மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 1 ஜூலை, 2024

சினிமா விமர்சனம் : கோளம் (GOLAM) - மலையாளம்

கோளம்-

அலுவலக வேலை நேரத்தில் கம்பெனி முதலாளியில் ஒருவர்  கழிவறைக்குள் இறக்கிறார். அவரின் இறப்பு இயற்கையானதே என்பதை நம்பும் விதமாக எல்லாமே இருந்தாலும் ஏ.எஸ்.பிக்கு மட்டும் இது ஒரு கொலை எனத் தோன்ற எல்லாரிடமும் விசாரிக்கிறார். விசாரணையின் முடிவில் அவருக்குத் தெரிய வருவது என்ன என்பதுதான் படத்தின் கதை.

தனது அலுவலக வேலையாட்களிடம் ஒரு இணக்கமான உறவை வைத்துக் கொள்ளாத முதலாளி. அலுவலகத்தில் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் வேலையாட்கள் என ஆரம்பத்தில் காட்டப்பட்டாலும் கழிவறைக்குச் செல்லும் முதலாளி அதற்குள் பிணமாகும் போது அவரவர் அவரவர் வேலைகளில் கவனமாய் இருக்கிறார்கள். சிசிடிவியில் எத்தனை முறை பார்த்தாலும் கொலைக்கும் அலுவலர்களுக்கும் எந்த விதத்திலும் இணைப்பு ஏற்படவே இல்லை. இது கொலையே இல்லை சார் எனக் கூட இருக்கும் போலீஸ் சொல்வது போல்தான் நமக்கும் தோன்றுகிறது.


தோண்டத் தோண்ட எதாவது ஒன்று கிடைக்கும் என்பதைப் போல் இது கொலைதான் என அத்தனை அலுவலர்களையும் வீட்டுக்கு விடாமல் விசாரித்துக் கொண்டிருக்கும் ஏ.எஸ்.பி. பிடித்துக் கொண்டு பயணிக்கும் தூண்டிலில் சிக்குவது சிறிய கெண்டையோ கெழுத்தியோ அல்ல... பெரும் திமிங்கலம். அதை வெளியில் சொன்னால் இந்தக் வழக்கை நேர்மையாக நடத்த முடியுமா என்ற நிலையில் அவர் அலுவலர்களை என்ன செய்தார்..? அந்தத் திமிங்கலத்தை நோக்கிப் பயணித்தாரா...? இல்லையா என்பதைப் பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக ரஞ்சித் சஜீவ், இதற்கு முன் இவர் நடித்த படங்களைப் பார்த்ததில்லை. எப்படி நடித்திருப்பார் என்பது கூட தெரியாது என்றாலும் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ளும் போலீஸ் கதாபாத்திரத்துக்கு அவரது முகம், உயரம், உடற்கட்டு சரியாகப் பொருந்திப் போகிறது. நடித்தாரா என்றால் இந்தப் படத்தில் அவரின் கதாபாத்திரத்துக்கு எவ்வளவு தேவையோ அந்தளவு நடித்திருந்தார்.

நாயகிகள் என எவரும் இல்லை என்பதால் அவருக்குப் பாடல்கள் எல்லாம் இல்லை. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களாக வருபவர்கள் எல்லாருமே சிறப்பாக நடித்திருப்பார்கள். 

ஒரு கொலையின் பின்னான நிகழ்வுகளிலும் அதற்கு முன்னான நிகழ்வுகளிலும் கேமராவில் மாயஜாலம் காட்டியிருப்பார்கள். சிசிடிவியில் தெரியும் காட்சிகளுக்குப் பின்னே நமக்குத் தெரியாத காட்சிகள் எங்கே, எப்படி நிகழ்ந்தன என்பது காட்சிப்படுத்தப்படும் போது நமக்குள் ஆச்சர்ய முகம் எழத்தான் செய்கிறது.


இயக்குநர் சம்ஜத்தின் முதல் படமாம்... சிறப்பாகவே இயக்கியிருக்கிறார்.  படத்தின் கதையை இவருடன் இணைந்து பிரவீண் விஸ்வநாத் எழுதியிருக்கிறார்.

வியயின் ஒளிப்பதிவும் மகேஷின் எடிட்டிங்கும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.  ஏபி சால்வின் தாமஸின் இசை ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது.

Fragrant Nature Film Creations  கம்பெனிக்காக Anne Saeev மற்றும் Sajeev P.K தயாரித்திருக்கிறார்கள். இவர்களின் பெயரைப் பார்க்கும் போது நாயகன் இவர்களின் மகனாக இருக்கக் கூடும் போல் தெரிகிறது. மகனுக்கு முந்தைய படைப்புகள் பெரும் வெற்றிப் படங்களாக இல்லாத பட்சத்தில், விஜய்க்காக இயக்குநர் சந்திரசேகர் நடிகைகளின் கவர்ச்சியை மட்டுமே நம்பி எடுத்ததைப் போலில்லாமல், ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் தாங்களே மகனுக்காக தயாரிப்பாளர்கள் ஆகியிருப்பார்களோ என்னவோ..? 

படத்தின் முடிவு இரண்டாம் பாகம் இருக்கும் எனத் தோன்ற வைத்தாலும் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை ஆனாலும் படம் முடியும் போது இனித்தானே மிகப்பெரிய திமிங்கலத்தைத் தேடி பயணிக்கும் ஆரம்பம் இருக்கிறது எனத் தோன்றியது. இரண்டாம் பாகம் வரலாம்.

க்ரைம் த்ரில்லர் படங்கள் மீது விருப்பம் இருந்தால் தாரளமாகப் பார்க்கலாம்.

-பரிவை சே.குமார்.


2 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் எனக்கு க்ரைம் திரில்லர் படங்கள் ரொம்பப் பிடிக்கும் குறிப்பாக இன்வெஸ்டிகேஷன் செய்வது போல கடைசி வரை யார் என்பது தெரியாமல் செல்லும் கதைகள்.

இந்தப் படத்தைக் குறித்துக் கொண்டேன்.

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். பார்க்கத்தூண்டும் விதத்தில் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.