மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 8 நவம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 7)

முந்தைய பகுதிகள் : 


பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4      பகுதி-5      பகுதி-6


---------------------------------

ஆறாவது பகுதியின் இறுதியில்...

"ஏய்... அதெல்லாம் இல்லடா... சும்மாதான் போன் பண்ணினேன்..." என்று மணி சொன்னாலும் 'அண்ணன் சும்மா இந்த நேரத்துல போன் பண்ண மாட்டாதே.. சரி என்ன சொல்லுதுன்னு பாப்போம்' என்ற யோசனையோடு "ம்... ஊருக்குப் பேசினியா?" என்றான்.

"ம்... அம்மாக்கிட்ட அன்னைக்குப் பேசினேன்... அப்பா ஏதோ சறுக்கை அடைக்கப் போயிருக்காருன்னு சொன்னுச்சு..."

அண்ணனே தொடரட்டும் என "ம்" என்று சொல்லிவிட்டு காத்திருந்தான்.

இனி...

ண்ணனே தொடரட்டும் என குமரேசன் 'ம்' கொட்ட, "அப்புறம் அப்பா பேசினாரா?" மெதுவாகக் கேட்டான் மணி.

"ஆமா அன்னைக்குப் பேசினாராம்... நா வெளியில பொயிட்டேன்... அபிதான் பேசினாளாம்... என்னைய பேசச் சொன்னா... இன்னுந்தான் பேசுறேன்..." 

"என்ன காசு கீசு கேட்டாரா?"

"ஆமா... உரம் போடணுமின்னு சொன்னாரு போல... ஏண்ணே?"

"எங்கிட்ட கேட்டாரு... இப்பக் கொஞ்ச டைட்டா இருக்கு... அதான் தம்பிக்கிட்ட வேணுமின்னா கேளுங்கன்னு சொன்னேன்... அதான் கேட்டாரான்னு கேட்டேன்.."

"ஆமா மழ வேற பேஞ்சிருக்கு... இப்ப பொதி கட்டியிருக்கிற பருவம்... அரிசி பால் பிடிக்கயில பொத்துக்குடிப்பான் வந்தா எல்லாம் போயிருமுல்ல... எல்லாரும் உரங்களையும் மருந்துகளையும் அள்ளித் தெளிக்க ஆரம்பிச்சிருப்பானுங்க... இவருக்கிட்ட காசு இருக்காதுல்ல... அதான் கேட்டிருப்பார்..."

"கேட்டிருப்பாருன்னா... நீ இன்னும் அனுப்பலையா?"

"இல்லண்ணே... அபி ஏதோ கையில இருந்ததை அனுப்பினாளாம்... என்னைய கொஞ்சம் அனுப்புங்கன்னு சொன்னா... தினமும் மறந்துட்டுப் போயி திட்டு வாங்குறதுதான் வேலயா இருக்கு... இன்னைக்காச்சும் ஆபீஸ் பையனுக்கிட்ட கொடுத்து அனுப்பனும்..."

"ம்... அனுப்பும் போது ஒரு ரெண்டு ரூபா சேத்து அனுப்பு... நா உனக்கு அனுப்பி வைக்கிறேன்..."

"எனக்கு அனுப்புறதை நீயே நேர்ல அனுப்ப வேண்டியதுதானே...?"

"இல்லடா... உங்க அண்ணியப் பத்தித்தான் தெரியுமே... அங்க பணம் அனுப்புனது தெரிஞ்சா உள்ளதுக்கு செரமமா இருக்குன்னு குதிப்பா... நம்ம அப்பாவும் எதைக் கொடுத்தாலும் தம்பட்டம் அடிக்காத குறையா எல்லாருக்கிட்டயும் சொல்லி வருவாரு... அவகிட்டயே தம்பி அனுப்புன பணம் வந்திருச்சின்னு சொல்லும்மா சொல்லுவாரு... அப்புறம் அதனால எங்களுக்குள்ள பிரச்சினை வரும்... அதான்..."

"எனக்கு அனுப்புனா மட்டும் தெரியாதா என்ன... ம்... சொந்தம்ன்னு வந்த அண்ணி இப்படி ஆயிட்டாங்களேண்ணே... சரி... சரி... நீ ஒண்ணும் எனக்கு அனுப்ப வேண்டாம்... நானே அனுப்பிட்டு அம்மாக்கிட்ட அண்ண கொடுத்த காசும் சேத்து அனுப்பியிருக்கேன்னு சொல்லி அப்பாக்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிடுறேன்... அது சொல்லாது.. பாத்துக்கண்ணே... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..."

"சரிடா... அனுப்பிட்டு சொல்லு உனக்கு அனுப்பி வைக்கிறேன்... உனக்கெதுக்கு சிரமம்.."

"ஒரு சிரமமும் இல்ல... வேணுமின்னா கேட்டு வாங்கிக்கிறேன்... எனக்கு நீ செய்யாததா... விடுண்ணே... மகாகுட்டிய சாயந்தம் மிஸ்டு கால் விடச் சொல்லு... புள்ளக அக்காகிட்ட பேசணுமின்னு சொல்லிக்கிட்டே இருக்குக... அண்ணியக் கேட்டேன்னு சொல்லு..." என்றபடி போனை வைத்தவன் ஆபீஸ் பையனிடம் பணம் கொடுத்து விவரம் எழுதி அனுப்பச் சொல்லிவிட்டு கட்டுரையில் மூழ்கினான்.

"மாப்ள சித்த படுக்குறீகளா?" சாப்பிட்டு வந்து அமர்ந்த அழகப்பனிடம் மெதுவாகக் கேட்டார் கந்தசாமி.

"இல்ல மாமா... மத்தியானத்துல படுக்குறதில்லை... அது கெட்ட பழக்கமாத் தெரியுது" 

"சரித்தான்... எனக்கெல்லாம் கொஞ்ச நேரம் கட்டைய நீட்டுனாத்தான் நல்லாத்தெரியுது" 

"அப்ப படுங்க மாமா..." என எழுந்தார். 

"இல்ல... இல்ல நீங்க இருங்க... நா தரையில படுத்துக்கிறேன்..." என்றபடி கட்டிலுக்கு அருகே தரையை துண்டால் தட்டிவிட்டு அதே துண்டை விரித்து படுத்துக் கொண்டார்.

"ஏய் சுந்தரி... மாமாவுக்கு ஒரு தலாணி எடுத்துக் கொடு..." 

"அதெல்லாம் வேண்டாந்த்தா... சித்த கண் அசருறதுக்கு தலாணி எதுக்கு" என்றபடி கையைத் தலையணை ஆக்கினார்.

"மாமா.. ஒரம் வேணுமின்னா சொல்லுங்க... நாளக்கி ஏத்திவிடுறேன்... அப்புறம் எல்லாரும் மருந்தடிச்சி ஒரம் போட்டுட்டா நம்ம வய நாசமாயிடும்..."

"சின்ன மருமவ பணம் அனுப்பியிருக்கு... சாயந்தரம் போயி வாங்கிக்கிட்டு வரணும்... ஐயரு வீட்ல போஸ்டாபீஸ் இருக்கதால எப்ப போணாலும் வாங்கிட்டு வரலாம்... கண்ண கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னான்... வாங்கியாந்து தாரே... நாளக்கி ஒரமூட்டையும் மருந்து வாங்கி கொடுத்து விடுங்க..."

"என்னது அபியா பணம் அனுப்புச்சு... பயலுவ பணம் அனுப்புறதில்லையா என்ன... எம்புட்டு மாமா வேணும் நாந்தாறேன்..."

"அய்யோ... அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... ஒண்ணுக்கு ரெண்டு பயலுக இருக்கயில மாப்ளக்கிட்ட காசு வாங்கினா நல்லாவா இருக்கும்... அதெல்லாம் கொடுத்துத்தான் விடுறானுங்க... அவனுகளுக்கும் செலவிருக்கும்ல்ல... புள்ளக படிக்கிதுக... டவுனுக்குள்ள தொட்டது தொன்னூறுக்கும் காசு... என்ன பண்ணுவானுங்க... சின்னவனுக்குத்தான் பணம் கேட்டு போன் பண்ணினேன்... ஆளில்ல... அந்தப்புள்ளதான் எடுத்துச்சி... ஏம்மாமா எங்கிட்ட கேட்டா தரமாட்டேனான்னு சத்தம் போட்டுட்டு மறுநா பணம் அனுப்பிச்சி வச்சிருக்கு... குணமானபுள்ள..."

"அது அனுப்புன வாங்குவீக... இந்த வீட்ல மூத்த மவன் மாதிரி நானு... நாங்கொடுத்தா வாங்க மாட்டியளா?"

"அப்படியில்லப்பா... என்ன எதுனாலும் உங்க முடிவு இல்லாம இந்த வூட்ல எதாவது நடக்குமா என்ன... கஷ்டப்பட்டா பரவாயில்ல... அதான் அவனுக அனுப்பிடுறானுங்கள்ல... அப்புறம் எதுக்கு?"

"அபி அனுப்புன காசை செலவுக்கு வச்சிக்கங்க.... என்ன ஒரம் வேணு... மருந்து வேணுமின்னு சொல்லுங்க... நா வாங்கி போட்டு விடுறேன்... எனக்கு அப்பனாத்தாவா இருக்காவ... எல்லாமே நீங்கதானே... உங்களுக்குச் செய்யாம ஆருக்குச் செய்யப்போறே..."

"பொம்பளப்புள்ள பெரியவளாயிட்டா.. படிப்ப முடிச்சதும் கட்டிக் கொடுக்கணும்.. நாலு காசு சேத்து வக்கணுமில்லப்பா... அப்ப கையை பெசஞ்சிக்கிட்டு நிக்க முடியுமா?" மெதுவாகச் கேட்டாள் காளியம்மா

"அவ கலியாணத்துக்கு எல்லாம் இருக்கு அயித்த... ஒண்ணுக்கு நாலு மாமங்க இருக்கானுக... ஒத்த மருமவளுக்குத்தானே செய்யப் போறானுவ... அப்புறம் எல்லாம் பயலுகதானே... ஜாம்ஜாம்ன்னு செஞ்சிடமாட்டானுக" என்று சொன்னபோது மனைவியுடன் வந்தான் கண்ணதாசன்.

"அத்தான்... எங்க மருமவ கலியாணத்தை நாங்க ஜாம்ஜாம்ன்னு கலக்கிடுவோம்... எங்க செல்ல மருமவளுக்கு என்ன வேணுமின்னாலும் செய்வோம்..." என்றான் சந்தோஷமாக.

"இந்த சந்தோஷந்தேன் கடைசி வரைக்கும் இருக்கணும் மச்சான்... நீங்க நாலு பேரும் என்னைக்கு இதே ஒத்துமையோட இருக்கணும்டா... அது போதும் எனக்கு... நாளைக்கி எனக்கு ஒண்ணுன்னா எங்கத்தான்னு நாலு பேரும் வந்து நிக்கணும்... அன்னைக்கு நா பேசமாட்டேன்... அவன் பேச மாட்டான்னு ஆளுக்கு ஒரு பக்கமா திரும்பிக்கிட்டு பங்காளிகளா நிக்கப்படாது... அதுதான் எனக்கு வேணும்..."

"என்னத்தான் நீங்க... இப்படியெல்லாம் பேசிக்கிட்டு... எங்களுக்கு நீங்கதான் எல்லாம்... நீங்க என்ன சொல்லுறியளோ அதுதான் எங்களுக்கு வேதவாக்கு... எங்க மூணு வீட்டுக்குமே சித்தப்பாதான் எல்லாமே... அவருக்கு அடுத்து நீங்கதான்... இனி இப்படியெல்லாம் பேசாதீக... நாங்க நாலு பேருமே என்னைக்கும் இப்படித்தான் இருப்போம்... அடிச்சிக்கிட்டு பங்காளிகளா நின்னு என்ன ஆகப்போகுதுத்தான்..." என்றபடி அவருக்கு அருகில் அமர்ந்தான்.

"எனக்கு கண்ணதாசனைப் பற்றித் தெரியும்... மாமா அடிக்கடி சொல்லுவாக... எங்க அண்ணனை உறிச்சி வச்சிப் பிறந்திருக்கான்னு... ஆனா மத்தவனுங்க அப்படியே இருக்கணுமே..."

"எல்லாரும் அப்படியே இருப்பாக... இப்ப எதுக்கு தேவையில்லாத பேச்சு..." என கணவனைக் கடிந்து கொண்ட சுந்தரி, "நீ வாடா சாப்பிட... நீனும் வாடி... எங்க மாடு மேய்க்கப் போனியாக்கும்..." என கண்ணதாசன் மனைவியிடம் வினவினாள்.

"ஆமாண்ணி... இவுக வேலயாப் பொயிட்டாக... மாடுகள கட்டிப்போட்டா சரியா வருமா... அதான் ரெண்டு பேருவுட்டு மாட்டையும் அவுத்துக்கிட்டுப் போனேன்... இவுக வரும்போது அக்கா வந்திருக்குன்னு சொன்னாக... பாத்துக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்" என்றாள் கண்ணதாசனின் மனைவி கண்ணகி.

"அம்மாவுக்கு இந்த மருமக பக்கத்துல இருக்கதால கொஞ்சம் வேல கொறயிது... இல்லையா?"

"ஆமா எதுனாலும் ஆத்தான்னு கூப்பிட்டா ஓடியாந்திருமுல்ல... " என்றாள் காளியம்மா சந்தோஷமாக.

பேச்சு தொடர, இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள், "நீங்க தூங்குங்க மாமா வெயில் தாள நாங்க கிளம்புறோம்..." என்றார் அழகப்பன்.

"அட ஏம்ப்பா... இருந்து நாளக்கிப் போங்க... வந்து எம்புட்டு நாளாச்சி..."

"இல்ல மாமா... இங்க மாதிரி அங்கயும் ஆடு மாடுக நிக்கிதுகல்ல..."

"ஒரு நாளக்கி பக்கத்துல சொல்லி பாக்கச் சொல்லுங்க... இல்ல நீங்க போயி பாத்து கட்டிட்டு வக்கல அள்ளி வச்சிட்டு வாங்க... ரெண்டு நாளக்கி இங்கிட்டு இருந்துட்டுப் போங்க... அங்க ஆரு இருக்கா... புள்ளகளும் வெளிய இருக்குக... சம்பந்தி ரெண்டு பேருமே அடுத்தடுத்து போயி சேந்துட்டாக... அவுக இருந்தா உங்களுக்கு ஒரு ஒதவியா இருக்கும்... ம்... என்ன செய்ய... அவனுக்கும் அவசரம் கூட்டிக்கிட்டான்."

"அதுக்கு என்ன மாமா பண்ணுறது... சாவு சொல்லிட்டா வரும்... கெடந்து கஷ்டப்படாம பட்டுன்னு போயிட்டாகன்னு சந்தோஷப்பட வேண்டியதுதான்..." என எதார்த்தமாக பேசிய அழகப்பன் "என்ன சுந்தரி... இருக்கணுமா?" என்று மனைவியிடம் கேட்க, "வேண்டான்னா சொல்லப் போறேன்" என்றவளின் முகத்தில் சந்தோஷம் கூத்தாடியது.

"அதானே ஆத்தா வீட்டுக்கு வந்த மட்டும் இந்த பொம்பளப்புள்ளகளுக்கு கெளம்ப மனசு வராதே... சரி நா சாயந்தரம் பொயிட்டு சின்ன வேல இருக்கு முடிச்சிட்டு அப்படியே வீட்டுக்குப் பொயிட்டு மாடாடெல்லாம் பாத்துட்டு முத்துமாமா வீட்ல சொல்லிட்டு வாறேன்..." என்றபடி கட்டிலில் சாய்ந்தான்.

"என்னங்க... நா ஒண்ணு கேட்டா கோபிக்காம பதில் சொல்லணும்..." கணவனிடம் மெதுவாகக் கேட்டாள் சித்ரா.

"என்ன சொல்லு...?"

"உங்க தம்பிக்கிட்ட கொஞ்சம் பணம் கேக்குறீங்களா?"

"எதுக்கு அவனுக்கிட்ட பணம் கேக்கச் சொல்றே..?" 

"இல்ல... காரைக்குடியில அண்ணன் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எடம் வருதாம்... அதான் நகை கிகையை வச்சி பணம் பெரட்டி வாங்கச் சொல்லுது... அதுவும் கொஞ்சம் காசு போடுறேன்னு சொல்லுது.... உங்க தம்பிக்கிட்டதான் காசு இருக்குல்ல... இல்லேன்னாக்கூட மாமானார் வீட்ல வசதிதானே...கேட்டு வாங்கித் தரச் சொல்லுங்க... அப்புறம் கொடுத்துக்கலாம்..."

"உனக்கென்ன அறிவு கிறிவு கெட்டுப் போச்சா... மாமனாருக்கிட்ட வாங்கிக் கொடுடான்னு நா எப்படி கேக்குறது...?"

"கேளுங்கன்னா கேளுங்க... இப்படி பேசிப் பேசித்தான் எதுவுமில்லாம நிக்கிறோம்... எம்புட்டு நாளைக்குத்தான் இப்படியே இருக்கது... வாங்குறது வாய்க்கும் கைக்கும் பத்தல... கேட்டா என்ன கொறஞ்சா போயிடுவீக... இது வேண்டான்டா இந்த வருச வெவசாயம் முடிஞ்சதும் இருக்க சொத்த பங்கு வைக்க சொல்லுங்க... இப்ப கடன ஒடன வாங்கி எடத்தை வாங்கிட்டு அப்புறம் ஊர்ல எடத்தை வித்துட்டு கடனைக் கட்டிக்கலாம்...  " என்று மூக்கைச் சிந்தியபடி பாகப்பிரிவினைக்கு அடிப்போட்டவளுக்கு என்ன  பதில்சொல்வது என்று தெரியாமல் விழித்தான் மணி.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…


தொடர்கின்றேன் அருமை நண்பரே....

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

கதைக்கருவும் உரையாடலும் மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.!

கதை நகர்வு நன்றாக உள்ளது.! இப்படிபட்ட மாப்பிள்ளைகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.!

சொந்தத்தில் பெண் எடுத்தால் நன்றாகவிருக்கும் என்று நினைக்கும் நினைப்பும், சிலருக்கு சிலசமயம் எதிர்பாராத பாதிப்புக்களை தரத்தான் செய்கிறது.!

அருமை! தொடர்கிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

UmayalGayathri சொன்னது…

இப்போது தான் விட்டுப்போன பாகங்களை முடித்தேன். நன்றாக கதை பயணிக்கிறது சகோ

துரை செல்வராஜூ சொன்னது…

//மூக்கைச் சிந்தியபடி பாகப் பிரிவினைக்கு அடி போட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் மணி.//

வில்லங்கம் ஆரம்பமாகி விட்டது என நினைக்கின்றேன்...

விறுவிறுப்பு கூடுகின்றது..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விறுவிறுப்பு கூடுகிறது
தொடர்கிறேன் நண்பரே
தம 2

Kasthuri Rengan சொன்னது…

விரைவில் புத்தகமாக வர வாழ்த்துக்கள்
த ம மூன்று

Yarlpavanan சொன்னது…

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

r.v.saravanan சொன்னது…

கதையில் பிரச்னையை நுழைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் தொடரட்டும்