பிக்பாஸ் சீசன் -3 சாக்லெட் சண்டை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே முந்தைய பதிவில் சொன்னது போல் கடிகார அலாரத்தை அடக்கும் போட்டியில் தான் மிகச் சிறப்பாக விளையாண்டதாகவும் சாண்டி அண்ணன் சூப்பரா விளையாண்டதால நீ போயிருக்க வேண்டியதில்லை என்று கவின் சொன்னது தன்னை ரொம்பப் பாதித்திருப்பதாகவும் மக்கள் மத்தியில் இந்தப் பொண்ணு ஒண்ணத்துக்கும் லாயக்கில்லை என போட்ராய் பண்ணப்படுகிறேன் என்றும் மீரா அழுகாச்சி காவியத்தைத் தொடர, ஷெரின் மற்றும் ரேஷ்மா ஆறுதல் சொல்லி தலைவி சாக்சியிடம் சொல்ல, அகப்பட்டவன் கவின் என்பதால் மீராவுக்குத் தோள் கொடுத்து அவனைச் சாய்ப்போம் என முடிவெடுத்து முதலில் சாண்டி, கவின் கிட்ட பேசுன்னு தூபம் போட்டுச்சு... ஆனா மீரா 'ஆதெல்லாம் இல்லா... நான் அல்லார்க்கிட்டயும் சூப்பர் பவருல்ல போண்ணு... நாந்தான் இங்க நல்ல்ல்லா வெள்ளாடுறேன்னு சோலோணும்'ன்னு சொல்ல, செயல் விளக்க பொதுக்கூட்டம் போட முடிவானது.
இதற்கு முன்னே 'மச்சான்... நான் ஜாலிக்குத்தான் சொன்னேன்... அது உன்னைப் பாதிச்சிருச்சு... மன்னிச்சிக்க' அப்படின்னு கவின் மன்னிப்பும் கேட்டு, மோகனைப் போல முத்தமெல்லாம் கொடுக்காமல் கையோடு கை குத்தி சமாதானக் கொடி நாட்டிட்டுத்தான் குளிக்கப் போனான். திரும்பி வரும்போது பொதுக்கூட்ட ஏற்பாடு, 'என்ன மச்சான்... இப்பத்தானே மன்னிப்பெல்லாம் கேட்டேன்... மறுக்காத் தூக்கிட்டு வந்திருக்கே... உனக்கு இப்ப என்ன பிரச்சினை'ன்னு கவின் கேட்க, 'இல்லா மாச்சீ... எல்லார் முன்னாலயும் நாந்தான் அந்தக் கடிகாரத்துக்கிட்ட போனேன்... சாண்டிக்குத்தான் எல்லாக் கிரிடிட்டும் போகுதுன்னு வெளக்கமாச் சோலோணும்.... அதான்' அப்படின்னு பஞ்சாயத்தைக் கூட்டிட்டு போற போக்குல 'மாச்சீ நா பேசோனுமுன்னுதான் சொனேன்...சாக்சிதான் இந்தக் கூட்ட ஏற்ப்பாடெல்லாம்'ன்னு பிட்டைப் போட்டுவிட, ஏழரை பனை மர உச்சியில ஏறிக்கிட்டு கள்ளுக்குடிக்க ஆரம்பிச்சிருச்சி.
சாக்சி பேச, மீரா பேசியதையே பேச, எல்லாரும் பேச, உடும்பு மாதிரி பிடிச்ச பிடியை விடாமல் 'மாச்சீ... நான் இதைச் சொன்னேன்.. அப்புறம் நீ இதைச் சொன்னே'ன்னு தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி மீரா பேச... ஒரு கட்டத்துல சாக்சி 'நீ என்ன லூசாப்பா... இல்ல லூசு மாதிரி நடிக்கிறியாப்பான்னு கேட்டதும் மீரா எப்பவும் போல் படுக்கையில் விழுந்து சரியாக கேமராவில் முகம் தெரிவது போல் படுத்து கண்ணீரைக் கக்கிக் கொண்டிருந்தது.
சாக்லெட் பிரச்சினையில் லாஸ்லியாவுடன் கவின் பேச, நான் வெளியில வந்துட்டேன்... எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நீ சாக்சிக்கிட்ட பேசுன்னு சொல்லிட்டு லாஸ் போக... கவின் மீண்டும் சாக்சியிடம் பேச, அவளும் முறுக்கிக் கொண்டே நிற்க, பாத்ரூமிற்குள் இருப்பவளுக்காக கதவுக்கு வெளியே தேவுடு காத்து நின்றான். அவ உள்ள அழுக , அங்க வந்த லாஸ் எதுவும் தெரியாதுபோல நீ இப்ப சரியாயிட்டேல்லன்னு சொல்லிட்டுப் போக, அப்புறம் ஷெரின் வந்து சாக்சிக்கிட்ட பேசி, பாத்ரூமுக்குள்ள போயி ஆறுதல் சொல்லி, வெளிய வந்த சாக்சி நான் சரியாயிட்டேன்... நீ போயி சாப்பிடு என ஒரு பிட்டைப் போட, மீண்டும் லாஸ்சுடன் பேச... சாக்சி தூக்கம் வராது தவிக்க... இந்தக் கதைதான்யா ரொம்ப நேரமாத் தொடர்ந்துச்சு... பயபுள்ள நான் உங்களை லல்வலைடின்னு சொல்லித் தொலையாம மச்சான் மச்சான்னு ராவெல்லாம் சுத்துறான்.
மறுநாள் காலையில பிக்பாஸ் 'ஊருவிட்டு ஊருவந்துன்னு ' டைமிங்கா பாட்டுப் போடுறாராம்... எப்பவும் ஆடுறவங்க ஆடலை... கவின் எழவே இல்லை... சாண்டியோட சாண் டவுசரைப் போட்டுக்கிட்டு சாக்சிதான் ஆடுச்சு... அப்புறம் இந்தக் கருமாந்திரம் புடிச்ச சாக்லெட்டும் கடிகாரமும் சுற்றிச் சுற்றியே வந்துச்சு. பிரச்சினைக்கான முடிவு எட்டப்படவேயில்லை. இதுல இடையில எப்பவாச்சும் சரவணன் கம்பு சுத்துவாரு... அவருக்கு சேரனைப் பாத்தால் பத்திக்கும்... மோகனுக்கு சரவணனைப் பார்த்தால் பத்திக்கும்... இப்படிப் போன நாள்ல அடுத்த இரண்டு சுற்று கடிகார அலாரத்துல கலந்துக்கிட்டவங்க வெற்றி பெறலை என்பதால் மொத்தம் 1200 மார்க்த்தான் வாங்குனாங்க... அதுலயும் ஒவ்வொரு ஆளா சிகரெடு குடிக்கிற வச்சிருக்கிற தபால் பெட்டிக்குள்ள போகணுங்கிறதுதான் சட்டம்... கூட்டமாப் போயி குப்புக்குப்புன்னு ஊதக்கூடாதுன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். கேக்க மாட்டேங்கிறீங்களேன்னு பிக்பாஸ், தலைவி சாக்சி செய்த தவறுக்காக 100 மார்க்கை ஆட்டையைப் போட்டுட்டாரு... அப்ப 1100 மார்க்குத்தான் இந்த வார பட்ஜெட்டுக்கு.... 2400க்கு மேல மார்க் வாங்கி பட்ஜெட்ல பக்காவா வாங்கித் தின்னவங்க அதுல பாதிக்கு எப்படி வாங்கித் திம்பாங்கன்னு நமக்குத் தோணுனாலும் மார்க்ப்படித்தான் கொடுக்கப்படும்ன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்ன்னா நம்மளை மாதிரி லூசு யாருமில்லை.
அப்புறம் நல்லா வெளாண்டவங்க ஆருன்னு பிக்பாஸ் கொக்கியைப் போட, ரேஷ்மா, சாண்டி அப்புறம் சரவணன்னு சொல்ல சிலர் சேரன்னு சொன்னாங்க... உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு... சரவணனுக்கு ஆறு... சேரனுக்கு அஞ்சு... உடனே தலைவி சாக்சி என் வாக்கை சேரனுக்குப் போடுறேன்னு சொன்னதும் உலகக் கோப்பை பைனல் மாதிரி திக்திக்குன்னு சூப்பர் ஓவருக்குப் போயிருச்சு...தன்னோட ஓட்டு தனக்கே என சரவணன் சொல்ல, என்னோட ஓட்டும் உனக்குத்தாய்யா என சேரன் சொல்ல, சரவணன் இந்த வாரத் தலைவருக்கான இருவரோடு மூவரானார். தனக்கான எதையும் சரவணன் விட்டுக் கொடுப்பதில்லை எப்போதும். சேரன் எதிரி என்பவர் எதிரியின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று சொல்லவேயில்லை.
அப்புறம் யாருடா நல்லாவே விளையாடலைன்னதும் சாக்சி, மீரா பெயர் சொல்ல, சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஆஹா... அடிச்சி ஆட சரியான ஆளுகளைத்தான் கூண்டுக்குள்ள போடுறாங்கன்னு தோணுச்சு. அங்க சாக்சியோட மற்றவர்கள் பேசப்பேச, மீராவுக்குள் சுனாமி சுழல ஆரம்பிக்க, பேசிக்கிட்டே இருக்காங்க... எரிச்சலா இருக்குன்னு சொல்லிட்டு பாத்ரூமுக்குள்ள போயி படுத்துக்கிச்சு... வெளிய வரவே இல்லை... பிக்பாஸ் அந்தப்புள்ள என்னாச்சுன்னு கத்த, சாண்டியோ உள்ள பால் உருட்டி விளையாடும்ன்னு சொன்னதும் சேரன் அங்க எந்தப் பாலையை உருட்டி விளையாடும்ன்னு கேட்டு வைக்க, சாண்டியோ தியானம் பண்ணும் என்பதாய் முடித்து வைத்தார்.
பாட்டரி மாத்தும்மான்னு பிக்பாஸ் மீராவை வெளியே கொண்டு வர, கேமராவுக்கு முன்னால போயி நான் ரொம்ப நல்லவ... எல்லாரும் என்னைய படையப்பா ரம்யா கிருஷ்ணனாப் பாக்குறாங்கன்னு சீனைப் போட்டுச்சு... அப்புறம் 'உன்னை விட்டால் யாருமில்லை' அப்படின்னு சாக்சியும் மீராவும் பேச, நேத்து என்னா நந்துச்சுன்னா... கவின்... அலாரம்... சாண்டி... நீ... நான்.... ரேஷ்மா... அப்ப நீ கூட... நான் இதை... அப்ப நீ அதை... அப்படின்னு மறுபடியும் ஆரம்பிச்சி எப்பவோ செத்துப்போன எங்க ஆயாவை சாவுறதுக்கு முதநாளு நீ லூசுன்னு திட்டுனியேன்னு வந்து நின்னுச்சு... இடையில ரேஷ்மா, ஷெரினெல்லாம் பேசியும் மீரா மீட்டுவதைவிடவில்லை... இந்தச் சண்டையில் கொஞ்ச நேரம் பாத்ரூமுக்குள் மகிழ்வாய் ஆட்டம் போட்டான் கவின். அப்புறம் சாக்சி அழ, எல்லாரும் ஆறுதல் சொல்ல... சேரனும் போனது சரவணனுக்கு சாண்டிக்கும் பிடிக்கலை... சண்டையப்போ எங்கோ போனானுங்கன்னு சொன்ன அவங்க ரெண்டு பேரும் வேடிக்கைதான் பார்த்தாங்க.... இங்க யாருமே எதையும் கண்டுக்கிறதில்லைன்னு ரேஷ்மா சொன்னப்போ ஆமாமா யாருமே கண்டுக்கிறதில்லைன்னு ஏதோ இவங்க ரெண்டு பேரும் எல்லாப் பிரச்சினையிலும் முன் நிக்கிறமாதிரி தலையாட்டுனாங்க.
அப்புறம்... அப்புறம்... சரி இதே புராணத்தை எவ்வளவு நேரம்தான் பேசுறது... கவினிடம் பேசிய சேரன் ரெண்டு பொண்ணுங்களோட மனசையும் நீ பாதிச்சிருக்கே.... இப்ப உன் மேல இருக்க அழுக்கைக் கழுவ, உன்னைய எல்லாரும் புறம் பேசாம இருக்க எல்லார் முன்னாடியும் உன்னோட நிலை என்னங்கிறதை எடுத்துச் சொல்லு... விரிவாப் பேசுன்னு சொல்லலை... பட் கொஞ்சமாவது பேசினால் நல்லாயிருக்கும்ன்னு சொல்ல, அதை அறிந்த சாண்டி எல்லார்க்கிட்டயும் எதுக்கு நீ சாரி கேக்கணும்ன்னு குதிச்சார். அப்புறம் கவின் என்ன நினைத்தானோ எல்லார்க்கிட்டயும் நான் விளையாட்டாத்தான் விளையாண்டேன்... இம்புட்டுத்தூரம் வந்திருச்சுன்னு சொல்லி சாரி கேட்டுட்டு, சாக்சிக்கிட்ட பேச நினைக்க, அவ முறுக்க... பய பாத்ரூம்க்குள்ள போயி கேவிக்கேவி அழுக ஆரம்பிச்சிட்டான்... அப்புறம் ரேஷ்மா, சாண்டி, முத்த அப்பா மோகன் எல்லாம் சமாதானம் பேச, என்னைய விடுங்கடா வீட்டுக்குப் போறேன்னு நின்னான். சாக்சி பேச வர, வேண்டான்னு சொல்லிட்டான்.
ரெண்டு பொண்ணுங்களின் உணர்ச்சியோட விளையாண்ட கவின், சாக்சியை லவ்வியது உண்மையே என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதேபோல் இங்க எப்பவும் போல் இருக்கலாம்... வெளியில போயி லவ்விக்கலாம்ன்னு பயபுள்ள சொல்லியிருக்கு... அப்புறம் லாஸ்வியாவோட நடத்தை, வெளியில் இருக்கும் மக்கள் செல்வாக்கு, சாக்சியோட அடிக்கடி மாறும் மனநிலை என எல்லாமாய் சாக்சியை விடுத்து லாஸ்லியாவை லவ்வச் சொல்லியிருக்கு... அதைத்தான் சாக்சியும் சேரனும் சொல்றாங்க.... ரெண்டு குதிரையை ஓட்டிட்டு மச்சான்... மச்சான்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச குற்றவாளி கவின்தான் என்பதால் அதை உணர்ந்தே எஸ்கேப் ஆகப் பார்க்கிறான்... அதுக்கே இந்த அழுகை சீனெல்லாம் என்றாலும் ஆம்பளை கேவிக்கேவி அழுததெல்லாம் வருத்தமாத்தான் இருந்துச்சு.
சேரன் சொன்னதுதான் தப்புன்னு சாண்டி ஒரு பக்கம் எல்லார்க்கிட்டயும் ஏத்திவிட்டுக்கிட்டு இருக்கார்... அவரும் எத்தனை நாள்தான் வடிவேலாவே இருக்கிறது... ரகுவரன் ஆக வேண்டாமா...? சேரனோ நான் எல்லார்க்கிட்டயும் பொதுப்படையாப் பேசு... அப்பத்தான் உம்மேல அவங்க வச்சிருக்கிற கெட்ட எண்ணம் மாறும்ன்னுதான் சொன்னேன்... சாரி கேளுன்னு சொல்லவே இல்லை என ரேஷ்மா, சாக்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதுதான் உண்மையும் கூட... அதை ஏன் கவின் சொல்ல மறுக்கிறான்னு தெரியலை.
இதுக்கு இடையில லாஸ்லியாவோட பேசுற கவின், ஏம்மச்சான் தள்ளி உக்காந்திருக்கே... கிட்ட வான்னு சொல்றான். அப்பவும் அவனுக்கு கிளுகிளுப்புக் கேக்குது... கொய்யால... அந்தப்புள்ளயும் நான் வெளிய வந்துட்டேன்... சாக்சிகிட்ட பேசு... ரெண்டு பேரோட உணர்ச்சி கூட உன்னால எப்படி விளையாட முடிஞ்சது... சாக்சிக்கிட்ட பேசுனப்போதான் உன்னோட உண்மை முகம் தெரிஞ்சது... நான் வெளிய வந்துட்டேன்... எங்கிட்ட சாரி கேக்காத... அதை நான் ஏத்துக்க மாட்டேன்னு... தன்னோட காதலை மறைத்து அப்படி ஒண்ணு இல்லமே இல்லைன்னு சிவாஜி மாதிரி நடிச்சிச்சு... ஆனா கையை உடம்புல போட்டு தேய்த்த தேய்ல அதோட வலி தெரிஞ்சிச்சு.
இதுக்கு இடையில நீயா நானா போட்டி வேற... நடுவர் மீரா... எப்படி நடந்திருக்கும்ன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க... இந்த மீராவை வலுக்கட்டாயமாவாச்சும் பிக்பாஸ் வெளியேத்தணும் இல்லேன்னா டிஆர்பி உயரத்துல பறக்கும்ங்கிற கனவுல மண்ணுதான் விழும். மீரா பேச ஆரம்பித்தாலே தியேட்டர்ல பாட்டு வந்ததும் பாத்ரூம் போற மாதிரி எந்திரிச்சிப் போக வேண்டியிருக்கு.
இத்தனை கலவரத்துலயும் கட்டிக்கொடு மோகன் லாஸ், சாக்ன்னு தன்னோட கடமையை நிறைவேற்றிக் கொண்டதுடன் கூடுதலாய் கவினுக்கும் கொடுத்து நாளொன்றுக்கு மூன்று என்ற தனது கணக்கை நிறைவாய் பூர்த்தி செய்து கொண்டார்.
நடிப்பே என்றாலும் இரண்டு பெண்களின் உணர்ச்சியுடன் விளையாண்டது மிகப்பெரிய தவறு என்பதை கவின் உணர்வதாய்த் தெரியவில்லை... இவ இல்லேன்னா அவ என்பதில் இருந்து அவன் வெளிவர நினைக்கவில்லை... இந்தக் காதல் கதை இன்னும் தொடரத்தான் செய்யும்... பின்னே பிக்பாஸ் விடுவாரா என்ன... அவரே எதிர்பார்க்காத திரைக்கதையாகக் கூட இது இருக்கலாம். பாவம் இரண்டு பெண்களும் தூக்கத்தைத் தொலைத்து அலைகிறார்கள்... அதுவும் ஆடிக்கொண்டு திரிந்த லாஸ்லியாவின் சோக முகம் பார்க்கச் சகிக்கலை.
இதுல லாஸ்லியாவின் செயலால் பாதிக்கப்பட்ட ஷெரின், மூணு நாளைக்குப் பிறகு மூக்கால அழுது... என்னத்தைச் சொல்ல... கேமராவை எம்பக்கம் திருப்புங்கப்பான்னு ஆளாளுக்கு அழ ஆரம்பித்ததில் மது, அபிராமியெல்லாம் வீட்டுக்குள் இருக்காங்களான்னே தெரியாமப் போச்சு... ரேஷ்மா கவின் விஷயத்தில் மிகத் தெளிவாய்ப் பேசுவது சிறப்பு.
சாண்டி எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நபராய் இருத்தல் தனக்கான பாதுகாப்பு என்று நினைத்தாலும் இதுவும் தொடர்தல் நல்லதல்ல.
நேற்றும் இன்றும் என்ன நிகழ்ந்தோ தெரியவில்லை... இன்று ஆண்டவரின் வருகையில் மீரா குறும்படம் போட்டா எல்லாம் தெரியும் என ஆண்டவருக்கு கட்டளை இடுவதை நிறைவேற்றுவாரா... கவின் காதல் பிரச்சினைக்கு தீர்வு சொல்வாரா... மோகனின் கட்டிக்கொடுவை கண்டிப்பாரா... சேரன் சொன்னது சரி என்பாரா... சாண்டியின் பார்வை சரி என்பாரா... லாஸ்லியா ஷெரின் பிரச்சினையில் யார் பக்கம் நியாயம் என்பாரா... என பல 'பாரா'க்களுக்கான விடைகளுக்காக காத்திருப்போம்...
பிக்பாஸ் தொடரும்.
பிக்பாஸ் பார்ப்பது தவறா..? என்ற எனது கட்டுரை ஹிக்ஸிக் தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க நினைத்தால்...
-'பரிவை' சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக