மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 19 டிசம்பர், 2013

திருமணமும் மூடநம்பிக்கையும்...

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்கிறோம் ஆனால் அதை நிறைவேற்றும் சாவியை நம் கையில்தானே வைத்திருக்கிறோம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட எத்தனையோ திருமணங்களை நாம் முடித்தும் வைத்திருக்கிறோம் முறித்தும் வைத்திருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவோம்.

நமக்கு முந்தைய தலைமுறையில் பெண் பார்த்து திருமணம் முடியும் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக் கொள்வது இல்லையாம். ஆனால் இன்று அப்படியா இருக்கிறது... இதுதான் பெண் இதுதான் மாப்பிள்ளை என்று முடிவானதும் செல்போனில் செல்லச் சிணுங்கல்களை ஆரம்பித்துவிடுகிறார்கள். திருமணம் என்பது இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. மணிக்கணக்கில் பேசி மானசீகமாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று என்று பாடிவைத்தான் கவிஞன் இது முற்றிலும் உண்மைதானே... இல்லை என்றால் இன்னாருக்கு இன்னார்தான் என்று நிச்சயம் பண்ணி வைத்து நாம் அதற்கான வேலையில் இறங்கும் போது இறைவன் போட்ட முடிச்சு வேறு மாதிரி வேலை செய்ய ஆரம்பித்து விடுவதை இப்போது செய்திகளிலும் வாழ்க்கையிலும் பார்க்கத்தானே செய்கிறோம்.

கிராமங்களில் முன்பெல்லாம் திருமணங்களை நிச்சயித்தவுடனேயே நடத்தி முடித்து விடுவார்கள். காரணம் நிச்சயித்து வைத்து சில மாதங்கள் கடந்து திருமண தேதி குறிக்கும் போது அந்த இடைப்பட்ட நாட்களில் ஊருக்குள்ளோ அல்லது உறவிலோ யாராவது இறந்துவிட்டால் அந்த துக்க வீட்டிற்கு செல்ல முடியாது. அது நெருங்கிய உறவாக இருந்தால் மிகவும் சிக்கல். திருமணம் நிச்சயித்த வீட்டில் இருந்து துக்கத்திற்கு செல்லக் கூடாது என இருக்க நினைத்தாலும் உறவின் உன்னதம் மனசுக்குள் வந்து மிகவும் கஷ்டப்பட வைக்கும். அதனால் இப்போதெல்லாம் பேசி மட்டும் வைத்துக் கொண்டு திருமணத்துக்கு முன்தினம் நிச்சயம் பண்ணிக் கொள்கிறார்கள்.

நமது அண்ணன்மார்களின் பெண் பார்க்கும் படலமெல்லாம் கோவில் திருவிழாக்களிலேயே முடிந்து விடும். கூட்டத்துக்குள் நுழைந்து இவர் இங்கிருந்து எட்டிப் பார்க்க... அந்தப்பக்கம் இருந்து அவரும் மெதுவாகப் பார்க்க பெண் பார்க்கும் படலம் முடிந்து விடும் பின்னர் திருமணத்தின் போதுதான் இருவரும் பார்த்துக் கொள்வார்கள். கணவன் மனைவி ஆகிவிட்டாலும் பேசுவதற்கு ஒரு நாளோ இரண்டு நாளோ எடுத்துக் கொள்வார்கள்.

அப்புறம் காலம் கொஞ்சம் மாறியது... மாப்பிள்ளையை பெண்ணைப் பார்க்க அவர்கள் வீட்டுக்கே கூட்டிப் போனார்கள். கொஞ்ச நேரம் இருவரையும் பேசவும் விட்டார்கள். இப்போதோ நிலமை வேறு... நிச்சயம் பண்ணியதும் பையன் செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகிறான். இருபத்து நான்கு மணி நேரமும் இருவரும் போனில்தான் குடியிருக்கிறார்கள். பெற்றோரும் அந்தப் பையன் பேசுறார் என்று பெருமையாகச் சொல்கிறார்கள். அத்தை, மாமா என எல்லாருடனும் செல்போன் எளிதான உறவைக் கொடுத்துவிடுகிறது.

இதுபோக முகநூலிலும், ஸ்கைப்பிலும் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இப்போது திருமணங்கள் நிச்சயம் பண்ணி வைத்து ஆறு மாதம் ஒரு வருடம் என நாட்களைக் கடத்தி திருமணங்களை நடத்தும் போது இருவரும் ஒருவருடமாக போனில் பேசி ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதால் திருமண மேடையில் எந்தவித பதட்டமோ பயமோ இன்றி அருகிலிருப்பவர்களைப் பற்றிய கவலையின்றி வாய் ஓயாது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் நிச்சயம் செய்ததும் மாப்பிள்ளை வீட்டில்... (நன்றாகக் கவனிக்கவும்) மாப்பிள்ளை வீட்டில் எதாவது துக்க சம்பவம் நிகழ்ந்தால் அந்தப் பெண்ணை நிச்சயித்ததும்தான் இப்படியாகிவிட்டது என்று திருமணத்தை நிறுத்திவிடுவார்கள். பெண் வீட்டில் இதுபோல் நிகழந்தால் நூற்றில் ஒரு திருமணம் நிறுத்தப்படலாம். இது கிராமங்களில் அதிகமாக நடக்கும். நானே எனது சிறிய வயதில் இதுபோல நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். அதன்பின் அந்தப் பெண்ணை ராசியில்லாதவள் என்று முத்திரை குத்திவிடுவார்கள்.  தனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என்று வருத்தும் பெண்ணுக்கு கயிறோ, விஷமோ வாழ்க்கையை முடித்துக் கொள்ள போதுமானதாகிவிடும்.

இது போன்ற மூடநம்பிக்கைகள் கொஞ்சம் குறைந்து தற்போது அப்படியான நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அந்தப் பெண் என்ன பண்ணும் இது நடக்கணுமின்னு இருந்திருக்கு நடந்திருச்சு... அந்தப் பெண்ணை நிச்சயம் பண்ணாவிட்டாலும் அவரது விதி மாற்றி எழுதப்பட்டுவிடுமா என்ன என்று முற்போக்காக சிந்தித்து நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்தியவர்களையும் பார்த்திருக்கிறேன். அந்தப் பெண் என்ன செய்வாள்... அவளா இப்படி ஒரு துக்க நிகழ்வு நிகழ வேண்டும்  என நினைத்தாள். இதெல்லாம் விதியின் முடிவுதானே...

இது போன்ற ஒரு நிகழ்வு தற்போது எனக்குத் தெரிந்த இடத்தில் நடந்திருப்பதுதான் வேதனையான விஷயமாகும். ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நிச்சயித்து இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்து... அதை எல்லாரும் ஏற்றுக் கொண்டு... இருவரும் மாற்றி மாற்றி பரிசுப் பொருட்களை வழங்கிக் கொண்டு... உனக்கு நான் எனக்கு நீ என செல்பேசியில் செல்லப் பேச்சுக்கள் பேசி... எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து தங்களுக்குள் ஒரு கனவை வளர்த்துக் கொண்டு ஆயிரம் கனவுகளோடு காத்திருந்தனர்.

இவர்களின் நிச்சயித்த காதலுக்கு எதிராக இறைவனின் செயல் களம் இறங்கியது. பையனின் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள் திருமணத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. முதல் நிகழ்வு நடந்ததுமே அந்தப் பெண்ணைப் பேசியதும் இப்படியாகிவிட்டது என்று இவர்கள் பேசிவிடக்கூடாதே என்று நினைத்தேன். ஆகக்கூடாது என்று நினைத்தது இப்போது ஆகிவிட்டது... கிராமத்து மனிதர்கள்... இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை மூட்டையாய் கட்டிச் சுமப்பவர்கள்... வெள்ளந்தியான மக்கள் என்று எங்களை நாங்களே சொல்லிக் கொண்டாலும் மூடநம்பிக்கைகளை சுமக்கும் மக்களாகத்தான் இன்னும் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை.

சரி விஷயத்துக்கு வருவோம்... முதல் நிகழ்வின் போது நிகழாத அசம்பாவிதம் இரண்டாவது நிகழ்வில் நிகழ்ந்துவிட்டது. அந்தப் பெண்ணின் ஜாதகத்தை மறுபடியும் தூசி தட்ட அந்தப் பெண் பருவம் அடைந்த நேரம் சரியில்லை... உன் வீட்டுக்கு வந்தால் குடும்பத்துக்கு நல்லதில்லை என்று நாளை நடப்பதை இன்றே சொல்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் ஜோசியக்காரன் கொளுத்திப் போட்டுவிட்டான். அது பெரும் தீயாக ஜ்வாலைவிட்டு எரிந்து பெண் வீட்டாரிடம் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் பையனைப் பெற்ற அன்னை. இந்த விஷயத்தில் பையன் எதுவுமே சொல்லாதுதான் மிகவும் வருத்தமான விஷயம்... படித்தும் முட்டாள்களாக இருக்கிறார்களே என்று நினைக்கும் போது இந்த சமுதாயம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மூடநம்பிக்கைச் சகதிக்குள் சிக்கித் தவிக்கும் என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

பையனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆகும்... அந்தப் பெண்ணுக்கு...? அவளை ராசியில்லாதவள் என்று ஊர் இந்நேரம் முத்திரை குத்தியிருக்கும். அவளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை ஏன் பையனைப் பெற்ற பெண்ணுக்கு எண்ணத் தோன்றவில்லை. அவளுக்கு ஒரு ராஜகுமாரன் இனிமேலா பிறக்கப் போகிறான்... பிறந்திருப்பான்... ஒரு நாள் வருவான்... என்று சொன்னாலும் அந்த ராஜகுமாரன் இந்த மூட நம்பிக்கைகளை எல்லாம் உடைத்தெரிந்து வந்து அந்தப் பெண்ணை கைபிடிக்கும் நாள் விரைவில் கூடி வருமா?

வருத்தத்துடன் சொல்கிறேன்... இது போன்ற விஷயங்களின் பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை உடைத்தெரிந்து சுயமாய் முடிவெடுங்கள்... வாழ்க்கை சுகமாய் இருக்கும்... அவன் அங்கு போகவில்லை என்றால் இது நடந்திருக்காது என்று சொல்வதை நம்பாதீர்கள். ஏனென்றால் என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது எங்கிருந்தாலும் நடந்துதான் தீரும் எனவே தீர்மானமாய் இருங்கள்... சிரித்துப் பேசி சிந்தை மயக்கி... காதலால் கசிந்துருகி... வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை அவளுக்குக் காட்டி குடும்பத்தாரின் மூடநம்பிக்கைக்கு அவளைக் கொன்றுவிடாதீர்கள்... படித்தும் முட்டாள்களாகவும் மூடநம்பிக்கைக்கு விலை போகிறவர்களாகவும் இருக்காதீர்கள்... 

-மீண்டும் மனசு பேசும்...
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

அம்பாளடியாள் சொன்னது…

மிகச் சிறப்பான விவாதங்களுடன் பெண்ணினத்தின் நலன்
கருதி உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட தங்களின் படைப்பிற்கு
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

ப.கந்தசாமி சொன்னது…

அருமையான சிந்தனைகள். பாராட்டுக்கள்.

திருவாரூர் சரவணா சொன்னது…

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு நண்பருக்கு திருமணம் முடிவு செய்து நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிகை அடித்தார்கள். ஆனால் நிச்சயத்திற்கு 2 நாட்கள் முன்பு பெண்ணின் அண்ணன் விபத்தில் மரணம். பையன் வீட்டில் மீண்டும் அந்த பெண்ணின் ஜாதகத்தை தூசி தட்டி பார்த்து இந்த பெண் சரியா வராது. வேற இடம் பார்ப்போம் என்றார்கள்.

ஆனால் பையன் விடாமல், நம்ம வீட்டிலும் கல்யாணத்துக்காக ஒரு பெண் இருக்கிறாள். நாமே இன்னொரு பெண்ணின் மனதை புண்படுத்தக்கூடாது என்று உறுதியாக இருந்து முடிவு செய்திருந்த பெண்ணையே திருமணம் செய்தார். பெண்ணின் குணம் அவருக்கு ஏற்றதாக இல்லாமல் தினம் தினம் பிரச்சனை இருந்தாலும் இந்த ஜென்மத்தில் நமக்கு விதிக்கப்பட்டது இவ்வளவுதான் என்று குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறார்.

இப்படியும் சில ஆண்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை தான்... பல துயரமான சம்பவங்கள் நிகழ்கின்றன இந்த பாழாப் போன மூட நம்பிக்கைகளால்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மிக சிறந்த படைப்பு, எத்தனையோ திருமணங்கள் நடக்க முடியாமல் நாசமாகப்போனதை என் கண்ணால் பார்த்துள்ளேன்...!

Unknown சொன்னது…

அருமையான கருத்துக்கள்

Unknown சொன்னது…

நல்ல கருத்து.இப்போதும் கூட சாஸ்திரம் சம்பிரதாயங்களை நாமும் நம்புகிறோம்!வளர்ப்பு அப்படியோ?

Unknown சொன்னது…

இன்னும் மூட நம்பிக்கை முற்றிலும்
ஒழிக்கப்படவில்லை என்றாலும் குறைந்து வருகிறது என்பது ஆறுதலான ஒன்று!

த ம 4

ஜோதிஜி சொன்னது…

தமிழ்நாட்டில் நாற்பது சதவிகித கிராமங்களில் நீங்க சொன்ன அனைத்தும் இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இளமதி சொன்னது…

மிக மிக நல்லதொரு பகிர்வும் பதிவும் சகோதரரே!
மூட ந,ம்பிக்கையால் விளைந்த கொடுமையான சமபவங்களை
என் அப்பாவின் சகோதரரிடம் சிறுவயதில் நேரில் கண்டவள்தான் நானும்.

இன்னும் சிலர் நம்மூர்களில் இதிலூறியவர்கள் இருக்கின்றனர்!
என்றுதான் இந்நிலை மாறுமோ!..

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

த ம.6

ராஜி சொன்னது…

நல்லதொரு விவாதம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு.

நல்ல கருத்துகள் குமார். பல பெண்களின் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாக மாறி விட்டது......

அப்பாதுரை சொன்னது…

பழகியபின் அந்தப்பையன் மனம் மாறியது சற்று வியப்பாக இருக்கிறது. தொலை நோக்கில் பார்க்கையில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்களோ என்று எண்ண வைக்கிறது. அந்தப் பெண் விரும்பினால் அவளுக்கு நிச்சயம் மணமாகும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நகர்ப புறங்களில் நிலை வேறு என்றாலும் கிராமங்களில் இன்னும் அதிக மாற்றமில்லை எனபதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நல்ல பதிவு பாராட்டுக்கள்

Kayathri சொன்னது…

மிகவும் உணர்வு பூர்வமான பதிவு தம்பி..வருத்தமாகத்தான் உள்ளது..:( //இந்த விஷயத்தில் பையன் எதுவுமே சொல்லாதுதான் மிகவும் வருத்தமான விஷயம்... // உண்மைதான் இருப்பினும், ஒருவிதத்தில் அவர்களை எதிர்த்து அந்தப்பையன் பேசி அவளை கரம்பிடித்திருந்தால் அவள் நிலை இன்னும் மோசமே.. நித்தமும் அவர்கள் ஏசிக்கொண்டிருப்பார்கள்.. எப்படியும் ஏசு வாங்கவேண்டும் என்பதே அவள் விதியாகிப்போனதோ..?! :(

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

#வெள்ளந்தியான மக்கள் என்று எங்களை நாங்களே சொல்லிக் கொண்டாலும் மூடநம்பிக்கைகளை சுமக்கும் மக்களாகத்தான் இன்னும் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை#

நிதரசனமான உண்மை... கிராமங்களில் இன்னமும் நிறைய..மூட வழக்கங்கள்.. அர்த்தமில்லாப் பகைமைகள்..ஏராளம்..நல்லப் பதிவு..!!