணுன்னுட்டு திரிய ஆரம்பிச்சிருக்கு... மீரா இரண்டு பக்கமும் நல்லவர் போல நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அபிராமிக்கு எதிரியாக காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் வனிதா... நாமெல்லாம் உண்மையா இருக்கோம் என ஷெரினும் சாக்சிஷியும் சொல்லிக் கொண்டே வனிதாவின் பின்னால் பிஸ்கெட்டுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியேறிய பாத்திமா, வனிதாவைப் பற்றி புட்டுப் புட்டு வைத்ததுடன் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரையும் மிக அழகாக அந்த இரு வாரத்தில் கணித்திருக்கிறார் என்பது அவர் கமலுடன் பேசும் போது தெரிந்தது. அவரின் பார்வை மிகச் சிறந்த திறனாய்வுப் பார்வை.

பாத்திமாவே இந்த வாரத்துக்கான தலைவர் பதவி போட்டிக்கு தர்ஷன், சாண்டி மற்றும் அபி ஆகிய மூவரைத் தேர்ந்தெடுத்தார். அப்போது அவர் இந்தப் பதினைந்து பேர் மட்டும் வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து விளையாடுங்க என்றார். தர்ஷன் இறுதிப் போட்டி வரை செல்வான் என்றார். தலைமைக்கான போட்டியில் சாண்டியும் தர்ஷனும் விட்டுக் கொடுக்க அபிராமி தலைவி ஆனார்.

இன்று எதார்த்தமாக அவரின் பேட்டி பார்க்க நேர்ந்தது. அதில் கூட தர்ஷனும் லாஸ்லியாவும் இறுதிப் போட்டிக்குச் செல்வார்கள் என்றார். மிகவும் சிறப்பான கேமராப்பார்வை கொண்ட பாத்திமாவை இன்னும் கொஞ்ச நாட்கள் வைத்திருந்திருக்கலாம் என்பதை என்ன ஒரு திறனாய்வுப் பார்வை... அடுத்த வரும் வாரங்களில் யாரைத் தலைவர் ஆக்கலாம் என்பதை உங்களைக் கேட்டுச் செய்யலாம் போல என்ற கமலில் குரல் சொல்லியது. பிக்பாஸ்க்கு ஆக்கப்பூர்வமான ஆட்கள் தேவையில்லை... ஆடுகாலிகள் மட்டும்தானே தேவை... வனிதா நிறுத்தப்படுவார் இறுதிவரை என்பதை எல்லாரும் அறிவோம்தானே.

திங்கள்கிழமை அபிராமியுடன் மோதுவதில் குறியாக இருந்தார். அபிராமி தனித்து விடப்படுகிறார் என்று தெரிந்ததும் மது உச்சி குளிரப் பேசி ஐஸ் வைக்க ஆரம்பித்தார். நான் என் நண்பர்களிடம் போகிறேன் என் அபிராமி கழண்டு கொண்டார் என்றாலும் தமிழ்ப்பொண்ணு, கற்பு, கலாச்சாரம் என்பதெல்லாம் மது மக்களிடம் தன்னை தமிழினக் காதலியாக நிறுத்திச் செல்வாக்கை வலுப்படுத்தவே என்பதாய்த்தான் இருக்கிறது. மேலும் மது மீதான பரிதாபங்கள் எல்லாம் செயலிழந்து கடுப்பு கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டது. மது வாயை மூடுறியா என்று கத்தவே தோன்றியது.

இந்த விவாதம் கிச்சனில் போகும்போது அபிராமியை அடக்கி ஆளவே நினைத்தார் வனிதா. இது ஒண்ணும் சி.எம், பி.எம் பதவியில்லை பிக்பாஸ் வீட்டுத் தலைவர் பதவிதான் என்றவர், தான் தலைவராக இருந்த வாரத்தில் தன்னை டொனால்ட் டிரம்பாக நினைத்துக் கொண்டவர்தான் என்பதை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் 'மீன் மார்க்கெட்' மாதிரி இருக்கு என்று அபிராமி சொல்ல, காளியாய் மாறினார் வனிதா... அபிக்கு ஆதரவுக்கரம் நீட்டினான் தர்ஷன். இவனுடன் பேசினால் மூக்குடைபடுவது உறுதி என்பதால் அவனை லாவகமாகத் தவிர்த்தார் வனிதா.

இவளை விட்டா அவ என்ற ரீதியில் மதுவுடன் பேசினார் வனிதா... எனக்கு அப்பவே தெரியும்... இதுதான் நடக்கும் என நடக்கப் போவதைச் சொல்லும் குறிகாரியாய் சாக்சி, அவருக்கு வேப்பிலை அடிப்பவராய் ஷெரின்.

கவினிடம் நீ ஏன் என்னை உன்னோட கிளீனிங் அணியில் எடுக்கலை... லாஸ்லியா கூட நீ ஏன் பேசுறே என்பதாய் சாக்சி கேட்டதில் இருந்து அவர் கவினை லவ் பண்ண ஆரம்பித்திருப்பது தெரிகிறது என்றாலும் கவின் கழுவுற மீனுல நழுவுற மீனாக இருந்தான். இதெல்லாம் ஜாலிக்காகத்தான் என்பதாய் அவன் சொன்னாலும் அவனுக்கு சாக்சியும் வேணும் லாஸ்லியாவும் வேணும். ஆனா இதெல்லாம் கண்டுக்காம லாஸ்லியா பாட்டுக்கு ஆடிக்கிட்டு திரியுது.

அபியுடன் வனிதா கூட்டணி மோதல் தொடர ஆர்மபிக்க, வனிதாவைப் பொறுத்தவரை அந்த வீட்டில் யார் தலைவராய் வந்தாலும் எனக்குக் கீழேதான் என்பதாய் மோகனைப் படுத்தியது போல் அபிராமியையும் வைக்க எண்ணம் கொண்டிருந்தார். அபியைப் பொறுத்தவரை வனிதாவின் ஜம்பம் சாய்வது கடினமே. அபி எதிர்க் கூடாரத்துக்குள் மெல்ல வெள்ளைக் கொடியுடன் வண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்.

நேற்றைய நிகழ்வில் இந்த வார பட்ஜெட்டுக்காக கொலைகாரன் போட்டி கொடுக்கப்பட்டது. கொலைகாரி வனிதா, உதவி முகன் என்பதாய் சொல்லப்பட்டது. பாவம் அபிராமி இதை யாரிடமும் சொல்லாதேன்னு சொல்லி அனுப்பியதை மனசுக்குள் மறைத்து வைக்க முயன்றும் முடியாமல் சிரித்தபடி திரிய, அபியே கொலைகாரி என்பதாய் நெருங்கிய தோழி சாக்சி சொல்வது வேடிக்கை... அதுவும் வனிதாவிடமே சொல்வது அதைவிட வேடிக்கை... இதே வேறு நேரமாக இருந்தால் ஆஹா மெல்ல அவல் கிடைத்தாச்சுன்னு ஆட்டம் போட்டிருப்பா ஆத்தா... இப்ப கொலைகாரியே ஆத்தாங்கிறதால அடக்கி வாசிக்குது.

இதற்கிடையே கவினுக்கு என்னைப் பார்க்காமல் ஒரு நாள் புல்லா இரு பார்ப்போம்ன்னு லாஸ்லியா டாஸ்க் கொடுக்குது. பயபுள்ள பதறுறான்... கண்ணை மூடிக்கிட்டே கடலை போடுறவனை லாஸ்லியாவைத் தேடி வந்த சேரன் விரட்டுகிறார் என்றாலும் பாத்திமா பாபு பேட்டியில் சொன்னது போல் லாஸ்லியாவை மகளாய் நினைத்தாலும் அப்பனுக்கும் மகளிடம் எல்லை உண்டு என்பதை சேரன் நினைவில் கொள்ளுதல் நலம். சேரன் அப்படிப்பட்டவர் இல்லைதான் என்றாலும் மகள் என்ற முறையில்தான் கன்னம் தொடுகிறார் என்றாலும் பார்வைகள் பலவிதம் என்பதைப் புரிந்து கொள்ளுதல் நலம். பாத்திமா சொன்னது போல பலரும் இதை சொல்லி நாமினேட் பண்ணவும் வாய்ப்பு இருக்கு.

மேக்கப்பைக் கலைத்தால் சாக்சி கொலை... மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடினால் மோகன் கொலை என்பதாய் வனிதா இரண்டு கொலைகளை முடிக்க, தன்னைக் கொலை செய்த அதுவும் முதல் கொலையாய் என்னைச் செய்த அபியை விடமாட்டேன் நான் என சாக்சி, இது விளையாட்டு என்பது கூட தெரியாமல் சபதம் செய்வதெல்லாம்... முடியலை.

நான்தான் கொலைகாரின்னு சொன்னா அம்புட்டுத்தான் என் நிலமை என சேரனிடமும் மற்றவர்களிடமும் சொல்லும் அபிராமி, சரியாக புரிந்து வைத்திருக்கிறார். அவரின் செய்கைகள் உண்மையிலேயே வியப்பளிப்பதாய் ஆச்சர்யமூட்டுவதாய் அபி நல்ல பொண்ணுதான் என்று சொல்வதாய் இருந்தது.

ஆரம்ப நாட்களில் சாண்டியின் செயல்கள் வெறுப்பாய் இருந்தது என்றால் இப்போது சாண்டியே பிக்பாஸ் வீட்டின் வடிவேலு... எல்லா நிலையிலும் கலகலப்பாய் இருக்க வைப்பதில் கில்லாடியாய் இருக்கிறார். வனிதாக்களின் ஆட்டத்தில் நொந்து போயிருந்தால் சாண்டி காமெடியால் நம்மை ஆற்றுப்படுத்துகிறார். சாண்டி தொடருங்கள் உங்கள் ஆட்டத்தை... ரசிக்க வைக்கிறது.

கவின் ஷெரின் மற்றும் சாக்சியுடன் கடலை போட, லாஸ்லியாவை ஊறுகாயாக வைத்து விளையாட கீரை... கீரை எனப் பேச உன்னையும் பிடிக்காது... கீரையும் பிடிக்காது என்று சொல்ல, உடனே ஷெரினிடம் பேச்சை மாற்றி, அவளைப்பாரு எதுவும் வேணாங்கிறா... நீயும் இருக்கேன்னு சொல்ல ஷெரினும் ஏதோ கத்து கத்து சொல்லி கெக்கபிக்கன்னு சிரிக்குது.  

நேற்றைய நாள் வனிதாவின் ஆட்டம் இல்லாது நகர்ந்தது போல் புதனும் நகரலாம்... படுக்கும் போதுதான் பிக்பாஸ் பார்ப்பது வழக்கம்...    

சாண்டியே பிக்பாஸை நகைச்சுவையால் நகர்த்துகிறார்... இன்றும் அது தொடரும் என்று நம்பலாம்.

பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. ​நுணுக்கமான விவரங்கள். பிபா பார்க்கவில்லை. உங்கள் விவரணங்கள் ​படித்தேன்.

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...