மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 3 ஜூலை, 2019

பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்

Bigg Boss Tamil 3: Cheran
(சேரன்)
ரு வாரமாக கலகலப்புடன் கொஞ்சம் உரசல்... அழுகை என நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முதல் வாரம் ஒருவர் என களை எடுக்கும் படலம் ஆரம்பமாகிறது. எல்லாரும் ஒண்ணாமண்ணா உறவாடிக்கிட்டு இருந்தாலும் தங்களுக்கு யார் போட்டியாளராக இருப்பார் என்று உணர்கிறார்களோ அவர்களை மட்டுமின்றி, தங்களுடன் சண்டையிட்ட நபர்களையும் நாமினேசன் செய்வதைத்தானே கடந்த இரண்டு சீசனிலும் பார்த்தோம். அதுதானே இங்கும் நடக்கும்... என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்.

ஓவியாவைப் போல் தனியாகப் பேச ஆரம்பித்திருக்கும் மதுமிதா, ரொம்பவே கடுப்படைய வைக்கிறார். ஓவியாவை போல் ஆக நினைத்து ஜூலி போல கிறுக்குத்தனம் செய்து கொண்டிருக்கிறார். நாம் தனிமையில் புலம்புதல் என்பது கேமராவில் தெரிய வேண்டும்... மைக்கில் நன்றாக கேட்க வேண்டும் என்பதெல்லாம் அவர் நடிகை என்பதை... அதுவும் மக்கள் முன் நடிக்கத் தெரிந்த சிறப்பான நடிகை என்பதையே காட்டுகிறது. பிக்பாஸ் எதிர்பார்த்த வேற நல்ல நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை போலும் மதுமிதாவை வைத்து நகர்த்துகிறார்... வேகம் குறைந்து ஓட்டை டவுன்பஸ் கப்பி ரோட்டில் போவது போல் இருக்கிறது.

நான் விரும்பும் இயக்குநர் -  இந்த வரிகளை அடிக்கடி பயன்படுத்தக் காரணம் சேரனின் திரைக்கதைக்கு நான் ரசிகன்... ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என அவரின் எல்லாப் படங்களுமே மிகச் சிறப்பானவை... தமிழுக்குக் கிடைத்த நல்ல ஒரு இயக்குநர்... மாயக்கண்ணாடிகளில் சறுக்கி திருமணத்தில் திணறியிருந்தாலும் தமிழ் திரையுலகிற்கு பொற்காலத்தைக் கொடுத்த இயக்குநர் என்பதை மறுக்க முடியாது. இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வர வேண்டிய சூழலுக்கு அவர் தள்ளப்பட்டது கொடுமையான விஷயம்... உள்ளே வந்ததை எண்ணி வெளியில் சென்றபின் கண்டிப்பாக வருந்துவார்.

சேரனின் பேச்சு மற்றவர்களுக்கு ஒரு இயக்குநரின் பேச்சாக, தங்களை அடித்து... தானே பெரியவன் என்று காட்டுவதாக இருக்கலாம்... ஆனாலும் அது நல்ல விஷயங்களைத்தான் தாங்கி வருகிறது என்பதை போட்டியாளர்கள் உணரப் போவதில்லை.... சரவணனுக்கு சேரனின் பேச்சு பிடிக்கவில்லை என்பதால் என்ன பெரிய டைரக்டர் என்கிறார்... அப்ப சேரன் நல்ல இயக்குநர் இல்லையா... தமிழ் சினிமா சேரன் அப்படி ஒன்றும் சாதிக்கவில்லை என்று சொல்லிவிடுமா..? நடிப்புத் திறமையே இல்லாத சரவணன் நடிகர் என்று சொல்லும் போது சேரன் இயக்குநராய் இருப்பதில் என்ன பிரச்சினை... எல்லாம் போட்டி மனப்பான்மையே.

சாண்டியும் கவினும் சேரனுக்கு வைத்திருக்கும் பெயர் 'சைக்கிள்' - பாவம் 'ஞாபகம் வருதே..' பாட்டையும் 'ஒரே ஒரு ஊரிலே...' பாட்டையும் கேட்டு ரசித்திருக்க மாட்டார்கள் போலும். யாரை நாமினேட் பண்ணுறே சைக்கிளைத்தானே என சாண்டி கேட்க, ஆமா என்ற கவின், யாரை நாமினேட் பண்றோம்ன்னு பேசிக்கக் கூடாது என்று ரொம்ப நல்லவர் போல் சொல்லிச் செல்கிறார்... நாமினேசன் போது கவின், சேரனைச் சொல்லவில்லை என்பது வேறு விஷயம். இருப்பினும் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் போட்டி என்று வரும்போது கேவலமாகப் பேச இந்த மனசு தயங்குவதில்லை என்பதை உணர்த்தும் பிம்பங்களாய் பிக்பாஸ் இல்லத்துக்குள் மனிதர்கள்.

மோகன் வைத்யா மற்றும் வனிதாவை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்பதால் வனிதா தப்பித்தார். வனிதா இருந்தால்தான் பிக்பாஸ் வீடு அடிதடியில் இருக்கும் என்பதால் வனிதாவுக்கு விஐபி நாற்காலியை பிக்பாஸ் கொடுக்கத் தயங்கமாட்டார். எப்படியும் காப்பாற்றி வருவார்.

எல்லாருமே சோகமழையினை மும்பை மழை போல் பொழிந்து தள்ளியதால் சென்ற வாரத்துக்கான முழு மதிப்பெண்கள் 3200-க்கும் பொருட்கள் வாங்கலாம் என்றதும் பலர் பொருட்களைத் தேர்வு செய்து சொல்ல, அதை காதில் வாங்கி ரேஷ்மா வனிதாவிடம் சொல்ல, வனிதா எழுதிக் கொண்டே வந்தார். 3200 மதிப்பெண்ணுக்கும் பொருட்கள் வாங்கிய பின் இங்க எல்லாருடைய தெரிவின் அடிப்படையிலேயே பொருட்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கு... அப்புறம் யாரும் நான் சொன்னது இல்லைன்னு எல்லாம் சொல்லக் கூடாது என தான் நடுநிலையுடன் நடந்து கொண்டதாக தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டார். அப்போது மீராவின் முகம் போன போக்கு அப்படி ஒன்றும் நடக்கலையே என்பதாய் இருந்தது. அந்த நேர சந்தோஷத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை.

மோகன் வைத்யா எப்படிப்பட்டவர் என்ற பிம்பம் மெல்ல மெல்ல மேலெழுந்து வர ஆரம்பித்திருக்கிறது. வரும் வாரங்களில் இவர் மிகப்பெரிய பிரச்சினைகளின் விதையாய் இருப்பார் என்று அடித்துச் சொல்லலாம். இவர் நாமினேட் செய்தது சேரனையும் பாத்திமாவையும்... சொன்ன காரணம் நான் தலைவரானதில் சேரனுக்கு விருப்பம் இல்லை... என்னை முறைத்துப் பார்க்கிறார்... என்னய்யா கொடுமை இது... உனக்குத்தான் அந்தாளு ஓட்டுப் போட்டார். அது போக நான் முகனுக்குப் போடலாம் என்றிருந்தேன் அவரே மோகனுக்கு கை தூக்கிட்டார் எனவே நான் மோகனுக்குப் போடுறேன்னு மனசுல உள்ளதை மறைக்காமல் சொன்னார். அந்தக் கடுப்பு போல, பாத்திமாவோடதான் அதிக நேரம் இருக்கிறார்... அவர் தன்னைக் கேலி செய்வதாகச் சொன்னார்.

வனிதாவும் சேரனையே நாமினேட் செய்தார் சொன்ன காரணம் எல்லாத்துலயும் தன்னோட பேச்சையே எல்லாரும் கேட்கணும் என்கிறார் என்பதாகவே இருந்தது. இதில் என்ன கொடுமையின்னா வனிதாவும் அதைத்தானே செய்கிறார். சாண்டி, சரவணன் இருவரும் சேரனையே சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் மதுமிதா மற்றும் மீராவைச் சொன்னதற்கான காரணம் சென்ற வார நிகழ்வுகளே. 

சேரன் மட்டுமே எல்லாரிடத்திலும் இருந்து சற்றே மாற்றிச் சொன்னார்... ஆம் லாஸ்லியாவும் தர்ஷனும்தான் சேரனின் தெரிவாக இருந்தது. காரணம் நச்சுப் பாம்புகள் இருக்கும் இடத்தில் கிளிகளுக்கு வேலை இல்லை என்பதாய் இருந்தது. இது பக்குவப்பட்ட பேச்சு என்றாலும் போட்டி என்று வந்தபின் அவர்கள் இருந்து போராட வேண்டியவர்களே... அவர்களை வெளியாக்குவதால் என்ன லாபம்..? சேரனின் தெரிவு சற்றே ஏமாற்றமானதுதான்.

பெரும்பாலானோரை நாமினேட் செய்திருந்தாலும் அதிக எண்ணிக்கையில் நாமினேட் செய்யப்பட்டவர்களான மீரா, மதுமிதா, சேரன், பாத்திமா, சரவணன், சாக்சி மற்றும் கவின் ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்பட இருப்போர் பட்டியலில் இடம் பிடித்தனர்.

தன் பெயர் சொல்லப்பட்ட போது ரொம்ப ஆச்சர்யமாகவே நானா எனக் கேட்டபடி சிரித்தார் சேரன். பொதுவாகவே சேரன் ரொம்ப நல்ல மனசுக்கு சொந்தக்காரர்... மனித முகமூடிகள் குறித்து ரொம்ப வருந்தியிருப்பார். சேரன் அண்ணாவுமா என அபிராமி கூட வியந்தார்.

நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருடா மச்சான்னு பசங்க சொல்லி அனுப்புனானுங்க... அப்படித்தான் இருந்தேன்... இருந்தும் என்னையவும் இழுத்து விட்டுடாங்களேன்னு சாக்சியிடன் கவின் புலம்பினார்.

அதிகமானவர்கள் விரும்புபவராக இருந்த சரவணனும் பட்டியலில் இருந்ததில் எல்லாருக்கும் வியப்பு... அபிராமி நீங்களுமா என்றபோது மய்யமாய் சிரித்து வைத்தார். எப்படியும் என்னைக் காப்பாற்றிடுவாங்க என்ற எண்ணம் செவ்வாழை முகத்தின் மகிழ்ச்சியில் தெளிவாய்த் தெரிந்தது.

பாத்திமா பாபு ரொம்ப இறுக்கமாகிவிட்டார்... மேக்கப் போட்ட முகம் இன்னும் இறுக்கமானது பார்க்கச் சகிக்கலை.

எல்லாருக்குள்ளும் நான் ஏன்...? நான் ஏன்...? என்ற கேள்வி எழ, இறுக்கமான சூழல் வீட்டுக்குள்..
அதை மாற்ற பிக்பாஸ் ஒரு போட்டி வைத்தார்.... நாலு அணியாகப் பிரிந்து இரண்டு இரண்டு அணியாக மோதி எலும்புத் துண்டை எடுக்க வேண்டும்... அதில் வெற்றி பெறும் இருவரும் மீண்டும் மோத வேண்டும் என்றதும் அணிக்குத் தகுந்த மாதிரி ஓப்பனை போட்டுக் கொண்டு களமிறங்கினர்,

ஓப்பனைக்குப் பின் ஆளாளுக்கு அந்த விலங்குகளைப் போல் சேட்டை செய்தாலும் சேரன் செய்தது ரசிக்க வைத்தது. போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். லாஸ்வியா என்பதால் இறுதியில் விட்டுக் கொடுத்தது போல் இருந்தது.

மகிழ்வான ஒரு விளையாட்டு... 

இந்த வார லக்சூரி பட்ஜெட்டுக்கான பொருட்கள் வந்தபோது மீரா, எதையும் கேட்கவில்லை... கேட்டால் தன்னை ரவுண்ட் கட்டி அழ வைப்பார்கள் என்பதறிந்து பேசாதிருந்தார்.

பிக்பாஸ் எதிர்பார்த்த நாமினேசன் முடிந்தது.... அடித்துக் கொள்ளவும் இல்லை... இனி கதையில் மாற்றம் கொண்ட வர வேண்டும் என்பதனை யோசிக்காமலா இருப்பார்.

நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ்ப்பொண்ணு என்ற அஸ்திரத்தைத் தூக்கி, தனியே புலம்பிய மதுமிதாவை ஊக்க மூட்டும் பேச்சை.. அதாங்க மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுக்கச் சொன்னார் பிக்பாஸ்... எப்படியும் அடிதடி நடக்கும்... அன்றைய முழுநாளையும் சும்மா 'கனகன'ன்னு நெருப்பு அணயாம பாத்துக்கலாம்ன்னு செமையான திட்டமிடல்.

அதே நடந்தது... பேச்சை ஆரம்பித்ததுமே வனிதா ரோகித் போல அடித்து ஆட ஆரம்பித்தார். சேரனும் புரியாமல் பேசினார். ரேஷ்மா வனிதாவுக்கு 'ஜிங்க்...சக்...' போட்டார். கவினும் கூட வனிதாவுக்கு சாமரம் வீசினான். தர்ஷன் மற்றும் மீரா மட்டுமே பேச விடுங்கள் என்றார்கள்... ஆனால் அவர்கள் விடுவதாய் இல்லை... அந்தச் சண்டை படுக்கை அறை, சமையல் அறை எனத் தொடர்ந்து 'ஷட் அப் பண்ணு', 'நீ ஷட் அப் பண்ணு' என்பதாய் முடிந்தது. பாத்திமா பாபு, மீரா போன்றோர் மதுமிதாவுக்கு ஆதரவாக இருந்தார்கள். பாத்திமா பாபு நாமினேசனுக்குப் பின் ரொம்பவே அமைதியாயிட்டார்.

'அடியே லாஸ்லியா...' என கவின் பாட, சாண்டி இசைக்க, லாஸ்லியா ஆட செமையாக் களைகட்டியது சண்டை நடக்கும் போதே, தனியே ஆடிப்பாடியது ஒரு மகிழ்வான நகர்வு... இந்தக் கச்சேரி முகன், கவின், சாண்டி, லாஸ்லியா என மீண்டும் சமையல் பகுதியில் தொடர்ந்தது... லாஸ்லியா யாருக்கு...? என்பதில் கவின் மற்றும் முகனுக்கு போட்டி வரலாம்...

மதுமிதாவுக்கு லாஸ்லியா கொஞ்சம் ஆறுதல் சொன்னார். சேரனும் கூட அட்வைஸ் பண்ணினார். சுற்றி வளைத்தே பேசுவதை சேரன் விட்டால் நல்லது. சேரன் தனிமைப் படுத்தப்படுகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

அடுத்து இந்த வாரத்துக்கான போட்டியில் கனமான ஒருவர் அமர்ந்திருந்த வண்டியை பின்னால் இருந்து அழுத்தி முன்பக்கம் தரையில் இருந்து தூக்கி பின் பக்கம் தரையைத் தொட வைக்க வேண்டும்... போட்டி நடப்பதை மற்ற போட்டியாளர்கள் டிவியில் பார்ப்பார்கள்... ஒருவர் மட்டுமே என்ன போட்டி என்பதைச் சொல்ல போட்டியாளருடன் போகவேண்டும்... வனிதாவுக்கு மோகன் போனார். வனிதா தன் விடாப்பிடியான முயற்சியில் வெற்றி பெற்று ஆயிரம் மதிப்பெண்ணுடன் வாழைத்தார் ஒன்றும் பெற்றார்... சபாஷ்... திறமைக்குப் பாராட்டு.

அடுத்தது தர்ஷன், சாக்சிக்கு கலைந்து கிடக்கும் பிக்பாஸ்-3 கமல் படத்தை சரியாக கொண்டு வர வேண்டும்... அவர்கள் திணறித் தவறாக கட்டங்களை நகர்த்தியதால், போட்டி குறித்து அறிவிக்கச் சென்ற மீரா, உதவி செய்யக்கூடாது என்ற விதியை மீறி, அவர்களை உற்சாகமூட்டினார். இதனால் டிவியில் பார்ப்பவர்களுக்கு கோபம் தலைக்கேற, 600 மதிப்பெண்ணை இழந்துவிட்டு வந்தவர்களை விட்டுவிட்டு மீராவிடம் மோதல்...  கவின், வனிதான்னு அடுத்த ஆட்டம் ஆரம்பம்.... மோகன் வைத்யா ரொம்ப ஓவராகவே கத்தினார். மீராவின் அழுகாச்சி ஆரம்பம்... கவின் சமாதானம் செய்ய வந்ததை ஏற்க்கவில்லை. சாண்டியின் நகைச்சுவையை விரும்பவில்லை. தேம்பித் தேம்பி அழுதார்.

அதன்பின் லாஸ்லியா மிகச் சரியாக இது போட்டி, இங்கு யாரும் யாருக்கும் உறவில்லை என்று சொன்னாலும் மீரா ஏற்பதாக இல்லை.. நான் நானாகவே இருப்பேன்னு பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நின்றார். 

மீராவிடம் வந்த மோகன் நீ என்னை அப்பான்னு நினைக்கிறேதானே... நான் பேசுறதை நீ கேட்கவேயில்லை... உன்னை நான் திட்டவேயில்லை... பெண்குழந்தைகளைத் திட்டினால் எனக்குக் கோபம் வரும் என்றெல்லாம் நாடகமாடி, இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தம் வேறு கொடுத்தார். இதே மோகன்தான் ஊக்கை மாட்டச் சொன்னபோது கேமரா இருக்கு என்று வனிதாவிடம் சொல்லி சண்டைக்கு வித்திட்டவர், இழுத்து அணைத்து முத்தமிட்ட போது கேமரா இருப்பதை மறந்துவிட்டார் போல. மீராவின் முக உணர்ச்சி அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டியது.

முகன் தன்னை ஒதுக்குவதற்கு வனிதா அணியே காரணம் என்பதாய் மீரா பேச, வா பேசலாம் என முகன் அழைத்துச் செல்ல, இந்தப் பேச்சைக் கேட்ட சாக்சி, அபிராமியுடன் முகன் பேசக்கூடாது என்று சொல்கிறாள் எனப் போட்டுவிட, வனிதா, ரேஷ்மா இருவரும் அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க, அபிராமி மெல்ல மெல்ல காளியாகிறாள். பிக்பாஸ் நினைத்த பிரச்சினை இன்று பெரிதாகலாம்.

அப்ப இந்த வாரம் முதல் குறும்படம் இருக்கு... 

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.  

4 எண்ணங்கள்:

G.M Balasubramaniam சொன்னது…

நிகழ்ச்சியை மிகவும் கூர்ந்து கவனிக்கிறிர்கள் போல

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா... ஹா...
வேற வேலை என்னய்யா இருக்கு... நமக்கும் பொழுது போகணுமே

ஸ்ரீராம். சொன்னது…

நான் பிக்பாஸ் பார்ப்பதில்லை. உங்கள் வர்ணனைகளை ஓரளவுக்குப் படித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// பொதுவாகவே சேரன் ரொம்ப நல்ல மனசுக்கு சொந்தக்காரர்... மனித முகமூடிகள் குறித்து ரொம்ப வருந்தியிருப்பார். சேரன் அண்ணாவுமா என அபிராமி கூட வியந்தார்.//


உங்களின் இந்த சிந்தனை அருமை...