மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 9 ஜனவரி, 2016மனசு பேசுகிறது : தாயும் தாரமும்


ரு மனிதனுக்கு தாயும் தாரமும் நன்றாக அமைந்துவிட்டால் அவனால் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும். தாய் சரியில்லாத பிள்ளைகள் பலரின் வாழ்க்கை சரியான பாதையில் பயணிப்பதில்லை. அதேபோல் தாரம் சரிவர அமையாத பலரின் வாழ்க்கையும் நன்றாக அமைவதில்லை. சரி தலைப்பை தாயா...? தாரமா..? அப்படின்னு வச்சிருக்கலாமேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா பாருங்க... அப்படிக் கேள்விக்குறியோட தலைப்பு வச்சா இது பட்டிமன்றத் தலைப்பு ஆகிவிடும். சாலமன் பாப்பையா அவர்களைக் கூப்பிட்டால் தாய்தான் சிறந்தவள்ங்கிறேன்... அதுக்காக தாரத்தை விட்டுடுடமுடியுமாங்கிறேன் அப்படின்னு பேச ஆரம்பித்து விளக்கமாய் விளக்கி ராசாவை தாய்க்கு பேச வைத்தால் பாரதி பாஸ்கரை தாரத்துக்கு பேச வைத்து, நம்மை சிரிக்க வைத்து ரெண்டுந்தான் வேணுங்கிறேன்னு முடிப்பார். சரி இவரு வேண்டாம் சிரிக்க சிரிக்க பாட்டோடு பேசுற லியோனி அவர்களைக் கூப்பிட்டா 'அம்மான்னா சும்மா இல்லேடா'ன்னு ஆரம்பிச்சி பாட்டாலே விளக்கிச் சொல்லித் தாரம்தான் சிறந்ததுங்கிற அணிக்காக பேசுற அவர் மனைவியைப் பார்த்ததும் திருமணத்துக்குப் பிறகுதான் மனிதனுக்கு பொறுப்பு வருது... வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறான்... அப்படின்னு எல்லாம் சொல்லி இப்ப வந்த தங்கமகன்ல இருந்து 'என்ன சொல்ல ஏது சொல்ல'ன்னு பாடி தாரமேன்னு சொல்லிடுவாரு. அதனால பட்டிமன்றம் வைக்காமல் தாயும் தாரமும்ன்னு நாமே பேசலாம்.

இந்த தலைப்பு வச்சு எழுதக் காரணம் ஒரு சின்ன விவாதமே. வியாழன் அன்று அலுவலகத்தில் பேசிய போது இது குறித்தும் பேசியதால் தோன்றியதே இந்தத் தலைப்பு. எங்க எகிப்துக்காரனுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. மனைவியின் பெற்றோர் இங்குதான் இருக்கிறார்கள். அதனால் அவனது மனைவியும் இங்கு இருக்கிறார். எங்களுக்கு எட்டு மணிக்கு அலுவலகம், ஆனால் அவன் வருவது பத்து மணிக்குத்தான்... காலையில் வரும்போது அத்தி பூத்தாற்போல் வீட்டிலிருந்து காலை டிபனோ அல்லது மதிய உணவோ எடுத்து வருவான். பெரும்பாலும் வந்ததும் ஆர்டர் பண்ணித்தான் சாப்பிடுவான். அன்றும் பத்து மணிக்கு மேல்தான் வந்தான். வீட்டிலிருந்து எதுவும் கொண்டு வரவில்லை... ஆர்டரும் சொல்லவில்லை, சரி சாப்பிட்டு வந்திருப்பான்னு நினைச்சோம். இன்னைக்கு வீட்லயே சாப்பிட்டு வந்தாச்சு போலன்னு நாந்தான் மெதுவாக் கேட்டேன். உடனே அவன் இல்லை இனிதான் சாப்பிடணும் என்றான். எதுவும் கொண்டு வரவில்லையா என்றதும் இல்லை... என் மனைவி விருப்பப்பட்டால்தான் செய்வாள். தினமும் செய்து தரமாட்டாள் என்றான். என்னடா இது எட்டு மணிக்கு வந்தாலும் பரவாயில்லை பத்து மணிக்கு வர்றே... இங்கே நீ ஆர்டர் பண்றது பதினாறு திர்ஹாம் வருது. இது தேவையில்லாத செலவு தானே என்றதும் சிரித்து விட்டுப் பேச ஆரம்பித்தான்.

எப்பவுமே அம்மாதான் உசத்தி தெரியுமா..? அம்மாவுக்குத்தான் நம்மளைப் பற்றித் தெரியும்.. எங்கம்மா நாங்க பள்ளிக்கூடம் போகும் போது சாப்பாடெல்லாம் தயார் பண்ணி வச்சிட்டு எங்களை வந்து எழுப்பி குளித்து சாப்பிட்டுப் போகச் சொல்லும். இப்ப என் மனைவிக்கிட்ட அதை எதிர்பார்க்க முடியாது.  காலையில் கேட்டால் கொஞ்சம் தூங்க விடுங்களேன் என்பாள். அதனால் நான் ஒண்ணும் கேட்பதில்லை. இரவில் கூட வெளியில் போய்விட்டு எங்காவது சாப்பிட்டு வர வேண்டும் என்றான். என்ன உலகமடா இது... நம்மளைப் போல நாலுவகை செய்தாலும் பரவாயில்லை. ஒரு பன்னை ரெண்டாக் கீறிக்கிட்டு உள்ளே இலை, தழைகளை வைத்து வெண்ணெய், அரைத்த கடலை எல்லாம் போட்டு விட்டால் வேலை முடிந்தது. இல்லேன்னா ரெண்டு பிரட்டை எடுத்து டோஸ்ட் பண்ணிட்டு முட்டையை புல்பாயில் போட்டு அதுக்குள்ள வச்சிக் கொடுத்தா வேலை முடிந்தது இதைச் செய்ய அந்தப் பெண்ணால் முடியவில்லையாம் என்று நினைத்துச் சிரித்தபோது 'மனைவி எப்பவுமே தொல்லைதான்' என்று அவனும் சிரித்தான். சிறிது நேரத்தில் அவனுடனான எங்கள் உரையாடலை நிறுத்திக் கொண்டோம்.

அதன் பின்னர் நானும் மலையாளியும் இது குறித்துப் பேசினோம். அப்ப அவன் சொன்னான் அம்மாதான் பிள்ளைக்கு என்ன தேவை என்பதை அறிவாள். இது குறித்து மலையாளத்தில் ஒரு கதை சொல்வார்கள் என்று சொல்ல ஆரம்பித்தான். ஒருத்தன் அரபு நாட்டில் இருந்து விடுமுறையில் ஊருக்குப் போவதற்கு முன்னர் வீட்டிற்கு அழைத்து மனைவி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லாரிடமும் பேசி என்ன வேண்டும் என்று கேட்க, அவர்கள் எல்லாம் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்தார்களாம். எல்லாரிடமும் பேசியதும் அம்மாக்கிட்ட கொடுங்கன்னு சொல்லி இந்த மாதிரி இத்தனாம் தேதி வர்றேம்மா... திருவனந்தபுரம் ஏர்போர்ட்தான்.... இத்தனை மணிக்கு இறங்கும் என்றெல்லாம் சொல்லி உனக்கு என்னம்மா வேணும் என்றானாம். எனக்கு எதுக்குப்பா... அதெல்லாம் வேண்டாம்... நீ இறங்குனதும் சாப்பாட்டுக்கு இங்கதானே வருவே... உனக்குப் பிடிச்ச கறி சமைச்சி வைக்கிறேன் என்றாராம். அம்மாவுக்கு மட்டுமே மகன் மீது பாசம் மற்றவர்களுக்கு எல்லாம் கொண்டு வரும் பொருள் மீதே பாசம் என்று சொல்லி, அம்மாவுக்கு என்னோட மார்க் 100க்கு 100 என்றான்.

நான் நூற்றுக்கு நூறு மார்க்கை ஏற்கவில்லை... உடனே அவன் என்ன நீ இப்படிப் பேசுறே என்றான். இங்கபாரு அம்மாவுக்கு மகன் மீது அதிக பாசம்... பார்த்துப் பார்த்துச் செய்வாள் என்பதெல்லாம் நான் ஏத்துக் கொள்கிறேன். ஆனாலும் மகனுக்கு திருமணம் ஆனதும் எங்கே நம் பிள்ளையை பிரித்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அதன் பிறகான அம்மாவின் பாசத்தில் மருமகள் மீதான கோபமும் ஏறி விடுகிறது. இதனால் சதா சண்டைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. மருமகளும் மாமியாரும் கீரியும் பாம்புமாக மாறி அவனை நிம்மதி இழக்கச் செய்து விடுவார்கள் என்றேன். இல்லை இல்லை அம்மாவுக்கு அப்படி மனசு வராது... வர்ற பெண்தான் பிரச்சினைக்கு காரணமாவாள்... அம்மாக்கள் எப்போதும் அம்மாக்களே... அந்தப் பாசத்துல வேஷம் இருக்காது... நேசம் மட்டுமே இருக்கும் என்றான்.

நானும் அம்மாவின் பாசத்தில் நேசம் மட்டுமே இருக்கும் என்பதை ஒத்துக் கொண்டேன். ஆனால் 100 மார்க்கெல்லாம் அதிகம் 50-ல் இருந்து 75 சதவிகிதமே அம்மாவின் பாசத்துக்கு கொடுக்கமுடியும். 25 சதவிகித அம்மாக்கள் மகனின் திருமணத்திற்குப் பிறகு சுத்தமாக மாறிவிடுகிறார்கள். மகன் நல்லதே சொன்னாலும் செய்தாலும் என்னடா அவ சொல்லிக் கொடுத்துத்தானே நீ பேசுறே என்பார்கள். பக்கத்து வீட்டு மனிதர்களிடம் 'இப்ப இந்தப்பய சுத்தமா மாறிட்டான்... என்னைப் பார்க்கிறதே இல்லை... எல்லாத்துக்கும் காரணம் அந்தச் சிறுக்கிதான்...' என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எனவே அவர்களின் பாசத்துக்குள் கொஞ்சம் மாற்றம் வர ஆரம்பித்து விடுகிறது என்றேன். அவன் சிரித்தான்... பின்னர் ஆமோதித்தான்.

நான் சொன்னேன்... நான் படிக்கும் போது எங்கம்மா எனக்கு அதிகாலையில் பேருந்து என்றால் மூன்று மணிக்கே எழுந்து சமையல் பண்ணி டிபன் பாக்ஸில் எடுத்து வைத்து என்னை எழுப்பி குளித்துவிட்டு வந்ததும் அந்த நேரத்தில் சாப்பிடச் சொல்லி அனுப்பி வைப்பார். என் திருமணத்திற்கு முன்பு வரை நானே எங்கம்மாவுடன் இருந்தவன் என்பதால் எனக்கு எது புடிக்கும் எது புடிக்காது எனப் பார்த்துப் பார்த்துச் சமைப்பார். திருமணத்திற்குப் பின் என் மனைவி, என் அம்மா போல்தான் அதிகாலையில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு முன்னரே எழுந்து டிபன் செய்து, எனக்கான எல்லாம் தயார் பண்ணி, சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார். அதனால் ஒருவனுக்கு அம்மாவும் தாரமும் ஒரே அலைவரிசையில் அமைந்து விட்டால் அவனுக்கு எங்கம்மா உசத்தி என மனைவியிடமும் என் மனைவி என்னை எப்படிப் பாக்குறா தெரியுமா என அம்மாவிடம் சொல்லத் தேவையில்லை என்றேன்.

என் மனைவி இங்கு வந்திருந்த ஒரு மாதமும் எனக்கு காலையில் டிபன் செய்து கொடுத்து மதியத்துக்கு சாப்பாடு, குழம்பு, கூட்டோ அல்லது பொரியலோ செய்து கொடுத்துத்தான் அனுப்பினார். இவனுக்குப் பார்... அந்தப் பெண்ணால் ஒரு பிரட் எடுத்து செய்து கொடுக்க முடியலை. மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்தான்... அது எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை என்றேன். மலையாளியோ மறுபடியும் என்ன இருந்தாலும் அம்மாதான் உசத்தி என்றான். பாசத்தில் மனைவியின் பாசத்தைவிட அம்மாவின் பாசம் கொஞ்சம் உசத்தியாய் இருக்கலாம். அம்மாவுக்கு குழந்தைகளின் மீது கூடுதல் பாசம் வருவது இயற்கை.... ஆனால் எங்கிருந்தோ நம்மை நம்பி வந்து நமக்காகவே வாழும் ஜீவன் என்று பார்த்தால் அம்மாவைவிட மனைவியின் பாசமே உசத்தி என்றேன்.  அம்மா நம்மை பெத்தெடுப்பவள் என்றால் வரும் மனைவியோ நம்மை தத்தெடுப்பவள்.. எனவே தி.மு அம்மா என்றால் தி.பி மனைவி, மனைவி வந்த பின்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழப்பழகுகிறான் என்றேன். தி.மு, தி.பி என்று சொன்னதை கேட்டுச் சிரித்தான்... ஆனால் ஏற்றுக் கொண்டானா என்று தெரியவில்லை.

பின்னர் இதைப் பற்றி மற்றொரு நண்பருடன் பேசும்போது என் மனைவி என்னைப் பற்றி சிந்திப்பதே இல்லை... எங்கம்மாதான் இப்பவும் வாஞ்சையாக என்னை உச்சிமோர்ந்து எப்படியிருக்கேன்னு கேட்பார் என்று சிலாகித்தார்... நல்ல மனைவி வாய்க்கப் பெற்றவனுக்கு இரட்டை அன்னை என்று நினைத்துக் கொண்டேன். எனக்கும் இரட்டை அன்னை அல்லவா... என்னையே சிந்திக்கும் மனைவி கிடைத்திருக்கும் போது என்ன கவலை சொல்லுங்க... சரி அது இருக்கட்டும்... ஆனால் அதன் பிறகு சொன்னது உண்மைதான். அதை என்னாலும் மறுக்க முடியவில்லை... நாம் யாருடன் பேசினாலும் ஹலோ என்றதும் சொல்லுங்க என்றோ, என்ன பண்ணுறீங்க என்றோதான் ஆரம்பிப்பார்கள்... நாமும் பெரும்பாலும் அப்படியேதான் ஆரம்பிப்போம். ஆனால் அம்மாவோ நம் குரல் கேட்டாலே 'என்னப்பா நல்லாயிருக்கியா...? சாப்பிட்டியா...?' என்று கேட்ட பின்னர்தான் பேச ஆரம்பிப்பார்கள் என்றார். ஆம்... இது உலகெங்கும் ஒன்றுதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. தாய்ப் பாசம் என்பது அளவிட முடியாதது... ஆனாலு சில நேரங்களில் சில மனிதர்கள் விதையும் நஞ்சில் இந்தப் பாசம் சற்றே தள்ளாடும் என்பதாலேயே என்னால் முழு மதிப்பெண் கொடுக்க முடியவில்லை... இதைத் தவறென்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனால் நான் பார்த்த, என் நட்புக்களின் வாழ்வில் கேட்ட சில அம்மாக்கள் இந்த வட்டத்துக்குள் வருகிறார்கள். அவர்களைத் தவிர்க்க முடிவதில்லை. அப்படிப் பார்க்கும் போது எல்லா இடத்திலும் களை இருக்கத்தான் செய்கிறது. என்ன மற்ற இடத்தில் களை அதிகம் இருந்தால் அம்மாக்கள் என்ற விளைச்சலில் களை குறைவாக இருக்கலாம். அதனால்தான் இருபத்தைந்து சதவிகிதம் மாற்று இருக்குன்னு சொல்றேன்.

இந்த விவாதம் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது நேற்று ஒருவருடனும் பேசும்போதும் தொடர, அவர் நாம் அம்மா வயிற்றுக்குள்ளேயே பத்து மாசம் இருப்பதாலும் தொப்புள்கொடி உறவாலும் தான் நம்மைப் பற்றி அம்மாவுக்கு அதிகம் தெரிகிறது என்பதோடு மட்டுமில்லாமல் நமக்கு பசி என்பதை அவரால் மட்டுமே அறிய முடிகிறது என்றார். நம் பசியை அம்மாவால் அறிய முடியும்தான்... ஆனால் அம்மா போலவே ஒருத்தனுக்கு மனைவி அமையும் போது அவளாலும் அவனது பசியை மட்டுமில்லாமல் மனசையும் அறியமுடியும் அல்லவா? எத்தனையோ பேர் சாதிக்க மனைவிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள். எனவே தாயும் தாரமும் 50-50 என அமைந்தால் ஒரு மனிதன் 100 சதவிகிதம் சந்தோஷமாகவும் நினைத்த இடத்தை அடைந்து வாழ்வில் பூரண சுகத்துடன் ஜொலிக்க முடியும். அதைவிட மாமியாரும் மருமகளும் புரிந்து கொண்டு அன்பாய் இருந்தார்கள் என்றால் அவனுக்கு வாழ்வில் எல்லாம் கிடைத்த சந்தோஷம் கிடைக்கும்.

எனவே தாயா... தாரமா... என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தாமல் அம்மாவும் மனைவியும் நமது வாழ்வின் ஒளியேற்றும் ஜீவன்கள்... நமக்காகவே வாழ்க்கையை தொலைத்து வாழும் ஜீவன்கள்... உள்ளமும் உடலும் நம்மோடு எப்பவும் இணைந்தே இருக்கும் உயிர்கள் என்பதை மனதில் கொள்வோம். தாயும் தாரமுமே நம்மின் வாழ்க்கையை நலமாகவும் வளமாகவும் நகர்த்தக் கூடிய காரணிகள்... இவர்கள் சரியில்லை என்றால் நம் வாழ்க்கை தறிகெட்டு பயணித்து விபத்தில்தான் முடியும்.

என்ன உறவுகளே... இந்தக் கருத்து சரியா... தவறா... அம்மான்னா அவங்களுக்கு மார்க்கெல்லாம் கொடுக்க முடியாது... அவங்களை தெய்வமாய்த்தான் வைத்துப் பார்க்க முடியும் என்கிறீர்களா...? அல்லது இந்த மார்க்கில் உடன்படுகிறீர்களா..? இதையெல்லாம் விடுத்து உனது பார்வையில் கோளாறு இருக்கிறது என்கிறீர்களா...? எதுவாக இருந்தாலும் கருத்தில் சொல்லுங்கள்.... கருத்தின் மூலமாக இதை இன்னும் தொடர்வோம்.

-'பரிவை' சே.குமார்.

22 கருத்துகள்:

 1. தாய்ப் பாசம் என்பது அளவிட முடியாதது தான்..

  சிந்தனைக்குரிய விஷயங்களுடன் இனிய பதிவு...

  இரண்டு நாட்களாக இணையம் முழுதாகவே ஒத்துழைக்கவில்லை..

  எங்கள் வர்ஷிதா பிறந்த நாளைக் குறித்து எழுதியமைக்கு மனமார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 2. நல்ல அலசல். மனைவி அமைவது மட்டுமில்ல எல்லா உறவுகளும் அமைவது இறைவன் கொடுக்கும் வரம்தான். ஆனா, தாரத்துக்கும், தாயுக்கும் இருக்கும் உறவு சிறப்பா அமைவது அந்த பிள்ளை-கணவனிடம்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. நீளமான பதிவு.

  என்னைப் பொறுத்தவரை 50-50. எல்லாவற்றுக்கும் சாத்தியம் உண்டு.

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு அலசல் நான் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் நண்பரே எஜிப்த்காரனின் மனைவிமீது எனக்கு தவறாக தோன்றவில்லை காரணம் அவர்களின் வளர்ப்பு இப்படித்தானே... அவள் தமிழச்சி இல்லையே....
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 5. //அம்மாவும் மனைவியும் நமது வாழ்வின் ஒளியேற்றும் ஜீவன்கள்... நமக்காகவே வாழ்க்கையை தொலைத்து வாழும் ஜீவன்கள்... உள்ளமும் உடலும் நம்மோடு எப்பவும் இணைந்தே இருக்கும் உயிர்கள் என்பதை மனதில் கொள்வோம். தாயும் தாரமுமே நம்மின் வாழ்க்கையை நலமாகவும் வளமாகவும் நகர்த்தக் கூடிய காரணிகள்... இவர்கள் சரியில்லை என்றால் நம் வாழ்க்கை தறிகெட்டு பயணித்து விபத்தில்தான் முடியும்.// மிக அருமையாக சொன்னீர்கள்! இருபுறமும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. அனுசரித்து போவதில்தான் அமைதியான வாழ்க்கை அமைகிறது. சிறப்பான அலசல்!

  பதிலளிநீக்கு
 6. சரியான அலசல்....மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நு சும்மாவா சொன்னாங்க...

  சகோ,கொலையாளி யார் இறுதி பாகத்தை எழுதிட்டீங்களா,முடித்திருந்தால் லிங்க் கொடுங்களேன்,நான் படிக்கவில்லை...

  பதிலளிநீக்கு
 7. எதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்பார்கள். இவ்வாறு அமையவும் கொடுத்திருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு


 8. தாயா தாரமா என்ற பேச்சே வரக்கூடாது என நான் சொல்வேன். யாரும் யாருக்கும் உசத்தியும் இல்லை, யாரும் யாருக்கும் எந்த உறவையும் விட்டுக்கொடுக்க வேண்டியதும் இல்லை.

  பொதுவாக பெண்கள் மனசு பூ மாதிரி. குழந்தையாயிருக்கும் போது அப்பா, அண்ணா, தம்பி எனும் உறவுக்குள் தன்னை அடக்கி, தனக்குள் அவர்களையும் அடக்கி ஆளும் வரம் பெற்றவளாயிருக்கின்றாள்.

  பெண் இல்லாத வீடு பாழடைந்த கோயிலுக்கு சமமென்பர். தகப்பன், சகோதரன் எனும் பாசமான பாதுகாப்பு வட்டத்திலிருந்து திருமணம் எனும் பெயரில் வெளி வரும் பெண்.... திருமணத்தின் பின் நம் சமுதாய சட்டதிட்டங்கள் கடமைகள் என பிறப்பிலிருந்தே வளர்க்கப்படும் விதத்தால் கணவனுக்குள் அங்கமாகின்றாள்.

  ஆதிதாய் தகப்பன் உருவாக்கத்தின் படி ஆணின் பாதி தான் மனைவி எனும் பெயரில் நிச்சயிக்கப்பட்டு ஒரு மனிதன் வாழ்க்கை முழுமையாக்கப்படுகின்றது

  ஆனாலும் அதே பெண் தனக்கென ஒரு குழந்தை பிறந்த பின் பத்து மாதம் தன் கருவில் தாங்கி பசி பட்டினி உணர்ந்து வலியோடு பெற்றெடுக்கும் பிள்ளைமேல் கொள்ளும் பாசத்தினை எந்த உறவோடும் ஒப்பிட முடியாது,.

  பெற்ற மனம் பித்தாகவும், பிள்ளை மனம் கல்லாகவும் இருப்பதாக சொல்லும் இந்த சமுகம் பெற்ற மனம் பல நேரம் சுய நலவாதியாய் கல்லைவிட இறுகிய மலையாய் இருப்பதை கண்டு கொள்வதில்லை எனினும் தாயின் பாசத்துக்கு முன் எவர் பாசமும் ஈடாகாது!

  மனைவி என்பவளுக்கு தன் கணவனுக்கு காலையில் எழும்பி காப்பி போட்டு சாப்பாடு சமைத்து துணி துவைத்து என செய்ய வேண்டியது அவள் கடமை. அதிலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் இது கட்டாயம். அவளுக்காகவும் சேர்த்து வெளியில் உழைக்கும் கணவனுக்கு செய்ய வேண்டியது தான். ஆனால் வேலைக்கு சென்று குடும்ப பொறுப்புக்களை இருவரும் தாங்கும் போது காலையில் வேலைக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை காப்பி போட்டு தரவில்லை என்பதை பெரிதாக எடுக்க முடியாது. ஏனெனில் முற்காலம் போல் வீட்டுக்குள் இருக்காமல் அவளும் வேலைக்கு போவதால் இங்கே கடமைகள் இருவருக்கும் பொதுவாகின்றது.

  இதுவே தாய் என வரும் போது தாய் வேலைக்கு போனாலும் வீட்டிலிருந்தாலும் பிள்ளைக்கு சாப்பாடு முதல் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டியது அவள் பாசத்தில் மட்டுமே!

  பத்து மாதம் சுமந்து பாலூட்டி வலிதாங்கி இருபது, இருபத்தைந்து வயது வரை வளர்த்து விட்டு திருமணமான ஒரே நாளில் மனைவிக்கு மட்டும் தான் அவன் உரியவன் தாய் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என சொல்வதெல்லாம் ரெம்ப டூமச்.

  தன் மகன் வாழ்க்கை நலமாயிருக்க நல்ல தாய் ஆறுதலாயிருப்பாளே தவிர அரக்கியாயிருக்க மாட்டாள். ஆனாலும் பல விதி மீறல்கள் உண்டு.
  பாகுபாடு பார்க்கும் தாய்மாரும் உண்டு. ஆனாலும் மனைவி தான் அம்மாவை விடவும் உசத்தி எனும் உங்கள் கருத்தினை நான் ஏற்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
 9. எந்த வேலைக்கும் செல்லாமல் வருமானம் இன்றி நோயில் படித்திருந்தாலும் தாய் அன்பு தன் பிள்ளை சாப்பிட்டானா என தான் யோசிக்கும். மனைவி எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டாள். மனைவி எனும் பெண் தாயாகும் போது அங்கே அவள் மகனுக்கு தான் முதலிடம் கொடுக்கின்றாள் எனும் உண்மை புரிந்தால் இந்த மாதிரி விவாதங்களுக்கே இடம் இராது.

  ஒரு விடயம் யோசித்து பார்த்திருக்கின்றீர்களா? பெண்கள் திருமணமாகும் முன் நம் பிறந்த வீட்டாருடன் எப்படி இருப்பார்களோ அதே உறவும் பந்தமும் திருமணத்துக்கு பின்னும்அவளால்தொடரப்படுகின்றது.
  ஆனால் ஆணுக்கோ தி.மு- தி. பின் என இரு நிலைகள். ஏன் அப்படி?

  நான் என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை என்னவெனில் இந்த விடயத்தில் ஆண்கள் தான் தவறிழைக்கின்றார்கள். திருமணமாகும் வரை அக்கா, அம்மா தங்கை என உருகிட்டு அவர்களை விட்டால் யாருமில்லை அவர்களுக்கு தான் தன் உடல் பொருள் ஆவியெல்லாம் என ஓவர் ஆக்‌ஷன் எடுப்பார்கள்.

  திருமணமானபின் ஏதோ காணாததை கண்டு காய்ந்த மாடு வைக்கோல் போரை கண்டால் விழுவது போல் ஒரே நாளில் மாறுவார்கள். ஏன் அப்படி நடக்க வேண்டும். பெண் அப்படி மாறுவதும் இல்லை தன் தாய் சகோதரர்களை குறித்து குற்றம்குறை பேசி ட அனுமதிப்பதும் இல்லை விட்டுக்கொடுப்பதும் இல்லை. ஆனால் ஆண்கள் அப்படி அல்ல! ஒரே இரவில் என் அம்மா அப்படி.. என் தம்பி இப்படி என சொல்லி ... அம்மாவை பத்தி மனைவி சொல்லும் குறைகளை பெரிதாகி.... அம்மாவை செல்லாக்காசாக்கி விடுகின்றார்கள்.

  இதிலும் பெரும்பாலான ஆண்கள் சொல்லும் ஒரு வார்த்தை.. அம்மா நீ சும்மா பேசாமல் இரு.. உனக்கு ஒன்றுமே தெரியாது..... ஆமாம் ஐம்பது வயது அம்மாவுக்கு ஒன்னும் தெரியாமல் தான் அவனைபெத்து வளர்த்து ஆளாக்கி விட்டார்.

  நேற்று வந்த இருபது வயது மனைவிக்கு எல்லாம் தெரியும். அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது. அவள் அடி முட்டாள். அட போங்கப்பா... நீங்களும் உங்க காரணங்களும்.

  இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்... மனைவி என்றால் ஏதோ அடிமை போல் அம்மாவை மட்டும் தூக்கி தலையில் வைத்து ஆடுவது. இது நிரம்பவே திரி, பேர் மச்! ஏன்பா உங்களுக்கு அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் நடு நிலையில் முடிவெடுத்து வாழவே தெரியாதா?

  என்னை பொறுத்த வரை ஒரு ஆணுக்கு அம்மா அம்மா தான். மனைவி மனைவி தான். இருவரில் எவர் உசத்தி எனும் பேச்சுக்கே இடம் இல்லை.
  இரு கண்ணில் ஒரு கண் மட்டும் போதுமா என எதையும் உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 10. இந்த மாதிரி அம்மா,மனைவி என வரும் போது எவருக்கு எந்த இடம் என முடிவெடுப்பதை பலகலை சென்று பட்டம் படிக்காத பல ஆண்களிடம் இருக்கும் நியாயத்தன்மை படித்து பட்டம் பெற்று பதவியில் இருப்போரிடம் இருப்பதில்லை. படிப்பு அவர்களுக்குள் தெளிவான சிந்தனையை குடும்ப உறவுகள் விடயத்தில் தருவதில்லை. குழப்பவாதிகளாய் மாமியார் மருமகள் பிரச்சணைக்கு அச்சாணியாய் இருப்பார்கள்.

  நியாயமும் நீதியும் அங்கே மரத்து போகும். படிப்பு கௌரவத்தை தான் கற்று தரும் போலும்.

  பதிலளிநீக்கு
 11. அய்யா ஜம்புலிங்கம் அவர்களின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். உறவுமுறை மட்டுமல்ல பணம் சம்பாதிக்கக் கூட கொடுத்து வைத்திருந்தால்தான் சம்பாதிக்க முடியும். எனது நண்பர்கள் பலரை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். நல்ல மனைவி மட்டுமல்ல, நல்ல தாய் அமைவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நல்ல பதிவு.
  த ம 4

  பதிலளிநீக்கு
 12. அம்மாவோ, மனைவியோ யாராக இருந்தாலும் அவர்களின் இயல்பான குணம், மற்றும் வளரும் சூழ்நிலையே நமக்கு சாப்பாடு உண்டா, இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. இருவருமே சமம் தான்..... என்னைப் பொறுத்த வரை.... அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்வில்பிரச்சனை ஏது.

  பதிலளிநீக்கு
 14. சரியில்லை என்றால் சரிசெய்து கொள்வது நல்லது...
  நம்மையோ அவர்களையோ
  தம +

  பதிலளிநீக்கு
 15. ஒரு பெண், சகோதரி, அண்ணி, தாய், நாத்தனார், மனைவி, மருமகள் இத்தனை ஸ்தானங்கள் உறவுகள். இதில் இன்றைய தாய் மனவியாகவும் மருமகளாகவும் இன்றைய மனைவி நாளைய தாய் மாமியாராகவும் தானே. இதில் எப்படித் தாய், மனைவி என்று...பிரித்துப் பார்க்க முடியும்? இருவருமே சமம்...


  பதிலளிநீக்கு
 16. நேற்று
  தாரமும் குருவும்
  தலை விதிப் பயன்
  இன்று
  தாயும் தாரமும்
  அன்பால் விளைந்த பயன்
  உறவுகளை நாம் தான்
  அன்போடு பேண வேண்டும்!

  பதிலளிநீக்கு
 17. தரமான பதிவு!மிகத் தெளிவான அலசல்!

  பதிலளிநீக்கு
 18. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...