மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 23 ஜனவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-1)

"என்ன வேலாயுதம்... பொங்கல் முடிஞ்சிருச்சு இன்னும் மடக்கரைச் செய்யை அறுக்காம போட்டு வச்சிருக்கே..." என்று கேட்டபடி வந்து திண்டில் அமர்ந்த பஞ்சநாதன், "கொஞ்சம் போயில கொடேன்... வாங்கணுமின்னு நினைச்சித்தான் டவுனுக்குப் போனே... சுத்தமா மறந்துட்டேன்... இப்பத்தான் ராமசாமி மவனுக்கிட்ட காசு கொடுத்து விட்டிருக்கேன்..." என புகையிலையை வாங்கி கையில் வைத்து தேய்த்து வாயில் லாவகமாக அதக்கிக் கொண்டார்.

"தாள் கொஞ்சம் பச்சையா இருக்கு... அது போக வயலும் கொஞ்சம் ஈரமாத்தான் இருக்கு அதான் காயட்டும்ன்னு போட்டு வச்சிருக்கேன். எங்க அண்ணமவன் ரெத்தினமும் நானுந்தானே  களம் ரெடி பண்ணினோம். அவன் மேட்டுச் செய்யி அறுத்திருக்கான்... வேலை முடிச்சு களம் நமக்கு கிடைக்க இன்னும் ரெண்டு நாளாகும். இப்ப அறுத்து அங்க கொண்டு போயிப் போட்டா அவனுக்கும் சிரமம் நமக்கும் சிரமம்... அதான் காயட்டும்ன்னு விட்டு வச்சிருக்கேன்."

"அது செரிதான்... கோயில் மாடு பாக்கணுமேப்பா... அதான் கேட்டேன்..."

"மடக்கரை பக்கந்தானே.... இங்க அவ்வளவு சீக்கிரம் மாடு வராது... இன்னும் நீர்ப்பிடிச் செய்யி பக்கமெல்லாம் அறுக்காம போட்டு வச்சிருக்காங்க... ஆளுகளும் காவலுக்கு போகுதுல்ல... நானும் வயல்லதானே படுக்கிறேன்... இன்னும் ரெண்டு நாள்தானே..."

"ம்... ஆமா சவுந்தரம் எங்கே...? நீ மட்டும் இருக்கே...?"

"மடக்கரை செய்யி அறுக்கும் போது வீட்லயும் ஆளு வேணுமில்ல... அதான்... செல்வி வீட்டுக்கு ஒரு எட்டு பொயிட்டு அதைக் கூட்டிக்கிட்டு வாறேன்னு சொன்னா...  சரி பொயிட்டு வான்னு சொன்னேன்... இப்ப வந்துருங்க... என்ன அவ இருந்தா இருண்ணே காபி போடுறேன்னு சொல்லுவா... நா போயிலதானே கொடுக்க முடியும்..." வேலாயுதம் சிரித்தார்.

"ஏய் அதுக்கு கேக்கலைப்பா... என்னோட சத்தம் கேட்டா வாண்ணேன்னு வந்துருவா... காணாமேன்னு கேட்டேன். ஆமா இந்தப் பொங்கலுக்கும் நீ மூத்தவனைக் கூப்பிடலையா ..?"

"இப்ப எதுக்கு அவன் பேச்சு... இதுக்குத்தான் சவுந்தரம் எங்கேன்னு கேட்டியாக்கும்..?" வேலாயுதம் கோபமாய்க் கேட்டார்.

"இந்தாப்பா... இப்ப எதுக்கு கோபப்படுறே..? எம்புட்டுக் காலந்தான் தள்ளி வைப்பே..? கண்கானாத இடத்துல இருந்தாலும் பரவாயில்லை... திருச்சியிலதானே இருக்கான்... நம்ம பயலுக பூராம் அவனோட பேசுறானுங்க... வயசான காலத்துல பழசை தூக்கி வச்சிக்கிட்டு இருந்து என்ன பண்ணப் போறோம்... சொல்லு..."

"அதுக்காக அப்பனாத்தாவை மதிக்காத  மசுருப்புள்ளையை கூட்டி வச்சி கொஞ்சச் சொல்றியா..?"

"அவனுக்கும் குடும்பம், குழந்தையின்னு ஆச்சு... ஆணொன்னு பொண்ணென்னுன்னு சொன்னானுங்க... ஆமா உனக்குத் தெரியாமயா இருக்கும்... நல்லது கெட்டதுக்கு வாடான்னு சொல்லி அவனையும் சின்னவனையும் சேர்த்து வச்சியன்னா உறவு விட்டுப் போகாம இருக்கும்ல்ல... நாளைக்கி அவனுக ஒருத்தனுக்கு ஒருத்தன் ஆதரவா இருப்பானுங்கதானே..."

'இங்க பாரு... அவனோட முகத்துலே முழிக்கக் கூடாதுன்னு சவுந்தரம் வைராக்கியமா இருக்கா... சின்னவங்கிட்ட சொன்னா எங்களை இந்த வீட்டை விட்டு விரட்டிருவான்... கேடுகெட்ட பய எங்கயோ இருந்துட்டு போகட்டும்... ஆடு பகையாம்... குட்டி உறவாம்... நல்லாயிருக்கே... எதுக்கு இப்ப அவனைப்பத்தி பேசுறே..? இதுக்குத்தான் இங்க வந்தியா..?"

"இப்ப இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் சகஜம்தானேப்பா... ஏன் நம்ம நாகம்மா மகன்... அதான் அந்த ராம்கிருஷ்ணப்பய... புவனான்னு ஒருத்தியை எவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் தூக்கிட்டுப் போயி தாலி கட்டினான்.... இப்ப அவன் ரெண்டு சாதிசனத்துலயும் சேந்து நல்லது கெட்டதுக்கு நிக்கலையா..."

"அதுக்காக நம்ம சாதிக்குன்னு இருக்க மரியாதையைக் கெடுத்துட்டு எவளோ ஒருத்திய இழுத்துக்கிட்டு போனா... அந்த நாயை நடுவீட்டுல கொண்டாந்து உக்கார வச்சி சோறு போடணுமா...? இங்க பாரு... எனக்கு சாதிதான் முக்கியம்...எஞ்சாதிக்கு மதிப்புக் குறையிற மாதிரி எது நடந்தாலும் நான் இப்படித்தான்... கோயில்ல கூட பாரு அம்மனும் அய்யனும் கோபுரத்துக்குள்ள இருக்க... உளி வீரன் வெளியிலதான் நிக்கிறான்... அப்படித்தான்... என் சாதி... என் இனம்... இதுல நான் இப்படித்தான்... எதுக்காகவும் என்னை மாத்திக்க முடியாது..."

"என்னப்பா நீ இப்பவும் சாதி சாதியின்னு பேசுறே.... அதெல்லாம் எப்பவோ மல ஏறிப்போச்சு... இப்ப எல்லாரும் ஒண்ணு மண்ணா ஆயிட்டோம். அன்னைக்கு கும்புடுறேன் ஐயான்னு கக்கத்துல துண்டை வச்சிக்கிட்டு வீட்டு வாசல்ல வந்து நின்ன செபத்தியான் மகன் இன்னைக்கு நம்ம ஏரியா தாசில்தாரு... அவரப் பாக்க போயி இப்ப நாம வணக்கந்தம்பின்னு நிக்கிறோம்... இதுதான் உண்மை... சாதியை வச்சி அரசியல்வாதிங்க பொழப்பு நடத்தலாம்... நம்மள மாதிரி மனுசங்க அதுல விழக்கூடாது... அவன் கட்டுனவ ஒண்ணும் குறைச்சலில்லையே... சரி விடு... இனி சாதி அது இதுன்னு பேசாம நாம வாழப்போற கொஞ்ச நாளைக்குள்ள... நமக்கு அறுவடை தேதி வர்றதுக்குள்ள அவனை வீட்டோட சேர்க்கப்பாரு"

"அட சும்மா இருப்பே... நீ வேற... நாஞ் செத்தாக்கூட அவனும் அந்தச் சிறுக்கியும் இந்த வீட்டு படிவாசல் மிதிக்கக்கூடாது...."

"இதுக்கு மேல உங்கிட்ட பேசி காரியம் இல்லை.... விடு.... ஆமா இந்தத் தடவை அம்மா ஜெயிக்குமா...?"

"ஆமா அவளைச் ஜெயிக்க வச்சி இன்னமும் இலவசத்துப் பின்னால போயி இருக்கிறதை எல்லாம் இழக்க வேண்டியதுதான்..."

"நீ ரொம்ப சூடா இருக்கே... நான் அப்புறமா வர்றேன்..." என்றபடி எழுந்து துண்டை உதறினார்.

***

"டேய் உள்ள வாங்கடா..." என்றான் பார்த்தசாரதி.

"இல்லடா... நாங்க இங்க நிக்கிறோம்... நீ போ..." என மறுத்தான் கண்ணன்.

"அட வாங்கடான்னா..." என்று அவன் அதட்ட, அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

"ஏன்டாம்பி இவாள்ளாம் யாரு...? ஆத்துக்குள்ள தபதபன்னு நுழையுறா...?" என்று மறித்தாள் அன்னபூரணி.

"பாட்டி என்னோட பிரண்ட்ஸ்... நாந்தான் வீட்டுக்கு கூட்டியாந்தேன்..." என்றான் பார்த்தசாரதி.

"என்ன குலம்... என்ன கோத்திரம்ன்னு தெரியாம... கண்டவா எல்லாம் உள்ள நுழைய இது என்ன மடமா... ஆச்சாரமான குடும்பம்டா... ஏய் அம்பிகளா சித்த வெளிய நில்லுங்கடா..."

"டேய் அதான் சொன்னேன்.... நீங்கள்லாம் ஆச்சாரம் அந்தஸ்துன்னு பார்க்கிற இடம்... நாங்க வெளிய நிக்கிறோம்..." என்று கோபமாய்ச் சொன்னான் கண்ணன்.

"என்னடாம்பி உனக்கு இப்படிக் கோபம் வர்றது... எங்களுக்குன்னு சில ஆச்சாரம் அனுஷ்டானம் இருக்கோன்னோ... தெரிஞ்சிக்கோ... ஏய் அவா நின்ன இடத்துல ஜலம் எடுத்து தெளியுங்கோ" அன்னபூரணி படக்கென சொன்னாள்.

(பகுதி 2 : சனிக்கிழமை தொடரும்)

(வாழ்க்கயைப் பேச இருக்கும் இந்த புதிய தொடருக்கு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்)
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தற்போதைய நிகழ்வுகளோடு தொடர் ஆரம்பம்... தொடர்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வலைச்சித்தரின் கருத்தை ஆமோத்திக்கிறேன்நண்பரே
தொடருங்கள்
தம +1

KILLERGEE Devakottai சொன்னது…

தொடக்கம் சிறப்பு அரசியலோடு தொடர்கிறேன்....
தமிழ் மணம் 2

Menaga Sathia சொன்னது…

ஆஹா ,தொடர்கதையா சூப்பர்ர்ர்,எப்பவும் உங்க எழுத்து நடைக்கு நான் அடிமை...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

கதை தொடக்கம் சிறப்பு..வாழ்த்துக்கள் த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துரை செல்வராஜூ சொன்னது…

தைப் பொங்கலுக்குப் பிறகு மீண்டும் ஒரு கதைப் பொங்கல்..

அதிலும், பாட்டி சொல்வது - ஆச்சாரம் அனுஷ்டானம் என்றிருக்க வேண்டும்...அனுக்கிரகம் என்றால் அர்த்தம் வேறு..

வாழ்க நலம்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
அனுஷ்டானம்தான் அனுக்கிரகம் அப்படின்னு வந்தாச்சு எழுதும்போது...
அனுக்கிரகம் என்றால் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கட்டும் என்று சொல்வோமே அதுதானே....

தவறைச் சுட்டியமைக்கு நன்றி.
தங்கள் கருத்துப் பார்த்ததும் திருத்திவிட்டேன்...

என் தவறுகளைச் சுட்டுங்கள்... என்னை நான் சீர்படுத்திக் கொள்கிறேன்...
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
தொடர்ந்து கதை குறித்த கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
தொடர்ந்து கதை குறித்த கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
தொடர்ந்து கதை குறித்த கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தங்கை....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
தங்களைப் போன்றோரின் ஊக்கமே நான்காவது தொடருக்கு அஸ்திவாரம் போட்டிருக்கு என்பதே உண்மை.
தொடர்ந்து கதை குறித்த கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
தொடர்ந்து கதை குறித்த கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தொடக்கம். தொடர்கிறேன்.

நிஷா சொன்னது…

ஆஹா! ஆஹா!
அருமையான ஆரம்பம் குமார்! குறிஞ்சியும் நெருஞ்சியுமாய் மலரப்போகும் அடுத்த காதல் கதை! நம்ம ராம்கியும், புவனாவும் உண்டு எனும் போது கனவுகள் கலையாதே நினைவும் வருகின்றது!

நிகழ் காலத்தில் ஆரம்பித்து கடந்த காலம் செல்லும் முன் ஏற்பாடுகள்அருமைவேலையுதம் ஐயாவும் இருக்கின்றார். அம்மாவின் அரசியலும் உண்டு போலவே! அரசியலும் ஜாதியும் சேர்த்தால் காதல் என்னாகும் என அறியும் திகிலோடு....! கடைசியில் காதலர்களை வாழ வைத்து விடுங்கள் அப்பனே அப்பாவும் பிள்ளையுமாய் பிரிந்தவர்கள் சேர வேண்டும் என இப்பவே நினைக்கஆரம்பித்து விட்டேன்.

அடுத்து எப்போது?

நிஷா சொன்னது…

அருமையான வழிகாட்டல்,தவறுகள் சுட்டிக்காட்டினால் நாம் விடும் பிழைகள திருத்த முடியும்.நன்றி ஐயா.

Unknown சொன்னது…

தொட(ருங்கள்)ருகிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆம் அக்கா...
உண்மைதான்... தவறுகள் சுட்டப்பட வேண்டும்.
தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா..
வாழ்த்துக்கு நன்றி...

ராம்கியும் புவனாவும் எடுத்துக்காட்டாக வந்தார்கள்... கதையில் தொடர வாய்ப்பில்லை...

கதையில் ஒரு பகுதி நிகழ்காலமாகவும் மறுபகுதி கடந்த காலமாகவும் பயணிக்கும்... அப்பா - மகன் கதையில் அப்பாவின் கதை வாழ்க்கை... மகனின் கதையில் காதல்...

அரசியல் எல்லாம் கதையிலா... ஐய்யய்யோ...

காதலர்கள்தான் சேர்ந்துதானே இருக்கிறார்கள்... அப்பாவும் பிள்ளையும்தான் பிரிந்திருக்கிறார்கள்....

சனிக்கிழமைகளில் எழுத எண்ணம்... பார்க்கலாம்.

கருத்துக்கு நன்றி அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

காரசாரமான அருமையான தொடக்கம் ...

எல்லோருமே மனுசங்க தான் இங்க சாதி எங்க எப்போ வந்துச்சுனு புரியல...

தொடருங்கள் குமார்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! நல்ல தொடக்கமாக இருக்கின்றதே! அரசியலும் கலந்து கட்டி வரும் போல!! தொடர்கின்றோம்..

r.v.saravanan சொன்னது…

வழக்கு தமிழில் தொடர்கதை.அதிலும் மனிதனை வேரறுக்கும் சாதியை வைத்து

தொடருங்கள் குமார் வாழ்த்துக்கள்