மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 2 நவம்பர், 2014மனசு பேசுகிறது : எங்க ஊர்

ங்க ஊரு... பேச்சு வழக்கில் எங்கூரு... பரியன் வயல். தேவகோட்டையில் இருந்து மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்கும் மிகச் சிறிய கிராமம். கண்டதேவியில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள ஊர்தான் எங்கூரு. மூன்று குலதெய்வங்களைக் கொண்ட பங்காளிகள் இருந்தாலும் எல்லாரும் சித்தப்பன் பெரியப்பன் என்ற உறவுக்குள் வருபவர்களே. எல்லாருமே சொந்தங்கள்தான். விவசாயத்தை நம்பி வாழ்ந்த மக்கள் இன்று விவசாயமே இல்லாமல் வாழ்கிறார்கள்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது தேவகோட்டையில் இருந்து எங்கூருக்கு  முழுமையான ரோடு கூட கிடையாது ஊரில் இருந்து பாதித் தூரம் வரை சரளை ரோடும் அதன் பிறகு கொஞ்சத் தூரம் ஆவாரம் செடிகளுக்கு இடையில் செல்லும் ஒற்றையடிப் பாதையும்தான் இருந்தது. அதன் பிறகு பிரசிடெண்ட் முயற்சியில் ரோடு வந்தது. ஆனால் அதிலும் பிரச்சினைதான்... காரணம் எங்கூருக்குச் செல்லும் பாதையில் பாதி வரை நகராட்சி... அதற்கு மேல் பஞ்சாயத்து... பஞ்சாயத்து பிரசிடெண்ட் முயற்சியில் பாதிவரை வந்த ரோடு நகராட்சி என்பதால் அதற்கு மேல் எப்பவும் போல் ஒற்றையடிப் பாதையாகத்தான் இருந்தது. வெயில் மழை எதுவென்றாலும் அதில்தான் எங்கள் பயணம் எல்லாம்... இரவு நேரத்தில் அமாவாசை இருட்டு என்றாலும் எங்கள் சைக்கிளுக்கு எங்கு தாவு இருக்கிறது எங்கு மேடு இருக்கிறது என்பதெல்லாம் தெரியும். சும்மா வளைந்து நெழிந்து பறக்கும்முல்ல...

அப்படியே போன எங்கள் பயணத்தில் மொத்தமாக வளைத்துப் போடப்பட்ட கரும்புத்தோட்டடத்தால் பாதைக்கு பங்கம் வந்தது. அப்போது கரும்புத் தோட்டம் போட்டவர்களே எங்கூரு ரோட்டுப் பக்கமாக அவர்களுக்கு ஒரு கேட் வைத்து அந்தப் பக்கம் பாதை வந்தால் இதில்தான் வரவேண்டும் என்பதை அறிந்து அந்த வழியைச் சுத்தம் செய்து கொடுத்தார்கள். அது ஆரம்பத்தில் முள்ளும் கல்லுமாக இருந்ததால் ஒத்தையடிப் பாதையாகத்தான் பயன்பட்டது. பின்னர் தேவகோட்டை நகராட்சித் தலைவரிடம் சொல்லி அந்த ஏரியா கவுன்சிலரைப் பார்த்து பேசி ஒரு வழியாக தேவகோட்டயில் இருந்து முன்பு நரிக்குறவர் இருந்த பகுதி வரை வந்த ரோட்டில் இருந்து எங்க பஞ்சாயத்து ரோடு வரைக்கும் தார் ரோடு போட வைத்தோம். 

எங்க ஊரில் மாரியம்மன் , முனியய்யா, கருப்பர், நாச்சியம்மன், ஐயனார் கோவில்கள் இருக்கின்றன. நாகர் என்று கண்மாய்க்குள் இருக்கும் மரத்தில் சாமி கும்பிடுவோம். கோழி எல்லாம் நறுக்கி வருவோம். தற்போது அதெல்லாம் இல்லாமலே போய்விட்டது. ஐயனார் கோவில் எங்க ஊருக்கும் கண்டதேவிக்கும் இடையில் எங்க கண்மாய்க்குள் இருக்கிறது. முன்பு திருவிழாவின் போது எருதுகட்டு நடைபெற்றதாகவும் பின்னர் முதல் மரியாதை எந்த ஊருக்கு என்ற பிரச்சினையில் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அப்பா சொல்வார். இப்போது எங்க மாரியம்மன் செவ்வாயின் போது காப்புக்கட்டும் முன்னர் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு விட்டு வருவோம்.

 (அம்மன் கோவில் - அருகே முன்புறம் கிடுகும் பின்னணியில் ஓடுமாய் தெரிவதுதான் எங்க வீடு)

பள்ளியில் படிக்கும் காலத்தில் மாரியம்மனுக்கு செவ்வாய் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். செவ்வாய் தொடர்பாக ஊர்க்கூட்டம் நடக்கும் அதில் சுமூக முடிவு என்பது கிட்டாமல் எப்படியும் சண்டை வந்துவிடும். அத்தோடு அந்த வருட செவ்வாய்க்கு அரோகராதான். பின்னர்தான் சில பல சண்டைகளை முடித்து இளவட்டங்கள் இறங்கி திருவிழாவை ஆரம்பித்து வைத்தோம். அது முதல் வருடா வரும் சித்திரை இரண்டாம் செவ்வாய் காப்புக்கட்டி மூன்றாம் செவ்வாய் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முன்னர் செவ்வாய் என்பது கரகம் வைத்தல், கலை நிகழ்ச்சி, விருந்து  என்ற அளவோடு இருந்தது. தற்போது தேவகோட்டை சத்திரத்தார் ஊரணியில் இருந்து பால்குடமும் எடுக்க ஆரம்பித்து அது வருடா வருடம் மிகச் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. சிறிய கிராமம் என்பதால் எங்கள் ஊர் திருவிழா பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறப்பாகத்தான் இருக்கும். முன்பு ஓட்டுக் கொட்டகையாக இருந்த அம்மன் கோவில் இப்போது மிகவும் அழகிய கோவிலாக நிற்கிறது.

எங்க முனியய்யா, ஊருக்குள் நுழையும் இடத்தில் எங்க கண்மாய்க் கரையில் காவல் தெய்வமாய் நிற்கிறார். இவர் கண்மாய்க்குள் இருப்பதால் எங்கள் கண்மாயில் பெண்களில் வயதானவர்கள் தவிர மற்றவர்கள் குளிப்பதில்லை. ஊருக்குப் பின்புறமாக இருக்கும் கண்மாயில்தான் குளிப்பார்கள். மிகவும் வேகமான தெய்வமாக இருக்கும் எங்க முனியய்யா... சுத்த சைவம்... புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று பொங்கல் வைத்து கும்பிடுவோம்.  ஊருக்கு ரோடு இல்லாமல் குளக்கால் வழியாகத்தான் வருவார்களாம். அப்போது எங்கப்பா கடை அடைத்து இரவு வரும் போது மெயின் ரோட்டில் இருந்து குளக்காலில் இறங்கிவிட்டால் சைக்கிளை உருட்டத்தான் வேண்டுமாம். அந்த இரவு நேரத்தில் அவருக்கு முன்பாக ஒரு வெள்ளை உருவம் வருவது போல் தெரியுமாம். கண்மாய்க்கரை வந்ததும் அது மறைந்து விடுமாம். இது அவருக்கு தினசரி நடக்குமாம். இப்பவும் எங்கப்பா முனியய்யா மீது அதிக பக்தி வைத்திருப்பார். எந்த ஒரு காரியத்தையும் அவர் முன் வைத்து திருவுலம் கேட்காமல் செய்யமாட்டார். எனக்கும் அவர் மீது அதிக மரியாதை... திருமணத்துக்குப் பிறகு எங்கள் வாழ்வில் நடந்ததை முன்னரே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். பிரிதொரு பகிர்வில் பகிர்கிறேன்.

வன்னியும் பூவரசும் இணைந்து இருக்கும் இடத்தில் இருந்த முனியய்யா வேல், பூவரசு உடைந்து அதன் மேல் விழுந்து அமுக்கியதில் நீண்ட நாட்கள் வளைந்தே இருந்தது. அதை எடுத்துச் சரிசெய்ய அதில் இருக்கும் நல்ல பாம்புகளுக்காகவே யாரும் முன்வரவில்லை. இரவு நேரத்தில் கோவிலுக்கு அருகில் வந்தாலே உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைக்கும். வேலின் மீது படுத்துக் கிடந்ததாக பார்த்த சிலர் சொல்வார்கள். பின்னர் ஊருக்கு வருவோர் எல்லாம் ஊருக்குள்ள நுழையும் போது முனியய்யாவை இப்படி கூனலாக வைத்திருக்கிறீர்களே அப்புறம் எப்படி ஊரு செழிப்பா இருக்கும் என்று சொன்னதும் அதற்காக செய்ய வேண்டியதைச் செய்து கல்லால் ஆன மேடையை உயரமாக அமைத்து முனியய்யாவை ராஜாவாக நிற்க வைத்தோம். அதன் பிறகு அவர்கள் சொன்னது போல் விவசாயம் பொய்த்து வந்த எங்கள் ஊர் தொடர்ந்து விளைய ஆரம்பித்தது. 

கருப்பர் கோவில் ஊருக்கு மற்றொரு எல்லையில் கண்டதேவிக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இங்கும் நாங்களெல்லாம் பிறக்கும் முன்னர் வெற்றியூர் கருப்பரைக் கும்பிடும் நாலைந்து ஊர்கள் சேர்ந்து கிடா வெட்டு வைப்பதாகவும் கருப்பர் ஆடுபவருக்கு அரிவாளைத் தீட்டித் தீட்டி கொடுப்பார்கள் என்றும்... அவர் அந்த அருவா மீது ஏறி நின்று ஆடி பின்னர் ஆட்டின் கழுத்தை ஒரே வெட்டில் தனியாக விழச் செய்வார் என்றும் தலை தனியாக விழாமல் தொங்கினால் அது ஊருக்கு நல்லதல்ல.. விளையாது அல்லாது எதாவது நோய் வரும் என்றும் சொல்வார்கள். அதன் பின்னான காலங்களில் சண்டைகளால் அந்த விழாவும் நின்று போக இப்போது சாமி மட்டுமே கும்பிடுகிறார்கள். மாட்டுப் பொங்கல் அன்று ஊரே கூடி கருப்பர் கோவில் பொட்டலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வருவோம்.

எங்கள் ஊரில் இருந்து வெற்றியூருக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமிக்கு கருப்பர் சாமி ஆடும் அம்பலார் காவடி எடுத்துப் போய் பூக்குழி இறங்கி வருவார். அவருக்கு அந்த கருப்பு அங்கியும் சலங்கையும் மிகச் சிறப்பாக இருக்கும். அந்த உடையில் அவரின் தோரணை சாட்சாத் கருப்பனே நேரில் வந்தது போல் இருக்கும். மிகச் சிறப்பான நிகழ்வாக தொடர்ந்த நிகழ்வு அது. வெற்றியூரிலும் எங்க கருப்பருக்கு மிகச்சிறந்த வரவேற்பு இருக்கும். ஒருமுறை எங்க கருப்பருக்கு என்று வளர்த்த பூவில் மற்றொருவர் இறங்கிவிட, இதை வெளியில் சொல்லக் கூடாது என்று அந்த ஊரார் மறைத்து விட, வழக்கம் போல் கருப்பர் பூவில் இறங்க வந்து அப்படியே நின்று ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு பூவில் இறங்காமல் விலகிப் போய்விட்டார். பின்னர் என்னப்பா என்னைய எச்சிப் பூ இறங்கச் சொல்றே... இனி நான் இங்கு வரமாட்டேன்டா என்று சொன்னதுதான் கடைசி வருடம்... அதன் பின் காவடி எடுப்பு நின்றுவிட, அதே பங்காளி வகையறாவில் ஒருவர் நான் எடுக்கிறேன் என்று எடுக்க ... அந்த வருடம் பல சிக்கல்களைச் சந்தித்து இறுதியில் அவரின் ஐயா அங்கே மரணிக்க அவரின் உடலைச் சுமந்து கொண்டு திரும்பினார்கள். அத்தோடு காவடி எடுக்கும் எண்ணம் யாருக்கும் வரவில்லை. அப்பா சொல்வார் ஒருவர் சாமி எனக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டால் அந்த பங்காளிகளில் சாமி ஆட விருப்பம் உள்ளவர்கள் எல்லாம் இரவு கோவிலில் வந்து படுப்பார்கள் என்றும் அதில் ஒருவருக்கு சாமி வரும் என்று சொல்வார். அதை குருவும் கொலையும் கொடுக்கிறது என்பார்.

வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் மழை பெய்ததும் உழவு செய்து நாற்றுப் பாவி ஊரெங்கும் பச்சைப்பசேல் என்று இருக்கும். ஆனால் சில காலமாக அருகில் இருக்கும் கோவில் மாட்டுப் பிரச்சினையில் பார்க்க முடியாமல் போய் ஏறக்குறைய நாற்பத்தி நாலரை ஏக்கருக்கு மேல் கருவை மண்டிக்கிடந்தது. தற்போது கருவையை ஒழிக்கும் ஒரு அமைப்பு அனைத்தையும் வெட்டி சுத்தம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் இளைஞர்கள் எல்லாருமே பொழைப்பைத் தேடி வெளியேறி விட வீட்டுக்கு வீடு விளைந்த மனிதர்களே இருக்கிறார்கள். அவர்களால் ரோட்டில் போய் வர முடியுமே தவிர வயலுக்குள் இறங்கி எல்லாம் வேலை பார்க்க முடியாது. விவசாயம் என்பது எங்கள் ஊரை விட்டுப் போய் வருடங்கள் பல ஆயிப்போச்சு.

அனைவரும் சொந்தமாக இருந்தாலும் அப்போ அப்போ சின்ன உரசல்களும் பெரிய சண்டைகளும் வருவதுண்டு. அப்படி வரும் சண்டைகள் பெரும்பாலும் ரொம்ப நாள் நீடிப்பதில்லை. முன்னர் விவசாய நேரத்தில் உன்னோட மாடு எங்க வயல்ல இறங்கிடுச்சு... என்று சண்டைகள் வருவதுண்டு. இப்போது விவசாயமும் இல்லை... மாடுகளும் இல்லை என்பதால் அந்தச் சண்டைகள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. நல்லதோ கெட்டதோ ஊரே கூடி நின்று செய்வதில் இருக்கும் சுகத்தை அனுபவிப்பது கிராமத்து மக்கள் மட்டுமே... அந்தச் சுகத்தை இப்போது தவற விட்டாலும் படிக்கும் காலத்தில் நன்றாக அனுபவித்து இருக்கிறேன். எல்லாரும் ஒற்றுமையாய் நின்று செய்யும் காரியங்கள் என்றுமே சுகமானவைதான்.

காலையில் எழுந்ததும் ஒரு குழுவாக வெளிய சென்று வருவது.... விவசாயக் காலத்தில் பச்சைப் பசேல் என்ற வயல்வெளியில் வரப்பில் நடந்து வருவது... நிறைந்து கிடக்கும் கண்மாயில் எல்லா விதமான நீச்சலும் அடித்து மணிக்கணக்கில் குளிப்பது... தேங்காய் திருடிச் சாப்பிடுவது... மாங்காய் களவாடுவது... மழை நாளில் பத்தக்கட்டை போட்டு மீன் பிடிப்பது... வேறு ஊருக்குச் செல்லும் குளக்காலில் இருந்து மழை நீரை எங்க கண்மாய்க்கு திருப்பி விட்டு கண்மாய் நிறைகிறதா என குச்சி நட்டு வைத்துப் பார்ப்பது... மழை நேரத்தில் கொங்காணி அணிந்து அல்லது குடை பிடித்து மாடு மேய்ப்பது... கொட்டாங்கிழங்கு, பொங்கல் என மாடு மேய்க்கும் போது கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவது... திருவிழாவின் போது மைக்செட்காரரிடம் பிடித்த பாடலைப் போடச்சொல்லி சந்தோஷப்படுவது.... சீசனுக்கு ஏற்றவாறு பம்பரம், கோழிக்குண்டு, கிட்டிப்புல் விளையாடுவது... கபடி விளையாடுவது... பனமர நொங்கு சாப்பிட்டு விட்டு அதில் வண்டி செய்து ஓட்டுவது... டயர் வண்டி ஓட்டுவது... களி மண்ணில் பொம்மைகள் செய்வது... பனங்கொட்டையில் பொம்மைகள் செய்து நிலைவாசலில் மாட்டியது... காரம்பழம், சூரம்பழம், சப்பாத்திக் கற்றாழைப் பழம் என எல்லாம் பறித்துச் சாப்பிடுவது... பக்கத்து ஊருக்கு நாடகம் பார்க்க சைக்கிளில் போவது... இன்னும் இன்னும் நிறைய சந்தோஷங்களை தாங்கி நிற்கும் மனசுக்குள் எப்போதும் பசுமையாய் எங்கள் ஊர். இப்போது வாழ்க்கை நிமித்தம் தேவகோட்டையில்  இருந்தாலும் மனதில் இருப்பது எங்க ஊர்தான்... எங்க ஊரையும் ஊர் மக்களையும் நிறைய விரும்புகிறேன்.

எங்கள் சந்தோஷமாக முனியய்யாவுக்கு காலாகாலத்துக்கும் நீடித்து நிற்கும் மேடை அமைத்ததும்... மாரியம்மனுக்கு மிகச் சிறப்பான கோவிலைக் கட்டியதும்... தேவகோட்டையில் இருந்து தார் ரோடு இருந்தாலும் தற்போது கண்டதேவியில் இருந்து எங்கள் பிரசிடெண்ட் முயற்சியால் மிகச் சிறப்பான ரோடு போட்டதும்... அதேபோல் கண்டதேவியில் இருந்து வந்த மின்சாரம் மழை நேரத்தில் மரங்களின் காரணமாக மூன்று நான்கு நாட்களுக்கு வராத நிலை மாற்ற தேவகோட்டையில் இருந்து மின்சாரம் கொண்டு வந்து ஊருக்குள் டிரான்ஸ்பார்மர் கொண்டு வந்தது... தண்ணீருக்காக கண்டதேவி, மன்னன்வயல் என எல்லாப்பக்கமும் இருந்து குழாய்கள் போட்டும் பயனில்லாமல் தவித்த போது முன்னால் பிரசிடெண்ட்டிம் சொல்லி ஊருக்குள் போர் போட்டு டேங்க் கட்டி வீட்டுக்கு வீடு பைப் வசதி பண்ணிக் கொண்டது என எல்லாச் சந்தோஷங்களும் என்றும் மனசுக்குள் இருக்கும். 

என்னடா இவன் ஊர் புகழ் பாடுறானேன்னு பாக்குறீங்களா...? இது என்னுடைய "700" வது பதிவு. அதனால் உங்களுடன் என் ஊர்... என் மக்களை நினைத்துப் பார்க்கும் பகிர்வாக பகிர நினைத்து கிறுக்கியதுதான் இது. வலையில் எழுத ஆரம்பித்து நான்கு வலைப்பூக்களில் எழுதி, பின்னர் நண்பர்களின் ஆலோசனைப்படி மனசு என்ற இந்த தளத்தில் மட்டும் தொடர்ந்து எழுதி உங்கள் ஆதரவால் பல லட்சங்களில் பார்வையாளர்களைக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் நான் இதுவரை மொத்தமாக "895பதிவுகள் எழுதியிருக்கிறேன். இது எல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியம்... உங்கள் ஊக்கமும் உற்சாக பின்னூட்டங்களும் இல்லை என்றால் என்றோ கடையை மூடிவிட்டுப் போயிருப்பேன். என்னைத் தொடரும் "316பேருக்கும்... தொடரவில்லை என்றாலும் தொடர்ந்து படிக்கும் உறவுகளுக்கும் நான் தொடர்ந்து வாசிக்கும் உறவுகளுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்... தொடரும் உங்கள் அன்பு இன்று போல் என்றும் நிலைத்திருக்கட்டும்... 

அனைவருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

16 கருத்துகள்:

 1. 700 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ..விரைவில் ஆயிரமாக வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் :)
  இன்றைய பதிவு கமகமன்னு மணக்குது ..உங்க ஊர் நினைவுகளின் வாசம் ....
  வாய் பிளந்து வாசித்துகொண்டிருந்தேன் !! உங்க ஊரை நீங்க எவ்வளவு நேசித்திருந்தா ஒவ்வோர் நிகழ்வையும் அழகாய் நினைவு கூர்ந்து இங்கே பகிர்ந்திருப்பீங்க !!

  பதிலளிநீக்கு
 2. தங்கள் பதிவுகள் தரமனவை - அவை
  எழுநூறைத் தாண்டினாலும்
  பலநூறு அல்ல
  தொடர்ந்து பல்லாயிரம் வரை எழுத
  எனது வாழ்த்துகள்!
  ஊர்க்/ கிராமத்துக் கதை
  ஒரு தனிச் சுவை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 3. //தொடரும் உங்கள் அன்பு இன்று போல் என்றும் நிலைத்திருக்கட்டும்.//

  மேலும் பல நூறு பதிவுகள் மலர வேண்டும்..

  அன்பின் நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. சொந்த ஊருக்கு இணையான நிகரான ஊர், இவ்வுலகில் எங்கும் இல்லை
  நண்பரே
  வாழ்த்துக்கள்
  தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி

  பதிலளிநீக்கு
 5. 700 வது பதிவு அருமை. ஊரின் வாசத்தில் நானும் ஊலா வந்து மகிழ்ந்தேன். சொந்த ஊரின் அனுபவங்கள் என்றும் மனதின் கல்வெட்டுக்கள் தான். ஆம் அப்போதுள்ள பசுமை இப்போது இல்லை. மேலும் பலபல பதிவுகள் எழுதுங்கள். ஆயிரம் ஆயிரமாய் வளர்ந்து செழிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. இரவு நேரத்தில் அமாவாசை இருட்டு என்றாலும் எங்கள் சைக்கிளுக்கு எங்கு தாவு இருக்கிறது எங்கு மேடு இருக்கிறது என்பதெல்லாம் தெரியும். சும்மா வளைந்து நெழிந்து பறக்கும்முல்ல...

  கிராமத்துக்கே போயாச்சு உங்க பதிவைப் படிச்சதும் !

  பதிலளிநீக்கு
 7. சாதாரணமாகவே சொந்த ஊர் நினைவுகள் மறக்க முடியாதது. அதுவும் வெளிநாட்டில் இருந்தால் கேட்கவா வேண்டும்?

  700 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. பரியன் வயல் என்ற பெயரே அழகாக இருக்கிறது 700வது பதிவில் உங்கள் ஊரினை சிறப்பித்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

 9. ஊரிலிருந்து வந்த எம்மை மீண்டும் ஊருக்கே அழைத்துப்போய் விட்டீர்கள் நண்பா,,,,,விரைவில் 1000 த்தைதொட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. சொந்த ஊரைப் பற்றி நினைப்பது ஒரு சுகம் அந்த இனிமையை நாங்களும் அனுபவித்தோம்.

  பதிலளிநீக்கு
 11. கருத்திட முனையும்போது Word verification குறுக்கிடுகிறது. நீக்கி விடவும்

  பதிலளிநீக்கு
 12. ஊர் நினைவுகள் அருமை. 700 பதிவு இன்னும் லட்சங்களில் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. சொந்த ஊர் நினைவுகள் என்றுமே சுகமானவை தான்...

  700-வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே.!

  கிராமத்தின் வாசனை மாறாது சிறந்த நடையில் பதிவை எழுதியிருக்கிறீகள்.! சொந்த மண்ணின் சிறப்புக்கள்,மனதை விட்டு என்றுமே அகலாதவை.!

  தங்கள் 700-வது பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

  என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. எத்தனாவது பதிவூ ...!!!!?????
  அம்மாஆஆஆஆடியோவ்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...