மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 24 ஜனவரி, 2016பாரதி : கண் திறந்திட வேண்டும் - 1


வெள்ளி மாலை பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவான 'கண் திறந்திட வேண்டும்' அபுதாபி இந்தியன் சமூக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அண்ணன் கில்லர்ஜி அவர்கள் முத்துநிலவன் ஐயாவின் புத்தகத்துடன் மாலை 4 மணிக்கு மேல் அறைக்கு வந்தார். பின்னர் ஒரு சுலைமானியுடன் விருந்தோம்பலை(?) முடித்துக் கொண்டு மைத்துனனையும் அழைத்துக் கொண்டு மூவருமாய் ISC நோக்கி உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசியபடி நடையைக் கட்டினோம். நாங்கள் சென்றபோது அரங்கு ஓரளவு நிரம்பியிருந்தது. சரி முன்னால் உட்கார்ந்து கேட்கலாம் என்று போனால் அங்கு எல்லாம் VIP களுக்கான இருக்கை... சுற்றி மீண்டும் பின்னால் வந்தால் முன்னால் வேகமாகப் போனதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் கேலியாக ஏதோ பேசினார்கள். சரி நமக்கெதுக்கு அதெல்லாம் என உதறிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தோம். எங்களுக்கு பின்னால் ஒரு பத்து இருக்கைகளை இரண்டு குழந்தைகள் முன்பதிவு செய்துவிட்டு விழா ஆரம்பித்த பின்னர் ஆடி அசைந்து வந்த குடும்பத்தாருக்காக பட்ட கஷ்டம் இருக்கே அது வேறு கதை... அதில் ஒரு சின்னக்குட்டி நான் அழுதுடுவேன்னு முழிச்ச முழியிருக்கு பாருங்க அதை அருகில் இருந்து ரசித்தால்தான் உணர முடியும். அப்புறம் எல்லாரும் பொங்கல் வாங்கி சாப்பிட, அட (இலவசமாய்) பொங்கல் கொடுத்திருக்கிறார்களே ஆஹா பொங்கப் போச்சே என்று யோசித்ததை பக்கத்து இருக்கை நண்பர் கேட்டிருப்பார் போல அவர் வைத்திருந்த ஒரு பார்சலை நம் பக்கம் திருப்பிவிட கில்லர்ஜி அண்ணா பெரிய மனிதராய் பிளாஸ்டிக் ஸ்பூனில் எடுத்துக் கொடுக்க, நமக்கு சொல்லவா வேணும்... வேண்டாம் வேண்டாம்ன்னு போயிக்கிட்டே இருந்துச்சு... எப்படியோ இலவசத்தையும் வாங்கியாச்சு.

விழா சொன்ன நேரத்தில் ஆரம்பித்தது... கடவுள் வாழ்த்துக்குப் பின் எப்பவும் போல் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின்னர் இந்த வருடத்தில் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை அறிமுகம் செய்தார்கள். அதன் பின் புரவலருக்கும் ISC பெரியவர்களுக்கும் மரியாதை செய்தார்கள். வெள்ள நிவாரணத்துக்கு உதவியதில் பெரும்பங்கெடுத்த சிலருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். பின்னர் குழந்தைகளில் நடனம்... எப்பவும் போல் திருமதி. ஆஷா நாயரின் அழகான நடன அமைப்பில் அற்புதமாய் ஆடினார்கள்.  'வீணையடி நீ எனக்கு' ஆடிய இரண்டு பேரும் அழகான சிற்பங்கள் அசைவது போல் கலக்கலாய் ஆடினார்கள். வாழ்த்துக்கள் குட்டீஸ்...'பராசக்தி' பாடலுக்கு ஆடிய குழந்தைகளையும் குறை சொல்வதற்கில்லை.


பின்னர் மேடை பட்டிமன்றத்துக்கு தயாரானது... பாரதி அமைப்பின் நண்பர் ஒருவர் பட்டிமன்ற பேச்சாளர்களை அழகான தமிழில், கவிதை நடையில் கணீர்க்குரலில் அறிமுகம் செய்து வைத்தார். பட்டிமன்றத்தின் நடுவராக திரு. சுகி சிவம் அவர்கள். இன்றைய சூழலில் உதவி செய்வது சந்தோஷமே... சங்கடமே என்பதுதான் பட்டிமன்றத்தின் தலைப்பு. தலைப்பு விழாவிற்குச் செல்லும் வரை தெரியாது. ஏனோ இந்த முறை அழைப்பிதழில் தலைப்பு போடப்படவில்லை. சந்தோஷமே என்ற அணிக்கு தலைவராக திரு. ஆவுடையப்பன் இருக்க, அவருக்கு வலு சேர்க்க திரு. மணிகண்டன் மற்றும் வழக்கறிஞர் சுமதி ஆகியோர் பேசினார்கள். சங்கடமே அணிக்கு திரு.சண்முக வடிவேலு தலைவராக இருக்க, அவருக்கு வலு சேர்க்க முனைவர் விஜய சுந்தரி மற்றும் திரு. மோகன சுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.


முதலில் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு சால்வை மற்றும் அழகிய பூமாலையால் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நடுவர் வசம் மேடை கொடுக்கப்பட, 'ஆஹா... என்ன அழகா மாலை பாருங்க... நம்ம ஊர்லயும் மாலை போடுவாங்க... இருக்கதுலயே சின்னதா... போடும் போதே எனக்கு பயமா இருக்கும்... எப்படியும் கண்ணாடியை தட்டி விட்டு விடுவார்கள்... அதைப் போட்டதும் அதில் இருக்கும் ஈரம் ஆடையில் பட்டு அது ஒரு கலராகிவிடும்... இந்த மாதிரி மாலை போடுவார்கள் என்று தெரிந்தால் நான் இன்னும் ஒருமுறை அறுபதாம் கல்யாணம் பண்ணியிருப்பேன்' என்றபடி ஆரம்பித்து உடம்பில் இருக்கும் உயிர் பற்றி எல்லாம் பேசி, நாம் பார்க்கும் வேலையை மதிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு உதாரணமாக தன் மகள் கற்றுக் கொடுத்த பாடத்தையும் சொன்னார். 

ஒருநாள் வீட்டின்கீழ் தளத்தில் அமர்ந்திருக்கும் போது மாடியில் அவரது அறையில் இருந்த கண்ணாடி தேவைப்பட, மேலிருந்து இறங்கி வந்த 7 வயது மகளிடம் (இப்போ 35 வயது என்றும் சொன்னார்) 'டேய்... அப்பாவோட கண்ணாடியை எடுத்துக்கிட்டு வாடா...' அப்படின்னு சொன்னாராம். இப்போது இடை நிறுத்தி  'பொம்பளைப் பிள்ளைங்களை டா போட்டுக் கூப்பிடுறதுல இருக்க சுகமே தனிதான்... அதே நேரத்துல பயலுகளை டீ போட்டுக் கூப்பிட முடியாது... கூப்பிட்ட அது வேற மாதிரி போயிரும்... நல்லாவும் இருக்காது' என்று சொல்லி கைதட்டலை பெற்றுக் கொண்டார். அவர் கண்ணாடி கேட்டதும்  'அட போங்கப்பா... 17 படி ஏறிப் போயி எடுக்கணுமாக்கும் என்னால முடியாது'ன்னு சொல்லிட்டு வெளிய போயிருச்சாம். இவர் எதுவும் பேசலையாம்... ஏன்னா எப்பவாச்சும்தான் வீட்ல இருக்கோம்.... அப்பவும் அந்தப் பிள்ளைங்களை திட்டினா... என்னைக்காச்சும் வர்றாரு... வரும்போதும் திட்டுறாருன்னு நினைச்சுக்கங்க என்பதால் எப்பவும் திட்டமாட்டேன் என்றார். இது உண்மை... நானும் அனுபவித்திருக்கிறேன்... இப்ப எங்க அறையில் ஒருத்தர் இருக்கார் 7வது படிக்கிற மகனை போட்டு தினமும் 2 மணி நேரம் வறுத்தெடுக்கிறார். எங்க விஷால் படிக்கிறது ரெண்டாவதுதான்.. எதாவது சொன்னா ' ஏய் என்ன... வந்தேனாத் தெரியுமான்னு' மதுரை பாஷையை குழந்தை மொழியில் பேசி சிரிக்க வச்சிடுறான். 

சரி வாங்க சுகி சிவம் ஐயா பின்னாடி போவோம்... கண்ணாடி எடுக்காத மகள் தன் பிரண்டோட மாடிப்படியில் மேலும் கீழுமாக 17 தடவை ஏறி இறங்கியிருக்கு... பொறுமையா பார்த்துக்கிட்டு இருந்தவர் ஒரு கட்டத்தில் கடுப்பாகி, தலைமுடியை கொத்தாகப் பிடித்து 'ஏன்டா... நான் கண்ணாடி கேட்டதுக்கு பதினேழு (இழுத்துச் சொல்லி) படி ஏறணுமான்னு கேட்டே... இப்போ பதினேழு (இப்பவும் இழுவை) தடவை ஏறி இறங்கியிருக்கே... அதை எடுத்துக் கொடுத்தா என்ன'ன்னு கேட்டாராம். அதுக்கு 'அது வேலைப்பா... இது விளையாட்டுப்பா' என்ற அவரின் மகள் 'இதையெல்லாம் வேலை இல்லாதவங்கதான் எண்ணிக்கிட்டு இருப்பாங்க'ன்னு சொல்லிட்டுப் போச்சாம்... இதைச் சொல்லி 'நம் வேலை நாம்தான் பார்க்க வேண்டும்... அதுவும் ஒரு ஈடுபாட்டோடு பார்க்க வேண்டும்' என்பதை அன்று கற்றுக் கொண்டேன் என்று சொன்னார். இன்னும் சில கதைகள் சொல்லி சந்தோஷமே அணித் தலைவர் திரு. ஆவுடையப்பன் அவர்களை பேச அழைத்தார்.

திரு. ஆவுடையப்பன் : ''ஒருத்தரை எதிரே பார்த்த ஒருவன் உங்களை எங்கயோ பார்த்திருக்கிறேனே... பேஸ்புக்ல இருக்கிங்களா... டுவிட்டர்ல இருக்கீங்களா... வாட்ஸ் அப்ல இருக்கீங்களான்னு கேட்டானாம்... அவரு அதுக்கெல்லாம் இல்லை இல்லைன்னு சொன்னாராம்... இல்லை எங்கயோ பார்த்திருக்கிறேன் என்றதும் நீ இருக்கிற அபார்ட்மெண்ட்லதான் நானும் ஒரு வருசமா குடியிருக்கிறேன்டா என்றாராம். உலகம் ரொம்ப சுருங்கிப் போச்சு... இப்ப எல்லாமே கைக்குள்ள வந்திருச்சு... யாரும் யாருக்கிட்டயும் கேக்கிறதுல்ல... வழி கூட நடுரோட்டுல நின்னுக்கிட்ட் மொபைல்ல பார்த்து அது சொல்றபடி போக ஆரம்பிச்சிட்டாங்க... என்றெல்லாம் பேசி சந்தோஷத்துக்கு காரணங்களை அடுக்கினார். 

இப்பல்லாம் பஸ், இரயிலில் எல்லாம் யாரும் யாருடனும் பேசுவது கூட இல்லை... ஒருமுறை நான் திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸில் போனேன். பக்கத்தில் இருந்த பெரியவரிடம் மெதுவாக பேச ஆரம்பிக்க, அவரோ பதில் சொல்லவில்லை.. பேசினா என்னங்கன்னு கேட்கவும் இப்ப நீ என் பேரைக் கேப்பே... அப்புறம் நான் உன் பேரைக் கேப்பேன்.. வர்ற நிறுத்தத்துல நீ காபி குடிக்கலாமான்னு கேப்பே... நானும் சரிம்பேன்... அடுத்த நிறுத்தத்துல நான் டிபன் பண்ணலாமான்னு கேப்பேன் நீ சரிம்பே... இறங்கும் போது அட்ரஸ் கேப்பே... கொடுப்பேன்... அடுத்த நாளே வந்து நிப்பே... எனக்கு வயசுக்கு வந்த மகள் இருக்கு... அதுவும் நீயும் காதலிப்பீங்க... கூட்டிக்கிட்டு ஓடிப்போவே... நான் மருந்தைக் குடிச்சிட்டு செத்துப்போவேன்... இதெல்லாம் வேண்டாம் தம்பியின்னு சொல்லிட்டாரு என்றார். எது எப்படியிருந்தாலும் பிறருக்கு உதவுவது சந்தோஷமே என்று சொல்லி அமர்ந்தார்.

அவரின் பேச்சுக் குறித்து சில விளக்கங்கள் கொடுத்த சுகி சிவம் அவர்கள் சங்கடமே அணித் தலைவரை அழைத்தார். அவரும் தன் பக்கம் இருந்த மைக்கை மறந்து எதிரணிப் பக்கமாக நடக்க எதிரணியினர் உங்க பக்கம் மைக் இருக்கு அங்க போங்க என்றதும் திரும்பி அங்கு சென்றார்.

திரு. சண்முக வடிவேலு : 'பாவம் எதிரணியினர் அவர்களுக்கு உதவலாம் என்று போனால் அங்கிட்டுப் போன்னு திருப்பி விட்டுட்டாங்க' என்று தான் மறந்து போனதை சமயோகிதமாக நகைச்சுவை ஆக்கினார். இதுதான் ஒரு பேச்சாளனின் திறமை. இவரின் பேச்சில் நகைச்சுவை சும்மா துள்ளலாட்டம் போட்டது. அரங்கம் மட்டுமின்றி நடுவர் கூட சிரித்து சிரித்து மண்டையில் ஏறிவிட்டது. திருவள்ளுவர் வழியில் நடக்கச் சொல்றாங்க... நான் அப்படி நடப்பவன்தான் அதுனால எனக்கு கிடைத்தது சந்தோஷமா இல்லையே சங்கடம்தானே... ஒருநாள் இப்படித்தான் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். எதிரே ஒருத்தன் வந்தான். நீதானே சண்முகவடிவேலு அப்படின்னு கேட்டான். ஆமா என்றதும் அருகில் வா என்றான்... போனேன்... இன்னும் அருகில் வா என்றான்... சரி எதோ கொடுக்கப் போறாரு போலன்னு கிட்டப் போனேன்... இன்னும் வா என்றான்... என்னடா நம்ம காது எட்டலை போல என்று அருகே போக, சட்டுன்னு ஒரு அறைவிட்டான். எதுக்கு அடிச்சான்னு தெரியலை... கேட்டாலும் பதில் இல்லை... சரியின்னு வேலைக்குப் போனாலும் எதுக்கு அடிச்சிருப்பான்னு ஒரே யோசனை நாமதான் திருவள்ளுவரை பின்பற்றுபவராச்சே... 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' அப்படிங்கிற குறளுக்கு இணங்க அவனுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைச்சேன். அது அன்னைக்கு சாயந்தரமே நடந்தது... 

நான் வேலை விட்டுப் போறேன் அவனைப் போட்டு ஒருத்தன் அடிச்சிக்கிட்டு இருக்கான்... சரி நம்மளை அடிச்சவன் அடிவாங்குறான்னு சந்தோஷமில்லை... காரணம் நாந்தான் திருவள்ளுவரைப் பின்பற்றுபவனாச்சே... ஏன்யா அடிக்கிறேன்னு கேட்டதும்... நீ யாருய்யா கேக்க என்றான்... சொல்லுய்யா ஏன் அடிக்கிறே என்றேன் மறுபடியும்... பத்து ரூபாய் வாங்கி ரெண்டு வருசமாச்சு... இந்தாத்தாரேன்... அந்தாத்தாரேன்னு இழுத்தடிக்கிறான் என்றதும் பத்து ரூபாய்தானே நான் தர்றேன் என்று கொடுத்ததும் அவன் போய்விட, இவன் காலையில் அடித்ததற்கு வருந்துவான் என்று பார்த்தால் பக்கத்தில் இருந்த நண்பனிடம் சொல்றான் 'இந்தாளு இருக்கது தெரியாம கண்டவங்கிட்டயும் பணம் வாங்கி அடிவாங்குறேன். இந்தா காலையில ஒரு அடி விட்டேன்... இப்ப பத்து ரூபாய் கொடுக்கிறார்... அப்ப இருபது ரூபாய் வேணுமின்னா 2 அடி கொடுத்தா போதும்... சாயந்தரம் இருபது ரூபாய் கொடுத்துட்டுப் போவாரு... முப்பதுன்னா மூணு, 50 ரூபாய் வேணுமின்னா 5 அடிதான் என்றானே பார்க்கலாம் என்றபோது அரங்கமே அதிர்ந்தது.

இவர் சொன்ன திருக்குறள் வகுப்பு எடுத்த கதைக்குத்தான் நடுவருக்கு சிரிச்சி சிரிச்சு புரை ஏறியது... அது அடுத்த பதிவில்...


நட்புக்காக ஒரு வேண்டுகோள் : குழந்தைகளை வீட்டில் இப்படித்தான் விடுவார்களா என்று தெரியவில்லை... ஆனால் விழா அரங்கில் சந்தைக்கடை போல கத்தவிட்டுவிட்டு பெற்றவர்கள் அமர்ந்திருக்க, அவர்களின் விளையாட்டுச் சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை என்ற நிலை... அப்போது நடுவரிடமும் ஒரு சீட்டு கொடுக்கப்பட, அதை வாசித்து இதெல்லாம் நடக்கிற கதையா... நாம அவர்களை அடக்க முடியுமா.. முடிந்தால் பெற்றோர்கள் கொஞ்சம் பாருங்கள் என்றார். ஆனால் எந்தப் பெற்றோரும் பார்க்கவில்லை... கனவுப்பிரியன் அண்ணன் வந்தபோது வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு இனி இருக்கைக்கு போவது என்பது சிரமம் என்பதால் பின்னால் நின்றோம்.. பின்னர் கடைசி இருக்கை காலியாக அமர்ந்தோம்... பிள்ளைகள் ஓடிப்பிடித்துத்தான் விளையாண்டார்கள்... என்ன காட்டுக் கத்தலோடு... பின் வரிசையில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே கேட்கவில்லை என்பதுதான் உண்மை. இது வருடா வருட நிகழ்வுதான் என்றாலும் முன்னிருக்கையில் அமரும் பாரதி அங்கத்தினர் சிலர் பின் வரிசைகளில் அமர்ந்து கொஞ்சமே கொஞ்சமேனும் சப்தத்தைக் குறைக்கலாமே... ஏன் எல்லாருமே முன் வரிசைக்கு ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. பெரும்பாலும் விழா நடத்துபவர்கள் அரங்கில் சுற்றிலும் இருப்பார்கள்... தேவகோட்டை பாரதி கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களில் நாங்கள் இப்படித்தான் செய்வோம். அடிகளாரின் பேச்சுக்கு எல்லாம் அரங்கமே அமைதியாக இருக்கும்... அதனால் சொல்கிறேன். இனி வரும் நிகழ்வுகளில் இதைச் செய்தால் மகிழ்ச்சியே...

படங்கள் உதவி : திரு. சுபஹான் அவர்கள்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

20 கருத்துகள்:

 1. இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ற தலைப்பு நண்பரே
  குழந்தைகள் ஓடுவதும் விளையாடுவதும் ஒவ்வொரு நிகழ்விலும்
  நடந்து கொண்டுதான் இருக்கிறது
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அய்யா...
   உண்மைதான்...
   ஆனாலும் பெற்றோர் கொஞ்சம் கவனிக்கலாம்...
   அந்தளவுக்கு சப்தம்... கில்லர்ஜி அண்ணா கூட யாருமே அதட்டலையேன்னு ஆதங்கப்பட்டார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

   நீக்கு
 2. அரங்கிற்கு அழைத்து சென்றதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. எங்களையும் அரங்கத்திற்கு அழைத்துச் சென்று நிகழ்ச்சியை ரசிக்கத் தந்தமைக்கு நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. இனியதொரு விழா பகிர்வு..
  தங்கள் நடையில் மேலும் சுவை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. விழாவை நேரில் பார்த்த திருப்தி.
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க செந்தில் சார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. பட்டி மன்ற நிகழ்வுகளை வழி, மொழி மாறாது மீண்டும் காண்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. சுகி சிவம் பேச்சு சுவாரஸ்யமாய் இருந்திருக்குமே... ஆனால் நம்ம ஊரில் போடுவாங்க பாருங்க என்று சொன்னது ரசனைக்குரைவாய் இருக்கிறது.
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   மேடை அலங்காரத்துக்காக இங்கு வரும் எல்லாரும் சொல்வதுதான் அண்ணா...
   உங்களைப் போல் பார்க்கவில்லை என்றும்தான் சொன்னார்கள்...
   நம்ம ஊரில் எல்லாம் சால்வைக்கு மாறிவிட்டார்கள்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. வீணையடி நீ எனக்கு!

  தலைப்பு ஏன் வந்தது என புரிந்து போனது! தலையிடிஅக்கா எதையும் சரியாக கவனிக்க வில்லை என சொல்லி விட்டு இலவசபொங்கலும் சாப்பிட்டு இத்தனை விடயமும் கவனித்து எழுதி இருக்கிங்களே குமார், தலையிடி இல்லாமல் முழுமையாக கவனித்திருந்தால் நான்கு தொடர் பதிவு கிடைத்து இருக்குமோ?

  பெரிய பதிவு, ஆனால் சுவாரஷ்யமாம் இருக்கின்றது. குழந்தைகள் சத்தம்,ஓடி விளையாடல் கூட்டங்களில் மட்டுமல்ல அடுத்தவர் வீட்டுக்கு செல்லும் போதும் கவனிக்க வேண்டும். என் பசங்களை அப்படி விட்ட தில்லை.எங்க வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் போகும் இடத்தில் அமைதியாக இருக்க சின்ன வயதிலிருந்து பழக்க வேண்டும்.

  அல்லது பிள்ளைகளை தனியே அதற்கென அறை ஒதுக்கி அங்கே அனுப்பி விளையாட விட வேண்டும்.

  நல்ல பதிவு குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ அப்படி நெனச்சீங்களா...
   இல்லை பேரை காயத்ரின்னு வக்கலாமான்னு யோசனை... நேமும் கதையோட பேரும் சரியா வருமான்னு பார்த்ததால் இந்தப் பெயர் யோசித்து நண்பனிடம் திட்டு வாங்கியதே மிச்சம்... அது வேற கதை...

   தலைவலிதான் அக்கா... இன்னும் கழுத்து வலி இருக்கு... சீக்கிரம் தூங்கிப் பார்க்கணும்... எப்படி என்றாலும் 11.30 மணிக்கு முன்னர் உறக்கம் வருவதில்லை....

   அவங்க தொடர்ந்து வற்புறுத்தியதால்தான் எழுதினேன். இன்றும் அடுத்த பகிர்வு எழுத எண்ணமில்லை... நித்யாவுக்கு உடல் நலமில்லை.... காய்ச்சல்... இருந்தும் முடிச்சிடலாம்ன்னு எழுதினால்... நீளம் கருதி பாதி நாளை எழுதணும்...

   இனி வரும் இருவரின் பேச்சையும் கேட்கவில்லை... வெளியே போய் டீ சாப்பிட்டபடித்தான் கேட்டேன்... இருந்தும் இழுத்து முடிச்சிடலாம்ன்னு முன்னால பேசினவங்களோடதை அதிகமாக்கினேன்.

   பெரிய பதிவுதான்.... பிள்ளைகளை விட்டுவிட்டு அவங்க பாட்டுக்க இருக்காங்க....

   பாரதி செயலாளர் அடுத்த முறை இதை கவனத்தில் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கார்.

   கருத்துக்கு நன்றி அக்கா..

   நீக்கு
 10. நல்ல பதிவு. நாங்களும் அங்கு உங்களுடன் அமர்ந்து கண்டது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் அழகாக எழுதியுள்ளீர்கள் குமார்.

  திருக்குறள் நகைச்சுவை ரசித்தோம்

  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...