மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தாயீ

ட்டிலில் இருந்து எழுத்த வேதாசலம் அருகில் அவளைக் காணாது 'என்ன இன்னைக்கு இன்னம் அவளக் காணோம். எப்பவும் கருக்கல்ல வந்து குரல் கொடுப்பாளே... என்னாச்சி... இன்னம் காணல... ம்... அவ வரலன்னா இன்னிக்கு ஒரு வேலயும் ஓடாம போட்டது போட்டபடி கெடக்குமே...' என்று நினைத்துக் கொண்டே கண்களை கசக்கியபடி "தொரச்சாமி... அடேய்... தொரச்சாமி..." என்று சற்று உரக்கக் கத்தினார்.

"என்ன தாத்தா... மாட்டுக்கு தண்ணி வச்சிக்கிட்டு இருக்கேன்... சத்த இருங்க வாரேன்..." என்று கசாலைப்பக்கம் இருந்து குரல் மட்டும் வந்தது. துரைச்சாமி, பத்துப் பதினைந்து வருடமாக இங்குதான் இருக்கிறான். அவனுக்கு சொந்தம் என்று சொல்ல இருந்த சித்தப்பா ஒருத்தர் பக்கத்து ஊருலதான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. போன மாசம் வயல்ல தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தப்போ எதோ கடிச்சி இறந்துட்டாரு. இப்ப அவனுக்கு எல்லாமே இந்த வீடுதான். துரைச்சாமியா வந்தவன் இந்த வீட்டுல எல்லாருக்கும் தொரச்சாமியாயிட்டான்.

"எதுக்கு எந்திரிக்கும் போதே இப்படி கத்துறிய... போயி மூஞ்சி கீஞ்சி கழுவிட்டு வந்து காபிய குடிங்க... எப்பயும்போல சீக்கிரம் எந்திரிச்சு வருவீங்கன்னு நெனச்சு லெட்சுமி காபிய போட்டு வச்சிட்டா... ஆறிப்போயிறப் போகுது... அப்புறம் சூடு இல்லன்னு அதுக்கும் கத்துவீங்க... எப்பவும் போல அவ வந்து குரல் கொடுத்தா எந்திரிச்சிருப்பீங்க... அதான் அவ இன்னிக்கு வரலன்னதும் ஐயா நல்லா தூங்கிட்டீக போல..." குளித்து முடித்து கோவிலுக்குப் போய் திரும்பிய மனைவி சற்குணம் சொல்லிக் கொண்டே வெளியே போனாள்.

"அதுக்குத்தான் கத்துறேன்... அவ எதுக்கு வரல... எங்க போனா... ஒடம்புக்கு எதுவும் முடியலயா என்ன... அவ வராம இருக்க மாட்டாளே..?"

"எனக்கு என்ன தெரியும்... எதுக்கு வரலன்னு இனித்தான் தொரச்சாமிய விட்டு பாத்துட்டு வரச் சொல்லணும்... எந்திரிச்சி வாங்க... மேக்கால செய்யில தண்ணியில்லயாம்... பரமசிவம் வயலுக்கு தண்ணி போய்கிட்டு இருக்காம். மூத்தவன் இப்பத்தான் பாத்துட்டு வந்து சொன்னான். அப்படியே போயி பரமசிவத்துக்கு பாஞ்சோடனே நம்ம வயலுக்கு அடச்சி விட சொல்லிட்டு வாங்க... போங்க...."

"ம்... போறேன்... அவ வராம எனக்கு எதுவும் ஓடல... காலயில எந்திரிக்கும் போதே சலிப்பா வருது போ... உடனே தொரச்சாமிய போயி பாத்துட்டு வரச் சொல்லு... எதுக்கும் அங்க ஒரு போனப் போட்டு கேட்டுப்பாரு..."

"ஆமா ரொம்ப முக்கியம்... காலயில திட்டு வாங்க நான் தயாராயில்ல... நீங்க வேணா அடிச்சிக் கேட்டுப் பாருங்க..." என்றபடி அவர் முகத்தைப் பார்த்தாள் சற்குணம்.

எதுவும் பேசாமல் மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவரிடம் காபியைக் கொடுத்தபடி "என்ன மாமா அவ ஏன் வரலன்னு அத்த உங்கள போன் பண்ணி கேட்க சொன்னா மோட்டு வலயப் பாத்துக்கிட்டு இருக்கீக.." என்றாள் மருமகள் லட்சுமி.

"நானா... நா போன் பண்றதா... சரித்தான் போ... அந்த வூட்டு ஆளுககிட்ட எனக்கென்ன பேச்சு இருக்கு... தொரச்சாமிய போயி பாத்து என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரச்சொல்லுங்க... நான் வயக்காட்டுப் பக்கம் பொயிட்டு வாரேன்..."

"அதானே... அவளக் காணோமின்னு மட்டும் தேடச் சொல்லுது... ஆனா அவளுக்கு என்னாச்சுன்னு போயி பாக்க மனசு வரல... சரி... சரி.... தொரச்சாமி பொயிட்டு வருவான்... நீங்க போங்க..."

துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு மண்வெட்டிய எடுக்கும் போது "என்ன தாத்தா... எதுக்கு கூப்பிட்டே..?" கைகளை கைலியில் துடைத்தபடி உள்ளே நுழைந்தான் துரைச்சாமி.

"ஒண்ணுமில்லடா... இன்னிக்கு அவளக் காணோமுடா... என்னாச்சின்னு தெரியலை... கருக்கல்லயே அவ வந்துருவா... இன்னிக்கு இன்னும் காணல... ஒரு எட்டு அங்க போயி அவளுக்கு என்னாச்சின்னு பாத்துட்டு வாடா... மனசு கேட்கலடா..."

"இதுக்குத்தான் கத்துனியா என்ன... அதுக்கு எதாவது வேலயா இருக்கும்.... இல்ல உடம்புக்கு நல்லா இல்லாம இருந்திருக்கும்... அப்பறம் வரும்... விடு தாத்தா..."

"அடேய்... போடான்னா போயி பார்த்துட்டு வாடா... எனக்கிட்ட கத சொல்லாம... அவளக் காணோமின்னு மனசு பதயா பதைக்குது..."

"அப்ப நீங்க..." எதோ சொல்ல வந்த துரைச்சாமியை சற்குணத்தின் குரல் தடுத்தது. "அடேய் ரெண்டு பிள்ளைங்க... மருமக்க... பேரன்... பேத்திக... எல்லாரும் இங்கன இருந்தாலும் அவ ஒருநாள் வரலன்னா இவரு அன்னிக்கு பூராம் புலம்பிக்கிட்டே இருப்பாருங்கிறது எல்லாருக்கும் தெரியுமில்ல... போடா போயி அவளுக்கு என்னாச்சுன்னு பாத்திட்டு வாடா..."

"சரி ஆச்சி.." என்றபடி அவருக்குப் பின்னே படியிறங்கினான் துரைச்சாமி. இருவரும் எதிர் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தனர்.

***********

"தொரச்சாமி எங்க போயி தொலஞ்ச்சான்... அவளுக்கு என்னாவாம்....  எதாவது தெரியுமா... நல்லாயிருக்காளாமா?" கேள்விக்கணையை தொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் வேதாசலம்.

"எதுக்கு இத்தன அவசரம்... வெயில்ல அலஞ்சிட்டு வந்திருக்கீக... வந்து காலக்கையை கழுவிட்டு சாப்பிடுங்க... அவளுக்கு ஒண்ணுமில்லயாம்... ஒடம்புக்கு முடியலயாம்... நாளக்கி வருவா.."

"நெஜம்மாவா... நீ சொல்லுறதுல எதயோ மறைக்கிறாப்ல தெரியுது..."

"ஆமா... மறைக்கிறாக... என்னத்த மறைக்கிறாக... அட வந்து சாப்பிட்டு விடுங்க... எங்களுக்கு வேல கெடக்கு..."

"கைய கழுவிட்டு வாரேன்" என வீட்டின் பின்பக்கம் போனவர், வேப்ப மரத்தடியில் படுத்திருந்த துரைச்சாமிய பார்த்து "கிறுக்கா சொகமா தூக்கம் கேக்குதோ... ஆமா அவளுக்கு என்னாச்சுடா... உனக்கு எதாவது தெரியுமா.... இந்த பொம்பளங்க எதயோ மறைக்கிறாங்க..."

"அது... அது...."

"என்னடா இழுக்கிறே... அவளுக சொல்லக்கூடாதுன்னு சொன்னாளுகளா..." கோவத்தில் மூக்கு சிவக்க-

"தாத்தா... அது கொஞ்சம் அப்படியிப்படி இருந்துச்சில்ல..."

"என்ன பைத்தியமா இருந்துச்சின்னு சொல்ல வாறியா... அவ எங்க ஆத்தாடா... அவளைப் போயி கிறுக்குன்னு... சரி விடு எல்லாரும் சொல்லுறாக நீயும் சொல்லுறே... அதுக்கு என்ன இப்போ... என்னாச்சு அவளுக்கு..."

"எங்கயோ நாட்டு வயித்தியங்கிட்ட ரெண்டு நாளக்கு முன்னால கூட்டிப் போனாங்களாம்... அவனும் பாத்துட்டு கால்ல மூலிகை வேரால சூடு வச்சா..."

"ஆத்தி... சுட்டுப்புட்டாய்ங்களா... பிஞ்சுக்கால்ல சுட்டுட்டாய்ங்களா... அவ தாங்கமாட்டளேடா..." அவன் முடிக்கும் முன்னரே பதறினார்.

"ம்... ரெண்டு காலுலயும் சுட்டு மருந்து வச்சிருக்காக... காச்சலும் இருக்கு... அது காயுற வரைக்கும் நடக்கப்படாதாம்..."

"அய்யோ... பாவிய... எங்க ஆத்தா துடிச்சிருப்பாளே...." புலம்பியபடி வீட்டுக்குள் நுழைந்து தெருவில் இறங்க... 'எங்க போறிய சாப்பிடாம... சாப்பிட்டுப் போங்க...' என்று கத்திய மனைவியின் குரலுக்கு செவி சாய்க்க எண்ணமின்றி பதட்டமாய் நடக்கலானார்.


ஒரு உக்கிரமான தருணத்தில் அவன் கேட்ட கேள்விகள் அவரை அந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து வைத்திருந்தது. எத்தனையோ முறை அவனும் கூப்பிட்டுப் பார்த்தான்... இவர் போகவேயில்லை... 'செத்தாலும் நீ கேட்ட கேள்வி மறக்காதுடா... இனி உன் படிவாசல் மிதிக்கமாட்டேன்' என்று வீராப்பாய் இதுவரை இருந்தவர் இன்று அவளுக்காக அந்த வீட்டு வாசலில் நின்று 'தாயீ....' என்று கூப்பிட்டதும் முற்றத்தில் உட்கார்ந்து இருந்த அவள் 'பெரீப்ப்ப்ப்ப்பா....' என்று உரக்க குரலெடுத்து அழலானாள்.
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

ezhil சொன்னது…

குழந்தையும், இரண்டாம் குழந்தைப் பருவமும் மனதிற்குள் ஒன்றுதானே...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சே.குமார்(அண்ணா)

தாயீ பற்றிய கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

அருமை!கடைசி வார்த்தை கண்களைக் குளமாக்கியது!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ எழில்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ.ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே. உள்ளம் குளிர்வித்த அன்பின் கதை. நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதை கலங்க வைத்தது...

வாழ்த்துக்கள்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அருமை! அருமை ! பாசத்தின்முன்னே வீராப்பு எம்மாத்திரம்?

துரை செல்வராஜூ சொன்னது…

என்னவோ.. மனம் நெகிழ்கின்றது!..

செங்கோவி சொன்னது…

Very Good!

கோமதி அரசு சொன்னது…

மனதை கலங்க வைத்த தாயீ.
அருமை.
பாசபந்தங்கள் வாழீ!

பெயரில்லா சொன்னது…

நம்மை இறுதி வரை குடும்பப் பற்றோடு இருக்க வைப்பது
இந்த மனசின் செண்டிமென்டுகளே ...... பகைக்கான
காரணத்தையும் விவரித்து இருந்தால் இன்னும் சுவை
கூடி இருக்கும். ஆனால் நீங்கள் இங்கு தாயீப் பாசத்தை
ஹைலைட் செய்து இருப்பதால் அது அப்படி ஒன்றும்
தேவை இல்லைதான். கதையின் இறுதி வரை யார் அவள் என்ற
புதிரை நீட்டித்து இருப்பது உங்கள் சாதுர்யத்தைக் காட்டுகிறது.
அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முரளி ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க துரை ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கோமதி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஸ்ரவாணி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.