மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 14 ஜனவரி, 2016மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு


ல்லிக்கட்டு... எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்...

பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன் இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதிவு என்பதைவிட இது எங்களின் உரிமை என்ற ஆணித்தரமான பதிவு. இது தென்தமிழகத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்று சொல்லி எதிர்க்கும் வடதமிழகத்து நண்பர்களே... குறிப்பாக சென்னை நண்பர்களே... இது தமிழனின் வீர விளையாட்டு... பாரம்பரிய விளையாட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளம் வந்தபோது அது வடதமிழகத்தில்தான் பெய்தது என்று எந்தத் தென்மாவட்டத்துக்காரனும் நினைக்கவில்லை... என் மக்கள்... என் இனம்... பாதிக்கப்பட்டிருக்கு என்றுதான் ஓடோடி வந்தான்... நம் உரிமையை அழிக்க நினைப்பவருக்கு ஜால்ரா அடிப்பதை விடுத்து நாம் தமிழர்கள் என ஒன்று கூட முயலுங்கள்.

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளையை சிறிய கன்றிலிருந்தே பார்த்துப் பார்த்து வளர்ப்பவன் விவசாயி. அவன் அதை துன்புறுத்துகிறான் என்று ஏதோ சில பதியப்பட்ட காட்சிகளை வைத்துக் கொண்டு தடை செய்து... அந்த வீர விளையாட்டையே... எம் இனத்தின் பாரம்பரியத்தையே அழிக்கத்துடிக்கும் அற்பப் பதர்களுக்கு அந்த மாட்டை பராமரிக்கும் முறை தெரியுமா...? அதன் கண்களில் துன்புறுத்திய வேதனை தெரியும் என்று ஏதோ ஆராய்ந்து பார்த்தது போல் சொல்லியிருக்கிறார்கள்... அதன் கண்களில் எங்கே வேதனை தெரிந்தது... என்னை வளர்க்கும் எஜமானன் தோற்கக்கூடாது என்ற வெறியே தெரியும்... என் வீரம் நான் என் எஜமானனுகு அளிக்கும் பரிசு என்ற வெறியே தெரியும்.. மாட்டுக்கறியைச் சாப்பிடுவோம்... வண்டி வண்டியாக கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்புவதற்கு உதவுவோம்... ஆனால் வருடமெல்லாம் வயலில் கிடந்து உழன்று அந்த ஒருநாள் சந்தோஷமாக இருக்கும் விவசாயியை மட்டும் சந்தோஷமாக இருக்க விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கும் இவர்கள் எல்லாம் யார்..? இவர்கள் மாட்டின் நலம் விரும்பிகளா...? அல்லது மாட்டு இறைச்சி விரும்பிகளா...?

தென் தமிழகத்தில் விவசாயம் செய்யும் எல்லாரிடமும் மாடுகள் இருக்கும்... பால் வியாபரத்துக்கு மட்டுமின்றி... உழவுக்கு என்றும்... பந்தய மாடுகள் என்றும்.. மஞ்சுவிரட்டு மாடுகள் என்றும் தரம் வாரியாக வைத்துப் பராமரிப்பார்கள். அவற்றை அவர்கள் பராமரிக்கும் முறையை இவர்கள் அறிவார்களா? வீட்டு விலங்காக இருக்கும் காளைகளை வன விலங்கு என்று சொல்லி வாதிடுகிறார்கள். வருடம் பூராம் உழைக்கும் வர்க்கம் தங்களின் பிள்ளைகளோடு பிள்ளைகளாக வைத்து வளர்த்து வரும் ஒரு உயிரினத்தை காட்டு விலங்கு என்று சொல்லும் இந்தக் காட்டுமிராண்டிகளை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கூட்டம் இது மனிதாபிமானம் அற்ற செயல்... இது மாடுகளை துன்புறுத்தும் செயல்... இது மகா பாதகமான செயல்... என்று கூப்பாடு போடுகிறது. இவர்களுக்கு என்ன தெரியும் விவசாயியின் வாழ்க்கையும் அவனது வாழ்வாதாரமும்.. இந்த மாடுகளோடு பின்னிப் பிணைந்து கிடப்பது...

நாங்கள் அடுக்கடுக்காய் பேனர் வைப்போம்... நடிகனின் கட் அவுட்டுக்கு அண்டாக்களில் பால் வாங்கி அபிஷேகம் செய்வோம். எவனோ ஒரு நடிகன் சாகக்கிடந்தால் மொட்டை அடிப்போம்... என்று இன்னமும் திருந்தாமல் திரியும் நீங்கள் இந்த தமிழனின் பரம்பரை விளையாட்டை இது தென்தமிழகத்தில் ஒரு சாரார் நடத்தும் விளையாட்டு... இது தமிழர்களின் விளையாட்டு அல்ல என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை... ஏனென்றால் நீங்கள் எல்லாம் தமிழனாய் வாழ நினைக்காதவர்கள்... ஏதோ மேற்கத்திய நாகரீகத்தில் ஒன்றி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி வாழ நினைக்கும், வாழ்ந்து வரும் மேல்த்தட்டு வாசிகள். தமிழன் என்றால் அதில் வீரம் இருக்கும்... தன்மானம் இருக்கும். அதை மறந்த உங்களுக்கு ஏழைகளின் வீரமிக்க இந்த விளையாட்டு எம் தமிழினத்தின் விளையாட்டு.. இது அழியக் கூடிய விளையாட்டு அல்ல.... பாதுகாக்க வேண்டிய விளையாட்டு என்பது எப்படித் தெரியும்.


தமிழனின் விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று முதன் முதலில் வழக்குத் தொடந்த மேனகா காந்திக்கு இதைப் பற்றி என்ன தெரியும். தமிழ்நாட்டிற்கு வந்து அரைகுறை ஆடையில் இளைஞர்களை எல்லாம் கவர்ச்சி உலகில் மயங்க வைத்து பணம் சம்பாரிக்கும் மேற்கத்திய எமிக்கு மாட்டை எப்படி பாராமரிப்பார்கள் என்பது தெரியுமா..? உடலில் எல்லா இடத்திலும் பச்சை குத்தி, அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரிஷாவுக்கு, காளைகள் விவசாயியின் குழந்தையோடு பேசும், விளையாடும் என்பது தெரியுமா...? கத்திச் சேவல் சண்டையை வைத்து படமெடுத்து தேசிய விருது பெற்ற... தென் தமிழக கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பில் முன்னுக்கு வந்த... ரஜினியின் மருமகன்... ஒல்லிப்பிச்சான் தனுஷ்க்கு மாடுகள் தங்கள் எஜமானனைப் பார்க்கவில்லை என்றால் உணவு உண்ணாது என்பது தெரியுமா...? ஏன் கிரிக்கெட்டில் கோடிகளைக் குவித்து அனுஷ்காவோடு சுற்றும் விராட் கோலிக்கும், இதை எதிர்க்கும் மற்ற பிரபலங்களுக்கும் என்ன தெரியும் இதைப் பற்றி...? பந்தை விரட்டி அடிப்பது போல் எங்கள் மாடுகளை அவிழ்த்துவிட்டால் இவர்களால் விரட்டி பிடிக்கத்தான் முடியுமா... அல்லது அடிக்கத்தான் முடியுமா... தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசும் இவர்கள்... தமிழனின் பாரம்பரியத்தை... வீரவிளையாட்டை தடைசெய்ய வேண்டும் என்று சொல்வதன் காரணம் என்ன...?

இந்த பெடா(PETA) அமைப்பு அமெரிக்காவில் தோன்றிய அமைப்பு... இவர்களால் ஜரோப்பியா, தென் அமெரிக்கா நடுகளில் நடக்கும் காளைச் சண்டைகளை நிறுத்த முடியுமா..? ரோட்டில் கிடக்கும் விலங்குகளை பிடித்து பதினைந்து நாட்கள் வைத்திருந்து யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றால் அதை கொலை செய்யும்... அதற்குப் பெயர் கருணைக் கொலையாம்... இவர்கள் உண்மையிலேயே மாட்டின் நலனில் கொண்ட அக்கறையால்தான் இதற்கு தடை கோருகிறார்களா என்றால் இல்லை என்றுதான்  சொல்ல வேண்டும். மேலும் நகரங்களில் பசுக்களில் மார்க்காம்புகளில் மிஷினை வைத்து பாலை உறிஞ்சி எடுப்பதையும், ஒவ்வொரு தெருவிலும் மாட்டை நிறுத்தி ஊசி போட்டு பால் கறந்து கொடுப்பதையும் இவர்கள் எதிர்ப்பதில்லை... காரணம் அந்தப் பாலில்தானே இவர்கள் காபி சாப்பிடுகிறார்கள்... இந்த இனத்தின் மீதான அடக்குமுறைக்குப் பின்னே ஏதோ ஒரு அந்திய சக்தியும்  அதன் பணமும் இருக்கிறது. அதற்கு இவர்கள் மூலமாகவும் இவர்களுக்கு அதன் மூலமாகவும் ஆக வேண்டிய மிகப்பெரிய காரியம் கண்டிப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இவர்களால் மற்ற மாநிலங்களில்... மற்ற நாடுகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை நிறுத்தத் திராணி இருக்கிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

அதை விடுங்க... நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் பூரம் திருவிழாவில் யானைகள் பயன்படுத்துவதால் அவை துன்புறுத்தப்படுகின்றன என்று இவர்களால் அதற்கு தடைவாங்க களமிறங்க முடியுமா...? முடியாது... முடியவே முடியாது... காரணம்... கேரளாவின் பாரம்பரியத்து ஒரு பிரச்சினை என்றால் அங்கு சாதி, மதம் பார்ப்பதில்லை... வடக்கு, தெற்கு பார்ப்பதில்லை..., ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பார்ப்பதில்லை... மாநிலமே ஒன்று கூடும்.. தங்கள் உரிமையை விடாமல் போராடுவார்கள். அதனால் அங்கு கால் வைக்க இந்த காவாளிக்கூட்டத்துக்குப் பயம்...? இதே தமிழன் என்றால் சாதியும் மதமும் முதலில் பார்ப்பான்... அப்புறம் வடக்கு தெற்கு என வியாக்கியானம் பேசுவான், ஆளும் அரசும் எதிர்கட்சிகளும் பேனர்கட்டி கொடிப்பிடித்து எதிர்எதிர் கருத்துக்களைப் பேசியே கொல்வார்கள்... எவனும் ஒன்று கூட மாட்டான்... அவனுக்குத்தானே ரத்தம் வருதுன்னு இவன்பாட்டுக்கு வேலைக்குப் போவான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு... தங்களின் வயிற்றை நிரப்ப ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு இந்த பெடா களம் இறங்கியிருக்கிறது.

ஒரு கலந்துரையாடலில் பெடா அமைப்பைச் சேர்ந்த முதிர்ந்த அம்மணியை சீமான் மடக்கினார். இது தமிழர்களின் வீரவிளையாட்டு இதைத் தடைசெய்ய நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா காளைகள் துன்புறுத்தப்படுகின்றன... இதை நடத்தவே கூடாது என்றார். அப்ப கேரளாவில் யானைப் பந்தயம், கர்நாடகாவில் குதிரைப் பந்தயம் எல்லாம் நடக்குதே அதையெல்லாம் நிறுத்துங்கள் என்று சொன்னதும் அவற்றை ஏன் நிறுத்தணும் என்றவர், குதிரை ஓடுவதற்கு என்றே பிறந்தது என்றார். அப்ப மாடு ஓடாதா..? என்றதும் நான் சொன்னது தவறுதான் என்று  அந்த அம்மையார் ஒத்துக்கொண்டார். உங்கள் எதிர்ப்பு மாடுகளைக் காக்கும் என்றால் அந்த எதிர்ப்புக்கு எல்லாருமே ஆதரவு தருவோம். ஆனால் நாங்கள் மாடுகளை வெட்டிச் சாப்பிடுவோம்... ஆனால் விளையாட விடமாட்டோம்.. என்று நீங்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது படித்த மாக்களே.

வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்பதை எல்லாரும் அறிவோம். அரபு நாட்டுக்கு வரும் மாட்டிறைச்சிகளை அனுப்பும் நாடுகளில் இந்தியாவுக்கே முதலிடம்... இருக்கும் மாடுகளை எல்லாம் கொன்று விற்றுக் கொழிப்போம்... ஆனால் தான் வளர்த்த மாட்டை தன் இனத்தின் முன் பெருமையுடன் அவிழ்த்து விட்டு முடிந்தால் பிடித்துப் பாருங்கடா... என்று மார்த்தட்டிச் சந்தோஷிக்கும் தமிழனை சந்தோஷமாக இருக்க விடமாட்டோம். தொன்மை மொழியாம் தமிழை அழிக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு அலைவோம் என்று சிந்திப்பவர்களே... நன்றாக இருக்கிறது உங்கள் இரக்க குணம். குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலைச் செய்யும் அரசாங்கம் உண்மையிலேயே பாராட்டுக்குறியதுதான். 

எது எப்படியோ இது எங்களின் பாரம்பரியம்... வீர விளையாட்டு... இதில் குத்துப்படுவனும்... அடிபடுபவனும் விரும்பித்தான் ஏற்கிறானே ஒழிய... யாரும் கட்டாயப்படுத்தி அவர்களை களம் இறக்குவதில்லை... இது எங்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விளையாட்டு... நாங்கள் மாடுகளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டாடும் மரபினர்... எங்கள் சிவன் கோவில்களில் மூலவரை தரிசிக்கச் செல்லும் முன்னர் நந்தியை வணங்கிச் செல்பவர்கள் நாங்கள்... நீங்கள் மாட்டை இறைச்சியாகப் பார்க்கிறீர்கள்.. நாங்களை அதை இறைவனாகப் பார்க்கிறோம்.  எங்கள் இறைவனுடன் நாங்கள் பேச, மகிழ, ஓடிப்பிடித்து விளையாட யாரோட அனுமதிக்காக காத்திருக்க வேண்டும்...? பிள்ளையோடு விளையாட அம்மா அனுமதி வாங்க வேண்டுமா என்ன... எங்கள் மாடுகளை நாங்கள் அவிழ்த்து விடுவோம்... முடிந்தால் பிடித்துப் பாருங்கள் பெடா தோழர்களே...

முகநூலில் ஒரு டிரண்ட் இருக்கு... கமலஹாசன் ஊரை விட்டுப் போறேன்னு சொன்னா 'ஐ சப்போர்ட் கமல்'... அம்மா ஜெயிலுக்குப் போன 'ஐ சப்போர்ட் அம்மா'... இப்படி எல்லாத்துக்கும் எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணுவோம் நாம்... இப்ப 'ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு' அப்படின்னு பலர் போடுறாங்க... இதுல சப்போர்ட் என்ற வார்த்தைக்கே வேலையில்லை... இது நம் பாரம்பரியம்... தமிழக மண்ணுக்கே உரிய வீரவிளையாட்டு... இது நம் உரிமை... உரிமை வேறு... ஆதரவு வேறு... நம்மளோட சொத்தைக் காப்பாற்றுவது உரிமை... ஆதரவு அல்ல... இது எங்கள் உரிமை... உடமை என்று குரல் கொடுப்போம் நண்பர்களே...

இங்கே நீதி செத்து நாளாச்சு... பெண்ணைக் கொடுத்தோடு மட்டுமில்லாமல் இரும்புக் கம்பியை சொருகியவனுக்கு மைனர் என விடுதலை... குடித்து விட்டு காரை ஓட்டி ரோட்டோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்றவனுக்கு விடுதலை... தீவிரவாதிகளுக்கு உதவினான் என்றாலும் அவனுக்கும் ஜாமீன்.... கோடிக் கோடியாக கொள்ளை அடித்தாலும் பதவியில் இருந்தால் சட்டம் ஒன்று செய்யாது... பத்து ரூபாய் கட்டாத விவசாயிடம் கறாராக பேசும் வங்கிகள் ஆடம்பரமாய் இருப்பவன் எல்லாம் இழந்தேன் என்றால் கோடிகளில் கொடுத்த கடனை தள்ளுபடி செய்யும்... இந்தியாவில் நீதி தேவதை செத்து ரொம்ப நாளாச்சு.... தமிழன் என்றால் எல்லாமே செத்துப் போகும்... நாம் அழியும் வரை அவர்கள் விடமாட்டார்கள்... ஆரம்பிப்போம் நம் ஆட்டத்தை... அப்பத்தான் அவர்கள் அடங்குவார்கள்... அடக்கு முறை எதிர்ப்போம்... அடிபணிய மறுப்போம்.


வீட்டு விலங்கை வன விலங்கென பட்டியலில் சேர்த்து மாட்டுக்கறியும் முயல்கறியும் மான் கறியும் தின்று கொக்கரிக்கும் கூட்டத்துக்கு முன் நம் தென்தமிழக கிராமங்களில் நடக்கும் மாட்டுப் பொங்கலில் நாம் மாட்டுக்குச் செய்யும் மரியாதை என்ன என்பதைக் காட்டுவோம் தமிழர்களே... தமிழன் என்று ஒரு இனம் உலகெங்கும் பரவிக்கிடப்பதைப் போல அவனையும் அவனது பாரம்பரியத்தையும் அழிப்பதற்கென்றே ஒரு இனம் நம்மோடு கள்ளிச் செடியாக பரவிக்கிடக்கிறது. அந்த விஷச் செடிகளை வேரோடு களைந்து நம் இனம்... நம் பாரம்பரியம்... நம் பண்பாடு காப்போம் நண்பர்களே...

பொங்கல் கொண்டாடுவோம்... அதுவும் நம் அன்புக் காளைகளுடன் கொண்டாடுவோம்....

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்... எதையும் நினைத்து வருத்தம் கொள்ளாமல் நம் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய மாடுகளோடு இந்தப் பொங்கலை  சிறப்பாக கொண்டாடுங்கள். இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.


உங்களின் உண்மையான கருத்துக்களைப் பகிருங்கள்... தாயும் தாரமும் போல் மீண்டும் ஒரு ஆரோக்கியமான விவாதம் செய்வோம்.

ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம் என்பதை தென்தமிழகத்து சிவகங்கை மாவட்டத்துக்காரன் என்ற முறையில் உணர்வோடு சொல்லிக்கொள்கிறேன்.

நன்றி.

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்

15 கருத்துகள்:

 1. அடடடடா? சாட்டையடிதான் போங்க!? இத்தனை தான் இத்தனையும் எங்கிருந்ததுப்பா? ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து சொல்லணும் என் நினைப்பவர்களும் ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீருவாங்கப்பா! நான் வரல்லப்பா இந்த பக்கம்! ஜல்லிக்கட்டும் வேண்டாம் கிள்ளித்திட்டும் வேண்டாம். நிஷா எஸ்கேப்!

  பதிலளிநீக்கு
 2. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. பரிவை நண்பரே .. அட்டகாசம் போங்க.

  பிச்சை எடுக்க இது என்ன உணவா? நம் உரிமை ஐயா! தங்களின் ஒவ்வொரு வாதமும் பசுமரத்து ஆணி. இங்கே அமெரிக்காவில் பீட்டாவை சேர்ந்த சனியன்கள் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுப்பதும் ஆதரவில்லா விலங்குகளை கொள்வதிலும் தான் முன்னணி.

  இந்த பீட்டா நிறுவனத்தின் சார்பில் வரும் எந்த ஒரு சனியனாவது ஒரு மாடி வளர்த்து இருக்குமா?

  ஒரு காளை என்பது என்ன ஒரு கம்பீரம். அதை அடக்குவது என்பது அதை விட கம்பீரம். தலையில் இருந்து கால்வரை பாதுகாப்பு கவசம் வைத்து கொண்டு .. கையில் ஒரு மட்டையும் வைத்து கொண்டு எதிரே வரும் பந்தை அடிப்பவனுக்கு தெரியுமா இந்த சுகம். அல்ல... மேக் அப் போட்டு கொண்டு, வாங்கிய காசிற்கு மாரடிக்கும் நடிகைக்கு தான் தெரியுமா இதன் பாம்பரியம்.

  இதை சீயும் விதத்தில் தவறு இருந்தால் அதை சரிபார்த்து கொள்ள சட்ட திட்டம் போட்டு கண்காணிக்க வேண்டும். அதை விட்டு விட்டு "மொட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்த கதை " போல்.

  இந்தியாவிற்கு தேவை பீட்டா அல்ல. மனிதர்களை காக்கும் நேசிக்கும் அமைப்புகள். தெருவில் உள்ள மனவியாதி கொண்ட மனிதர்கள் எத்தனை பேர். விருப்பமிலாமல் விபசார தொழிலில் தள்ளப்பட்டு தினதொரும் செத்து கொண்டு இருக்கும் பெண்கள் தான் எத்தனை பேர்.
  இந்த பீட்டா அமைப்பினரை அங்கே அனுப்புங்கள்.
  எங்கள் காளைகளை பார்த்து கொள்ள எங்களுக்கு தெரியும்.

  கடைசியாக.. தனுஷ். என்னத்த சொல்ல?

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் குமார்.

  தம +1

  பதிலளிநீக்கு
 5. "இது எங்கள் உரிமை" சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு காளை துள்ளி வருவது போல ஆக்ரோஷமான பதிவு.இது நாகரீகம் தெரியாதவர்களின் விளையாட்டு என்று பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். கனவான்களின் கிரிக்கெட் விளையாட்டில் கூட உயரிழப்பு ஏற்பட்டுள்ளது.
  இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. மாட்டுக் கறிக்கு ஆதரவு
  https://mathimaran.wordpress.com/2015/12/20/beef-1183/
  சல்லிகட்டுக்கு எதிர்ப்பு
  https://mathimaran.wordpress.com/2016/01/05/madu-1192/
  சந்தர்ப்பவாத சா”தீய” வன்மம்

  எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் ...

  பதிலளிநீக்கு
 8. இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 9. நல்லதொரு அறச்சீற்றம் வார்த்தைகளின் உச்சக் கோபம்
  ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை உண்மை உண்மை.
  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 10. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.த.ம6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. பொங்கல் வாழ்த்துக்கள் குமார். :) ஜல்லிக்கட்டு சம்மந்தமாக எனக்கு மாற்றுக்கருத்து அல்லது எதிர் கருத்துதான் உண்டு!

  க்ரிக்கட்டை விடுங்க, இங்கே அமெரிக்கன் ஃபுட்பால்ல ஒரு "போர்" மாதிரிதான் விளையாடுவாங்க. ஆனால் "ஹெல்மெட்", "படாத இடத்தில் படக்கூடாதுனு அதற்காக "பாதுக்காப்பு கவசம்" போல கவனமாக அணிந்து கொண்டு ஆடுறாங்க. அதையும் மாடுகளுடன் நாம் காட்டும் வீரத்தையும் என்னால் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை!

  எனிவே, தமிழர்கள்னாலே கருத்து வேறுபாடுகள் சர்ச்சைக்குப் பேர் போனவர்கள்தானே? உங்க கிட்ட உங்க கருத்தை ஏற்றுக்க முடியலைனு சொல்லீட்டுப் போறதுதான் "கம்ஃபர்ட்டபிள்"லா இருக்கு. :)

  பதிலளிநீக்கு
 13. செம பாய்ச்சல்! குமார் உங்கள் பாய்ச்சலே ஜல்லிக்கட்டாகிவிட்டது! அடக்கவில்லை நாங்கள்..பாயட்டும் என்று விட்டுவிட்டோம்...

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...