மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 28 ஜூலை, 2019

பிக்பாஸ் : அடித்து ஆடிய கமல்

Image result for bigg boss day 34 cheran images
சேரன் கெட்டவர் என்ற மீராவின் பேச்சுக்களும் சேரன் ஒழுங்காவே விளையாடலை என்ற கவினின் கல்லெறியுமாகக் நகர்ந்த பிக்பாஸ் சுவை கூட்டவில்லை என்பதை என் நேற்றைய பதிவிற்குத் தனபாலன் அண்ணனின் கருத்தும் பிரதிலிபியில் சகோ. புவனா ராஜபாண்டியின் கருத்தும் உணர்த்தியது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்... அங்க குண்டுசட்டிக்குள்ளதான் குதிரை ஓட்டினார்கள் பின்னே என்னத்தை எழுதுறது..? பிக்பாஸ் பார்ப்பதும் எழுதுவதும் பெருங்குற்றம் என்போர் மத்தியில் என் பதிவை வாசித்தும் கருத்து இட்டும் தொடரச் சொல்லும் நட்ப்புக்களுக்கு நன்றி.

சனி, ஞாயிறு என்பது ஆண்டவரின் அட்டகாசத்துக்கான நாட்கள்... நேற்றைய நாளிலும் அந்த அட்டகாசம் தொடர்ந்தது... சாண்டி - மது விவகாரத்தில் சறுக்கிய கமல், சேரன் - மீரா விவகாரத்தில் உலககோப்பை அரையிறுதியில் அசராது அடித்து ஆடிய ஜடேஜா போல் களத்தில் கலக்கினார். அதுவும் செய்த தவறை மீராவின் பேச்சின் மூலமாகவே வெளிக் கொண்டு வந்தது செம.

எப்பவும் போல் மேடைக்கு வரவில்லை கமல், தொழில்நுட்பக் கலைஞர்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதைக்குள் நின்று இருட்டுக்குள் வெளிச்சம் காட்டினார். இங்கிட்டு நான்... அங்கிட்டு அவங்க... இரண்டுக்கும் இடையில் ஒரு சின்னத் தடுப்புத்தான்... தடுப்புக்கு அங்கிட்டு அவங்க என்ன பண்ணுறாங்கன்னு பாருங்கன்னு அஸ்கீ வாய்ஸ்ல பேசினார். 

கேமரா இங்கிட்டு இருந்து அங்கிட்டுப் போச்சு.

அங்கே கரகாட்டக் கோஷ்டியெல்லாம் மேக்கப் போட்டுக்கிட்டு இருந்துச்சு... கமலைக் காண பரபரப்பாகத் தயாராகிக்கிட்டு இருந்தாங்க... மறுக்கா கேமரா அங்கிட்டு இருந்து இங்கிட்டு வந்துச்சு... அப்போ கமல் சீக்ரெட் ரூமூக்குள்ள நின்னுக்கிட்டு இது என்னன்னு உங்களுக்குத் தெரியும்... இதுக்கு கண்ணாடி... முன்னாடி... பின்னாடியின்னு குணா கமல் மாதிரி ஏதோ பேசி, இங்க இந்த வாரமே யாராவது வரலாம்... அல்லது அடுத்த வாரம் வரலாம் என்றெல்லாம் சொன்னார். 

இந்தப் பீடிகைக்குப் பின்னே இன்று மீரா வெளியேற்றப்படும் பட்சத்தில் இங்கு தங்க வைக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. மீராவையும் வெளியேற்றிவிட்டால் வீட்டில் யாரும் பிரச்சினையைக் கிளப்ப வழியில்லை என்பதை பிக்பாஸ் உணராமலா இருப்பார். இங்க குந்திக்கின்னு உள்ள உன்னையை என்ன பேசுறாங்கன்னு பாருன்னு சொல்லப் போறாங்கன்னு தோணுச்சு.

அப்புறம் மேடைக்கு வந்த ஆண்டவரை அத்திவரதரைக் கண்ட மக்கள் போல், விவிஜபிகளைப் பார்த்த அத்திவரதரின் அர்ச்சகர்களைப் போல் ஆராவாரமாய் வரவேற்க, கிராமப் பஞ்சாயத்து என்பது எனக்குப் பிடித்தது... அதை நான் செய்து வருகிறேன்... அதைப் போல் ஒரு நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்று நினைத்தால் நல்லாத்தான் நடிச்சாங்க... ஆனா செமை சூடு அந்த இடத்தில்... இன்னமும் அந்தச் சூடு தொடருதுங்க... நீங்களே பாருங்கன்னு அகம் டிவி வழி நம்மை உள்ளே போச் சொல்லிட்டு அவர் நகர்ந்து கொண்டார்.

அங்கே 'போட்ரேய்' மீரா 'என்னோட மேக்கப் பாக்சைத் திருடி ஒளிச்சி வச்சிட்டு, டாஸ்க் முடிஞ்சிம் தரலை தெரியுமா... ஆனா லாஸ்லியாவுக்கு மட்டும் அப்பவே கொடுத்துட்டாங்க... அப்புறம் கவின்தான் எடுத்து ஒளிச்சி வச்சிருக்கான்னு ரேஷ்மா சொன்னதும் அவங்கிட்ட கேட்டா, எடுத்துக் கொடுத்துட்டு மச்சீ இதை நானா எடுத்து ஒளிக்கலை சாக்சிதான் ஒளிச்சி வைக்கச் சொன்னான்னு போட்டுக் கொடுத்துட்டும் போறான். இந்த வீட்டுல லாஸ்லியா செல்லப் பொண்ணு... நான் செல்லாத பொண்ணு' அப்படின்னு புலம்ப, மேக்கப் போட்டாலும் போடலைன்னாலும் நீ ஒரே மாதிரித்தான் இருக்கே... முகத்துக்கு மேக்கப் போடுறதைவிட வாய்க்கு ஒரு பூட்டப்போடு என மனசுக்குள் சொல்லிவிட்டு மழங்க விழித்தபடி சாண்டி உட்கார்ந்திருந்தார்.

அந்தப்பக்கமா கவின்கிட்ட 'மீராவோட மேக்கப் பாக்சை நான்தான் ஒளிச்சி வைக்கச் சொன்னேன்னு சொன்னியா..?' அப்படின்னு சாக்சி கேட்டதும் 'ஆமா மச்சி... இல்லேன்னா அவ வீணாவுல உங்கிட்டச் சண்டைக்கு வருவா... அதான் உன்னைக் காப்பாத்த அப்படிச் சொன்னேன்...' அப்படின்னு உன்னோட நலம் விரும்பி நானுங்கிற மாதிரிச் சொன்னான். 

சாக்சிக்கு உண்மையில் மொழிப் பிரச்சினை இருப்பது இவனுக்குச் சாதகமாயிருச்சு இல்லேன்னா, 'அடேய் மூதேவி நீ எம்பேரைச் சொல்லாம ஜாலிக்காக நாந்தான் எடுத்து ஒளிச்சி வச்சேன்ன்னு சொல்லிட்டு வந்திருந்தியன்னா என்னையக் காப்பாத்துனதா அர்த்தம்... இப்பப் பண்ணிட்டு வந்தது போட்டுக் கொடுக்கிறதுடா என் டுபுக்கு'ன்னு நாலு விளாசு விளாசியிருக்கும்.

அப்புறம் மொழிப்பிரச்சினையை நீயும் மீராவும் சேர்ந்து பேசித்தானே எடுத்தீங்கன்னு சொன்னதும் பய ரொம்பக் கோபமாக் கம்பு சுத்திட்டு எந்திரிச்சிப் பொயிட்டான்... அப்புறம் மறுபடியும் லிவிங்க் ஏரியாவுல ராத்திரி ஒரு மணிக்கு சாக்சி சமாதானம் பேசுது... விட்டா எங்க லாஸ்கூட லவ்விருவானோன்னு மறுபடியும் கக்கத்துல வச்சிக்கப் பாக்குது. ஆனா அவனோ லாஸூக்கா சாக்சை கழட்டி குப்பையில போட்டுட்டு கக்கூஸ்ல கானா பாட நேரம் பார்த்துக் காத்திருக்கிறான் என்பது உலகறிந்த உண்மை.

மதுவும் ரேஷ்மாவும் இன்னைக்கு யார் வெளியேறுவாருன்னு பேசுறாங்க...  சாக்சியாம்... கவினாம்... அவங்களோட கணிப்புல கல்லைத் தூக்கிப் போட, இப்படித் தத்திகளா இருந்துக்கிட்டு நாங்க முழிப்பானவங்கன்னு முழி பிதுங்கப் பேசுறீங்களேம்மா.

ஜாலிக்காக ஜெயிலுக்குப் போன புள்ளைங்களை பிக்பாஸ் வச்சி தாளிச்சிக்கிட்டு இருந்தார். கஞ்சி, கூழ் அப்படின்னு கொடுத்து, சப்பாத்தி மாவைப் பிசைந்து சப்பாத்தி தேய்த்துக் கொடுங்க ஆனா உங்களுக்கு அதுல பங்கில்லை... நான்தான் சாப்பாடு கொடுப்பேன்னு சொல்ல, பூவான புள்ளைங்க ரெண்டும் பாலை வெயில்ல மல்லாக்கப் படுத்த மாதிரி காய்ஞ்சு போயி பிக்பாஸ்க்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிருதுங்க... இரவுதான் பிக்பாஸ் மனம் வருந்தி வெளியில விட்டாரு. இனி ஒரு பயபுள்ள ஜெயில் போறேன்னு சொல்ல மாட்டானுங்க.

கமல் மேடைக்கு மீண்டும் வந்து அகம் டிவி வழியே அகத்துக்குள் போனார்... அங்கே மேக்கப் சகிதம் எல்லாரும் அகம் மகிழ அமர்ந்திருந்தார்கள். நாட்டாமை டாஸ்க்கை எல்லாரும் அருமையாப் பண்ணுனீங்கன்னு சொல்லிட்டு தர்ஷனுடைய ஒன்லைனரைப் பாராட்டி, ரேஷ்மாவின் திருட்டுத்தனத்தைப் பாராட்டி மது - சாண்டி பிரச்சினைக்கு வந்தார்.

சாண்டியிடம் நகைச்சுவையைத் தொடருங்கள்... ஆனா அது மத்தவங்க மனசைப் பாதிக்கக் கூடாது... ஒருத்தரைத் தாக்கிச் செய்யிறது காமெடி... அதுவே நமக்குத் திரும்பும் போது டிராஜடியின்னு எல்லாம் சொல்லி மதுவின் பிரச்சினையை மதுவிடமே கேட்டார். மது பேசும் போது நீங்களும் நகைச்சுவையாய் எடுத்துக்கணும்... நீங்க போட்ட சண்டையின் இறுதியில் காமெடி ஆயிருச்சு... எல்லாருமே பேசுறீங்க... ஆனா ஒருத்தர் பேசும் போது அடுத்தவர் குறுக்கீடு... அப்புறம் மற்றொருவர்... இப்படி மாறிமாறித்தான் நகருது என்றவர் 'என்னைப் பேச விடுறீங்களா..?' வசனத்தை மெல்ல ஆரம்பித்து கோபமாய் முடித்தார். நானே நவரச நாயகன்... கலைத்தாயின் செல்லப்பிள்ளையும் நாந்தாய்யா... என்னை மிஞ்ச ஒருவன் உண்டோ என்பதாய் இருந்தது அது... சூப்பர் கமல்.

மது பேச... சாண்டி பேச... கமல் சாண்டி பக்கமாகவே நின்றார்... ஒரு கட்டத்தில் மது நேரடியாகவே அவரைக் கண்டிக்க மாட்டேங்கிறீங்களே சார்... என்னையவே குத்தம் சொல்றீங்கன்னு கேட்டுட்டாங்க.... உடனே சாண்டி ஒரு டான்ஸ் ஆடுங்க... என்று ஆடச் சொல்லி... இன்னும் வேகமா... இன்னும் வேகமாவென மதுவைச் சாண்டி சொல்லியது போல் சொன்னார். மதுவின் முகத்தில் மகிழ்ச்சியில்லை... சாண்டிக்கு கொண்டாட்டம்... 

ஏன் இப்படிப் பண்ணினார் கமல்..? பெண்ணுக்கே உரிய உபாதையுடன் தான் அடைந்த வலி, அவமானம், வேதனை எல்லாமுமாய் தன் கோபத்தைக் கொட்டித் தீர்த்த மதுவுக்கு ஆறுதலாய் மற்றவரின் மனதைப் புண்படுத்துதல் தவறு... அந்த விஷயத்தில் நீங்கள் செய்தது தவறுதான் என சாண்டியை ஏன் கடிந்து கொள்ளவில்லை கமல்..? சாண்டிக்கு என்றால் ஒரு நியாயமா இந்த வீட்டில்..? அப்போ எனக்கு எல்லாரும் ஒன்றுதான் என்று சொல்லும் கமல் மதுக்களுக்கு ஏன் நியாயம் பேசவில்லை..? 

இந்த இடம்... இந்தப் பஞ்சாயத்தின் தீர்ப்புத்தான் ஆண்டவர் சறுக்கிய இடம்... கமல் செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாய்த்தான் இருந்தது... அது மதுவுக்கு மட்டுமில்லை... சாண்டியால் பாதித்த எவருக்கும் மருந்து இடவில்லை... மாறாக சாண்டியை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்தது. இதில் சாண்டியின் செய்கை குறித்து மற்றவர்கள் யாருமே கருத்துச் சொல்லாமல் இருந்தது அவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதாய்த்தான் இருந்தது என்றாலும் தன் மனக் கருத்தைத் தனிமனிதனாய் சேரன் சொன்னதற்கு.... சல்யூட் சேரன்.

அடுத்ததாக சேரன் குறித்த மீராவின் புகாருக்குள் நுழைந்தார் கமல்.... அவரின் படம் நல்லாயில்லைன்னு சொல்லியிருந்தா அவர் கொஞ்ச நேரம் நின்னுட்டு அப்படியா சரியின்னு போயிருப்பார்... நானெல்லாம் அப்படித்தான் கடந்திருக்கிறேன்... ஆனா அவரே சரியில்லை என்னும் போது அவர் எப்படிக் கடக்க முடியும்..? சேரனை எதிர்க்கும் சரவணன் கூட இந்த விஷயத்தில் சேரன் பின்னே நின்றது சிறப்பு என்றார்.

அந்த விஷயத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை நாங்கள் பார்த்தோம்... ஆனா பாதிக்கப்பட்ட நீங்க சொல்லுங்க என மீராவிடமே விடையைத் தேடி கேள்வியை இறக்கினார். மீரா எப்பவும் போல ஒரு சட்டிக்குள்ள வார்த்தைகளைப் போட்டுக்  குலுக்கி எடுத்துப் பேச ஆரம்பித்தது... சேரன் தப்பானவர் என்பதை மட்டும் நண்டுப்பிடியாக பிடித்து நின்றது. 

இது ஒரு விளையாட்டு... அங்கு அவர் விளையாடுபவராகத்தான் இருந்தாரே ஒழிய சேரனாக இல்லை என்ற கமல் பஸ்ல போகும் போது எதார்த்தமாக இடிபடுவதில்லையா... அவரவருக்கு அலுவலகம் செல்ல வேண்டிய அவசரம்... கூட்டத்துக்குள் கைகால் படத்தான் செய்யும் ஆனாலும் சிலர் இடிக்கவே வருவார்கள் நான் இல்லை என்று சொல்லவில்லை எனச் சொன்னதும் சரவணன் சிரித்தார்... பாருங்க அவருக்கு கொண்டாட்டத்தை என்றதும் இல்லை சார் நான் காலேஜ் படிக்கும் போது இடிக்கவே போயிருக்கிறேன் என்றாரே பார்க்கலாம். பார்வையாளர் பகுதியில் இருந்து கைதட்டல்... சித்தப்பு எதார்த்தமாய் இருத்தல் காரணமாக அவ்வளவு சீக்கிரமெல்லாம் வெளியில் வரமாட்டார்.

கமல் எவ்வளவு சொல்லியும் மீரா தன் நிலையில் இருந்து இறங்கவில்லை... நீங்க உணரலை.. ஆனா அவரோட பிடியின் வலியை நான் உணர்ந்தேன்... கட்டித்தான் தூக்கினார்... வீசி எறிந்தார்... பிடி சரியில்லை என்றதும் எங்கே நடித்துக் காண்பியுங்கள் என்றார் கமல். சாண்டியை மீராவாக்கி, தான் சேரனாகி நடித்துக் காண்பித்தார்... அவர் சொன்னதில் பாதி கூட அந்த நடிப்பில் இல்லை... சட்டையைக் கசக்கியதற்காக சாண்டி கோபப்பட்டார்.

ஒரு  கையில் வெத்தலைப் பெட்டி மறு கையால் லாஸ்லியாவைப் பிடிக்க முயற்சி அப்படியிருக்க அவர் எப்படி உங்களை அவ்வளவு வேகமாகத் தள்ள முடியும்..? கட்டித் தூக்க முடியும்..? கவனித்துப் பார்த்தால் நீங்க அவரை வேகமாக அடிக்கிறீர்கள்.. ஆனா அதைச் சேரன் கண்டுக்கவேயில்லை என்றும் சேரன் சாரி எதற்காகக் கேட்டார்... எல்லாரிடமும் வேறு கேட்டார்... விட்டால் தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் சாரி கேட்டிருப்பார் என்றெல்லாம் சொல்லியும் மீராவிடமிருந்து சேரனை நோக்கி ஒரு சாரியை பறக்கவிட கமல் பிரயத்தனம் பண்ணியும் மீரா தரையிறங்கவில்லை என்ற போது நீங்கள் கேட்ட குறும்படம் உங்களுக்காக என்று சொல்ல, மீராவை விட கவினின் முகம்தான் கவலை தோய்ந்து இருந்தது.

குறும்படம் மிகச் சிறப்பாக சேரனின் செய்கையைக் காட்ட, சேரன் கண்ணீர் மல்க கும்பிட்டார்... மீராவைப் பொறுத்தவரை குறும்படம் கூட பிக்பாஸால் மாற்றப்பட்டதாய்த்தான் நினைக்கிறார் என்பதான முக ரேகைகள்... சேரன் தவறிழைக்கவில்லை என்பதை எல்லாரும் சொன்னார்கள்... கவின் கூட சரியாகத் தெரிகிறது அவரிடம் ஒரு மன்னிப்புக்கேள் என்றும் சொல்லிப் பார்த்தான்... ஆனா மீராவைப் பொறுத்தவரை சேரன் கெட்டவர்... அதிலிருந்து மாறவில்லை... மாறவும் மாட்டார்... அவரின் மனம் அப்படித்தான் பழகியிருக்கிறது. உண்மை ஒருநாள் வெளிவரும் என்றெல்லாம் பேசினாரேயொழிய தன் உண்மை உடைந்து விழுந்ததில் இருந்து கற்றுக் கொள்ளவோ கழண்டு கொள்ளவோ நினைக்கவில்லை.

மீராவே சிரித்தபடிதான் அந்த இடத்தில் கடந்து வருகிறார்... எப்பப் பார்த்தாலும் உண்மை வெளிவரும்ன்னு சொல்றது சிரிப்பாத்தான் சார் இருக்கு... ஒரு குறும்படம் தனக்குச் சாதகமாகியதால் எல்லாக் குறும்படமும் அப்படியே இருக்கும் என்ற மிதப்புத்தான் பொழைப்பைக் கெடுக்குது என அபி பேசியது அருமை. லாஸ்லியாவைப் பொறுத்தவரை சேரப்பா... அப்பாதான்... அவர்கிட்ட மகள்கள் மீதான பசத்தைத்தான் தான் காண்பதாவும் அவரைப் போயி இப்படி... என வார்த்தைகள் வராது கலங்கி நின்றார். 

ஒரு மனிதன் தானே கெட்டவனாவது சுலபம்... ஆனால் அவனைக் கெட்டவனாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. சேரனைப் பொறுத்தவரை விளையாட்டின் போது அந்தப் பெண்ணின் வயிற்றில் கை வைத்துத் தள்ளியிருக்கிறார்... அது விளையாடில் இயற்கை... ஆனா அந்தத் தொடுதல் தன் வயிற்றுப் பகுதி கடந்து மார்பினடியில் இருந்ததாய்ச் சொல்லும் முன் கேமராக்கள் சூழ்ந்த இடத்தில் இருக்கும் போது இதனால் பாதிப்பு யாருக்கு என்பதை உணர்தல் நலம்... அதை கமல் அவ்வளவு பேசியும் மீரா உணரவில்லை என்பதிலிருந்து அவரின் குணம் 'கெட்ட குணம்' என்பதை உணரமுடிந்தது.

சேரன் ஏன் அழுதார்...? அழுதிருக்கக் கூடாது என்றார் கமல், அப்போது சேரன், 'சார் நான் ரெண்டு பெண் குழந்தைகளின் தகப்பன்... ஒரு இயக்குநராய் வெற்றி, தோல்வி, அவார்டுகள் எல்லாம் வாங்கியிருப்பதல்ல என் வாழ்க்கை... அது ஒருபுறம் என்றால் அதைக் கடந்த மறுபுறம் இருக்கிறது... அது தந்தையாய் என் பிள்ளைக்களுக்குச் சேர்த்து வைக்கும் மரியாதை... அதுவே வாழ்வு... அதுதான் நிரந்தரம்... என் குழந்தைகளுக்கு என்னைத் தெரியும்... ஆனாலும் பொதுவெளியில் இப்படியான குற்றச்சாட்டு நாளை என் மகள்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இந்தாளு கைபோட்டுத்தான் வெளியே வந்தான் அப்ப அவனோட பிள்ளைகள் எப்படியிருக்கும்ன்னு என்னோட வளர்ப்பைக் கேள்விக்கு உரியதாகும். அதனால்தான் சார் அழுதேன்... இப்பக்கூட உங்களை எப்படி எதிர்க் கொள்வதென்ற தயக்கத்துடனும் பயத்துடனும்தான் வந்தேன்... இன்னைக்கு என் மனைவிக்குப் பிறந்தநாள்... எப்பவும் அவங்க கூடவே இருப்பேன்... இந்த முறை இல்லை... இந்த நிகழ்வை அவங்க எப்படி எதிர்க்கொண்டாங்களோ... ஆனாலும் என் மனைவிக்கு என்னைத் தெரியும்' என்றபோது ஒரு தகப்பனாய்... கணவனாய்... தான் தப்பானவன் என ஒரு பெண் சொல்லியதில் ஏற்பட்ட வலியை உணர முடிந்தது. சேரனின் கண்ணீரில் வழிந்தோடியது சில நாட்களாய்ச் சுமந்த மிகப்பெரிய வலியின் வேதனை.

மேலும் எல்லாரோடவும் நல்லாத்தான் பழகுறேன்... என்னமோ தெரியலை மீரா கூட மட்டும் ஒத்துப் போகலை... சரியாகும்ன்னு காத்திருக்கிறேன் சார் என்று சொன்னது உண்மையில் சேரன் தப்பானவரில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டியது என்றாலும் மீரா தான் கிழித்திருக்கும் கோட்டுக்குள் இருந்து வெளியே வரவேயில்லை என்பதுதான் எல்லாருக்கும் மிகப் பெரிய ஏமாற்றம்.

ஒரு வழியாக சேரனின் பிரச்சினையை முள்ளை முள்ளால் எடுப்பது போல் பிராது கொடுத்த மீராவை வைத்தே முடிவுக்குக் கொண்டு வந்த கமல், எனக்கு இங்க எல்லாரும் ஒண்ணுதான் சேரனுக்குப் பரிந்து பேசவில்லை... அதற்காக மீரா எனக்கு எதிரியும் இல்லை என்று சொன்னார். மிகச் சிறப்பான நிகழ்வு... கமல் ராக்ஸ்.

மீராவைப் பொறுத்தவரை சராசரி மனுசி கிடையாது... மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணாகத்தான் தெரிகிறார். இவரைச் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பும் பட்சத்தில் தனிமை இன்னும் தீவிரமான மனநோயை உண்டாக்கும்.... அதன் விளைவுகள் அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் தீவிரமாகும். அவருக்குத் தற்போதைய தேவை கவுன்சிலிங். வெளியாகிறார் என்றால் வீட்டுக்கு அனுப்புதலே நலம்... 

மீரா வெளியே வந்தால் யூடியுப் சேனல்கள் பேட்டி என்ற பெயரில் சேரனின் வேட்டியை அவிழ்க்கக் காத்திருப்பார்கள்... பத்து நாளைக்கு மீரா பிஸியாவார்... சேரன் மீது எவ்வளவு சேற்றை வாரி இறைக்க முடியுமோ அவ்வளவு இறைப்பார்... 

எது எப்படியோ தப்புச் செய்யாத மனிதனைப் பற்றி தவறாகச் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்க மறுத்தல் என்பது என்ன வகை..? மன்னிப்புக் கேட்பதால் அவர் முன் மண்டியிட்டு விட்டோம் என்பதல்ல.... அவர் மனதில் உயர்ந்துவிட்டோம் என்பதே நிகழும் என்பதை உணரா மனமும் உண்டோ..? அப்படி உண்டெனில் அது மிகவும் ஆபத்தானது... அப்படியான மனம் மீராவுக்கு இருக்கிறது.

சிறந்த நடிகன் முகன் என்றதை யாராலும் ஏற்க முடியாது என்பதை கமலும் சொல்லாமல் சொல்லி கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருக்காதீர்கள் முன்னாடி வாருங்கள் என்று சொன்னதுடன் லாஸ்லியாவின் மனம் அங்கில்லை என்பதைச் சுட்டிக்காட்டி நீங்களும் முன்னாடி வரணும் என்றார்.

அடுத்து அறுவரில் யார் அறுவடை...? என்பதான கமலின் கேள்விக்கு எல்லாரிடமும் அமைதி... சேரனைப் பொறுத்தவரை தன் அறுவடையை விரும்பினார் என்றாலும் உள்ளிருக்க வேண்டும் என்ற எண்ணமும் மனசுக்குள் இருப்பதை முகம் காட்டியது. சரவணன் போகும் எண்ணத்தில் இருந்து விலகியிருப்பதை அவரின் புன்னகை காட்டியது. கவினுக்கு எப்படியும் நிற்போம் என்ற நம்பிக்கை கண்ணில் தெரிந்தது.  சேரன் விவகாரத்தில் தனக்கு கண்டிப்பாக வெளியேற்றம்தான் என்பதை மீரா உணர்ந்திருந்ததை உலர்ந்த புன்னகை சொல்லியது. மற்றவர்களுக்கு கொஞ்சம் பயமிருந்தது.

உங்களில் ஒருவர் காப்பாற்றப்படுவார் என்ற கமல், என்ன சேரன் சொல்லிடலாமா என்றதும் சேரன் சொல்லலாம் சார் என்க, அதான் சொல்லிட்டேனே என்றபடி கடையை மூடினார்.

முன்னதாக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க், இப்படியான அறிவாளித்தனமான டாஸ்க்கெல்லாம் பிக்பாஸ்தான் தேர்வு செய்கிறாரா... அல்லது தனியாக ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்களா... என்ன ஒரு கேனத்தனமான டாஸ்க்... தர்ஷன் தலைவரானார்... வேலைக்குப் பிரித்து விட்டுவிட்டு எதாயிருந்தாலும் அப்பவே வந்து பேசுங்கடா... முதுகுக்குப் பின்னாடியோ மூணு நாள் கழித்தோ பேசாதீங்க... அப்படின்னு ரொம்ப முன்னெச்சரிக்கையோட பேசினான்.

மொத்தத்தில் இன்று நவரச நாயகனின் உலகத்தரமான நிகழ்ச்சியாய் இருந்தது. மீரா - சேரனில் அடித்து ஆடியவர் சாண்டி-மதுவில் ஒரு பக்கமாய் நின்றதுதான் தவறாகத் தெரிந்தது. சாண்டிக்கு அவ்வளவு இடம் கொடுக்கத் தேவையில்லை. கமல் அதிலும் சரியாகப் பேசியிருந்தால் 'அடிதூள்'ன்னு சொல்லலாம்... ஆனால் அங்கு கோட்டை விட்டுவிட்டார் என்பதால் 'தூள்' மட்டுமே.

இன்று வெளியாவது மீராவா / சாக்சியா?

வீட்டுக்குப் போவார்களா... அல்லது சிறப்பு அறைக்கு போவார்களா...?

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

என் மகன்கள் பிக் பாஸ் பார்க்கிறார்கள். நான் பார்ப்பதில்லை. அவ்வப்போது நீங்கள் எழுதியுள்ளவற்றை லேசாகப் படித்துப் பார்க்கிறேன்!​

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் எனக்கு பிக் பாஸ் என்றில்லை எந்த ப்ரோக்ராம் பற்றியும் அவ்வளவாகத் தெரியாது. இருந்தாலும் உங்கள் விமர்சனத்திற்காகவே வாசிக்கிறேன்.

நல்ல விமர்சனம் உங்கள் விமர்சனமே காட்சியாக இருக்கிறதே. இத்தனைக்கும் நீங்கள் சொல்லியிருப்பதில் மூன்று பேர்தான் தெரியும் சேரன், கமல், சரவணன்.

கீதா