மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 டிசம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க...---------------------------------
35. அம்மாவின் ஆராதனை

முன்கதைச் சுருக்கம்: 

கல்லூரி வாழ்க்கையில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க, ராம்கி புவனாவின் காதலும் கண்ணியமாய் தொடர்கிறது. வைரவன் மதுரையில் லா காலேசில் சேர்ந்துவிட்டதால் இருவரும் வெளியில் சந்திக்க பிரச்சினை குறைந்துவிட்டதாக நினைத்து பூங்காவிற்குப் போய் சந்தோஷமாக பேசிவிட்டு வரும்போது ஐயா பார்த்து அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார். இருந்தும் இருவரும் சினிமாவுக்குப் போக முடிவு செய்கிறார்கள்.

இனி...


"அத்தாச்சி.... எப்பிடியிருக்கே..? அண்ணன் நல்லாயிருக்காரா..?" நாகம்மா போனில் பேசிக்கொண்டிருக்க, ராமகிருஷ்ணன் கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். சீதா  டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ம்... சொல்லுங்க அத்தாச்சி... என்ன.... இருங்க.... டீவி சவுண்டுல ஒண்ணுமே கேக்கலை... " என்றபடி போனை கையில் வைத்துக் கொண்டு "அடி... அடியே... சீசீசீசீதை... சவுண்டைக் குறைச்சு வைச்சிப்பாருடி... போன்ல பேசுறது சுத்தமாக் கேக்கலை.... " என்று கத்திவிட்டு "யாரு... எல்லாம் ஒம்மருமகதான்... இந்த டிவி வாங்குனாலும் வாங்குனோம் பொழுதாச்சின்னா டிவிக்கு முன்னால உக்காந்திருடா..."

எதிர்முனை ஏதோ சொல்ல, "என்ன அத்தாச்சி... அண்ணனுக்கு உடம்புக்கு முடியலையா... வயசாயிப் போச்சில்ல... உடம்பை நல்லா பாத்துக்கச் சொல்லு.. தம்பி லீவு போட்டு வரமுடியுமான்னு கேக்கச் சொல்லுங்க... வரமுடிஞ்சா கலியாணத்தை முடிச்சிவச்சிட்டா நல்லதுல்ல.... ஏன்னா சீதையை கட்டிக்கொடுத்துட்டா ராசுக்கும் காலாகாலத்துல கலியாணத்தை முடிச்சிடலாமுல்ல..."

"என்ன... உங்க சின்ன மாப்பிள்ளையா... அவுகளுக்கு என்ன காலேசு போறாக... வாறாக... இந்தா எல்லாரும் வயல்ல கொழுஞ்சி புடிங்கி முள்ளெல்லாம் வெட்டி சுத்தம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... நானும் நாலு நாளாக் கத்துறேன்... தொண்டத்தண்ணி போனதுதான் மிச்சம்... தொரை இப்பல்லாம் வயலுப்பக்கமே போறதில்லை... பெரிய படிப்பு படிக்குறாருல்ல... வயல்ல எறங்கி வேல பாத்தா சின்னத்தனமாப் போயிடுமுல்ல... லீவு நாள்ல கூட எதாவது ஒண்ணச் சொல்லிட்டு டவுனுக்கு ஓடிடுறாரு... இந்நேரம் அந்தச் சேகர் கூட அரட்டை அடிக்கப் போயிடுவாரு... இன்னைக்கு என்னமோ தெரியலை... படிச்சிக்கிட்டு இருக்காக..." நிறுத்தி எதிர்முனையின் பதிலை எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.

"ஆமா... என்ன படிக்கிறது பாடப்புத்தகமா? சரியாப்போச்சி... கதப்புத்தகத்தைதான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி படிக்கிறாக... என்னமோ அந்த மாரி அவனை நல்லா படிக்க வைச்சி ஒரு நல்ல வேலையில இருத்தி வக்கணும்... ராசு ஊருக்குப் பொயிட்டு கொஞ்சம் மொடை குறஞ்சிருக்கு... கிழிஞ்ச கண்டாங்கியவாவது மாத்திக்க முடியுதே... மாடுகளையும் பாக்க முடியலை அத்தாச்சி.... ஆமா... ஆமா... சீதை கலியாணத்தோட எல்லாத்தையும் வித்துட வேண்டியதுதான்... அப்புறம் நா மட்டும் எப்படி எல்லாத்தையும் பாக்கமுடியும்... சரி அத்தாச்சி... ஒடம்பைப் பாத்துக்க... அண்ணனை கேட்டேன்னு சொல்லு... முடிஞ்சா அண்ணனை ஒரு எட்டு இங்கிட்டு வந்துட்டுப் போகச் சொல்லு... ஆமா... செரி.. வச்சிறவா..." போனை வைத்துவிட்டு வந்தாள்.

படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த சீதாவிடம் வந்தவள், "பொம்பளப்புள்ள மட்ட மல்லாக்கப் பப்பரப்பான்னு படுக்கமா, கொஞ்சம் அடக்க ஒடுக்கமா படுத்துக்கிட்டு டிவி பாரு... போன்ல நல்லது கெட்டதை பேசுறதுக்குள்ள இம்புட்டு சவுண்டு வச்சிப் பாத்தா பேசுறது என்ன கேக்கும்? தொரை இப்பத்தான் பரிச்சைக்கு விழுந்து விழுந்து படிக்கிறாருபோல... அடேய் லைட்டை அமத்திட்டுப் படுடா... கரெண்டுப்பில்லத் தீட்டிருவான்..." என்றபடி பாயை விரித்து, "அடியேய் அந்தத் தலாணியைக் கொடு..." என்று சீதாவிடம் இருந்த தலையணையை வாங்கி வைத்துக் கொண்டு படுத்தாள். "ம்... உன்னோட கலியாணத்தை காலாகாலத்துல  முடிச்சிட்டா அப்புறம் பயலுகதான் பிரச்சினை இல்லை... வர்ற சித்திரை, வைகாசியில வச்சிட வேண்டியது... ராசுக்கிட்ட கேட்டு ஏற்பாடு பண்ண வேண்டியதுதான்..."

"இப்ப எதுக்கும்மா? அவரு ஊருக்கு வரட்டும் அப்புறம் பாக்கலாம்"

"மொதத்தேன் அவனை ரவுடி குடிகாரன்னு சொல்லி அக்காவும் தம்பியும் எதுத்தீங்க..., இப்ப அவன் நல்லாத்தான் இருக்கானாம். இங்க பாரு இப்ப எவன் குடிக்கல... வெளிநாட்டுல இருக்கவனெல்லாம் குடி.. அப்படியிப்படின்னுதான் இருப்பான்... உங்க அண்ணன் மட்டும் என்ன உத்தமனாவா இருக்கப் போறான்... எனக்குத் தெரியாம சிகரெட்டை வாங்கியாந்து வயலுக்குள்ள வீசி வச்சிட்டு வந்து காலையில வெளிய போறேன்னு சொல்லி குடிச்சிட்டுத்தான் வாறான்... வளந்த பிள்ளையை கண்டிக்க முடியுமா? இம்புட்டு ஏன் நம்ம கணேச மாமா மவனு ராத்திரியில வரும்போது என்னது அது... என்னமோ பீரோ கீரோன்னு பேசிக்கிறானுங்க... அதை குடிச்சிட்டு ரோட்டுல வச்சி ரவுண்டா வட்டம் போட்டு வச்சிட்டு வாறானாம்... எல்லாரும் பேசிக்கிறானுங்க... நமக்கு நல்லவனா இருந்தாப் போதும்.. ஆத்தா வீட்டுக்கு கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நிக்கவிடாம கூழோ கஞ்சியோ தன் சம்பாத்தியத்துல ஊத்துறவனா இருந்தாப் போதும்..."

"அம்மா... சும்மா படும்மா.. புராணம் பாடாம... நானு முத்து மச்சானை கட்டிக்கிறேன்னு சொல்லிட்டேன்..."

"நா பேசினா புராணம் பாடுற மாதிரித்தான் இருக்கும்... என்னோட கவலை எனக்கு உங்களுக்கெல்லாம் என்ன... அதான் நேராநேரத்துக்கு வடிச்சிக் கொட்டுறேன்ல அந்தத் திமிரு..." என்று புலம்பியவள் பகல் முழுவதும் ஓய்வு இல்லாமல் வேலை பார்ப்பதால் தூங்கிப் போனாள்.

"என்னடா எங்க கிளம்புறே... இன்னைக்கு ஞாயித்துக் கிழமைதானே... அம்மாவை சந்தைக்குக் கூட்டிப் போகலாமுல்ல... அது வெயில்ல பொயிட்டு வரணுமில்ல..." சைக்கிளை எடுத்தவனைக் கேட்டாள் சீதை.

"எனக்கு முக்கியமான வேலை இருக்கு... எங்க சார் வரச்சொல்லியிருக்காரு.,.."

"அப்படி என்னடா முக்கியமான வேலை... நல்லாத்தான் ஞாயித்துக்கிழமைகூட வரச்சொல்லுறாரு... வேற பொழப்பே இருக்காதோ... சரி மத்தியானம் சாப்பாட்டுக்கு வருவியா?"

"இல்லை வரமாட்டேன்... சாயந்தரம்தான் வருவேன்..." என்றவன் பாக்கெட்டில் எவ்வளவு இருக்கு என்று பார்த்துக் கொண்டே, "அக்கா ஒரு அம்பது ரூபா இருந்தா கடனாக் கொடு... அப்பறம் தர்றேன்..." என்றான்.

"காசா.. எனக்கிட்ட இல்லைப்பா.... ஆமா உனக்கெதுக்கு அம்பது ரூபா..?"

"இல்ல சார் கூட வெளிய போறேன்... எங்கிட்ட காசு இருக்கு... எதாவது தேவையின்னா அதான்... கொண்டு பொயிட்டு அப்படியே கொன்டாந்துடுறேன்..."

"இப்படி சொல்லி நெறையத்தடவை வாங்கிட்டே... ஆனா திருப்பித்தான் தரலை... இங்க பாரு இது எனக்கு வளவி வாங்க வச்சிருக்க காசு... சரசு அக்காகூட இந்த வாரத்துல படத்துக்குப் போக அம்மாகிட்ட கேட்டு வச்சிருக்கேன். அப்ப வலவி வாங்கணும்... மறக்காம திருப்பிக் கொடுத்துடு... என்ன"

"சரி... சரி... எனக்கு நேரமாச்சு... சீக்கிரம் கொடு...." அவசரப்படுத்தி வாங்கிக் கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தான்.

புவனா ராம்நகரில் ஏறிக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்ததால் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். சரியா வந்துடுவாளா என்று மனசு தவித்தது. அவதானே இந்தப் பிளானைப் போட்டாள் சரியா வந்துடுவா என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவன் வெளியே பார்வையை ஓடவிட்டான். பஸ் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து காரைக்குடி நோக்கித் திரும்பஇருவர் வேகமாக ஓடி வந்து ஏறினர். அவர்களைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

வெற்றிவேல் சொன்னது…

தொடர் நாவல் அருமை... தொடர்ந்து எழுதுங்கள்...

நான் புது வருகை. வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

யாரு சார் அது நந்தி மாதிரி,இடைல?///ஹி,ஹி,ஹீ!!!நன்னாப் போவுது.கங்கிராட்'ஸ்!!!

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரர்..
வரிகளை அப்படியே படிப்பவர்களுக்கு காட்சியாய் தந்த தங்கள் திறம் கண்டு வியந்து போகிறேன் சகோ. அற்புதமான கதைப்பின்னல். பகிர்வுக்கு நன்றிகள். தொடர்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. வெற்றிவேல்...
முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ யோகராஜா.,.
உங்களின் தொடர்ந்த கருத்துக்கு முதல் நன்றி.

நந்தி இல்லாம இருந்தா எப்படி...


'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. பாண்டியன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.