மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 2 ஜனவரி, 2016நோட்டீஸ் முதல் பேனர் கலாச்சாரம் வரை


ர்ல இப்பல்லாம் பேனர் கலாச்சாரம் பட்டிதொட்டியெல்லாம் பரவிக்கிடக்கிறது. கல்யாணம்ன்னாலும் பேனர்... கருமாதியின்னாலும் பேனர்... இந்தக் கலாச்சாரம் வர்றதுக்கு முன்னால நோட்டீஸ் அடிச்சித்தான் ஒட்டிக்கிட்டு இருந்தானுங்க... எல்லாச் சுவரிலும் ஒட்டி வச்சிட்டுப் போயிடுவானுங்க... அதுவும் நோட்டீஸ் ஒட்டாதீர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போட்டிருந்தால் அதன் மீதுதான் ஒட்டுவார்கள். இப்ப நோட்டீஸ் குறைந்து சுவர்கள் எல்லாம் தப்பித்துவிட்டன ஆனால் நடைபாதைகள் எல்லாம் பேனரால் நாறிக்கிடக்கின்றன.

எங்க ஊர் திருவிழாவின் போது நாடகமோ, கரகாட்டமோ வைப்போம்... அதற்காக இளைஞர் மன்றத்தின் சார்பாக நோட்டீஸ் அடித்து, மைதா வாங்கி காய்ச்சி பசை தயாரித்து இரவில் சைக்கிளில் கிளம்பி விடுவோம்... தேவகோட்டை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து கருதாவூரணிப் பக்கமாய்ப் போய், கண்டதேவி ரோட்டில் பயணித்து கண்டதேவி வரைக்கும் போய் மீண்டும் அங்கிருந்து ஒத்தக்கடை (பந்தடி திடல்) வந்து தாழையூர் ரோட்டில் திரும்பி கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில் வரை சென்று வீட்டுக்குத் திரும்பும் போது நடுநிசி ஆகியிருக்கும். ஆனா இப்பல்லாம் எங்க ஊரையும் பேனர் பிடித்துக் கொண்டு விட்டது. திருவிழா குறித்து விளக்கமாய் எழுதி அம்மன் படம் போட்டு பேனர் வைத்து விடுகிறோம்.

இந்த நோட்டீஸ் கதையில இன்னொரு முக்கியமான கதையும் இருக்கு... நாங்க தேவகோட்டையில் கணிப்பொறி மையம் வைத்திருந்தபோது முதலாம் ஆண்டு விழாவுக்காக நோட்டீஸ் அடித்து ஆள் விட்டு ஒட்டலாம் என்று முடிவு செய்தபோது எங்களில் சிலர் நாமளே ஒட்டிக்கலாம் என்று சொல்லிவிட்டதால் இரவு நாலு குழுவாகப் பிரிந்து நோட்டீஸ் ஒட்டச் சென்றோம். ஓரளவு ஒட்டி முடித்தபோது போலீஸ்காரர்களிடம் நாலு டீமும் மாட்டிக் கொண்டோம். அப்போது தேவகோட்டையில் ஒரு கொலை தொடர்பாக இரவு 11 மணிக்கு மேல் கடைகள் இருக்ககூடாது. ஆட்கள் வெளியில் நடமாடினால் கேள்வி கேட்பார்கள். பின்னர் அவர்களிடம் பேச, நோட்டீஸ் எல்லாத்தையும் கொண்டு போய் ஆபீசில் வைத்திருக்கிறோம். அதிகாலையில் வந்து வாங்கி ஒட்டுங்க என்று சொல்லி விட்டார் இன்ஸ்பெக்டர். பேசியும் சரிவரவில்லை... சரியின்னு அவங்ககிட்ட கொடுத்துட்டு வந்துட்டோம். மறுநாள் காலையில 4 மணிக்கு போயி நின்னா 5 மணிக்கு மேலதான் கிடைச்சது. கொஞ்ச இடத்தில் ஒட்டிவிட்டு வந்தோம். அதன் பிறகு எந்த விழா என்றாலும் நோட்டீசை பணம் கொடுத்து ஒட்டச் சொல்லிவிடுவோம்.

'கட் அவுட் நிழலுக்கு கீழே' அப்படின்னு ஒரு கவிதை(?) ஒன்றை இன்றைய அம்மாவின் கட்-அவுட் கலாச்சாரம் பார்த்து வேதனையில் வெம்பி கிறுக்கி வைத்திருந்தேன். அதைப் படித்துப் பார்த்த என் நண்பன் நல்லாயிருக்குடா ஐயாக்கிட்ட காட்டினியா என்றான். இல்லை... இதைப் போயி அவருக்கிட்ட காட்டினா என்ன தம்பி இது கவிதையா...? என்று சிரிப்பார் என்றதும் ஏய் அவர் அப்படியெல்லாம் சொல்லமாட்டார். அதுவும் நீ அவருக்குச் செல்லப்பிள்ளை என்று ஏத்திவிட்டு அவனே ஐயாவிடம் குமார் கவிதை எழுதி வைத்திருக்கிறான் என்று சொல்லிவிட, எங்கே கொடுங்கள் பார்ப்போம் என்று சொல்லி வாங்கி வாசித்தவர் 'ம்... நல்லாயிருக்கு... அரசியல் பக்கம் போகுது எழுத்து' என்றபடி தனது எழுத்து மேசையில் வைத்துவிட்டார்.  அதன் பின் சில நாள் கழித்து என்னை கல்லூரியில் பார்த்து தம்பி உங்க கவிதை தாமரையில் வந்திருக்கு என்றார். அப்போது தாமரையில் பொன்னீலன் அண்ணாச்சி இருந்தார். ஒரு கல்லூரி மாணவன் எழுதிய கவிதை என்று போட்டு ரெண்டு பக்கத்தில் போட்டிருந்தார்கள். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... அதான் என்னோட எழுத்து முதல் முதலில் அச்சுப் பிரதியில் வந்தது. அது குறித்து அண்ணாச்சியும் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்தார். தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு வருவார் என்பதால் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. 

சரி வாங்க நோட்டீஸ் கலாச்சாரத்தை விட்டுட்டு நம்ம கதைக்கு பொயிட்டோம்... இருந்தாலும் எதுக்காக அந்தக் கவிதை குறித்து சொன்னேன்னா அன்னைக்கு கட்-அவுட்டுக்கு காவல் நின்ன காவல்துறை இன்னைக்கு பேனருக்கு காவல் நிற்கிறது. காட்சி ஒன்றுதான்... காட்சியில் இருக்கும் பொருளில் மட்டுமே மாற்றம். அன்று இருந்த நம்ம கோமளவல்லி அம்மையாருக்கு இன்று இன்னும் ஆணவம் கூடிப் போய்விட்டது. அதற்கு மற்றுமொரு காரணம் நானும் ஆம்பளைதான் என்று  மீசை வைத்துக் கொண்டு காலில் விழுந்து கிடக்கும் வெட்கம் கெட்டவர்கள்தான். இவனுகளே நமக்கு அடிமை அப்புறம் என்ன டேஷூக்கு மக்கள் முதல்வராக இருக்கணுங்கிற திமிர் கூடிப்போச்சு. எதை எடுத்தாலும் நான் செய்தேன்... நான் சொன்னேன்... நானே தமிழகம்... நானே கடவுள்... என்ற இறுமாப்பு கூடிப் போச்சு. அதன் செயல்பாடுகள்தான் தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகள்.

மத்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை என்னாச்சு... கடலூரில் 40 கோடிக்கு சாப்பாடு போட்டோம் என்றார்கள்... சென்னையில் 400 கோடி என்பார்கள். எதுவும் செய்யவில்லை... மக்கள் இன்னும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். இவர் செயற்குழுவுக்குப் போக, ஒரே இரவில் மூன்று ரோடுகளைப் போட முடிந்த அரசு அதிகாரிகளால் வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு உதவ முடியவில்லை. ஸ்டிக்கர் ஒட்டவும் அம்மாவின் ஆணைக்கு இணங்க என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கவுமே நேரம் இருந்தது அவர்களுக்கு. இந்த மூன்று சாலையும் புதிதாய்ப் போட ஆன செலவும் நிவாரணத் தொகையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். மீதமிருக்கும் தொகை தேர்தல் நேரத்தில் மறதி நிறைந்த நம் மக்களை வாங்குவதற்காக பத்திரமாக வைக்கப்படும். என்ன அரசியல்... என்ன நிலமையில் நாம் இருக்கோம் என்பதை யோசித்தோமா..?

மதுரை மீனாட்சி அம்மன் தேரில் பவனி செய்வது போல் நம்ம தமிழக அம்மாவின் பவனிக்கு மக்கள் நடக்கும் பாதையில் இடம் விடாது பேனர்கள்... என்னத்தை சாதிக்க இத்தனை பேனர்கள்... இதை எதிர்த்து போராடிய ஆம் ஆத்மி கட்சியினரை அடித்து உதைக்கின்றனர் மக்களின் நண்பன் போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. வழக்கை எடுக்கவும் மறுத்திருக்கிறார்கள். இதைவிட கேவலம் பொதுச் சொத்தை சேதப்படுத்தினார்களாம். யார் சேதப்படுத்தினார்கள் பொதுச் சொத்தை... வாகனங்கள் பயணிக்கும் ரோட்டில் குழி போட்டு அலங்கார வளைவுகள் வைப்பது யார்...? மக்கள் நடக்கும் நடைபாதையில் பேனர்கள் வைத்து நடக்க முடியாமல் செய்வது யார்...?  ஆளும் ஆணவத்துக்காக வைக்கப்பட்ட போஸ்டர் பொதுச் சொத்து என்றால் தர்மபுரியில் எரிக்கப்பட்ட பஸ்...  இறந்த மாணவிகள்... மகாமகக் குளத்தில் இறந்தவர்கள்... இப்படி நிறைய இருக்கே அதெல்லாம் என்ன அம்மா வீட்டுச் சொத்தா...? ஏன் சில நாட்களுக்கு முன் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலில் உடைக்கப்பட்ட வேன்கள் எல்லாம் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா...? பொதுச்சொத்தை சேதப்படுத்தினார்களாம்... கேவலமாக இல்லை. இந்த அடிமைகளின் செய்கைகள் தற்போதைய முதல்வருக்கு புகழ் போதையைத்  தருகிறது போலும் அதனால்தான் இந்த அகங்கார, ஆணவப் போதையில் மூழ்கித் திளைக்கிறார்.

முதலில் பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்... காது குத்து வைத்தால் பேனர்... வயதுக்கு வந்தால் பேனர்... திருமணம்... திருவிழா... அரசியல் கூத்துக்கள்... என எங்கும் பேனர்... ஏன் இறந்தவருக்கும் பேனர் வைக்கிறோம். இதை வைப்பவர்கள் தங்கள் இடத்தில் வைப்பதில்லை... பொது இடத்தில்தான் வைக்கிறார்கள். இதனால் எத்தனை இடையூறுகள்... இன்னல்கள்... இதை ஏன் யாரும் அறிவதில்லை. அரசியல் அல்லக்கைகள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதால் செய்கிறார்கள்... சாமானியர்கள் நாம் குறைத்துக் கொள்ளலாமே. அதுவும் பேனரில் சாதித் தலைவர், சாதிக்கான தெய்வம், சாதிக்கான நடிகர் எனப் போட்டு இன்னும் நம்மை நாமே அறிவிலிகள் ஆக்கிக் கொள்கிறோம்.

நான் உங்களுக்கு கட்டுமரமாக இருப்பேன்னு சொல்லிக்கிட்டு சொத்துச் சேர்த்து வைத்திருக்கிற நம்ம தமிழறிஞர், ஒவ்வொரு முறையும் கடைக்கோடி தொண்டனிடம் தேர்தல் செலவுக்கு பணம் கேட்கிறார். இதென்ன கொடுமை பாருங்கள்... கோடிக்கோடியாக ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்திருக்கும் ஒரு மனிதர், தனது கட்சியில் வாரிசு அரசியலை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவர், தன்னோட தேர்தல் செலவுக்கு நிதி கேட்கிறார். நாமும் கோடிகளை சேகரித்துக் கொடுக்கிறோம்... உடனே உடன்பிறப்பே நீ கொடுத்த தொகை நமக்குப் போதாது இன்னும் கொண்டு வா என்கிறார். என்ன கொடுமை பாருங்கள்... ஐந்துக்கும் பத்துக்கும் அல்லல்படுபவன் கைக்காசைக் கொடுக்கணுமாம்... இவரு ஆட்சிக்கு வந்து தன் மக்களுக்கு பணம் சேர்ப்பாராம்... நம்மை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஒருத்தன் பேனரில் போட்டிருக்கிறான் சிலுவையில் அறைந்தவன் தெய்வமா..? சிலுவையில் அறையப்பட்டவன் தெய்வமா..? எங்களுக்கு எங்க அம்மாதான் தெய்வம்டா அப்படின்னு வசனத்தோட... அம்மா தெய்வம்ன்னா எதுக்கு இத்தனை அகங்காரம்... இவ்வளவு சொத்து... பதவி ஆசை எல்லாம்... எல்லாம் துறந்து நான் உங்கள் தெய்வம்ன்னு ஏதாவது ஒரு மலையில போயி நிக்க வேண்டியதுதானே... அடிமைகள் செருப்பில்லாமல் கூனிக் குறுகி கும்பிட்டுக் கிடக்க வேண்டியதுதான்... மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஒரு மனுசி எப்படி எங்களுக்குத் தெய்வம் ஆக முடியும். எங்களைப் பொறுத்தவரை இப்போதைய முதல்வரை விநாயகர் சதுர்த்திக்கு கடலில் கரைக்கும் பிள்ளையாராகத்தான் வைத்திருக்கிறோம். மே மாதம் கடலில் கரைப்போம்... மீண்டும் உருவாகாத வண்ணம் உருத்தெரியாமல் கரைப்போம். இது என் நம்பிக்கை... நாங்க காசுக்குச் சிரிப்போம் என்றால் நாம் சீரழியத்தான் வேண்டும். நடு வீட்டுக்குள் பேனர் கட்டுவார்கள்... நாமும் அவர்களுடன் பாதுகாப்பாய் நிற்க வேண்டியதுதான்... மேலே போகும் ஹெலிகாப்டரைப் பார்த்து நடு வீதியில் நின்று கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்... பறக்கும் அம்மா நம்மைப் பார்க்கும் என்ற நினைப்பில் அண்ணாந்து பார்க்க ஏதோ ஒரு குருவி தன்னோட எச்சத்தை நம் வாயில் இட்டுச் செல்லும்.

மழை வந்தது கூட நாம் மாற்றங்களைப் பற்றிச் சிந்த வேண்டும் என்பதால்தான் என்று நினைக்கிறேன்... சிந்திப்போம்... செயல்படுவோம்... இந்த கெடுகெட்ட ஜென்மங்களை களை எடுப்போம்.
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. வேதனையான நிகழ்வுகள்!
  தம +1

  பதிலளிநீக்கு
 2. பேனர் கலாசாரம் மாறவேண்டும்.மக்கள் வெற்று விளம்பரங்களுக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
 3. #அரசியல் அல்லக்கைகள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதால் செய்கிறார்கள்.#
  மதுரையில் இந்த சீரழிவு கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது :)

  பதிலளிநீக்கு
 4. நேரிய கருத்துகள்..
  கனல் தெறிக்கின்றது பதிவில்...

  ஆனாலும், ஒரு விருப்பம்...
  நெற்றியில் நாமமாக்கி - என்னும் வார்த்தையை திருத்தவும்..

  பதிலளிநீக்கு
 5. வேதனை.....

  உங்கள் ஆதங்கம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. நல்ல சவுக்கடியான விடயம் நண்பரே மக்களுக்கு பதாகைகள் சிரம்மாகத்தான் இருக்கின்றது இருப்பினும் அவர்களுக்கு அந்த உணர்வு வரவில்லையே... ஏன் ? இந்த கேவலப்பட்ட மக்களால் கஷ்டம் எல்லோருக்குமே... அம்மா என்பது புனிதமான வார்த்தை அது சமீபகாலமாக கேவலப்படுத்தப்பட்டு விட்டது எனக்கு எழுத தோணுது ஆனால் வார்த்தைகள் தடித்து விடும் வேண்டாம்.
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 7. மழை வந்தது கூட நாம் மாற்றங்களைப் பற்றிச் சிந்த வேண்டும் என்பதால்தான் என்று நினைக்கிறேன்...
  உண்மை நண்பரே

  பதிலளிநீக்கு
 8. சமீபத்தில் ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். திடிரென்று நீங்கள் பறவையானால் என்ன செய்வீர்கள் என்று பேசச் சொன்னார்கள் அரசியல்வாதிகளை தேடி தலையில் எச்சம் போவேன் என்றேன். வந்திருந்த கவுன்சிலரின் உறவு பெண்மணிக்கு கோவம் வந்துவிட்டது. மாற்றம் மாற்றம் என்று சொல்லியே ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள் அரசியல்வாதிகள்! நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்கலாம்ன்னு ஒரு பேனர் வைப்போமா சகோ!

  பதிலளிநீக்கு
 10. அப்பாடா! வந்திட்டேன் குமார் வந்திட்டேன்! நான்கைந்து பதிவுகள் பின்னூட்டம் இட முடியாத படி வேலை வேலை... ஆர்டர் ஆர்டர் என .... கிறிஸ்மஸுக்கு பின் புது வருடம் செம்ம்ம்ம்ம்ம கலக்கல்பா... நிறைவான ஆரம்பமும் முடிவுமாய் எங்கள் கம்பெனிக்கு இருந்தது. ஜஸ்ட் உங்களையெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்.

  பதிவில் செம காரம்... ஆமாம் வெள்ள நிவாரணதொகை என்னாச்சு? அதுவும் வெள்ளத்தோட போய் கடலில் கலந்தாச்சு? கூவத்தின் நிலை இபோது என்னப்பா? தானாய் சுத்தமானதை தக்க வைத்துக்கொள்ளும் திட்டம் ஏதேனும் உண்டோ?

  பேனர் கலாசாரம் ஒழிக என குமாரின் மனசு சார்பில் ஒரு பேனர் வைத்து எதிர்ப்பு ஊர்வலமும்,கண்டனக்கூட்டமும் நடத்திருவோமா குமார்!

  நம்ம கம்பெனிக்கும் புதிதாய் ஒரு பேனட் டிசைன் செய்யணும். அதையும் பின்னாடி வைத்து இலவச விளம்பரம் கொடுத்திரலாம்.

  அப்புறம் பதிவில் காரம் குறைந்தால் உடலுக்கு நல்லதாம். ரெம்ப சிந்தித்து பிரசரை ஏத்திக்காதிங்க! நமக்கெல்லாம் நாம் எழுதும் எழுத்துக்கள் உணர்விலிருந்து வருவதால் உடல் நலத்தினையும் பாதிக்கும் என்பதால் கதை கவிதைகளுக்கும் அப்பப்ப இடம் கொடுங்க!

  அடுத்த பதிவில் சந்திப்போம்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...