மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 22 நவம்பர், 2014

ஜெயக்குமார் ஐயாவின் கரந்தை மாமனிதர்கள் - வாசிப்பு அனுபவம்

வாசிப்பனுபவம் கொடுக்கும் சந்தோஷத்தை மற்ற எதிலும் அனுபவிக்க முடியாது. தேடல் இருக்கும் மனிதனே சிறந்த எழுத்தாளனாக முடியும் என்று எங்கள் பேராசான் சொல்லுவார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவருடன் பழக ஆரம்பித்த பிறகுதான் கொஞ்சம் நல்ல புத்தகங்களை வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது. பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், எங்கள் ஐயாவின் சீனத்துக் கதைகள் மொழிபெயர்ப்பு மற்றும் பொன்னீலன், மீரா, அப்துல்ரஹ்மான், தோப்பில் முகமது மீரான் என பலரின் எழுத்துக்களை அவரால்தான் படிக்க முடிந்தது. 

என்னைப் பொறுத்தவரை பள்ளிக் காலங்களில் எல்லாம் குமுதம். ஆனந்த விகடன், பாக்யா, உதயம், க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்பவையே எனது வாசிப்பில் இருந்தன. கல்லூரிக்கு வந்த பின்தான் தாமரையும் செம்மலரும் சுபமங்களாவும் ஐயாவால் எனது வாசிப்பில் வந்தன. அப்படி வாசிக்க ஆரம்பித்து தாமரையில் கவிதையும் எழுதி எழுத்து வேட்கையையும் ஆரம்பிக்க காரணம் ஐயா. அவரின் வீட்டிற்குச் சென்றால் அவர் இருக்கும் அறைக்குள் எல்லாப் பக்கமும் புத்தகம் அடுக்கி இருக்கும். கீழே அவர் அமர்ந்திருக்கும் இடமும் வைத்தெழுதும் இடமும் தவிர்த்து எங்கும் புத்தகங்கள்... ஐயா எங்கே என்று நம்மளைத் தேட வைக்கும். அப்படி ஒரு சூழலில் அவருடன் அமர்ந்து படித்ததால்தான் இன்னும் எழுத்து என்னோடு உறவாடுகிறது போலும்.

My Photoபேச வந்த விசயத்தை மறந்தாச்சு பாத்தீங்களா..? ஐயா பற்றி பேசினால் அனைத்தும் மறக்கும் அப்படிப்பட்ட அன்பு அவரிடம் இருந்து எனக்குக் கிடைத்தது... கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னது போல் என்னிடம் தேடல் எல்லாம் எப்போது இருந்ததில்லை. இப்போது இங்கு வந்த போது அந்தத் தேடல் இருந்த இடமும் தெரியவில்லை. இணையத்தில் எத்தனையோ நல்ல எழுத்துக்களை வாசிக்கிறேன் என்பதே சந்தோஷம் என்றாலும் புத்தகங்கள் மூலமாக வாசித்து அதன் ருசியை அறியும் நிலை இல்லாதது ரொம்ப வருத்தமான விஷயம். ஏன்னா புத்தகத்தில் வாசிப்பது என்பதற்கும் இணையத்தில் வாசிப்பதற்கும் எனக்கு நிறைய வித்தியாசம் தெரிகிறது.

கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் வலைப்பூவை வாசிக்க ஆரம்பித்து அந்த எழுத்தில் லயித்து அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டேன் என்பதே உண்மை. அவரின் எழுத்துக்கள் பலரையும் இழுக்க முதல் காரணமே அவரது தேடல்தான். கணித ஆசிரியராக இருந்து கொண்டு தமிழ் மீது கொண்ட காதலால் அவரின் தேடுதல் வேட்கை தொய்வின்றி தொடர்கிறது. அவரின் பதிவுகள் பல வரலாற்றைப் பேசும்... இனி வரும் காலங்களில் வரலாறாய் பேசும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வலையில் தொடர்ந்து எழுதினாலும் அபுதாபி என்ற தீவில் இத்தனை வருடங்களாக தனித்து விடப்பட்டுத்தான் இருந்தேன். வலைப்பூ வாசம் மட்டுமே வாழ்வின் மகிழ்ச்சிகளில் ஒன்றாய் இருந்தது. அமீரகத்தில் இருந்து நிறையப் பேர் வலைப்பூவில் எழுதுகிறார்கள் ஆனால் யாரும் யாரையும் சந்திக்கும் நிலை இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சகோதரி மலிக்கா, ஆசியா அக்கா என வலையில் எழுதும் பெண் சகோதரிகள் கூடி பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அது பின்னர் தொடர்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஆண் எழுத்தாளர்கள் யாரையும் யாரையும் சந்திக்கவில்லை. காரணம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் காலை அலுவலகம் சென்றால் இரவுதான் திரும்புகிறோம். இதில் எப்படி ஒருவருக்கு ஒருவர் சந்திக்க முடியும்.

நான் தேவா அண்ணனின் தீவிர வாசகன். இதோ துபாயில்தான் இருக்கிறார். ஆனால் அவருடன் பேசியது கூட இல்லை... சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பில் வந்தார். இப்போது தொலைபேசி எங்களை இணைத்து வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் அண்ணன்கள் கில்லர்ஜி மற்றும் மகேந்திரன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. எழுத்து குறித்துப் பேச இரண்டு உறவுகள் கிடைத்த சந்தோஷம் என்றும் மறக்காது. நேற்று கில்லர்ஜி அவர்கள் இரண்டு நூலுக்கு விமர்சனம் எழுதியிருந்தார். அவருக்கு இட்ட கருத்தில் எனக்கு அந்தப் புத்தகங்களைக் கொடுங்கள் வாசித்து விட்டு தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். உங்க பில்டிங்குக்கு கீழ நிக்கிறேன்... வாங்க என ஒரு மணி நேரத்திற்குள் அழைப்பு... அவசரமாக இறங்கிப் போனால் புத்தகங்களைக் கொடுத்து விட்டு இவற்றை நான் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன். புத்தகங்களை மடக்கி கிடக்கி ஏதும் பண்ணீறாதீங்க என்ற நிபந்தனையுடன் கொடுத்தார். அப்போது அவரின் புத்தக நேசிப்பு பிரமிக்க வைத்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு புத்தக வாசிப்பு... இன்று காலை ஜெயக்குமார் ஐயாவின் புத்தகத்தை எடுத்தேன்... வாசித்து முடித்தேன்... எனக்கு என்ன பொறாமைன்னா... நாட்டுல ரொம்பப்பேரு ஊரு பேரைச் சொல்லுறதுக்கே யோசிப்பானுங்க.... நமக்கு எந்த ஊருன்னு கேட்டா... அது தேவகோட்டைக்கு பக்கத்துலங்க... ஒரு ரெண்டு கிலோ மீட்டர் கிழக்கே என்று சொல்லுவாங்களே தவிர கடைசி வரை ஊரைச் சொல்ல மாட்டானுங்க.. ரொம்பக் கேட்டா அது ஒரு ஊரு... தேவகோட்டையிலதான் இருக்கோம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை எங்கள் ஊர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் இவரோ அங்கு பிறந்து... தவழ்ந்து... வளர்ந்து... படித்து... அங்கேயே ஆசிரியராகி... தன்னை விளைவித்த மண்ணில் இன்று வித்தாக நிற்கிறார். நமக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லையேன்னு ஐயா மேல பொறாமை வரத்தானே செய்யும்.

ஐந்து கட்டுரைகள்... அதில் சொல்லியிருக்கும் ஐவரும் தமிழுக்காக வாழ்ந்தவர்கள். எத்தனை சிறப்பான மனிதர்களை இத்தனை சிறிய புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது. கரந்தையில் பிறந்து அங்கு தமிழ்ச்சங்கம் வளர்த்து வானளாவிய புகழை அடைய வைத்த பிரமாக்கள் குறித்த தேடலில் நமக்கு அரிய செய்திகளை அழகாய்த் தந்திருக்கிறார். இந்தக் கட்டுரைகளை இவரது வலைப்பூவில் வாசித்திருக்கிறேன். அற்புதமான தேடல்... அருமையான புத்தகம்... காணாமல் போய்க் கொண்டிருக்கும் வரலாற்றில் சில பக்கங்களை தேடித் தேடி எடுத்து நமக்கு தெவிட்டாத பாலமுதாய் தந்திருக்கிறார்.

செந்தமிழ் புரவலர் தமிழ்வேள் த.வே. உமா மகேசுவரனார் என்ற முதலாவது கட்டுரை அவர் வேலை பார்க்கும் பள்ளியின் நிறுவனரும் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதலாவது தலைவராக இருந்த உமா மகேசுவரனார் பற்றியது. இவர் காலத்தில் தமிழுக்கு ஆற்றிய பங்கு, இவரின் பேச்சு மூச்சு எல்லாமே தமிழ் நிரம்பி இருந்தது என விரிவாகச் சொல்கிறார். இவரின் காலத்தில்தான் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு கரந்தை தமிழ் வழக்கு கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார். 

இரண்டாவது கட்டுரை நேசமே சுவாசமாக... இதில் நட்பின் இலக்கணம் போற்றிய தமிழறிஞர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். சேரமானும் சுந்தரரும் போல, கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போல, அவ்வையும் அதியமானும் போல இருந்த நட்பில் கவியரசு அரங்க. வேங்கடாசல்ம் பிள்ளை அவர்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார். தனது ஆசானான குயிலையா என்ற ஆர்.சுப்பிரமணிய ஐயருக்கு செலுத்தும் குருதட்சணையாக ஆசானாற்றுப்படை எழுதியவர் இவர். சாகும் தருவாயில் கூட கரந்தையில் இருந்து தனது சொந்த ஊரான மோகனூருக்கு சகோதரர் அழைத்தும் செல்லவில்லை என்பதைச் சொல்லி அவர் மகன் கரந்தை தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான் அப்பா அங்கு வருவார்கள் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பதில் இருந்து அந்த மனிதரின் தமிழ்ப்பற்று நமக்கு புலப்படுகிறதல்லவா?

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம்.. என்ற கட்டுரையில் ஒரு மனிதர் தேடலுக்காக வாலிபத்தையும் வருடங்களையும் தொலைத்த நிகழ்வைப் பகிர்ந்திருக்கிறார். கண்ணகி பயணித்த பாதையில் பயணித்து தேடலைத் தொடங்கிய பேராசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள் ஏதோ சில நாட்கள் தேடலோடு நிறுத்தவில்லை... 17 ஆண்டுகள் மனிதர் கண்ணகியின் அடிச்சுவடை பற்றி நடந்து வேங்கைக் கானல் என்ற இடத்தில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பெற்ற கண்ணகி கோவிலை கண்டு பிடித்தார். அதை தமிழகத்திற்கு கண்டெடுத்துக் கொடுத்த ஐயா கோவிந்தராசனார் 94 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். காலப்பெட்டகம் ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.

கரந்தை காந்தி என்ற கட்டுரையில் உமா மகேசுவரனாரின் மைத்துனரான ச.அ.சாம்பசிவம் பிள்ளை பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை பணியாளராக இருந்து தமிழ் மேல் கொண்ட காதலால் ஆங்கிலேயரின் கீழ் அடிமை வாழ்வு வாழணுமா என காந்தி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த போது வேலையை உதறிவிட்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஐக்கியமானார். காந்தி மேலாடை துறந்த போது இவரும் துறந்திருக்கிறார். அன்று முதல் கரந்தை காந்தி ஆகிவிட்டார்.

அடுத்த கட்டுரை தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மருத்துவர் கரந்தை தர்மாம்பாள் பற்றியது. பெண்கள் மாநாட்டிற்கு அவர்கள் அழைத்திருந்த ஆண் சிங்கம் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை அந்த மாநாட்டில் வைத்து இவர் கொடுத்ததையும் தமிழாசியர்களுக்கு நல்ல ஊதியம் கேட்டு இழவு வாரம் என்ற போராட்டத்தை இவர் நடத்தி வெற்ரி கண்டதையும் பகிர்ந்திருக்கிறார்.

மொத்தத்தில் கரந்தை மாமனிதர்கள் மிகச் சிறப்பான புத்தகம். அதுவும் ஐயாவின் வசீகரிக்கும் எழுத்தில் வாசிக்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. இதைப் படிக்கும் போது நாமெல்லாம் பொழுது போக்குக்காக எழுதும் போது இவரிடம் எத்தனை தேடல்... எப்படிப்பட்ட தேடல்... வரலாறை வாழ்விக்கச் செய்யும் மகத்தான தேடல் ஆச்சர்யப்பட வைத்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஜெயக்குமார் ஐயாவுக்கு, இது விமர்சனப் பகிர்வு அல்ல... ஒரு மாணவனின் வாசிப்பனுபவம் மட்டுமே.

வெளியீடு :

பிரேமா நூலாலயம்
சிங்காரம் இல்லம்
48 ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு
மருத்துவக் கல்லூரி சாலை
தஞ்சாவூர்.

விலை : ரூ.50 மட்டுமே.

வலைப்பூ முகவரி : கரந்தை ஜெயக்குமார் 

-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

கடந்த வியாழன்று காலை - அன்பின் ஜெயக்குமார் அவர்களைச் சந்தித்தபோது கரந்தை மாமனிதர்கள் எனும் நூலைப் பரிசளித்தார்கள்.. மாலையில் வீட்டிலிருந்து சென்னைக்குப் புறப்படும் முன் வாசித்தேன்.. இனிய தமிழ்ப் பூந்தென்றலைச் சுவாசித்தேன்..

நேற்று மதியம் குவைத் திரும்பிய பின்னும் - இன்னும் முழுமையாக தளத்தில் அமர இயலவில்லை..

தங்களும் அன்பின் கில்லர் ஜி அவர்களும் தங்களுடைய அனுபவத்தினைப் பதிவு செய்திருக்கின்றீர்கள். மகிழ்ச்சி..

KILLERGEE Devakottai சொன்னது…


ஆஹா நான் வேறென்னத்த எழுத.....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பிறந்த மண்ணுக்கு என்பதில் பொதிந்துள்ள பொருள் அளவிடமுடியாதது. திரு ஜெயக்குமார் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளார். அவரது நூல் பற்றிய தங்களின் மதிப்புரை சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

சான்றோர்களைப் பற்றி ஒரு
சான்றோர் எழுதிய நூலைச் சரியாக நாடிபிடித்து எழுதிய சகோதரர் பரிவையாருக்குப் பாராட்டுகளைஅன்றி வேறென்ன சொல்லமுடியும்? (இதையெல்லாம் அங்கு வெளிவரும் இதழ்களில் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் பகர முடிந்தால் நன்றாக இருக்குமே அய்யா? வாய்ப்புகள் உண்டா?)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செல்வராஜூ ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கில்லர்ஜி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜம்புலிங்கம் ஐயா...
அந்தப் புத்தகத்தில் தங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். உங்களைப் போன்ற பேராசான்களின் ஊக்கம் கொடுக்கும் கருத்துக்கள்தான் எங்களை இன்னும் செம்மைப்படுத்தும்.

தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

Kasthuri Rengan சொன்னது…

முதலில் கடமை
தம இரண்டு
இப்போது கருத்து
வணக்கம் ஜி நலமா
நூல் என்னிடம் இருக்கிறது
நான் சரிதாயணம் படித்துவிட்டு அதற்கு அறிமுகம் எழுதிய பின்னர் இநூலை தொடலாம் என்று இருந்தேன் ...

அருமையாக பகிர்ந்திருகிரீர் உங்கள் வாசிப்பு அனுபவத்தை ...
தொடரட்டும் உங்கள் வாசிப்பு பணி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிலவன் ஐயா...
தங்களின் கருத்துப் பார்த்து ரொம்ப சந்தோஷம்... ஒரு பல்கலைக் கழகம் இந்த பாடசாலைக்கு பாராட்டுச் சொல்வதென்பது கிடைக்காத பரிசு.

இங்கு தமிழ் சங்கங்கள் என்று எதுவும் இல்லை ஐயா... பாரதி நட்புக்காக என்றொரு அமைப்பு உண்டு. வருடம் ஒரு முறை பட்டிமன்றம் பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் வைப்பதோடு சரி.

திரு. லியோனி அவர்கள் கூட இருமுறை இங்கு பட்டி மன்றம் நடத்தியிருக்கிறார். மற்றபடி இதழ்கள் எல்லாம் வருவது இல்லை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பரின் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி! அருமையாக எழுதியுள்ளீர்கள்.அவரது எழுத்தைக் கேட்கவும் வேண்டுமா!!! வீச்சுதான்..கவரும்..வீச்சு!

அட அப்ப கில்லர் ஜி யும் அபுதாபிதானே! சந்தித்திருக்கின்றீர்களோ?!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தங்கள் வாசிப்பனுபவம் விரைவில் வரட்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அண்ணன் கில்லர்ஜியை இரண்டு முறை சந்தித்து பேசிவிட்டேன். இப்போதுதான் அவர் அபுதாபி என்பது தெரியும். தொடர்பில் வந்தார். இப்போ நட்பில் இருக்கிறோம்.
அதேபோல் மகேந்திரன் பன்னீர் செல்வம் அண்ணனும் இங்குதான் இருக்கிறார். மூவரும் கூட்டணி அமைச்சாச்சு....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அண்ணன் கில்லர்ஜியை இரண்டு முறை சந்தித்து பேசிவிட்டேன். இப்போதுதான் அவர் அபுதாபி என்பது தெரியும். தொடர்பில் வந்தார். இப்போ நட்பில் இருக்கிறோம்.
அதேபோல் மகேந்திரன் பன்னீர் செல்வம் அண்ணனும் இங்குதான் இருக்கிறார். மூவரும் கூட்டணி அமைச்சாச்சு....

Unknown சொன்னது…

புத்தகம் கையில் கிடைத்த உடனே படித்து முடித்து பதிவைப் போட்டதில் இருந்தே தெரிகிறது ,உங்களின் வாசிப்பு வேட்கை !
த ம 2

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஆஹா...
படித்து முடித்து அந்த கதகதப்பு நெஞ்சிலிரும்போதே,
வாசிப்பனுபவத்தை பதிவிலிட்டு எங்களையும்
உணரச் செய்துவிட்டீர்களே!
சிறப்பான நூலாய்வு!
நன்றி!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

. இனி வரும் காலங்களில் வரலாறாய் பேசும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சிறப்பான ஆய்வு.

Angel சொன்னது…

வாசிப்பது என்பது சுவாசிப்பது போலதான் சிலருக்கு !! உங்கள் வாசிப்பு அனுபவம் அருமை .கரந்தை தர்மாம்பாள் பற்றி அவர் பதிவில் வாசித்தேன் ..நாங்கள் எழுதி கொடுத்தா இங்கே லைப்ரரியில் சென்னையில் இருந்து இப்புத்தகங்கள் கிடைக்கும் .பதிப்பக முகவரிக்கு நன்றி .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா...!

அவரது தேடல்கள் அளவில்லாதவை...!

அடுத்த பதிவர் சந்திப்பிற்கு நீங்களும் அவரை சந்திக்கலாம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே
தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்து போய் நிற்கின்றேன்.
நன்றி நன்றி நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 6

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கரந்தையில் தமிழ் சங்கம் அமைந்த வரலாறை ஜெயகுமார் எழுதுவதற்கு முன்பாக அறிந்ததில்லை. அங்கு தோன்றிய அறிஞர்களின் சிறப்புகளை அறிந்து மகிழ்ந்தேன்.