மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 18 டிசம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 36

முந்தைய பதிவுகளைப் படிக்க...



---------------------------------
36. பேருந்துப் பயணம்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. இருவரும் சினிமாவுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். அதற்கான நாளில் பேருந்தில் ஏறிய ராம்கி பின்னால் ஏறியவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகிறான்.

இனி...

பேருந்தில் ஓடிவந்து ஏறிய இருவரையும் பார்த்ததும் ராம்கிக்கு அதிர்ச்சியாகியது. இவனுக எங்க இங்க வந்தானுங்க... சிவ பூஜையில கரடி புகுந்த மாதிரி என்று நினைத்தபடி அவர்களைப் பார்க்காதவன் மாதிரி சன்னல் வழியாக வெளியே பார்த்தான். ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுல ஒளிந்த கதையாக மாறியது அது. 

"என்னடா... ஞாயிற்றுக்கிழமை எங்கடா கிளம்பிட்டே?" என்று அவனது முதுகில் தட்டியடி அருகே அமர்ந்தான் சேகர். அவனுக்கு பின்னிருந்த இருக்கையில் அமர்ந்தான் மணி. 

அப்போதுதான் பார்ப்பது போல் "வா... வாடா மச்சான்... எங்கடா போறே?" என்றான் வேகமாக. 

"முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு... ஞாயிற்றுக்கிழமை எங்கயும் போகமாட்டே... இன்னைக்கு என்ன புதுசா.... காரைக்குடிக்கா இல்ல வேற ஊருக்கா?"

"காரைக்குடிக்குத்தான்டா..." என்றபடி பின்னால் திரும்பி மணியைப் பார்த்துச் சிரித்தான். 

"என்ன பங்காளி... எப்படி இருக்கீங்க... அப்ப அப்ப இப்படி பார்த்து ஹாய் சொல்றதோட சரி... இன்னம் நீங்க பழசை நினைச்சிக்கிட்டே இருக்கீங்க போல..."

"சேச்சே... அப்படியெல்லாம் இல்லைங்க... எப்பவாவதுதான் நாம சந்திக்கிறோம் அதனாலதான்..." என்றவன் 'பங்காளியாம் பங்காளி... விட்டிருந்தா அன்னைக்கு நம்மளை பங்கு வச்சிருபானுங்க... ம்... சரியாத்தான் சொல்றானோ நம்மளை பங்கு வைக்க வந்ததாலதான் பங்காளின்னு கூப்பிடுறானோ' என மனசுக்குள் நினைத்த போது அவனை அறியாமல் சிரித்தான்.

"என்னடா மச்சான் சிரிக்கிறே?"

"இல்லடா... அன்னைக்கு என்னை அடிக்க வந்த உன்னோட பிரண்ட் அப்புறம் எனக்குப் பிரண்டாயாச்சு... இதெல்லாம் மாணவப் பருவத்துல மட்டும்தானே நடக்கும்... பெரியவங்களாயிட்ட இந்த மாதிரி நிகழ்வுக்குப் பின்னே ஒருவித குரோதத்தோட ரெண்டு பேரும் அத்துக்கிட்டு நின்னிருவோம் இல்லையா?"

"அப்பா... பேச்சாளா ரொம்ப யோசிப்பே நீ... ஆமா எதுக்கு காரைக்குடிக்கு... அதைச் சொல்லு... காரணம் இல்லாமப் போக மாட்டியே..."

"ஒண்ணுமில்ல... ஐயாவுக்கு ஒரு சின்ன வேலை... பொயிட்டு வர முடியுமான்னு கேட்டார். சரி வீட்டுல சும்மாதானே இருப்போம் பொயிட்டு வரலாமுன்னு சரியின்னு சொல்லிட்டேன்... நானும் இன்னொரு பிரண்ட்டும் போறோம்..."

"ஓ... அதானே பார்த்தேன்... நீ மட்டும்தான் இருக்கே... உன்னோட பிரண்டைக் காணோம்..."

"அவ... அவன் ராம்நகர்ல ஏறுவான்...." என்றான். சற்று நேரத்தில் இராம்நகர் வந்துவிட, சன்னல் வழியாக வெளியே பார்த்தவன் புவனா பேருந்தில் ஏறுவதற்காக நிற்பதைப் பார்த்ததும் 'ஐய்யோ.... ஒரு தடவை காலேசுக்கு வந்தப்போ அவளை வேற இவனுக்கு அறிமுகம் பண்ணி வச்சிருக்கோமே... ஞாபகம் வச்சி சத்தமா புவனா வாறாடான்னு சொல்லிடுவானோ... முருகா என்னைக் காப்பாத்து' என்று வேண்டிக் கொண்டான்.

எல்லாரும் ஏறவும் கண்டக்டர் விசில் ஊத பேருந்து கிளம்பியது. ராம்கி எங்கிருக்கிறான் என்று தேடிய கண்கள் அவன் மீது நிலைத்தபோது "என்ன மச்சான் பிரண்ட் வர்றான்னு சொன்னே... யாருடா அந்தப் பிரண்ட்டு... அந்த...." அவன் சொல்லவந்ததை முடிக்கும் முன் பின்னால் இருந்து மணி சேகரைக் கூப்பிட்டான்.

"மாப்ள... அந்த ஊதாத் தாவணி யாருன்னு தெரியுமா? பங்காளி படிக்கிற காலேசுல பெரிய ரவுடியா இருந்த வைரவண்ணனோட தங்கச்சி... இவங்க காலேசுலதான் படிக்கிறா... சூப்பர் பிகரு மாப்ள... பிளஸ் டூ படிக்கிறப்போ எங்க ஊரு திருவிழாவுக்கு வந்திருந்தா... எல்லாரும் விரட்டிப் பார்த்தானுங்க எவனுக்கும் பிடிகொடுக்கலை மாப்ள... அப்பல்ல இருந்தே எனக்கு அவ மேல ஒரு கண்ணு மாப்ளே... என்ன பங்காளி உங்க காலேசுலதானே படிக்கிற... உங்களுக்கு அவளைத் தெரியுமா?" என்றான் புவனாவை பார்வையால் பருகியபடி.

"எங்க காலேசுல படிக்கிறாங்கன்னு தெரியும்... ஆனா எனக்கு பொண்ணுங்ககிட்ட பிரண்ட்ஷிப்பெல்லாம் கிடையாது..."

"என்ன பங்காளி உங்களுக்கு வைரவண்ணன் ரொம்ப குளோஸ்ன்னு பசங்க சொன்னாங்க... இவ கூடவும் பிரண்ட்ஷிப் இருக்கும்ன்னு பார்த்தேன்... இருந்தா நம்மளைப் பற்றி நல்லவிதமா சொல்லுவீங்கன்னு பார்த்தேன்." என்று சிரித்தான்.

"அ... அய்யோ... அவங்க வேற மேஜருங்க... எங்க மேஜரு பொண்ணுங்ககிட்ட பேசவே எனக்கு உதறல் எடுக்கும். அது போக வைரவண்ணன் நல்ல பிரண்ட்தான்... அவரை காப்பாத்தப் போயித்தானே என்னைய அடிக்க உங்களை அனுப்பினாங்க... அவரு தங்கச்சிங்கிறதால யாருமே இவங்ககிட்ட பேச மாட்டாங்க..." என்றான் வேகமாக.

ராம்கிக்கு பின்னால் இருப்பவனையும் அவன் பேசுவதையும் பார்த்த புவனாவின் முகம் புன்னகை துறக்க, அவர்களுக்குச் சற்று தள்ளி கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டு வெளியில் பார்க்க ஆரம்பித்தாள்.

"மாப்ள நாம எந்திரிச்சி நிக்கலாண்டா... பங்காளி நீங்க இங்கிட்டு வந்து என்னோட இடத்துல உக்காருங்க... அவளை இங்க உக்காரச் சொல்லலாம்..." என்றபடி எழுந்த மணி, ராம்கியும் சேகரும் எழுந்ததும் சைகையால் அவளை அழைத்து  அமரச் சொன்னான். அவள் அமர அருகில் ஒரு வயதான அம்மா அமர்ந்து கொண்டார்.

ராம்கி பின்னிருக்கையில் அமர, அவனுக்கு அருகில் சேகர் நிற்க, மணி புவனாவை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்தான். காற்றில் பறக்கும் முடியை ஒதுக்கியபடி சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

சேகர் ராம்கியிடம் குனிந்து "நல்லவேளைடா மச்சான்... நான் புவனான்னு சொல்றதுக்குள்ள மணி கூப்பிட்டுட்டான். இல்லேன்னா இன்னைக்கு உன்னோட காதல் இவனுக்குத் தெரிஞ்சு எல்லாப்பக்கமும் பரவியிருக்கும். இவனுக எல்லாம் ஒரே குரூப் வேற... சொல்ல முடியாது அவன் ஜொள்ளு விடுறதைப் பார்த்தா நீ காதலிக்கிறேன்னு தெரிஞ்சா உன்னைய போட்டுத் தள்ளக்கூடத் தயங்கமாட்டான்... பார்த்துக்க" என்றான் மெதுவாக.

"நீ வேற ஏன்டா புளியைக் கரைக்கிறே... இப்ப என்னடா பண்றது. அவ வேற என்னைய தப்பா நினைக்கப் போறா..."

"அவளைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே... ஆமா இதுதான் உன்னோட பிரண்டா... எப்படியெப்படி அவ... அவனா... அதுசரி ரெண்டு பேரும் எங்க போறீங்க..?"

"இல்லடா... இதுவரைக்கும் வெளிய போனதேயில்லை... அதான் முதமுறையா படத்துக்கு போகலாம்ன்னு..."

"சரி... சரி... அயித்தைக்குத் தெரிஞ்சா விளக்குமாத்தால பூஜைதான் தெரிஞ்சிக்க... எதுக்கும் ரொம்ப கேர்புல்லா இருடா..." என்றவனை "டேய் மாப்ள சேகரு... அதான் ஊருல ரெண்டு பேரும் பேசிக்கிட்டுத்தானே இருக்கீங்க... அப்புறம் இங்கயும் வந்த அப்படி என்னடா பேசுறீங்க?" என்றபடி சேகர் முதுகில் தட்டினான் மணி.

சேகர் என்றதும் எதேச்சையாக திரும்புவது போல் அவனைப் பார்த்தாள் புவனா, அந்தப் பார்வையில் கோபம் போய் பாசம் தெரிந்தது. 'எல்லாரையும் கூட்டிக்கிட்டு படத்துக்கு வந்திருக்கு நம்ம கிறுக்கு... சுத்தம்... வெளங்கிடும்.. அதும் இந்தா நிக்கிற தேவாங்குகூட இது எப்படி பழகுச்சு... இவனுகல்லாம் வந்தா பேசாம அடுத்த பஸ்ல திரும்பிட வேண்டியதுதான்...' என்று நினைத்தபடி ராம்கியை பார்த்து கோபப் பார்வையை வீசிவிட்டு மீண்டும் சன்னல் பக்கம் பார்த்தாள். கண்டக்டர் டிக்கெட் கேட்டு வரவும் ராம்கி வேகமாக காசை எடுத்தான். மூன்று என்பதா நான்கென்பதா என்று யோசித்தான். மனசு படபடவென்று இருந்தது. இவ வேற கோபமாப் பாக்குறாளேன்னு கஷ்டமாயிருந்தது.

"நீங்க வையுங்க பங்காளி... நான் எடுக்கிறேன்..." என்றபடி நான்கு டிக்கெட் கேட்டான். "என்னடா நாமா மூணு பேருதானே?" என்றான் சேகர்.

"நீ இருடா... காரணமில்லாம நான் எடுக்கலை... நம்ம மூணு பேரு... அப்புறம் அவங்க..." என்று புவனாவைக் காட்டியவன், "உனக்கு டிக்கெட் எடுத்துட்டேன்..." என்றான் அவளிடம்.

"எனக்கு நீங்க எதுக்கு எடுத்தீங்க? யாரு உங்களை எடுக்கச் சொன்னா?" என்றாள் கோபமாக.

"என்ன சொந்தக்காரப் பொண்ண பஸ்ல பாத்தா டிக்கெட் சேர்த்து எடுக்கிறதில்லையா?" என்றான் வேகமாக.

"என்ன..." என்று எதோ சொல்ல வந்தவளை ராம்கியின் கெஞ்சல் பார்வை தடுக்க, பேசாமல் அமர்ந்தாள். கண்டக்டர் ஏதோ முனங்கியபடி அவர்களைக் கடந்து சென்றார். பேருந்தில் அருகில் இருப்பவர்கள் இவர்களைப் பார்க்க புவனாவுக்கு என்னவோ போலாகிவிட்டது, 'சே...வராமலே இருந்திருக்கலாம்...' என்று நினைத்துக் கொண்டாள்.

பேருந்தின் வேகத்தில் ஆளாளுக்கு ஒரு பக்கம் பார்வையை ஓடவிட, ரஸ்தா ரயில்வேக் கேட்டைத் தாண்டிய போது "காரைக்குடிக்கா... என்ன வேலையா போறே?" புவனாவிடம் மணி கேட்டான்.

"பிரண்ட் வீட்டுக்குப் போறேன்..." என்றபடி அவனுடன் பேசுவதைத் தவிர்த்தாள். ராம்கியின் அருகில் இருந்தவர் இறங்க, சேகர் அவனுக்கு அருகில் அமர்ந்தான்.

"டேய்... நாங்க திருப்பத்தூர் போறோம்... நீங்க எந்த தியேட்டர் போறீங்க... பாண்டியனுக்குப் போங்க.. இங்க இறங்க வேண்டாம்... அப்புறம் அவனால பிரச்சினை வரலாம்... அவ இங்க இறங்கினா திருப்பத்தூர் போறதை மாத்தினாலும் மாத்திடுவான்... அவனுக்கு நீனும் அவளும் ஒண்ணா வந்திருக்கது தெரியக் கூடாது... மச்சான் பிராப்ளம் இல்லாம பாத்துட்டுப் போடா... ஓகே..."

"சரிடா... பாண்டியன்தான் போறோம்... " என்றான். 

சேகரும் மணியும் இறங்கும் போது "என்ன பங்காளி நீங்க இறங்கலையா... சரி... முன்னாடி இருக்குறது நம்ம ஆளு... பாத்துக்கங்க..." என்று சொல்லியபடி அவளைப் பார்த்து பல்லிளித்துவிட்டுச் சென்றான்.

பேருந்தில் இருந்த கூட்டத்தில் பாதிப்பேர் இறங்கிவிட நிறைய இருக்கைகள் காலியாக இருந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தவள், ராம்கிக்கு அருகில் இருந்த இருக்கைக்கு மாறினாள்.

ராம்கி ஒன்றும் பேசவில்லை. "என்னாச்சு சாருக்கு?" என்று அவள்தான் பேசினாள்.

"ஒண்ணுமில்ல... எனக்கு முன்னாடி அவன்..."

"ஓ... ராசாவுக்கு ரத்தம் கொதிச்சிச்சோ... அந்த சல்லவாரிப்பய கூட உங்களுக்கு எப்படிப் பழக்கம்... எங்க மாமா ஊருதான் இவன்... நா அங்க போனா லோலோன்னு பின்னாடியே சுத்துவான்..  சரியான ரவுடி... இவனுக்கிட்ட பழகிக்கிட்டு... எப்படி இவன மாதிரி ஆளுகளோட... சரி சேகர் அண்ணனும் இவன் கூட பழகுறாரு..."

"இவன் கூட நான் பழகணுமின்னா ஆசைப்பட்டேன். அடிக்க வந்தான் அன்பா பேசினான்... அவ்வளவுதான்..."

"அடிக்க வந்தானா? எப்போ?"

"அதெல்லாம் பழைய கதை... இப்போ எதுக்கு விடு..." 

"இப்ப சொல்றீங்களா இல்லையா?" என்றதும் முதல் ஆண்டு விடுமுறையில் நிகழந்ததைச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டவள் முகம் மாறியது.

"இதை ஏன் எங்கிட்ட சொல்லலை... செகண்ட் இயர் முடிச்சி தேர்ட் இயர் வந்துட்டோம்... மறச்சிட்டீங்களே?" என்றாள் கோபமாக.

"இல்லை புவி... இதை உங்கிட்ட சொன்ன ரொம்ப வருத்தப்படுவேன்னுதான்..."

"அப்ப உங்க கஷ்டத்தையோ வருத்தத்தையோ எங்கிட்ட சொல்லமாட்டீங்க... சந்தோஷத்தை மட்டும்தான் பகிர்ந்துக்குவேன்னா அதுக்கு எதுக்கு காதல்... ரெண்டு மனசுக்குள்ளயும் சுக துக்கங்கள் எல்லாம் ஷேர் ஆகணும்... அதுதான் உண்மையான காதல்..."

"எனக்குந் தெரியும் புவி... உன்னைய எப்பவும் சந்தோஷமாத்தான் பாக்கணும் அதுக்குத்தான்... விடு..." என்று அவன் சொன்னதும் அவள் மீது அவன் கொண்டிருக்கும் காதல் அவளைக் கண் கலங்க வைத்தது.

"ஏய்... இது பஸ்சு... அழுதா எல்லாரும் வேற மாதிரி பார்ப்பாங்க... ப்ளீஸ்..." என்றான். கர்ச்சீப்பால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கி இருவரும் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். பூக்கடை ஒன்றை கடக்கும் போது "என்ன பொண்டாட்டி ஆகப் போறவளை மொதமொதலா கூட்டியாந்துட்டு பூ வாங்கி கொடுக்க மாட்டேங்கிறீங்க..?" என்றாள்.

"இல்ல... நீதான் பூ வச்சிருக்கியே... அதான்..."

"வச்சிருந்தா... என்னதான் இருந்தாலும் மணாளன் வாங்கிக் கொடுக்கிறதுக்கு ஈடாகுமா? அதை எடுத்துடவா?"

"வேண்டாம்.... நான் வாங்குறேன்... ஆமா ஒரு முழமா... ரெண்டு முழமா..."

"ராஜா... முழமா வாங்க கதம்பமா வாங்கப் போறீங்க... இது நூறு எரநூறு கணக்குத்தான்..."

"ம்... எங்களுக்கும் தெரியும்... சும்மா ஒரு பிட்டப் போட்டுப் பார்த்தேன்..." என்றபடி ஐநூறு பூ வாங்கி வந்து கொடுத்தான்.

"யார் வச்சிவிடுவா... வச்சிவிடுங்க..." என்றபடி ஹேர்பின்னை எடுத்துக் கொடுத்தாள்.

"ஆத்தா... நமக்கு ஹேர் பின்னுல வச்சி விடத் தெரியாது... முடியில வச்சிவிடுறேன்... அப்புறம் நீ ஏர்பின்னுல வச்சிக்க..." என்றவன் அவளது தலையில் லாவகமாக பூவை வைக்க, போகும் வண்டிகளும் நடக்கும் மனிதர்களும் இவர்களையே பார்க்க 'படிக்க அனுப்பினா இது அடிக்கிற கூத்தைப் பாரு... கலி முத்திப் போச்சு...;' என்று ஒரு அம்மணி இவர்கள் காதில் கேட்குமாறு சொல்லிச் செல்ல, யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் "சரி வா..." என்று வேகமாக நடந்தான். 

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

சூப்பர்ர்..விறுவிறுப்பா இருந்தது.