மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜனவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-2)


-------------

ன்னபூரணி பாட்டி சொன்ன வார்த்தைகள் கண்ணனின் கோபத்தை இன்னும் அதிகமாக்க, "உங்களுக்குன்னு ஆச்சாரம் இருக்கு பாட்டி... எங்களுக்குத் தெரியும்... அதான் சாமி கூட கற்பக்கிரகத்துக்கிட்ட உங்களை விடுது... நாங்க கற்பக்கிரகம் தாண்டியிருக்கிற வாசல்வரைதான் வரமுடியும்… இன்னைக்கு நிலமையில  காசு கொடுத்தா சாமியை கொஞ்சம் கிட்டப்போய் பார்க்கலாம்… கொடுக்கலைன்னா தர்ம தரிசனமுன்னு ரொம்பத் தூரம் தள்ளி நின்னுதான் பார்க்கணும்… சாமியை காட்சிப் பொருளாக்கி பணம் பறிக்கிற கூட்டத்துக்கு அடிபணிஞ்சி போற உங்க ஆச்சாரமும் அனுஷ்டானமும் எங்களுக்கு வேண்டாம்.  ஆமா…  கோவில் வருமானம்தானே உங்களுக்கு சோறு போடுது… அங்க காசு போடுறவனெல்லாம் உங்க சாதிக்காரந்தானா…? அதுல மட்டும் சாதியெல்லாம் வந்து ஒட்டிக்கலையா…? நாங்க நின்ன இடத்துல மட்டும் வந்து ஒட்டிக்கிச்சாக்கும்… கழுவச் சொல்றீங்க..? என்ன ஆச்சாரம் இது…. பால்க்காரர்கிட்ட பால் வாங்கி காபி போட்டு பேஷ் பேஷ் நல்லாயிருக்குன்னு குடிக்கிறீங்களே... அது யாரு உங்க சாதிக்காரன் கறந்தானா..? எங்கள்ல ஒருத்தன்தானே கொண்டாந்து தர்றான்…  ஏன் இன்னைக்கு வெண்டைக்காய் பொறியல் வை... கத்திரிக்காய் கூட்டு வையின்னு வகை வகையா வச்சி சாப்பிடுறீங்களே... அதை விளைவிச்சவன் யாரு... உங்க சாதிக்காரனா... இல்லையே.... பாட்டி... எஞ்சாதிகாரன் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னா நாமெல்லாம் சாப்பிடாம சாக வேண்டியதுதான்… எல்லாரும் சேந்தாத்தான் எல்லாம் கிடக்கும். தெரிஞ்ச்சிக்கங்க... சாரதி நாங்க வெளிய நிக்கிறோம்... நீ அப்புறம் வா..." என கத்தினான்.

"ஏன்டாம்பி உனக்கு இம்புட்டுக் கோபம்... இதெல்லாம் நன்னாயில்லை பார்த்துக்கோ... ஒருத்த ஆச்சாரம்ன்னு சொன்னா அவா சொல்றதை ஏத்துக்கிட்டு  போறதுதான் சிறியவாளுக்கு அழகு..." பாட்டி தன் கருத்தில் நிலையாக நின்றாள்.

"என்னால எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு போக முடியாது பாட்டி.... தப்புன்னா கத்துவேன்... அது என்னோட குணம்... வாங்கடா..." என்றபடி கண்ணன் வேகமாக வெளியேற, அவன் பின்னால் மற்றவர்களும் வெளியேறி நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களில் ஏறி, மௌனமாய் அமர்ந்து இருந்தனர்.

“டேய் கண்ணா... என்னடா இது... நாம வந்திருக்கிறது நம்ம சாரதிக்காக... அவன் என்னைக்காச்சும் நம்மகிட்ட சாதி பார்த்திருக்கிறானா என்ன... நம்ம சாப்பாட்டை அவன் தினமும் சாப்பிடுறான்... நீ இப்படிக் கோபப்பட்டா அவனுக்கு கஷ்டமா இருக்காதா..? விடுடா...”  என அந்த மௌனத்தை உடைத்தான் அம்பேத்கார்.

“அதுக்காக..?” எகிறினான் கண்ணன்.

“நமக்கு சாரதிதான் முக்கியம் தெரிஞ்சிக்க... வந்த இடத்துல அவனோட அம்மா, தங்கச்சி எல்லாம் என்ன நினைப்பாங்க... எல்லாத்துக்கும் இப்படி கோபப்பட்டியன்னா இந்த உலகத்துல உன்னால வாழவே முடியாது...” என்றான் பிரவீண்.

கண்ணன் பதில் சொல்லும் முன்னே, "பாட்டி... அம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் கூட்டியாந்தேன்... படிக்கிற இடத்துல சாதி, மதமெல்லாம் பாத்துப் பழக முடியாது... அவன் கடிச்சிக் கொடுத்ததை நான் திம்பேன்... நான் கடிச்சிக் கொடுத்ததை அவன் திம்பான்... இதுதான் நட்பு... சும்மா இருக்க மாட்டீங்களா...? உங்க ஆச்சாரத்தை எல்லாம் நீங்க உக்காந்திருக்க திண்ணையோட வச்சிக்கங்க… எங்க காலத்துல அதை உள்ளாற கொண்டு வராதீங்க…” என பாட்டியிடம் கத்திய பார்த்தசாரதி வெளியே வந்தான்.

“டேய் சாரிடா… அவங்கள்லாம் அதுலயே ஊறுனவங்க… ஏன் உங்க வீட்டுக்குப் போகும்போது அப்பா நீ என்ன சாதி… நீ என்ன சாதியின்னு எல்லாரையும் கேட்கலையா..? அப்ப எல்லாரும் சொல்லிட்டுத்தானே வந்தோம்… அவங்க தலைமுறை சாதிக்குள்ள சிக்கியிருக்கு… நாம அப்பயியில்லையில்ல… ப்ளீஸ்… நீங்க வாறீங்கன்னு அம்மா, தங்கச்சிக்கு எல்லாம் அவ்வளவு சந்தோஷம்… டேய் கண்ணா நீ வந்தாத்தான் மத்தவங்க வருவாங்க… உள்ள வாங்கடா…”

“இல்லடா… வேண்டாம்… கோவில் பக்கம் பொயிட்டு வரலாமே?” என்றான் கண்ணன்.

“அது போகலாம்… இப்ப உள்ள வாங்கடான்னா… எனக்கு நீங்க குடுக்கிற மரியாதை இதுதானா… இந்த ரெண்டு வருசத்துல என்னைக்குடா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கேன்… எங்க பாட்டி சாதியின்னதும் நானும் அந்த ஆச்சாரத்துல சிக்கிட்டேன்ல்ல…”

“டேய் என்னடா நீ… அப்படியெல்லாம் இல்ல… கண்ணா… பெரியவங்க உலகம் வேற… நட்புங்கிற உலகம் வேற… இதுக்குள்ள சாதிச் சாக்கடைக்கெல்லாம் இடமில்லை… அவன் வருந்துறான் பாரு... எந்திரிடா…” என்றான் அம்பேத்கார்.

“நான் சொன்னா வரமாட்டீங்க... இருங்க… அம்மா பாருங்கம்மா வீட்டுக்குள்ள வரமாட்டேன்னு ஸ்டிரைக் பண்ணுறானுங்க… எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறோம்" உள்பக்கமாகப் பார்த்துக் கத்தினான் பார்த்தசாரதி

"என்னடா நீங்க… அத்தை சித்த சும்மா இருங்கோ… ஆச்சாரத்தையெல்லாம் அப்புறம் பார்க்கலாம்… பிள்ளைங்க பர்ஸ்ட் டைம் ஆத்துக்கு வந்திருக்கா… சும்மா பேசிண்டு… உங்க ஆச்சாரத்துக்கு எதுவும் வராது…” என்றபடி சேலைத் தலைப்பால் கையைத் துடைத்துக் கொண்டே வந்த சுபத்ரா “கண்ணா... என்னப்பா இது... அவங்க பெரியவங்க... அப்படித்தான் இருப்பாங்க... பூஜை புணஷ்காரம்ன்னு ஊறிப்போனவங்க.... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு… உள்ள வாங்க… முற்றத்துல தண்ணி இருக்கு காலம்பிட்டு உள்ளே உக்காருங்க…"

"இல்லம்மா... பரவாயில்லை... அப்படியே கோயில் பக்கமா பொயிட்டு..."

“என்னப்பா நீயி… சந்தோஷமா வந்த பிள்ளைங்க சங்கடமா போறதுதான் எங்க ஆத்துக்கு நல்லதில்லை… புரிஞ்சிக்கோ…”


"அட என்ன மிஸ்டர் சாரதி உங்க பிரண்ட்ஸ்க்கு எல்லாம் பாரதியை விட கோபம் அதிகமா வர்றது… அவன் கூட மீசை வச்சிண்டு காக்கை குருவி எங்கள் சாதியின்னான்… சாதியில்லையின்னு அன்னைக்கே பேசின பார்ப்பனன் அவன்… அன்னைக்கே மீசை வச்சிண்டு மனைவி தோள்ல கை போட்டுக் கூட்டிக்கிட்டு போனவன் அவன்... எங்க பாரதி... எங்கள்ல சாதி... ஆச்சாரம்… அனுஷ்டானம்ன்னு பேச ஆளுங்க இப்ப நிறைய இருக்கா… ஆனா சாதியாவது மண்ணாவதுன்னு அன்னைக்கே ஒத்தப் பிராமணன் அடிச்சிச் சொல்லிட்டுப் போயிருக்கா… ஆனா இன்னமும் இந்த சாதிச் சாக்கடை மறையலை... ஆமா இதுல சும்மா படபடன்னு லெக்சர் கொடுத்த புள்ளையாண்டான் யாருன்னு காமிங்க மிஸ்டர் சாரதி…. பேரை கண்ணன்னு வச்சதுக்கு பாரதின்னு வச்சிருக்கலாம் அவர் பேரண்ட்ஸ்… ஹலோ ப்ரண்ட்ஸ்… எங்க பாட்டி அப்படித்தான்… அவங்க அப்படியே வளர்ந்து வாழ்ந்தும் முடிக்கப் போறாங்க… எங்க வீட்டைப் பொறுத்தவரை எல்லாமே திருமதி. சுபத்ராதான்…. அவங்க சொல்றதுதான் இங்க சட்டம்… “ படபடவெனப் பேசிய அவள் “அட வாங்கன்னா வாங்கப்பா…. இன்னாத்துக்கு முர்ச்சிக்கின்னு நிக்கிறீங்க… இன்னா  சாரதி நைனா… அப்பால கட்டம் போட்ட சொக்காதான் தலீவரு கண்ணனா…” என சென்னை மொழியில் பேசிச் சிரித்தாள்.

அவர்கள் ஒன்றும் பேசாமல் உள்ளே செல்ல அவள் வழி விட்டு ஒதுங்கி நின்றாள். அவளின் பார்வை மட்டும் கண்ணனின் மீது இருந்தது.

***
“ஏய் எம்பேத்திக் குட்டிக்கு மீன் வையேன்….” என்றார் வேலாயுதம்.

“ஆமா அவ தின்னுட்டாலும்…” என்றாள் சவுந்தரம்.

“ஏம்பா அறுவடைக்கு கூட சரவணன் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரக்கூடாதாக்கும்… அறுத்து… அவிச்சி… அரிசி மூடைய கொண்டு போய் கொடுக்கணுமாக்கும்” என்றாள் செல்வி.

(பகுதி -3 சனிக்கிழமை தொடரும்) 

படம் இணையத்தில் சுட்டது.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அண்ணா

கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள். த.ம1

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kasthuri Rengan சொன்னது…

வணக்கம் தோழர்
தொடருங்கள்
த ம +

KILLERGEE Devakottai சொன்னது…

நல்ல ரசனையுடன் செல்கிறது தொடர்கிறேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கோபம்.....?

Unknown சொன்னது…

அடுத்த பார்ட் எப்போது.

துரை செல்வராஜூ சொன்னது…

விறுவிறுப்பான நடை....
வாழ்க நலம்..

r.v.saravanan சொன்னது…

எஞ்சாதிகாரன் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னா நாமெல்லாம் சாப்பிடாம சாக வேண்டியதுதான்… எல்லாரும் சேந்தாத்தான் எல்லாம் கிடைக்கும்.

உண்மை

நிஷா சொன்னது…

ஆரம்பமே அனல் தெறிக்கும் வார்த்தைகள்! எழுத்து மேம்பட்டிருப்பது எழுத்து நடையின் தெறிப்பில் தெரிகின்றது குமார்.

//எஞ்சாதிகாரன் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னா நாமெல்லாம் சாப்பிடாம சாக வேண்டியதுதான்… எல்லாரும் சேந்தாத்தான் எல்லாம் கிடக்கும்//

நிஜமான வார்த்தைகள், சாதி, மதம் பார்த்து பிரிந்தே கிடைந்தால் நாம் இப்பூமியில் வாழவே முடியாது,


கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே
தொடர்கிறேன்

ithayasaaral.blogspot.com சொன்னது…

அருமை தோழா, கருத்தும் எழுத்தும் சிறப்பான மெருகுடன் இருக்கிறது. பாராட்டும் அன்பும். தொடர்க.