மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 1 டிசம்பர், 2013மனசு பேசுகிறது: ரசனையான விருப்பம்.


மீரகத்தில் 42 தேசிய தின அனுசரிப்புக்கள் மிகவும் கோலாகலமாக இருக்கின்றன. சென்ற இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வீழ்ச்சியாலோ என்னவோ அவ்வளவாக ஆர்ப்பாட்டமில்லாத தேசிய தினம் இந்த வருடம் எக்ஸ்போ 2020 கிடைத்த மகிழ்ச்சியில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை பீச்சோர பூங்காவுக்கு நண்பர் குடும்பத்துடன் வந்திருப்பதாகச் சொன்னதும் அங்கு சென்றோம். அங்கு அரபிப்பாடல்கள், தப்பு அடித்துக் கொண்டு அரபிகள் ஆடும் ஆட்டம் என அமர்க்களமாய் இருந்தது. விடிந்தால் தேசிய தினம். இதோ வீதிகளில் கார்களின் ஆரன்களை அடித்துக் கொண்டு ஒரே ஆர்ப்பட்டமாக இளைஞர் கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. கார்னிச் ரோட்டில் கார்களில் அரபிகளும், வந்தேறிகளும் ஆட்டம் பாட்டத்துடன் செல்வதைக் காண எல்லாரும் போய்விட்டார்கள். இரவு முழுவதும் ஒரே ஆட்டம்தான்... தேசிய தினக் கொண்டாட்டத்தால் அழகிய விளக்கொளிகளில் ஜொலிக்கிறது அபுதாபி, நேற்று ஒரு நண்பரிடம் பேசிய போது ஊரில் 12 மணி நேரத்துக்கு மேல மின்சாரம் கிடையாது. இங்க பாருங்க ரோடெல்லாம் சீரியல் செட்டாப் போட்டு கலக்குறாங்கன்னு சொன்னார். உண்மைதான் எங்கு பார்த்தாலும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

ரசனை என்பது ஆளாளுக்கு மாறுபடும். கிரிக்கெட் பார்ப்பவனும் உண்டு, கிரிக்கெட் என்றாலே விலகி ஓடுபவனும் உண்டு. நீச்சல் அடிப்பவனும் உண்டு, அதை பார்த்து ரசிப்பவனும் உண்டு. மீன் பிடிப்பவனும் உண்டு. அதை ரசித்து உண்பவனும் உண்டு. ரசிக்க வைக்கும்படி எழுதுபவனும் உண்டு. ரசனையாய் வாசிப்பவனும் உண்டு. இப்படி எல்லாவற்றிலும் எல்லாருக்கும் ரசனை என்பது வேறுபட்டுத்தான் இருக்கும். இங்கு எங்கள் அறையில் எடுத்துக் கொண்டால் இருக்கும் ஆறு பேருக்குள்ளும் ரசனை என்பது எதிலும் ஒத்துப் போவதில்லை.

ஒருத்தருக்கு எப்பவும் பிடித்தது குத்துப் பாடல்கள்தான். மெலோடியாக எதாவது பாடலைப் போட்டால் என்ன பாட்டுப் போடுறீங்க... சாவுக்கு சங்கு வச்ச மாதிரின்னு சொல்லி குத்துப் பாட்டுப் போடச் சொல்லிடுவார். அவரோட மொபைல்ல மருந்துக்குக் கூட மெலோடி பாட்டு என்பது இல்லை. அவரது ரசனை எல்லாம் துள்ளல் இசைப் பாடல்களில் மட்டுமே.  இதேபோல் மற்றொருவருவர் ரசனையோ எப்பொழுதும் சினிமா... சினிமா... சினிமா மட்டுமே. படம் இல்லை என்றால் பார்த்த படத்தையே பல முறை பார்ப்பார். ஆனால் எல்லாருக்கும் பிடிக்கும் படம் இவருக்குப் பிடிக்காது... எது மொக்கைப்படம் என்று நாம் கருதுகிறோமே அதை சூப்பர் என்று நாலைந்து முறை பார்ப்பார். இன்னொருத்தர் ரசனையாய் தூங்கத் தெரிந்த மனிதர். வியாழன் இரவு படுத்தால் வெள்ளி மாலை 5 மணிக்கு மேல்தான் எழுவார். சாப்பாடு, தண்ணி, அட ஏன்... பாத்ரூம் கூட போக எந்திரிக்க மாட்டார். இப்படி ஆளாளுக்கு ரசனையாய் விரும்பும் விருப்பங்கள் மாறும்.

சமீபத்தில் நான் அன்னாவும் ரசூலும் பார்த்தேன். இது குறித்துக் கூட எழுதியிருந்தேன். இன்று நண்பருடன் அது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் அந்தப் படத்தைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆமென் பார்த்துட்டிங்களா... இல்லைன்னா பாருங்க அதுவும் நல்லாயிருக்குன்னு சொன்னார். இப்படியாக பேசிக் கொண்டிருக்கும் போது மேலே சொன்ன சினிமாவை விரும்பும் நண்பர் வந்தார். அவரிடம் அன்னாவும் ரசூலும் பாத்துட்டிங்களான்னு நண்பர் கேட்டார். அதற்கு அவரோ அது ஒரு குப்பை' என்றார். நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. ரசனையோட பார்த்தா அது குப்பையில்லைன்னு தெரியும் என்றார். ஆமா அன்னாவும் ரசூலும் என்று இழுத்தவர் படத்தைப் பாரு... இதெல்லாம் படமுன்னு எடுக்கிறானுங்க... எனக்கு சுத்தமாப் பிடிக்கலை என்றதும் உங்க ரசனையும் என்னோட ரசனையும் ஒத்துப் போகாது. இதுக்கு மேல உங்ககிட்ட பேச முடியாதுன்னு சொல்லி நண்பர் ஒதுங்கிட்டார். 

இப்படித்தான் என்னோட நெருக்கமான நண்பன் ஒருவன் கல்லூரியில் படிக்கும் போது எங்களுடன் பேசுவதைவிட பெண்களுடன் பேசுவதையே விரும்புவான். எப்பவும் அவனைச் சுற்றி நாலு பெண்கள் இருக்க வேண்டும். என்ன பேசுவார்கள் என்று தெரியாது. அவனது வாய் அரவை மில்லாக வார்த்தைகளை அரைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இருவரும் சைக்கிளில் வருவோம். சைக்கிளை நிறுத்தியதும் நோட் வாங்கனும் புத்தகம் கொடுக்கனுமின்னு லேடீஸ் அறைப்பக்கம் போயிடுவான். என்னடா... அவன் வந்துட்டானா... நேரே அங்கதானே போவான் என்பார்கள் நண்பர்கள். எத்தனை கேலி கிண்டல் பண்ணினாலும் நண்பன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டான். அவனுக்கு ரசனையான விருப்பம் பெண்களுடன் பேசுவது. சொல்லிச் சொல்லிப் பார்த்த நண்பர்கள் கடைசியில் பொம்பளப் புள்ளைங்களோட பேசாட்டி தலை வெடிச்சிரும்டா உனக்கு போ... போய் பேசு என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ரசனை என்பது அவரவர் சொந்த விஷயம்தான்... எந்த ஒரு தனிமனித விருப்பத்தையும் மற்றவர் மீது திணிக்கக் கூடாது. எனக்கு இது பிடிக்கும் உனக்கும் இது பிடிக்கனும் என சொல்வது அபத்தமானது. இப்படியும் சில பேர் இருக்கிறார்கள்... எனக்கு இதுதான் பிடிக்கும் நீயும் இதைத்தான் செய்யனும் என அதிகாரமாகச் சொல்வார்கள். நீயா நானாவில் ஒரு குழந்தையின் அம்மா 'எந்த டிரஸ்ஸைக் கொடுத்தாலும் வேண்டான்னு சொல்லிடுறா சார். இவளுக்குத்தானே எடுக்கிறோம் என்றார். அப்போ கோபிநாத், அந்தக் குழந்தையிடம் ஏம்மா அம்மா எவ்வளவு வருத்தப்படுறாங்க... அவங்க போடச் சொல்ற டிரஸ்ஸைப் போட்டா என்னம்மான்னு கேட்டார். அதுக்கு அந்தக் குழந்தை பிடிக்காத டிரஸ்ஸை போடச் சொன்னா எப்படிப் போடுறதாம் என்றது. அந்தக் குழந்தையின் பக்கம் இருந்து பார்த்தால் அது சொன்னது சரிதானே. பெரும்பாலான பெற்றோர் நமது விருப்பங்களை மட்டும்தானே குழந்தைகளிடம் புகட்டுகிறோம். படிக்கிறானோ இல்லையோ அவனது விருப்பங்களைக் கேட்பதில்லை. இஞ்சினியரிங்தான் படிக்கனும் என்று சொல்கிறோமா இல்லையா?. இப்படி நமது ரசனைகளை நாம் எல்லோரிடமும் திணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ரசனை என்பது தனி மனித விருப்பமே. அவரவர் ரசனையை அவரவர் ரசிப்போம். ஒருவர் ஒரு விஷயத்தை ரசிக்கிறார் என்றால் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அது குறித்து மோசமான கருத்தைச் சொல்லாமல் உங்கள் ரசனை நல்லாயிருக்கு என்று சொல்லப் பழகிக் கொண்டோமேயானால் வாழ்க்கை இனிமையாகும்.

மனசு பேசுகிறது தொடரும்...

-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. //ரசனை என்பது தனி மனித விருப்பமே. அவரவர் ரசனையை அவரவர் ரசிப்போம்//

  சரியாச் சொன்னீங்க குமார்....

  த.ம. 1

  பதிலளிநீக்கு
 2. ரசனை என்பது அவரவர் விருப்பம்.
  சரியாகத்தான் கூறியுள்ளீர்கள் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. அவரவர்
  ரசனையை அவரவர்
  ரசிப்போம்.

  ரச்னைகள் பற்றி
  ரசிக்கவைக்கும் பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 4. ஏதாவது ஒன்றில் ரசனை இருந்தால் சந்தோசம்தான் .எனது வருத்தம் எல்லாம் ரசனை கெட்டஜென்மங்கள் எப்படி உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் !
  த.ம 4

  பதிலளிநீக்கு
 5. ரசித்தேன்... ரசனை உண்மை... தொடர வாழ்த்துக்கள் நண்பா...

  கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

  பதிலளிநீக்கு
 6. வாங்க வெங்கட் அண்ணா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ஜெயக்குமார் ஐயா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி.

  வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 7. வாங்க பகவான்ஜி...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தனபாலன் சார்...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  கண்டிப்பாக போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...